கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) ஜெர்மானிய இயக்குனர். இதுவரை பதினொரு படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவருடைய வுல்ப்ஸ்பர்க் திரைப்படத்தைப் பார்த்தபோது அது வரிசையாக அவருடைய மற்ற படங்களிடம் அழைத்துச் சென்றது. அறுபத்தைந்து வயதாகும் பெட்ஸோல்டு இதுவரை பதினொரு படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் ஏழு திரைப்படங்களைக் பார்த்தேன். அந்த ஏழின் வழியாக பெட்ஸோல்டு கதையுலகத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. அவருடைய சமீபத்திய திரைப்படம் Miroirs No. 3 இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது
வுல்ப்ஸ்பர்க் (Wolfsburg) 2003 ஆண்டு வெளியானது. நாயகன் பிலிப் கார் விற்பனையாளன், நண்பனின் நிறுவனத்தில் வேலையிலும் நண்பனின் சகோதரியுடன் காதலுறவிலும் இருப்பவன். அந்தக் உறவில் அடிக்கடி பிணக்குகள் ஏற்படுகிறது. வழக்கமான சாலையில் ஆளரவமற்ற நேரத்தில் காரில் பயணிக்கையில் காதலியுடன் அலைபேசியில் வாக்குவாதம் ஏற்படுகிறது. கவனக்குறைவாக சைக்கிளில் வரும் சிறுவனின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் பிலிப் சிறுவனுக்கு உதவாமல் காதலியைச் சமாதானப்படுத்துவதின் பொருட்டு அவசரமாகச் சென்றுவிடுகிறான். தன்னுடைய சிவப்பு நிறக் காரை மறைத்துவைத்துவிட்டு வேறு காரைப் பயன்படுத்துகிறான்.
மறுநாள் விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் நிற்பதைக் கண்டு சிறுவனின் குடும்பத்தாரிடம் உண்மையைச் சொல்லி நலம்விசாரிக்க மருத்துவமனைக்குச் செல்கிறான் பிலிப். அங்கே மகனின் கண்விழிப்புக்காகத் துயரத்தோடு காத்திருக்கும் லாராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷயத்தைச் சொல்ல முனையும்போது சிறுவன் கண்விழித்துவிட்டதாக செவிலி அழைக்கிறாள். லாரா பேச்சை நிறுத்திவிட்டு தன் மகனைக் காண ஆவலுடன் ஓடுகிறாள். அறையில் காவலரும் உடனிருக்க சிறுவன் தன் மீது மோதியது சிவப்பு வண்ண ஃபோர்டு கார் என்ற தகவலைச் சொல்கிறான். காவலர் காரின் எண்ணைக் கேட்கச் சொன்னாலும் இன்னொரு சமயத்தில் விசாரித்துக்கொள்ளலாம் என்று லாரா கூறிவிடுகிறாள்.
சிறுவன் பிழைத்துக்கொள்வான் என்றும் அவனை இடித்தது சிவப்பு நிற ஃபோர்டு கார் என்ற தகவலையும் காவலர் தொலைபேசியில் சொல்வதைக் கேட்டுவிட்டு மெளனமாக கிளம்பிவிடுகிறான் பிலிப். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக காதலியோடும் மற்றவர்களோடும் ஒரு அவசரச் சுற்றுலா செல்லும் பிலிப் திரும்பும்போது விபத்து நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூங்கொத்துக்கள் மூலம் சிறுவன் இறந்துவிட்டதை அறிகிறான்.
துயரத்தில் இருக்கும் லாரா தன் மகனின் சாவுக்குக் காரணமான காரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து தற்கொலைக்கு முனையும்போது அவளை பிலிப் காப்பாற்றுகிறான். பிறகு அடிக்கடி அவளைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்கிறான். லாராவுக்கும் அவனிடம் நட்புணர்வு துளிர்க்கிறது. பிலிப்பின் நடத்தையில் காதலிக்கு ஏற்படும் சந்தேகத்தால் அந்த உறவு முறிந்து வேலையையும் இழக்கிறான். மகனை இழந்த வேதனையில் இருந்து மீளும் முயற்சியில் பிலிப்புடன் காதலுறவை நோக்கி நகரும் லாராவின் பயணத்தையும் முடிவையும் விவரிக்கிறது வுல்ஸ்பர்க் திரைப்படம்.
