Dec 7, 2011

கள்ளன்

தோட்டத்தின் மேற்கு வேலியிலிருந்த கடவைத் திறந்துகொண்டு அவன் திரும்புகையில் மணி எட்டரை இருக்கும்.இன்னும் லேசாக மூடுபனி இருந்தது.களை வெட்டக் கொத்து கேட்டிருந்த வடக்கால மச்சானிடம் போய்க் கொடுத்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தான்.வாயில் குடித்த திருட்டுப்பீடி மெலிதாக நாறியது. மேகோட்டு வேலியை ஒட்டியே நடந்தான்.தோட்டத்தில் எந்த மூலையில் எத்தனை வேப்பங்கன்றுகள் எத்தனை மரங்கள் என்பது கரதல பாடம்.ஆளுயரம் வளர்ந்திருந்த ஒரு கொம்பிலிருந்து பற்குச்சி முறித்து மென்றுகொண்டே வரப்பில் நடந்தான்.செருப்பிலும் பாதத்திலும் பனியும் மண்ணும் கலந்து ஒருவிதமான குளிர்ச்சி பரவியிருந்தது.

கிணற்றடிக்கு வருகையில் மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது.கிணற்று மேட்டிலிருந்து கெழவரத்துப் பள்ளத்தை எட்டிப் பார்த்தான். தம்பி பொகீலைக்காட்டின் வடகோட்டில் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்தான்.அம்மாவும் அப்பாவும் தெக்கோட்டில் பொகீலைச்செடிக்கு சிம்பு முறித்துக்கொண்டிருந்தார்கள்.தற்செயலாக தெற்கே திரும்பி சாளையை பார்த்தவன் கதவுகள் விரியத் திறந்திருப்பதைக் கண்டான்.யாரோ கதவின் வழியாக நடந்து போனது போல் தெரிய பற்குச்சியை வீசி எறிந்து விட்டு வேகமாக தெற்கே சாளைக்கு ஓடினான்.

வாசலை அடையவும் இவன் வயதொத்த அவன் வெளியே வேகமாக வரவும் சரியாக இருந்தது.சட்டென்று பதற்றத்தில் உடல் மெலிதாக நடுங்கியது.இவனைப் பார்த்ததும் அவன் செய்வதறியாமல் திகைத்து நின்றான்.பாய்ந்து சட்டையை இழுத்துப் பிடிக்க அவன் திமிறினான்.கைகளை இறுக்கி முறுக்கிகொண்டே கிழக்கே பார்த்துக் கத்தினான்.

“அப்பா..திருடன்…சீக்கிரம் ஒடியாங்க..” நிமிர்ந்த நொடியில் அப்பா பொகீலைக் காட்டுக்குள் ஓடி வந்துகொண்டிருந்தார். இவன் சொன்னைதைக் கேட்டவன் அதிர்ந்த பரிதாபமான முகத்துடன் தளர்வாக திமிறிக்கொண்டிருந்தான்.அவன் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசாதது இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.நெருங்கிய அப்பா அவனைப் பளாரென அறைந்தார்.இவன் கையிலிருந்து நழுவி அவன் சுருண்டு விழுந்தான்.எட்டி அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கி மறுபடியும் அவனை அறைய அவன் கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது.

“அப்பா..அடிக்காதீங்க..இருங்க..என்னனு கேக்கலாம்” இவன் பலகீனமான குரலில் முனகியதை அப்பா பொருட்படுத்தவில்லை.

“போடா சேகர்..சாளைக்குள்ள போய் சட்டைல எவ்வளவு பணம் இருக்குதுனு பாரு..அப்படியே பொட்டிய நீக்கிப் பாரு” இவன் சாளைக்குள் போகையில் அம்மா வேகமாக வருவதைப் பார்த்தான்.தெற்குச்சுவரில் மாட்டியிருந்த ஹேங்கரில் இவனது நீலப்பேண்ட சீருடைக்குப் பக்கத்திலிருந்த அப்பாவின் வெள்ளைச் சட்டை ஜோப்புகளை தடவிப்பார்த்தான்.எதிலும் பணம் இல்லை.மேவரத்து வீட்டின் வடமேற்கு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று பெட்டிகளில் அவசர அவசரமாக நடுப்பொட்டியைத் திறந்தான்.அப்பாவின் கல்யாணச் சட்டை மற்றும் சில வெள்ளை வேட்டிகளைத் தூக்கிப் பார்க்க அடியே பணம் இருந்தது.அவசர அவசரமாக எண்ணிப் பார்த்தான்.ஐயாயிரம் சில்லறை இருந்தது.

இவன் சாளைக்கு வெளியே வருகையில் பனி முற்றிலும் விலகியிருந்தது.அப்பா அவனை சாளைக்கு கெழவரத்தில் இருந்த ஊஞ்சள் மரத்தில் வடக்கயிற்றால் இறுக்கி கட்டியிருந்தார்.அவன் கைகளும் கால்களும் மரத்தோடு சேர்த்து இறுக்கிக் கட்டியிருக்க அவன் தலையைக் குனிந்து கேவிக்கொண்டிருந்தான்.அவன் கடைவாயோரம் மெலிதாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.இவன் நெருங்கிப் போகையில் அப்பாவின் கையில் சில ரூபாய் நோட்டுகள் இருந்தன.

“ஏண்டா சேகரு..பாத்தீயா?”

“பொட்டில அப்படியே இருக்குதுங்கப்பா…ஆசாரத்தல இருந்த சட்டையில பணம் ஒண்ணுமில்லீங்க”

“இந்த திருட்டு நாயி சட்டைல இருந்த பணத்தை எடுத்துருக்கறான்.. நல்ல நேரம் பாத்து சத்தம் போட்டே” சொன்ன அப்பா அவனைத் திரும்பவும் அறைந்தார்.இவனுக்குப் பாவமாக இருந்தது.அம்மா அப்பாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“இருங்க..சும்மா போட்டு அடிச்சா என்னாவப்போவுது…யாரு பெத்த புள்ளையோ…” அம்மா சொல்லி முடிக்க்கையில் இவனும் சொன்னான்.

“அப்பா..பாவங்க..இருங்க என்னனு கேக்கலாம்”

“கேணத்தனமா ரண்டு பேரும் ஒளராதீங்க..இவனெல்லாம் பல திருட்டுப் பண்ணுவனா இருக்கும்…பணம் போயிருந்தா என்ன பண்றது?” அப்பா சொல்லிக்கொண்டிருக்கையில் தம்பி மோட்டாரை நிறுத்திவிட்டு மண்வெட்டியோடு வந்து கொண்டிருந்தான்.

“என்னுங்கப்பா..என்னாச்சு?”

”திருட்டுப்பய… ஆளு இல்லாத நேரத்துல சாளைக்குள்ள பூந்து பணத்தை எடுத்துறாக்கறாண்டா” அப்பா சொன்னதைக் கேட்ட தம்பி பல்லை வெருவிக்கொண்டு மண்வெட்டியின் பிடியால் அவனை அடிக்கப்போனான்.எட்டி தம்பியை இழுத்துப் பிடித்தான்.

“வுடறா..பாவம்..அதான் அழுவறானுல்ல” இவன் சொன்னதைக் கேட்காமல் திமிறிக்கொண்டு போன தம்பி மரத்தோடு சேர்த்து அவனை எட்டி உதைக்க அவன் வலிதாளாமல் பெருங்குரலெடுத்து அழுதான்.

அவன் வெளிறிய சட்டையும் பேண்ட்டும் போட்டிருந்தான். நல்ல கறுப்பில் ஒடிசலான தேகம்.அவன் உடம்பில் ஊஞ்சள் மரத்திலிருந்த சுளக்கைகளும் கட்டெறும்புகளும் ஊற ஆரம்பித்திருந்தன.அவனுக்கு தன் வயதுதான்.. பதினேழு பதினெட்டு இருக்குமென நினைத்தான்.

அப்பா அவன் தலைமுடியைக் கொத்தாக பிடித்து தலையை நிமிர்த்தினார்.

“யார்றா நீ? உம் பேரென்ன? எந்த ஊரு நீ?”

அவன் தலையைக் குனிந்து கொண்டு இன்னும் கேவிக்கொண்டிருந்தான்.அப்பா மறுபடியும் கையை ஓங்கிக்கொண்டு அடிக்கப்போனார்.

“அய்யா அடிக்காதீங்க…ரொம்ப வலிக்குது, எம்பேரு கணேசன் அய்யா..எனக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை அய்யா..ஊருல மளிகைக்கடைல வேலை பாத்துக்கிட்டிருந்தேன்..எனக்கு அய்யாவும் அம்மாவும் இல்ல..அண்ணன் வீட்டிலதான் இருந்தேன்…அண்ணி ரொம்ப மோசமய்யா..சம்பளப் பணம் பூரா வாங்கிட்டு சோறு கூட ஒழுங்கா போடாது..அதான்யா…திருப்பூர் போய் ஏதாவது வேலை செஞ்சு பொழச்சுக்கலாமுனு வந்தேன்யா..தாராபுரம் வரைக்கும் வந்துட்டேன்..கைல வச்சிருந்த காசு தீந்துபோச்சய்யா..அங்கிருந்து நடந்தே வந்தேன்..ரொம்ப பசியாயிருந்தது…மெயின் ரோட்டுல இருந்து அந்த வாய்க்கா பாதை வழியா எதாவது வீடு இருக்குமானு பாத்துக்கிட்டே வந்தேன்யா..எனக்கு வழி குழம்பிப் போச்சுயா..சுத்தி சுத்தி வந்த பாதைல இங்க வந்து சேர்ந்துட்டேன் அய்யா..சத்தியமா நம்புங்கய்யா நான் திருடனலீங்க…” அவன் கேவிக் கேவி அழுதுகொண்டே சொன்னான்

“நல்லா கதை உடறான்…மூஞ்சியப் பாரு…அப்படியே திருட்டுக்களை தெரியுது” தம்பி சொன்னான்.

“அப்பறேண்டா பணத்தை எடுத்தே?”

“தப்புத்தாங்கய்யா…ஒரு நிமிசம் யோசிக்காம எடுத்துட்டேன்..இந்தக் காச வச்சு திருப்பூரு போயிடலாமுனு”

அம்மா சாளைக்குள் போனாள்.கணேசன் மெதுவாக நிமிர்ந்து இறைஞ்சும் குரலில் அப்பாவிடம் கேட்டான்.

“அய்யா..அவுத்துவிடுங்கய்யா…ரொம்ப வலிக்குதுங்கய்யா..எறும்பு கடிக்குது ரொம்ப வலிக்குதுங்கய்யா”

“உன்னய அவுத்துவுடோணுமா…இர்றா உன்னக் கொண்டு போயி போலிஸ் ஸ்டேசனல வுடறேன்..உன்னை எல்லாம் அங்க வச்சு லாடம் கட்டுனாத்தான் சரியா வரும். நீ திருட வந்தியா இல்ல வேவு பாக்க வந்தீயானு ஆருக்குத் தெரியும்”

அவன் மறுபடியும் அழ ஆரம்பித்தான்.அம்மா சன்னலிருந்து சத்தம் போட்டாள்.

“சோத்துச்சட்டி எல்லாம் தொறந்து கெடக்குது”

“வூட்டுக்குள்ள போய் என்றா பண்னுணே? “ தம்பி அப்பாவின் கையிலிருந்த ஊஞ்சமிலாறை பிடுங்கி அவன் காலில் அடித்தான்.வலி தாளாமல் கணேசன் கத்தினான்.

“அய்யோ..அடிக்காதீங்க..ரொம்ப பசியாயிருந்தது..சாப்பிடறதுக்கு ஏதாவது இருக்குமானு தேடுனேன்..” அவன் சொன்னதைக் கேட்ட இவனுக்கு ரொம்பப் பாவமாக இருந்தது.எங்கிருந்தோ ஓடிவந்த மணியன் கணேசனைப் பார்த்துக் குலைத்தான். “உசா..உசா…போடா மணியா ..இந்த திருடனைக் கடி” தம்பி மணியனை உசார் படுத்த மணியன் கணேசனைப் பார்த்து இன்னும் வேகமாக குலைத்தான்.

“கம்முனு இர்றா…” இவன் தம்பியை அதட்டினான்.

“ஏன் உனக்குக் கஷ்டமா இருக்குதாக்கு…?உன்ற மனசு வேற தாங்கதாக்கும்…அப்பறம் ஏன் இவனைப் புடுச்சே…அப்படியே வுட்ருக்க வேண்டியதுதானே?” தம்பி நக்கலாக கேட்டவாறே மெலிதாக சிரித்தான்.கோபமாக வந்தது.திரும்பி சாளையை நோக்கி நடக்கையில் மணியன் குத்தவைத்தவாறே கணேசனுக்கு முன் உட்கார்ந்து கொண்டு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இளைப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

“இவன் அப்படியே கெடக்கட்டும்.. நீ வாடா சின்னப்பா…” அப்பா சொல்லிக்கொண்டே இவனைப் பின் தொடர்ந்தார்.தம்பியும் எழுந்து வந்தான்.கிணற்றடியில் போய் மூவரும் கைகால் முகம் கழுவிக்கொண்டு சாளைக்கு வருகையில் அம்மா குழம்பு தாளித்து முடித்திருந்தாள்.

“சோத்துச்சட்டிய எல்லாம் நீக்கிப் பாத்துருப்பாம் போலிருக்குது” மூவரும் சாப்பிட உட்காருகையில் அம்மா சொன்னாள்.

“அவன என்னுங்கப்பா பண்றது?..எதோ அவசரத்துல திருடிட்டான் போலிருக்குது” இவன் கேட்டான்

“என்னத்தப் பண்றது.ஊதியூர் கொண்டுபோய் போலீஸ் ஸ்டேஷனுல உட்ற வேண்டியதுதான்..ஆனா என்ன வேலைய உட்டுப்போட்டு நாம ஸ்டேஷனுக்கு நடந்துகிட்டு இருக்கோணும்” தம்பி சொன்னான்.

இவன் அவன் சோத்துச்சட்டியை திறந்து பார்த்திருக்கும் காட்சியை நினைத்துப் பார்த்தான்.சாப்பிடுவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.வழக்கமாக நிறைய சாப்பிடுபவன் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு எழுந்துகொண்டான்.அம்மாகூட இன்னும் கொஞ்சம் சாப்பிடச் சொல்லி சத்தம் போட்டாள். அப்பாவோ பதில் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.இவன் எழுந்து சாளைக்கு வெளியே வந்தான்.மணியன் இன்னும் அவன் முன்னால்தான் நின்றுகொண்டிருந்தான்.

இவன் பக்கத்தில் வந்ததைக் கூட கவனிக்காமல் கணேசன் தலையைக் குனிந்து மெலிதாக கேவிக்கொண்டிருந்தான்.கிழக்கே ஏறிக்கொண்டிருந்த சூரியனின் நிழல் ஊஞ்சள் மரத்தின் கிளைகளின் வழியே சல்லடையில் வழிவது போல் விழுந்துகொண்டிருந்தது.இவன் லேசாக செருமினான். நிமிர்ந்து பார்த்த கணேசன் தலையை மறுபடியும் கவிழ்த்துக்கொண்டான்.அவன் பொய் சொல்லவில்லை என்றே இவன் நம்பினான்.அப்பாவும் தம்பியும் இவ்வளவு முரட்டுத்தனமாக அவனைப் போட்டு அடிப்பார்கள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை.

இன்னும் கணேசனின் உடலில் எறும்புகள் ஊறிக்கொண்டிருந்தன.பல இடங்களில் சுளக்கை கடித்த தாரைகள் தெரிந்தன.ஒரு கணம் அவன் கட்டுகளை அவிழ்த்து விடலாமாவென்று யோசித்தான்.ஆனால் அப்பாவை நினைத்து பயமாக இருந்தது. திரும்பவும் சாளைக்கு வந்தான்.

“அப்பா..அவனைப் பாத்தா பாவமா இருக்குதுங்க..” என்றான். தம்பி இவனைப் பார்த்துச் சிரித்தான்.”இவனொருத்தன்.. நீயெல்லாம் இந்த உலகத்துல எப்டித்தான் பொழக்கப்போறையோ?”

“சும்மார்ரா…யாரு கண்டா.?.எதோ தெரியமாத்தான் பண்ணிட்டானோ என்னமோ..” அம்மா தம்பியை அதட்டிவிட்டுச் சொன்னாள்..

“பேசாம சோத்தப் போட்டு தொரத்தி உடுங்க…அவனப் பாத்தா திருடறவன் மாதிரி தெரியல…ஏதோ வகுத்துக்கொடுமை தாங்காம பண்ணிருப்பான்…சோத்துச்சட்டிய எல்லா நீக்கிப் பாத்துருக்கான்… பணத்தை திருட வந்தவனா இருந்தா…பணத்தை மட்டும் எடுத்துட்டுப் ஓடிருப்பானில்ல..போலீசுக்கு எல்லா போக வேண்டாம்..அவுத்து வுட்டா எங்கியோ போய் தொலையட்டும்”

அப்பா பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு எதுவும் பதில் சொல்லமலிருந்தார்.இவன் அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.எதையும் கேட்க விரும்பாதவனாய் தம்பி சிலோன் ரேடியோவை திருகிக்கொண்டிருந்தான்.இவனுக்கு வெகு பிரியமான அப்துல் ஹமீதின் குரலை இப்போது ரசிக்க முடியவில்லை.அவ்வப்போது எட்டி ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தான்.கணேசன் இன்னும் அதே நிலையில் தலையை தொங்கப் போட்டுக்கொண்டிருந்தான்.

“போடா சேகரு…போய் அவன அவுத்து வுட்டுக் கூட்டியா…”

இவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.ஊஞ்சள் மரத்தை நெருங்குகையில் கணேசன் நிமிர்ந்து பார்த்தான்.அவன் கன்னங்களில் கண்ணீர்க்கோடுகள் காய்ந்திருந்ததன.இவன் மரத்தின் பின்னால் போய் வடக்கயிற்றை அவிழ்க்க முயன்றான்.ஆக்கப்பூட்டு போட்டிருந்த முடிச்சை அவிழ்க்க இவனுக்குத் தெரியவில்லை.ஒரு கணம் தம்பியை கூப்பிடலாமென நினைத்தான்.பின் அவனாக முடிச்சை ஆராய்ந்து மெல்ல கட்டை அவிழ்த்தான்.

கட்டை அவிழ்த்து விட்டவுடன் கணேசன் அப்படியே சுருண்டு உட்கார்ந்து கொண்டான்.மெதுவாக கண்களை துடைத்துக்கொண்டு இவனை ஏறிட்டுப் பார்த்தான்.இவன் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.உடலில் கயிற்றுத்தாரை பதிந்த இடங்களில் எச்சிலை வைத்து மெதுவாக நீவிக்கொண்டான் கணேசன்.சட்டென முகத்தைச் சுளித்துக்கொண்டவன் முன்பக்க பேண்டுக்குள் கையை விட்டு எடுத்தபோது அவன் கையில் ஒரு சுளக்கை இருந்தது.ஒரு நிமிஷம் அதையே உற்றுப் பார்த்தவன் அதைக் காற்றில் வீசியெறிந்து விட்டு தலையை முழங்காலுக்குள் புதைத்துக்கொண்டு மெளனமாக இருந்தான்.

“எந்திரிருச்சு வா..சாப்பிடலாம்”

“இல்ல என்ன விட்ருங்க.. நான் போயிர்றேன்…தெரியாம பணத்தை திருடிட்டேன்..இனிமே ஆயுசுக்கும் திருடறதப் பத்தி யோசிக்க மாட்டேன்…”

“யேய்…சொல்றதைக் கேளு …எந்திருச்சு வா…அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்கணா மறுபடியும் அடிதான் உளும்”

இப்போது கணேசன் இவனுக்குப் பின்னால் மெதுவாக நொண்டி நொண்டி நடந்து வந்தான்.இவன் கிணற்றுவழிக்குப் போய் தொட்டியடியிலிருந்த சொம்பில் தண்ணீர் மோந்து அவனிடம் நீட்டினான்.மெதுவாக இவனிடமிருந்து சொம்பை வாங்கிக்கொண்டவன் முகம் கழுவிக்கொள்ளும்போது சுருங்கினான்.

“என்ன…தண்ணீ பட்ட எடத்துல எரியுதா?”

அவன் மெதுவாக தலையசைத்தான்.சொம்பை வைத்துவிட்டு பேண்ட்டை சுருட்டி மேலே விட்டுக்கொண்டு கால்களை கழுவிக்கொண்டான். நீர்த்தாரை பதிந்த கைகளால் தலையைக் கோதிக்கொண்டவன் சொம்பை வைத்துவிட்டு இவனைப் பார்த்தான்.தொட்டியோரம் இருந்த வாழை மரத்தில் ஒரு இலையை அறுத்துக்கொண்டு முன்னால் நடந்தவன் வாசலுக்கு வரும்போது அம்மாவைக் கூப்பிட்டான்.

“அவனை உட்காரச் சொல்லு…இந்தா வாறேன்”

கணேசனை சுவரோர நிழலில் உட்காரச்சொல்லி சைகை காட்டிவிட்டு இலையை அவன் முன்னால் வைத்தான்.அம்மா ஒரு குண்டாவில் சோற்றோடும் ஒரு கிண்ணம் நிறைய குழம்போடும் வெளியே வந்தாள்.

“யேய்..எலைய விரிப்பா…” அவனிடம் சொன்னவன் வாசல் பக்கெட்டில் இருந்து வலதுகையில் கொஞ்சம் நீரள்ளிக்கொண்டு வந்து தெளித்தான்.

“எலையக் கழுவப்பா..” இலையையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம் அம்மா சொன்னாள்.கணேசன் மெதுவாக இலையை தேய்த்துக்கொள்ள அம்மா சோற்றை இலையில் வைத்தாள்.

“சோத்தை ஒடைச்சி வுடுப்பா….” அவன் புரியாமல் நிமிர்ந்து அம்மாவை பார்த்தான்.அம்மா சட்டென்று குனிந்து சோற்றை உடைத்துவிட்டு குழம்பைச் சரித்தவாறே சொன்னாள்.”சாப்புடு”

மெல்ல ஒரு கவளம் எடுத்து விழுங்கியவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. சட்டெனக் மறுகையால் கன்னத்தை தாங்கிக்கொண்டான்.

“அட ஏம்ப்பா அழுகறே… நாங்க பக்கத்துலதான இருந்தோம்…?வந்து பசிக்குதுனு ஒரு வார்த்த சொல்லிருக்கலாமுலா…? நீ தெரியாம பணத்தை எடுத்ததனாலதா உன்னப் போட்டு அடிச்சாங்க…” அம்மா சொன்னாள்

“அவங்க்கட்டப் போயி என்னம்மா அவ்வளவு வேய்க்கானம்?” தம்பி உள்ளேயிருந்து கத்தினான்.

“மெதுவா சாப்புடுப்பா..” அம்மா மறுபடியும் சொன்னாள்.கனேசன் ஒவ்வொரு கவளமாக மிக சிரமப்பட்டுத்தான் சாப்பிட்டான்.மிகுந்த களைப்படைந்திருந்தவனின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் உயிர் வந்திருந்தது.கையில் பீடியோடு வெளியே வந்த அப்பாவை பயத்தோடு பார்த்தான் கணேசன்.அப்பா அவனிடம் ஏதும் சொல்லாமல் கட்டித்தாரை பக்கமாக நகர்ந்தார்.அம்மா மறுபடியும் அவன் இலையில் கொஞ்சம் சாதம் வைத்து தயிரை ஊற்றினாள்.அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.சாப்பிட்ட இலையை எடுத்துக்கொண்டு போய் வேலியடியில் வீசிய கணேசன் அவனாகவே கிணற்றுவழி தொட்டியடிக்குப் போய் கைகழுவிக்கொண்டு வாசலுக்கு வந்து மெளனமாக உட்கார்ந்து கொண்டான்.அப்பா மாட்டுக் கட்டித்தாரையில் மாடுகளுக்கு தட்டுப் போட்டுவிட்டு ஆசாரத்திற்குள் வந்தவர் இவனைக் கூப்பிட்டார்.

“அவன் கண்ணக் கட்டி வடக்கால ரோடு வரைக்கும் கொண்டு போய் வுட்டுட்டு வந்துரு..இந்தா… இந்தப் பணத்தையும் அவங்கிட்ட குடுத்து வுட்ரு” கணேசன் எடுத்திருந்த நூற்றைம்பது ரூபாய் பணம் திண்ணையோரத்தில் இருந்தது.எடுத்து ஜோப்பில் வைத்துக்கொண்டான்.

“பாத்து பத்தரம், சூதானமா போ.. நடு வழில மேல பாஞ்சாலும் பாஞ்சிருவான்….குள்ளப்பனியன் காட்டுக்குள்ள நாலு சுத்தி சுத்தி வழியக் கொழப்பி கூட்டிட்டுப் போ”

இவன் தலையாட்டினான்.

ஆசாரத்தில் இருந்த சூடிக்கயிற்றையும் பழைய துண்டையும் எடுத்துக்கொண்டு தம்பி வெளியே வந்தான்.அப்பாவை பார்த்து மிரண்ட கணேசன் எழுந்து நின்றான்.

“திரும்புடா” அப்பா அதட்டினார்.தம்பி பழைய துண்டால் அவன் கண்களை மூடிக்கட்டி இறுக்கிவிட்டு அவன் கைகளை கோர்க்கச்சொல்லி மணிக்கட்டில் சூடிக்கயிற்றால் வரிந்துகட்டினான்.

“ஒண்ணும் பண்ணமாட்டோம்..போ…உன்னயக் கொண்டுபோய் மெயின் ரோட்ல உட்ருவாங்க..அங்கிருந்து திருப்பூர் போயிரு” அப்பா சொல்ல அவன் மெதுவாக தலையாட்டினான்.இவன் நொச்சித்தடியை எடுத்து அவன் கைக்களுக்கிடையில் திணித்தான்.

“இதப் புடிச்சுக்கிட்ட எம்பின்னாடி வா” கணேசன் வெகு சிரமத்தோடு தடியை விரல்களால் கோர்த்துகொண்டான். தோட்டத்தின் மேற்குப்புறத்தில் குள்ளப்பனியன் காட்டுக்குள் போய் அங்கிருந்து தெற்கே நீளும் கை இட்டேரியை பிடித்து பெரிய இட்டேரியில் சேர்ந்தான். அவ்வப்போது திரும்பி திரும்பிக கணேசனைப் பார்த்துக்கொண்டான்.அவன் மெளனமாகவே வந்து கொண்டிருந்தான்.

பெரிய இட்டேரியில் கொஞ்சம் கிழக்கே போய் மீண்டும் மேற்கே திரும்பினான்.ஒரு இடத்தில் தடுக்கிவிழ இருந்த கணேசன் தானாகவே சுதாரித்துக்கொண்டான்.அவனுக்கு இப்போது வழி குழம்பியிருக்குமென்று உறுதியாக நம்பினான்.அவனிடம் பேச வேண்டும் போலிருந்தது.ஆனால் ஏதோ ஒரு தயக்கம்.விட்டுவிட்டான்.தடியை பிடித்துக்கொண்டே கணேசனும் அமைதியாக வந்துகொண்டிருந்தான்.அரைமணி நேரச் சுற்றுக்குப் பின் வடக்கால தார் ரோட்டை நெருங்கினான்.இன்னும் கொறங்காடுகளில் ஆடுகள் ஓட்டிக்கொண்டு யாரும் வந்திருக்காததது நல்லதாக போயிற்று.இல்லையென்றால் பார்க்கிறவர்களிடம் எல்லாம் கதையைச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.ரோடு ஆளரவமற்று இருந்தது.இந்தக் கிளை ரோடு மேற்கே போய் பிரிவில் தாராபுரம் திருப்பூர் ரோட்டில் சேரும்.

முதலில் அவன் கண்களைக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தான்.அவிழ்த்ததும் கண் கூசியதில் மறுபடியும் மூடிக்கொண்டான் கணேசன்.மணிக்கட்டைச் சேர்த்துக் கட்டியிருந்த சூடிக்கயிற்றையும் அவிழ்க்க அவன் மெதுவாக முகத்தைத் தேய்த்துக்கொண்டான்.

“இந்த ரோட்லயே மேக்க போனீன்னா…திருப்பூர் போற ரோடு வந்துரும்..அங்கிருந்து நீ பஸ் ஏறிப் போய்க்கலாம்..இந்தா…” சட்டைப் பையிலிருந்த நூற்றைம்பைது ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான்.சில கணங்கள் இவன் முகத்தையும் பணத்தையும் பார்த்த கணேசன் வேண்டாமென்பது போல் தலையாட்டினான்.

“அட வாங்கிப்பா…அப்றம் எப்டி திருப்பூரு போய் சேருவே..சோத்துக்கு என்ன பண்ணுவே..இங்கிருந்து திருப்பூரு முப்பது கிலோமீட்டரு தெரியுமா?”

“இல்ல வேண்டாம் … நடந்தே போய்க்கறன்…வயிறு நிறைய சோறு போட்டீங்கள்ள..?அதுவே போதும்..இனிமேல் எங்கேயும் திருடமாட்டனு உங்கம்மாட்ட சொல்லிரு”

சொன்ன கணேசன் இவன் கூப்பிடக் கூப்பிட மேற்கே நடக்கத்துவங்கினான்.ஒரு நிமிஷம் போகிறவனையே பார்த்துக்கொண்டிருந்தவன் பணத்தை ஜட்டிப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு துண்டையும் சூடிக்கயிற்றையும் தோளில் போட்டவாறே தோட்டத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

இவன் போகையில் அப்பா மாட்டுக்கு தட்டறுத்துக்கொண்டிருந்தார்.

“என்னடா..எதுவரைக்கு கொண்டு போய் உட்டே..?”

“இங்கிமங்கியும் ஒரு அரைமணி நேரம் சுத்தி அடிச்சுக் கொண்டு போய் வடக்கால ரோட்ல வுட்டுட்டனுங்க”

“பணங் குடுத்தியா? வாங்கிக்கிட்டானா?”

“ஆங்…வாங்கிட்டுப் போயிட்டானுங்க”.

No comments: