Dec 7, 2011

குளம்படி நிலம்

உதித்தெழும் சூரியனைத் தொழுது மேழிபிடிக்கும் காணியாளர்களின் கலப்பை கீறும் படைக்கால் முடிவுறாமல் யுகங்களிடையே நீள்வது.ஈரம் மலர்ந்த நிலத்தில் செம்மறிகளின் காய்ந்த சிறுபுழுக்கைகள் இளகி மென்கவிச்சி வீச,கொழு கிளறும் பிரபஞ்சத்தின் மீப்பெரும் பாதையில் மறிகள் அவனுக்கு முன்னால் நடந்தவை.

பட்சிகளின் ஒலித்தொகை அடர்ந்த கொறங்காடுகளில் கொழுக்கட்டான் புற்கள்,மழைக்குப் பின்னாளில் கொழுத்து வளரும்.செந்தீயின் சிறுதுளிகளாய் காடெங்கும் மொட்டுப்பாப்பாத்திகள் தன் போக்கிலிருக்கும் குழந்தைகளைப்போல் அலைந்துகொண்டிருக்கும் ஆடி மாதத்தில் காடெங்கும் வளர்ந்திருக்கும் சிறுமுட்கள் கொத்தித் தீவைத்து உச்சிமுட்கிளைகள் வெட்டி முயல்புகவும் துளையின்றி அடைத்த வேலிகளில் கனிந்தொழுகும் பழத்தின் சாறோடு கொவ்வைகள் பின்னும்.வெள்ளாடுகளுக்கென்று அவற்றின் சிறுதெய்வங்களால் மண்ணில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் மிஷ்டைக்கொடிகளின் பச்சையப்பால் நிரம்பிய இலைகள் கொவ்வைகளுக்கிடையில் நிரம்பியிருக்கும்.

மானுடக் கண்களுக்குப் புலப்படாது எழு பொன்பாத்திகள் வளர்ந்து காலத்தை மேவிக்கிடக்கும் ஊதியூர் மலைக்கு நாற்திசைகளிலும் இருபது மைல்கள் காணியாளர் கொறங்காடெங்கும் மறிகள் ஏகாந்த அமைதியில் மேவெடுக்க,மலையில் வங்கு பறித்து வாழும் வங்க நரிகளும்,புதரடைந்து வாழும் குள்ள நரிகளும் மயங்கும் மனிதப் பார்வைப்புலனுக்கு நாயின் உருவெடுத்து இளந்தசையில் உடலெடுத்த இளங்குட்டிகளை நத்தி வேலிகளைத் துளைக்கப் பார்க்கும்.ஆனாலும் களைக்காத கண்களோடும் காலடியில் படுத்திருக்கும் வேட்டையோடும் நொச்சிமிலாறில் சீவப்பட்ட கட்டுத்தடி ஊன்றி பண்டக்காரர்கள் காவல் புரிவதைக்கண்டு நரிகள் எருவித்திரும்பி மீண்டும் மலைக்கே ஓடும்.

மறிகளின் உடல்மொழி பழகிவிடும் பண்டக்காரனுக்கு அவை விளையாட்டு பொம்மைகளாகும்.பெயரிடுபவனின் தீர்க்கமான அழைப்பிலும் அதட்டலிலும் மறிகள் தம் பெயர்களை அறிந்து பணியத்தொடங்கும்.அவற்றின் வாசனை தம் உடலில் கழுவமுடியாத வண்ணம் ஏறிக்கொண்டிருக்கையில் கண்ணெதிரே கிடாய்கள் மறிகளின் சிறுநீர் நக்கி பருவமறிவது கண்டும், வெளி நீண்ட செவ்வவண்ண பசுந்தசையொளிரும் குறியோடு மறிகளைப் புணர்வது கண்டும் தம் காற்சட்டைக்குள் திரளும் பதின்ம வயதுக் குறியின் வினோதக் கிளர்ச்சியில் கெக்கலிச் சிரிப்பெழுப்புவான்.வெயில் கறங்கும் மதியங்களில் மறிகள் ஈனும்போது அவன் தாய்மைத்தவிப்பில் நிலைகொள்ளாது நிற்பதும் அமர்வதுமாய் தவித்து மறி ஈன்ற குட்டியின் சிறுமுகங் கண்டு குதூகலித்து மறிகளின் நஞ்சை கவையில் சுருட்டி கள்ளிப்பால் போல தாய்மறி அடர்ந்து பால்சொரிய பிராத்த்தித்து கள்ளிமரத்தில் எறிவான்.

காட்டுக்கு காடு வயோதிகத்தில் பழுத்துவிட்ட சிறுகிணறுகளை வேம்பும் அரசும் படர்ந்து மூடியிருக்க,சல்லடையாய் ஒளியொழுகும் கிணற்றுக்குள் அடர்பச்சையில் கருநீர் மின்னும்.மண் சரிந்த மேட்டில் முயல் பதுங்கியிருக்கும்.சிலபொழுது நீரருந்த வரும் நாரைகள் சில நின்றிருக்கும்.சுவர்களின் சிறு வங்குகளில் மொன்னையோ கொம்பேறியே குடியிருக்கும்.வடக்கயிறு கொண்டு நீர் சேந்தி பாசிபடர்ந்த தாழிகளில் பண்டக்காரன் நீர் நிரப்ப மறிகள் நீரசையாமல் அருந்தும்.பொழுது மேற்கே சாயும் பின் மதியங்களில் மறிகளை இட்டேறிகளில் சிறுமேவெடுக்க விட்டவாறே பண்டக்காரன் தோட்டமடைவான். தோட்டத்து வயல்களிலும் வரப்பிலும் மறிகள் மேயும் மாலைகளில் இளங்குட்டிகள் சிறுத்த குதிரைகளைப் போல் தாவித்தாவி அணிவகுத்து ஓடுகையில் கொலுஞ்சிச் செடிகளின்மேல் தும்பிகள் ரீங்காரித்துப் பறக்கும்.

மறிகள் பட்டி அடைந்ததும் குட்டிகள் தாய் மறியின் மடிகவ்வி இசித்து பாலுண்ணும்.பசியாறி கிறங்கிய குட்டிகள் கதகதப்பான கொடாப்புக்குள் விடப்படுகையில் மறிகள் மெல்ல படுத்து அசைபோடத்துவங்கும்.மசைக்காலத்தில் மூன்றாம் ஜாமம் "பட்டியாளும் நேர" மாய் இருந்தது.சீமெண்ணை வாசனை புகையாய் கவிழும் லாந்தர் விளக்கொளியில் கம்பஞ்சோறோ,சோளச்சோறோ உண்டு பசியாறிய அப்பாரயன்கள் புகையிலை அதக்கி ஒரு நேரம் வினாயகன் கோவில் கல்திண்ணைகளில் அமர்ந்து ஊர்க்கதை பேசிவிட்டு கவையோடும் புகையிலைக்காரத்தோடும் நிலா வெளிச்சத்தில் பட்டியாள்வதற்காக காடுகள் நோக்கி ஊருக்கு நாற்திசைகளிலும் நீளும் இட்டேறிகளில் போனார்கள்.பட்டிகளுக்குப் பக்கத்தில் நகர்ந்துகொண்டேயிருக்கும் ஆமைக்குடிசின் சிறுகயிற்று கட்டிலில் படுத்திருக்கும் அவர்கள் காதுகளை பட்டிப்படலின் மீது வைத்துவிட்டு கண்களை உறக்கத்திற்குக் கொடுப்பார்கள்.மசைத்தன்மையை இழந்துவிட்ட காலத்தில் குழந்தைகள் வளருமுன்னேயே அப்பாரய்யன்கள் மறைந்துவிடுகிறார்கள்.

காணியாளன் நிலத்தின் மேலும் வாழ்வின் மேலும் வெயில் எப்போதும்,மழை எப்போதாவதும் பொழியும்.பண்டம்பாடிகள் மழைமேகத்தைப்போல் வனப்பு கொண்டிருந்தால்தான் அவன் குளிர்வான்.ஆனால் புழுதியையும் சருகுகளையும் கருக்கொண்டு சாபத்தைப்போல் பனையுயரத்தில் சுழலும் சூலைக்காற்று நம்பிக்கைகளைக் குலைக்கும் துர் நிமித்திகமாகும்.செழித்திருந்த கொழுக்கட்டான் புற்களின் வறண்ட வேர்க்கைட்டைகள் கரையும் உயிர்தேக்கி மழைக்காய் காத்திருக்கும்.அதன் உதிர்ந்த பொறுக்கல்களை உண்ணும் மறிகள் தாழி தேடியோடி இரை கால்பங்கு நீர் முக்கால் பங்கென வயிறு நிறைத்து காற்றை அசைவாங்கும்.கொறாங்காட்டுக் கிணறுகள் தமது நீர்மையை இழக்கும்போது ஆழம் போய்விட்ட தோட்டத்துக்கிணறுகளிலிருந்து நீர் சேந்தி காணியாளன் கொறங்காட்டு தாழிகளுக்குச் சுமப்பான்.வெக்கை கனலும் இரவில் மழையைப்போல் தொலைந்துவிட்ட நிம்மதியான உறக்கமிழந்த கண்கள் விசும்பெங்கும் பொரிந்து கிடக்கும் மீன்களை வெறிக்கையில் காடெங்கும் நட்சத்திரங்கள் எரிந்து வீழும்.சாளை வாசலில் பழங்கயிற்றுக்கட்டிலில் படுத்திருப்பவனின் மனக்குமைச்சலின் பெருமூச்சுகள் பேயைப் போல் அலைந்து காட்டுக்குள் இன்னும் பச்சையத்தை வைத்திருக்கும் கள்ளிச்செடிகளில் அடையும்.வானம் சாம்பல் நிறமாய் விடியும் வானத்திற்குக் கீழே மூளியாய் தொங்கிக்கொண்டிருக்கும் அனாதை தூக்கணாங்குருவிக் கூடுகள் பொழுதின் வெறுமையை இன்னும் கொஞ்சம் கூட்டும்.பொழுது உச்சிக்கேறும் முற்பகல்களில் மண்ணை முகர்ந்து முகர்ந்து நகரும் மறிகள், தேங்கத்துவங்கிவிட்ட கானலை கண்டஞ்சி ஒன்றுக்குள் ஒன்று புதைந்து கூட்டம் போடும்.புகையும் அதன் மூச்சொலிகள் தாங்காது வங்குகளெங்கும் அடைந்திருக்கும் மண்ணுயிர்கள் வெளியேறி அடுத்த மழைக்காலம் வரை அழியாத தாரைகளை உருவாக்கும்.நரிப்பயிரும் கடலைக்கொடியும் தேடி தோட்டம் தோட்டமாய் அலைந்து,இளைத்த காளைகள் பூட்டிய வண்டியில் சுமந்து வந்து கரையான் ஏறாதவாறு கல்லும்,கல்லின் மேல் மரக்கட்டைகளும் வைத்து காணியாளன் போர் இடுவான்.கொடிகளின் வாசனை அறிந்துவிட்ட மறிகள் போரைச் சிதைப்பதற்க்கு முன் இலந்தை முள்ளில் இடும் வேலியை, உதிர்ந்த தானிய மணிகள் தேடி அலையும் எறும்புகள் மட்டுமே கடக்க முடியும்.முள் விலக்கி நாளுக்கு கொஞ்சம் அள்ளிப்போட்டு நீர்வைத்து மறிகளின் பசியாற்றுவான்.

வெண்ணிற ரோமம் கொண்ட மறிகளின் மீது நோய்மை படியும்போது அது உலகின் மொத்த நோய்மையின் வீரியத்திலிருக்கும்.தையில் தலை நடுங்கி மாசியில் மரம் நடுங்கும் பனிக்கு மறிகள் வாய்ச்சப்பை கண்டு மேவெடுக்காமல் சுருண்டுகிடக்கையில் மனம் வறளும் காணியாளன் கற்றாழை நுங்கும் பன்னி நெய்யும் மறிகளுக்கு வார்த்து அவற்றின் நோய்மை தீர குலதெய்வத்தின் திசையில் கும்பிட்டு நிற்பான். நோய்மை தெய்வத்தையும் சூழும் கணங்களில் உப்பிய வயிற்றோடு மல்லாந்து கிடக்கும் மறியின் சவத்தை தோட்டத்தின் வடக்கு மூலையில் புதைத்து நாய் நரி அண்டாமல் முள்வைத்து மேலே கருங்கல் வைத்து பொடக்காலியில் தலை முழுகுவான்.தாயிழந்த இளங்குட்டிகள் பட்டிக்குள் அலைந்து தவிப்பது கண்டு இரு பொழுதுகளில் நீரில் கொஞ்சம் பசும்பால் கலந்து வார்த்து உயிர்வளப்பான்.மறிகளுக்கு நோய் நொடி அண்டக்கூடாதென்று தெற்கே பகவான் கோவிலுக்கு போய் நீறும் தீர்த்தமும் கொணர்ந்து தெளித்து அச்சம் களைபவன் பட்டிக்கு அமைக்கும் தார்ப்பாலீன் கூரையின் மீது விடியலில் பனி நீர் மழையைப்போல் தேங்கிக்கிடக்கும்.

காலம் தன்னை எதிரெதிர் பருவங்களாக உருமாற்றிக்கொண்டு நகர்கிறது.மாறும் பருவங்களுக்கு தக்கவாறு மறிகளைப் பேணுவது காணியாளனுக்கு இடப்பட்ட கட்டளை.சுழற்றி சுழற்றி மேகாற்று வீசும் காலங்களில் மேகோட்டு படலுக்கு இரண்டடுக்கு பனையோலை வேய்ந்து பட்டிக்கும் நாற்புறமும் வடக்கயிற்றில் விசுவடித்துக் கட்டுவான்.பட்டிக்கு மேலே மேகாற்று பர்ரென்று பறக்கும் போது பட்டிக்குள் மறிகள் மெல்லிய கதகதப்பில் அசைவாங்கும்.அடைமழைக்காலம் வரும்போதோ தொண்டுபட்டியில் தென்னங்கீற்று கொண்டு கூரைவேய்ந்து அதில் அடைப்பான்.சலமூலையில் மின்னல் மின்னி,ஊதியூர் மலையில் இடிஇடித்து பெருங்காற்று கொண்டுவரும் கார்மழை, தட்டோட்டு கூரைவேய்ந்த சாளையில் மோதி எழுப்பும் சப்தம் கேட்டு அரை விழிப்படையும் காணியாளர்களின் கனவுகளில் முயங்கும் நனவில் தவளைகளின் "கொரக் கொரக்" சப்தமும்,பட்டியில் மறிகள் ரோமமுதறும் ஓசையும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

தோட்டத்திற்கு தோட்டம் கிழக்கு மூலைச்சரிவுகளில் நொச்சி வினோத மணத்தோடு அடர்ந்திருக்கும்.வளைவின்றியிருக்கும் நொச்சிமிலாறுகள் வெட்டி சிறு கணுவுகள் செதுக்கி வரிந்து இறுக்கி கட்டி கிணற்றுக்குள் எறியும் காணியாளன் பனைமட்டை உரித்து அவுனி கிழிப்பான்.பண்டிகைக்கு முந்தைய மாதங்களில் ஊரிலிருந்து கொடாப்புகள் செய்வதில் கைதேர்ந்த அப்பிச்சிமார்கள் மூக்குப்பொடி டப்பாவோடும் மஞ்சள் பை நிறைய முறுக்குகோடும் பேரன்மார் வீடுகளுக்கு வருவார்கள்.தென்னை மரத்தடியில் காணியாளன் மாமனாரோடு கொடாப்பு முடைகையில் தோட்டத்தில் நிறைந்திருக்கும் புதிய உயிர்க்களையை பிள்ளைகள் உணர்ந்து மகிழ்வார்கள்.

பண்டிகைக்கு பண்டிகை ஒரு புதுப்படலேனும் கட்டுவதென்பது காணியாளன் சாங்கியம்.புதுப்படல் இல்லையென்றால் புது தரம்புக்கட்டைகள்.தரம்புக்கட்டைகள் இல்லையென்றால் புத்தவனி கொண்டு கட்டுக்கள் பிரி மாற்றிக்கட்டுவான்.வருஷத்திற்கு வருஷம் புது மூலைக்கயிறுகள் மின்னும்.பண்டிகை நாளில் நிற்பதற்கு நேரமின்றி அலைபவன் வேப்பங்கொத்தும் பூலைப்பூவும் ஆவாரங்கொத்தும் சேர்த்துக்கட்டி தோட்டத்தின் மூலைகளுக்கு காப்பு கட்டுவான்.பச்சரிசி,கருப்பட்டி,வெல்லம்,கரும்பு,சந்தனம் சிவப்பு சாம்பிராணி,பழம் வெத்தலைபாக்கு எல்லாம் மஞ்சள்பையில் நிறைந்திருக்கும். திருநாள் விடிகையில் பண்டம்பாடிகளை கழுவத்துவங்குவான்.சலசலத்து ஓடும் தொட்டி நீரில் மறிகள் தம் ஓராண்டு முடை கழித்து ஒரு கணம் நினைவழிந்து ரோமமுதறி நடந்துபோகும்.இளவெயில் வீசும் திருநாள் முன்மதியத்தில் பஞ்சுப்பொதிகளைப்போல் வெளுத்த உடலோடு மேவெடுக்கும் மறிகளை தூரத்திலிருந்து பார்க்க வெள்ளைப் பட்டாம்பூச்சிகளாய் அசையும்.வெள்ளாமையில் மேய விட்டேனும் மறிகளை அல்லை எடுக்க வைப்பது அன்றைக்கு அவன் விதி.

காணியாளன் திருநாளில் பட்டியை இடம் மாற்றுவதில்லை.தென்னங்கீற்றுச் சீவையில் புழுக்கைகள் கூட்டி நீர் தெளித்து முக்கற்கள் வைத்து அடுப்புக் கூட்டுவார்கள் வீட்டுப்பெண்கள்.புளிதேய்த்து விளக்கிய வெங்கலப்பானையில் கரிப்புகை மெல்ல படிவது துய்ப்பின் பேரழகைக் கொடுக்கும்.கருப்பராயனுக்கொன்று,அப்பாரய்யனுக்கொன்று என்று என்றும் இரட்டைப்பொங்கல்.அப்பாரய்யன் பொங்கல் வடும்பு கட்டும்போது தீ தளர்த்தி பொங்கல் விழும் திசைக்கு யாவரும் காத்திருப்பார்கள்.கருப்பராயன் பொங்கல் கிலேசமூட்டும் திசையில் விழுந்தாலும் அப்பாராயன் பொங்கல் என்றும் ஈசானிய மூலையில் விழுந்து வம்சத்தை ஆசிர்வதிக்கும்.வானில் திசைகள் தகர்த்து நிரம்பும் பெருந்தகப்பனின் ஆன்மா யாருமறியாமல் சில நீர்த்துளிகளாய் நிலமடைந்து சாந்தம் கொள்ளும்.

பட்டியின் நடுவே கொடாப்பு வைத்து கொடாப்பின் முன்னால் தெப்பம் தோண்டுவான் காணியாளன்.பிள்ளைகள் காடெங்கும் தேடி வெங்காச்சாங்கல்லில் சாமி கண்டு கொண்டுவருபவை தெப்பத்தின் ஓரத்தில் கடவுளர்களாய் வீற்றிருக்கும்.பண்டம்பாடிகளுக்கு பட்டிப்படல்களுக்கு காவி பூசி சாம்பிராணி ஊதுபத்தி கொளுத்தி தீபாராதனை காட்டி படையல் வைத்து விழுந்து கும்பிடும் காணியாளன் குடும்பம்.முதல் படையல் பட்டிக்கு காவலிருக்கும் வேட்டைக்கு.இரண்டாம் படையல் பண்டம்பாடிகளின் தாயான பசுவுக்கு.பட்டியையும் பண்டம்பாடிகளைச் சுற்றியும் காணியாளன் அசன நீர் தெளித்து நோம்பி முடிக்கையில் பிள்ளைகள் கரும்பு கடிக்கத்துவங்குவார்கள்.

ஊருக்கு ஊர்,ஆறடி உயரமும் சுருட்டு மீசையும் கொண்ட நாவிதர்கள் ஆட்டு வியாபாரம் செய்வார்கள்.அவர்களின் வீட்டோடு ஒட்டியிருக்கும் தொண்டுபட்டிகள் எப்போதும் கிடாய் குசுவின் வாசனை கமழ்வது.காட்டுக்கு காடு பட்டிக்குப் பட்டி போய் இளங்குட்டிகள் தொடை பிடித்து நப்பு பார்த்து நாவில் தடவிய தந்திரத்தோடு விலை பேசுவார்கள்.அது காணியாளனுக்கும் வியாபாரிக்கும் ஒட்டியும் விலகியும் நடக்கும் மாபெரும் நாடகம்.காணியாளன் கொஞ்சம் இறங்க அவர்கள் கொஞ்சம் ஏற பழையசோற்று நேரம் பேரம் படிந்துவிடும்.பெற்ற முன்பணத்தை காணியாளன் பழைய பெட்டிக்குள் வைத்துப்பூட்டுகையில் வீட்டுப் பெண்கள் விலை விசாரித்து சலிப்பான பதிலுக்கு ஒரு பாட்டம் புலம்பி,வசை பொழிந்து தீர்ப்பார்கள்.

வெள்ளிக்கிழமை அந்தியில் பொழுது மசங்கும் நேரம் வியாபாரிகள் வருவார்கள்.குட்டிகள் பிடித்து பிணைத்துக்கட்டி ஓட்டிப்போய் தம் தொண்டுப்பட்டியில் அடைத்து நிலவு கீழிறங்கும் வெள்ளியின் பின்னிரவில் புகையும் பீடியோடு குண்டடஞ் சந்தைக்கு ஆடுகள் ஓட்டுவார்கள்.வாகனங்கள் அடங்கிவிட்ட சாலையில் இளங்குட்டிகள் கேரளத்துக் கசாப்புக் கடைகளில் தோலுரிக்கப்பட பிதிரழிந்து நடக்கும்.சாளையும் பட்டியும் அன்றைக்கு நிம்மதியான உறக்கங் கொள்வதில்லை.விடிய விடிய குட்டியை தேடிக்கதறும் மறியின் குரல் காணியாளனின் உறக்கத்தை அறுக்கும் வாளாக இறங்கும்.இன்னும் பால் வற்றிவிடாத தாய்மறியின் தேடலை வெறிக்கும் மரப்பல்லிகள் எந்த சகுனமும் சொல்லாது பட்டிப்படலில் அடங்கிக் பதுங்கியிருக்கும்.அதிகாலையில் வேப்பங்குச்சியில் பல் துலக்கி வறக்காப்பி குடித்து இருள் விலகும் முன் மிதிவண்டி மிதிப்பான்.அவனுக்கு முன்னால் இளங்குட்டிகள் போன அதே பாதையில்.பாதையில் இன்னும் விலகாத குட்டிகளின் வாசனையில் நீர் சுரக்கும் கண்களை தேற்ற அவன் பீடி பற்ற வைத்துக்கொள்வான்.