மற்ற படங்களோடு ஒப்பிடும்போது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த யெல்லா (Yella) சற்று பலகீனமான படம்தான். தொழிலில் தோல்வியடைந்த தன் கணவன் பென்னைப் பிரிந்துவிடுகிறாள் யெல்லா. ஆனால் பிரிந்தபின்னும் தன்னுடன் வாழ நிர்ப்பந்திக்கும் அவனிடமிருந்து விலகி மேற்கு ஜெர்மனிக்கு கணக்காளர் பணிக்குச் செல்கிறாள். ஆனால் பணியளித்த நிறுவனத்தில் நிகழ்ந்த மாற்றங்களால் அந்த வேலை கிடைப்பதில்லை. அடுத்தது குறித்த தெளிவின்மையோடும் சோர்வோடும் விடுதியில் தங்கியிருக்கிறாள்.
அதே விடுதியில் பிலிப் தங்கியிருக்கிறான். தொழில்களுக்கு மூலதனம் வழங்கும் நிறுவனமொன்றின் ஊழியன். தன்னுடைய பணியில் நேர்மையற்ற விதத்தில், நிதித் தேவையில் இருக்கும் நிறுவனங்களின் குளறுபடிகளைப் பயன்படுத்தி சுயநலமாகப் பணம் பறிக்கும் காரியத்துக்கு யெல்லாவின் கணக்காளுமைத் திறமைகளைப் பயன்படுத்திக்கொள்கிறான். இடையில் அவன் யெல்லாவுக்கு வைக்கும் நம்பிக்கை சார்ந்த சோதனையில் அவள் தோல்வியடைகிறாள். அதன்பொருட்டு பிலிப் அவளை வெறுக்கும்போது அதற்கான காரணங்களை விளக்குகிறாள். பிலிப் சமாதானமடைகிறான். அவன் தன் பணியை தொடர்ச்சியாக சுயலாபத்துக்காகப் பயன்படுத்தியதால் உண்மை வெளிப்பட்டு பணியிழக்கிறான். அவன் புதிய ஊருக்குச் செல்லவிருக்கும் நிலையில் யெல்லா அவனுடன் காதலுறவுக்குள் நுழைகிறாள். இருவருடைய பிறகான பயணம் யெல்லாவில் நடக்கிறது.
2008 ஆம் ஆண்டு வெளியான எரிகோ (Jerichow) பெட்ஸோல்டின் முக்கியமான படங்களில் ஒன்று. 1934 ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ். எம்.கெய்ன் என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Postman Always Rings Twice என்ற நாவலின் மெல்லிய பாதிப்பில் உருவானது. ஆப்கான் போரின்போது கண்ணியமற்ற நடத்தையினால் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட தாமஸ் தன் வாழ்வாதாரத்துக்குச் சிரமப்படும் நிலையில் இருக்கிறான். இரண்டு வயதாக இருக்கும்போதே ஜெர்மனிக்கு வந்துவிட்ட துருக்கிய பின்புலத்தைக் கொண்ட அலி அந்தப் பகுதியில் தொடர் சிற்றுண்டிக் கடைகள் நடத்துகிறான். குடித்துவிட்டு வாகனமோட்டி பள்ளத்தில் வண்டியை இறக்கிவிட்டு தவிக்கும்போது அலிக்கு உதவுகிறான் தாமஸ் . தொடர்ச்சியாக குடித்துவிட்டு வண்டியோட்டுவதால் அலியின் மீது காவல்துறையின் கண்காணிப்பு இருக்கிறது. ஒரு கட்டத்தில் விபத்தை ஏற்படுத்தி வாகனமோட்டும் உரிமையை இழந்துவிடுகிறான் அலி.
சிற்றுண்டிக் கடைகளுக்குச் தினசரி சென்றாகவேண்டிய பொருட்களை எடுத்துச்செல்லவும் தனக்கும் ஓட்டுனராகவும் வேலையில் சேர்ந்துகொள்ளும்படி அலி கேட்கும்போது சம்மதிக்கிறான் தாமஸ். அலியின் மனைவி லாரா. அவளுடைய கடன்களுக்கு அலி பொறுப்பேற்று ஏற்படுத்திக் கொண்ட சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின்படி அவனுக்கு மனைவியாக இருக்கிறாள். ஆனால் உறவில் அவள் முழுமையாக மனமொப்பி இருப்பதில்லை. ஒட்டுதலற்ற ஆரம்ப நாட்களுக்குப் பிறகு தாமஸுக்கும் லாராவுக்கும் இடையிலான பரிபாஷையான உறவு ஒரு தருணத்தில் நடைமுறைக்கு வந்து முத்தங்களாகவும் தழுவலாகவும் அரைகுறை புணர்ச்சியாகவும் வளர்ந்துவிடுகிறது.
எப்போது வேண்டுமானால் லாரா தனக்கு துரோகம் செய்துவிடுவாள் என்று சந்தேகிக்கும் அலி அவளுக்குத் தெரியாமல் பலமுறை அவளைக் கண்காணிப்பது வழக்கமாக இருக்கிறது. இதனிடையில் இரண்டு கைகலப்புகளில் அலியைக் காப்பாற்றுவதோடு சில நிமிஷங்களே நீடிக்கும் திடீர் உடல்நலக்குறைவின் போதும் அலிக்கு ஆதரவாக இருக்கிறான் தாமஸ். அலிக்கு தாமஸின் நேர்மை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை. அவன் லாராவுடன் உறவில் இருப்பான் என்பதை எண்ணத்தால் கூட நினைக்காதவன். ஒரு சூழ்நிலையில் துருக்கியில் சொத்து வாங்கும் விஷயத்திற்காக பொறுப்புகளை தாமஸிடமும் லாராவிடமும் ஒப்படைத்துவிட்டுக் கிளம்புகிறான். ஆனால் அவன் விமானம் ஏறுவதில்லை.
தாமஸும் லாராவும் உடலுறவு வைத்துக்கொள்ளும் நாளில் தன் துயரமான பின்கதையையும் அலியின் கொடுமைகளையும் சொல்லி அழுகிறாள் லாரா. அலியிடமிருந்து விலகி வரும்படி தாமஸ் வற்புறத்த அது சாத்தியமில்லை என்று லாரா மறுக்கிறாள். இந்த முக்கோண உறவு எப்படி வளர்ந்து முடிந்தது என்பது பிற்பகுதியாக இருக்கிறது. மனித உறவுகளில் இருக்கும் நம்பிக்கை மற்றும் துரோகம் குறித்து இந்தப்படம் பேசுகிறது.
பார்பரா (Barbara) திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. பெட்ஸோல்டு மேற்கு ஜெர்மனியில் பிறந்தவராக இருந்தாலும் அவருடைய பெற்றோர்கள் கிழக்கு ஜெர்மனியின் இரும்புத்திரை ஆட்சியிலிருந்து தப்பி வந்தவர்கள். பிரிவினை ஏற்படுத்திய உளவியல் தாக்கங்களை ஆராய்கிறவையாக அவருடைய திரைப்படங்கள் இருக்கின்றன. கிழக்கு ஜெர்மனியை விட்டு வெளியேறும் முயற்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடலோர ஊரின் மருத்துவமனைக்குத் தண்டனைப் பணிமாற்றம் செய்யப்படுகிறாள் பார்பரா என்னும் மருத்துவர். ரகசியக் காவல்துறையால் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்தாலும் நாட்டைவிட்டு வெளியேறும் அவளுடைய முயற்சிகள் தொடர்கின்றன. மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த தன் காதலுடனான ரகசியச் சந்திப்புகளிலும் ஈடுபடுகிறாள்.
மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஆண்ட்ரி ரெய்ஸர் பாந்தமானவனாகவும் இனிமையானவனாகவும் இருக்கிறான். ஸ்டெல்லா என்னும் தொழிலாளர் முகாமில் இருக்கும் பதின்ம வயது இளம்பெண்ணுக்குச் சிகிச்சையளிக்கையில் ஆண்ட்ரிக்கு பார்பராவின் மீது காதல் போன்ற ஒரு அணுக்கம் ஏற்படுகிறது. அப்போது ஸ்டெல்லா கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்து தகவலை பார்பராவிடமும் பகிர்ந்து கொள்கிறான் ஆண்டிரி. ஸ்டெல்லாவை கூடுதலான நாட்கள் மருத்துவமனையில் வைத்து பராமரிக்கவேண்டுமென்று பார்பரா கூறினாலும் நிர்வாகக் கட்டுப்பாடுகளால் முகாமுக்கே ஸ்டெல்லா திரும்ப விடுவிக்கப்படுகிறாள். ஒருகட்டத்தில் பார்பராவை நாட்டைவிட்டு தப்பிக்கவைக்கும் திட்டம் காதலனால் இறுதி செய்யப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கும் பார்பராவின் பிறகான பயணத்தைக் காட்டுகிறது இந்தத் திரைப்படம்.
நான் பார்த்த பெட்ஸோல்டின் ஏழு திரைப்படங்களில் 2014 ஆண்டு வெளியான பீனிக்ஸ் Phoenix திரைப்படமே முதன்மையானது. காதலின் காவியத்தன்மையும் துரோகத்தின் துயரமும் கூடியது. பெர்லினைச் சேர்ந்த நெல்லி என்னும் யூத காபரே பாடகி நாஜிப் படையினால் கைதுசெய்யப்பட்டு ஆஸ்விட்ச் முகாமிலிருந்து உயிரோடு பெர்லின் திரும்பியிருக்கிறாள் என்பது பின்கதை. துப்பாக்கிக் குண்டுகளால் சிதைவடைந்த அவளுடைய முகத்துக்கு சிகிச்சையளிக்கும் காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது. முகத்தைச் சீரமைக்க முடிந்தாலும் பழைய முகத்தைப் பெறும் நெல்லியின் விருப்பம் சாத்தியமாவதில்லை.நெல்லியின் உயிர்த்தோழி லென்ஸ் அவளுக்கு ஆதரவாக இருக்கிறாள்.
போரில் நெல்லியின் குடும்பத்தினர் இறந்துவிட்டிருக்க நெல்லியின் சொத்துக்கள் அவளுக்கு வரப்போகின்றன. அது சார்ந்த வேலைகளை முடித்துவிட்டு இருவரும் பாலஸ்தீனத்துக்குச் சென்று புதிய யூத நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிக்கலாம் என்கிறாள் லென்ஸ். ஆனால் நெல்லியோ பியானோ கலைஞனான தன் கணவன் ஜானியைப் பற்றிக் கேட்கும்போது அவன் துரோகி என்றும் அவனைத் தவிர்க்கும்படியும் லென்ஸ் அறிவுறுத்துகிறாள். ஆனால் அதைச் செவிமடுக்காத நெல்லி அவனைத் தேடியலையும்போது பீனிக்ஸ் என்னும் இரவு மதுவிடுதியில் அவன் வேலை செய்வதைக் கண்டுபிடிக்கிறாள். துரதிரஷ்டவசமாக ஜானிக்கு நெல்லியை அடையாளம் தெரிவதில்லை. தான் நெல்லி என்பதை அவனிடம் சொல்லாமல் எஸ்தர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். அவள் தன் மனைவி நெல்லியைப்போல் தோற்றமளிக்கிறாள் என்று கூறி நெல்லியின் சொத்தை அடைவதற்காக நெல்லியாக நடிக்கும்படி கேட்க அதற்கு ஒத்துக்கொள்கிறாள். நெல்லியாக நடிக்கத் தொடங்கிய நெல்லியின் பயணம் எப்படி முடிவடைந்தது என்பதை மீதிக் கதை சொல்கிறது. இந்தத் திரைப்படத்தின் உரையாடலற்ற இறுதிக் காட்சி மிக நுட்பமானது.
2018 ஆம் ஆண்டு வெளியான டிரான்ஸிட் (Transit) என்ற திரைப்படம் அதே பெயரில் அன்னா ஷெகர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. ப்ரான்ஸ் வீடல் என்ற இறந்துபோன எழுத்தாளரின் அடையாளத்தைப் பூண்டுகொண்டு ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸிலிருந்து மெக்ஸிக்கோவுக்குத் தப்ப முயற்சி செய்யும் கியார்க் என்ற அரசியல் அகதிக்கும், வீடலுடன் மீண்டும் இணைய விரும்பும் அவனுடைய மனைவியான மரிக்கும் இடையிலான காதல் சார்ந்த உணர்வுகளைப் பேசுகிறது இந்தப் படம்.
அஃபையர் (Afire) திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. தன் இரண்டாவது நாவலைச் செப்பனிடுவதற்கும் விடுமுறையைக் கழிப்பதற்கும் நண்பன் பெலிக்ஸின் பால்டிக் கடலோர விடுமுறை இல்லத்துக்கு லியோன் என்ற இளம் எழுத்தாளன் வருகிறான். வருகின்ற காட்டுப்பாதையில் பழுதடையும் காரை அப்படியே விட்டுவிட்டு பெலிக்ஸும் லியோனும் பதினைந்து நிமிஷ நடைதூரத்தில் இருக்கும் வீட்டை நடந்து அடைகிறார்கள். எதிர்பாராதவிதமாக வீட்டில் நட்ஜா என்னும் பெண் பெலிக்ஸின் தாயின் அனுமதியுடன் தங்கியிருப்பதை பிறகுதான் அறிகிறார்கள். பெரிய அறையில் அவள் தங்கியிருக்க இருவரும் அதையொட்டிய சிறிய அறையில் தங்க வேண்டியிருக்கிறது.
நட்ஜாவின் காதலன் டேவிட் கடற்கரையில் உயிர்காக்கும் நீச்சல் வீரனாகப் பணியாற்றுகிறான். நட்ஜாவும் டேவிட்டும் இரவுகளில் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் சத்தங்களால் உறங்கமுடியாத லியோன் அவர்கள் மீது ஒரு வெறுப்பை உருவாக்கிக் கொள்கிறான். பெலிக்ஸ், டேவிட், நட்ஜா மூவரும் ஒத்த அலைவரிசை உள்ளவர்களாக மாற அவர்களுடன் ஒட்ட முடியாதவனாக லியோன் இருக்கிறான். இரவுணவின் போது டேவிட்டை அவமானப்படுத்தும் நோக்கில் பேசுகிறான். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறான். அந்தச் சூழலில் இருபது முப்பது கிலோமீட்டர் தூரத்தில் காட்டுத்தீ பற்றியிருக்கிறது.
லியோனின் நாவலை வாசிக்கும் நட்ஜா அது மிக மோசமான நாவல் என்று சொல்கிறாள். அவள் இலக்கியத்துறையில் ஆய்வு மாணவி என்பதையும் பெலிக்ஸும் டேவிட்டும் ஒருபாலுறவில் இணைந்திருப்பதையும் லியோன் அறிந்துகொள்கிறான். ஆனால் நட்ஜா பெலிக்ஸ்-டேவிட் உறவை இயல்பாக எடுத்துக்கொள்கிறாள். நாவலைக் குறித்து விவாதிக்க லியோனின் பதிப்பாளர் வருகிறார். ஆனால் அந்த உரையாடல் சரியான திசையில் முன்னேறுவதில்லை. மோசமான தரத்தினால் அந்த நாவலைப் பிரசுரிக்க இயலாதென்று லியோனை புதிய நாவல் எழுதச் சொல்கிறார் பதிப்பாளர்.
லியோனின் மனவுணர்வுகளைப் புரிந்து நட்ஜா நட்புரீதியான ஆதரவுக் கரம் நீட்டினாலும் அவன் அதை மறுதலிக்கிறான். பெலிக்ஸ், டேவிட், நட்ஜா, பதிப்பாளர் எல்லோரும் மகிழ்ச்சியான உரையாடலில் இருக்கையில் தோல்வி மனப்பான்மையில் மறுகுகிறான் லியோன். உயிர்ப்பான விஷயங்களில் ஒட்டுதலற்றவனாகவும் பாவனை மிகுந்தவனாகவும் இருக்கும் லியோனுக்கு மற்றவர்களுடனான உறவு என்னவிதமாக மாறியது என்பதைச் சித்தரிக்கிறது அஃபையர் திரைப்படம்.
இங்கே குறிப்பிட்ட ஏழு திரைப்படங்களில் ஆறு படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெர்மன் நடிகையான நினா ஹாஸ். ஆறு வெவ்வேறு பெண்களை பிறிதொருவரின் சாயலின்றி நம் மனதுக்குள் பதிய வைக்குமளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். நினா ஹாஸைப் போலவே அதிக எண்ணிக்கையில் பாவ்லா பியரும் பெட்ஸோல்டின் படங்களில் நடித்திருக்கிறார். இந்த இருவரின் தோற்றத்தையும் நடிப்பையும் பார்க்கும்போது பெண் என்னும் கலைத்தேவதையின் உருவம் பெட்ஸோல்டின் மனதில் என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
உரத்துப் பேசாத பெட்ஸோல்டின் திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான முத்திரை இருப்பதைக் காணலாம்.குறைவான எண்ணிக்கையோடிருக்கும் கதாப்பாத்திரங்களில் பெண்கள் முக்கியமானவர்களாக இருக்கின்றார்கள். அவருடைய திரைப்படங்களின் சமூகப் பின்புலமாக கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் பிரிவினை இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் வேலை மற்றும் தொழில் சார்ந்த ஆழமான சித்தரிப்புகளும் கூறுகளும் இருக்கின்றன. பெரும்பாலான படங்களில் தொடர்ச்சியான பயணமும் நிலவெளியின் உயிர்ப்பும் ஆழமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பார்பரா படத்தில் ஒரு காட்சியில் ஒலிக்கும் காற்றின் சரசரப்பைக் கேட்டவுடன் அதன் இயற்கையான தன்மையில் மனம் லயித்துவிட்டது. கதாப்பாத்திர வார்ப்புகளைப் பொறுத்தவரை அனைத்துமே சிறப்பானவை என்றாலும் அலி (எரிகோ) , பார்பரா (பார்பரா), நெல்லி (பீனிக்ஸ்) , லியோன் (அஃபையர்) ஆகியவை தனித்த முத்திரை கொண்டவை.
பெட்ஸோல்டின் திரைப்படங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான முக்கோண உறவில் இயங்கும் நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டமாக இருக்கின்றன. தங்கள் வாழ்க்கையில் தொடர்புடைய மனிதர்களிடம் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலையின் காரணமாக எதிர்கொள்ளும் அக நெருக்கடிகளை அவருடைய படங்கள் சித்தரிக்கின்றன. நான் அவருடைய திரைப்படங்களைப் புரிந்துகொண்ட அளவில் எல்லாப் படங்களுமே காணத்தக்கவை என்றாலும் பீனிக்ஸ், எரிகோ, பார்பரா ஆகிய மூன்றையும் மிக முக்கியமான படங்களாகக் கருதுகிறேன்.










