1.
இந்த விஷயத்தை இப்போதைக்கு நான் முழுக்கவும் புறவயமாகவும்( Objective) ஆகவும் கொள்கையளவிலுமே (In principle) வைத்துப் பேச நினைக்கிறேன். தமிழில் பதிப்புத் தொழிலில் தேனும் பாலும் ஓடவில்லை என்று புரிகிறது. ஆனால் அது நிஜமாகவே மோசமான சூழலில் இருக்கிறதென்றால், எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது, பதிப்பாளர்கள் தரவுகளின் மூலம் வெளிப்படையாக வைக்காதவரை நமக்குத் தெரியப்போவதில்லை. ஒரு பதிப்பகம் நீண்ட காலம் தொழிலில் இருந்தால் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளலாம்.
தமிழில் சமகால உலகத்தை விரிவாகப் புரிந்துகொண்டு படைப்பில் காத்திரமாக வெளிப்படுத்தும் எழுத்தாளர்கள் யாரும் இல்லை என்ற சொன்ன நண்பரோடு நேற்று சண்டையாகிவிட்டது. அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அப்படியான சூழலுக்கான காரணங்களை யோசித்தபோது கவனச்சிதறல் ஒரு காரணமாகத் தோன்றியது. ஆமாம், சோற்றுப்பாட்டுக்கான எழுத்தாளரின் வேலை மற்றும் தொழில் போன்றவையுமே அவனுக்குக் கவனச்சிதறல்தான்.
மத்தியவர்க்க வாழ்க்கைக்குத் தேவையான வருவாயை எழுத்தின் மூலமே ஈட்டிக்கொண்டு தன் முழுநேரத்தையும் சிந்தனைக்கும் எழுத்துக்கும் செலவிடும் சூழ்நிலை தமிழில் எழுத்தாளர்களுக்கு இல்லை. படைப்பூக்கம் உள்ள ஒருவர் தன் மொத்த நேரத்தையும் வாசிப்பிலும் எழுத்திலும் செலவிட்டால் நல்ல படைப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் கூடும். வேட்கையும் தொழிலும் ஒன்றாக இருந்தால் அங்கே அற்புதங்கள் நிகழ்கின்றன. சினிமாவுக்குப் போய் வெற்றியடையாமல் தமிழில் யாராலும் வெற்றிகரமான முழுநேர எழுத்தாளராக முடியாது. பத்து, பனிரெண்டு மணி நேரம் கூலிக்கு உழைத்துவிட்டு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தமிழ் எழுத்தாளனால் காவியங்களையா படைத்துவிடமுடியும்? பெரும்படைப்புகளுக்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது.
காட்சி ஊடகத்தின் பெருக்கத்தினால் குறையும் வாசிப்புப் பழக்கம், எழுத்தாளனுக்கென்று தனி வாசகர் திரள் (readership) இல்லாமை, புத்தகங்கள் விற்பனை ஆகாமை, அச்சாக்கம், விநியோகம், விற்பனை சார்ந்த சிக்கல்கள் என்று பதிப்புத் தொழிலில் பல பிரச்சனைகள் இருக்கலாம். பதிப்பகத்தில் ஒரு தலைப்பு விற்றால் பத்துத் தலைப்புகள் விற்காது, விற்ற தலைப்பைக் கொண்டுதான் நட்டத்தை சரிக்கட்ட முடியும் என்று முன்பு பதிப்பாளர்கள் சொல்வார்கள். ஆனால் அந்தச் சிக்கலுக்குத் தீர்வாக POD வந்துவிட்டது. ஒரு POD அச்சில் குறைந்தபட்சம் 32 வரை அச்சாக்க முடியும் என்பது என் அனுபவமாக இருந்தது. இப்போது அது இன்னும் குறைந்து நூலாக்கத்தின் தரமும் கூடியிருப்பதுபோல் தெரிகிறது.
தமிழ் பதிப்புத் தொழில் இன்னுங்கூட முழுமையான தொழில்முறை செயல்பாட்டுக்கு மாறவில்லை. ராயல்டியைப் பொறுத்தவரை சிலர் கொடுக்கிறார்கள், சிலர் கொடுப்பதிலை அல்லது கொடுக்க முடிவதில்லை என்ற யூகமான பேச்சுக்கள்தான் இருக்கின்றனவோ தவிர முறையான விவரங்கள் ஏதும் தெரியவில்லை. பணம் குறித்த விஷயம் என்பதால் இதுகுறித்து நம்மிடையே வெளிப்படையான உரையாடலும் இல்லை.
நான் சொல்ல விழைவது இதுதான்: நூலாக்கத்துக்கான ஒப்பந்தங்கள் தொழில் முறையில் தெளிவாக ஏற்படுத்தப்படவேண்டும். தங்களால் ராயல்டி அளிக்க முடியுமென்றால் இத்தனை வருஷங்களில் இத்தனை பிரதிகளுக்கு இத்தனை சதவீதம் என்று ஒப்பந்தத்தில் விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். ராயல்டி சாத்தியமில்லை என்றால் அதற்கான எழுத்தாளரின் ஏற்பு பெறப்படவேண்டும் (consent). புத்தகங்களின் விற்பனைக்கு ஏற்ப சரியான கால இடைவெளியில் எழுத்தாளர்களுக்கு ராயல்டி கொடுக்கவேண்டும், அப்படி அளிக்க முடியாத நெருக்கடியில் பதிப்பகம் இருந்தால் அது குறித்து எழுத்தாளருக்குத் தகுந்த முறையில் தெரிவிக்கப்படவேண்டும். நூலக ஆணை கிடைத்திருந்தால் அது குறித்த தகவல்கள் எழுத்தாளருக்கு அளிக்கப்படவேண்டும். மின்னூல் பதிப்பிக்கப்பட்டு அதன் அறுபது அல்லது எழுபது சதவீத விற்பனைத் தொகை எழுத்தாளருக்கு அளிக்கப்படவேண்டும்.
பதிப்பகங்கள்தான் நூல்கள் மற்றும் வாசிப்புச் சூழமைவின் ஆதார அச்சாக இன்னும் இருக்கின்றன. ராயல்டி கொடுக்கப்படுகிறது என்பதைவிட முதலில் அதுகுறித்த வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். குறைந்தபட்சம் இவையெல்லாம் முதலில் தாளில் வரவேண்டும். எழுத்தாளன் வேறொரு வேலையிலோ அல்லது தொழிலோ இருந்துகொண்டு வாழ்க்கைப்பாட்டைச் சமாளிக்கிறவனாக இருக்கலாம், ஏன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறவனாகக்கூட இருக்கலாம். ஆனால் எழுத்தின் மூலம் பெறும் தொகை எவ்வளவு சிறியதென்றாலும் அது கொடுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் வெகு அந்தரங்கமானது. எதிர்காலத்தில் தமிழில் எழுத்தை நம்பி ஒரு எழுத்தாளர் வாழ முடியும் என்ற சூழலை உருவாக்குவது எவ்வளவு தூரத்துக் கனவாக இருந்தாலும் அதை நோக்கி நடப்பதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை.
சென்னை புத்தக கண்காட்சி தொடங்க இருக்கும் நிலையில் இதுகுறித்து வெளிப்படையான உரையாடல்கள் நடக்கவேண்டும்.
2.
மேற்கில் ஆங்கிலப் பதிப்புத் துறையும் ராயல்டியும் பொதுவான விதத்தில் எப்படி இயங்குகின்றன என்று ஆராய்ந்தேன். இவை இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் என்பதால் நடைமுறையில் சற்று முன்பின்னாகவும் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் பதிப்பகத்துக்கும் வேறுபட்டிருக்கவும் வாய்ப்புண்டு. இங்கு மேற்கு என்பதை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகியவை. மேலும் ஆங்கில மொழியின் சந்தை மிகப்பெரியது, நம்முடையது மிகச்சிறியது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேற்கில் பதிப்பாளர் புத்தக உரிமைகளை வாங்கி வெளியிடுகிறார். எழுத்தாளருக்கு அதற்கான முன்பணம் (Advance) வழங்கப்படுகிறது. பிறகு புத்தக விற்பனையின் சதவீதமாக ராயல்டி ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது. ஆசிரியருக்கு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையைப் புத்தகத்தின் வருவாய் ஈடுகட்டிய பிறகே ராயல்டி திரும்பவும் வழங்கப்படுகிறது. இந்த முன்பணம் புதிய எழுத்தாளர்களுக்குக் குறைவாகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு அதிகமாகவும் இருக்கும். ஆனால் பல புத்தகங்கள் ஆசிரியருக்குக் கொடுக்கப்பட்ட முன்பணத்தையே ஈடுகட்டுவதில்லை என்பதால் குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எழுத்தாளரின் வருமானம் என்பது அந்த முன்தொகை மட்டுமே.
ராய்ல்டி தொகை ஒவ்வொரு புத்தக விற்பனைக்கும் கணக்கிடப்பட்டு ஆறுமாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் புத்தகத்தின் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலை (Recommended Retail Price) அடிப்படையிலும் சில சமயம் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் தள்ளுபடி போன்றவை கழிக்கப்பட்ட பிறகு பதிப்பாளருக்குக் கிடைக்கும் நிகர வருவாயின் மூலமும் கணக்கிடப்படுகிறது மொழிபெயர்ப்பு, திரைப்பட உரிமை, ஒலிப்புத்தகம் போன்ற துணை உரிமைகளின் மூலமும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஆசிரியருக்கு வருவாயாகக் கிடைக்கிறது.
ராயல்டி விகிதங்கள் புத்தகத்தின் வடிவம், பதிப்பாளர், ஆசிரியரின் அனுபவம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு ஏற்ப மாறுபடும் (முகவர்கள் சிறந்த ஒப்பந்தம் பெற உதவுகிறார்கள்). சராசரியான ராயல்டி விகிதங்கள் பின்வருமாறு:
1)கெட்டி அட்டை- நூலின் சில்லறை விற்பனை விலையில் 10-15% வரை.
2)பேப்பர்பேக்- நூலின் சில்லறை விற்பனை விலையில் 7.5-10% வரை.
3)மின்னூல் - 25% வரை
4)ஒலிப்புத்தகம்- 10 முதல் 15 % சதவீதம் வரை, நூல் விவரிப்பாளருடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
பல ஆசிரியர்கள் Amazon KDP போன்ற சுய பதிப்பைத் தேர்வு செய்கின்றனர், மின்னூலுக்கு 35–70% என்ற அளவிலும் அச்சு புத்தகத்துக்கு 40–60% (அச்சு செலவு போக) ராயல்டி கிடைக்கிறது. இதில் முன்பணம் என்ற ஏற்பாடு இல்லை, ஆனால் முழு கட்டுப்பாடு மற்றும் பணம் விரைவாகக் கிடைப்பதால் இது மேற்கில் பிரபலமாக இருக்கிறது. ஆனால் இது பைரசிக்கு வழிவகுக்கிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் பெஸ்ட் செல்லர்கள் தவிர்த்து பெரும்பாலான ஆசிரியர்கள் இதில் சுமாரான வருமானமே பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ராயல்டி பதிப்புரிமை என்பது காலம் முழுவதும் தொடரும். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் ஆசிரியரின் வாழ்நாளுக்குப் பிறகும் 70 ஆண்டுகள் காப்புரிமை அவரைச் சார்ந்ததாக இருக்கிறது.
3.
எழுத்தாளன் எப்போது சக்ரவர்த்தியாக வாழ்வான்?
--------------------------------------------------------------------------------
தமிழ்ச்சூழலில் எழுத்தாளனுக்கான வருவாய் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் வேறு என்ன சாத்தியங்கள் உள்ளன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இது குறித்து சுரேஷ் ப்ரதீப் தனியாக ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி சற்று யோசிக்கலாம்.
எழுத்தாளர்களுக்கு நல்ல முகவர் வேண்டும். ஆனால் எழுத்தாளனுக்கே மங்கிய பொருளியல் வாய்ப்புகள்தான் என்ற நிலையில் முகவருக்கான வருவாய் எங்கிருந்து வரும் என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே இப்போதைக்குப் பதிப்பகங்களே எழுத்தாளனுக்கான முகவராக இருப்பதுதான் சாத்தியம். சில பதிப்பகங்கள் அதற்கான முயற்சிகளைச் செய்வதும் வரவேற்புக்குரியது.
மூத்த எழுத்தாளர்கள் முப்பது நாற்பது வருஷங்கள் இயங்கி தங்களுக்குத் தனியான வாசகப் பரப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரு நூல் வெளியாகும்போது குறைந்தபட்சம் முந்நூறு பிரதிகள் விற்பனை சாத்தியமாகக் கூடும். இயல்பாகவே அவர்கள் இதுவரை தாங்கள் எழுதிய அத்தனை தலைப்புகளையும் ஒரு குடைக்குக் கீழே வெளியிடும் தங்களுக்கான தனிப் பதிப்பகங்களையும் கண்டுவிட்டார்கள். மற்ற எழுத்தாளர்களுக்கு அந்த வாய்ப்பு இருப்பதில்லை. சென்னைப் புத்தகக் காட்சி போன்ற பெரிய நிகழ்வில் ஒரு நாவலோ சிறுகதைத் தொகுப்போ ஐம்பது பிரதிகள் விற்றாலே சாதனை என்று கருத வேண்டியிருக்கிறது.
முதல்கட்டமாக நவீன தமிழ் இலக்கியத்தின் வாசகப்பரப்பு என்ன என்பது அறுதியிடப்படவேண்டும். இப்போது பிரபலமாகி வரும் மக்கள் பதிப்பு மாடலுக்கு முன்பே, தமிழில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்ற நூல் ஒரு புளியமரத்தின் கதை என்று சொல்லப்படுகிறது (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ”ஒரு புளியமரத்தின் கதை” நூலுக்கும் மக்கள் பதிப்பு வந்த ஞாபகம்).
ஒரு நவீன இலக்கிய நூல் அதிகபட்சம் எவ்வளவு விற்றிருக்கிறதோ, அதனை ஒரு அளவுகோலாகக் (bench mark) கருதலாம். புதிதாக எழுத வரும் எழுத்தாளனுக்கு முன்னுள்ள சாத்தியமான வாசகப்பரப்பு அது தொழில்முறையில் சொல்வதென்றால் அடையவேண்டிய சந்தை (untapped market) அது. மக்கள் பதிப்புகளில் சற்று சேவை மனப்பான்மை இருப்பதால் அசல் வந்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் இயங்கக்கூடும். மக்கள் பதிப்பு மாதிரியில் நாம் முக்கியமாகப் பெற்றுக்கொள்ளும் விஷயம் என்பது, இத்தனை வாசகர்களை அடையமுடியும் என்ற தரவுதான்.
பதிப்பு என்ற supply chain இல் எழுத்தாளன் மிகப் பலகீனமானவனாக இருக்கிறான். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரமேஷ் கல்யாண் அழகாகச் சொல்லியிருந்தார். அதேபோல் பதிப்பகங்களின் நூல் தேர்வும் முழுக்கவும் தொழில் சார்ந்ததாக, மேற்கைப்போல் அதன் விற்பனை சாத்தியம் ஆராயப்பட்டு பதிப்புக்கான ஏற்பும் நிராகரிப்பும் செய்யப்படுவதில்லை.போடுகிறீர்களா என்று சில எழுத்தாளர்கள் கேட்கிறார்கள், கொடுக்கிறீர்களா என்று சில பதிப்பாளர்கள் கேட்கிறார்கள். நட்புக்காகப் புத்தகம் போடுவதும் இங்கே வழக்கமாக நடக்கிறது. ஏறக்குறைய எழுத்தாளர்கள் எல்லோருமே வேறு பணிகளில் வருவாய் ஈட்டும் பகுதிநேர எழுத்தாளர்கள் என்பதால் ராயல்டி குறித்த பெரிய எதிர்பார்ப்புகளும் பேச்சுக்களும் இருப்பதில்லை.
வேறு என்ன செய்யலாம்? திரும்பவும் இலக்கிய முகவர்கள் மற்றும் connoisseur களின் தேவைதான் தோன்றுகிறது. இலக்கியப் பிரதிகளை அதே வடிவில் காட்சி ஊடகத்துக்கு சுவீகரிக்கச் சாத்தியம் குறைவு என்பதால் ஒரு சிறுகதைக்குள்ளோ அல்லது நாவலுக்குள்ளோ இருக்கும், நெடுந்தொடராகவோ திரைப்படமாகவோ விரிவாக்கத்தக்க சிறு புள்ளி அல்லது மையத்தக் கண்டுபிடித்து மூலக்கதைக்கான வருவாயைப் பெறுவதற்கான சாத்தியங்களை ஆராயலாம். முன்பெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் அப்படியே எடுத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்போது சூழல் சற்று பராவாயில்லை என்று தோன்றுகிறது. நண்பர் க.சீ. சிவகுமார் ”காதல் ஒளிக” என்றொரு தொடர் கதை எழுதிய ஞாபகம். அது அவருக்குத் தெரியாமலேயே ஒரு படமாக வந்து பெரிய வெற்றி பெற்றது. சிவா தன்னியல்புப்படி அதை அலட்சியமாகக் கடந்துவிட்டார்.
இன்னொன்று, தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் உடனடியாக பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஆங்கிலச் சந்தையில் தமிழ் மொழிபெயர்ப்புகளின் மீது வைக்கப்படும் தரம் சார்ந்த விமர்சனங்களைப் பிறகு பரிசீலித்துக்கொள்ளலாம் என்ற தீர்க்கத்தோடு அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழிலிருந்து ஒரு நூறு நாவல்களேனும் ஆங்கிலத்துக்குப் போனால் அதில் நிச்சயம் பத்துப் பதினைந்து நாவல்களாவது சாதகமான விளைவுகளை உருவாக்கும். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் தமிழக அரசின் ஆதரவில் சென்னையில் நடக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் விளைவுகள் என்ன என்பதையும் கண்டறிய வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.
4.
எழுத்தாளர்களுக்கான மதிப்பூதியம் குறித்த பேச்சில் இறுதியாக,
செல்மா என்றொரு படம் பார்த்தேன். வட அமெரிக்காவில் ஓட்டுரிமை வேண்டி கறுப்பின மக்களும் மார்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களும் நடத்திய போராட்டங்களை மையமாகக் கொண்ட திரைப்படம். அதில் எந்தவொரு செயல்பாட்டிலும் மாற்றுத்தரப்பின் மனசாட்சியை நோக்கிப் பேசுவதின் முக்கியத்துவத்தைக் கூறும் காட்சியொன்று உண்டு. அதுபோல சூழலில் இருக்கும் அனைத்து அங்கத்தினருடைய குறிப்பாக பதிப்பாளர்களின் மனசாட்சியை நோக்கியதுதான் மதிப்பூதியம் குறித்த இந்தப் பேச்சும். சாரு வாசகர்களிடம் பணம் கேட்டபோது அவர் இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று வசை பாடப்பட்டார். அவர் எங்கிருந்து அந்தப் பேச்சைத் தொடங்கினார் என்று இப்போது ஒரு யூகமாகப் புரிகிறது.
மேலும் இங்கே எதையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. பெருந்தொற்றுக்கு முன்பு ஏற்கெனவே இங்கே சில பதிப்பகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டவைதான். எழுத்தாளர்களுக்கு எவ்வளவு ராயல்டி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விவரங்கள்கூட வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பதிப்பாளர்களுக்கு தொழில் தெரியும், எழுத்தாளர்கள் யாரும் குழந்தைகளும் இல்லை. ஆகவே யாருக்கும் தனிப்பட்ட விதத்தில் அழுத்தம் கொடுக்கும் நோக்கமின்றி சூழலை இன்னும் கொஞ்சம் மேம்படுத்துவதற்குத் தேவையான உரையாடலின் பொருட்டு கீழே உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.
1.விற்கப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் எழுத்தாளருக்கு எவ்வளவு எளிய தொகையாயினும் மதிப்பூதியம் சென்று சேர்வதை பதிப்பாளர்கள் உறுதிப்படுத்தவேண்டும். நடைமுறைச் சிக்கல்களை இருதரப்பாரும் பொறுப்போடு அனுசரிக்க வேண்டும். இந்திய காப்புரிமைச் சட்டம், பிரிவு 19(3) இல் குறிப்பிடப்பட்டவற்றை பதிப்பாளர்கள் தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். நூலாக்கத்துக்கு எழுத்தாளர்கள் நூல்களைச் சமர்ப்பிக்கும்போது அவர்களிடம் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். மிக முக்கியமாக மதிப்பூதியம் வழங்குவதை தார்மீக உறுதிமொழியாக முன்வைக்கவேண்டும்.
2. எழுத்தாளர்கள் மதிப்பூதியம் குறித்த தெளிவான நிலைப்பாட்டுக்கு வருவது மிக முக்கியமானது. ஏற்கெனவே வெளியிட்ட நூல்களுக்கு ஒப்பந்தம் இருந்து ஏதேனும் தொகை நிலுவையில் இருந்தால், அவற்றை அளிக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். மதிப்பூதியம் முக்கியமில்லை, நூல்கள் வாசகப்பரப்புக்குச் சென்று சேர்வது முக்கியமானது என்ற நோக்கம் இருந்தால், மதிப்பூதியம் தேவைப்படும் யாரோ ஒரு எழுத்தாளர் சூழலில் இருக்கிறார் என்ற எண்ணத்தை நாம் மனதில் பதிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானது. ஆனால் இதில் என் யூகம் "You don't have a say in this" என்ற அளவில்தான் எழுத்தாளர்களின் நிலை இருக்கும். மதிப்பூதியத்தைக் கட்டாயக் கோரிக்கையாக முன்வைக்கும் எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை தனிப்பட்ட விதத்தில் எனக்கு இல்லை.
3. சுய பதிப்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தாது. எழுத்தாளர்- பதிப்பகம்- வாசக சமூகம் என்ற சூழமைவுதான் இன்னும் ஆரோக்கியமானது என்று நம்புகிறேன். உங்களுக்குத் தனித்த வாசகப்பரப்பு இருந்து, நிர்வாக வகையில் உதவுவதற்கு நண்பர்களோ குடும்பதினரோ இருந்தால், இதை தாராளமாக முயற்சிக்கலாம். மின்னூலாகப் பதிப்பித்து விரும்புகிற வாசகர்களுக்கு நூல் உடனடியாக கிடைப்பதையும் உறுதிப்படுத்தலாம். வருவாய் வாய்ப்புகள் இப்போதைக்கு சற்று முன்பின்னாகத்தான் இருக்கக்கூடும்
4. வாசிப்புச் செயல்பாட்டுப் பரவலாக்கத்தில் உற்சாகமாகப் பங்கெடுக்கும் வாசகச் சமூகம் எழுத்தாளனுக்கு மதிப்பூதியம் கிடைப்பதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். வாசகர்களில் பலர் கடன் வாங்கிப் புத்தகம் வாங்குகிறவர்களாக இருப்பதையும் நாம் அறிவோம். இந்த நோக்கில் வாசக சமூகத்தின் சொல்லுக்கு தனி மதிப்புண்டு. ஆகவே தமிழ் வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்கு ஏற்புடையபட்சத்தில், சென்னைப் புத்தகக்காட்சியில் நீங்கள் வாங்கிய நூல்களின் பட்டியலோடு சேர்த்து மொத்தத் தொகையையும் ரசீதின் திரைச்சொட்டையும் இணைத்து #royaltycampaign2026 என்ற குறிச்சொல்லோடு பதிவிடுங்கள்.
இந்த உரையாடலில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
(எழுத்தாளர்களுக்கன மதிப்பூதியம் குறித்ததாக முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு)











