கல்விப்புலம் சார்ந்த மேற்கத்திய இலக்கிய விமர்சன மரபில் உருவான ரஷ்ய உருவவாதம் (Russian Formalism) மற்றும் புது விமர்சனம் (New Criticism) ஆகிய இலக்கியக் கோட்பாடுகளின் சில முக்கிய அம்சங்களை மீள்பார்வை செய்துகொள்வது இலக்கிய விமர்சனத்தை இன்னும் நெருக்கமாக அணுகுவதற்கு உதவும். இவை புதிய விஷயங்கள் அல்ல, கல்விப்புலம் சார்ந்த விமர்சனத் துறையில் ஏற்கெனவே நூற்றாண்டாகப் புழங்குகிறவைதான். இலக்கிய விமர்சனத்தில் இவ்விரு கோட்பாடுகளும் இன்றைக்கு அவற்றின் ஆதார வடிவிலேயே பயிலப்படாவிட்டாலும், இவற்றிற்குப் பிறகு உருவாகி வந்த அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற கோட்பாடுகளுக்கு அடிப்படைகளை வழங்கியிருக்கின்றன.
1910 மற்றும் 1920 களில் ரஷ்ய உருவவாதம் மேலெழுகிறது. இலக்கியப் படைப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிடவும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு உருவவாதிகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு இலக்கியப்படைப்பில் உள்ள இலக்கியத்தன்மையை (Literariness) உணர்ந்துகொள்ள. நாம் படைப்பின் உள்ளடக்கம், ஆசிரியரின் சொந்த வாழ்க்கை, வரலாற்றுச் சூழல், உளவியல் காரணிகள் போன்றவற்றைவிட படைப்பின் வடிவத்துக்கும் அப்படைப்பில் இயங்கக்கூடிய இலக்கிய நுட்பங்கள் அல்லது கருவிகளை ஆராய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
உருவவாதிகள் நான்கு முக்கிய கருத்துருக்களை முன்வைக்கிறார்கள்
1. இலக்கியத்தன்மை (Literariness) – இது நம்முடைய அன்றாட புழங்குமொழியிலிருந்து இலக்கியப் படைப்பை வேறுபடுத்திக் காட்டுகிற கருவிகளைப் பேசுகிற கருத்துரு.
2. புத்தாக்கம் (Defamilirization)- நம்முடைய நினைவில், அறிதலில் ஏற்கெனவே பதிந்திருக்கிற வழக்கமான விஷயங்களை இலக்கியக் கருவிகளின் (Poetic devices) மூலம் புத்தாக்கம் செய்து வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தை அளிப்பதைக் விவாதிக்கிறது இக்கருத்துரு.
3. அறிவியல் பூர்வமான அணுகுமுறை (Scientific Approach) - இலக்கிய வாசிப்பை விமர்சனத்தின் கருவிகளைக்கொண்டு அறிவியல் பூர்வமாக அணுகுவதை உருவவாதிகள் முன்னிறுத்துகிறார்கள்.
4. தன்னாளுகை - இலக்கியத்தை உளவியல், சமூகவியல், வரலாறு போன்ற பிற துறைகளின் ஆளுகைச் செல்வாக்குக்கு உட்படாத சுயாதீனமான தன்னாளுகை உடைய அமைப்பாகக் கருதுவது மற்றும் ஆசிரியனின் சொந்த வாழ்க்கை மற்றும் வரலாற்றுச் சூழல் போன்றவற்றோடு தொடர்புறுத்தாமை.
ரஷ்ய உருவவாதத்தின் இணைவடிவமாகச் சொல்லப்படும் புது விமர்சனம் மேற்கில் 1950 களில் செல்வாக்கு அடைகிறது. உருவவாதத்தைப் போலவே இலக்கியப் படைப்பில் வடிவமும் உள்ளடக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் இரண்டையும் இணைத்தே இலக்கியப் படைப்பு ஆராயப்பட வேண்டும் என்பது புது விமர்சனவாதிகளின் அணுகுமுறை. படைப்பின் அர்த்தத்தை உருவாக்கும் கருவிகள் படைப்புக்குள்ளேயே இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். படைப்பின் அர்த்த உருவாக்கத்தில் ஆசிரியனின் சொந்த வாழ்க்கை, வரலாற்றுச் சூழல், உளவியல் காரணிகள் போன்றவற்றை புது விமர்சனமும் நிராகரிக்கிறது. ஒரு படைப்பின் அர்த்தம் என்பது அதில் இயங்கக்கூடிய முரண்மெய்மை (Paradox), பலபொருள் தன்மை (ambiguity). படிமம் (Imagery), முரண் (irony) ஆகியவற்றில் இருந்து உருவாகிறது என்பது அவர்களுடைய பார்வை.
உருவவாதமும் புது விமர்சனமும் அப்போதைய பழமையான விமர்சன மற்றும் வாசிப்பு முறைகளுக்கு எதிரான கலகமாக உருவாகின்றன. அன்றைக்கு ஒரு படைப்பின் அர்த்தத்தை ஆசிரியரின் சொந்த வாழ்க்கை, வரலாற்றுச் சூழலோடு தொடர்புறுத்தி வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது முழுமையான வாசிப்புமுறை இல்லையென்பதால் இவ்விரு தரப்பாரும் படைப்பின் வடிவம் (Form), இலக்கிய நுட்பங்கள் (Poetic Devices) ஆகியவற்றை உள்ளடக்கிய அணுக்கவாசிப்பு முறையை முன் வைத்தார்கள்.
புது விமர்சனத்தில் க்ளீன்த் ப்ரூக்ஸ் (Cleanth Brooks) ஒரு முக்கியமான பெயர். விளக்கம் செய்வதாக இல்லாமல் தன்னியல்பானதாக கவிதை இருக்கவேண்டும் (The poem should not mean, but be) என்கிற கருத்தை முன்வைக்கிறார். அவருடைய பொழிப்புரையின் எதிர்க்கொள்கை (the heresy of paraphrase) என்கிற கருத்தாக்கத்தில் கவிதையின் அர்த்தத்தை உரைநடையில் சுருக்கித் தொகுத்து ஒரு கூற்றாகச் சொல்லி விளக்கிவிட முடியாதென்றும் கவிதைக்குள் இயங்கும் கவித்துவக் கருவிகள் கவிதையின் அர்த்தத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாதவை என்றும் கூறுகிறார். கவித்துவக் கருவிகளை விலக்கிவிட்டு கவிதையை ஒரு கூற்றாக மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது என்பது அவரது பார்வை.
இப்போது நாம் பேச வேண்டியது கவிதையில் அர்த்த உருவாக்கம் குறித்து. கவிதைக்கு அர்த்தம் தேவையில்லை என்று ப்ரூக்ஸ் சொல்வதாக நான் நினைக்கவில்லை, கவிதை அர்த்தமாக மட்டும் சுருக்கப்படாமல் அனுபவமாக நிகழவேண்டும் என்பதே அவர் சொல்வதின் சாரம் என்று புரிந்துகொள்கிறேன்.
தமிழ்ச்சூழலை எடுத்துக்கொண்டால் நவீன கவிதையின் புரிதல் குறித்த சர்ச்சை நீறு பூத்த நெருப்பாக எப்போதுமே இருக்கிற விஷயம். நாம், இங்கே பெரும்பாலும் கவிதை அளிக்கும் அனுபவம் என்பது, கவிதையின் அர்த்தத்தை முழுமையாக விளங்கி கவிதை நினைவில் ஒரு படிமமாக நிற்கவேண்டும் என்று விரும்புகிறோம். தமிழில் இரங்குகிற தன்மையுடைய (compassionate) கவிதைகள் உடனடிக் கவனத்தை அடைந்துவிடுகின்றன.
இந்தப் பின்புலத்தில் நாம் துரிஞ்சி தொகுப்பின் கவிதைகளை அணுகலாம். துரிஞ்சி தொகுப்பின் கவிதைகள் அணுக்க வாசிப்பையும் திரும்பத் திரும்ப மீள்வாசிப்பையும் கோருகின்றவையாக இருக்கின்றன. கவிதை வாசிப்பு மற்றும் கவிதையைப் புரிந்துகொள்ளுதல் சார்ந்த நம்முடைய மரபான பார்வையிலிருந்து இக்கவிதைகளை அணுகினால், நாம் எதிர்பார்க்கும் முழுமையான அர்த்த உருவாக்கத்திற்கு இக்கவிதைகள் எளிதாகப் பிடி கொடுப்பதில்லை.
இக்கவிதைகளை வாசிக்கும்போது உடனடியாகப் புலப்படுவது நம்முடைய தமிழ்க் கவிதைகளில் வழக்கமாக இருக்கும் ஈரத்தை உலர்த்தியும் நாடகீய மிகையை வடிகட்டியும் கவிதை எழுதப்பட்டிருக்கும் முறை. உமேஷின் பிற கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. இருப்பினும் இது, கவிதையைச் சொல்வதில் அவர் பிரக்ஞைப்பூர்வமாக தேர்ந்துகொண்ட அணுகுமுறையாகத் தெரிகிறது.
இக்கவிதைகளுக்குள் நம்முடைய அன்றாடத்தின் இருபரிமாணக் காட்சிகளை, கற்பனையின் வழியாக வேறொன்றாகக் காண்பது நிகழ்கிறது. வழக்கமான காட்சிகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுப்பதும், பழகிய அர்த்தத்தின் எதிர்முனையில் இருந்து விஷயங்களைக் காண்பதும், தற்செயல்கள் கூடும் கணங்களைக் கவிதைக்குள் பதிய வைப்பதும் நிகழ்கிறது உதாரணத்துக்கு எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன், நுணா போன்ற கவிதைகள்.
இக்கவிதைகளில் உள்ள நிலமும் வட்டாரமும் சார்ந்த ஒரு பிரத்யேக சொற்களஞ்சியம், வாசிக்கும்போது புதியதொரு மனநிலையைக் கொடுக்கிறது. தாவரங்கள், கொடிகள், பழங்கள், விதைகள், சிறுதானியங்கள் போன்ற பெயர்ச்சொற்கள் பெரும்பாலான கவிதைகளில் படிமமாகவோ உவமையாகவோ தொழிற்பட்டிருக்கின்றன. இவற்றில் எனக்குப் பலவற்றின் பெயர்கள் தெரியவில்லை. உதாரணத்துக்கு தடினிகாய், வரகந்தாள், நாதாளிப் பழம், சாராயப்பூ, துரிஞ்சி, பூளாப் பழம் என்று விதவிதமான பெயர்கள் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. இந்தச் சொற்களை வாசிக்கும்போது எத்தனை ஆயிரம் சொற்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.
இந்தக் கவிதைகளில் பெண் என்ற படிமம் முக்கியமானதாக வந்திருக்கிறது. பெண்ணாக இருப்பதின் வேறுபட்ட மனநிலைகளும் இயல்புகளும் கவிதைகளுக்குள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவில் இருக்கும் அகநெருக்கத்தைப் பேசும் கவிதைகளையும் பார்க்க முடிகிறது. தமிழ்க் கவிதைகளில் மிகுந்த வெளிப்படையாகப் பேசப்படுகிற காதலுணர்வு மற்றும் காமத்தைக் கொண்டாடுதல் போல் இல்லாமல் இந்தக் கவிதைகளில் அகநெருக்கம் அரூபமான உணர்வுத்தளத்தில் வைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் என்ற படிமத்தை முன்வைத்து கவிதைசொல்லி தன்னுணர்வு சார்ந்த அகவயமான விசாரணைகளை நிகழ்த்திக் கொள்வதையும் காண்கிறோம். உதாரணத்திற்கு அழிஞ்சி பழம், இரண்டாவது நாளில் சந்தித்தல், கழுவிய உருளைக்கிழங்கு போன்ற முகம், துரிஞ்சி, பனஞ்சேகாய், கொள்ளுக்கொடியில் ஆடும் காமம், வரகந்தாளுக்கு அடியில் இரண்டு காடை முட்டை போன்ற கவிதைகள்.
தொழில்நுட்ப உலகம் அளிக்கக்கூடிய புதிய படிமங்களும் அம்மாவைக் குறித்த நல்லதொரு சித்திரமும் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. சமகால அரசியல் நடப்புகளின் மீதான விமர்சனமும் கவிதைகளில் இருந்தாலும் உமேஷின் கவிதை சொல்லும் பாணியினால் அந்த விமர்சன எத்தனிப்பு உள்ளொடுங்கிய தொனியிலேயே இருக்கிறது. கொல்லப்பட்டவர்களுக்காக, உங்கள் நாக்கு பேசாத அரசியல், எல்லாமே மீகேலி படம்தான், உங்களுக்கு ஏன் உப்புக் கரிப்பதில்லை, எங்கள் பிரதமர் மிக நல்லவர், விடியும் போது வீட்டில் இருந்தால் போதும் போன்ற கவிதைகள் இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்
தொகுப்பில் எனக்குப் பிடித்தமான கவிதைகளாக அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல், பனஞ்சேகாய், உடல் மட்டும் தெரிகிற புலி, துரிஞ்சி, காகங்களின் கால்களால் நடப்பவர், கரம்பு, இரண்டாவது நாளில் சந்தித்தல் போன்றவற்றைச் சொல்வேன். இந்தக் கவிதைகளை எல்லாம் இணைத்தால் ஒரு கிராமியக் குடும்பத்தின் வாழ்க்கையை அசலாகச் சொல்லிவிடக்கூடிய சிறுகதை அல்லது நாவல் இருப்பதை உணரமுடிகிறது.
பல கவிதைகளில் வாசிப்பின்பம் குறைவாக இருக்கிறது. மேலும் மிக அதீதமான அகவயப் படிமங்களுக்குள் கவிதை சிக்குண்டு விடுவதால் எதையுமே பெற்றுக்கொள்ள முடியாத சிக்கலும் சமயங்களில் வாசகனுக்கு நேர்கிறது. இவை உமேஷின் கவிதைகளில் மேம்படுத்தவேண்டியவை. கவிதை எல்லாவற்றையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாசகனை உரையாடலிலில் இருந்து வெளியேற்றி விடாத பொறுப்பும் அதற்கு இருக்கிறது.
(23/11/25 அன்று நிகழ்ந்த திணைகள் விருது நிகழ்வில், விருதுபெற்ற துரிஞ்சி கவிதை நூல் குறித்த உரையின் திருத்திய மதிப்புரை வடிவம்)
நன்றி: தடாரி மின்னிதழ்- டிசம்பர் 2025

No comments:
Post a Comment