Apr 30, 2014

நீலகண்டப் பறவையும் வெட்டுக்கிளியும்

நேற்று அதின் பந்த்யோபாத்யாயவின் ”நீலகண்ட பறவையைத் தேடி” நாவலை வாசித்து முடித்தேன். தமிழ்ச்சுழலில் பல ஆண்டுகளாக இந்த நாவல் பலராலும் குறிப்பிடப்படுவதைக் கவனித்திருந்தாலும் இந்திய நாவல்களின் மொழிபெயர்ப்புகளை அதிகமாக வாசித்ததில்லை. மேல்நிலைப் பள்ளிக்காலத்தில் பாதியோடு கைவிட்ட முகுந்தனின் மய்யழிக்கரையோரம் மலையாள நாவல்தான் மொழிபெயர்ப்பு வாசிப்பில் கடைசியானது. அதற்கு முன் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்திருந்த தோட்டியின் மகன் மற்றும் தகழியின் செம்மீன் வாசித்திருந்தேன். பிறகு என் வாசிப்பு அக்கல் பொறுக்கும் குக்கலைப் போலாகிவிட்டது.

சென்ற ஆண்டிற்கு முந்தைய புத்தக சந்தையில் நேஷனல் புக் டிரஸ்டாரால் ஏறக்குறைய இலவசமாக வழங்கப்பட்ட இந்திய மொழியாக்க நாவல்கள் பலவற்றை லஷ்மி சரவணக்குமார் தேர்ந்தெடுத்துக் கொடுத்தான். அவை எல்லாம் இன்னும் வாசிக்கப்படாமல் ஊர்ப்பரணில் கிடக்கின்றன. அவற்றில் பல இப்போது இணையத்திலேயே பிடிஎப் ஆக கிடைக்கின்றன. அந்த வரிசையில்தான் நீலகண்ட பறவையைத் தேடி நாவலை இரண்டு அமர்வுகளில் வாசித்தேன்.

எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கு வெகு அணுக்கமானதாக இருக்கிறது. கற்பனாவாத செவ்வியல்தன்மை கொண்ட காலனியகால நாவல். நம் குழந்தமையின் கண்களால் அந்த உலகத்தைப் பார்க்க வைக்கிறது. பிளவுபடாத வங்காளத்தின் கிராமிய நிலக்காட்சிகள், ஆறு குளம் போன்ற நீர்வெளிகள், பயிர்பச்சைகள் என்றொரு உலகம் மனதிற்கினிய வகையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்கள் இணைந்து வாழ்ந்த சூழலையும் அதில் பிரிவினையின் வேர்கள் எப்படி முளைத்தன என்பதையும் பேசுகிறது. பேலு போன்ற ஆண்களின் காமத்தை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல் ஜோட்டன், கணவனை இழந்த மாலதி போன்றோரின் மனத்தவிப்பையும் உடலின் வேட்கையையும் பேசுகிறது. சோனா என்ற சிறுவனின் வழி வாழ்க்கையின் குதூகலங்களை நினைவூட்டுகிறது.

நிறைவேறாத காதலின் வேதனையால் பைத்தியமாகித் திரியும் மணீந்திர நாத்தின் பாத்திரப்படைப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும் அது இன்னுங்கூட கொஞ்சம் அகவயமான திசையில் பயணித்திருக்கலாம். தன் காதலியை நீலகண்டப் பறவையாக உருவகித்து பைத்தியமாகத் திரியும் மணீந்திரநாத்தை பார்க்கும்போது முதல் வெட்டுக்கிளி என்ற கிரேக்கப் புராணீகக் கதை நினைவிற்கு வருகிறது. இவ்விடத்தில் நீலகண்டப் பறவைக்கும் வெட்டுக்கிளிக்கும் காதலைத் தவிர வேறு எந்தத் தொடர்புமில்லை.

                        

வைகறையின் கடவுளான ஈயோஸ், டிராய் இளவரசனான டித்தோனஸைக் கண்டதும் காதல் வயப்பட்டுவிடுகிறாள். டித்தோனஸோ அழியக்கூடிய மனிதப்பிறவி. அவளோ இறவாமை கொண்ட கடவுள். எனவே அவள் தன் தந்தையும் கடவுளரின் கடவுளுமான சூயஸிடம் சென்று நற்குணங்கள் கொண்ட டிரோஜன் இளவரசனான டித்தோனஸ் ஏன் சாதாரண மனிதர்களைப்போல் இறப்பைப் சந்திக்கவேண்டும், அவனுக்கு இறவாமையை வரமாகக் கொடுத்தால் தான் அவனைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வேனென்று சொல்ல சூயஸும் நீ கேட்டபடியே நடக்கட்டும் என்று வரம் கொடுக்க டித்தோனஸும் ஈயோஸும் வெகுகாலம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். டித்தோனஸ் முதுமையடைகிறான். அவனுக்காக இறவாமை வரம் வாங்கிய ஈயோஸ் அவன் என்றும் குன்றா இளமையோடு இருக்கவேண்டுமென்று கேட்க மறந்துவிட்டதால் அவன் ஒவ்வொரு நாளும் வயோதிகத்திற்குள் வீழ்வதை அவளால் தடுக்க முடிவதில்லை. முதுமையின் கொடுமையால் டித்தோனஸ் இறப்பை வேண்டினாலும் சூயஸால் தன் வரத்தை திரும்பப் பெற முடிவதில்லை. அவனுடைய உருவம் சுருங்கிக்கொண்டே போகிறது. இறுதியில் அவனுடைய துயரங்களைக் காணச் சகியாமல் ஈயோஸே டித்தோனஸை ஒரு வெட்டுக்கிளியாக மாற்றி அவனை முதன்முதலில் தான் கண்ட இடத்திலேயே விட்டுவிடுகிறாள்.

இப்போது வெட்டுக்கிளியோடு சேர்த்து அம்பிகாபதியின் ”சற்றே பருத்த தனமே” நினைவிற்கு வருகிறது. சிற்றின்பம கலவாமல் பாடிக்கொண்டிருக்கும் அம்பிகாபதியின் முன் நூறாவது பாடல் முடிந்ததென்று தவறாக நினைத்து அமராவதி தோன்றிவிடுவதற்கான காரணத்தையும் , இறவாமைக்கு வரங்கேட்ட ஈயோஸ் இளமைக்கு கேட்க மறந்துவிடுவதற்கான காரணத்தையும் யோசித்தால் விதி என்று எளிமைப்படுத்திச் சொல்லலாம். நம்பிக்கையுடையோருக்கு அதுவொரு ஏற்றுக்கொள்ளக்கூடிய பார்வைதான்.

ஆனால் புனைவாக்கச் செயல்பாட்டிற்குள் இக்கதைகளை நாம் விரிக்கும்போது விதியை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு படைப்பிற்குள் இம்மாதிரியான டிராஜிடிக்கு, சோகநாடகத்தன்மைக்கு ஒரு தர்க்கத்தை கண்டடைய வேண்டியிருக்கிறது. மேற்சொன்ன இரண்டுமே மறதி அல்லது விடுபடல் உருவாக்கும் குழப்பம். இந்தத் தன்மைதான் இரண்டிலும் விவரிப்பை ”கதை” யாக மாற்றுவதாகத் தோன்றுகிறது. இருப்பது (presence) என்பதைவிட இன்மை (absence) அல்லது ” இழப்பது“ என்பதில் கதையம்சம் கூடுதலாகவே இருக்கக்கூடும். கதை என்பது ஒரு ”வழக்கத்திலிருந்து விலகும் தன்மை” யுங்கூட என்பது கதை குறித்த என்னுடைய எளிமையான புரிதல்களில் ஒன்று.

மணீந்திரநாத் தன் காதலியை இழந்துவிடுகிறார். யாரிடம்? மிலேச்சப்பெண்ணை தன் மருமகளாக ஏற்க மறுக்கும் தன் தந்தையிடம், இந்த சமூக அமைப்பிடம், இன்னும் இறுக்கம் தளராத அதன் மரபிடம்.எனவே அவர் அவள் நினைவுகளோடு பைத்தியநிலை என்னும் மாற்று உலகிற்குள் வாழ்கிறார். புறவயமான உலகத்தோடு துண்டுபட்ட அகவுலகத்தைக் கொண்டவர்களை நம் சமூகம் பைத்தியமானவர்களாகப் பார்க்கிறது. மணீந்திரநாத்திற்கு இந்த உலகம் ஒரு மறதி. ஒருவேளை தன் காதலியை இழந்த மணீந்திரநாத் பைத்தியமாகாமல் இருந்திருந்தால் அங்கே புனைவு உருவாகுவதில்லை.அங்கே யதார்த்தத்தோடு நிகழும் ஒரு சமரசம் புனைவு அல்லது கதை என்ற பண்பை அழித்திருக்கும்.

No comments: