Dec 7, 2011

கதை

வண்ண சித்திரப்படங்கள் நிறைந்த
புத்தகம் காட்டி
கதை சொல்லிக்கொண்டிருந்தேன்
குழந்தைக்கு

அவள் கண்வெளியில்
கதையொரு உலகமாய் விரிகையில்
பாத்திரங்களின் பெயர்களுக்கு
பழகி விட்டிருந்தாள்

பக்கங்கள் புரள
கதையின் உயிர்ச்சரடை பிடித்துவிட்டவள்
வெகு எளிதில் திறந்தாள்
யூகங்களின் கதவுகளை

உச்சமாய்
தன்னையும் என்னையும்
கதாபாத்திரங்களாய் நுழைத்தாள்

உக்கிர வாள்சண்டையில்
கொடிய தானியேல்
என் கரங்களை வெட்டுகையில்
பயத்தில் அழத்துவங்கியவளை தேற்ற
வெளிவர வேண்டியதாயிற்று இருவரும்

அவள் உறங்கிவிட்ட பின்
கதைக்குள் நுழைந்தவன்
வாளை பொறுக்கிக்கொண்டு
நடக்கத் துவங்கினேன்
தானியேலை தேடி

No comments: