Jan 25, 2018

புத்தாயிரத்தில் தமிழ்ச் சிறுகதையின் சில திசைகள்

வளமான வரலாற்றை உடைய தமிழ்ச் சிறுகதை மரபில் இரண்டாயிரத்திற்குப் பின் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் சிறுகதையாசிரியர்களான அசதா(வார்த்தைப்பாடு), கே.என்.செந்தில் (இரவுக்காட்சி, அரூப நெருப்பு), இளஞ்சேரல் (NH திருச்சி அவினாசி சாலை சித்திரங்கள், தம்பான் தோது) , லக்ஷ்மி சரவணக்குமார் (நீலநதி, யாக்கை) , கணேசகுமாரன் (பைத்திய ருசி) ஆகிய ஐவருடைய சிறுகதைகளைக் குறித்த ஒரு பார்வையை அளிக்க இக்கட்டுரை முயல்கிறது. படைப்புலகத்தின் உள்ளடக்கம் மற்றும் சிறுகதை வடிவமுயற்சிகள்/கூறுமுறைகள் என்ற இருவகையான நோக்குகளை அடிப்படையாகக் கொண்டது இக்கட்டுரை. ஒருசில பலகீனங்கள் இருந்தபோதிலும் தங்களுக்கே உரித்தான தனித்த படைப்புலகத்தை இந்த ஐந்து சிறுகதையாசிரியர்களும் கொண்டிருக்கிறார்கள்.

                                                                        அசதா


                                        

அசதாவின் வார்த்தைப்பாடு தொகுப்பிலுள்ள ஒரு சில கதைகளைத் தவிர்த்து பெரும்பாலானவை புதிய வாசிப்பனுபவத்தை அளிக்க முயல்வதை நோக்கமாகக் கொண்டு தர்க்கம் அல்லது சிந்தனையிலிருந்து பரிசோதனை செய்துபார்க்கும் விருப்பத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன. அவ்வகையான கதைகளின் பின்புலப் பரப்பில் தமிழ் நிலம் மற்றும் கலாச்சாரத்தின் பிரத்யேக குறியீட்டு அடையாளங்கள் தவிர்க்கப்பட்டு அல்லது மட்டுப்படுத்தப்பட்டு அனைத்து நிலப்பரப்புகளுக்கும் பொருந்திப் போகக்கூடிய சாரமான விஷயங்களைப் பேசியிருக்கும் கதைகளாகவும் குறிப்பிடலாம். மொழிபெயர்ப்புத் தளத்திலும் இயங்குபவராக அசதா இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கக்கூடும் என்பது என் யூகம்.

வார்த்தைப்பாடு, ஷீத்தல் மற்றும் ஓசை ஆகிய மூன்றும் உணர்வுரீதியான தளத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயிற்சி முடித்து கன்னியாஸ்திரீயாக மாறப்போகிற தன் இளைய சகோதரியின் வார்த்தைப்பாடு சடங்கிற்குச் செல்லும் சகோதரன் ஒருவனின் நினைவுகளாகவும் அவளுக்கு நல்லதொரு லெளகீக வாழ்வை அமைத்துத்தர இயலாதவனின் குற்றவுணர்வு மற்றும் இயலாமையைச் சித்தரிப்பதாகவும் வார்த்தைப்பாடு அமைந்திருக்கிறது. நான்கு சகோதரிகளில் அழகும் திறமையும் குறும்பும் கொண்ட ரெஜினா குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களினால் சிஸ்டருக்குப் படிக்கப் போகிறாள். தொடக்கத்தில் அதற்காக வருந்தும் குடும்பம் பிறகு சகஜநிலைக்குத் திரும்பி விட்டாலும் சகோதரனால் மட்டும் அச்சிலுவையை இறக்கி வைக்க முடிவதில்லை. அவ்வளவு குறும்புத்தனம் மிக்கவளாக இருந்தவள் பயிற்சியின் மூலம் முற்றிலும் வேறொருவளாக மாறிவிடுகிறாள். ஆகச்சிறந்தவை தேவனுக்குப் படைக்கப்பட்டுவிடுகின்றன அல்லது அவற்றைத் தனக்காக அவர் எடுத்துக்கொள்கிறார் என்ற விதத்திலான ஒரு பார்வையை இக்கதையில் அவதானிக்கலாம். அதே நேரத்தில் ரெஜினாவுக்கு லெளகீக வாழ்வு அமையாமல் போனது குறித்துக் குமையும் சகோதரனின் குற்றவுணர்வு பெண்ணைத் துய்ப்புக்குரியதாகப் பார்க்கும் ஆண்மையப் பார்வையின் அடிப்படையில் அமைந்திருக்கிறதோ என்ற மெல்லிய ஐயம் விவாதத்தின் மூலம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று.

மதக்கலவரத்தின் பிண்ணனியிலான ”ஷீத்தல்” கதை மனித மனங்களில் உறைந்திருக்கும் வன்முறையையும் பல்வேறுபட்ட துவேஷங்களையும் பெண் குழந்தையை மையப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்களின் மேன்மைப்பண்பு மற்றும் கீழ்மைக்குணம் என்ற இருமைக்கு இடையேயான முரண்களை இக்கதை சித்தரிக்கிற அதே வேளையில் தன்னுடைய துயரத்திலிருந்து பிறருடைய துயரத்தையும் மனிதன் உணர்ந்துகொள்ளவேண்டிய பார்வையையும் முன்வைக்கிறது.

நுட்பம் கூடிவந்திருக்கும் ஒரு கதையாக ”ஓசை” யைச் சொல்லலாம். மனித மனங்களைக் காரணமேயின்றி அடிக்கடி பீடிக்கும் ஏதோ ஒரு மோசமான நிகழ்வு நிகழப்போவதின் உள்ளுணர்வால் ஆக்ரமிக்கப்பட்ட ஒருவனின் மனவுலகத்தையும் அத்தருணங்களின் புறவய உலகக் காட்சிகளையும் விவரிக்கும் இக்கதை தவிர்க்கவேமுடியாத அதை அவன் எதிர்கொள்ளச் செல்வதோடு முடிகிறது. இங்கு அவன் எதிர்க்கொள்ளப்போகும் நிகழ்வு என்னவென்று வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. Ambiguity என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தெளிவற்றிருக்கும் முடிவைக் கொண்டிருப்பது நவீன பாணி கதை சொல்லுதலில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. மேலும் பதட்டமும் சுமைகளும் கூடிவிட்ட வாழ்வின் கடுமையிலிருந்து நமக்கு மீட்சியையும் விடுதலையையும் அளிக்கக்கூடிய எதனோடு வேண்டுமானலும் இக்கதையில் குறியீடாகச் சொல்லப்படும் பியரைப் பொருத்திக்கொள்ளலாம்

என் பெயர் டாம் மோர்வெல், அருந்ததி ராயும் ஒரு கழைக் கூத்தாடிச் சிறுவனும் அவன் அக்காவும், நேர்காணல், சூரியன் உதிக்காத கிழக்கு, நான் லீனியர் பிஸ்கட்டும் டார்ஜீலிங் டீ ஒரு கப்பும் ஆகிய கதைகளை ஒரு கோட்டில் வைத்து வாசிக்கலாம். இந்த வரிசையில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதை அருந்ததி ராயும் ஒரு கழைக் கூத்தாடிச் சிறுவனும். அறிவுஜீவிகளின் மேட்டிமைப் பார்வையும் சிந்தனைகளும் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் போராடக்கூடிய எளிய மனிதர்களிடமிருந்து மிகுந்த தொலைவிலிருக்கின்றன என்பதையும் எத்தனையோ ரட்சகர்களுக்குப் பின்னும் எளியவர்களின் வாழ்க்கை எவ்வித முன்னேற்றமுமில்லாமல் தொடர்வதையும் விமர்சனப்பூர்வமாகப் பேசுகிறது.

உலகின் கடைசி மனிதன் தற்கொலை செய்துகொள்வதை தத்துவார்த்தப் பிண்ணனியில் விவரிக்கிறது என் பெயர் டாம் மோர்வெல். பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் மனிதர்களின் இயல்பை தொலைக்காட்சி விளம்பரங்களைக் குறியீடாக்கி சுவாரஸ்யமாகச் சொல்கிறது சூரியன் உதிக்காத கிழக்கு. ஹிட்லரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்தவரை பத்திரிகையாளன் ஒருவன் பேட்டியெடுப்பதைப் பின்புலமாகக் கொண்டது நேர்காணல் கதை. மெய்க்காப்பாளனாக இருந்தபோதும் நாஜி வதைமுகம் குறித்து பெரிதாக எதுவும் அறிந்திராத ரோச்சஸ் மிஸ்ச்சை இன்னும் பழைய காலத்திலிருந்து மீண்டிராதவராகவும் வதைமுகாமில் கொல்லப்பட்டவர்களின் தோல்களிலிருந்து லேம்ப் ஷேடுகள் செய்யும் அதிகாரியின் மனைவியை தற்காலத்தவராகவும் காலத்தைக் குழப்பி அசதா செய்திருக்கும் சிறு விளையாட்டு சுவராஸ்யமனதாகவும் சிந்தனைக்குரியதாகவும் இருக்கிறது. நான்கைந்து இழைகளைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் நான் லீனியர் பிஸ்கட்டும் டார்ஜீலிங் டீ ஒரு கப்பும் கதையில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்தியம் குறித்த இழை துலங்கித் தெரிய மற்றவை மங்கலடைந்திருக்கின்றன.

சொல்லின் வரலாற்றை புகைமூட்டமான குறிப்புகளைக் கொண்டு பேசும் ”சொற்கள் பற்றிய கதைகள் ”, பெண்களின் கூந்தல் உதிர்வதற்கான தொன்மக் காரணத்தைப் பின்புலமாகக் கொண்டிருக்கும் ”கூந்தல்”, காமத்துய்ப்பு குறித்த கனவுகளின் இனிமையையும் யதார்த்தில் அது நிகழவிருக்கையில் அந்த இனிமை நீர்த்துப் போவதையும் பேசும் ”இரவு :இரண்டு குறிப்புகள்” ஆகியவற்றை வாசிக்கும்போது முழுமையடையாத கதைகளை வாசிக்கும் உணர்வைப் பெறுகிறோம். ஆயத்தம் மற்றும் தரிசனம் ஆகிய கதைகள் நாம் ஏற்கனவே அறிந்த வடிவமாகவும் கருவாகவும் இருந்தாலும் கூறுமுறையில் அடர்வு கூட்டப்பட்டிருக்கிறது. கனவுப் பூதம் மற்றும் வள்ளி ஒயின்ஸ் ஆகிய கதைகள் இத்தொகுப்பிலுள்ள மற்ற கதைகளின் ஆகிருதிக்குப் பொறுத்தமற்று துண்டுபட்டு எளிய கதைகளாக நிற்கின்றன.

வார்த்தைப்பாடு, அருந்ததி ராயும் ஒரு கழைக் கூத்தாடிச் சிறுவனும் அவன் அக்காவும், ஓசை ஆகிய கதைகளை இத்தொகுப்பின் முக்கியமான கதைகளாகச் சொல்வேன். உள்ளடக்கத்தை விடவும் கதை சொல்லுதலில் வழக்கமான வடிவங்களைத் தவிர்க்கவேண்டும் என்ற முயற்சியை நாம் உணரமுடிகிறது. வடிவங்களில் பரிசோதனை செய்துபார்க்கும்போது ஆழத்தைத் தவறவிடும் விபத்து சில கதைகளுக்கு நேர்ந்திருக்கின்றன என்பதையும் சுட்டவேண்டும்.

                                                            கே.என் செந்தில்


                                        


செந்திலின் முதல் தொகுப்பான ”இரவுக்காட்சி” யில் சில ஆரம்பக் கதைகள் காட்சிச் சித்திரிப்புகளின் வழியாக மட்டும் நகர்ந்திருந்தாலும் பிறகான கதைகள் மனித உணர்வுகளின் முரணியக்கத்தை உள்ளடக்கிப் பேசுபவையாக முதிர்ந்திருக்கின்றன. கைவிடப்பட்டு இலக்கற்றுத் திரிந்து சிதைவுறும் மனிதர்களின் வாழ்வையும் குடும்ப அமைப்பில் நிலவும் வன்முறைகளையும் மனித மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்கும் அபத்தச் சூழல்களையும், பெண்களின் துயர்களையும் மையப்படுத்தியதாக இக்கதைகள் இருக்கின்றன. மீட்சி, மதில்கள், வாக்குமூலம், வருகை ஆகிய கதைகளை இத்தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளாகச் சொல்லலாம்.

கதவு எண் 13/78, மீட்சி, வாக்குமூலம் கதையில் தோன்றும் பிரதான ஆண்பாத்திரங்கள் சமூகத்தின் வர்க்கப் படிநிலையில் கீழ்மட்டத்தைச் சார்ந்தவர்கள். தீர்க்க வழியற்ற பாலியல் விழைவுகளால் வதைபடுபவர்களாவும் வன்முறைகளைச் சந்திப்பவர்களாகவும் துர்மரணங்களை அடையும் விதிகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நீதி மற்றும் பொது ஒழுக்கத்தின் சுமையற்றவர்களாக இருக்கும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை ஒரு மழைக்கால வெள்ளத்தை முன்வைத்துப் பேசுகிறது மேய்ப்பர்கள் கதை. திருமணத்திற்குப் பின் பல வருஷங்களாகியும் குழந்தைப்பேறு கிடைக்காத பெண்ணொருத்தியின் மனவுணர்களைச் சித்தரிக்கிறது மதில்கள் கதை. கிளைகளிலிருந்து மற்றும் வருகை ஆகியவை சிறுவர்களின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கின்றன. சிறுவர்களின் பிரத்யேக உலகத்தைக் குறித்து எழுதப்பட்ட எளிய கதையாக ”கிளைகளிலிருந்து” இருக்கையில் ”வருகை” கதை நடுத்தர வர்க்க வாழ்வின் சிக்கல்களை காட்சிப்படுத்தும் கதையாக விரிவுகொண்டிருக்கிறது.

இரவுக்காட்சி மற்றும் அரூப நெருப்பு தொகுப்புகளிடையே சில மெல்லிய ஒற்றுமைகள் இருக்கின்றன. சில நேரங்களில் ஒரே வகைப்பட்ட கதையுலகத்தின் வெவ்வேறு பரிமாணங்களாகவும் அல்லது முந்தைய தொகுப்பின் கதாப்பாத்திரத்தின் சாயலோடு பிந்தையதிலும் பாத்திரங்கள் அமைந்திருப்பதுமாக அவ்வொற்றுமையைச் சொல்லலாம். மனித உறவுகளில் சமூகத்தால் விலக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பற்றிப் பேசுபவையாகவும் புனிதம் என்னும் மேற்திரையை விலக்கி மனங்களுக்குள் அடிப்பிடித்திருக்கும் கசடுகளைக் காண்பவையாகவும் அரூப நெருப்பு கதைகள் இருக்கின்றன.

இக்கதைகள் பலவற்றிலும் வழக்கமற்ற பால்யத்தைக் கொண்ட சிறார்களும் இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். குடும்பத்திற்குள்ளேயே அந்நியர்களாக அல்லது குடும்பத்திலிருந்து வெளியேறி வேறொரு இடத்தில் தஞ்சமடைந்தவர்களாக இருப்பவர்களுக்கு பழியுணர்ச்சியும் வெஞ்சினமும் அடிப்படையான பண்பாக இருக்கின்றன. இக்கதைகளில் உயிர்பெற்றிருக்கும் இருபாலரும் கரடுமுரடான வேட்கையும் சமூக நடத்தையும் கொண்டவர்களாக உள்ளார்கள். முறைதவறிய பாலுறவுகள் மற்றும் துரோகங்கள், பாலியல் சார்ந்த கனவுகள், கற்பனைகள் என காமத்தின் அடிப்படையிலான ஒரு இருண்ட சித்திரத்தையும் இக்கதைகளுக்குள் காண்கிறோம்.

இத்தொகுப்பில் செந்திலின் கதை சொல்லும் உத்தியில் இரண்டு பண்புகளைப் பிரதானமாகக் காணமுடிகிறது. ஏற்கனவே முந்தைய காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தோடு தொடர்புடையதாய் அல்லது அதன் சாயையோடு ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்வதை முதற்பண்பாகச் சொல்லலாம். தங்கச்சிலுவை கதையில் வில்சனின் உடல்நலம் தேறுதலுக்கான பிரார்த்தனைக் காணிக்கையாக தேவாலயத்திற்கு செலுத்தப்பட்டிருக்கும் தங்கச்சிலுவையை உடல்நலம் குன்றியிருக்கும் தன் மகள் பாக்கியத்தின் மருத்துவச்செலவிற்கான பணத்தின்பொருட்டு ஆபிரகாம் திருடத்துணைபோகிறான். இங்கே வில்சனின் நோய்-தங்கச்சிலுவை-பாக்கியத்தின் நோய் என்னும் தொடர்பு உருப்பெறுகிறது. அரூப நெருப்பு கதையில் முதலில் கணேசன் கோவிந்தனின் குடும்பத்திற்குள் வந்துசேர்வதற்கு எப்படி கோவிந்தனின் காமம் காரணமாக இருந்ததோ அதுவே விஜயா மற்றும் வெங்கியின் வரவிற்கும் காரணமாக இருக்கிறது. குடும்பத்திற்குள் கணேசன் வருகை-கோவிந்தனின் காமம்-விஜயா,வெங்கியின் வருகை என்ற தொடர்பு இக்கதையில் உருவாகிறது.

வெஞ்சினம் கதையின் மையக்கதாப்பாத்திரம் தன்னை அவமானப்படுத்திய சடையனைக் கொன்றுவிடும் சினத்தோடு திரிந்துகொண்டிருக்கும்போது அந்த மையக்கதாப்பாத்திரத்திடம் உதைவாங்கி பற்கள் உடைபட்டு அவமானமடைந்த ஒருவன் மையக்கதாப்பாத்திரத்தை கொல்கிறான். மையக்கதாப்பாத்திரத்திற்க்கு ஏற்படும் அவமானம்-பழியுணர்ச்சி-தன்னைக் கொல்லப்போகிறவனுக்கு மையக்கதாப்பாத்திரம் ஏற்படுத்திய அவமானம் என்ற தொடர்பு இயல்பாகவே அமைவதைக் கவனிக்கலாம். திரும்புதல் கதையில் வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்ட மையக்கதாப்பாத்திரச் சிறுவனை ஏற்கனவே அனாதமையான சூழலில் உள்ள சிறுவன் சோமு இனங்கண்டு கொள்கிறான். இங்கே சோமு-உணவகம்-மையக்கதாப்பாத்திரச் சிறுவன் என்ற தொடர்பமைகிறது. இப்படி காலத்தில் முன்னமே நிகழ்ந்த ஒரு நிகழ்வு அதேபோன்ற சாயையோடு திரும்பவும் நிகழ அந்த இடைவெளியில் உரையாடல்களாக கதைகள் உருக்கொள்கின்றன.

பெரும்பாலான கதைகள் காலத்தின் நேர்கோட்டு வரிசையில் சொல்லப்படாமல் நனவிற்கும் நினைவிற்கும் இடையேயான ஊடாட்டமாக விவரிக்கப்பட்டிருப்பதை இக்கதைகளின் இரண்டாவது பொதுப்பண்பாகச் சொல்லலாம். மிகப்பொறுமையாக எல்லாவற்றையும் விஸ்தாரமாகப் பேசுவதால் கதைக்குள் ஒன்றைச் சொல்லாமல் விட்டு உணர்த்தச் செய்வதில் செந்தில் குறைவான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகிக்க வைத்தாலும் இப்படியான நீண்ட விவரிப்பு அவருடைய பிரத்யேக கதைசொல்லும் உத்தியாக இருப்பதைக் கவனிக்கிறோம்.மேலும் கதையை எந்தப்புள்ளியில் முடிக்கவேண்டும் என்பதில் அவருடைய பிரக்ஞை அபாரமாக இருக்கிறது. கதை சொல்லுதலில் நவீனமான உத்தியான கதையின் இறுதியில் எதையும் முழுமுற்றாக முடித்துவைக்காத தன்மையையும் கவனிக்கிறோம்.

கதைகளுக்கான தனித்துவமான களத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு வீரியம் கூட்டும் சம்பவக்கோர்வைகளைப் பிணைப்பதிலும் செந்திலுக்குள்ள தனித்த ஆற்றலுக்குச் சான்றாக அரூப நெருப்பு, வாசனை, வெஞ்சினம், திரும்புதல் ஆகிய நான்கு கதைகளைச் சொல்லலாம். அரூப நெருப்பு கதையை தமிழின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தயக்கமின்றிக் குறிப்பிடுவேன். மற்ற கதைகளில் அந்தந்தக் கதைகளுக்குத் தேவையான அளவில் இயங்கியிருக்கும் அவருடைய கதையுலகத்தின் பிரத்யேகப் பண்புகள் அத்தனையும் அரூப நெருப்பு கதையில் சிறப்பான வகையில் குவிந்திருக்கின்றன.

அரூப நெருப்பு கதையில் காணக்கிடைக்கும் குடும்பம் ஒரு வழக்கமான குடும்பம் அல்ல. ஆனால் இப்படியொரு குடும்பம் இருப்பதற்கான வாய்ப்பேயில்லை என்று முழுக்கவும் நிராகரித்துவிட இயலாது. கோவிந்தன், அலமேலு, நாகு என்ற குடும்பத்திற்குள் கோவிந்தன் பாலுறவு கொண்டிருந்த பெண்ணின் மகனான கணேசன் அனாதை என்ற அடையாளத்தோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறான். பிறகு கோவிந்தனின் இன்னொரு மனைவியாக விஜயாவும் மகனாக வெங்கியும் குடும்பத்திற்குள் வருகிறார்கள். தந்தை மகனான கோவிந்தனுக்கும் நாகுவிற்குமிடையேயான பகையுணர்ச்சி, கணேசனுக்கும் நாகுவுக்கும் ஏற்படும் பகை, அலமேலுவுக்கும் விஜயாவிற்கும் உருவாகும் பகை, நாகுவிற்கும் விஜயாவிற்குமான ஆரம்பப்பகை, கணேசனுக்கும் விஜயாவிற்குமான பகை என்று பல்வேறு முரண்களை முடிச்சிட்டுப் பயணிக்க வைத்து எல்லா பகையும் சமமடையும் ஒரு லாவகமான புள்ளியில் கதை முடிக்கப்பட்டிருக்கிறது. காமம் நீதி பார்த்து வருவதில்லை என்பதற்குச் சாட்சியாய் நாகு மற்றும் விஜயாவின் பாலியல் உறவைச் சொல்லலாம். விஜயாவோடு ஓடிப்போகும் நாகுவின் செயலால் வம்சப்பெருமை குலைக்கப்பட்டு வந்தேறிகளான கணேசனுக்கும் வெங்கிக்கும் முன்னர் மறுக்கப்பட்டிருந்த தாத்தாவின் புனித நாற்காலி கிடைத்துவிடுகிறது. கணேசனை சற்றே வன்மமிக்கவனாக சொல்லியிருப்பதால் சிறுவன் வெங்கியில் தன்னை இனங்காணும் அவனுடைய இருப்பின் கவித்துவத் துயர் சற்றே மங்கிவிடுகிறது என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.

பிணவறைப் பணியாளனான தாசப்பனுக்கும் அவன் மனைவி பச்சைக்குமிடையேயான ஒரு முரண்பட்ட உலகத்தைப் பேசுகிற, விளிம்புநிலை மனிதர்கள் புழங்குகிற வாசனை கதை மிக நுட்பமான காட்சிச் சித்திரிப்புகளைக் கொண்டிருக்கிறது. தான் விரும்பிய விதத்தில் கணவன் அமையாது தன் கனவுகளை இழந்துவிட்டதின் குமுறல் கொண்ட பச்சையால் மிக உக்கிரமாய் புறக்கணிக்கப்படுகிறான் தாசப்பன். உயரக்குறைவான தோற்றமும் உணவு மற்றும் கறிச்சோறு மீதான தாசப்பனின் வேட்கையும் வாழ்க்கையில் அவன் அடையவியலாத மகிழ்ச்சியின் குறியீடாக இருக்கின்றன.தினமும் பிணங்களோடு புழங்க நேரும் மனிதர்களின் மனவுலகம் மிகச்சிறப்பான வகையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தொடங்கி வளர்ந்து முடியும் பாணியிலான கதையாக இல்லாமல் தாசப்பன் மற்றும் பச்சையின் மனவுலகங்களுக்கிடையேயான சதுரங்க ஆட்டமாக இக்கதை அமைந்திருக்கிறது.

அரூப நெருப்பு, மாறாட்டம், வாசனை போன்ற கதைகளில் பழியுணர்ச்சி என்ற பண்பு வெவ்வேறான சூழ்நிலைகளில் பல்வேறு கதாப்பாத்திரங்களின் மூலம் பேசப்படுகிறது. ஒரு அவமானம் நேரும்போது தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள இயலாமல் உடனடியாக பழியுணர்ச்சி கொள்ளும் இயல்பைக் கொண்ட மனிதர்கள் இந்தக் கதைகளுக்குள் இருக்கிறார்கள் ( இரவுக்காட்சி தொகுப்பிலுள்ள வாக்குமூலம் கதையிலும் இவ்வியல்பைக் காணலாம்) . வெஞ்சினம் கதையின் நாயகனும் இந்த இயல்பைக் கொண்டிருக்கிறான். மிகப்பெரிய சாகசக்காரனாக இருந்தபோதும் தன்னை விட எளியவனிடம் அவன் தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு குறியீடாய் நாய்கள் மீதான அவனுடைய அச்சத்தைச் சொல்லலாம்.முதல் வாசிப்பில் இக்கதை சினிமாத்தன்மையுடையதாய் வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பதாகத் தோன்றினாலும் நம் முதுகுக்குப் பின்னால் அப்படியொரு உலகமும் பாவாவைப் போன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுவாசிப்பில் உணரமுடிந்தது.

வீட்டை விட்டு வெளியேறிய இரு பதின்ம வயது சிறுவர்களின் உலகத்தைப் பேசும் திரும்புதல் கதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.உடலின் வேட்கைகள் தன்னைத் திறந்துகொள்ளத் தொடங்கும் அப்பருவத்தின் மனவுணர்வுகளும் உரையாடல்களும் மிக அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக குப்பைமேட்டில் நடக்கும் காட்சிகளும் சம்பவங்களும் உரையாடல்களும் இயல்பாக உருப்பெற்றிருக்கின்றன. ஒருபால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் சோமுவைப் போன்ற சிறுவர்கள் ஒவ்வொரு நகரத்தின் விளிம்புகளிலும் நிறைந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு கதை நிலை. இக்கதையில் வீட்டை இழத்தல் மற்றும் தந்தையின் பித்துநிலை போன்ற பகுதிகள் சிறப்பாக வந்திருந்தாலும் தந்தைக்கு ஏன் அந்த வீடு அவ்வளவு பிரியமானதாக இருந்தது என்பதற்கான காரணத்தைப் விரிவாகப் பேசாமல் கதைசொல்லிக்கும் வீட்டுக்குமான நினைவுகளை விரிவாகப் பேசுவது இக்கதையின் முக்கியமான தொழில்நுட்பச் சிக்கலாகத் தோன்றுகிறது.

தங்கச்சிலுவை, மாறாட்டம், பெயர்ச்சி ஆகிய மூன்றும் இத்தொகுப்பின் சுமாரான கதைகள். தொகுப்பின் பிற கதைகள் ஏற்படுத்தும் சலனங்களோடு ஒப்பிடுகையில் இக்கதைகள் ஒருவித தட்டைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. தங்கச்சிலுவையில் நீதியுணர்ச்சியைப் பேசுவதற்காக சொல்லப்பட்டிருக்கும் காட்சிகள் சற்றே செயற்கைத்தன்மையும் நாடகீயமும் கொண்டவையாக இருக்கின்றன.மாறாட்டம் கதை அது சென்றிருக்கவேண்டிய அக ஆழங்களில் பயணிக்காமல் மேலோட்டமானதாக நின்றுவிடுகிறது அல்லது செந்திலுடைய வேறுகதைகளில் ஏற்கனவே வீரியமாக பேசப்பட்டுவிட்ட விஷயங்களின் நீர்த்த வடிவமாக இருக்கிறது.செந்தில் கதைகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டியதைத் தவிர பெயர்ச்சி கதையைப் பற்றிப் பேசுவதற்கு ஏதுமிருப்பதாகத் தோன்றவில்லை. வடிவம் மற்றும் சொல்முறையில் பிசிரற்று இருந்தாலும் இக்கதைகள் உணர்வுத்தளத்தில் நமக்குள் இக்கதைகள் எவ்வித சலனங்களையும் ஏற்படுத்துவதில்லை.

உன்னதம், புனிதம் போன்ற கருத்தாக்கங்களுக்கு எதிர்நிலையிலேயே இக்கதைகள் தங்களைப் பொருத்திக்கொள்கின்றன. வாழ்வின் இருண்ட பக்கங்களையும் அம்மனிதர்களின் அகச்சிக்கல்களையும் பாடுகளையும் தீவிரமாகவும் நுட்பமாகவும் இக்கதைகளில் பேசியிருக்கும் செந்தில் தன் படைப்புலகத்தை வெவ்வேறு தளங்களுக்கு விரிவாக்கிக்கொள்ளும் ஆற்றலுடையவர் என்பதை இக்கதைகள் உணர்த்துகின்றன.

                                                            இளஞ்சேரல்

                                

காலனியத்திற்குப் பின்பான மற்றும் உலகமயமாக்கலுக்கு முன்பான காலப்பரப்பில் பல வேறுபட்ட இனக்குழுக்கள் வாழும் கிராமிய சமூகத்தின் எளிய மனிதர்களையும் ஊடுபாவான அதன் கலாச்சார உறவுகளையும் சித்தரிக்கும் இளஞ்சேரலின் கதையுலகம் வெகு பிரத்யேகமானது. அம்மக்களுடைய கொண்டாட்டங்களை, துயரங்களை, அன்றாடப் பாடுகளை புகார்கள் ஏதுமற்ற தொனியில் பாவனையற்ற எளிய மொழியில் கதைகளாக இளஞ்சேரல் சொல்லுகிறார்.

இடதுசாரி தத்துவார்த்த அரசியலுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடனும் அதேநேரத்தில் அவ்வமைப்புடனான முரண்பாடுகளையும் பேசக்கூடிய அரசியல் பிரக்ஞையை முன்வைக்கும் கதைகளை இத்தொகுப்புகள் கொண்டிருந்தாலும் ஊரைப் பின்புலமாகக் கொண்ட கதைகளில் இந்த அரசியலுணர்வைவிட இனக்குழுக்களின் கலாச்சார ஒருங்கிணைவுகளே முதன்மையாகப் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அவருடைய கதைகளில் விரவியிருக்கும் ஒரு பொதுப்பண்பாக பல்வேறு விளையாட்டுக்களைக் குறித்த சித்திரங்களைச் சொல்லலாம். கேரம், கைப்பந்து, குஸ்தி, கிரிக்கெட், நீச்சல் போட்டி, புறா பந்தயம் என ஏதேனும் ஒரு விதத்தில் விளையாட்டுடன் இணைந்த கதைகளை எழுதியிருக்கிறார். இதனுடன் திருவிழாக்களின் கொண்டாட்ட மனநிலை விரவியிருக்கும் கதைகளையும் பார்க்கிறோம். நொய்யலாற்றங்கரைக் கலாச்சாரம் இளஞ்சேரலின் கைவண்ணத்தில் மிக அபாரமான விதத்தில் தமிழ்ப் புனைவிற்குள் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் குணவிஷேசம் உடைய நிறையப் பாத்திரப் படைப்புகளோடு சிறுவர்களின் கண்கொண்டு உலத்தைப் பார்க்கிற ஒரு பண்பையும் சிறப்பானதாக குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மிக வலுவான விதத்தில் காட்சிச் சித்திரங்களை வடிக்கும் அதே நேரத்தில் சிறுகதையின் வடிவநுட்பங்கள் குறித்த ஒருவிதமான அலட்சியத்தையும் இளஞ்சேரல் கொண்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. அவருடைய பெரும்பாலான கதைகளில் மெளனங்கள் இல்லை. சொல்லாமல் உணர்த்தப்பட வேண்டியவையும் விரிவாகப் பேசப்படுகின்றன. ஒரு புள்ளியில் தொடங்கி நேர்கோட்டில் பயணித்து இன்னொரு புள்ளியில் கதைகள் முடிவடைகின்றன. இது சற்றே அயற்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. செம்மையாக்கத்தில் இளஞ்சேரல் கவனம் செலுத்தவேண்டும். மேலும் அவருடைய பல கதைகளில் கதாப்பாத்திரங்களின் அகவயத் தன்னுரையாடல் நிகழாமல் மூன்றாவது குரலாலேயே கதை சொல்லப்படுகிறது. இதையும் அவர் கவனிக்கலாம்.

இவ்விதத்தில் அவருடைய முதல் தொகுப்பான அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் பலகீனமாகவும் இரண்டாவது தொகுப்பான தம்பான் தோது வலுவான கதைகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் நாய் வாலுல தள்ற காயின் மற்றும் ஸ்ரீ சக்திவேல் முருகன் காவடிப்பண்டு ஆகிய கதைகளை முதல் தொகுப்பின் சிறந்த கதைகளாக தயக்கமின்றி குறிப்பிடலாம். லெளகீக வாழ்க்கைச் சிக்கல்களையும் நோய்மையும் கொண்டிருக்கும் நடராஜ் கேரம் விளையாட்டில் கரை கண்டவன். பிரகாசமாக எரிந்துவிட்டு அணைந்துபோகிற திரியைப் போல கேரம் போட்டியில் வென்றவனால் மரணத்தை வெல்ல முடியாவிட்டாலும் அவனுடைய புகழ்பெற்ற சொலவடையான நாயி வால்ல தள்ற காயின் என்பது அழியாமல் நிலைபெற்றுவிடுகிறது.

ஸ்ரீ சக்திவேல் முருகன் காவடிப்பண்டு அதன் சாரத்தை எடுத்துக்கொண்டு பார்க்கையில் மிக அபாரமான கதையாக மிளிர்கிறது. அது நமது உடலுக்குள் பொதிந்திருக்கும் நடனத்தை வெளிக்கொணர்கிறது. மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் நியதிகளையும் சடங்குகளையும் தாண்டி உடல் தன் இயற்கையான கதிக்குத் திரும்புதல் என்ற விஷயம் பேசப்பட்டிருக்கிறது. காவடியாட்டத்தின் இசைக்கு தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் ஆடக்கூடிய கோதானுக்கு சித்தப்பனின் மரணம் தீட்டை உருவாக்கி ஆட்டத்தைத் தடைசெய்தாலும் அவன் உடல் தீட்டின் தடையைத் தாண்டியும் பிரக்ஞையை மீறியும் தன் ஆட்டத்தை நிகழ்த்திக் கொள்கிறது.

நிலவெளியை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கிழக்கு மோனம் மற்றும் அம்பாரைப் பள்ளம் கதைகள் மனிதர்களின் இயற்கையான வேட்கைகளான காமம் மற்றும் வன்முறையைப் பேசுகின்றன. அவினாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் பெரு நகர கலாச்சார வளர்ச்சியில் கூலிகளாகவும் அதன் விளிம்புநிலை மனிதர்களாகவும் மாறும் மண்ணின் மைந்தர்களின் பாடுகளைப் பற்றிய கதை. நம்பிய அரசியல் தத்துவத்தின் மீதான மனவிலக்கத்தையும் அத்தத்துவம் உருவாக்க இயலாத பொன்னுலகத்தைக் குறித்தும் தேடுதல் மற்றும் ஸ்டாலின் கிராட் லெனின் கிராட் கதைகள் பேசுகின்றன.

நெடுங்கதைகளைக் கொண்டிருக்கும் தம்பான் தோது தொகுப்பு ஓப்பீட்டளவில் இளஞ்சேரலின் முதல் தொகுப்பை விட அடர்த்தி கூடியது. எளிமையான மொழியில் சொல்லப்பட்டிருந்தாலும் இக்கதைகள் ஆழங்கூடியவை. இணைந்து வாழும் இனங்கள் அல்லது சமூகங்களுக்குள்ளிருக்கும் மிக நுண்மையான வர்க்க வேறுபாடுகளையும் புரிந்துணர்வுச் சிக்கல்களையும் ”டியூப் லைட்” மற்றும் ”வானம் பார்த்த கதை” ஆகியவை பேசுகின்றன. இரண்டுமே சிறப்பாக வந்திருக்கும் குறியீட்டுக் கதைகள். உயர்த்தப்பட்ட சமூகத்திற்கு வசதியான விஷயமாக இருக்கும் தெருவிளக்கு விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களின் பல்வேறு வகையான “ஒதுங்குதல்” களுக்குத் தடையாக மாறுவதை டியூப் லைட் கதையில் பார்க்கிறோம். நண்பர்களாய், புறா பந்தயக் கூட்டாளிகளாய், ஒன்றாக அன்னந்தண்ணி புழங்குபவர்களாய் இருக்கும் சோமனும் தர்மனும் இணைந்து புறா பந்தயத்தில் வெல்லும்போது ஊற்றெடுக்கும் நெகிழ்ச்சியும் ஒற்றுமையுணர்வும் தாங்கள் பெற்ற புறாக்கள் வாழ்க்கையைத் தேடி ஓடிப்போகும்போது நிறம் மாறி பகையாக மாறிவிடுகிறது. இவ்விரு கதைகளின் வரிசையில் அரசியல் பிரக்ஞை கூடிய இன்னொரு கதையாக ஈழம் மற்றும் தெலுங்கானா பிரச்சனைகளை முன்வைத்து போராட்ட முறைமைகளைக் குறித்த விவாதத்தை நிகழ்த்தும் மாநிலத் தவம் கதையைச் சொல்லலாம். ஆனால் கட்டுரையின் சாயலைக் கொண்டிருப்பது இக்கதையின் பலகீனம்.

தணசீலி குணசீலி மற்றும் தம்பான் தோது ஆகியவை வாசிப்பு சுவாரசியம் கூடிய நெடுங்கதைகள் அல்லது ஏறக்குறைய குறுநாவல்கள். இடிக்கப்பட்டுவிட்ட இருகூரின் லட்சுமி தியேட்டரோடு இணைந்த சினிமா பைத்தியமான சிவகாமியின் வாழ்க்கையை விவரிக்கும் தணசீலி குணசீலி கதையை இருகூரின் சினிமா பாரடைஸோ என்று சொல்லலாம். சாதிய அடுக்கில் மேலும் கீழுமாக இருக்கும் தம்பான் மற்றும் முருகன் ஆகிய இருவரின் இளம்பருவ வாழ்வைச் சொல்லும் தம்பான் தோது இன்னொரு மிக முக்கியமான கதை. வீட்டுக்கு அடங்காமல் திரியும் சிறுவர்களான தம்பானும் முருகனும் புதையல் பொற்காசுகள், நின்றிருக்கும் ரயிலிருந்து கோதுமை என எதையெதையோ வீட்டுக்குக் எடுத்துவருகிறார்கள். அப்படித்தான் ஒருநாள் ரயிலில் கடத்தப்படும் சிறுமிகளை மீட்டு வீட்டுக்குக் கூட்டி வருகிறார்கள். இங்கே மிக நுட்பமான ஒரு விஷயத்தை நாம் அவதானிக்கலாம். வட இந்திய சாயல் கொண்ட வேற்றுமொழி பேசக்கூடிய அப்பெண்கள் வளர்வது சாதிய அடுக்கில் கீழிருக்கிற முருகனின் வீட்டில்தான். பிற சமூகங்களை அரவணைத்துக் கொள்வதில் கீழ்நிலையிலுள்ள சமூகம் இளக்கத்தோடு இருக்கிறது என்பதாகவும் நாம் ஒரு வாசிப்பைக் கொடுக்கலாம். மேலிருக்கின்ற சமூகத்தின் இறுக்கமான தன்மைதான் தம்பானை சித்தங் கலங்கியவனாகவும் மாற்றுகிறது.

கிரிக்கெட் சூதாட்ட உலகத்தை சுவாரஸ்யமாகப் பேசும் இருட்டு பிரிமியர் லீக், கூட்டுவண்டி செய்வதற்காக நொய்யலாற்றங்கரைக் கிராமமொன்றில் வந்துதங்கும் அங்கானின் வாழ்கையைச் சொல்லும் கூட்டு வண்டி, ஒரு கிராமிய சினிமாவின் சாயலோடு குஸ்தி விளையாட்டைப் பின்புலமாகக் கொண்டு மகனுக்கும் தந்தைக்குமான உறவு முரணைப் பேசும் மண்ணின் மைந்தன், மெல்லிய மாயத்தன்மையோடு சொல்லப்படட மீன் வாகு ஆகிய கதைகள் வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் ”ஏதோ ஒன்று” குறைகிறது. இந்த ஏதோ ஒன்றுதான் அவருடைய வேறுசில கதைகளில் அதீதமாய் தொழிற்படுகிறது. இந்த ஏதோ ஒன்றை உடும்புப்பிடி போட்டுப் பிடித்து சரியான விகிதத்தில் பயன்படுத்தும்போது இன்னும் அபாரமான கதைகளை இளஞ்சேரல் எழுதுவார். அதற்கான வரத்தை அவருக்கு நொய்யலாற்றங்கரை வழங்கியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

                                                    லக்ஷ்மி சரவணகுமார்

                                    


நீலநதி, யாக்கை, வசுந்தரா என்னும் நீலவர்ணப்பறவை, மச்சம், மயான காண்டம் என்ற ஐந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுக்குமார். இத்திறனாய்வு அவருடைய முதலிரு தொகுப்புகளான நீலநதி மற்றும் யாக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவருடைய கதையுலகம் பிரதானமாக இரண்டு பண்புகளைக் கொண்டிருக்கிறது. அமைப்புக்கு வெளியே இருக்கும் உதிரியான விளிம்புநிலை மனிதர்கள் மற்றும் அமைப்புக்குள்ளேயே கைவிடப்பட்ட மனிதர்கள் குறித்து கதைகளுக்குள் தொடர்ச்சியாகப் பேசுவதை முதலாவதாகவும் அவ்வகைப்பட்ட கதைகளில் விரவியிருக்கும் பாலியல் வேட்கைகள் மற்றும் சித்தரிப்புகளை இரண்டாவது பண்பாகவும் சொல்லலாம். இந்த இரண்டு பண்புகளிலும் கலை என்பது எவ்வளவு இயல்பான விகிதத்தில் கூடியிருக்கிறது அல்லது அது எவ்வளவு சிரமத்தோடு தன்னைப் புனைந்துகொள்கிறது என்ற நோக்கில் நாம் பேசலாம்.

