Sep 1, 2010

பரிசு

எப்போதும் பயணத்திலிருக்கும்
நண்பனின் மகளுக்கு
அவன் ஊரிலில்லாத
நாளில் வரும்
ஆறாவது பிறந்த நாளை
சின்னதாய் கொண்டாடும்
கருக்கல் மாலையில்
சிரிப்பாக நிரம்பி
தளும்புகிறாள் குழந்தை
யாவரும் பரிசுகளோடு வந்திருக்கையில்
வழியின்றி
வலியோடும் வெறுங்கையோடும் போய்விட்டவன்
பிரியத்தை எப்படி செலவின்றி
பரிசாக மாற்றுவதென்று குழம்புகையில்
எனக்கென்ன வாங்கினாயென்று
கேட்கும் அவள் கன்னத்தில்
ஒரு முத்தம் வைத்து
இதுதானென்றான்...
அசங்காமல் அதை கையிலெடுத்தோடி
அறிவியல் புத்தகத்தின்
நடுப்பக்க மயிற்தோகைக்குள்
வைத்துவிட்டுச் சிரித்தவளின்
புன்னகையில் பெருகிய நதிக்குள்
அவன் வெகு சந்தோஷமாய்
ஒரு கூழாங்கல்லாய் மாறிப்போனான்

No comments: