கொழுக்கட்டான் புற்கள் நன்றாக வளர்ந்திருந்தன.தொடர்மழைக்கு கொறங்காடுகள் அடர்ந்து இந்த வருஷம் குளுமையுற்றிருந்தது.கொறங்காட்டுக்குள் அடிக்கடி முயல்கள் ஓடுகின்றன.வேலியெங்கும் கிளிகள் கொத்திய கொவ்வைப்பழச்சாறு படிந்து வேலியடிகள் சிவந்திருக்கின்றன.ஊஞ்சல் மரத்தடியில் அமர்ந்திருந்தவனிடம் செம்மி வெள்ளாடு வந்து நின்றது.தலை தடவி விட்டவுடன் இவன் முதுகில் வந்து உரசியது.வெள்ளாடுகள் செம்மறி போல் மிரளியில்லை.
எழுந்தவன் ஒருமுறை ஆடுகளை எண்ணிப்பார்த்துக்கொண்டான்.ஆடு மேய்ப்பதில் என்றுமே இவனுக்கு தனிபிரியந்தான்.செமஸ்டர் லீவுக்கு வரும்போதே தீர்மானித்துக்கொண்டு வந்தான்.படிக்கிறவனுக்கு இந்த வேலை எதற்கென்று அண்ணன் கூட தடுத்தான்.
பாப்பா இன்னும் ஆடோட்டிக்கொண்டு வரவில்லை.முன்பு அவர்கள் பண்ணையத்தில் பண்டக்காரன் இருந்தான்.இப்போது ஆளில்லை போல.இவன் ஆடோட்டிக்கொண்டு வரும் இந்த மூன்று நாட்களாக பாப்பாதான் வருகிறாள்.ஸ்கூல் லீவாயிருக்கக்கூடும்.
இவன் நேற்றுதான் பாப்பாவோடு முதன்முதலாக பேசினான்.அப்பாவின் மீதும் சித்தப்பாவின் மீதும் கோபம் வந்தது.தலைமுறை பகை யுகம் யுகமாய் உள்ளோடிக்கொண்டிருந்தாலும் பிரியத்தின் சுனை கண் திறப்பதற்கு நொடிதான். நேற்று இந்த நேரமிருக்கும்.மேவரம் சித்தப்பனின் கொறங்காட்டில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.பாப்பா கிழக்கு வேலிப்பக்கம் ஆடுகளை விடுவதேயில்லை.கூச்சப்பட்டிருப்பாளென்று நினைத்துக்கொண்டு மரத்தடியிலேயே படுத்திருந்தான்.
மேவரம் பாப்பாவின் கூச்சல் கேட்டவுடனே வேகமாக எழுந்து பார்த்தான்.கிடாய் கிழக்கே வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தது.அவள் பின்னால் துரத்திக்கொண்டு வந்தாள்.இவன் பார்க்க பார்க்க வேலியின் மேலேறிக்குதித்து இந்தப்பக்கம் வந்துவிட்டது.ஆடுகள் மேய்வதை நிறுத்திவிட்டு தலையுயர்த்திப் மிரண்டன.இவன் சத்தம் போட்டுக்கொண்டே ஓடினான்.அதற்குள் இவன் பட்டிக் கிடாய்க்கும் அதற்கும் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.மோதிக்கொள்கையில் கிடாய்களுக்கு மனிதனுக்கு குறையாத வன்மமிருக்கும்.கிடாய்கள் அந்நியரை அனுமதிப்பதில்லை.இரண்டும் பத்தடி பின்னகர்ந்து ஓடிவந்து முட்டிக்கொண்டிருந்தன.இவனுடையது கொம்புக்கிடாய் அது மொட்டை.சீக்கிரம் தடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே கல்லெடுக்க குனிகையில்தான் கவனித்தான் பின்னால் பாப்பா நிற்பதை.
“நீ தள்ளிக்க பாப்பா.. நா பாத்துக்கறன்” பாப்பா பின்னால் போய்விட்டாள்.
கிடாய்கள் இப்போது இன்னும் வேகமாக மோதிக்கொண்டிருந்தன.இவன் தன் பட்டிக்கிடாயை ஓங்கிக் கல்லால் அடிக்க,அது லேசாக மிரண்டது.மொட்டைக்கிடாய் இவனையும் கொம்புக்கிடாயையும் மாறி மாறி முறைத்தது.இன்னும் வேகமாக கொம்புக்கிடாயை அடிக்க அது திரும்பி ஆடுகளோடு சேர்ந்துகொள்ள ஓடியது.இவன் இன்னொரு கல்லெடுக்க அது திரும்பியோடி வேலியை தாண்டிக்குதித்து அந்தப்பக்கம் நின்றவாறே முறைத்தது.
பாப்பா பின்னாலேயே வேலிவரை போய்விட்டாள்.இவந்தான் கூப்பிட்டான்.
“ஏம் பாப்பா போறே? அண்ணன பாத்தா பயமாயிருக்குதா..? இங்க வா” பாப்பா மெதுவாக திரும்பி புன்னகைத்தாள்.
“ஸ்கூல் லீவா பாப்பா?”
“ஆமாங்கண்ணா”
“இந்த வருஷம் எத்தனாவது?”
“எட்டாவதுங்கண்ணா”
“அப்பா அம்மாவெல்லாம் நல்லருகாங்களா?”
தலையசைத்தாள்.மேலே என்ன பேசுவதென்று புரியாது யோசித்தபோது கேட்டாள்
“என்னுங்கண்ணா, காட்டுக்கு வரையிலகூட வாட்ச் கட்டிட்டு வாறீங்க?”
“டைம் பாக்கறதுக்குத்தான்”
“நா வாட்ச் பாக்காமலே டைம் சொல்வனே...”
“அப்படியா..”
“இப்ப பாருங்க” சொல்லிவிட்டு வெயிலுக்கு போய் சூரியனைப் பார்த்தவாறே கிழக்கு நோக்கி நின்றவள் ஓரக்கண்ணில் தன் நிழலைப் பார்த்துவிட்டு சொன்னாள்.
“இப்ப மணி பண்ணெண்டு இருக்குமுங்கண்ணா”
“ஹை..கரெக்ட்” வாட்சைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.இவனுக்கும் இப்படி மணி பார்க்கலாமென்று தெரியும்.ஆனால் இதுவரை சரியாய்த்தான் கணிக்க முடிந்ததில்லை.
“அண்ணா, நா போறனுங்க, இல்லீனா ஆடுக தெக்க முட்டிரும்”
இவன் தலையசைத்துவிட்டுக் கேட்டான். “நாளைக்கி ஆடோட்டிட்டு வருவியா?”
“வருவணுங்கண்ணா” சொல்லிக்கொண்டே வேலியை தாண்டிக்குதித்தாள் பாப்பா.இவ்வளவு வெளிச்சமாய் பாப்பாவை எதிர்கொள்வதற்கு சந்தோஷமாய் இருந்தது.
பாப்பா வந்துவிட்டாள்.இவன் மரத்தடியில் அமர அவளும் பக்கத்தில் அமர்ந்தாள்.தன் தோழிகளை பற்றி சித்தப்பன் சித்தியைப் பற்றி பாப்பா பேசிக்கொண்டிருந்தாள்.எவ்வளவு எளிமையாய் தன்னிடம் பூத்துவிட்டாளென்று நினைக்கையில் தொண்டையில் எதுவோ அடைத்தது.பக்கத்தில் விர்ரென்ற சப்தத்துடன் செம்பொன்வண்டொன்று பறந்து போனது.
“ஐ..பொன்னாம்பூச்சி” பார்த்த பாப்பா குதூகலித்துச் சொன்னாள்.
“உனக்கு பொன்னாம்பூச்சி வேணுமா பாப்பா?” இவன் கேட்டுக்கொண்டே எழ,பாப்பா இவனை முந்திக்கொண்டோடினாள்.செம்பொன்வண்டு கிளுவைக் கிளையில் அமர்ந்தது.இமையசைமல் அதையே பார்த்துக்கொண்டு ஒவ்வோர் எட்டாய் வைத்தான்.ஒரு காலை எம்பி பொன்வண்டைப் பிடித்துவிட்டவன் வேகமாக காலை ஊன்றினான்.
“ஆ...” வலி தாங்காமல் குதித்தான்.
“ஐய்யோ..முள்ளு குத்திருச்சுங்களா?” பதற்றமாக கேட்டவளிடம் பொன்வண்டை நீட்டினான்.வாங்கிய பாப்பா அதை வீசியெறிய அது ஆகாயத்தில் எம்பிப் பறந்த்து.
“குடுங்கண்ணா.. நா எடுத்துவுடறன்”
“இல்ல வுடு… நானே எடுத்துக்கறன்.” அவள் இவன் காலை இழுத்து மடியில் வைத்து குதிகாலில் எச்சிலை தடவினாள்.முள் ஆழம்போயிருந்த்து.இவனுக்கு வலி பொறுக்காமல் கண்களில் தண்ணீர் வருவதை பரிதாபமாக பார்த்தாள்.எடுப்பதற்கு வெகு நேரமாகிவிட்டது.இரத்தம் கொட்டி பாப்பாவின் பாவடையிலும் ஒரிரு சொட்டு விழுந்தது.
“ரொம்ப வலிக்குதுங்களா?”
“அட ஒண்ணுமில்ல பாப்பா..இது என்ன பண்ணிடப் போகுது?”
“இப்படித்தானுங்க,ரெண்டு வருசத்திற்கு முன்னால அப்பாவுக்கு வேலி அடைக்கையில பெரிய முள்ளு அடிச்சு உள்ளங்காலுல இருந்து மேல பொத்துக்கிட்டு வந்துருச்சு.அப்பறம் செட்டிபாளையம் பண்டுதகார ஆத்தாகிட்ட போயி முள்ளு எடுத்துச்சு.”
இவனும் அதைக் கேள்விப்பட்டிருந்தான்.
“அண்ணா..ஆடுக முட்டுது. நா போயி திருப்பி விட்டுட்டு வந்தர்றன்” சொல்லிக்கொண்டே எழுந்தவள் அலறிக்கொண்டே வயிற்றை இறுகப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
“அய்ய்ய்யோ..என்னாச்சு பாப்பா?” பதறியெழுந்தான்.
“வயித்த வலிக்குதுங்கண்ணா” சொல்லியவாறே அழுதவளைப் பார்த்தவன் அதிர்ந்தான். நீலபூக்கள் போட்ட வெள்ளைப்பாவடையில் இரத்தம்.இவனுக்கு புரிந்தும் புரியாத்து போலிருந்தது.கண்கள் அனிச்சையாக கடிகாரத்தைப் பார்த்தன.
அவள் கேவியழுவதைப் பார்க்கையில் பதற்றமாக இருந்தது.ஓடிப்போய் மஞ்சள் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான்.
“ஒண்ணுமில்ல பாப்பா..இந்தா தண்ணீயக் குடி” ஒரு மிடறு குடித்தவள் வைத்துவிட்டாள்.
“ரொம்ப வலிக்குதுங்கண்ணா…”
“இது ஒண்ணுமில்ல பாப்பா..இதா இங்கியே நெழல உக்காந்துரு.. நான் போய் அஞ்சே நிமிசத்துல அம்மாவை கூட்டியாந்தர்றன்”
“பயமாயிருக்குது”
“பயப்படாத இத அண்ண வந்தர்றன்” சொன்னவன் ஓட்டமும் நடையுமாய் கொறங்காடுகளை தாண்ட ஆரம்பித்தான்.முள் ஏறிய கால் வேறு கடுத்தது.சித்தப்பனுடையது ஊரடித் தோட்டம்.பத்து நிமிசத்தில் வந்துவிட்டான்.வேர்க்க விறுவிறுக்க வந்தவனை சித்தி ஆச்சரியமாய் பார்த்தாள்.அவன் இதுவரை அவளிடம் பேசியதேயில்லை.
“சித்தீ…”
“என்றா ராசு? ஏன் இப்படி ஒடியாறே?”
“சித்தி..கொஞ்ச எங்கூட பெருமாங்காட்டுக்கு வாங்களேன்”
“அட ஏன் என்னாச்சு”
“பாப்பா..பாப்பா”
“அட அவ அங்கதான் ஆடோட்டிட்டு வந்தாளா”
“வயித்த வலிக்குதுங்களாமா” என்றவன் தரையை பார்த்துக்கொண்டே சொன்னான்.”வயசுக்கு வந்துட்டாளாட்ட இருக்குதுங்க சித்தீ”
சித்தி இவனுக்கு முன்னால் வெக்கு வெக்கென்று நடந்து போனாள்.இவன் மெதுவாக பெருமாங்காட்டுக்கு வந்து சேர்கையில் பாப்பாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டே சித்தி எதிர்ப்பட்டாள்.பாப்பாவின் முகம் வீங்கியிருந்தது.
“கொஞ்ச நேரம் ஆட்ட பார்த்துக்க ராசு” சொல்லிவிட்டுக் கடந்த சித்தியின் முதுகைப் பார்த்து இவன் தலையசைத்தான்.
சாயந்திரம் ஏழு மணியிருக்கும்.இவன் வாசலில் நடந்துகொண்டிருந்தான்.அண்ணன் சந்தைக்கு மிளகாய் மூட்டைகளை தைத்துக்கொண்டிருந்தான்.அப்பா வாசலில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்க அம்மா அடுப்படியில் காபி வைத்துக்கொண்டிருந்தாள்.
“ஏதோ டி.வி.எஸ்.ஸாட்ட வருது” சொல்லிக்கொண்டே அம்மா வெளியே வந்தாள்.சித்தப்பனும் சித்தியும்.இவனும் அண்ணனும் அப்பாவின் முகத்தைப் பார்க்க அம்மா முந்திக்கொண்டாள்.
“வாங்க..வா சாமாத்தா” இருவரும் தயக்கமாக பார்க்க அப்பா இவனிடம் சொன்னார்.”சேர எடுத்தாந்து சித்தப்பனுக்குப் போடு”
அப்பாவும் சித்தப்பனும் பட்டும்படாமல் பண்ணைய விவரங்கள் பேசுவதைக் கேட்க சிரிப்பாகவிருந்தது.அம்மா இவனை அடுப்படிக்கு கூப்பிட்டாள்.
“மணி அப்ப பதினொன்றரை”
இருவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் போனார்கள்.திங்கட்கிழமை தெரட்டியென்றும் ஞாயிற்றுக்கிழமையே வந்துவிடவேண்டுமென்று சொல்லிப்போயிருந்தார்கள்.அதற்குப் பின்வந்த நாட்களில் இரு குடும்பங்களுக்குள்ளும் புதுவெள்ளம் பாய்ந்த்து போலிருந்தது.
என்ன,பாப்பாதான் இவனோடு பேசுவதை நிறுத்திக்கொண்டாள்.
நன்றி: கல்கி 2007
No comments:
Post a Comment