தினமும் ஓயாமல் புதிய கால்கள் முளைத்துக்கொண்டிருக்கும் வேட்டை மிருகத்தின் கண்களுக்கு காருண்யத்தின் சிறு நிழல்கூட தென்படுவேதேயில்லை.திசைகள் முயங்கிவிட்ட பரப்பில் நாவிலிருந்து சலமாக வெறி ஒழுக அலையும் கானகத்தில் வேறுயிர் ஏதுமில்லை.எதையேனும் தின்றாக வேண்டும்.எதிரில் கிடப்பவையோ கருமை அடர்ந்த பாறைகள்.தீண்டும் நாவில் வெயிலின் வெக்கையை தசை கொப்புளமாக்கிப் பார்க்கையில் மிருகம் எழுப்பும் ஊமைக் குமுறலை பட்சிகள் வினோதம் கொண்டு கேட்கின்றன.
இரவெங்கும் கனவுகள் அர்த்தம் புரியா வண்ணம் வந்துவிடுகின்றன. நள்ளிரவில் விழித்து விடும்போதுதான் விடிகாலை இன்னும் எவ்வளவு தூரமென்று தெரிகிறது.இருளின் வெளிறிய நிறம் படிந்த சுவர்கள் தம்மை திரையாக மாற்றிக்கொள்ளும்போது அங்கே கனவிலிருந்து குதித்த உயிர்கள் பிம்பங்களாக அலையத் துவங்குகின்றது. இப்போதும் சுவரில் திரிந்துகொண்டிருக்கிறது ஒன்று.
இருதயம் முழுக்க துளைகள் விழுந்திருப்பதை தற்செயலாக கண்டுபிடித்தான்.எட்டிப் பார்க்க முயலும்போது தன் ஆழத்தை மறைத்துக்கொண்டு இருளைப் பூசிக்கொண்டு துளைகள் அவனை வெருட்டின.அங்கிருந்து மிக மெலிதாய் கேட்கும் பல வல்லூறுகளின் குரலும் ஒரு சர்ப்பம் நில்லாமல் அலைந்து கொண்டிருக்கும் சரசரப்பும்.இந்த மிருகமும் ஏதேனும் ஒரு துளையிலிருந்துதான் தப்பித்து தன் கனவிலேறி இப்போது சுவருக்குள் குதித்திருக்குமோவெனத் தோன்றியது.அந்தத் துளைகளை எப்படி அடைப்பதென்று குழப்பமடைந்தவன் எதை எதையோ கொட்டிப்பார்த்தான்.எதற்கும் மசியாமல் துளைகளாகவே அவை இன்னும் இருக்கின்றன.ஏதேனும் ஒரு துளைக்குள் குதித்து தற்கொலை செய்துகொள்ள நினைத்தவன் இருதயத்தின் மேல் புல்வெளியைப் போல் மகிழ்ச்சி நிறைந்திருந்த காலத்தை நினைத்து பின்னகர்ந்து விடுகின்றான்.அங்கே எப்போதும் சலசலத்து ஓடிக்கொண்டிருந்த ஓடையின் நீர்க்கண் எங்கே மறைந்தது? இப்போது உணர முடிவதெல்லாம் துளைகளிலிருந்து பெருஞ்சத்தத்துடன் எழும் வறண்ட காற்றைத்தான்.அதிலிருந்து தூசிகளைப் போல மணற்துகள்கள் வடிகையில் பெரும்பயம் பீடித்தது.அடுத்த முறை ஒட்டகங்கள் கூட வந்து விழக்கூடுமெனத் தோன்றியது.
பற்றவைத்த சிகரெட்டிலிருந்து ஒரு மாயத்தடம் உடலுக்குள் நீண்டது. நிகோடின் தேவதைகள் தமது சிறகுகளில் ஏந்திப்போகும் குறுவெம்மை நரம்புகளுக்குள் குதித்தபோது சாவின் துர் மந்திரங்கள் எதிரொலிக்கும் ஓசை சற்றே தேய்வதாக நம்பினான். நிக்கோடின் தேவதைகள் தம் கண்களிருந்து நீரள்ளி இருதயத்தின் மேல் தெளிக்கையில் அவன் முன்னுணர்ந்த பள்ளங்கள் நிரம்புவது தெரிந்தது.
உடலின் மர்மமான பிரதேசமெல்லாம் உள் ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.மாய நிலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நதி கண்களுக்கு தென்படுவதேயில்ல.நதியில் ஒரு மீனிருந்திருந்தாலவது அதனிடம் கேட்டு சிறு ரகசியம் ஒன்றையாவது கண்டுபிடித்திருப்பான். நதியில் குதித்துவிட்டால் எல்லா மறைபொருளையும் கண்டுவிடலாமென நினைத்தாலும் ஓருயிரும் இல்லாத செவ்வண்ண நதியை காணும்போது ரகசியத்தைக் கண்டும் ஒன்றுமாகப்போவதில்லையென்று நதியின் எதிர்திசையில் நடக்கத் துவங்கி விடுகிறான்.
கபாலமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது கூகைகளின் அலறல்.அது பூங்காவனமாக இருந்ததின் தடயங்கள் அழிந்தேவிட்டன.அங்கே ஒலித்துக்கொண்டிருப்பதெல்லாம் பயத்தின், நம்பிக்கையின்மையின் வேட்கையின் ஓலக்குரல்கள்.சாமந்திப் பூவும் அதன் வாசனையும் கபாலத்தில் நிரம்பியிருந்த போது ஒளித்துகிலைப் போல் சுமையற்று இருந்தான். பூக்கள் வாடும்போது படியும் கருமை மறையாமல் தேங்கிவிட்ட நாளிலிருந்து அவை தம்மை விதைகளுக்குள் புதைத்துக்கொண்டுவிட்டது.விதைகளோ வெளியேறாமையே துயரமின்மையென்று புலன்களை அறுத்துக்கொண்டுவிட்டன.திசைகளை மறந்துவிட்ட மேகங்களோ எங்கோ வடதிசையில் அலைந்துகொண்டிருக்கின்றது.ஒரு உயிர்ப்பை பெற ஆயிரம் கண்ணிகள் வேண்டியிருக்கையில் அவை பிரபஞ்சத்தின் எதிரெதிர் முனைகளில் தம் தனிமையில் எரிந்து கொண்டிருக்கின்றன.
கதவைத் திறக்காமல் ஜன்னலின் வழி குதிப்பவன் முன் ஒளி நிறைந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நகராமல் நின்று வெறிக்கிறான்.வெளியே சிறையாக மாறிவிடும் போது தன் அறையின் நீள அகலம் தன் கால்கள் அளக்கக்கூடிய பரப்பை விட பெரிதாக இருப்பதை அறிந்துகொண்டான்.திரும்பவும் ஜன்னலின் வழியே உள்ளே குதித்தவன் மல்லாக்க படுத்து அறையின் வெண்ணிற மேற்கூரையை வெறிக்கும்போது அங்கே மெல்ல புலப்படுகிறார்கள் சிறகுகளை போல் துகில் அலைவு கொண்ட பெண்கள்.படக்கென்று பக்கவாட்டுச் சுவரை பார்க்க முன்னம் கனவிலிருந்து குதித்த மிருகம் ஒய்யாரமாய் படுத்துக்கொண்டு இவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது.
திரும்பவும் மேலே பார்க்கிறான. பெண்கள் திரண்டு திரண்டு ஒருத்தி மட்டும் இருக்கிறாள் இப்போது.அவள் இன்னும் கண் திறக்காத சிலையைப் போலிருக்கிறாள்.இரண்டு கைகளையும் அகல விரித்து வா வா வென்று யாசிக்க அவள் மெல்ல கண் திறக்கிறாள்.அது ஒரு பச்சிளங்குழந்தையின் முதல் கண் திறத்தலைப் போலிருக்க திடுக்கிடுகிறான்.உடலின் அங்கங்கள் திமிறி எழுந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் பிரயத்தினத்திலிருக்கையில் உடலின் கண்ணீராய் அரும்பும் வியர்வை ஒழுகத்துவங்குகிறது.இவன் இன்னும் நாக்குழறலாய் வா வா என்று அழைக்க ஒரு புன்னகையோடு அவள் உடல் மெல்ல மெல்ல மிதந்தவாறே கீழே இறங்கத் துவங்குகிறது.அவளை சுற்றி கூந்தல் முடிகள் ஒவ்வொன்றும் சர்ப்பங்களாய் அலைந்து கொண்டிருந்தன.
உடல் எந்த அசைவுமற்றிருந்தது. அவள் மிக நிதானமாக மிதந்திறங்கிக்கொண்டிருந்தாள்.அவளிடமிருந்து புகையைப் போல் எழும் வசியமூட்டமும் வாசனையை அப்போதுதான் அவன் உணர்ந்தான்.அது அவ்வப்போது தன் உடலிலிருந்து எழும் காமத்தின் வீச்சத்திற்கு முற்றிலும் வேறானதாக இருந்தது.அவளின் மினுங்கும் கரு நிறம் ஒரு அதிசயமாக இருந்தது.அவன் கைகளுக்கு எட்டியும் எட்டாமலுமான உயரத்தில் மிதந்துகொண்டே அவனை உற்றுப்பார்த்தாள்.
இவன் கைகளை உயர்த்தி அவளை ஆரத்தழுவ நினைத்தபோது கரங்கள் எழும்ப மறுத்ததன.அசைக்க முடியாத உடலில் அவனது இரு கண்கள் மட்டும் நிலை கொள்ளாமல் இடவலம் அலைந்துகொண்டிருந்தன.அவனது தவிப்பைக் கண்டவள் ஓசையின்றி சிரித்தாள்.
“ நீ விதியின் மாறாத நிகழ்வினால் கட்டப்பட்டிருக்கிறாய். எதைக் கண்டாலும் அதை துய்க்க முடியாமல் துயர்கொள்ள வேண்டுமென்பதும் நள்ளிரவுகளில் பேயைப் போல் அலைய வேண்டுமென்பதும் உன் விதிரேகையில் எழுதப்பட்டிருக்கிறது. உன் வேட்கை எரிவது துயரென்றாலும் என்னால் எதுவும் செய்ய இயலாது” .ஏதும் பேசாமல் ஒருகணம் அவளை வெறித்தவன் கண்களில் தேங்கிய விஷம் அவளை நடுக்கமுறச் செய்தது.
“எல்லா குளிரிலிருந்து என்னை காக்கும் உன் ஸ்தனங்களும் எல்லா வெக்கையிலிருந்து என்னைக் காக்கும் உன் யோனியும் இதோ..என் கண்ணெதிரே மலர்ந்து கிடந்தாலும் இப்போது நான் உன்னிடம் யாசிப்பது ஓரே ஒரு முத்தம் மட்டுமே..அதற்கே என் தாபம் எரிகிறது.அவைகளால் என் இருதயத்திற்குள் விழுந்து விட்ட துளைகளை அடைக்க முடியாதென தெரியும்.ஆனால் உன்னுடைய ஒரு முத்தம் என்னை ஆற்றுப்படுத்தி சலனங்களற்ற துறவின் படுக்கை விரிப்பில் குழந்தையைப் போல் கிடத்திவிட முடியும்.தயவு செய்து ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டுப் போ”
“ஸ்தனங்களின் விலையை விட முத்தங்களின் விலை அதிகம் தோழனே..முத்தங்களின் அரசியல் பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டும்” சொன்னவளின் கனிந்த பார்வையில் ஒரிழையாக மெல்லிய துயரம் கசிந்தது.அவன் மெளனமாக அவளை பார்த்துக்கொண்டிருக்கையில் மெல்லக் கீழிறிங்கிய அவளின் வலதுகரம் அவனை ஆதுரமாக வருடி மீண்டது.உடலை அசைக்க முயன்றவனின் பிரயத்தனங்களெல்லாம் வீணானது.
மறுநொடிகளில் அவன் பார்த்துக்கொண்டேயிருக்க அவள் உடல் புகையைப் போல் கலைந்தது.மூடித்திறந்த விழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நிறம் ஒன்றாகவே இருந்தது.மரணத்திற்கு பிந்தைய கணங்களின் முன் நினைவாக காலம் மாறிவிட மேற்சுவரை பார்த்தான். ஒட்டியிருந்த பல்லியின் தலை மட்டும் கீழ் நீண்டிருந்தது.
No comments:
Post a Comment