Dec 13, 2017

எஞ்சுதலின் சாட்சியங்கள்

                                                

நீண்டதொரு பரிணாம வளர்ச்சியைக் கொண்ட மனித நாகரீகம் காலச்சகடத்தின் சுழற்சியில் எண்ணற்ற முறை நோய்வாய்ப்பட்டு இருண்டகாலத்தில் புதைந்து கிடந்திருக்கிறது. அழுகிய தன் உடலின் பாகங்களை வெட்டியெறிந்துவிட்டு பின் அதுவே மீண்டுமிருக்கிறது. தான் பின்பற்றிய நீதியையும் அறத்தையும் பரிசீலித்து மாற்றிக்கொண்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பண்படைதல் என்னும் இலக்கை அடைய மானுடம் போராடிக்கொண்டிருக்கிறது.

உலகின் ஆதி மனிதர்களை விட நாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்களா அல்லது நாம் வாழும் காலம் மானுட வரலாற்றில் பொற்காலமா போன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் நம்மால் ஒற்றைப்படையான விடைகளைச் சொல்லிவிட முடியாது. உலக மனிதர்கள் அனைவரும் ஒரு குடைக்குள் திரண்டு வந்துவிட்ட இந்தத் தருணத்தில் மனிதர்களுடைய அடையாளங்களின் மீதான நம்முடைய சகிப்புத்தன்மை குறித்த சுயவிசாரணையின் தேவை பெருகியிருக்கிறது. கூட்டுணர்வின் அடிப்படையில் மனிதன் கண்டடைந்த மொழி, இனம், மதம், அரசு போன்ற நிறுவனங்கள் தம்முடைய இயங்கியலில் கொண்டிருக்கும் வன்முறைகளைப் பற்றியும் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

இருவகைக் குணங்களான நன்மையும் தீமையும் மனிதனின் எலும்பில் எழுதப்பட்டிருக்கின்றன. நம் நன்மைக் குணங்களின் நீட்சிதான் நம் நாகரீகம். மனம் தர்க்கவகைப்பட்ட நீதியிலிருந்து பிறழும்போது ஒவ்வொரு மனிதனும் தன் எலும்பில் எழுதப்பட்டிருக்கும் தீமையுணர்வுகளின் வழியே மிருகநிலையை அடைகிறான். காலங்காலமாக மனிதர்களின் நல்லுணர்ச்சிகளை ஒரு கரிய நிழலாகத் தொடரும் தீமைக் குணங்களுக்கு எதிரான போராட்டமே நாகரீகத்தின் வரலாறாக இருக்கிறது.

மனித வரலாறு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு திசைகள் மாறிப் பயணித்திருக்கிறது. அவற்றை மடைமாற்றியதில் போர்களுக்குப் பிரதான பங்குண்டு. தனிமனித விருப்பு வெறுப்புகள், புவிசார் அரசியல் நோக்கங்கள், அதிகார தேட்டம், பொருளாதார ஆதாயங்கள், பிராந்திய மேலாண்மை, இன அழித்தொழிப்பு மற்றும் விடுதலைப் போராட்டங்கள் எனப் பல காரணங்களுக்காக அவை நடைபெற்றிருக்கின்றன. எந்தக் காரணங்களுக்காக போர்கள் நடைபெற்றிருந்தாலும் அங்கே மனித நாகரீகம் பலியிடப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் குறித்து எத்தனையோ புத்தகங்கள், திரைப்படங்கள், ஆவணங்கள் என்று அதன் வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. மொத்த உலகத்தின் எதிர்கால வரலாற்றையும் மாற்றி அமைத்த அப் போர்க் காலகட்டத்தில் பலியான உயிர்களின் எண்ணிக்கை சுமார் எட்டுக் கோடியாக சொல்லப்படுகிறது. இன அழித்தொழிப்பின் போது நாஜிக்கள் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களையும் சுமார் ஐம்பது லட்சம் எண்ணிக்கையிலான பிறரையும் கொன்றிருக்கிறார்கள்.

எப்பொழுது வேண்டுமானாலும் கொல்லப்பட்டுவிடக்கூடிய, மரணம் கண்முன்னால் நிற்கின்ற அசாதரணமான சூழலில் வாழ்வைத் தக்க வைத்துக்கொள்ளும் வேட்கையோடு அச்சூழலிலிருந்து எஞ்சியிருப்பதற்கான தகவமைப்பை மனிதன் அடையமுயல்வதைக் குறித்துப் பேசும் இரண்டு பிரதிகளை சமீபத்தில் வாசித்தேன். அவை பிரைமோ லெவி எழுதி 1947 ல் வெளிவந்த தன்னனுபவ நூலான Survival in Auschwitz மற்றும் குணா கவியழகன் எழுதி 2015 இல் வெளிவந்த விடமேறிய கனவு நாவல்.

நிச்சயமாக இரு பிரதிகளுக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் இவற்றின் மையங்களில் சில ஒப்புமைகள் இருக்கின்றன. மனித இருப்பிற்கு உயிர்வேட்கையும் சுதந்திர உணர்ச்சியும் எவ்வளவு ஆதாரமான பண்புகளாக இருக்கின்றன என்பதை இவ்விரண்டு நூல்களும் சொல்கின்றன. இரண்டுமே இனப்படுகொலையை பின்புலமாகக் கொண்டவை. மனிதர்களின் சுய அடையாளங்கள் சிதைக்கப்பட்டு விலங்குகளைப் போல் அடைத்து வைக்கப்பட்ட முகாம் சூழலைச் சித்தரிப்பவை. மின்சாரத்தாலும் முட்கம்பிகளாலும் வேலியிடப்பட்டவை. போர்ச்சூழலில் அதிகார வர்க்கத்தின் பொறிமுறைகள் இயங்கும் நுட்பங்கள் குறித்தும் மனித எலும்புகளில் எழுதப்பட்டிருக்கும் தீமையுணர்ச்சிகளின் வெறியாட்டத்தைப் பற்றியும் நமக்குச் சுட்டுபவை.

மனிதகுலத்தின் வரலாற்றை ஒரு நூறு காட்சிகளுக்குள் வகைப்படுத்தச் சொன்னால் கசாப்புக் கடைகளுக்கு ஏற்றிச் செல்லப்படும் மாடுகளைப் போல ரயில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு யூதர்கள் நாஜி வதைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சியை அவற்றில் ஒன்றாக நிச்சயமாகச் சொல்வேன். உழைக்கத் தேவையான உடல் வலுவுள்ளவர்கள் மற்றும் ஏதேனும் தொழிற்பயிற்சியில் சிறப்புத்தகுதிகள் கொண்டவர்கள் எனத் தங்களுக்குப் பயன்படக்கூடியவர்கள் தவிர்த்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவரையும் கேஸ் சேம்பருக்கு நாஜிக்கள் அனுப்பினார்கள். மற்றவர்கள் ஆஸ்விட்சை ஒட்டிய பகுதிகளில் உள்ள உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களிடமிருந்து கடைசித்துகள் உழைப்பு வரை உறிஞ்சப்பட்ட பின் கேஸ் சேம்பருக்கு அனுப்பப்பட்டார்கள். இத்தாலிய யூதரும் வேதியியல் பட்டதாரியுமான பிரைமோ லெவி 1944 பிப்ரவரியிலிருந்து 1945 ஜனவரியில் நேசநாட்டுப்படைகளால் விடுவிக்கப்படும்வரை ஆஸ்விட்சை ஒட்டிய முகாமில் அடைக்கப்பட்டு பூனா(Buna) ரப்பர் தொழிற்சாலைக்கான கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.

யூதர்கள் மட்டுமல்லாமல் நாஜி அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கைதிகள், கொடூரக் குற்றவாளிகள், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட குறுகிய காலத் தண்டனைக் கைதிகள் எனப் பலரும் அங்கே அடைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பிரிவிற்கும் வெவ்வேறு நடத்தை நெறிமுறைகள் இருந்தாகவும் ஒருவருடைய கைகளில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எண்ணைப் பார்த்தாலே அவர் சரித்திரம் தெரிந்துவிடும் வகையில் அந்த எண்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் லெவி சொல்கிறார். எல்லாவற்றையும் வகைப்படுத்தி தரப்படுத்துதலில் (Classification) ஜெர்மானியர்கள் மூர்க்கமான வெறி கொண்டவர்கள் என்றும் முட்டாள்த்தனமான விஷயங்களைக்கூட அவர்கள் இதே ஒழுங்குடன் செய்தார்கள் என்று ஓரிடத்தில் சொல்கிறார் பிரைமோ லெவி.

முகாமுக்கு வெளியேயான சமூக சூழலில் வாழக்கூடிய ஒரு மனிதனின் விதி என்பது அவனுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் விதியோடு பிணைந்தது என்றும் அப்படிப்பட்ட ஒருவன் வீழும்போது அவன் முழுமையாக அழிந்துவிடாத வகையில் மற்றவர்களின் விதிகள் அவனுக்கு ஒரளவு பாதுகாப்பை அளிப்பதாக லெவி கூறுகிறார். ஆனால் முகாமில் ஒருவனுடைய விதி என்பது முழுக்கவும் அவனை மட்டுமே சார்ந்தது. ஏனெனில் எல்லோருடைய விதியும் ஒரே மாதிரியானவை. எவர் வேண்டுமானாலும் எந்தத் தருணத்திலும் ”தேர்ந்தெடுப்பு” செய்யப்பட்டு கேஸ் சேம்பருக்கு அனுப்பப்படலாம்.

ஒரு மாபெரும் உயிரியல் மற்றும் சமூக பரிசோதனைச் சாலை என்று ஆஸ்விட்சைக் குறிப்பிடுகிறார் லெவி. மனிதர்கள் மந்தையாக மாற்றப்பட்டுவிட்ட அந்தச் சூழலில் நாகரீகத்தின் எந்த பண்புகளும் பின்பற்றப்படுவதில்லை. கடுமையான முகாம் விதிமுறைகள், அதீத உழைப்பு, குறைவான உணவு மற்றும் மருத்துவ வசதிகள், உக்கிரமான சீதோஷ்ண நிலை போன்றவற்றால் சித்ரவதைக்கு உள்ளானவர்கள் விரைவில் நம்பிக்கையையும் வாழும் வேட்கையையும் இழந்து ஆவி குலைந்து மரணத்தை அடைவதே அங்கே வழக்கமாக இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தன்னுடைய வாழும் வேட்கையைத் தக்க வைத்துகொள்வதற்கும் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கும் தேவைப்படும் வலிமையான உயிராற்றல் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. வழக்கமான சமநிலைச் சூழலில் மனம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அசாதரணமான சூழலில் இழந்துவிடுவதே பெரும்பாலானோர்க்கு நிகழக்கூடியது. சமூகச் சூழலின் விதிகளும் நடைமுறைகளும் பின்பற்றப்படாத முகாம் சூழலில் எஞ்சியிருப்பதற்கான முனைப்பையும் அதற்கான விதிமுறைகளையும் கற்றுக்கொள்ளாவிட்டால் தடயமற்று அழிந்துபோவதே கதியாக இருந்திருக்கிறது.

வாழவேண்டுமென்ற முனைப்பை உடையவர்களுக்கு முகாமில் ஒரு இயங்குமுறை இருந்திருக்கிறது. ப்ரெட் மற்றும் சூப் ஆகியவையே பிரதான உணவுகள். ஒரு முகாம்வாசி சம்பாதித்துக் கொள்ளவேண்டிய பொருட்களுக்கு இவைதான் பண்டமாற்றாக இருந்திருக்கின்றன. முகாமுக்கு வெளியே இருக்கக்கூடிய குடிமக்களுடன் தொடர்புகளை ஸ்தாபிப்பது, வெளியிலிருந்து பொருட்களை முகாமுக்குள் கொண்டுவருவது, ஒரு அணியாக செயல்படுவது, களவுகொடுக்காமல் தன்னுடைய பொருட்களை காத்துக்கொள்வது, ஒரளவிற்கு நல்ல ஷீவை அடைவது, வரிசையில் எந்த இடத்தில் நின்றால் ஓரளவு கெட்டியான சூப் கிடைக்குமென்பதை யூகிப்பது, கடினமான வேலைகளுக்குச் சிக்காமலிருப்பது, மருத்துவமனையில் நுழைவதற்கு அனுமதி பெறுவது, கேஸ் சேம்பருக்கான ”தேர்ந்தெடுப்பு”களிலிருந்து தப்புவது என உயிரைக் காத்துக்கொள்வதற்கான பல உத்திகள் இவர்களால் பயிலப்பட்டிருக்கின்றன.

ஒரு மோசமான ஷீ கால்களில் புண்களையும் அதன் மூலம் வேலை செய்ய முடியாத சூழலையும் ஏற்படுத்தி மரணத்தை அழைத்துவந்துவிடுமென லெவி கூறுகிறார். ஸ்பூன்கள், சிறிய ஒயர்கள், துணிகளின் கிழிசலான கந்தைகள், ஊசி நூல்கள் என மிகச்சிறிய பொருட்களெல்லாம் உயிரைக் காத்து வைப்பதில் பெரிய பங்காற்றியிருப்பதை உணர முடிகிறது. கடுமையான உடல் உழைப்பு சர்வநிச்சயமாக மரணத்தைக் பெரும்பாலோர்க்கு கொண்டுவந்ததென்று சொல்லும் லெவி அவருடைய வேதியியல் அறிவால் சிறப்புத் தகுதியுடையவராக அடையாளம் காணப்பட்டு ஆய்வகத்தில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டது உடல் உழைப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய தருணத்தில் உடல்நலக்குறைவால் லெவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாஜிக்களின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகி தொலைவில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. நோயாளிகளையும் நடக்க இயலாதவர்களையும் அங்கேயே விட்டுவிட்டு நாஜிக்கள் பின்வாங்குகிறார்கள். ரஷ்யர்கள் பத்து நாட்களுக்குப் பின்னரே வந்துசேர்கிறார்கள். அந்த இடைப்பட்ட பத்து நாட்களில் உயிர்த்திருப்பதற்கான போராட்டம் முந்தைய நாட்களை விட கடுமையானதாக இருக்கிறது. எங்கெங்கும் பிணங்கள். கடும் குளிர். சாவின் வெறியாட்டம். ஏற்கனவே சூறையாடப்பட்டிருக்கும் முகாமில் உணவுப் பொருட்களையும் குளிரைத் தாங்குவதற்கான ஆடைகளையும் தேடி லெவியும் அவருடைய சகநோயாளிகள் சிலரும் அலைகிறார்கள். கிடைத்த உருளைக் கிழங்குகளை வெவ்வேறு பக்குவத்தில் சமைத்துண்டு உயிர் பிழைக்கிறார்கள். ”பத்து நாட்களின் கதை” என்ற இந்த நூலின் கடைசி அத்தியாயம் மானுடத்தின் துன்பியல் வரலாற்றை குறியீடாக்கும் வீரியத்தைக் கொண்டிருக்கிறது.

    
                                                    

முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் பேரழிவிற்குப் பின் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு புணர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் போராளிகளின் வாழ்க்கையையும் அவர்களின் சஞ்சலங்களையும் மன அழுத்தத்தையும் ருத்திரன் என்ற போராளி பாத்திரத்தின் வழியே சொல்கிறது குணா கவியழகனின் விடமேறிய கனவு நாவல். இயக்கத்தின் தோல்விக்குப் பின் அதற்கான காரணங்கள் இன்னதென்று இன்னும் முழுமையாக விளங்காத தருணத்தில், வீழ்த்தப்பட்ட போராட்டத்தை இனி எப்போதுமே உயிர்த்தெழ முடியாதவகையில் வேரறுக்க நினைக்கும் ராணுவம் புணர்வாழ்வு முகாமென்ற போர்வையில் போராளிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்துகிறது. புணர்வாழ்வு முகாமிலும் மரணம் அவர்களை நிழலாகத் தொடர்கிறது.

விசாரணையின் போது மூர்க்கமான தாக்குதலால் ருத்திரன் மரணத்தை மிக நெருக்கமாக பார்த்துவிட்டு மீள்கிறான். இங்கே ஒரு முரண் என்னவென்றால் அவன் எப்போது வேண்டுமானால் மரணத்தைத் தேடிக்கொள்ளும் வகையில் ஒரு சிறிய சயனைட் குப்பியை தாடைக்குள்ளும் பிறகு ஆசனவாயிலும் மறைத்து வைத்திருக்கிறான். போரிலேயே மரித்திருக்கலாமென்ற கழிவிரக்கத்தாலும் வாழ்கின்ற வேட்கையாலும் அலைகழிக்கப்பட்டு வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஊடாடும் அவன் அக்குப்பியை இழந்துவிடும்போது அவன் மனத் தேட்டம் முழுக்கவும் வாழ்வின் பக்கத்தில் வந்துவிட்டதென்பதை அவ்விழப்பு குறியீடாக்குகிறது.

போராளிகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுவிட ராணுவத்தின் விசாரணை இயங்குமுறை ஆசைகாட்டுதல், அச்சமூட்டுதல் எனப் பலவாறான யுக்திகளைக் கையாள்கிறது. போருக்குப் பிந்தைய சூழலில் தோல்வியின் அழுத்தத்தாலும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையினாலும் குலைந்திருக்கும் போராளிகளை சாதாரண மனிதர்களாக மாற்றி இயல்பான மனித பலவீனங்களைத் தனக்குச் சாதாகமாக பயன்படுத்திக்கொள்கிறது. பலர் அதற்குப் பலியாகும்போது ருத்திரனைப் போன்ற சிலர் தாக்குப்பிடித்து நிற்கிறார்கள். பலர் காட்டிக்கொடுப்பவர்களாகவும் கழுவிகளாகவும் மாறுகிறார்கள். யாராவது ஒரு போராளி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்பி வந்தால் காட்டிக் கொடுத்திருப்பானோ என்ற மற்றவர்களின் சந்தேக நிழல் தன் மேல் விழுவதை அவர்களால் தடுக்க முடிவதில்லை.

புணர்வாழ்வு முகாம் என்று சொல்லப்பட்டாலும் அந்தச் சூழல் வதை முகாமுக்கு நிகரானதுதான். உடல் மீதான வன்முறை, மருத்துவ வசதிகள் மறுக்கப்படுதல், நெருக்கடியும் மூட்டைப்பூச்சிகளும் நிரம்பிய காரை பாவாத அறைகள், இயற்கை உபாதைகளை கழிக்க போதுமான வசதிகளின்மை என்றிருக்கும் சூழ்நிலையில் காலப்போக்கில் சில எளிய வசதிகள் கிடைக்கின்றன. போராளிகள் உறவுகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவது பலருக்கு ஆசிர்வதமாக இருக்கையில் சிலருக்கு சாபமாக மாறி அவர்களின் வாதையைப் பெருக்குகிறது.

ஆபத்தின் முன்னிலையில் குழுவாக இயங்குதலே அதைக் கடப்பதற்கு மிகச் சிறந்த வழி. ஆஸ்விட்சில் கடைசிப் பத்து நாட்களில் லெவியும் அவருடன் மருத்துவமனையில் இருந்த சார்லஸ் உள்ளிட்ட சிலரும் குழுவாக இயங்கியது அவர்கள் உயிருடன் எஞ்சுவதற்கு இன்னொரு முக்கியமான காரணமாக அமைந்தது. விடமேறிய கனவில் ருத்திரன், சஞ்சயன் மற்றும் நண்பர்கள் உயிருடன் மீள்வதற்கும் அதுவே காரணமாக அமைகிறது. ருத்திரனின் அகவயத்தில் தொடங்கி போராளிகளின் புணர்வாழ்வு முகாம் வாழ்க்கை மற்றும் போருக்குப் பிந்தைய தமிழ் மக்களின் பாடுகளைப் பேசுவதாக விரிந்து எதிர்காலம் குறித்த கேள்விக்குறியோடு மீண்டும் ருத்திரனின் அகவயத்தில் முடிவுபெறுகிறது நாவல்.

குணா கவியழகனின் நடை மிக எளிமையானது மற்றும் நேரிடையானது. விரக்தியினால் வெளிப்படும் பகடியும் மரணத்தை அருகில் பார்த்த ஒரு மனிதனின் தத்துவார்த்த விசாரமும் ஆங்காங்கே விரவியிருப்பதைக் கவனிக்க முடிகிறது. ஆழமான விசாரணைகளுக்கும் நுட்பமாக விரிவாக்குவதற்கும் வாய்ப்புள்ள பகுதிகள் பல மொழியின் போதாமையினாலோ அல்லது பிற காரணங்களாலோ புறவயமான சித்தரிப்போடு நின்றுவிடுகின்றன. ஆயினும் மானுடப் பேரழிவின் சமகால வரலாற்றை ஆவணப்படுத்தியிருப்பதால் குறைவுபட்டிருக்கும் கலையை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை. ரத்தத்தால் எழுதபட்ட எதுவும் தன்னியல்பாகவே கலையாகிவிடுகிறது.

நன்றி: கல்குதிரை 26, கார்கால இதழ்

No comments: