டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்க அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – 2025 விருது நிகழ்வில் கலந்துகொண்டது நிறைவையும் ஊக்கத்தையும் அளித்தது. ரமேஷ் பிரேதன் மறைந்துவிட்ட சூழலில் அந்த விருதுக்கான தொகையை ஐந்து இளம் எழுத்தாளர்களுக்கு பட்டயத்தோடு பகிர்ந்து அளித்ததின் மூலம் சரியான விதத்தில் முன்னெடுத்துச் சென்று நிறைவு செய்திருக்கிறார்கள்.
பதினைந்து ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருது நிகழ்வுகள் நிகழ்கின்றன. முதன்முதலாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இந்தாண்டே அமைந்தது. எழுத்தாளர்-வாசகர் கலந்துரையாடல் அரங்கில் பங்கேற்றதும் நிறைய நண்பர்களைச் சந்தித்ததும் செறிவான அனுபவங்களாக இருந்தன. நல்ல திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அனுபவங்களால் இருநாள் நிகழ்வுகளையும் சராங்கமான லகுவோடு பிசிறின்றி நடத்தினார்கள்.
வெள்ளி மாலை எட்டேகாலுக்கு கோவையை அடைந்தேன். நண்பர் தேஜஸ் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். ராஜஸ்தானி சங்கத்துக்கு அருகாமையில் இருந்த விடுதியில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பியும் நானும் அறையைப் பகிர்ந்துகொண்டோம். நான் சென்றபோது நல்லதம்பி, ஜெயந்த் காய்கினியுடன் லாபியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். புக் பிரம்மா நிகழ்வில் ஜெயந்தின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்திக்கொண்டேன். இனிமையான பேச்சும் நகைச்சுவையும் அவருடைய தனித்தன்மைகள். இனிமேல்தான் அவரை வாசிக்கவேண்டும்.
பையை அறையில் வைத்துவிட்டு டீக்கடையைத் தேடிச் செல்லும் வழியிலேயே ராஜஸ்தானி சங்கத்தைக் கண்டேன். அதன் முகப்பில் ஜீவ கரிகாலன், தூயன் உள்ளிட்ட நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தே பேச்சு தொடங்கிவிட்டது. ஒருமணி நேரத்துக்குப் பிறகு கிளம்பி கரிகாலன், தூயன், நான் மூவருமாய் விடுதிக்குத் திரும்பினோம். இரவு பத்தரை வரைக்கும் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிய தூயன் மறுநாள் காலை அமர்வுக்கும் வந்திருந்தார்.
பனிக்குளிர்மை படர்ந்திருந்த சனிக்கிழமை காலையில் நல்லதம்பியும் நானும் தேனீர் அருந்த செல்ல, அங்கே சுனில் கிருஷ்ணன், சித்ரன், கீரனூர் ஜாகிர் ராஜா, ஏ.வி.மணிகண்டன் என்று பல நண்பர்கள் இணைந்துகொள்ள, காலை எட்டரை வரை அரட்டை தொடர்ந்தது
டிசம்பர் 20 காலை முதல் அமர்வு, பதிப்பாளர்கள் ஜீவ கரிகாலன் மற்றும் அழிசி சீனிவாசன் ஆகியோரின் கலந்துரையாடல். இதை செந்தில் ஒருங்கிணைத்தார். அறுபதுக்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் யாவரும் பதிப்பகத்தின் செயல்பாடுகள் மற்றும் தமிழ் நவீன இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளை மின்னூலாக்கும் அழிசியின் முயற்சிகள் என்று இரண்டு கோணங்களில் உரையாடல் அமைந்தது. இன்றைய பதிப்புச் சூழல், சாத்தியங்கள் மற்றும் சவால்கள் என்று விரிந்த உரையாடலில் ஜீவ கரிகாலன், ரமேஷ் பிரேதன் உடனான தன்னுடைய நட்பனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இரண்டாவது அரங்கு என்னுடையது. சிபி ஒருங்கிணைத்தார். அரங்கில் நிரம்பியிருந்த கூட்டத்தைக் கண்டு மெல்லிய பதட்டம் இருந்தாலும் அந்தக் கணத்தின் மனநிலையின் அடிப்படையில் பதில்களை வெளிப்படுத்துவது என்ற தீர்மானம் சற்று உதவியது. என் சிறுகதைகளில் இருக்கும் நாவல் தன்மை, இருவேறுபட்ட உலகங்கள், டாங்கோ நாவல் குறித்ததாக கேள்விகள் அமைந்தன. நாவல் வடிவத்தின் மீதான என்னுடைய விருப்பத்தை பகிர்ந்துகொண்டேன். சில வாசக நண்பர்களோடு கீரனூர் ஜாகிர்ராஜா, சுனில் கிருஷ்ணன், இல சுபத்ரா, லாவண்யா சுந்தரராஜன், லதா அருணாச்சலம் போன்றோர் ஏறக்குறைய அனைத்து அமர்வுகளிலும் தங்களுடைய கேள்விகளை முன்வைத்து உரையாடலை முன்னெடுத்துச் செல்லப் பங்களித்தார்கள். தன் கேள்வியின் ஊடே ஜெயமோகன் டாங்கோ நாவலைக் குறித்து வைத்த நேர்மறையான மதிப்பீடு நிறைவையும் உற்சாகத்தையும் அளித்தது.
அடுத்து குலசேகரன் அவர்களுடைய அமர்வு. சரண்யா ஒருங்கிணைத்தார். அவருடைய சிறுகதைகள், தங்கநகைப் பாதை நாவல், எழுத்துமுறை, நிலத்திலும் மக்களின் வாழ்க்கையிலும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள், அதற்கெதிரான மக்களின் போராட்டங்களை எப்படி அணுகுவது, அடக்கு முறைக்கு எதிராக சாமானியர்களுக்கு சாத்தியமாகும் அரசியல் என்று சற்றே உரத்து அமைந்தது குலசேகரனின் அரங்கு.
மதியவுணவுக்குப் பிறகு அரங்கத்துக்கு வெளியேயான நண்பர்களின் உரையாடல் ஈர்த்துக்கொண்டதால் ரம்யா ஒருங்கிணைத்த யாழன் ஆதியின் அரங்கில் முழுமையாகப் பங்கெடுக்க இயலவில்லை. ஜிஎஸ்எஸ்வி நவீன் ஒருங்கிணைத்த அரிசங்கரின் அரங்கில் பாண்டிச்சேரி குறித்துப் பொதுப் புத்தியில் உறைந்த விஷயங்களைக் கண்டித்தார். ஆரோவில் பகுதியைக் குறித்து இரண்டுவிதமான நாவல்களை எழுதமுடியும் என்றார். பிரபஞ்சனின் பாண்டிச்சேரி, ரமேஷ் பிரேதனின் பாண்டிச்சேரி மற்றும் தன்னுடையது குறித்துப் பேசினார். பிரபஞ்சனை சந்தித்த அனுபவத்தையும், எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ள பாண்டிச்சேரியின் களங்களையும் சுட்டிக் காட்டினார். பாண்டிச்சேரியில் பாரதியின் காலத்தை ஒட்டிய ஒரு நாவலை எழுதிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாலையில் தெலுங்கு எழுத்தாளர் மதுராந்தகம் நரேந்திரா அவர்களுடைய அரங்கை ஈநாடு ராஜு ஒருங்கிணைத்தார். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தது சரியான அணுகுமுறை அல்ல என்றார். உலகில் இருபது கோடி தெலுங்கு பேசும் மக்கள் இருக்கின்ற நிலையில் இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் சேர்த்து பத்து கோடி பேர் மட்டும் இருப்பதாகவும் மற்றவர்கள் உலகெங்கும் சிதறிக் கிடப்பதாகவும் குறிப்பிட்டார். பொருள் வேட்டலை முன்னிட்டு மொழியின் மீதான தெலுங்கு மக்களின் கவனமின்மை, எம்.எஸ், சுப்புலட்சுமியின் கதையை நாவலாக எழுதியபோது, எழுந்த எதிர்பாராத சர்ச்சைகள், எழுத்தாளரான தன்னுடைய தந்தையுடனான உறவு, தெலுங்கில் மற்ற வடிவங்களைவிட சிறுகதை வடிவம் வலுவாக இருப்பது, மொழிபெயர்ப்புகள் இல்லாமல் அவ்வடிவத்தின் மேதைகள் பலரும் தெலுங்குக்கு வெளியே தெரியாமல் இருப்பது, கோவை மக்களுடன் தெலுங்கு மக்களின் உறவு என்று பல புள்ளிகளைத் தொட்ட அவருடைய பேச்சு ஆழத்தோடு அமைந்திருந்தது.
அதற்கு அடுத்து, மதார் ஒருங்கிணைத்த அனுராதா ஆனந்தின் அரங்கில், கவிதைகளை மொழிபெயர்ப்பதில் உள்ள சவால்கள், அவருடைய தேர்வுமுறை என்று பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஞாயிறு காலையில் திரும்பவும் பனிக்குளிரினூடே தேனீர் அரங்கம் மற்றும் நடைப்பேச்சு. கீரனூர் ஜாகிர் ராஜா, சித்ரன், நான் மூவருமாக நீண்ட நடை சென்றபோது தஞ்சை பிரகாஷ் உள்ளிட்டு பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.
அன்றைய நாளின் முதல் அமர்வாக மொழிபெயர்ப்பாளர்கள் குறிஞ்சிவேலன், நல்லதம்பி ஆகியோருடனான கலந்துரையாடலை சுசித்ரா ஒருங்கிணைத்தார். நல்லி திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி, மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போது பின்பற்றும் தேர்வுமுறை மற்றும் உத்திகள் குறித்து பகிர்ந்துகொண்ட குறிஞ்சிவேலன் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் மொழிபெயர்ப்புக்கும் விருதளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நல்லதம்பி அவர்கள், கன்னட எழுத்தாளர் ஸ்ரீனிவாஸ் வைத்யா எழுதிய ”ஹல பெந்து ஹல்லா” (தமிழில்- ஓடை) நாவலை மொழிபெயர்ப்பதில் அதன் வட்டார வழக்கினால் ஏற்பட்ட சவால்களைப் பகிர்ந்ததோடு யாத்வஷேம் நாவலை மொழிபெயர்த்து முடித்தபின்னும் நான்காண்டுகள் வரை வெளியிட முடியாமல் இருந்த சூழலையும் பகிர்ந்துகொண்டார். மொழிபெயர்ப்பின் எடிட்டிங் உத்திகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
எழுத்தாளர் வாசகர் சந்திப்பில் கடைசி அரங்கு ஜெயந்த் காய்கினியுடன். சுனில் கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். இதமான, நகைச்சுவை ததும்பிய பேச்சின் வழியே தன்னுடைய மும்பை வாழ்க்கை, உழைப்பையே கடவுளாகக் கருதும் அதன் இயல்பு, வருகிறவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் அதன் பெருந்தன்மை என்று மும்பையின் ஆன்மாவைக் குறித்த ஒரு நல்ல சித்திரத்தை அளித்தார். தன் கதைகளின் பின்புலமாக மருத்துவமனை இருப்பது, சாதாரண எளிய சம்பவங்களைக் கதைகளாக்குவதற்கான காரணம், திரைத்துறை அனுபவம் என்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற விதத்தில் பேசினார். உள்ளுணர்வின் உந்துதலில் எழுதுபவர் மற்றும் நன்கு திட்டமிட்டு எழுதுபவர் என்று இருவகையான எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு தான் முதல் வகையைச் சேர்ந்தவன் என்றார். முதல் வரியைத் தூண்டிற்புழுவாகப் போட்டு இரண்டாவது வரியைப் பிடிப்பது பற்றி அவர் கூறியது மெய்யான கூற்று. மதுராந்தகம் நரேந்திரா கருத்தாழம் என்றால் ஜெய்ந்த் நகைச்சுவையின் ஆழம்.
கபிலன் இருக்க கவலை ஏன் என்று ஞாயிறு பிற்பகல் பெரும்பாலும் அரங்குக்குக் வெளியில்தான் பொழுது கழிந்தது. முற்பகல் கே.என். செந்தில் வந்திருந்தான். தேனீர்க்கடை வாசலில் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு நண்பர்கள் பலரும் இணைந்துகொள்ள அரட்டை பல கோணங்களில் மாறி மாறிச் சென்று மதியவுணவுக்குப் பிறகு விடைபெற்றுச் சென்றான். அரசியல் முதல் ”ஆபீஸ்” நாவல் வரை 360 பாகை கோணத்தில் பல்வேறு விஷயங்களையும் சிலமணி நேரங்களுக்கு சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினார் போகன். எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கும்போதே நம்முடன் தனியாகவும் பேசிவிடும் நுட்பம் கொண்டவராக அவரை நினைத்துக்கொண்டேன்.
இல.சுபத்ரா நண்பர்களுடன் இணைந்து நடத்தும் வாசிப்புக் குழுமத்தின் நண்பர்களை அறிமுகப்படுத்தினார். சுபத்ராவும் நண்பர்களும் முக்கியமான காரியத்தை தொடர்ச்சியாகச் செய்வது பாராட்டுக்குரியது. என்னுடைய கவிதைகள் குறித்த கூர்மையான அவதானிப்புகளை முன்வைத்துப் பேசினார் நண்பர் விஸ்வா. காதலும் ஏனைய பூதங்களும் தொகுப்பில் தனக்குப் பிடித்த இரு கதைகளின் அம்சங்களை நண்பர்களின் முன்னிலையில் விரிவாகப் பேசிய நண்பர் திருச்செந்தாழை, இலக்கியத்தில் வலுவான கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் எழுத்தாளர் சித்ரன், பழனி கீரனூர் வட்டார சொல்லகராதிப் பணியை முடித்திருக்கும் நிலையில் தன் அடுத்த நாவலுக்கான தனித்துவமான களத்தை விவரித்த கீரனூர் ஜாகிர் ராஜா, துடிப்பான செயல்பாட்டையும் பேச்சையும் கொண்ட கவிஞர் மொழிபெயர்ப்பாளர் கயல், வாசக நண்பர் அரவிந்தன் என்று பலரோடும் இனிய பேச்சுக்கள் வாய்த்தன. இசை சனிக்கிழமை முழுக்க இருந்தான். எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், சு.வேணுகோபால், பாவண்ணன், எஸ்.ஜே. சிவசங்கர் என்று பலரையும் சந்திக்க முடிந்தது. குலசேகரனோடும் சுனிலுடனும் தொடுவதும் விலகுவதுமாக இரு நாட்களுக்கும் பேச்சு நீண்டது.
தமிழின் சமகால இலக்கிய முகங்கள் பலரும் கூடியிருக்கும் தருணத்தில் அத்தனை படைப்புலகங்களின், கருத்துருக்களின், ஆளுமைகளின், வாழ்க்கை அனுபவங்களின் சாரம் திரண்ட திரளுக்கு மத்தியில் நின்றிருக்கும்போது, என்ன செய்கிறோம், இனி என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளும்போது கிடைக்கும் விடை மிக உற்சாகமானது.
ஆளுமைகளுக்கு விருதளித்து அவர்களுடைய படைப்புலகை முழுமையாகப் பேசி புது வாசகர்களிடையே பரவலாக்குவது, எழுத்தாளர்-வாசகர் சந்திப்புகளின் மூலம் வாசகத் திரளின் கவனத்தை எழுத்தாளரின் மீது குவிப்பது, பல்வேறுவிதமான படைப்பாளர்களை ஓரிடத்தில் சந்திக்க வாய்ப்பை உருவாக்குவது என்று நிகழ்வின் அமைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்நிகழ்வு வாசகர்களுக்கு அறிமுகங்களையும் தொடக்கங்களையும் சாத்தியமாக்குகையில் எழுத்தாளர்களுக்கு உணர்வுப்பூர்வமான பெறுமதிகள் கிடைக்கின்றன என்று கருதுகிறேன். தீவிரமான விவாதங்களுக்கு அவர்கள் காவிய முகாம்களை ஒருங்கிணைக்கிறார்கள் என்று யூகிக்கிறேன்.
இரண்டாவது நாள் மாலை இளம் எழுத்தாளர்களுக்கான விருதளிப்பு, ரமேஷ் பிரேதன் ஆவணப்படம் திரையிடல்,விருந்தினர்களின் உரைகள் என்று நிகழ்வு தொடர்ந்தது. உரைகளை இனிமேல்தான் ஸ்ருதி டிவியில் பார்க்கவேண்டும். இரவு ஒன்பது மணிக்கு பாலா என்னை காரில் ரயில் நிலையத்தில் இறக்கிவிட பத்தே கால் நீலகிரி எக்ஸ்பிரஸில் சென்னைக்கு வண்டியேறினேன்.
***










No comments:
Post a Comment