Dec 7, 2011

கார்ப்பரேட்

இப்போது அவன் அடைந்திருக்கும் இடத்தைப் பற்றிய ஆச்சரியம் கரையாமல் இருக்கின்றது.ஒரு வகையில் பெரிய பிரயத்தனங்கள் எதுவுமின்றியே இவ்வளவு தூரம் வரமுடிந்ததற்கு தான் மட்டுமே காரணமில்லையென்பதை உணர்ந்திருப்பதால் எப்போதும் ஒருவகையான பயமும் குழப்பமும் உள்ளே இருக்கின்றன.

அரைக்காற்சட்டையையும் அறியாமையையும் அணிந்து திரிந்த வயதில் எப்போதும் பகற்கனவுகளை நெய்துகொண்டிருந்தான்.அவை புகைமூட்டமானவை.நிகழிலிருந்தும் யதார்த்திலிருந்தும் துண்டிக்கப்பட்டவையாக ,இந்த பூமிப்பரப்பில் அவன் ஒருவன் மட்டுமே உயிர்த்திருந்து பரந்துகிடக்கும் மரங்களிடம்,பறவைகளிடம்,அதன் பாடல்களிடம்,தரைவழியில் கிடக்கும் ஒரு ஓடைக்கல்லுடன்,அருகம்புற்களில் தேங்கிக்கிடக்கும் பனித்துளிகளிடம்,எங்கிருந்து வருகிறதென்று தெரியாமல் வந்து கவியும் இருளிடம் லாந்தர் விளக்கின் மங்கிய ஒளியில் அலையும் வீட்டின் நிழல்களிடம் ,வெளிச்சுவரை அறைந்து சலசலத்துப் போகும் மேகாற்றின் ஓசையிடம் அவன் ஒருவன் மட்டுமே உறவுபூண்டு உயிர்த்திருத்தலின் சாரத்தை அருந்துவதாக இருந்தது.அதுவே அவனிடம் மற்றவர்களைப் பற்றிய ஒரு கூச்சத்தை ஏற்படுத்தியது.

பெருங்கூச்சலும் திகிலும் நிறைந்த மைதானத்திற்குள் சிறார்கள் உந்தித் தள்ளிவிடப்படும்போதுதான் அரவணைப்பை இழந்துவிட்டது நினைவுக்கு வருகிறது.முளைக்கத்துவங்கும் பால்மீசையும் அளவு பற்றாமல் போகும் அரைகாற்சட்டையும் பெரிய அவஸ்தையாக மாறிவிடுகின்றன.தான் வேறொரு பூதமாக மாறவேண்டியிருப்பதன் அவசியத்தை உணரும்போது கனவுகள் நெய்யமுடியாத பகல்கள் சூடுகொண்டு எரியத்துவங்கிவிடுகின்றன.

ஆனால் இந்த உலகில் இத்தனை கோடிபேர் வாழ்ந்திருக்கிறார்கள்.மரித்திருக்கிறார்கள்.அவர்களால் முடிந்திருக்கிறது.மனித வாசனையே அற்ற ஒரு அடர்கானகத்தில் தான் ஒரு மண்ணுள்ளிப் பாம்பாய் இருந்திருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டான்.சுழலும் பற்சக்கரங்களுக்கிடையில் தாவுவதைப்போல் எதிர்கொள்ளும் கணம் ஒவ்வொன்றும் பதற்றத்தைக் கொடுப்பது தாளமுடியாததாக இருந்தது.மேலும் யாரோ எதுவோ தன்னை பின் தொடர்ந்துகொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை அழியவே மறுக்கிறது.அவன் இவ்வகையான உலகத்தில் தன்னால் பிழைக்க முடியும் என்பதை நம்பியிருக்கவில்லை.ஆனால் அந்த நம்பிக்கைக்கு மாறான ஒன்றின் சாட்சியாய் அவனும் மாறிவிட்டிருந்தான்.பற்சக்கரங்களுக்கிடையில் லாவகமாக தாண்டும் போது கைதட்டல்கள் அவன் காதுகளை அடைக்கின்றன.அப்போது கண்களில் தேங்கிவிடும் கண்ணீர் கொஞ்சம் மனதின் சுமையை குறைக்கின்றது.

ஓருவாரமாக பணி அழுத்தம் கூடியிருந்தது.செய்கிற வேலைகள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு சிறு தவறு நடந்துவிடுவதை கவனிக்காமல் விட்டிருந்தான்.க்ளையண்டிடமிருந்து எஸ்கலேஷன். நேற்று அவன் மேனேஜர் அவனை தனியறைக்கு அழைத்துப்போய் விசாரித்தார். மெல்லிய புன்முறுவலுடன் இது போன்ற சிறிய தவறுகளை அவன் செய்வதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இந்த நிறுவனம் அவனைப் போன்ற உண்மையான ஊழியர்களை மதிப்பதாகவும் அதனாலேயே அவனுக்கு தன் தவறுகளை திருத்திக்கொள்ள இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமென்றும் வேலையில் ஏற்படும் சிறு தவறு எப்படி நிறுவனத்தின் மீதான நன்னம்பிக்கையையும் வருவாயையும் பாதித்து சகபோட்டியாளர்களுக்கு வாய்ப்புகளை எப்படி வழங்குகிறதென்றும் அவர் விரிவாக விளக்கியபோது இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்பதை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்.அவர் இன்னும் குரலை மென்மையாக்கிக்கொண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவன் ஆற்றியிருக்கும் பங்கை புகழ்ந்துவிட்டு தனிப்பட்ட பிரச்சனைகள் ஏதும் இருந்து அவன் விரும்பினால் தன்னிடம் பகிர்ந்துகொள்ளலாமென்றும் ஒரு நண்பனாக தன்னால் ஆலோசனைகள் வழங்க முடியுமென்றும் சொன்னார்.அவன் இல்லையென்று சொன்னபோது கைகுலுக்கி விடைகொடுத்தார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை அலுவலகம் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை.அவன் வெள்ளிக்கிழமைகளின் உபாசகன்.வெள்ளியென்பது குதூகலம்.ஆனால் அலுவலகத்தில் நேற்று நடந்தது மனதை அரித்துக்கொண்டேயிருந்தது.வெள்ளியின் காலைகளில் புதுவெள்ளத்தைப் போல் வந்துபாயும் உற்சாகம் இன்று அவனுக்கில்லை.வெள்ளிக்கிழமைகளின் மீதான காதல் எப்படி வந்தது என்பதை யோசித்துப்பார்க்கும் போது முன்பு பள்ளிக்கூடம் போவதின் மீதான வெறுப்பை அவை குறைத்தது ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டான்.வெள்ளிக்கிழமை மாலைகளில் பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் போய்விட்ட பின்பே சைக்கிளை எடுப்பான்.அப்போது பள்ளிக்கட்டிடத்தின் நிழல் முன்னாலிருக்கும் மைதானத்தில் சீராக சாய்ந்துகொண்டிருப்பதை கொஞ்சம் நேரம் பார்த்திருந்துவிட்டுதான் போவான்.அப்போது மைதானத்திலிருக்கும் பெரிய வேம்புகளிலிருந்து சருகுகள் உதிர்ந்துகொண்டிருக்கும்.இருபுறமும் கிளுவைவேலிகள் சூழ்ந்திருக்கும் தார்ச்சாலையை மேற்குவேலியின் நிழல் முழுதாக மூடியிருக்கும்.அப்போது அர்த்தமற்ற ஓசைகளாலான ஒரு பாடலை இசைத்துக்கொண்டே சைக்கிள் மிதிப்பான்.

சனியும் ஞாயிறும் காடுகளைச் சுற்றுவது அவனுக்கு வெகு பிரியமாய் இருக்கும்.கொறங்காடெங்கும் அழகுவண்ணப் பறவைகள் தாவித் தாவித் திரியும்.வெள்ளை வேலானின் சிறு கொம்புகளுக்கிடையில் சிறு ஓணான் குட்டிகள் பதுங்கியிருக்கும்.வேலியின் மையத்தில் பாம்புச்சட்டை காற்றில் படபடத்துக்கொண்டிருக்கும்.ஆட்காட்டி விரலால் மெல்ல தொட்டுப்பார்த்தால் பொடி பொடியாய் உதிரும்.விரலில் ஒட்டி மின்னும் வெண் துகள்கள் கண்டு உடல்கூசி செம்மண்ணில் தேய்த்துக்கொள்வான்.பெரிய ஓடைக்கல்லொன்றை விலக்கிப்பார்த்தால் தேள்குட்டிகளின் பழுப்பு வண்ண உடல் சூரிய ஒளியில் தகதகக்கும்.எப்போதேனும் அரிதாய் ஒரு நாள் புழுதிக்காட்டில் பாம்புகள் பிணைவதை பார்ப்பான்.பொழுதோ நகராமல் வெள்ளிக்கிழமையின் மாலையிலேயே தேங்கிக்கிடக்கும்.

விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தவன் மனதை மாற்றிக்கொண்டு தாமதமாக அலுவலகம் போய்ச்சேர்ந்தான்.எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்த அவன் பணிபுரியும் மென்பொருள் நிறுவனம் தனித்த வளாகத்தில் சிரத்தையாக பராமரிக்கப்படும் புல்வெளிகளுக்கிடையில் ஒரு ஆறடுக்கு கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. நடுவில் கட்டிடமும் அதைச்சுற்றி சுற்றுச்சுவர் வரை புல்வெளியும் இடையில் ஒரு நடைபாதையும் இருந்தது.வரவேற்பறைக்குப் போகும் பாதையில் இன்னதென்று பெயர்தெரியாத ஆனால் நாணலைப்போன்ற இடுப்புயரம் வளர்ந்திருக்கும் ஒரு புதர்கொத்து பராமரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.அதனடியில் எப்போதும் ஒரு பூனை படுத்திருக்கும்.இவன் மூன்றாவது தளத்திலிருந்தான்.

பெரிதாக எதுவும் வேலைகளில்லை.வந்திருந்த மெயில்களை படித்துப் பார்த்தான்.சிலவற்றிற்கு பதில் அனுப்பினான்.இரண்டொரு தொலைபேசி அழைப்புகள் செய்து பேசினான்.வெள்ளிக்கிழமைகளில் எப்போதும் போல அலுவலகம் பாதி காலியாக இருந்தது.அவன் அலுவலக நண்பன் ராவ் நேற்றே விசாகப்பட்டிணம் போய்விட்டான்.அவன் மெதுவாக எட்டி மேனேஜரின் கியூபிக்கலை பார்த்தான்.அவர் யாரோடோ தொலைபேசியில் கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.

அவனுக்கு ஒரு சிகரெட் பிடிக்கவேண்டும் போலிருந்தது.அவன் கீழே வரும்போது புல்வெளியில் எந்திரத்தை இயக்கிக்கொண்டு ஒரு பெண் புல்வெளியை சீராக கத்தரித்துக்கொண்டிருந்தாள்.புற்கள் வெட்டப்படுவதால் எழுந்த பச்சை வாசனை வினோதமாக இருந்தது.அவன் போகும்போதே பெட்டிக்கடைகாரர் டீ யையும் சிகரெட்டையும் நீட்டினார்.காம்பவுண்ட் சுவரையொட்டி கடையோரம் நிழலிலடியில் இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்துகொண்டான்.இந்தப் பெட்டிக்கடைக்காரர் தயாரிக்கும் தேனீரின் சுவை கொஞ்சம் மட்டமானதுதான்.ஆனால் பழகியிருந்தது.தனியாய் சிகரெட் பிடிக்க சிரமமாக இருப்பதால் எப்போதும் தேனீரைப் போன்ற ஒரு பானம் தேவைப்படுகிறது.

அவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நின்று புகைத்துக்கொண்டிருந்தார்கள்.பெரும்பாலும் அவன் புகைக்கவரும் தருணங்களில்தான் அவர்களும் வருவார்கள்.அவள் வெகு நளினமாய் புகைப்பாள்.உடை உடுத்துவதில் பிரமாதமான ரசனை கொண்டவளான அவள் வெள்ளிக்கிழமைகளில் உடலழகை வெளிப்படுத்தும் விதமாக அதிவிஷேமாக உடுத்தியிருப்பாள்.அவளைப் பார்க்கும்போதெல்லாம் உடலில் பீறிடும் உணர்ச்சிகளுக்கு அவன் காமம் என்று பெயரிட்டிருந்தான்.சில பொழுதில்,தன்னை ஒரு உடலாக பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்ட பின்பும் தன்னால் ஏன் பெண்களை அதிலும் குறிப்பாக அழகிய பெண்களை உடலாக பார்க்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை என்று தோன்றியது.

சிகரெட்டை எறிந்துவிட்டு் உள்ளே வந்தவனுக்கு நடைபாதையில் ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போகலாமென்று தோன்றியது.இப்போது அந்தப் பெண் மறுமுனையில் புல் வெட்டிக்கொண்டிருந்தாள்.பச்சைப்புல் அறுபட்ட வாசனை வளாகமெங்கும் ஏறியிருந்தது.சிமெண்ட் தளம் வைக்கப்பட்ட நடைபாதை வெகு சுத்தமாக இருந்தது.அவனுக்குத் தெரிந்து நாளுக்கு மூன்று முறை இந்த நடைபாதையை பெருக்குகிறார்கள்.அவன் கழிவறைகளுக்குள் ஒட்டப்பட்டிருக்கும் தாளை நினைத்துக்கொண்டான்.எப்போதும் சுகந்தம் மணக்கும் கழிவறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சூப்பர்வைசரின் மேற்பார்வையில் யாராவது ஒரு பெரியவர் சுத்தம் செய்துகொண்டிருப்பார்.சூப்பர்வைசர் ஒவ்வொரு பணியிலும் குறிப்பிட்டு கையெழுத்திட்டுவிட்டுப் போவான்.

ஜீன்சும் டீ சர்ட்டும் அணிந்திருந்த ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டே இவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு போனாள்.அவள் டீ சர்ட்டில் “ I survived” என்று அச்சிடப்பட்டிருந்தது.இவன் ஒரு முறை திரும்பி அவளைப் பார்த்துவிட்டு நடந்தான்.அலுவலகத்தின் நேர் பின்புறமாக வந்திருந்தான்.சுற்றுச்சுவரின் உச்சியில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சில்லுகள் சூரிய ஒளியில் மின்னின.ஒருகணம் அதை வெறித்திருந்துவிட்டு குனிந்தவன் தென் திசையிலிருந்து வடக்காக வந்துகொண்டிருந்த அந்த சிறு பூரானைக் கண்டான்.முழுக்க வெண்மையான அந்த சுத்தமான நடைபாதையில் அதன் கறுப்பு வண்ண உடல் நெளிந்து நெளிந்து வந்தது.அவன் காலுக்கு எட்டும் தூரத்தில் வந்தபோது எட்டி அதை ஷூ காலால் மிதித்துவிட்டு காலை உயர்த்திப் பார்த்தான். நசுங்கிவிட்டிருந்த அதன் உடலின் சிறு பாகங்கள் ஷூவில் ஒட்டியிருந்தன.புல்வெளியில் தேய்த்துக்கொண்டான்.

மறுகணம் அவனுக்கு குழப்பமாக இருந்தது.அதில் கொஞ்சம் துயரமும் நிரவியிருந்தது. நினைவறிந்து எப்போதாவது இப்படிச் செய்திருக்கிறோமாவென நினைத்தான்.கடும் விஷம் கொண்ட பாம்புகள்,மழை நாளுக்குப் பின்னால் அலையும் கருந்தேள்கள்,சுண்டுவிரல் அகலம் கொண்ட பூரான்கள் போன்ற ஜந்துகளை காடுகளில் பார்த்துவிட்டு சிலமுறை பயந்தும் சிலமுறை பயமின்றியும் ஒதுங்கிப் போயிருக்கிறான்.இவனது நீர் உடம்பில் சுள்ளான் கடித்துவிட்டால் காசு காசாய் பெரிதாக தடித்துக்கொள்ளும்.ஆனால் அவன் சுள்ளான்களைக்கூட அடித்துக் கொன்றதில்லை.அவனுக்கு தன் செய்கையின் காரணம் புரியவில்லை.போகிற போக்கில் ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்தோமென்று யோசித்தான்.மிக விலையுயர்ந்த ஷு க்களும் ஸ்லிப்பர்களும் நிறைந்த இந்த வளாகத்துக்குள் அது யாரைக் கடித்துவிடக் கூடுமென்று யோசித்தபோதும் குழப்பமே மிஞ்சியது.மறுபடியும் காலை உயர்த்திப் பார்த்துக்கொண்டான்.புல்வெளியில் சிதறிக்கிடந்த பூரானின் சிதைந்த பாகங்கள் வெயிலில் உலரத்துவங்கியிருந்தன.

அவனுக்கு மறுபடியும் ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது.

அவனது அலுவலகம் எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து ஒயிட்பீல்டிலிருக்கும் ஒரு பெரிய மென்பொருள் பூங்காவில் பதினைந்து மாடிக் கட்டிடத்திற்கு இடம் மாறியிருந்தது.அவன் டீம் லீடாக பதவி உயர்வு பெற்றிருந்தான்.அவனுக்குக் கீழே பதினேழு பேர் கொண்ட ஒரு டீம் வேலை செய்துகொண்டிருந்தது.அவன் மிக முக்கியமான ஒரு புராஜெக்டை நிர்வகித்துக்கொண்டிருந்தான்.தினமும் ஏதாவது ஒரு பிரச்சனைகள்.பெரும்பாலான நேரம் தொலைபேசியில் உரையாடுவதில் போனது.

புகைபிடிக்க வரும்போதுதான் அவனுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்.அவன் வெகுவாக மாறிப்போயிருந்தான்.வேலை சார்ந்த பிரச்சனையை கையாள்வது போன்ற கனவுகளை தினமும் உறக்கத்தில் கண்டுகொண்டிருந்தான்.சனி ஞாயிறுகளில் முன்பைப் போலில்லாமல் அலுவலகம் பற்றி யோசிக்க வேண்டியிருந்தது.இது பெரிய வளாகமென்பதால் புகைபிடிக்க வெளியே போக வேண்டிய தேவையில்லாமல் தனித்த இடமிருந்தது.அதற்கு இரண்டு பதினைந்து மாடி கட்டிடங்களை தாண்டிப் போகவேண்டியிருந்தது.கட்டிடங்கள் எல்லாம் அரையடியில் இருந்து பதினைந்து மாடிகளும் கண்ணாடிச் சுவர்களால் ஆனது.அந்த நீலவண்ணக் கண்ணாடிகளை கடக்கும்போதெல்லாம் அதில் அவன் தன் உருவதத்தைப் பார்த்துக்கொள்வான்.முன்பைவிட தொப்பை பெரிதாகியிருப்பதை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே கடப்பான்.புகைப்பிடிக்கும் இடத்தில் சிறிய புல்வெளியும் அதன் ஓரங்களில் ரோஜா பதியன்களும் இருந்தன.மலர்களைப் பார்ப்பது அவன் மன அழுத்தத்தைக் கொஞ்சம் குறைக்கும்.

இந்த நகரத்தில் வெயில் அடித்தால் கொளுத்துகிறது.மழை பெய்தால் நாளெல்லாம் பெய்துகொண்டிருக்கிறது.மென்பொருள் பூங்கா நிர்வாகம் கொஞ்ச நாட்களில் புகைப்பிடிக்கும் இடத்தில் கூரை அமைத்துக்கொடுத்தது.உட்கார்வதற்கு சிமெண்டால் திண்ணை கட்டிக்கொடுத்தது.எப்போதும் இரண்டு பெண்கள் சிகரெட் குப்பைகளை கூட்டிப் பெருக்கிக்கொண்டிருப்பார்கள்.வேலை காரணமாக அலுவலகத்தில் தங்கிவிடும் நாட்களில் நள்ளிரவுகளில்கூட அங்கே சிலர் புகைத்துக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான்.

அதுவொரு வெள்ளிக்கிழமை.அலுவலகத்திலிருந்து நேரமே கிளம்ப நினைத்தாலும் வேலை நள்ளிரவு வரை நீளும் போல் தெரிந்தது.அவன் புகைப்பிடிக்கக் கிளம்பினான்.எதையோ யோசித்துக்கொண்டு அந்த சிறிய புல்வெளிக்கு முன்னாலிருந்த கட்டிடத்தின் கண்ணாடிச்சுவரோரம் நடந்து கொண்டிருந்தவன் ஆச்சரியப்பட்டு நின்றான்.பக்கத்து புல்வெளியில் எப்போதும் தத்திக்கொண்டிருக்கும் அழகுவண்ணப் பறவைகளில் ஒன்று எப்படியோ தவறி சுவரோரம் வந்திருந்தது.கட்டிடத்தின் நீலவண்ணச்சுவரில் அதன் பிம்பத்தைப் பார்த்து பார்த்து கொத்திக்கொண்டிருந்தது.இரண்டு பேர் அதனருகில் நின்றுகொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.அவன் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு அங்கிருந்து பார்க்கையில் வருபவர்களும் போபவர்களும் அந்த சிறிய பறவையை வினோதமாக பார்த்துக்கொண்டு கடந்தார்கள்.அவனுக்கு ஊரில் ஒருமுறை பொபட்டின் கண்ணாடியை கொத்திக்கொண்டிருந்த சிட்டுக்குருவியின் ஞாபகம் வந்தது.

அவன் திரும்ப வரும்போது அந்த இடத்தில் யாருமில்லை.அந்த அழகுவண்ணப் பறவை இன்னும் தன் பிம்பத்தை தளர்வாய் விட்டுவிட்டு கொத்திக்கொண்டிருந்தது.அவன் கண்களை உயர்த்திப் பார்த்தான்.பதினைந்து மாடிக் கட்டிடம் பிரமாண்டமாய் நின்றிருந்தது.மெல்ல அதை கையில் ஏந்தினான்.அது தடுமாறி அவன் புறங்கையில் கால் அலகுகளால் இறுகப் பற்றிக்கொண்டது.அவன் அது பறக்கும் என்று நினைத்தான்.ஆனால் அழகுவண்ணப் பறவை சோர்ந்து போயிருந்தது.அது இன்னும் அவன் கையில் பறக்கமுடியாமல் அமர்ந்திருந்தது.மெல்ல புல்வெளிக்குப் போனவன் அதை மென்மையாக எடுத்து வருடிக்கொடுத்துவிட்டு புல்வெளியில் விட்டான்.அது நகரமுடியாமல் அங்கேயே நின்றிருந்தது.அவனது செய்கையை பார்த்த புகைபிடிக்க வந்த பெண்ணொருத்தி மகிழ்ச்சியாய் கையசைத்தாள்.

எங்கே பறவைகள் பாதுகாக்கப்படுகிறதோ அங்கே பூரான்கள் நசுக்கிக்கொல்லப்படும்.


நன்றி-உயிர் எழுத்து

No comments: