Jun 26, 2014

ஜாக் குரோக்,ஜே.டி.சாலிஞ்சர் மற்றும் பஷீர்

                                        
                                                                பஷீர்

                                            
                                                                நீல் கேஸடி

                                                
                                                                ஜாக் குரோக்

                                            
                                                            ஜே.டி.சாலிஞ்சர்

1980 ஆம் ஆண்டு மார்க் டேவிட் சேப்மேனால் சுடப்பட்டு ஜான் லெனான் கொல்லப்பட்டார். சுட்டபின் பக்கத்தில் எங்கேயோ அமர்ந்துகொண்டு சேப்மேன் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்திருக்கிறார். அதோடு அந்த நாவலின் முதல் பக்கத்தில் இதுதான் தன் வாக்குமூலம் என்று குறிப்பெழுதி ஹோல்டன் ஹால்பீல்டு என்று கையெழுத்தும் போட்டு வைத்திருந்திருக்கிறார்.அமெரிக்க நாவலாசிரியரான ஜே.டி.சாலிஞ்சர் எழுதிய தி கேட்சர் இன் த ரை நாவல்தான் அது. அந்த நாவலின் மையக்கதாப்பாத்திரம்தான் ஹோல்டன் ஹால்பீல்டு என்ற பதினாறு வயது இளைஞன்.இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1951 இல் இந்த நாவல் வெளியாகியிருந்தாலும் இப்போது வாசிக்கையிலும் மிகச் சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசித்த உணர்வே உண்டானது.

பதின்ம வயதில் ஒவ்வொருவருக்கும் சமூகத்தோடு ஏற்படும் முரண்பாட்டையும் அந்நியத்தன்மையையும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் ஹோல்டன் ஹால்பீல்டூம் உணர்கிறான். அவனைச் சுற்றிய உலகமும் மனிதர்களும் வெகு போலியானவை என்று அவனுக்குத் தோன்றுகிறது. அந்தப் போலித்தன்மையின் மீதான வெறுப்பின் காரணமாக உலகத்தைக் கீழ்க்கண்ணால் பார்க்கும் ஹால்பீல்டின் அலட்சியம் கூடிய குரலில் நாவலைச் சொல்லும் சாலிஞ்சரின் விவரிப்பு உத்தி வெகு அபாரமானதாக இருக்கிறது.

மோசமான தேர்ச்சி காரணமாக ஏற்கனவே வெவ்வேறு பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவிட்ட ஹால்பீல்டு தற்போது படிக்கும் பள்ளியிலிருந்தும் அதே காரணத்திற்காக வெளியேற்றப்படுகிறான்.கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்க இருக்கும் அந்தத் நாட்களின் சனிக்கிழமை இரவொன்றின் அசாதரணமான சூழலில் பள்ளி விடுதியிலிருந்து கிளம்பும் அவன் நியூயார்க்கில் இருக்கும் தன் வீட்டிற்குச் செல்லாமல் வெளியே விடுதியில் ரகசியமாய் அறையெடுத்துத் தங்கிக்கொண்டு ஊரைச் சுற்றுகிறான். அந்த அனுபவங்களாலும் தன் குடும்பம் மற்றும் நண்பர்கள், தோழிகள், பழைய ஆசிரியர் ஆகியோர் குறித்த நினைவுகள் மற்றும் அவர்களுடனான மீள் சந்திப்புகளாலும் இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது. தன் தந்தையும் மூத்த சகோதரனுங்கூட ஒருவிதத்தில் போலித்தனமானவர்கள் என்று நம்பும் ஹால்பீல்டு அவனுடைய தங்கையை மட்டும் தூய்மையானவளாக உணர்கிறான். இறுதியில் தங்கையின் அன்புதான் வீட்டிலிருந்து முழுக்க வெளியேறவிடாமல் அவனைத் தடுத்து நிறுத்துகிறது.

                                                        
மிகச்சரியாகச் சொல்வதென்றால் ஹால்பீல்டு தன் குடும்பத்திலிருந்து, பிறந்துவளர்ந்த இடத்திலிருந்து தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து தொலைந்துபோகவே விரும்புகிறான். எங்கோ அமெரிக்காவின் ஒரு மேற்குநகரத்தில் வெளியே செவிட்டூமையாய் தன்னைக் காட்டிக்கொண்டு பெட்ரோல் போடும் வேலை செய்பவனாகவும் செவிட்டூமையான ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று வாழ்பவனாகவும் கற்பனை செய்துகொள்கிறான். ஹால்பீல்டைப் போலவே நமக்கும் அந்தக் காலகட்டங்களில் விசித்திரமான அல்லது யதார்த்தத்திலிருந்து விலகிய கனவுகள், எண்ணங்கள் இருந்திருக்கும். ஆனால் கூடிய சீக்கிரமே நாம் அமைப்போடும் சமூகத்தோடும் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்கிறவர்களாகவோ அல்லது அமைப்பிற்குள் இருந்துகொண்டு அதற்கு எதிராக போராட வேண்டியவர்களாகவோ இருக்கிறோம். வெகு நுண்ணிய கண்ணிகள் கொண்ட இன்றைய சமூக சூழலில் அதுதான் ஒரு சராசரி மனிதனுக்கு சாத்தியமானதாக இருக்கிறது. இந்த அமைப்போடு ஒட்டமுடியாமல் அதற்கு எதிராக நிற்பவர்களை இந்தச் சமூகம் எதிர்ப்பக்கத்திற்கு தள்ளிவிடுகிறது.அந்த எதிர்ப்பக்கத்தின் திசை நோக்கிய பயணத்திலிருக்கும் ஹோல்டன் ஹால்பீல்டின் மன உணர்வுகளை நுணுக்கமாக விவரித்திருக்கிறது இந்த நாவல்.

                                                    
ஹோல்டன் ஹால்பீல்டைப் போலவே சமீபத்தில் வாசித்த இன்னொரு சுவாரசியமான பாத்திரப்படைப்பு ஜாக் குரோக்கின் ஆன் தி ரோடு நாவலில் வரும் டீன் மொராரிட்டி என்ற பாத்திரம். இந்தக் கதாப்பாத்திரம் குரோக்கின் நண்பரும் அமெரிக்க பீட் தலைமுறையின் முக்கிய ஆளுமையுமான நீல் கேஸடியை அடிப்படையாகக் கொண்டது. சல் பேரடைஸ் என்ற பெயரில் குரோக் இந்த நாவலில் வருகிறார். தனியாகவும் நண்பர்களோடு இணைந்தும் அமெரிக்காவெங்கும் குரோக் சென்ற பல பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரமுள்ள பயண அனுபவங்களின் அடிப்படையிலானது இந்த நாவல். கையில் ஒருசில டாலர்கள், சில சமயம் அதுவுமில்லாமல் போக்குவாகனங்களில் லிப்ட் பெற்றுப் பெற்று பல்லாயிரக்கணக்கான மைல்களை சல் பேரடைஸ் கடக்கிறான். ஆங்காங்கே நகரங்களில் நண்பர்களைச் சந்தித்தல், மூர்க்கமான மதுவிருந்துகள், ஆன்ம பரிசோதனைகள், போதை வஸ்துக்கள், வரைமுறையற்ற புணர்ச்சிகள் என்று ஒருவிதமான நாடோடித்தன்மையும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் தோன்றிய பீட் தலைமுறையின் பிரத்யேக பண்புகளும் பல கதாப்பாத்திரங்களில் விரவியிருக்கின்றன. வாழ்க்கையின் மீதான வெறுப்பு மற்றும் அதன் அபத்தத்தன்மை போன்றவற்றை பயணங்களாலும் கொண்டாட்டத்தின் வழியேயும் சல் பேரடைஸ், டீன் மொராரிட்டி மற்றும் நண்பர்கள் கடக்க முயல்கிறார்கள். ஆலன் ஜின்ஸ்பெர்க், வில்லியம் பெர்ரோஸ், கென் கெஸ்ஸி போன்ற ஒரே தலைமுறையைச் சேர்ந்த குரோக்கின் நண்பர்கள் இந்த நாவலில் வெவ்வேறு பெயர்களில் கதாப்பாத்திரங்களாக உலவுகிறார்கள். குறிப்பாக டீன் மொராரிட்டி பாத்திரத்திற்கு ஒவ்வொரு கணமும் உயிர் பொங்குகிறது. பார்க்கின்ற எல்லாமே அற்புதமாக குதூகலமூட்டக்கூடியதாக அந்தப் பாத்திரத்திற்கு இருக்கிறது. எள்ளவும் சலிப்புணர்வை வெளிப்படுத்தாத பாத்திரம் அது. ஆனால் சல் பேரடைஸ் கதாப்பாத்திரத்தை சற்றே துயரார்ந்ததாக தத்துவச் சிக்கல் கொண்டதாக குரோக் படைத்திருக்கிறார். அனேகமாக அவையெல்லாம் அவருடைய மனப் பிரதிபலிப்புகளாய் இருக்குமென்று நினைக்கிறேன். அந்தப் பயணங்கள் எல்லாம் எதையோ ஒன்றைத் தேடும் தொலைதலாய் இருக்கின்றன.அப்படிப்பட்ட தொலைதலை அடிக்கடி நிகழ்த்திக்கொள்ளும் அலைதல் மனோநிலை வாய்க்கப்பெற்ற மனிதர்கள் உலகெங்கும் இருப்பார்கள் என்றுதான் நம்புகிறேன்.பல்வேறு வரைவுகள்,வெளியீட்டுச் சிக்கல்கள் இவற்றைத் தாண்டித்தான் இந்த நாவல் 1957 இல் வெளியாகியிருந்திருக்கிறது.

சமீப காலமாக ஜான் சீவர்,ஸ்காட் பிட்ஜெரால்டு, ஜேம்ஸ் பால்ட்வின்,வில்லியம் பெர்ரோஸ்,ஜாக் குரோக் போன்ற அமெரிக்க யதார்த்தவாத, பின்நவீனத்துவ எழுத்தாளர்களை வாசிப்பதையும் அவர்களுடைய படைப்புகளைத் தேடித் தொகுப்பதையும் செய்துகொண்டிருக்கிறேன்.ஜேம்ஸ் பால்ட்வினின் ஸோனிஸ் ப்ளூஸ் என்றொரு அற்புதமான சிறுகதை வாசித்தேன்.லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாவல்கள்/சிறுகதைகள் அறிமுகமான அளவிற்கு தமிழ் இலக்கியப்பரப்பில் வட அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் பரவலாக அறிமுகமாகவில்லை என்று தோன்றுகிறது.மொழிபெயர்ப்புகள் சுத்தமாக இல்லை. பாரம்பரியமான பண்பாடு மற்றும் கலாச்சார வேர்களற்று முழுக்கவும் நவீன நுகர்வு மையமானதாக இச்சமூகம் இருப்பதாலா அல்லது வட அமெரிக்க எழுத்து குறித்து நம்மிடையே வேறேதேனும் முன்னூகங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

ஜாக் குரோக்கைப் போலவே வைக்கம் முகம்மது பஷீரும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் அலைந்திருக்கிறார்.குமாரி சி.எஸ்.விஜயம் அவர்களின் மொழிபெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருந்த பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களை சமீபத்தில் மறுவாசிப்பு செய்தேன்.அங்கதம் மற்றும் மெல்லிய பகடியின் வழியே ஆழமான உணர்வுகளை விவரிக்கும் பஷீரின் படைப்பாளுமை நாம் அறிந்ததே. இப்போதெல்லாம் காதல் கதைகளைப் வாசித்தால் அவை புகழ்பெற்ற செவ்வியல் கதைகளாக இருந்தாலுங்கூட எந்த சுவாரசியத்தையும் அளிப்பதில்லை.ஒரு விதமான ’அடப் போங்கடா..” உணர்வுதான் தோன்றுகிறது. இளம்பருவத்துத் தோழியில் முடிவு வெகு டிராமடிக்காக தோன்றினாலும் ஒரு கணம் மஜீத்தின் மீது ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றுவதைத் தவிர்க்க இயல்வதில்லை. பஷீரை வாசிக்கையில் தமிழில் ப்ளாக் ஹியூமர் வகையிலான நாவல்கள் ஏதேனும் வந்திருக்கின்றனவா என்று தேடவேண்டுமென்று தோன்றியது.நமக்கு எப்போதும் உப்பும் காரமும் கொஞ்சம் உறைப்பாகவே இருக்கவேண்டும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாலைமதி இதழில் எஸ்.பாலசுபரமணியன் என்ற நாவலாசிரியர் எழுதிய மயக்காதே மது என்று ஒரு நாவல் வாசித்திருக்கிறேன்.பல்ப் வகை நாவல்தான். இளைஞன் மது, அதே தெருவில் இருக்கும் நாயகி, அவளுடைய தம்பியான சிறுவன் இந்த மூன்று பிரதான கதாப்பாத்திரங்களைக் கொண்ட வெகு ஜாலியான நாவல்.இன்றைக்கு வாசித்தால் அந்த சுவாரசியத்தைத் திரும்ப பெறமுடியுமா என்று தெரியவில்லை.ஆனால் அன்றைக்கு சிறுவனாக அந்த நாவலின் மூலம் பெற்ற வாசிப்பின்பத்தின் சுவடுகள் இன்னும் மறையாமலிருக்கிறது.பல்ப்பாக இருந்தாலும் சரி, தீவிர இலக்கிய எழுத்தாக இருந்தாலும் சரி, பொதுக்கருத்தைப் பொருட்படுத்தாமல் அது பிடித்துப் போவதற்கும் அல்லது பிடிக்காமல் போய்விடுவதற்கும் அந்தரங்கமான காரணங்கள் சில இருக்கக்கூடுமோ?

No comments: