
அரங்கநாதனின் கதைகளை ஆழம்போய் அறிவதற்கு அப்புத்தகத்தைக் கையில் வைத்திருக்கும் வாசகனுக்கு ஒரு முதிர்ச்சி நிலையும் பொறுமையும் தேவைப்படுகிறது..இன்னொரு விதமாக சொல்ல வேண்டுமென்றால் ஒட்டுமொத்தமாக அவர் கதைகளை வாசிப்பதைவிடவும் வெவ்வேறு கால இடைவெளிகளில் வாசிப்பதும் அசைபோடுவதுமான பயிற்சியைக் கைகொள்ளும்போது இக்கதைகள் தமது உட்பாதைகளைத் வாசகனுக்கு முழுக்கத் திறந்துவைக்கத் தொடங்குகின்றன. ஏனெனில் அரங்கநாதனின் கதைவகை மனதில் சலனங்களையும் கொந்தளிப்புகளையும் உருவாக்கும் பேருணர்ச்சிகளை பிரதானப்படுத்தி உருவானதல்ல.அமைதி என்ற நாற்காலியில் அமர்ந்தவாறே தன் ஆழத்தில் துறவைப் பயிற்சி செய்யக்கூடிய,காரணத்தையும் விளைவையும் பொருட்படுத்தாமல் காரியத்தை மட்டும் ஆற்றக்கூடிய முத்துக்கறுப்பன் என்னும் தாமரையிலைத்தண்ணீர் மனம் இக்கதைகளில் புழங்கி வந்திருப்பது ஒரு முக்கிய காரணம்.
பெரும்பாலான கதைகளும் அவற்றின் வாக்கிய அமைப்புகளும் குறுகத் தரித்தவை.ஊளைச் சதையற்றவை.வடிவம் முழுக்க நவீனமாகவும், உள்ளடக்கம் மரபும் நவீனமும் கலந்த கலவையாகவும் அமைந்து வந்திருப்பவை.இது இக்கால புனைகதை உரைநடையில் அரங்கநாதன் போட்டு வைத்திருக்கும் தனிப்பாதையாகத் தோன்றுகிறது.இதன் பொருட்டே காட்சிகள் புதிதாக இருக்கின்றன.புதிய காட்சிகளைப் பார்க்கும்போது பார்வையும் புதிதாகிவிடுகின்றது.அனுபவம் மனங்களைப் பொறுத்தது.
உலகோடு ஒட்ட ஒழுகும் அதே கணத்தில் தன்னை அவற்றிலிருந்து துண்டித்துக்கொள்வது, இதுதான் கஷ்டம் என்று முதலிலேயே பிரித்துத் தெரிந்துகொண்டதின் மூலம் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமலிருப்பது,லெளகீகத்தின் தொந்தரவுகளால் சலனமுறாத தன்மை,இவையெல்லாம் இக்கதைகளுக்குள் விரவியிருக்கும் முத்துக்கறுப்பனின் மனவமைப்புக் கூறுகள். எனவே இக்கதைகள் நலத்திற்கு ஊட்டமூட்டும் உலர்ந்த கனிகளாக சுவைகொள்கின்றன.
எண்பது கதைகளையும் பொது அம்சத்தில் மூன்று வகையாக பிரிக்கலாம்.முத்துக்கறுப்பனுக்கும் அவன் பிறந்த ஊருக்குமான அறுபட்ட தொடர்பு, நகரத்தில் முத்துக்கறுப்பனின் லெளகீகம் அதனோடு ஊடாடும் ஊர்மனிதர்களின் தொடர்பு மற்றும் முத்துக்கறுப்பனின் மெய்ஞானத்தேடல்.இந்த மூன்று வகைகளும் ஒன்றாக உறைந்த சில கதைகளும், இவை தாண்டிய வேறுசில கதைகளும் இருக்கின்றன.இப்படிப் பிரித்துக்கொள்வது ஒரு வசதிக்காகத்தான்.இக்கதைகளில் வருவது ஒரே முத்துக்கறுப்பன்தான் என்றோ அல்லது வெவ்வேறு முத்துக்கறுப்பன்கள் என்றோ உறுதியாக சொல்லிவிடமுடியாது.இது ஒன்று விரிந்து பலதாவதும் பலது குவிந்து ஒன்றாவதுமான வித்தை.
ஊரைப்பற்றியும் உறவைப்பற்றியும் எழுதப்பட்ட பல கதைகள் சுவாரசியமானவையாக இருக்கின்றன.உதாரணங்களாக அறிமுகம், உலகு புரத்தல், உறவு போன்ற கதைகளைச் சொல்லலாம்.அரஙநாதனின் பெரும்பாலான கதைகளைப்போலவே இக்கதைகளும் வாசகனுக்கு சில உண்மைகளை/செய்திகளை உணர்த்துகின்றன அல்லது நினைவூட்டுகின்றன.இம்மூன்று கதைகளிலும் இன்னொரு பொதுப்பண்பு கதை கடைசி வரியிலிருந்து தொடங்குவது.அறிமுகம் கதையின் இறுதியில் புகைவண்டி நடைபாதையிலிருக்கும் பிச்சைக்காரன் காசை வாங்க மறுத்து கூச்சப்படுவதற்கு காரணமாக ரயில் நிலையத்தில் முத்துக்கறுப்பனின் உரையாடலைச் சொல்லலாம் அல்லது அவன் ஏற்கனவே முத்துக்கறுப்பனை ஊரில் அறிந்திருந்திருக்கக்கூடும். பேச்சை வைத்து ஊரை அடையாளங்காணுதல் என்னும் இந்த விஷயம் கதையின் மறுபுறத்திலும் நிகழ்கிறது.ஆனால் அது மேல்மட்டத்தில் நிகழ்கிறது.கீழ்மட்டத்தில் ஒருவன் இருந்தால் ஊரென்ன உறவென்ன எல்லாமே ஒரே மட்டம்தான்.இதன் இன்னொரு பரிமானத்தை உறவு கதையில் காணலாம்.
உலகு புரத்தல் கதை முடியும்போது நமக்கு ஒரு புன்னகையைக் கொடுக்கிறது.முத்துக்கறுப்பன் தான் காத்த பெருந்தன்மைக்கு விளைவு திருபதியாயில்லை என்று வருத்தப்படுவதைப்போலத்தான் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது.ஆனால் உலகில் எல்லாம் அதனதன் போக்கில் நிகழ்ந்துகொண்டேயிருக்கும்.கல்லெறிபவனாக ராகவன் இருந்தாலும் அரங்கநாதன் விவரிக்கும் அக்குடும்பம் சிக்கலற்றதாக மகிழ்ச்சியானதாக இருக்கிறது. இக்கதையின் நிஜமான நாயகன் முத்துக்கறுப்பனோ அல்லது ராகவனோ அல்ல, திரும்பத் திரும்ப ராகவனை மீட்கும் டிரில் மாஸ்டர் சிவனணைஞ்ச பெருமாள் என்றுகூட சொல்லத்தோன்றுகிறது.வாழ்க்கையை விளையாடும் ராகவனை விளையாட்டு ஆசிரியர்க்கு பிடித்துப்போவதற்கு வேறு காரணங்கள் தேவையில்லைதானே? உலகு புரத்தல் மற்றும் சிறிய புஷ்பத்தின் நாணம் கதைகளை ரசமிகுந்தவை என்பேன்.இன்றைய நம் சிறுகதைகளில் வெகுவாக அருகிவிட்ட ரசம்.டிரில் மாஸ்டர் காலாட்டிக்கொண்டு வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போதும், இவள் சமையலில் குத்தம் சொன்னால்கூட வெட்கப்படுவாள் என்று முத்துக்கறுப்பன் சிறியபுஷ்பத்தைக் குறித்து நினைப்பதை வாசிக்கும்போதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால் எல்லா நேரங்களிலும் நாம் அருந்தும் காபியில் சர்க்கரை அதிகமாக இருந்துவிடுவதில்லை என்பதால் இவ்வகைப்பட்ட கதைகள் அருகிவிட்டதற்கு யாரையும் குற்றம் சொல்லமுடியாது.சிறிய புஷ்பத்தின் நாணம் கதையில் உள்ளுறைந்த தன்மையாக இன்னொரு பகடி இருக்கிறது.அது நூலகத்தில் புத்தகங்களைவிட நட்டுகள் விலைமிகுந்தவையாக இருப்பது.இதைப்போன்று அரங்கநாதனின் கதைகளில் நாம் சுவைக்கும் பகடி அறிவார்த்தமானது.அரணை,துக்கிரி,ஒரு நூற்றாண்டுவிழா,பட்டினத்து சாமி,ஒரு இரங்கற் கூட்டம் போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லாம்.
அரங்கநாதனின் சில கதைகளில் குறிப்பாக ஊர்குறித்த கதைகளில் பிரதானமாக தென்படுவது மனிதர்களின் கீழமைக்குணச் செயல் மற்றுமவற்றின் விளைவுகள்.தேங்காய்,மூடு,அம்மே நாராயணி,ஒரு பிற்பகல் நேரம்,தீவட்டி,காலக்கோடு போன்ற கதைகளில் களவு,துரோகம் மற்றும் மனிதர்களின் இன்னபிற கீழ்மைகள் மையமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.ஆனால் அரங்கநாதன் இக்கீழ்மைகளை கதைகளின் உள்ளடங்கிய தன்மைகளாக வைக்கிறார்.மனிதர்களுக்குள்ளிருக்கும் எதிர்மறைத்தன்மை என்பது வழக்கமற்ற ஒன்றல்ல என்பதால் இந்த எதிர்மறைத்தன்மைக்கு மேலே, இதனைத்தாண்டி வாழ்வு என்னவாக இருக்கிறது என்று ஆராய்கிற உத்திகளாக இக்கதைகள் இருக்கின்றன.
தேங்காய் கதையில் முத்துக்கறுப்பனுக்கும் பக்கத்துவீட்டு சிதம்பரம்பிள்ளை மாமாவுக்கும் இடையிலிருக்கும் பிரக்ஞைப்பூர்வமான ரகசிய இடைவெளிக்கான மூலகாரணம் இவன் தகப்பனார் தோப்பில் சிதம்பரம்பிள்ளை தேங்காய் திருடுவதும் அதை சிறுவனான் முத்துக்கறுப்பன் பார்த்துவிடுவதும் இவன் பார்த்துவிட்டான் என்பதை சிதம்பரம்பிள்ளையும் தெரிந்துகொண்டார் என்ற முடிச்சிலிருக்கிறது. முத்துக்கறுப்பனின் அண்ணனுக்கொன்றால் எதையும் முன்னின்று செய்யும் சிதம்பரம்பிள்ளை இவனுடைய விஷயங்களில் ஒதுங்கிவிடுகிறார். அவரது ஆகிருதி இவனிடம் சிறுத்துக்கிடக்கிறது.தகப்பனாரின் மரணத்திற்குப் பின்னால் அந்தத்தோப்பை இவனுடைய அண்ணனுக்கு ஒதுக்கிவிடுவதில் சிதம்பரம்பிள்ளையே சூத்ரதாரியாக இருக்கிறார்.ஒருவேளை அந்தத்தோப்பு முத்துக்கறுப்பனுக்குப் போய்விட்டால் அது அவருடைய களவின் சுமையைக் கூட்டக்கூடும் அல்லது எப்போது தேங்காய் திருடுபோனாலும் முத்துக்கறுப்பன் சிதம்பரம் பிள்ளையைத்தான் நினைப்பான் அல்லது முத்துக்கறுப்பனுடைய அண்ணனுக்குக்கென்று ஆகிவிட்ட தோப்பில் இனிமேலும் சிதம்பரம்பிள்ளை தேங்காய் திருடலாம் போன்ற பல வாசிப்புகளை தருகிறது இக்கதை.சிதம்பரம்பிள்ளையும் பதினைந்து வருடங்களாக நடுங்கிக்கொண்டுதானிருக்கிறார் என்று முத்துக்கறுப்பன் சொல்லும்போது இன்றைக்கும் எத்தனையோ மனிதர்களுக்கிடையிலிருக்கும் இவ்வகைப்பட்ட ரகசியநாணம் தெளிவாகப் புலனாகிறது.
மாந்த்ரீகத் தன்மை கொண்ட காலக்கோடு கதை கோமரத்தாடியின் கொலைப்பாதகத்தைப் பேசுகின்றது.ஒரு கோமரத்தாடி இன்னொரு கோமரத்தாடியைக் கொலையென்று சமூகம் அறியாதவாறு கொல்கிறான்.சமூக அமைப்பில் கடவுள் என்பது நிறுவனமென்றால் இது அதிகாரத்திற்கான போட்டியிடல் எனலாம்.பாலிடாலும் சூலகமும் ஒரே காரியத்திற்கான கைப்பொருள்களே.இக்கதையில் நாம் பல அடுக்குகளைக் காணமுடிகிறது. Nepotism போன்ற ஒரு விஷயத்தை பேசினாலும் தன் ஆழத்தில் ஆக்கலும் அழித்தலுமாய் நகரும் காலச்சகடத்தையும் இக்கதை ஆராய்கிறது.இயற்பியலும் நடனமும் ஒரே புள்ளியில் வைக்கப்பட்டுப் பார்க்கப்படுகின்றன.தில்லை நடராஜனின் ருத்ரதாண்டவத்திற்கும் அணு இயற்பியலின் சில கொள்கைகளுக்கும் இருப்பதாக சொல்லப்படும் ஒப்புமைகளைக்கொண்டும் இக்கதையை வாசிக்கலாம்.இந்தத் தன்மையை நாம் தொலைவிலுணர்தல் கதையிலும் காணலாம்.பத்துலட்சம் புத்தகங்கள் வாசிப்பதைவிடவும் ஒரு கூத்தில் வேசங்கட்டி ஆடுவது மேலானது என்னும்போது அது மாசற்ற சோதியில் கலந்துவிடுவதையே குறிக்கிறது.காலக்கோடு கதை தத்துவம் மற்றும் அறிவியல் வழியாக நவீனபிரதியாக மாறுகையில் இக்கதையோடு சில சம்பவ ஒப்புமை கொண்டதாக மூடு கதையை வாசிக்கலாம்.
குற்றவுணர்ச்சிக்கான ஊற்றுக்கண் நீதி அல்லது அறம் என்ற நம்பிக்கைகளிலிருந்து உருவாகிறது...அரங்கநாதன் கதைகளில் இவ்விரண்டும் உள்ளுறைப் பண்பாக இருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.உதாரணமாக அம்மே நாராயணி மற்றும் ஒரு பிற்பகல் நேரம் கதைகளைச் சொல்லலாம்.இவ்விரண்டு கதைகளும் மேஜிக்கல் அம்சம் கொண்டவை.ஒரு பார்வைக்கு தட்டையாகத் தெரியும் நம் வாழ்க்கையை சற்றே நுணுகிப்பார்த்தால் அதற்குள்ளிருக்கும் மாயத்தன்மை பிடிபடும்.இதுதான் அம்மே நாராயணியில் இருக்கும் மேஜிக்கல் அம்சம். தமிழ்சொல்லும் ஊழ் என்றும் கொள்ளலாம்.ஒருவேளை கடைசிநேரத்தில் குழுவில் சேர்க்கப்படாது முத்துக்கறுப்பன் சுற்றுலாவிற்குப் போகமலிருந்தால் அம்மே மாப்பு என்ற ஒலியைக் கேட்கமாலே அவன் வாழ்ந்து முடித்திருக்கக்கூடும்.சொந்தக்காலில் நிற்பதற்காக தன் வீட்டில் திருடிய தொண்ணூறு ரூபாயிலிருந்து முத்துக்கறுப்பன் லட்சங்களைத் தேற்றிவிட்ட நேரத்தில் இன்னும் அந்தத் தொண்ணூறு ரூபாய் சலனமூட்டக்கூடியதாகத்தான் இருக்கிறது.திருடும்போது கையோடு வந்துவிட்ட கடிதத்தை திரும்ப அப்பாவின் சட்டையில் வைக்கப்போகும்போது பீரோ கவிழ்ந்து அம்மா செத்துப்போகிறாள்.வராத திருடனை முத்துக்கறுப்பன் காரணமாக்கிவிட்டாலும் எங்கோ சுற்றுலா போகுமிடத்தில் ஒலிக்கும் அம்மே மாப்பு என்னும் ஒலி அவனைக் குலைத்து அவனை மாப்பு கேட்க வைத்துவிடுகிறது.ஒரு பிற்பகல் நேரம் கதையில் பலகாலம் மற்றவர்களின் பிற்பகல்களைப் பார்த்த முத்துக்கறுப்பன் தன் முற்பகலை மறந்துவிடுவது வினோதமே.ஆனால் அவனுக்கும் பிற்பகல் வந்தேதான் தீர்ந்தது.
மேற்சொன்னவை மட்டுமின்றி மாயாவாதம் புழங்கிவரும் கதைகளாக தொலைவிலுணர்தல், தில்லை வாழ் அந்தணன்,துக்கிரி,சிராப்பள்ளி,கச்சிப்பேடு,முதற்தீ எரிந்த காடு ,அழல்குட்டம் போன்ற கதைகளைச் சொல்லலாம்.பெரும்பாலும் இம்மாயவாதமானது எண் என்று சொல்லப்படும் சோதிடத்தின் வடிவிலிருக்கிறது. நிறுவனப்படுத்தப்படாத வியாபாரமாகிவிட்டிருக்காத கலை என்ற பொருளில் பேசப்படும் சோதிடம்.வெறுமனே மூட நம்பிக்கையாக பார்க்காமல் தர்க்கத்தின் வழியாக சோதிடத்தை ஆராய்வதும் அதை பொதுவெளியில் பிரச்சாரப்படுத்தாமல் தனிமனதின் நம்பிக்கையாக மட்டும் முன்வைப்பதும் குறிப்பிடத்தக்கது.முதற்தீ எரிந்த காடு கதையில் நாகரீக சமூகம் உருவாகிவந்த பயணத்தையும் அவற்றில் சோதிடம் போன்ற கலையின் பங்கு என்ன என்பதையும் அரங்கநாதன் விவாதிக்கிறார்.உலகின் பூர்வகுடிகளின் வரலாறாகவும் அது வடிவமைந்து வந்திருக்கிறது.சிராப்பள்ளி மற்றும் தொலைவிலுணர்தல் கதைகளை ஒரு கோட்டில் வைத்து வாசிக்கலாம்.முறுக்கில் மீன்வாடை அடிப்பதாக சொல்வதும், பாலத்தின் மேல் நிற்பவனை தொலைவிலிருந்து கண்டுசொல்வதும் நமது சமூகத்தில் புழங்கிவரும் பயிற்சிதான்.அறிவுக்கண் இச்செயல்பாடுகளை ஐயம் கொண்டு நோக்கினாலும் புனைவம்சமாக பார்க்கும்போது காலம்,இடம் என்ற தன்மைகளை குலைத்து சுவர்கள்,இடைவெளி,தூரம் என்ற தடுப்பரண்கள் நீக்கப்பட்டு யாவற்றையும் ஏகத்தில் வைத்துப்பார்த்தலாகவும் இவற்றைக் கொள்ளலாம்.
சமகால வாழ்வில் பழமையான செவ்வியல் பிரதிகளின் பங்கு என்னவென்று நாம் யோசிக்கவேண்டியிருக்கிறது.நம்முடைய செவ்வியல் வடிவங்கள் ஆற்றில் போனவை, இலக்கணம்,நீதிநூல்,காப்பியங்கள்,சைவ-வைணவ பக்தி இலக்கியங்கள் உள்ளிட்டு ஏராளம்.யாவற்றிலும் மையச்சரடாக விடுதலையான நீதியுணர்வு பயிலப்பட்டு வந்திருக்கிறது என்பது என் அனுமானம். மேலும் நம் அன்றாட வாழ்விற்கும் நமது செவ்வியல் பிரதிகளுக்கும் எந்தவகையிலும் ஏன் எதிர்மறையாகக்கூட தொடர்பில்லை.இதுவொரு சூழல்.மேற்கத்திய வடிவ, தர்க்க, ஆய்வு முறைமைகளை முழுக்க கைகொண்டுவிட்ட இக்கணத்தில் நாம் நம் மரபை இவ்வகையான முறையில் மீள்வாசிப்பு செய்திருக்கவேண்டும். நாமோ பண்டிதர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டோம்.எனக்கு அரங்கநாதனின் கதையிலுள்ள “பாஸ், நான் லக்கேஜீடன் பயணம் செய்ய விரும்பவில்லை” என்ற வரி நினைவிற்கு வருகின்றது.
ஆனால் அரங்கநாதனின் கதைகளில் இவ்வகைப்பிரதிகளின் மீதொரு விசாரணை அல்லது இவற்றை அன்றாட லோகாயுத வாழ்வோடு வைத்துப்பார்க்கும் பார்வை இருக்கின்றது பொதுசமூகத்திற்கான நீதியாக அல்லாமல் தனக்கு மட்டுமான எளிய நீதியை வடிவமைத்துக்கொள்வதும் நிகழ்கிறது.மரபான பிரதியிலிருந்து பெற்று தன் செயல்பாட்டால் அவற்றிற்கான புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொள்ளுதல் என்பதின் மூலம் தன்னை மரபின் தொடர்ச்சியாய் உணர்ந்துகொள்வது.இங்கு மரபு என்று நான் சுட்ட முயல்வது இவ்வகை செவ்வியல் பிரதிகள் உருவாகி வந்த வாழ்வையும் சேர்த்துத்தான்.இதன் வியாபகம் பலவேசம் பிள்ளை சொல்வதைப்போல் ஏழாயிரம் வருசம்கூட இருக்கும்.
Archetype என்னும் ஆங்கிலச்சொல்லிற்கு நான் வைத்திருக்கும் அகராதி ”யூங் (Carl Gustav Jung) என்பாரின் கோட்பாட்டின்படி மூதாதையர் வழிவந்த தன்னுணர்வற்ற எண்ணம் அல்லது கருத்துப்படிவம்” என்று அர்த்தத்தைச் சொல்கிறது.அரங்கநாதனின் கதைகளுக்குள் இவ்வகையான மூலப்படிவம் அல்லது கருத்துப்படிவம் ஒரு நரம்பாக உள்ளோடுகிறது.இங்கே இச்சொல்லை உளவியல் தன்மையில் அல்லாமல் நான் சுட்ட முயல்வது ”திரும்பத் திரும்ப நிகழ்தல்” என்னும் அர்த்தத்திலேயே.இக்கருத்துப்படிவத்தின் மூலம் என்பது சைவசித்தாந்தம் மற்றும் வள்ளுவம் போன்ற பிரதிகளாக இருக்கின்றன.இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக பூசலார் கதையைச் சொல்லலாம்.பூசலார் கட்டிய மனக்கோவிலில் சிவபெருமான் எழுந்தருளினார்.நவீனகால பூசலாரான முத்துக்கறுப்பன் மனக்கோவிலுக்குப் பதிலாக மனக்குடும்பத்தைக் கட்டுகிறான். பூசலாருக்கும் முத்துக்கறுப்பனும் ஒரேவிதமான காரியசுத்தி கொண்டவர்கள்.அவர்களுக்கு விளைவு அல்லது பயன் என்பது ஒரு பொருட்டல்ல.இங்கே முன்சென்ற காலத்தைச் சேர்ந்த பூசலார் என்னும் பிரதி முத்துக்கறுப்பனின் வழி மறுவாசிப்பு செய்யப்படுகிறது.இந்தத்தன்மையின் வெகு எளிமையான லெளகீகப் பிரதியை நாம் திரு நீர்மலை கதையில் பார்க்கலாம்.
சாலமெனின் கப்பல்கள் வந்துபோனதால் மிகத்தொன்மையானது என்று உவரியைச் சொல்வதைவிடவும் காந்தும் வெயிலுக்கு மறைப்பாய் குழந்தையின் தலையில் துண்டை வைக்கும் மனிதனைப் போன்றவர்களால்தான் உவரி தொன்மைமிக்கது என்று அரங்கநாதன் நிறுவும்போது எச்சமூகத்திற்கும் பொருத்தமான நிஜமான ஒரு செவ்வியல் சிறுகதையை வாசித்து முடித்துவிடுகிறோம்.மனித நாகரீகத்தின் வளர்ச்சியையும் அதன் தொன்மையையும் எதைக் கொண்டு அறிந்துணரவேண்டும் என்பதற்கு உவரி ஒரு சான்று.இதே வரிசையில் இணைவைத்து வாசிக்கத்தக்க இன்னொரு கதை தேட்டை.வழிசொன்னது மட்டுமல்லாது சரியான இடத்திற்கு போய்ச்சேர்ந்ததை வந்துபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளும் மனம் மகத்தான மேன்மை கொண்டது.இது தனது இறகுகளால் இயன்றளவிற்கு இன்னொரு மனிதனை அணைத்துக்கொள்வது.
தன்னிலையை மீறிய ஒரு இருப்புநிலை அல்லது சிந்தனை வெவ்வேறு பரிமானங்களில் விரவிய கதைகளாக எங்கோயோ போதல்,ஒருவழிப் பயணம், மெய்கண்டார் நிலையம் கதைகளைக் குறிப்பிடலாம்.ஒருவழிப்பாதையை வாசிக்கும்போது எனக்கு ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நினைவிற்கு வருகிறது.இதன் அடிப்படை பார்த்தலின் வழியாக அறிவது.இதன் தெறிப்புகள் ”இருக்கிற நாலுசுவரை சரியாக பார்க்கதவன் கைலாயத்தையா பார்க்கப்போகிறான்” என்பது போன்று அரங்கநாதனின் சொற்களிலேயே இருக்கின்றன.வெறுமனே பார்த்தல் அல்ல.இது உற்றுநோக்குவது அல்லது அணுவுக்குள் நுணுகுவது என்கலாம்.
எங்கேயோ போதல் என்று சொல்லும்போது நமக்கு எங்கே என்ற கேள்வி வருகிறது.ஆனால் இவ்விடத்தில் “எங்கேயோ” என்பது முக்கியமல்ல.ஏனெனில் அது சரியாக புலப்படும் இடமல்ல.அப்படியிருந்திருந்தால் இந்த எங்கேயோ என்பது “அங்கே” ஆகியிருக்கும்.ஆனால் போவது என்னும் இயங்குதல் முக்கியமானது.ரயில்நிலையத்தில் முதலில் இருவரும் ஒன்றாக பேசிப் பொழுதுபோக்கியதை முத்துக்கறுப்பன் நிம்மதியோடு பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான்.பிறகு தூக்கமாத்திரையைத் தின்று சாகும்தறுவாயில் அவளை மட்டும் தனியாகப் பார்க்கிறான். நகையின் பொருட்டு பணிக்கொடை பணத்திற்காக வேலையைவிடும்போதும், தம்பதிகள் திருத்தணி செல்ல பயணச்சீட்டு வாங்கப்போகுமிடத்தில் குழந்தையைக் காப்பாற்றி தன்னைப் பலியிட்டுக்கொள்வதற்கும் ”எங்கேயோ போவதுபோல் இருக்கிறது” என்பதைத் தவிர முத்துக்கறுப்பனுக்கு வேறு காரணங்களில்லை.அப்படியென்றால் முத்துக்கறுப்பன் விரும்புவது இங்கே இல்லை என்பதும் முத்துக்கறுப்பன் இங்கே இருந்திருக்கவேவில்லை என்பதுமே உணமை.கதையின் கடைசி வாக்கியம் ”சிறுமியைக் காப்பாற்றியபோதும் அவன் எங்கோதானிருந்திருக்க வேண்டும்” என்று முடிகிறது. ஆக அவன் மரணம் அங்கே போய்ச்சேர்ந்துவிட்டான் என்பதைக் குறியீடாக்குகிறது.இந்த முத்துக்கறுப்பன் மட்டுமல்ல கண்ணோட்டம் கதையில் தன் செயினை அறுத்துக்கொண்டு போனவன் அடுத்த சில நிமிடங்களில் திருப்பத்தில் விபத்தில் அடிப்பட்டு சாகும்போது அந்தப்பெண் சொல்லும் ஐயோ பாவம் என்ற வார்த்தையில் அவளும்கூட இன்னொரு வகையில் எங்கோயோ போய்விடுகிறாள்.
போர்ஹேஸின் மேகங்கள் கவிதையில் வரும் what are clouds? An Architecture of Chance என்பதைப்போல தற்செயல்கள் அல்லது வாய்ப்பின் வடிவமைப்புகள் பலகதைகளில் பிரதான சரடாக பயின்று வந்திருப்பதைக் கவனிக்கிறோம்.வீடுபேறு கதையில் அமெரிக்காவிலிருந்து இவ்வளவு தூரம் அம்மா தற்கொலை செய்துகொண்ட அறையைப் பார்ப்பதற்காக வரும் பாலகிருஷ்ணன் வீட்டில் வந்து அமர்ந்திருந்தும் கடைசியில் பார்க்காமலே போவதற்கும் நாம் எதையுமே காரணமாக சொல்லமுடியாது.இந்த மனமும் கலைந்துகூடும் ஒன்றாகத்தானே இருக்கிறது.
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட முன்றில் கதை இன்றைக்கும்கூட அதன் ஒளி குன்றாது இருக்கிறது.சொல்லாமல் விடுவது, மட்டுப்படுத்தப்ப்ட்ட பேருணர்ச்சிகள் போன்று அவரது பிற்காலக் கதைகளில் மிளிரும் அம்சங்களின் ஆதாரப்புள்ளியைக் இக்கதையில் காணமுடிகிறது.பெரிய விஷயத்தை எளிமையாக பேசும் கதை.குழந்தையின் அகவுலகு வழிக் காட்சிப்படும் இக்கதை தமிழ்ச்சிறுகதையின் செவ்வியல் கதைகளில் ஒன்று.
காமம் சாதி பார்க்காது அதற்கு கண்ணில்லை என்றே நினைத்திருந்தேன்.நீதிவகையில் வராததது.அவ்வுணர்வு மேலெழும்போது சிந்தனையில்லை என்றவகையில் அது ஒரு மிருக உணர்ச்சி.ஆனால் இந்த நினைப்பைக் குலைத்துப்போட்டது மனத்துக்கண் கதை. அரங்கநாதனின் இந்த ஒரே ஒரு கதையில் மட்டும் காமம் பேசப்படுகிறது.அவனும் அவளும் தற்செயலாய் சந்திக்கிறார்கள், வள்ளுவர் மார்க்ஸ்,சாக்ரடீஸ்,ஜே.கே,கணியன் பூங்குன்றன் என்று நீள்கிறது பேச்சு.இவள் நல்ல நிறம் என்றவன் நினைத்துக்கொள்கிறான்.அவள் காமம் குறித்துப்பேசுகிறாள்.சேர்ந்து உணவருந்துகிறார்கள்.ஒரு புத்தகத்தின் நிமித்தம் அவன் தங்கியிருக்கும் அறைக்கு வருகிறார்கள். அவன் கீழே சென்று வருவதற்குள் புத்தகத்திற்குள்ளிருக்கும் அந்த செய்தித்தாளை அவள் பார்க்காமலிருந்திருந்தால் டியர் டேக் மீ டூ பெட் என்றுதான் சொல்லியிருப்பாள்.அவனும் மறுத்திருக்கமாட்டான். ஆனால் அவள் மனதின் ஆழங்களில் புரையோடி இருக்கும் இம்மாசு காமத்தையும் கூட தோற்கடித்துவிடுகிறது.
நல்ல இலக்கியம் உடனடியாக மனிதனை பண்படுத்திவிடும் என்று சொல்ல முடியாது.ஆனால் இலக்கியத்தோடு வாழ்வதைப் பயிற்சியை நிகழ்த்தும்போது அது நம்முடைய சில குணங்களை மாற்றியமைக்கத்தான் செய்கிறது.இப்போது எது நல்ல இலக்கியம் என்ற கேள்வி எழுகிறது.விடுதலையுணர்வையும் கனவையும் கொடுக்கக்கூடிய ஒன்றை நல்ல இலக்கியமாக கொள்ளலாம் என்று அரங்கநாதன் சொல்வதே இக்கேள்விக்கு பொருத்தமான பதிலாகவும் இருக்கிறது..
தமிழ் இலக்கியத்தில் அரங்கநாதன் ஒரு தனித்துவம்.தன் நம்பிக்கையை நிறுவனப்படுத்தாதது, அகம் கோருவதை அகத்தாலும் தர்க்கம் கோருவதை தர்க்கத்தாலும் நோக்குதல், சித்தாந்தங்களை முரட்டுத்தனமாக போதிக்காமல் காலப்பிரக்ஞை மற்றும் மானுடத்தின் தற்காலநிலையைக் கருத்திற்கொண்டு கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுதல், தன்னை இயற்கையின் அங்கமாக வைத்துக்கொள்ளுதல் போன்ற தன்மைகளால் உருவாகி வந்திருக்கும் இக்கதைகளின் அடிப்படைகளைத் தொகுத்து இந்த எழுத்திலிருந்து பெற்றுக்கொள்வது என்னவென்று நான் யோசிக்கும்போது அது அவர் சொல்லும் இரண்டுமாகத்தான் இருக்கிறது.
நன்றி:சிற்றேடு(மா.அரங்கநாதன் – நவீனமான எழுத்துக்கலையின் மேதமை)
No comments:
Post a Comment