இன்னும் கொஞ்சம்
பச்சையை நோக்கிய
உந்துதலோ வேறெதுவோ
அதனை வழிதவற வைத்துவிட்டது
நிமிர்ந்து பார்க்கையில்
மந்தையைக் காணாத ஆட்டை
அச்சமே முதலில் பீடிக்கிறது
இதயத்தின் திடுக்கில்
அதிரும் தவிப்பு
குரலில் கனத்து ஒலிக்கிறது
மேற்கில் நாலெட்டு
கிழக்கில் நாலெட்டு
வடக்கில் நாலெட்டு
தெற்கில் நாலெட்டு
நின்ற இடம் திரும்பி
பின்னும் திசை துழாவும்
கண்களுக்கு
சட்டென்று
புதிர்வழியாய் மாறிவிடுகிறது நிலம்
பொன்னந்தி மேகத்தில்
ஒரு ஆட்டைக் கண்டு
துளிர்விடும் அதன் நம்பிக்கையை
ஏமாற்றிவிடுகிறது இரவு
மந்தைக் கதகதப்புக்கான ஏக்கத்தோடு
புதர்தேடி ஒண்டுமதற்கு
பயமாகவும் இருக்கிறது
எல்லாம் புதிதாகவும் இருக்கிறது
பட்டியற்ற படுக்கையில்
அசைவாங்கும் ஆடு
அனிச்சையாய் தலையுயர்த்திப் பார்க்கையில்
இத்தனை நாள் காணாத
கோடானு கோடி நட்சத்திரங்கள்
இரவின் பிரத்யேக ஒலிகள்
பிறகொரு
நிலவின் நடையையும்
வைக்றையையும் சூரியோதத்தையும்
கண்டவாறே படுத்துக்கிடக்கையில்
மேய்ச்சலுக்குத் திரும்பிய மந்தையின்
வாசனை பிடித்துவிட்ட ஆடு
மே மேவென்ற
உற்சாகப் பாடலோடு
வேகமாக ஓடி வருகிறது
நிமிர்ந்த மந்தையாடுகள் அத்தனையும்
ஒரே நேரத்தில்
புழுக்கை போட்டுவிட்டு
தலைகுத்திக் கொண்டன.
1 comment:
அருமை சகோ
Post a Comment