இவ்விரு தொகுப்புகளிலும் மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள் உள்ளன.இவை அனைத்திலும் மொழியின் பிரயோகத்திலோ அல்லது கூறுமுறையிலோ அல்லது பார்வையிலோ பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. ஒரே விதமான சொற்சேர்க்கைகள், காட்சிகள், ஆங்காங்கே பளிச்சிட்டுத் தெரியும் முன்னோடிகளின் பாதிப்புகள் என ஒரு தருணத்தில் இக்கதைகளின் பலமான வாசிப்பு சுவாரசியத்தையும் மீறி நமக்கு அலுப்பாக இருக்கிறது. தனித்தனியாக வாசிக்கும்போது அடர்த்தி கூடித் தெரியும் கதைகள் தொகுக்கப்படும்போது பலருக்கு இந்த விபத்து நிகழ்ந்துவிடுகிறது. எண்ணிக்கையில் அதிகம் எழுதுபவராக அறியப்படும் சரவணக்குமாராலும் இந்த விபத்திலிருந்து தப்ப இயலவில்லை.

நீலநதி தொகுப்பில் மரணத்திற்கான காத்திருப்பில், முட்டையிடும் குதிரைகளின் நகரம் ஆகிய கதைகள் சிறப்பாக வந்திருக்கின்றன. த்தூ, எஸ்.திருநாவுக்கரசிற்கு இருபத்தைந்து, காற்றை மொழிபெயர்த்தல், இருளில் தொலைந்துபோனவன் போன்றவை ஆழங்கூடிய கதைகளாக விரிவடையாமல் வெற்றுச் சித்தரிப்புகளாய் இருக்கின்றன. மற்ற கதைகள் வடிவ ஒழுங்குடன் இருந்தாலும் அதன் பேசுபொருளும் விவரிப்பு முறைகளும் விவாதத்திற்குரியவை.

”பொது ஒழுக்க விதிகளின் போலித் தோற்றங்களுக்கு அடியில் மூர்க்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் ரத்தமும் சதையுமான தடயங்கள் இவை”. இது நீலநதி தொகுப்பின் பின்னட்டை வாசகத்தின் ஒரு பகுதி. ஒருவகையில் கதையுலகின் சாரத்திற்குப் பொருத்தமாக தோன்றுவது போல் இவ்வாக்கியங்கள் காட்சியளித்தாலும் இக்கதைகளை அவ்வகை வாழ்வின் போலித்தோற்றங்கள் என்றே நான் குறிப்பிடுவேன். இதை விளக்க சரவணக்குமாரின் கதைகளிலுள்ள பிரச்சனைகளை ஆராயவேண்டும்.

விளிம்புநிலை மனிதர்கள் கதாப்பாத்திரங்களாக இருந்தாலும் இக்கதைகளில் வாழ்வியற் பார்வையும் அரசியற்பார்வையும் வெகுவாக குறைவுபட்டிருக்கின்றன. வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள், பிச்சையெடுக்கிறார்கள், ஒருபாலுறவு கொள்கிறார்கள், கஞ்சா புகைக்கிறார்கள்/விற்கிறார்கள், குடிக்கிறார்கள், பாலியல் தொழில் செய்கிறார்கள், தடயமற்று மறைந்துபோகிறார்கள் என்று ஒரே முறையிலான (pattern) காட்சி சித்தரிப்புகளே திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. இப்படிப்பட்ட ஒரு உலகம் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவ்வுலகத்தின் அன்றாட இயங்குமுறையே அவர்களின் வாழ்வு அல்ல. இவ்வகைக் கதாப்பாத்திரங்கள் தமிழ்ப் புனைகதை வெளியில் அதிகமாகப் புழங்கவில்லை என்பதாலும் அதை சரவணக்குமார் பேசுகிறார் என்பதாலும் மட்டும் இக்கதைகள் முக்கியத்துவம் அடைகின்றன என்று சொன்னால் அது பிழையான பார்வையாகும். ஒரே உலகத்தைத் தொடர்ச்சியாகப் பேசும்போது அதனுள் ஒரு விசாரணையும் சிந்தனைமுறையும் கூடியிருக்கவேண்டும். அவை நிகழாமல் இக்கதைகள் போதாமைகளோடிருக்கின்றன.

இரண்டாவதாக இக்கதைகளில் பாலியல் சித்தரிப்புகள் என்பவை கதையுலகின் இயல்பான பண்பாக இல்லாமல் கதை சொல்லுதலில் வலிந்து பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகத் துருத்திக்கொண்டிருப்பதை நாம் காணலாம். சொற்களை விழுங்கும் குளம் என்றொரு கதை. மிக அபாரமான கதையாக வந்திருக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இக்கதையில் கேசவன் குட்டியின் பேத்திக்கும் நாயகனுக்குமான புணர்ச்சி வலிந்து திணிக்கப்பட்டது. பேசுபொருளுக்கும் இக்காட்சிக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை. காமத்தைக் குறித்தும் ஒரு பாலுணர்வு குறித்தும் அவரது விவரிப்புகள் இக்கதைகளின் எல்லைக்குள் வெறும் சடங்குகளாகவே இருக்கின்றன. என்னுடைய இந்தக் கருத்தானது அறம்,புனிதம் போன்ற தூய்மைவாத மதிப்பீடுகளின் அடிப்படையிலானதாக அல்லாமல் காமத்தைக் கலையாக மாற்றுவதில் நேர்ந்திருக்கும் சிக்கல்களின் அடிப்படையிலானது என்பதை வலியுறுத்துகிறேன். இரண்டாவது தொகுப்பான யாக்கையில் உள்ள சூரிய வெப்பத் தாக்குதல், ஒரு செப்டம்பர் மாதத்தின் ஸ்பானியத் தோழியும் விசுவாசமிக்க நல் மேய்ப்பர்களும், யாக்கை ஆகிய கதைகளும் அவருடைய வழக்கமான கதைகளே. இவ்வகையிலிருந்து விலகி எழுதப்பட்ட மணற்கூடுகள் மற்றும் வெயிற் காலங்களில் ஆகிய கதைகளில் கரிசல் நிலத்தின் இளம்பெண்களின் வாழ்வு பேசப்பட்டிருந்தாலும் அவற்றில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏதுமில்லை.
 
இவ்விரு தொகுப்புகளிலும் சரவணக்குமாரின் கதைகளை மூன்றாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.
 
  • நாம் ஏற்கனவே விரிவாகப் பேசியிருக்கிற விளிம்புநிலை மனிதர்கள் மற்றும் பாலியல் சித்திரங்களின் அடிப்படையிலான கதைகள்.
  • பூனைகளின் வீடு, முட்டையிடும் குதிரைகள் நகரம், ரவிக்கையுள் மறையும் வானம், உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும், கல்மண்டபம் ஆகியவை இன்னொரு வகைக் கதைகள். யதார்த்தத்தோடு இணைந்த பூடகம், மெல்லிய மாயத்தன்மை என்று சிற்றிதழ்களில் ஒருகாலத்தில் அதீதமாகத் தொழிற்பட்ட வடிவத்தைக் கொண்டிருப்பவை.
  • நீண்ட நேர இரவுப் பயணம், இருள், மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு, 20/20 ஆகியவை நிறுவன அதிகாரத்திற்கு எதிரான ஒருவகையான சாரமான (abstract) விமர்சனப் பார்வையின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
சிறுகதை என்னும் வடிவம் சரவணக்குமாருக்கு மிக எளிதாக கைவந்திருக்கிறது. விளிம்புநிலை உலகத்தின் புறக்காட்சிகளை இவ்விரு தொகுப்புகளின் கதைகளில் பேசியிருக்கிறார். பின்னால் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் அவருடைய கதைகள் எவ்விதமாக முதிர்ந்திருக்கின்றன என்பதையும் வாசகர்கள் இணைத்துப் பார்க்கும்போது ஒரு முழுமையான பார்வை கிடைக்கக்கூடும்.

                                                        கணேசகுமாரன்

                                    

மனிதர்கள் அனுபவிக்கும் வாதை என்பதே கணேசகுமாரன் கதையுலகத்தின் பிரதானப் பண்பாக இருக்கிறது. மனதினுடையவையாகவும் உடலினுடையவையாகவும் இருக்கும் அவ்வாதைகளின் வழியே ஒரு இருண்ட உலகத்தை சித்தரிக்க முயற்சிக்கின்றன பைத்தியருசி தொகுப்பிலுள்ள கதைகள். இந்த வாதைகளை அனுபவிக்கும் உயிர்கள் அடையும் முடிவு அல்லது தப்பித்துக்கொள்ள தேடும் வழி என்பது பெரும்பாலும் மரணமாகவோ அல்லது தற்கொலையாகவோ இருக்கிறது. இந்த ஒரு பொதுப்பண்பு தொகுப்பின் எல்லா கதைகளிலும் விரவி அதுவே மையமாகவும் மாறியிருக்கிறது.

இத்தொகுப்பில் குரலின் வழியாக சில கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சில கதைகள் கவித்துவத்தை அடையமுயலும் அரூப/பூடக மொழியின் வழியாக சொல்லப்பட்டிருக்கின்றன. சொல்முறையில் தேய்வழக்குகள் ஆங்காங்கே இருந்தாலும் பின்னதை விட முன்னது சற்று வலுவுடையதாகத் தோன்றுகிறது. இரண்டாவது வகைக் கதைகளில் ”கொம்பன்” கதையைத் தவிர்த்து மற்றவை திருகலான சக்கைமொழியில் சொல்லப்பட்டவையாக குறைவுபட்டிருக்கின்றன.

ஏவல், சிக்னல் மற்றும் பைத்திய ருசி ஆகிய கதைகள் மனநிலை பிறழ்ந்தவர்களின் உலகத்தைச் சித்தரிக்கின்றன. இம்மனிதர்கள் பெரும்பாலும் பிறருடைய ஆதுரத்தையும் காதலையும் நட்பையும் பாதுகாப்புணர்வையும் எதிர்பார்த்திருந்து அவை கிடைக்கப்பெறாததின் தோல்வியிலிருந்து சித்தங் கலங்கியவர்கள். ஏவலில் கொலையாகவும், சிக்னல் கதையில் மரணத்திற்கான விருப்பமாகவும் பைத்தியருசியில் தீ விபத்தில் நிகழும் மரணங்கள் என்பதாகவும் இக்கதைகளின் முடிவுகள் அமைந்திருக்கின்றன.

சந்திரன்,பானுமதி மற்றும் வில்சன், அண்ணகர், பெருந்திணைக்காரன், காமத்தின் நிறம் வெள்ளை ஆகியவை நிறைவேறாத காமம் மற்றும் ஒருபால் விழைவினால் எழும் வாதைகளைப் பேசுகின்றன. இக்கதைகளிலும் தப்பித்தலுக்கான உத்தியாய் மரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. அக்காக்களின் கதை, தந்தூரி கசானா 400 ரூபாய் மற்றும் தேவதைக்கு வாழ்க்கைப்பட்டவன் ஆகிய கதைகள் வறுமை மற்றும் பசியின் வாதைகளைப் பேசுகின்றன. எங்கே பீத்தோவனின் வலியை மட்டும் பேசிவிடுவாரோ என்று நாம் யோசிக்கையில் நல்லவேளையாக அவருடைய இசையைக் குறித்தும் கொஞ்சம் ”இசை” கதையில் பேசுகிறார் கணேசகுமாரன். ”அழுகிய புத்தனிடம் சொன்ன கதை” யிலும் தன் வழக்கமான விஷயத்தைத்தான் பேசுகிறார். மையக்கதாப்பாத்திரத்தை அகதியாக அடையாளப்படுத்துவது கதைக்கு எந்த கனத்தையும் கூட்டுவதில்லை. ஒருவேளை கணேசகுமாரன் கதைகளின் உலகம் வேறானதாக இருந்திருந்தால் இக்கதை வீரியமானதாக இருந்திருக்கக்கூடும். வேறொரு அச்சில் வார்க்கப்பட்ட அதே வாதையாகவே இக்கதையும் எஞ்சுகிறது. ”அழிவு” அல்லது பூமிக்கும் அதன் உயிர்களுக்கும் மனிதன் ஏற்படுத்தும் சிதைவைப் பேசக்கூடிய பாதரச பூனைகளின் நடனம் மற்றும் கொம்பன் கதைகள் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள்.

கைவிடப்பட்டு சதா கணமும் வாதையை உணரும் ஒரு எளிய மனிதனின் உலகமாக கணேசகுமாரன் கதைகள் இருக்கின்றன. தேய்வழக்குகள் நிறைந்த கூறுமுறையும் தற்கொலை அல்லது மரணம் என்ற ஒரே தன்மையிலான முடிவுகளும் இக்கதைகளின் பலகீனங்களாக இருக்கின்றன. நிறைய அறிதல்களைக் கொடுக்கக்கூடிய ஒன்று அவரது இயல்பான படைப்புலகமாக அமைந்திருக்கிறது. வெறும் நாடகீயமான கதைகளாக அவற்றைச் சுருக்கிவிடாமலிருக்க கணேசகுமாரன் முயற்சிக்கவேண்டும்.

1 comment:

சிவானந்தம் நீலகண்டன் said...

அருமை!

இக்கட்டுரையின் எந்த கதைகளையும் நான் இன்னும் வாசிக்கவில்லை. இருப்பினும் பொறுப்புடன்கூடிய தெளிவான சிந்தனையைக் காணமுடிகிறது.