புழுக்கைகளின் வாசனையும் புழுதியும் மிதக்கும் குண்டடஞ் சந்தைக்கு அவன் போகும்போது போர்த்திய போர்வையோடும் கட்டிய உருமாலோடும் மினுங்கும் பீடியோடும் யாவாரிகள் முசுவாக விலை பேசிக்கொண்டிருபார்கள்.பொழுத் பச்பச்சென்று விடியும்போது குட்டிகள் டெம்போவில் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கும்.காணியாளனுக்கு எல்லா குட்டிகளும் தன் குட்டியாக மயங்கித் தோன்றும்போது கைமாறும் பணம் கபட மகிழ்வைபோல் உறுத்தத்துவங்கும்.காயும் கனியும் பொரியும் கடலையும் வாங்கி திரும்புபவனின் பாதையில் இளங்குட்டிகளைப் பற்றிய நினைவழிந்து குதியாளம் போடப்போகும் பிள்ளைகளின் நினைவு மட்டுமே இருக்கும்.அவன் வாங்கிவரும் பொரிகடலை தின்று காப்பி குடித்து விடுமுறை நாளில் பிள்ளைகள் ஆடுமேய்க்கப் போவார்கள்.

காலத்தின் சகட உருளில் பிள்ளைகள் வளர்கிறார்கள்.அதே உருளலில் பிறவைக் குட்டிகள் மறிகளாகின்றன.குட்டிகள் ஈனுகின்றன. நிலத்தில் புற்கள் வளர்கின்றன..புற்கள் மடிகின்றன.காணியாளன் பிள்ளைகளுக்கு புதுத்துணி வாங்க,பள்ளிக்கட்டணம் கட்ட,ருதுவான பெண்ணுக்கு தெரட்டி செய்ய குட்டிகள் விற்றுக்கொண்டிருக்கிறான்.கல்லூரியில் படிக்கும் மகன் ஊருக்கு வரும் வாரத்தில் ஒரு குட்டி சேர்த்தே விற்கிறான்.பிள்ளைகள் ஆளாகிவிடும்போது மூப்பின் திரை காணியாளனைச் சூழ்கிறது.அவனது அந்திமத்தில் பூமி வேறுதிசையில் சுழல ஆரம்பித்துவிடுகிறது.ஊர் அவன் கண்ணுக்கெதிரே நகரமாக மாறத்துவங்குகிறது.கொறங்காடுகளில் புதிதாய் நூல்மிற்கள் சுண்ணாம்பு வெண்மையில் ராட்ஷதனாய் ஓங்கார குரலெழுப்புகிறது.பொன்வண்டுகளையும் பட்டாம்பூச்சிகளையும் அவன் கண்டு நாட்கள் வெகுவாயிற்று.தலைமுறைகளின் வாழ்வைச் சுமந்த மறிகளைக் காக்க நடந்து தேய்ந்த அவன் பாதங்கள் வலுவற்றுவிட்டன.மழை தூறும் நாளொன்றில் மறிகள் வாகனமேற்றப்படுகின்றன.அதன் சப்தம் இட்டேறியில் முழுதாக தேயும் போது மறிகள் இல்லாத தோட்டத்தின் வெறுமை மெல்ல எரியத்தொடங்குகிறது.குளம்படி பட்ட நிலம் இனியென்றும் உயிர்க்காத மெளனத்திற்குள் தன்னைப் புதைக்கத்துவங்குகிறது.பட்டிபிரித்து அடுக்கிவைத்த படல்களில் ஊரத்துவங்கும் கரையான்களின் வாசனை அவன் வயோதிகப்புலன்களில் மெல்ல ஏறத்துவங்குகிறது.

காலம் கரையானாக உருமாறி இப்பொழுது குளம்படி நிலமெங்கும் ஊர்ந்து கொண்டிருக்கிறது.


நன்றி-கல்குதிரை

No comments: