Dec 7, 2011

கர்ண மகராசா

ம்மா என்னை ஏழை மனசுக்காரன் என்று சொல்வாள் சார்.அவளால் கேனயன்,இளிச்சவாயன் என்று மற்றவர்கள் சொல்வதுபோல் சொல்ல முடியாததால் பதமான வார்த்தையில் சொல்லியிருப்பாளாக்கும்.யாரோ ஒருவர் என்னை "வெள்ளைச்சோளம்" என்று கூட சொல்லியிருக்கிறார்.

ஆனால் உண்மையும் அதுதானென்று எனக்குத் தெரியும்.எனக்குப் போதாது.தவிரவும் சதா நேரமும் கள்ளத்தை மனசுக்குள் வைத்துக்கொண்டு திரிவது முதுகில் பாறாங்கல்லை கட்டியிருப்பது போலத்தான்.அது எனக்கு ஒத்துவராது.ஆனால் எல்லோரும் இந்த ஆட்டத்தை வெகுதிறமையாக ஆடுவதைப் பார்க்கையில் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.

என் பதின்ம வயதில் உலகம் முழுக்கவும் நல்லவர்களால் நிரம்பியது என்றும் ஒழுக்கமும் ஈகையும் நன்னம்பிக்கையும் வாழ்வில் என்றுமே கைவிடமுடியாதவையெனவும் நம்பிக்கொண்டிருந்தேன்..ஆனால் அறிமுகமில்லாத ஆட்களுக்கு சைக்கிள் வாடகைக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதைப்போலத்தான் உலகமும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது சீக்கிரமே புரிந்துவிட்டது.

என் கண்முன்னால் யாருமே பசியில் வருந்தக்கூடாது என்றொரு அதீதக்கனவு முன்னிருந்தது.பசியினால் சிந்தப்படும் கண்ணீர் யாவரும் மறைக்கவிரும்பும் ஒரு அவமானம் என்று தோன்றும்.

கைவிடப்பட்ட குழந்தைகளை,மூப்பின் தள்ளாமை நிறைந்த முதியவர்களை,எங்கோ சூன்யத்தில் பார்வை நிலைகுத்தி வற்றிய முலை வெளித்தெரிய தெருமுனையில் குந்தியிருக்கும் பெண்களை,கள்ளம் படியாத முகங்களைப் பார்க்கையில் என் மனம் குமுறும்.உலகம் இவர்கள் வாழமுடியாத இடமாய் மாறிவிட்டதை நினைக்கையில் மனம் தவிக்கும்.நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் சதிக்கெதிராய் எதுவும் செய்யமுடியாததை நினைத்து குற்றவுணர்வும்,கழிவிரக்கமும் சூழும்.மூன்றுவேளை உணவும்,பகிர்ந்துகொள்ள இன்னொரு உயிரும் உறுதிப்படுத்தப்பட்டால் கனவில் இருக்கும் உன்னத வாழ்வு நனவில் முகங்காட்டக்கூடும்.

எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன்.நானும் செந்தில்நாதனும் பேச்சுப்போட்டிக்காக தாராபுரம் சென்றிருந்தோம்.வழக்கம்போல பரிசெதுவும் கிடைக்கவில்லை. கோடைவெயில் தகித்தெடுத்த மதியம். நல்ல பசியில் சுமாரான மெஸ்சுக்குப் போனோம்.கரிப்புகை படிந்த சுவர்கள் ஓவியமாய் இன்னும் மனசிலிருக்கிறது.இருவரும் வேகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.கூன் விழுந்த கருத்த கிழவரை கல்லாவிலிருந்தவன் விரட்டிக்கொண்டிருக்க அவரோ கெஞ்சிக்கொண்டிருந்தார்.

ஒரு மீல்ஸ் ஏழு ரூபாய். அவரிடம் ஆறு ரூபாய்தான் இருந்தது.பசியில் கிறங்கிவிட்டிருந்த அவர் முகத்தைக்கூடப் பார்க்காமல் விரட்டிக்கொண்டிருந்தவனைப் பார்க்கையில் எரிச்சலானேன்.எச்சில்கையோடு எழுந்துபோய் ஒரு ரூபாயை கிழவரிடம் கொடுத்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டேன்.அவர் அவசர அவசரமாக சாதத்தை அள்ளி விழுங்கியதை பார்த்தவுடன் எனக்குப் பசியடங்கிவிட்டது.செந்தில்நாதன் வியப்பாக பார்த்தான்.

கிழவரும் நானும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை.ஆனால் எனக்கு மனம் நிறைந்திருந்தது.வலதுகை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதென்று கேள்விப்பட்டிருந்தாலும் சிறுவனான எனக்கு என் செய்கை பெருமிதமாகவே இருந்தது.பிறகு பலமுறை அந்தப் பெருமிதத்தை நினைத்து மனங்கூசியிருக்கிறேன்.அது வயதின் அறியாமை என்று புரிந்துகொண்டபோது கூச்சம் விலகிவிட்டது.ஆன்மப் பேரொளியின் சிறுகீற்றை தரிசித்த கணமது.

வரதன் என் கல்லூரித்தோழன்.திறமையும் புத்திக்கூர்மையும் கொண்டிருந்தவன் வகுப்பிலும் தகுதியிலும் முதல்வரிசையில் இருப்பான்.நான்காவது செமஸ்டர் நெருங்கிய நேரம்.எக்ஸாம் பீஸ் கட்டாதவர்களுக்காக சர்க்குலர் வந்தபோது முகம் சிறுத்துப்போனான்.எனக்குப் புரிந்தது.அவனை தனியே கூட்டிப்போய் மெஸ்பீஸ் கட்டுவதற்காக வைத்திருந்த தொள்ளாயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தேன்.அவன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறான்.

இப்படித்தான் சார் நான் இருந்திருக்கிறேன்.வீட்டில் ஊதாரி என்று பெயரெடுத்தாலும் சின்னச்சின்னதாய்,பொருளால்,உடலால்,மனதால் எப்போதும் இன்னொருவருக்குப் பயன்படும்படி என்னை வைத்துக்கொண்டிருந்தேன்.

படிப்பு முடிந்து சென்னையில் வேலை தேடத்துவங்கியபோதுதான் மாய விளையாட்டில் எல்லா திசையிலும் பந்தாடப்பட்டேன்.அப்பா சொன்ன "ஊதாரி" என்ற வார்த்தையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.ஓட்டைக்கை என்று அம்மா சொன்னதை உறுதிப்படுத்திக்கொள்ள கண்முன்னால் கையைவைத்து விரல்களிடையே தெரியும் இடைவெளிகளை உற்றுப்பார்ப்பேன்.ஆனால்,ஊதாரித்தனத்தைக் கைவிடுவதென்பது சம்பாதிப்பதைப் போலவே கடினமான காரியமாக இருக்கையில் நண்பர்களின் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.ஆனால் நண்பர்களால் எப்போதாவது உதவத்தான் முடியுமே தவிர எப்போதும் போஷிக்கமுடிவதில்லை."எனக்குப் பசிக்கிறது.சாப்பிடக் காசில்லை" என்பதும் "எனக்கும் பசிக்கிறது.ஆனால் பிச்சையெடுக்கமுடியாது" என்பதும் எவ்வளவு குரூரமான உண்மைகள்?

கோவிலில் அரசாங்கம் அன்னதானம் போட்டது.வாசல் வரை சென்றுவிட்டு மனம் வராமல் திரும்பிருக்கிறேன்.பசியும் ஈகோவும் என்னை வதைத்திருக்கின்றன சார்.பொங்க்கிப்பொங்கி தனியே அழத்தான் முடிந்தது.ஊரிலிருந்து அனுப்பும் பணத்தை வாங்கிய கடனுக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் கடனுக்காக கையை ஏந்துவேன்.மிஞ்சுவது பணம் வரும் நாளில் வயிராற சாப்பிடும் மீன்கறிதான். சிலசமயம் ஊரிலிருந்து பணம் அனுப்ப முடியாவிட்டால் பெருஞ்சிரமம்.இண்டர்வியூக்களுக்குப் போகும்போதுதான் நான் எவ்வளவு தன்னம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன் என்பதும் புரிந்தது.வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கத் துவங்கினேன்.

ஈகோவின் பொருட்டு பசியை மறைத்துச் சிரிக்க வேண்டியிருக்கிறது.நிலையை அறிந்த நண்பர்கள் மெளனமாக இருக்கிறார்கள்.எனக்கு மலம் வரவில்லை.ஆசனவாய் எரிகிறது.அப்புறம் லேசாய் இரண்டுசொட்டு கருந்திரவம்.கதவடைக்கப்பட்ட கழிவறைக்குள் கண்ணீரும் கழிவிரக்கமும் பொங்கும்.கடைசியில் தாங்கமுடியாமல் ஊருக்குத்திரும்புவதாக முடிவு செய்தேன்.ஊருக்குப் போயாவது புத்தியோடு பிழைக்குமாறு நண்பர்கள் அறிவுரை சொன்னார்கள்.அலுவலக வேலையாக சென்னை வந்த செந்தில்நாதன் ஊருக்குக் கூட்டிப்போனான்.திருப்பூர் ரயில் நிலையத்தில் நான் இறங்கும்போது சட்டைப்பையில் நூறு ரூபாயை வைத்தான்.

காற்றும் புழுதியும் வாறியிறைத்த பஞ்சகாலத்தில் ஊருக்கு வந்தேன்.படித்தவன் வேலை இல்லாமல் ஊருக்குள் திரிவது வெகுகொடுமை.மணியார்டரில் வந்துகொண்டிருந்த பணத்திற்குப் பின்னால் எவ்வளவு சிரமமிருந்தது என்று புரிந்தது.பார்ப்பவர்கள் எல்லோரும் திருப்பூர் பனியன் கம்பெனிக்குப் போனால் சுளையாக ஆறாயிரம் ஏழாயிரம் வாங்கலாமென்றார்கள்.அதற்குத் தயாரான போதுதான் அப்பா நம்பிக்கையிழக்காமல் மறுபடியும் வேலைத்தேடச்சொன்னார்.

பிறகு கந்தவேலின் ஆதரவில் பெங்களூர் வந்தேன்.அப்பா நான்கு ஆடுகளை விற்று எட்டாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார்.புது ஊர்.பிழைத்தே ஆகவேண்டிய கட்டாயம்.கந்தவேலின் ரெப்ரன்சில் அவனுடைய சாப்ட்வேர் கம்பெனியிலேயே புரோகிரமராகாக எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.சம்பாதனை உன்னதம்.நான் என்னை முழுமையானவனாக உணர்ந்தேன்.நான் உரக்கபேசத் துவங்குகிறேன்.என் நடையில்தான் எவ்வளவு கம்பீரம்?.நான் மரியாதை செய்யப்படுகிறேன்.என் பர்ஸில் ஏ.டி.எம் கார்டு என்ற புது வஸ்து இடம்பிடிக்கிறது.

நான் பப்புகளுக்கு போகவில்லை.ஷாப்பிங் மால்களுக்குப் போகவில்லை.ஆம்லெட் சாப்பிடுவது ஆடம்பரம் என்று நிறுத்திக்கொண்டேன்.காசு எதிர்பார்க்கும் நண்பர்களை கழற்றிவிட்டேன்.புகைப்பதில்லை.குடிப்பதில்லை.செலவுக்குப் போக அப்படியே வீட்டில் கொடுத்துவிடுவேன்.

காசைக்குறித்து இவ்வளவு குரூரமானவனாக மாறிவிட்டது எனக்கே பயமாக இருந்தது.என் ஆன்மாவின் மீது இருள்படர்கிறதா? கைக்காசை செலவழிக்காமல் மூன்றாம் உயிரின் மீது செலுத்தும் போலி அன்பும் பரிதாபங்களும் நிறைந்தவனா நான்?

உண்மையைச் சொன்னால் சார்..நான் இப்போது அரை லட்சத்திற்குப் பக்கத்தில் சம்பளம் வாங்குகிறேன்.இப்பெருநகரத்தில் தினமும் என்னிடம் யாரேனும் கையேந்துகிறார்கள்.யாசகம் பெரிய தொழிலாகிவிட்டது.முடிந்ததைக் கொடு என்று உள்மனம் சொல்கிறது.அதே உள்மனம் ஏமாறதே என்றும் எச்சரிக்கிறது.ஆனால் வயதானவர்களென்றால் நான் யோசிப்பதில்லை, இருபதோ ஐம்பதோ கொடுத்துவிடுவேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் யாசகத்தின் குரூரம் மனதைப் பிசையத் தவறுவதில்லை.

அன்றும் அப்படித்தான்,மடிவாளாவில் வழக்கமான தேனீர்க்கடையில் அருந்திக்கொண்டிருந்தேன்.மொட்டைத்தலையும் கண்களில் கருவளையங்களும் அழுக்கு ஆடைகளுமாயிருந்தவன் என்னை நெருங்கினான்.

"சார்..எனக்குப் பொள்ளாச்சிப் பக்கங்க..லாரில் கிளீனரா போய்ட்டிருந்தேன்..ராஜஸ்தான் போய்ட்டு வண்டி பெங்களூர் வரும்போது டிரைவர் கூட பிரச்சனையா போச்சு..வுட்டுட்டுப் போய்ட்டான்.கைல நயா பைசா கூட இல்ல..சாப்ட்டு ரெண்டு நாளாச்சு..ஒரு டீயாவது வாங்கிக்கொடுங்க சார்"

நான் அவனை நம்பாமல் பார்த்தேன்.அவன் கண்களில் பொய்யின் சாயையை தேடினேன்.என் கட்டுப்பாட்டுக்கும் இயல்புக்கும் நடுவே மனம் ஊசலாடத் தொடங்கியது.இருதயத்தின் ஆழப்பிரதேசத்திலிருந்து ஒரு நிந்தனைக்குரல் எழுந்து என்னை ஏசத்தொடங்கியது.

அவனுக்கு டீயும் முட்டைப்பப்சும் வரவழைத்துக்கொடுத்தேன்.சுவரோரமாய் குத்துக்காலிட்டு அவன் உண்பதைப் பார்ககையில் தாய்மையுணர்வு பொங்கியது.

"ரொம்பத் தேங்சுங்க சார்..எப்படியாவது ஓசூர் செக்போஸ்ட் போய்ட்டா லாரி புடிச்சுப் போயிடுவேன்" நான் ஒன்றும் சொல்லாமல் ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன்.லேசாக கும்பிட்டுவிட்டு நகர்ந்தான்.

ஒருவாரம் கழிந்திருக்கும்.சனிக்கிழமையென்று ஞாபகம்.டீக்கடையில் நின்றிருந்தவன் யாரோ கூப்பிட திரும்பினேன்.அதே தோற்றத்தில் மீண்டும் அவன். "ரொம்பப் பசிக்குதுங்க சார்" என அவன் ஆரம்பிக்கையில் எனக்கு கோபம் தலைக்கேறியது.

"ஏண்டா..பொள்ளாச்சி போகலையா?" என் உறுமலைக் கேட்டு பக்கத்தில் நின்றிருந்தவர்கள் திரும்பிப்பார்த்தார்கள்.அவன் பிதிர் கலங்கிப் பார்த்தான்."உனக்கு டீயும் முட்டப்பப்சும் போக அம்பது ரூவா பணம் வேறே?" நான் கத்தியதும் அவன் அவசர அவசரமாக நகர்ந்தான்.

இவன் மட்டுமல்ல...இவனைப்போல ஒருவன் நூறு ரூபாய் என்னை ஏமாற்றி வாங்க்கிவிட்டு ஒயின்ஷாப் வாசலில் முழுபோதையில் கிடந்திருக்கிறான்.இன்னொருவன் என்னை அடையாளம் வைத்துக்கொண்டு கஞ்சா போதையில் சலாம் வைத்திருக்கிறான்.எனக்கு கடுப்பாகி விட்டது. நான் என் இயல்பிலிருக்க இனித் தேவையில்லை.இந்த இளக்கத்திற்கு எல்லாம் உலகில் இனி இடமேயில்லை.எவனுக்கும் எதுவும் கொடுக்கத் தேவையில்லை.அதற்காக வருந்தவும் வேண்டியதில்லை.அதற்குப்பிறகு யார் கையேந்தினாலும் முணுமுணுப்பாக ஏச ஆரம்பித்தேன்.முகம் கடுத்துவிடுவதும் எரிச்சல் மண்டுவதும் எப்படி ஒட்டிக்கொண்டதென்றே தெரியவில்லை.

கொஞ்சநாட்களுக்குப்பின் கோரமங்களா நிழற்சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தேன்.பக்கத்தில் வந்துகொண்டிருந்த பெரியவர் தெளிவான ஆங்கிலத்தில் அழைத்தார்.தானொரு உயர் நிலைப்பள்ளி ஆசிரியனென்றும்,பனசங்கரியிலிருந்து கோரமங்களா வரை சிறு வேலையாக வந்தபோது பஸ்ஸில் மணிபர்ஸை தவறவிட்டுவிட்டதாகவும்,நானொரு பதின்மூன்று ரூபாய் ஐம்பது காசு கொடுத்து உதவமுடியாமாவெனக் கேட்டார்.

எனக்குள் மறுபடியும் ஒரு இளக்கம்.பெரும் குழப்பம்

"இல்ல சார்.என்னால முடியாது.இது மாதிரி தினமும் நடக்குது.சொல்லப்போனா இது ஒரு பெரிய இண்டஸ்ட்ரியாவே இருக்கு. எனக்கு உங்க மேல நம்பிக்கை வரல..ஸோ..சாரி என்னால ஹெல்ப் பண்ண முடியாது"

"பரவால்ல சார்.. நானும் படிச்சவந்தான்..எனக்கும் இதெல்லாம் புரியுது.இப்படி ஒரு நெலம வருமுனு கனவுல கூட நெனச்சுப்பாக்கல..பரவால்ல சார்..காட் ஈஸ் கிரேட்" சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார்.

எனக்கு என்னவோ போலாகிவிட்டது.பர்ஸைப் பார்த்தேன்.ஒரே ஐம்பது ரூபாய் தாள்தான் இருந்தது.ஏடிஎம் போகவேண்டும்.முன்னால் போய்க்கொண்டிருந்தவரிடம் சொன்னேன்."சாரி சார்,சசேஞ்சும் இல்ல"

"இட்ஸ் ஒ.கே சார்"

என்ன செய்யவேண்டும் நான் இப்போது? ஒருவகையில் இது ஒரு எளிதான கேள்விதான்.விரும்பினால் கொடுக்கலாம்..இல்லையென்றால் விட்டுவிடலாம். கொடுத்துவிட்டால் பிறகு கொடுத்ததை மறந்துவிடலாம்.கொடுக்காவிட்டால் மானுட நிலையாமையின் முன் என்னுடையது எவ்வளவு இழிவான செயல்?.நான் ஏமாற்றப்படுகிறேன் என்பதற்கு சாத்தியங்கள் நிறைய இருந்தபோதும் அதையும் தாண்டித்தான் என் ஆன்மாவின் நேர்மையை அல்லது அதன் இயல்பை காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

நான் வேகமாக அவரை நெருங்கினேன்.ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டிய என்னை வினோதமாக பார்த்தவர் தனக்கு பதின்மூன்று ரூபாய் ஐம்பது காசுகள் மட்டும் போதுமென்றார்.அவர் கையில் காசை திணித்துவிட்டு வேகமாக நடந்தேன்.


26-04-2009-1.14 PM
கதை தன்னை நிஜத்துள் கரைத்துக்கொள்ளுதல்.

-இக்கதாசிரியன் கதையை எழுதிக்கொண்டிருக்கையில் தன் வழக்கமான தேனீர்க்கடைக்கு போகிறான்.வெளிர் நீல டீ சர்ட்டும் கறுப்பு பேண்ட்டும் அணிந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அவனை நெருங்குகிறார்.கொஞ்ச நேரம் நின்றிருந்துவிட்டு அவனிடம் மணி கேட்கிறார்.

-அவனை நெருங்குவதும் விலகுவதுமாய் தவிக்கிறார்.

-எலக்ட்ரானிக் சிட்டிக்கு நடந்து போனால் எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறார்.

-மெதுவாக தனக்கொரு உதவி செய்யமுடியமாவென்கிறார்

-தான் ஜெய்நகரில் வெல்டிங் வேலை பார்ப்பதாகவும் முதலாளி பத்து நாட்களாக ஊரில் இல்லாததால் கையில் நயாபைசா இல்லையென்றும் குழந்தைகள் பசியில் தவிப்பதாகவும் குறைந்தபட்சம் மூன்று ரொட்டிகள் வாங்கித்தரும்படியும் கெஞ்சுகிறார்.

-முன்பொருவன் அமர்ந்த அதே இடத்தில் போய் அமந்துகொண்டு தலையை கவிழ்த்துக்கொள்கிறார்.

-கதாசிரியன் எழுதிக்கொண்டிருக்கும் உண்மைச்சம்பவங்களின் அடிப்ப
டையிலான கதையே கேள்விக்குறியாய் மாறி முன்னிருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது.

-அவர் சட்டென இவன் காலில் விழ வருகிறார்.

-மனம் நெகிழ்ந்த கதாசிரியன் அவரை தன் வழக்கமான உணவகத்திற்கு அழைத்துசென்று சாப்பிடவைத்து இரண்டு பார்சல்கள் வாங்கிக்கொடுக்கிறான்.அவர் நீர் சுரந்த கண்களோடு நன்றி சொல்லிவிட்டு நடக்கிறார்.

-அவர் காதுகளில் அணிந்திருந்த கடுக்கண்கள் தன் நினைவில் குண்டலமாக மாறிக்கொண்டிருப்பதை நினைத்தவாறே கதாசிரியன் இப்பின்குறிப்பை எழுதி முடிக்கிறான்.


நன்றி-உயிர் எழுத்து

No comments: