Dec 7, 2011

அந்தர நதி


த்து மணிக்கும் மிச்சமிருந்த பனி ஏறுவெயிலின் விளிம்புகளிடையே படர்ந்திருந்தது.பெயிண்ட் அடிக்கப்படாத ஜன்னல் கம்பியில் எறும்பொன்று ஏறிக்கொண்டிருந்தது.வெயிலையும் எறும்பையும் மாறி மாறி வெறித்திருந்தவன் சலித்தவனாய் மேசையின் மீதிருந்த கால்களை எடுத்துக்கொண்டு நோட்டை சப்தமெழ எறிந்தான்.

சமையலறைக்குப் போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தவன் சிகரெட் பாக்கெட்டிலிருந்த கடைசி சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு நோட்டைப் பார்த்தான்.வரதராஜன் அடித்தல் திருத்தலின்றி கணக்குகளை எழுதியிருந்தான்.எல்லாரும் டிகிரி வாங்கிவிட்டுப் போய்விட்டபின் தான் மட்டும் அந்தரத்தில் சுழல்வதாய் தோன்றியது.பைனல் செமஸ்டர் மார்க்ஷீட்டை கைகள் நடுங்கத்தான் வாங்கினான்.மேத்ஸ்லிம் சிஸ்டம் புரோகிரமிங்கிலிம் எக்ஸ்டேர்னலில் பாஸ் போட்டு விட்டிருந்தார்கள்.வழக்கம் போல் இந்த தடவையும் இண்டெர்னல் காலை வாரி விட்டிருந்தது.

பிந்தைய நாட்களில் சிம்னிவிளக்கின் வெளிச்சத்தில் காரைபோடாத சாளைச்சுவர்களில் புதுசு புதுசாக பூதங்கள் முளைத்துக்கொண்டிருந்தன.வெறிக்கும் அவநம்பிக்கைக்குமிடையே பொழுதுகள் ஊசலாடின.பைத்தியமாகி விடுவோமென தோன்றியதால் ரூமில் தங்கிக்கொண்டு படிப்பதாய் சொன்ன போது அப்பா இரண்டு ஆடுகளை விற்று இரண்டாயிரம் கொடுத்துவிட்டார்.

நீர்கட்டிய கண்களை துடைத்துக்கொண்டான்.பயம் குமிழாய் நெற்றிப்பொட்டில் சுரந்தது.இரண்டு செமஸ்டருக்குள் எப்படியாவது இரண்டு பேப்பர்களையும் பாஸ் செய்துவிட்டால் பிடிமானமாயிருக்கும்.அடுத்த வருஷம் டொனேஷன் கொடுத்தாவது எங்காவது சேரலாம்.

சலிப்புடன் பக்கவாட்டில் வெறித்தான்.பக்கத்துவீட்டின் பின்புறத்தில் துவைக்கப் போடப்பட்டிருந்த கல்லின் மீதிருந்த அணில் ஓரே தாவில் தென்னை மரத்தில் ஏறியது.மட்டைகளுக்குள் போய் மறையும் வரை அதையே வெறித்துக்கொண்டிருந்தான்.எளிய உயிராய் வாழ்வது எவ்வளவு சௌகரியம்? எங்கோ காட்டுமரத்தில் வாழும் மரப்பல்லியைப்போல் இந்த வாழ்க்கை மாறிவிடாதாவென ஏக்கமாயிருந்தது.இப்படியே இருந்தால் கழிவிரக்கத்திலேயே தான் செத்துவிடுவோமென பயமாயிருந்தது.

மறுபடியும் தென்னைமரத்தில் அணிலைத் தேடினான்.அதைக் காணோம்.பக்கத்து வீட்டின் பாத்ரூம் கதவு திறந்துகிடந்தது.அப்போது தோளில் பூத்துவாலையோடும் வாயில் பிரஷோடும் அவள் பின்பக்கம் வந்தாள்.துண்டை பாத்ரூம் கதவின் மேல் போட்டவள் நுரையை தென்னை மரத்தடியில் துப்பிவிட்டு துவைக்கும் கல்லின் மீது சாய்ந்துகொண்டாள்.ஏறுவெயிலில் அவள் கலைந்த கூந்தலின் ஓர இழைகள் பொன்னிறமாய் மின்னின.

வெளிர்சிவப்பு வண்ண நைட்டியில் பூத்திருந்த வௌ;ளைப்பூக்கள் கண்களை நிறைத்தன. நிதானமாய் நிமிர்ந்தவள் மாடி ஜன்னலிலிருந்து இவன் வெறிப்பதைப் பார்த்தாள்.சட்டென முகத்தை திருப்பிக்கொண்டான்.மீண்டும் மெல்ல ஓரக்கண்ணால் பார்த்தான்.அவள் இன்னும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.துணிச்சல் வந்தவனாய் திரும்பிப்பார்த்தான். அவள் முகத்தில் சில நரம்புகள் இளகிக் குழைவதாய் தோன்றியது.

பாத்ரூமிற்குள் நுழைந்தவள் கதவை ஒருக்களித்துச் சாத்திக்கொண்டாள்.அவள் கதவை தாழிடுவதேயில்லை.தன் கண்கள் மலைப்பாம்பின் உடலாய் மாறி கொஞ்சமாய் திறந்திருக்கும் கதவின் வழிப்புகுவதாய் தோன்றியது.கற்பனையில் அவள் உடலின் நிர்வாணம் கண்ணுக்குள் திரண்டது. நோட்டை எடுத்து விரித்துக்கொண்டவன் ஓரக்கண்ணால் பார்த்தான்.தலையில் சுற்றிய துண்டோடு வந்தவள் இந்தப்பக்கம் ஒரு நேர்பார்வையை வீசிவிட்டு வீட்டிற்குள் போனாள்.

அறைக்கு வந்த ஒரு மாதமாய் நடக்கும் இந்த நாடகம் அவனுக்கு சுவாரசியமாகவும் கிளுகிளுப்பாகவும் தோன்றியது.வறண்ட மனசு அவளைப் பார்க்கையில் லகுத்தன்மை கொள்கிறது.உருண்ட முகமும் சிவந்த நிறமும் பூசிய உடம்புமாயிருந்த அவள் இந்த தனிமைப்பொழுதுகளை ஆக்ரமித்துக்கொண்டாள்.அறுக்கவேவியலாத வலையொன்று தன்மேல் கவிவது பற்றி மெல்லிய நடுக்கமிருந்தாலும் தனக்கு தேவையான ஆசுவாசம் அதிலிருப்பதாய் தோன்றியது.

எழுந்தவன் சுருட்டப்படாமல் கிடந்த படுக்கையில் மல்லாந்தான்.அறையின் அரூப வெளியில் அவள் நிரம்புவதை உணர முடிந்தது. நாவிலூறிய எச்சில் துவர்ப்பின் சுவையோடிருந்தது.காது நுனிகளிலிருந்து செந்தீத் துளிகள் வழிவதாய் தோன்றியது.இன்னும் கொஞ்ச நேரத்தில் அறைக்குள் தீ மூண்டுவிடுமென தோன்ற வீட்டைப் பூட்டிக்கொண்டு டீக்கடைப் பக்கம் நடந்தான்.

மதியம் அசோக்கும் குமாரும் சாப்பிட வருகையில் தூங்கிக்கொண்டிருந்தான்.கண்ணாடியில் முகம் பார்க்கையில் கண்களில் செவ்வண்ணம் வழக்கத்திற்கு மேலேயே ஏறியிருந்தது.இவனும் அவர்களோடு சாப்பிட உட்கார்ந்தான்.

“ஏங் குமாரு.. பக்கத்து வீட்டுல ஏதோ ஒரு பொண்ணு இருக்குமாட்ட இருக்குது..உனக்கு ஏதாவது தெரியுமா?”

அவர்கள் இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். ”அண்ணனுக்கு இந்த ரெண்டு பேப்பரையும் க்ளியர் பண்ற ஐடியா இல்லயாட்ட இருக்குது ”
அசோக் சொன்னான்.

“ஏன் அசோக்கு?” முகம் சுண்டியவனாய் கேட்டான்.

“அதுவொரு ஐட்டங்கண்ணா... ஆனா கொஞ்ச காஸ்ட்லி.. நீங்க வேணுமினா ஒரு ஆயிரத்தை ரெடி பண்ணிட்டு ஒரு கல்லை வீசிப்பாருங்க”

“சே..சே..பாத்தா ரொம்ப நல்ல பொண்ணா தெரியுதுப்பா”

“அண்ணங் கண்ணப் பாத்தா பித்தம் ரொம்ப ஏறியிருக்கற மாதிரி தெரியுது…”அசோக் சொல்லிவிட்டுச் சிரித்தான். ”பாக்கறதுக்கு சொழுசொழுன்னு இருக்கறதால கண்ண உறுத்துங்கண்ணா.. மொதல்ல வந்து ரூமு எடுக்கும் போது அதப் பாத்துப்போட்டு ரெண்டு நா தூக்கமேயில்ல..அப்ற விவரந் தெரிஞ்ச பின்னாடி அந்த பக்கந் திரும்பறதேயில்ல.. நாம படிக்க வந்தமா..அளவா என்ஜாய் பண்ணிட்டு, முடிச்சிட்டு போய்ட்டேயிருக்கோணும்..அதுதா நம்ம பாலிசி”

இருவரும் சாப்பிட்டுவிட்டு போய்விட்டார்கள்.தலையணையை சுவற்றில் வாகாய் வைத்து சாய்ந்து கொண்டான்.அசோக் சொன்னதை செரிப்பதற்கு கொஞ்சம் சிரமமாயிருந்தது. தானொன்றும் அவளைக் காதலிக்கவில்லையே? அவள் மேல் ஒரு ஈர்ப்பு.அவ்வளவே...அவள் எப்படிப்பட்டவளாயிருந்தால் என்ன? இருந்துவிட்டுப் போகட்டும்.

அரைத்தூக்கத்தில் சொக்கிக்கொண்டிருந்தவன் பெருங்கூச்சலில் விழித்துக்கொண்டான். 

“அவ அவ்வளவு ருசினா அங்கயே போவ வேண்டியதுதான.. நீயெல்லா மனுசனாடா..த்தூ..பச்சப்புள்ளய வச்சிக்கிட்டு நாம் படற பாடு உனக்குத் தெரியலயாடா?”. 

கீழே மல்லிகா டீச்சர் கத்திக்கொண்டிருந்தது.பத்து நிமிஷத்திற்கு பின் டீச்சரின் அழுகுரலும்,சைக்கிள் ஸ்டாண்ட் விடுவிக்கும் சப்தமும் கேட்டது.டீச்சரின் புருஷனுக்கு கள்ளிப்பட்டி பிரிவில் இன்னொரு பெண்ணோடு தொடர்பிருப்பதாக பேசிக்கொண்டார்கள்.டீச்சர் வெறி தீரும் வரை கத்திவிட்டு பின்பு அழுது அரற்றும்.பத்து நாளில் நாலைந்து முறை இதே போல் நடந்துவிட்டது.

மறுபடியும் தூங்க முயற்சித்தான்.முடியவில்லை.எக்ஸாமுக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருந்தது.தான் இன்னும் தயாராகமலிருப்பது பற்றி பயமாகவிருந்தது.குழப்பம்,பெருங்குழப்பம்…கொஞ்ச நேரம் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான்.

பழனிச்சாமி ரூமிற்கு போனாலாவது கொஞ்ச நேரம் பொழுதுபோகும்.டவுட்டும் கேட்டுக்கொள்ளலாம்.பழனிச்சாமி மேத்ஸ் படித்து இங்லீஷில் அரியர் வைத்திருந்தான்.அவனுக்கு பக்கத்தில் அத்தானிதான்.ஆனாலும் இங்கே அக்ரகாரத்தில் ஒரு குடிகார அய்யரை சரிக்கட்டி தற்காலிகமாக எகஸாமுக்காக தங்கியிருந்தான்.வாடைகை எல்லாம் ஏதுமில்லை.அவ்வப்போது அய்யருக்கு குவார்ட்டர் வாங்கிக்கொடுப்பான்.அக்ரகாரத்திலிருந்த அந்த வீடு சிதிலத்தின் அழகோடு இருக்கும்.

இவன் போகையில் அவன் டீக்கடையில்தான் நின்றுகொண்டிருந்தான்.போண்டா தின்று டீக் குடித்து சிகரெட் பற்றவைத்தார்கள்.

“எப்படிடா மச்சா..பிரிப்பரேஷன் எல்லாம் எப்படி இருக்குது?” பழனிச்சாமி கேட்டான்.

“அப்படியே போகுதடா மச்சா..டிரிக்னாமெட்ரிய தவிர எல்லாமே கஷ்டமாயிருக்கு”

“ஒண்ணுங் கவலப்படாத..பாஸ் பண்ணிருலா..ஸ்டெப் பை ஸ்டெப்பா மறுபடி மறுபடி போட்டுப்பாரு. இன்னும் செமஸ்டருக்கு ஒரு மாசம் இருக்குது..அது போக ஈவன் செமஸ்டர் வேற இருக்குது..ஆனா ஒண்ணுடா மச்சா.. இப்பவெல்லாம் ஒரு நாயிம் மதிக்க மாட்டங்கது”

வறட்சியாக புன்னகைத்துக்கொண்டான்.

“என்ன மாப்ளே..அய்யரு இருக்காரா?”

“அந்தாளு காலையிலதா வூட்ல இருந்து ஒரு பெரிய கண்ணாடிய தூக்கிட்டுப் போனாரு.. வித்துக் குடிச்சிப்போட்டு நைட் புல் மப்புல வரும் பார்ட்டி.காசு காசுனு உயிர வாங்குறாரு மச்சா”

அக்ரகார வீதியில் நுழைந்தார்கள்.பூட்டப்படாமல் சாத்தியிருந்த கதவை பழனிச்சாமி திறந்தான். இருளோடு நீண்ட வராண்டாவை கடந்தபின் தொட்டிக்கட்டி வீடுபோல நாற்புறமும் பெரிய திண்ணைகளோடு ஆசாரமிருந்தது.அதற்கு தாண்டி இவன் போவதில்லை.அதில் ஒரு திண்ணையில்தான் பழனிச்சாமி தங்கியிருந்தான்.சுவர்களில் காரை பெயர்ந்திருந்தது.

வீட்டின் பக்கவாட்டிலும் பின்னாலும் ஏகப்பட்ட வெற்றிடம் கிடந்தது.பின்புறத்தில் இருந்த பூச்செடிகள் காய்ந்து கிடந்தன. இருவரும் சுவரோர திண்ணையில் அமர்ந்துகொண்டார்கள்.மேற்கே பொழுது இறங்கியிருக்க நிழல் கவியத்துவங்கியிருந்தது.

“மச்சா.. எங்க பக்கத்து வீட்டுல ஒரு பிகரு இருக்குமாட்ட தெரியுது ”

“நீ மட்டுந்தான் அதப் பத்தி பேசாம இருந்தே.. நீயும் ஆரம்பிச்சிட்டியா?” சொல்லிவிட்டு சிரித்தான்.

“என்ன மச்சா ஒரு மாதிரி சிரிக்கற?”

“ஒண்ணுமில்ல..உன்ற ஜூனியருக நடராஜும் பிரச்சன்னாவும் ஒரு டைம் அதப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு எப்படியும் நூல் வுட்டுப் பாக்கறதுன்னு இருந்திருக்கானுக..அன்னிக்கு ஒரு நா நைட்டு மெயின் ரோட்லருந்து உங்க ரூமுக்கு போற தடம் போவுதில்ல..அந்த எடத்தில் நின்னுக்கிட்டு இருந்துருக்கானுக..பத்து மணிவாக்குல அது வந்திருக்கு..அவம் பிரசன்னா மூடிட்டு இருக்காம எவ்வளவு ரேட்டுனு கேட்ருக்கான்..அவ்வளவுதானாமா மச்சா.. சும்மா கெட்ட வார்த்தையில பயங்கரமா திட்ட ஆரம்பிச்சுருச்சாமா”

“அப்ப அது அப்டி இல்லீங்கறயா மச்சா?”

“அட நீயொன்னு..அவளுக்கு கான்டாக்ட் எல்லா பெரிய எடம் மச்சா.. இவனுக மந்தையில கிடக்கற செக்குனு நெனச்சுக்கிட்டு ஆட்டப் பாத்துருக்கானுக..”

“அப்ற என்னச்சாமா?”

“அப்றமென்ன..தெறிச்சடிச்சிக்கிட்டு ஒடியாந்துட்டானுக”

“ஆனா பாத்தா ஆளு அப்டி தெரியலையே மச்சா?”

“என்ன மச்சா. இதுக்கெல்லாம் எழுதி ஒட்டிக்கிட்டா இருக்க முடியும்?அவ அப்பன் ஒரு பெரிய குடிகாரன்..ஆள பாத்திருப்பீயே..எந் நேரமும் வௌ;ளையுஞ் சொள்ளையுமா சைக்கிள்ல திரிஞ்சிக்கிட்டு இருப்பானே வெட்டிப்பய..அட மொதல்ல இங்க அக்ரகாரத்துக்கு பக்கத்துலதான் இருந்துருக்காங்க..அந்தப் புள்ளய பத்தி அரசல் புரசலா தெரிஞ்சவுடனே தொரத்திவுட்டுட்டாங்க..உப்ப இருக்கற வூட்டுக்காரன் டெல்லியில இருக்கறதால அவனுக்கு மேட்டர் தெரியல..ஆனா ஆளு அம்சமாத்தான் இருக்கா..சும்மா பாத்தாலே கிர்ருனுதா இருக்குது”

“நாம இப்படி நெனக்கறம்..அந்த புள்ளக்கி என்ன கஷ்டமோ ”

“மச்சா..அதுக்கல்லா நாம பாவப்பட முடியுமா? ஏது உட்டா ரொம்ப பீல் பண்ணுவே போலருக்குது..பாத்து மச்சா..ரொம்ப கரிசனம் வச்சிராத”

“சேசே..அப்டியல்லா ஒண்ணுமில்லடா மச்சா”

வீடுகளெங்கும் விளக்குகள் எரியத்துவங்கியது.”செரிடா மச்சா.. நா கௌம்பற”

“அட இரு போனாப் போவுது”

“இல்லடா மச்சா..கொஞ்ச ரூமில வேல..கௌம்பறேன்” பழ்னிச்சாமி டீக்கடை வரை வந்தான்.மறுபடியும் டீக்குடித்து தம்மடித்தார்கள்.வாகனங்கள் மஞ்சள் ஒளியை உமிழ்ந்தபடி போய்க்கொண்டிருந்தன.இவன் கொஞ்சம் வடக்கே போய் கிழக்காக தன் அறைக்குப் போகும் தடத்தில் நடந்தான்.இருபுறங்களும் படர்ந்திருந்த வேலிக்கருவை நிலவொளியில் கரும்பச்சையாக மின்னின.

அறைக்குப் போகையில் அசோக்கும் குமாரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுதுதான் வெள்ளிக்கிழமையென்பது ஞாபகம் வந்தது.

“என்ன ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்பியாச்சா?”

“ஆமாங்கண்ணா..அண்ணா, சமையல்காரம்மாள வரச்சொல்லலாமா..இல்ல நீங்களே சமாளிச்சுக்குவீங்களா?”

“வேணாங் குமாரு.. நீங்க போற வழில சொல்லிட்டுப் போயிருங்க..ரெண்டு நாள்தான.. நானே சமையல் பண்ணிக்கறன்..இல்லனா கடையில சாப்டுக்கறன்”

“அண்ணா வண்டி சாவி இங்க ஹேங்கர்ல இருக்குது..எங்காவது போறதுன்னா எடுத்துக்குங்க”

தலையாட்டியபடி சூட்கேஸை திறந்து பணத்தை எண்ணிப்பார்த்தான்.ஆயிரத்து நூறு இருந்தது.இருநூற்றை எடுத்து சட்டைப்பைக்குள் வைத்துகொண்டு பொட்டியைப் பூட்டினான்.

“இருங்க.. நானும் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வர்றேன்”. அவள் வீட்டைக் கடக்கையில் வாசல் படியில் உட்கார்ந்திருந்த அவள் அம்மா நிலை குத்திய பார்வையோடு எதையோ வெறித்துக்கொண்டிருந்தாள்.அவர்களை பஸ் ஏற்றிவிட்டு ஒயின்ஷாப்பை நோக்கி நடந்தான்.

கவிச்சி வாடையடித்த ஒயின்ஷாப் வராண்டாவை கடந்து பின்பக்கமாயிருந்த திறந்தவெளி பாருக்கு வந்தான்.மிகக் குறைவான ஆட்களே இருந்தார்கள்.ஒரு குவார்ட்டர் பேக்பைப்பர்,மிராண்டா,வாட்டர் பாக்கெட்,பொரிகடலை பொட்டலம்,அரைப்பாக்கெட் கோல்டு பில்டர் ஆர்டர் செய்துவிட்டு கணக்குப் போட்டுப் பார்த்தான். நிதானமாக, நிம்மதியாக சாப்பிடலாமென்றே தோன்றியது.

முதல் பெக்கை முடித்தபின் உடம்புக்குள் இளஞ்சூடு பரவியது.ஒரு சிகரெட்டை பற்றவைத்தான்.புகையை இழுத்து வானம் பார்த்து ஊதுகையில் பூலோகம் சொர்க்கமென்று தோன்றியது.

அவள் ஞாபகம் வந்தது.கிறக்கமாக இருந்தது.அவளைப் பற்றிக் கேள்விப்பட்டதையெல்லாம் தாண்டி அவள் அழகு அவனை வதைத்தது.தனக்கு இது தேவையாவென்று தோன்றியது.இரண்டாவது பெக்கை முடிக்கையில் பெருங்குழப்பமாக இருந்தது.தனியாக வந்திருக்கவேண்டாமென்று தோன்றியது.பழனிச்சாமியையாவது கூப்பிட்டிருக்கலாம்.ஆனால் செலவு செய்தாக வேண்டும்.அதற்கு தெம்பில்லாமல்தான் தனியாக வந்தான்.

மறுபடியும் ஒரு பொரிகடலை பொட்டலம் ஆர்டர் செய்தான்.கூடவே ஒரு ஆம்லெட்டும்.பாட்டிலைப் பார்த்தான்.இன்னுமொரு பெக் மிச்சமிருந்தது.மணி பார்த்தான்.பத்துக்கு இன்னும் அஞ்சு நிமிசமிருந்தது.போதை ஏகத்துக்கும் ஏறியிருந்தது.மிச்சமிருந்ததை முடிக்கையில் மணி பத்தரை ஆகியிருந்தது.பில் சொன்னான்.தொண்ணூற்றுஞ்சு.நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.பாரில் இவன்தான் கடைசி.வெளியே இருந்த பொட்டிக்கடையில் இன்னுமொரு அரைப்பாக்கெட் சிகரெட் வாங்கிகொண்டான்.

மெர்க்குரி ஒளியில் சாலை ஆளரவமற்றிருந்தது.லேசான பனிக்காற்று உடம்புக்கு இதமாக இருந்தது.சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான்.மேலே நிலாதகதகத்துக்கொண்டிருந்தது.இப்போது யோசனை ஏதுமில்லை.போதைவெளியின் அந்தரத்தில் சிறகைப்போல் மிதந்துகொண்டிருந்தான்.இன்றைக்கு மட்டும் அவளை தொடமுடியுமென்றால்?. நினைக்கையில் நாவில் எச்சிலூறியது.பெருமூச்சோடு சிகரெட்டை இழுத்து ஊதினான்.

மெயின் ரோட்டிலிருந்து அறைக்கு போகும் தடத்தில் நுழைந்தவனுக்கு தலை கிறுகிறுத்தது. வாந்தி ஓவுட்டிக்கொண்டு வந்தது.கட்டுப்படுத்த நினைத்தவன் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.குடித்த அத்தனையும் வெளியில் வந்தது.தூரத்தில் யாரோ வருவது போல தோன்றியவுடன் எழுந்து நின்றுகொண்டான்.

அவள்…

அவனுக்கு சங்கடமாக இருந்தது.அவள் பக்கத்தில் வருகையில் மறுபடியும் ஒவுட்டிக்கொண்டு வந்தது. அவனைப் பார்த்துக்கொண்டே தாண்டிப்போனவள் திரும்பி வந்தாள்.இவனுக்கு அவஸ்தையாக இருந்தது. மெல்ல கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி முகம் கழுவிக்கொண்டு கொஞ்சம் குடித்தான்.அவள் மௌனமாக இவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

தண்ணீர் பாட்டிலை திரும்பக்கொடுக்கையில் சட்டென எட்டிக் கையை பிடித்தான்.அவள், அவனை ஆழமாக பார்த்தாள்.குருதி படிந்த கத்தி போலிருந்த அந்தப் பார்வையில் ஏதோவொன்று வெட்டுப்பட்டு விழுவதாய் உணர்ந்தான்.சட்டென சுதாரித்துக்கொண்டு கையை விட்டுவிட்டு ”சாரி” என்றான்.அவள் ஒரு பெருமூச்சோடு அவனைக் கடந்தாள்.

கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தவன் மறுபடியும் ஒயின்ஷாப்பை நோக்கி நடந்தான்.


நன்றி-குங்குமம்

No comments: