Dec 20, 2011

கண் நரம்புகளில் விரியும் புலியின் கோடுகள்-புயனஸ் ஏரிஸில் மூன்று நாட்கள்


தென்னமரிக்காவில் உள்ள உருகுவேயின் தலைநகரான மாண்டிவீடியோவில் பணி புரிய நான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டபோது இரண்டு காரணங்களுக்காக அதை பயன்படுத்திக்கொண்டேன்.ஒன்று,லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் வாசித்திருந்த நிலப்பரப்பு மற்றும் அதன் மனிதர்களை காண்பதற்கான வாய்ப்பாகவும், இரண்டாவது போர்ஹேஸ் பிறந்து வாழ்ந்த அர்ஜெண்டினாவின் தலைநகரான புயனஸ் ஏரிஸ் செல்வதற்கானதாகவும். கிளம்புவதற்கு முன் என்னுடைய பயணத்திட்டத்தில் புயனஸ் ஏரிஸ் மற்றும் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ இரண்டு நகரங்களும் பிரதானமாக இருந்தன.முடிந்தால் மரியோ வர்கஸ் லோசாவின் பெருவும்.என் சக அலுவலக நண்பர்கள் இருவரோடு இருபத்தாறு மணி நேரமும்,மூன்று கண்டங்களும்,ஒரு பெருங்கடலும் கடந்து பின்னிரவொன்றில் மாண்டிவீடியோ விமான நிலையத்தில் இறங்கியபோதே நான் என்னுடைய கடந்த கால வாழ்விலிருந்து நழுவி வேறொன்றாய் உருமாறிக்கொண்டிருப்பதின் வாசனையை உணர்ந்தேன்.உலகின் கீழ்க்கோடியில் திரிந்தகொண்டிருந்த நான் ஒரே நாளில் புவிப்பரப்பின் தென்கோடியில் நின்றுகொண்டிருப்பதின் விஞ்ஞானம் சார்ந்த சாத்தியமும் ஆகாய மார்க்கத்தில் வழியெங்கும் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் மரணபயமும் X வடிவத்தில் மூளைக்குள் சிக்கியிருந்தன.

என் அலுவலக வேலை எவ்வளவு கடுமையானது என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு தினமும் அது கொடுத்த களைப்பு அதீதமானது. நாட்கள் வருவதும் போவதும் தெரியவேயில்லை. நானோ வார இறுதிகளில் மென்மையாக பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தேன்.என் களைப்பின் பொருட்டு பயணத்திட்டத்திலிருந்து பெரு நீங்கியது.பிறகு மெல்ல ரியோ-டி-ஜெனிரோவும் நீங்கியது.அது மிகச்சரியாக பிப்ரவரியில் லத்தீன் அமெரிக்காவெங்கும் கார்னிவல் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம்.ஆனால் அப்பொழுது என் அலுவல் சிக்கல்கள் கொடுத்த தொழில்சார்ந்த அயற்சியால் நான் வேறு எதையும் யோசிக்க முடியாதவனாக இருந்தேன்.எடுத்துச்சென்றிருந்த வண்ணநிலவனின் புத்தகங்களினாலும் போர்ஹேஸ் கவிதைகளாலும் இலக்கிய பிரக்ஞையை தக்கவைத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். மே மாத இறுதியில் இந்தியா திரும்புவதாக திட்டமிட்டிருந்த நான், நிமிர்ந்து பார்த்த போது எப்ரல் மாத இறுதியிலிருந்தேன்.என் பயணரேகையில் போர்ஹேஸின் புயனஸ் ஏரிஸ் அழிவதில்லை என்று எனக்கு நானே உரக்கக்கூவிக்கொண்டு பயணத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தேன்.

நான் வைத்திருந்த உருகுவே விசாவின் மூலம் லத்தீன் அமெரிக்காவின் எந்த தேசத்திற்கும் எளிதாக செல்லமுடியும்.செய்யவேண்டியதெல்லாம் அந்தந்த தேசங்களின் தூதரகத்திற்கு சென்று விண்ணப்பத்தோடு கடவுச்சீட்டு மற்றும் பயணத்திட்டத்தை (தங்குமிடம்,போக்குவரத்து விவரங்கள் போன்றவை) சமர்ப்பித்தால் மூன்று நாட்களில் விசா கிடைத்துவிடும்.உருகுவே என்பது வரலாறு மற்றும் கலாச்சார ரீதியாக அர்ஜெண்டினாவின் நீட்சிதான்.உருவேயிலிருந்து புயனஸ் ஏரிஸ் செல்ல மூன்று விதமான மார்க்கங்கள் இருக்கின்றன.விமானம்,தரைவழி மற்றும் படகுப்போக்குவரத்து.இவற்றில் என் பயணத்திட்டம் ferry என்ற வகையில் வரும் பெரிய பயணிகள் படகில் செல்வதாக இருந்தது.படகு வழியாக செல்லவேண்டுமென்றால் மாண்டிவீடியோவிலிருந்து இரண்டரை மணி நேர தூரத்தில் இருக்கும் போர்த்துகீசிய கலாசார பாதிப்புள்ள நகரமான கொலோனியாவிற்கு சென்று அங்கேயிருந்து படகு வழியாக புயனஸ் ஏரிஸிற்கு ஐம்பது நிமிட பயணம்.இந்த படகுசேவையை கொலோனியா எக்ஸ்பிரஸ்,புக்கேபூஸ் என்ற நிறுவனங்கள் வழங்குகின்றன.நான் கொலோனியா எக்ஸ்பிரஸில் செல்வதாக முடிவெடுத்திருந்தேன்.இப்போது என்னிடம் மூன்று வாரங்கள் இருந்தன.மே இறுதியில் இந்தியா திரும்புவது உறுதியாகி அதற்கான விமான பயணசீட்டுகளும் உறுதியாகி இருந்தன.

மே பதினொன்றாம் தேதி கொலோனியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சென்று விசாரித்தேன்.(துரதிரஷ்டவசமாக)அங்கே அரைகுறையாக ஆங்கிலம் பேசும் ஒரு இளைஞன் வெவ்வேறு விதமான பயணத்திட்டங்களை விளக்கினான்.மே 20,21,22 ஆகிய மூன்று நாட்களுக்கு மொத்தம் 163 அமெரிக்க டாலர்கள்.இதில் போக்குவரத்து செலவு,தங்குமிடம் மற்றும் இரண்டு நாட்களுக்கான காலை உணவு அடங்கும்.பல முறை என் பயணதேதி மற்றும் தேவைகளை விளக்கிய பின் 50 டாலர்களை முன்பணமாக செலுத்த அந்த இளைஞன் எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டு அர்ஜெண்டினா தூதரகத்திற்கு ஒரு கடிதம் கொடுத்தான்.ஒரு மணி நேரம் அவனிடம் ஆங்கிலத்தில் பேசிக்களைத்திருந்த நான் அதை வாங்கி புரட்டிக்கூடப் பார்க்கவில்லை.மறு நாள் அர்ஜெண்டினா தூதரகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போதுதான் அதில் அவன் என் பயணத்தேதியாக மே 15 ஐ குறிப்பிட்டிருப்பதை கவனித்தேன்.எனக்கு சந்தேகமாக இருந்தாலும் என் இந்திய மனம் அதை சமாதானப்படுத்த விண்ணபத்தையும் கடவுச்சீட்டையும் கொடுத்துவிட்டு திரும்பினேன்.வியாழனன்று நான் திரும்ப தூதரகத்திற்குச் சென்றபோது என் கடவுச்சீட்டில் முத்திரை இடப்பட்டு தயாராக இருந்தது.கடவுச்சீட்டை வாங்கிக்கொண்ட பின்பும் கூட எனக்கு உருகுவேயர்களின் மன இயல்பு தெரிந்திருந்ததால் அந்த இளைஞனை தொலைபேசியில் அழைத்து விசாரிக்கலாமென்று நினைத்த்தாலும் நான் செய்யவில்லை.மறு நாள் வெள்ளியன்று என் பயணத்திட்ட்த்தை உறுதிப்படுத்தச் செல்லுகையில் அவன் என் பயணத்திட்டம் முழுவதையும் அந்த வாரத்திற்கு பதிவு செய்திருந்து ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தான்.பின் நிகழ்ந்த வாக்குவாதத்தில் அந்த இளைஞன் என்னை மறுபடியும் அர்ஜெண்டினா தூதரகத்திற்கு சென்று அவன் கொடுத்த கடிதத்தின் நகலை வாங்கி வரச்சொன்னான்.தவறு தன்னுடையதென்றால் முன்பணத்தை திருப்பி தருவதாகவும் இல்லையென்றால் நிறுவன விதிகளின்படி தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கூறிக்கொண்டிருந்தான்.மிகுந்த சலிப்போடு ஒரு மால்பெரோவை பற்றவைத்துக்கொண்டு மெல்லிய பதட்டத்தோடு யோசித்தேன்.அடுத்த வாரம் நான் இந்தியா திரும்பவேண்டும்.இருப்பதோ இந்த ஒரு வார இறுதிதான்.இவ்வளவு தூரம் வந்துவிட்டு புயனஸ் ஏரிஸ் செல்லாமல் இந்தியா திரும்புவதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை.பிறகு அவனிடம் இந்த பயணத்திட்டத்தை அப்படியே விட்டுவிட்டு நான் புதிதாக ஒன்றை பதிவுசெய்ய முடியுமாவென்று கேட்க அவன் ஒப்புக்கொண்டான்.ஆனால் பிரச்சனை இப்போது பழைய பயணத்திட்டத்தில் விடுதிகள் எதுவுமில்லை.இருப்பதோ முன்னூறு டாலர் பயணத்திட்டம்தான்.எனக்கோ தூரத்தில் போர்ஹேஸின் கனவுப்புலிகள் வா வா என்பது போல் உறுமிக்கொண்டிருந்தன.

மே 20 காலை பத்தரை மணிக்கு கொலோனியாவை அடைந்து,அங்கிருந்து ரியோ டி லா பிளாஸா நதியின் வழியே படகுப்பயணம்.உருகுவேக்கும் அர்ஜெண்டினாவிற்குமிடையே இருக்கும் இந்த நதியோடுதான் அட்லாண்டிக் ம்காசமுத்திரம் கலக்கிறது. நான் இதை அட்லாண்டிக் மகாசமுத்திரமாகவே மனதில் கொண்டேன்.போர்ஹேஸ் இந்த நதியின் அலைகள் குதிரை பழுப்பு வண்ணம் கொண்டதாக சொல்கிறார்.பிரயாண தூரம் முக்கால்வாசிக்கு அந்த அலைகளையே வெறித்துக்கொண்டிருந்தேன்.முதன் முதலாக நீர்வழிப்பயணம். பயத்தைச் சமாதானப்படுத்திக்கொள்ள உலகெங்கும் வாழ்ந்த கடற்கொள்ளையர்களை நினைத்துக்கொண்டேன். நாற்பது நிமிட பயணத்திற்குப் பின் தூரத்தில் பனிமூட்டத்தினிடையே போர்ஹேஸின் புயனஸ் ஏரிஸ் துலங்கத் தொடங்கியது.அவர் புயனஸ் ஏரிஸை காற்றைப்போல் நீரைப்போல் தொடக்கமும் முடிவுமற்ற ஒன்றாக தனக்கு தோன்றுவதாக குறிப்பிடுகிறார்.அவர் தன் வாழ்நாள் முழுக்க எழுதியதில் ஒரு நூறு கவிதைகளை தவிர நான் பெரிதாக எதையும் வாசித்ததில்லை. இருந்தாலும் மானுடம் தன் மெய்மை மற்றும் அறிவுசார் தேடலில் உச்சங்களை கண்டடைந்தபின் உலகெங்கும் எழுதப்படப்போகும் இலக்கியத்தைத்தான் போர்ஹேஸ் கடந்த நூற்றாண்டிலேயே எழுதினார் என்று தோன்றுகிறது.மேலும் அந்தகத்தின் வழியே அவர் கண்டது ஒரு மாபெரும் தரிசனம்.

முதல் நாள் சிட்டி டூர் எனப்படும் நகரச் சுற்றுலாவிற்கு பதிவு செய்திருந்தேன்.போர்ஹேஸ் வாழ்ந்த நகரின் தென்பகுதியான பலெர்மோவில் கால் நடையாக சுற்றுவது மற்றும் டாங்கோ நடனம் காண்பது என்பதைத் தவிர மற்ற இரண்டு நாட்களுக்கு என்னிடம் குறிப்பிட்ட திட்டம் என்று எதுவுமில்லை.விடுதியின் கறுப்பு சூட் அணிந்திருந்த வரவேற்பாளர்கள் நன்றாக ஆங்கிலம் பேசினார்கள். வரவேற்பரையில் உச்சஸ்தாயில் பாடப்பட்ட ஓபரா பாடலொன்று மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. லத்தீன் அமெரிக்கர்களின் இசைவேட்கை அலாதியானது.காலையிலிருந்து எதுவும் உண்டிராத எனக்கு வீதியின் முனையிலிருந்து உணவு விடுதியில் பீட்ஸா மட்டுமே உண்ணக்கூடியதாக இருந்தது.திரும்பி அறைக்கு வருகையில் வரவேற்பாளர்களிடம் டாங்கோ நடனம் காண எது சிறந்த இடம் என்று விசாரிக்க, நான் விரும்பினால் டாங்கோ நடனம் முதன் முதலாக பிறந்த நதியோரத்தில் இருக்கும், இன்னும் முழுக்கவும் கலை வடிவத்திலேயே நிகழ்த்தப்படும் மாடரோ டாங்கோவில் மறுநாளுக்கு பதிவு செய்வதாக கூறினார்கள்.அவர்களிடம் பதிவு செய்ய கேட்டுக்கொண்டேன்.

மதியம் மூன்று மணிக்கு துவங்கிய சிட்டி டூருக்கு என்னை அழைத்துச்செல்ல ஒரு அழகிய இளம் வழிகாட்டி வந்தாள்.அவள், என் தந்தையாரின் பெயரை என் பெயராக அதிலும் உச்சரிப்பு சரியாக வராமல் பாதியாக விளிப்பதைக் கேட்க எனக்கு வேடிக்கையாக இருந்தது.ஒரு வட்டவடிவமான சிவப்பு நிற ஸ்டிக்கரை என் ஜெர்கினில் ஒட்டினாள்.எதற்கு என்று நான் கேட்க பேருந்து மூன்று இடங்களில் நிற்குமென்றும் அப்போது பயணிகள் வெகுதூரம் பேருந்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டால் அவர்களை அடையாளம் காண்பதற்கு இது உதவும் என்றும் கூறினாள். நான் எப்படியென்று கேட்கவில்லை.அர்ஜெண்டினாவிற்கு வர எது பிரதான காரணம் என்று கேட்க நான் “போர்ஹேஸ்” என்க அவள் என்னை ஆச்சரியமாக பார்த்தாள்.என் தாய்மொழி எதுவென்றும் அதுவே அந்த நாட்டு மக்கள் எல்லோராலும் பேசப்படுகிறதா என்று கேட்டாள்.நான் அவளுக்கு இந்தியாவின் மும்மொழிக் கொள்கை பற்றி விளக்கினேன்.என்னோடு மேலும் வெவ்வேறு தேசங்களிலிருந்து சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகளை ஒவ்வொருவராக ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட அவள் நகரத்தின் வரலாறு மற்றும் அந்தந்த இடத்தின் சிறப்புகளை ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கினாள்.நான் பாதி நேரம் அதை கவனிக்கவேயில்லை.புயனஸ் ஏரிஸின் கட்டிடக்கலையிலும் சாலைகளில் போய்க்கொண்டிருந்த ஸ்பானிய பேரழகிகளின் வனப்பிலும் லயித்திருந்தேன்.புயனஸ் ஏரிஸின் கட்டிடங்கள் அபரிமிதமான ரசனை கொண்ட கலைமனங்களின் சாட்சியாக இருக்கின்றன.

மூன்று மணிக்குத் துவங்கிய பயணம் ஆறு மணியளவில் முடிந்தது.இதில் முக்கியமாக புயனஸ் ஏரிஸ் பலகலைக்கழகம்,உலகின் மிகப்பெரிய அவென்யூவான 9 டி அவெனிதா ஜீலை,ஒப்லிஸ்கோ நினைவுச்சின்னம்,தியோட்டர் கொலோன், அர்ஜெண்டினா நாடாளுமன்றம்,ஜப்பானிய பூங்கா,ரஷ்யன் ஆர்தடாக்ஸ் சர்ச்,சான் மார்ட்டின் சதுக்கம்,ப்ளோரலிஸ் ஜெனிரஸியா,கால்பந்து மைதானம்,கேமிண்டோ ஆகிய பகுதிகளின் வழியாகச் சென்று ஒவ்வொரு பயணிகளையும் அவர்கள் தங்குமிடத்திற்கு அருகில் இறக்கி விடுவதோடு முடிந்தது.இது எனக்கு ஒரு கலவையான அனுபவமாக இருந்தது.இதில் என்னைக் கவர்ந்தது அர்ஜெண்டிய கலைஞரான எட்வர்டோ பெர்னாண்டோ கேட்டலனோ உருவாக்கிய பளோரலிஸ் ஜெனர்சியா(Floralis Genercia).தாமரை வடிவலிருக்கும் இச்சின்னம் சூரிய ஒளியில் இயங்குவது.அதாவது ஒவ்வொரு காலையில் சூரியன் உதிக்கும்போது விரியத்துவங்கி அந்தி நேரத்தில் மூடிக்கொள்ளும் வகையில் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்களில் அமைக்பட்டது. நான் சென்றிருந்தபோது ஏதோ கோளாறின் காரணமாக பல நாட்களாக இயங்காமலிருப்பதாக வழிகாட்டி சொன்னாள்.ஒரு பயணி, நல்லவேளையாக அது விரிந்த நிலையில் பழுதுபட்டிருக்கிறது என்று சொல்ல பேருந்தினுள் மெல்லிய சிரிப்பலை எழுந்தது.இன்னொன்று கேமிண்டோ என்ற முழுக்க தகரத்தால் அமைக்கப்பட்ட வீடுகளையும் கடைகளையும் கொண்ட தெரு.அங்கே பலவிதமான கைவினைப்பொருட்கள்,ஓவியங்கள் கிடைக்கின்றன. நான் ”சே”வின் ஒரு போர்ட்ரெயிட்டின் விலை கேட்டேன்..பேருந்து அங்கே சென்றடையும்போதே இது பாதுகாப்பற்ற பகுதியென்றும் ஆறுமணிக்கு மேலே காவலர்கள் கிளம்பிவிடுவார்கள் என்றும் பதினைந்து இருபது நிமிடங்களில் திரும்பச்சொன்னார்கள்.சுமார் நூறு மீட்டர் நீளம் கொண்ட இந்தத் தெருவில் நான் நிஜ லத்தீன் அமெரிக்காவை தரிசித்தேன்.கருங்கற்கள் பதிக்கப்பட்ட தெருவில் நிறைய தெரு ஓவியர்கள் ஓவியங்கள் வரைந்துகொண்டும் விற்றுக்கொண்டுமிருந்தார்கள். நான் ஒரு ஓவியத்தை பார்த்து நிமிர்கையில் ஒரு தகரவீட்டின் மேலே பழுப்பு நிறப்பூனையொன்று குதித்துப்போனது.அந்தத் தெருவில் குறுக்கும் மறுக்கும் சட்டை அணிவிக்கப்பட்ட ஒரு சிறிய நாய்க்குட்டி ஓடிக்கொண்டிருந்தது.தகரவீட்டின் பால்கனியில் கறுப்பு நிற உடையணிந்த இரு வனப்பான பெண்கள் சோம்பலாய் புகைத்துக்கொண்டிருந்தார்கள். நான் மெலிதாக புன்னகைத்துக்கொண்டேன்.அந்தத் தெருவின் நடுவில் முன்பு ரயில் போய்க்கொண்டிருந்ததிற்கு அடையாளமாய் ஒரு நீண்ட தண்டவாளம் தேய்ந்துகொண்டிருந்தது.கறுப்பு நிற சீருடையணிந்த இரு காவலர்கள் கிளம்பத் தயாரகிக்கொண்டிருந்தார்கள்.

அறைக்குத் திரும்பிய நான் பக்கத்தில் ஏதேனும் புத்தகக்கடைகள் இருக்கிறதாவென்று தேடத்துவங்கினேன்.ஆனால் அத்தனையும் ஸ்பானிஷ் புத்தகங்கள்.ஒரு சில இரண்டாந்தர ஆங்கில நாவலகள்.அவ்வளவே..மூன்றாவது கடையில் மட்டும் முக்கியமானதாக தோன்றும் சில ஆங்கிலபுத்தகங்கள் இருந்தன. நான் நிக்கோஸ் கசண்டகிஸின் சுயசரிதையும் கீழைத்தேய பாலியல் கலாசாரம் பற்றிய ஒரு புத்தகமும் வாங்கினேன்.

மறுநாள் காலை ஒன்பது மணியளவில் போர்ஹேஸின் கவிதைத்தொகுப்பை எடுத்துக்கொண்டு கால்நடையாக கிளம்பினேன்.என் கையிலிருந்த நகரத்தின் வரைபடம் மிக உதவியாக இருந்தது.முதலில் சென்ற பேலஸ் ஆப் காங்கிரஸ் கட்டிடத்தின் வெளிறிய கோபுரப் பச்சை மிக வசீகரமானதாக இருக்க எங்கெங்கும் புறாக்கள் தாவிக்கொண்டிருந்தன.கட்டிடத்திற்கு முன்னாலிருந்த நினைவுச்சின்னத்தை ஒட்டிய இடத்தில் ஒரு குடும்பம் கறுப்புத் தார்ப்பாயினால் கூடமைத்து தங்கியிருந்தது.அங்கேயிருந்து 9 டி அவெனிதா ஜீலையில் நடக்கத் துவங்கினேன்.அவ்வளவு விஸ்தாரமான உலகின் மிகப்பெரிய அவென்யூ ஆறு வழிச்சாலையாக இருந்த்து.ஒப்லிஸ்கோவை பக்கத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தேன்.தியோட்டர் கொலொனின் பிரம்மாண்டத்தை தரிசித்தேன்.பல தெருக்களின் வழியே சுற்றிச் சுற்றி சான் மார்டின் சதுக்கம் வந்து சேர்ந்து அங்கே போர்ஹேஸின் “San martin copy book” கவிதைகளை சிலவற்றை அமர்ந்து வாசித்தேன்.நான் சென்றிருந்தபோது சான் மார்ட்டின் சதுக்கத்தில் புயனஸ் ஏரிஸ் கலாச்சார நிகழ்வின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உதவியுடன் மார்த்தா மின்ஜுன் என்ற அர்ஜெண்டின கலைஞர் சுமார் முப்பதாயிரம் புத்தகங்களைக்கொண்டு வடிவமைத்திருந்த “புத்தகங்களின் பேபல் கோபுரம்”(Tower of Babel of Books”) கண்டு பெரும் கிளர்ச்சியடைந்தேன்.இன்னொரு புறத்தில் ஒரு இசை நிகழச்சிக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள்.கறுப்பு வண்ண சூட் அணிந்த ஐரோப்பிய இசைக்குழு மேடையேறிக்கொண்டிருந்தது. சூரியன் உச்சிக்கேறிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தக்குழு பீதோவன் மற்றும் மொசார்ட்டின் சிம்பொனிகளை மிக அற்புதமாக வாசிக்க எனக்கு புயனஸ் ஏரிஸில் இந்த இரண்டையும் கண்டு கேட்க ஆசிர்வதித்த என் படைப்புத்தேவதையை மானசீகமாக தொழுதேன்.இசைக்குழுவில் இருந்த இரண்டு பேரழகிகள் கண்கள் மூடி வயலினிசைத்தது இசையின் பெளதீக வடிவமாக தோன்றியது.

சான் மார்ட்டின் சதுக்கத்திலிருந்து பலர்மொவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.வழியில் பல பின் தெருக்களிலும் லிபர்டாடர் சாலையிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அலைந்தேன்.தொடர்ச்சியாய் நடந்ததால் கால்வலியும் பசியும் கூடிய போது என் காமெராவில் பேட்டரியும் தீர்ந்துவிட்டிருந்தது. அறைக்குத் திரும்பி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு செல்லாலமென்று முடிவெடுத்து டாக்ஸி பிடித்து விடுதிக்குத் திரும்பியபோது இன்றிரவு டாங்கோ காட்சி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் இரவு எட்டு மணி அளவிற்கு விடுதிக்கு திரும்பிவிடும்படியும் வரவேற்பாளர் கூறினார்.அறைக்கு வந்து மிகுந்த களைப்போடு வரைபடத்தை விரித்துக்கொண்டு யோசித்தேன்.அன்றைக்கு மாலை போர்ஹேஸ் பிறந்த இடமான டுக்குமன் தெருவிற்கும்,அவர் கவிதையாய் எழுதிய “ரிகோல்டா கல்லறை” க்கும் செல்வதாகவும் மறு நாள் முழுக்க பலர்மோவின் உட்தெருக்களில் சுற்ற வேண்டுமென்றும் முடிவெடுத்துக்கொண்டேன்.மாலை நான்கு மணிக்கு மறுபடியும் 9 டி அவெனிதா ஜீலையைக் கடந்து டுக்குமன் தெருவில் நடந்தேன்.அந்தக் குறுகலான தெருவில் நான் குறித்து வைத்திருந்த எண்ணிற்கு முன்னும் பின்னும் எண்ணுள்ள கட்டிடங்கள் இருந்தன.ஆனால் குறிப்பிட்ட அந்த எண்ணைக் காணவில்லை.இருந்தாலும் நிச்சயமாக அந்தக் கட்டிடம் இருந்த இடத்தில்தான் போர்ஹேஸ் பிறந்திருக்கவேண்டும் என்று உள்ளுணர்விற்குத் தோன்றியது.வழியில் நிறுத்தி கடந்த ஒருவரிடம் விசாரிக்க முயற்சிக்கும்போது அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை.சிறிது நேரம் அந்த இடத்தில் சுற்றிவிட்டு வரைபடத்தில் ரிகோல்டா கல்லறைத்தோட்டம் இருக்கும் இடத்தைக் குறித்துக்கொண்டு நடக்கத்துவங்கிய நான் வழி தப்பி திரும்பவும் சான் மார்ட்டின் சதுக்கத்திற்கே வந்திருந்தேன்.பிறகு அங்கேயிருந்து ஒரு டாக்ஸி பிடித்து ரிகோல்டா போய்சேர்ந்தேன்.ரிகோல்டா ஒரு மேடான புல்வெளி.அங்கே பிலார் தேவாலயமும் அதை ஒட்டி ரிகோல்டா கல்லறை தோட்டமும் இருக்கின்றன.தரைப்பரப்பிலிருந்து குன்றுக்கு ஏறும் நடைபாதையில் ஒரு நூறடி உயரத்திற்கு வளைந்து வளைந்து கைவினை பொருட்கள் விற்கும் சந்தைகள் இருபுறமுமிருந்தன. உருகுவேயிலும் இதைக் கவனித்திருக்கிறேன்.”ஃபெரியா” என்று ஸ்பானிஷ் மொழியில் அழைக்கும்படும் இந்த வாரச்சந்தைகள் அநேகமாக லத்தீன் அமெரிக்காவும் ஒரு பொதுவான கலாச்சாரமாக இருகக்கூடும்.இங்கே நிறைய பாசிமணிகள்,கைவினைப் பொருட்கள்,சே,போர்ஹேஸ் போன்ற லத்தீன் அமெரிக்க ஆளுமைகளின் படம் அச்சிட்ட டி-சர்ட்கள் எனப் பலவிதமாய் மாலை மின்னொளியில் ஒளிர்ந்தன.பக்கத்தில் சரிவான புல்வெளியில் ஆண்களும் பெண்களும் படுத்துக்கொண்டும் அமர்ந்துகொண்டும் புகைத்துக்கொண்டுமிருந்தார்கள். நான் மேலே ஏறும்போது புல்வெளியின் மையத்தில் இசைத்துக்கொண்டிருந்த தெருப்பாடகர்களின் பாடலுக்கு மக்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

அது செம்மேகம் படர்ந்திருந்த அந்தி நேரம்.ரிகோல்டா கல்லறைத்தோட்டம் மாலை ஐந்து மணிக்கே மூடப்பட்டுவிட்டதால் பக்கத்திலிருந்த 1700 களில் கட்டப்பட்ட பிலார் தேவாலயத்திற்குள் நுழைந்தேன்.முழுக்கவும் பளிங்கினால் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் நீலவண்ணப் பிண்ணனியில் பீடத்தில் அன்னை மேரி தேவபாலனோடு ஒளிர்ந்தாள்.சில வயோதிகர்கள் மெளனமாய் பிரார்த்திக்கொண்டிருந்தார்கள். நான் என் கேமராவில் ப்ளாசை அணைத்துவிட்டு சில புகைப்படங்கள் எடுத்தேன்.வெளியே ரிகோல்டா கல்லறைச்சுவரின் ஓரமாக இரண்டு இளைஞர்கள் மின்னிசைக்கருவிகள் கொண்டு இசைத்துக்கொண்டிருந்தார்கள்.மனதை உருக்கிய அந்த இசையை கேட்டுக்கொண்டே நான் இரண்டு சிகரெட்டுகள் புகைத்தேன்.இனம்புரியா ஒரு நிறைவை அவர்கள் வாசித்த இசைக்கோர்வை ஊட்டியது.பின் ஆலயத்தின் எதிரிலிருந்த புத்தக கடைக்குள் நுழைந்தேன்.கடைக்குள் நுழைந்தவுடன் போர்ஹேஸின் மொத்த ஆக்கங்கள் ஸ்பானிஷ் மூலத்தில் அற்புதமான வடிவமைப்போடு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.லத்தீன் அமெரிக்க ஒவியங்கள் குறித்த சில ஆங்கிலப் புத்தகங்களையும் காணமுடிந்தது. நான் இன்னும் கொஞ்ச நேரம் ரிகோல்டாவில் கழிக்க விரும்பினேன்.ஆனால் டாங்கோ நடனம் காணச்செல்ல வேண்டியிருந்ததால் அறைக்கு வேகமாக திரும்பத்துவங்கினேன்.

எனக்கு போய்வர டாக்ஸி வசதியையும் டாங்கோ தியேட்டர் நிறுவனத்தினரே ஏற்பாடு செய்திருந்தார்கள்.மாடரோ டாங்கோ என்ற அந்த டாங்கோ தியேட்டர் ”போர்ட் மாடரோ” என்ற இடத்தில் நதியோரமாக அமைந்திருக்கிறது.பல்வேறு தேசங்களிலிருந்து இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் அர்ஜெண்டினாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் இந்த இடத்தில்தான் வந்திறங்கியிருக்கிறார்கள்.மேலும் வெவ்வேறு கலாச்சார பிண்ணனியுள்ள மக்கள் தங்களிடையேயான உணர்வு பரிமாற்றத்திற்கான தனித்த கலை வடிவமாக இதை கண்டடைந்திருக்கிறார்கள்.டாங்கோ நடனம் யுனெஸ்கோவால் உலக கலாச்சார சின்னங்களில் ஒன்றாக 2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இங்கே இரவு உணவோடு டாங்கோ காட்சி மற்றும் டாங்கோ காட்சி மட்டும் என இரண்டு விதமான கட்டண வகுப்புகள் இருக்கின்றன.நான் இரண்டாவதிற்கு பதிவு செய்திருந்தேன். சுமார் முன்னூறு பேர் அமரக்கூடிய அரங்கம் முழுக்க நிறைந்திருந்தது.வெவ்வேறு விதமான உணவின் வாசனை கமழந்தது.வட்ட வடிவ அரங்கத்தின் மையத்தில் மேடையும் அதன் வலப்பக்கம் இசைக்கலைஞர்களுக்கான ஒரு மாடமுமிருந்தது.பணியாளன் கொண்டு வந்து கொடுத்திருந்த சிவப்பு ஒயினை உறிஞ்சிகொண்டு அரையிருளில் இருந்த அரங்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தில் டாங்கோ நடனத்தின் வரலாறு பற்றிய ஒரு திரைச்சுருளை ஒளிபரப்பி முடிக்க சட்டென்று அரங்கத்தின் ஓரத்தில் பாட்டில்கள் உடைபடும் சத்தமும்,இரண்டு மனிதர்களின் துவந்த யுத்த குரல்களும் கேட்டு மொத்த அரங்கமும் அங்கே திரும்பிய நேரத்தில் மேடையும், இசைக்கலைஞர்கள் அமர்ந்திருந்த மாடமும் ஒளியூட்டப்பட்டு அறிமுகப்படலம் துவங்கியது.முழுக்க ஸ்பானிஷ் மொழியில் இருந்ததால் எனக்கு எதுவும் புரியவில்லை.இந்த டாங்கோ நடனம் கதைவடிவில் அமைக்கப்பட்டிருந்தது.ஆனால் வெகு அற்புதமான நடனம்.உலகெங்கும் நடனத்தின் மொழி ஒன்றே என்பதால் வெகு எளிதாக நடனத்தில் ஒன்ற முடிந்தது.துள்ளும்,வளையும்,அதிரும் நான்கு ஜோடி கால்களின் களியாட்டத்தோடு எனக்கு Black Swan திரைப்படத்தில் நடாலியா போர்ட்மெனின் கறுப்பு அன்ன நடனமும் நினைவிற்கு வந்து கலவையான உணர்வெழுச்சி கொண்டேன்.நள்ளிரவு ஒரு மணியளவில் அவர்களுடைய வாகனத்திலேயே என்னை விடுதிக்கு திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

மறுநாள் காலை முதலே மேகமூட்டமாக இருந்தது.நான் விடுதிக்குப் பக்கமிருந்தே ஒரு டாக்ஸி பிடித்து பலர்மோவில் இருக்கும் “ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ்” தெருவுக்கு போகச்சொன்னேன்.சில நிமிடங்களில் மழை வலுத்துப் பெய்யத் தொடங்கியது.பலர்மோவில் இறங்கும்போது மழை தணிந்து மெல்லிய தூறலாக இருந்தது.சாலை ஓரத்தில் இருந்த கைகாட்டியில் எண்ணை பார்த்துக்கொண்டு நடந்தேன்.அது முழுக்கவும் குடியிருப்பு பகுதிதான். நான் தேடிக்கொண்டிருந்த 2135 என்ற எண்ணுள்ள இடத்தைக் கண்டதும் எனக்கு உடல் மெல்ல விதிர்த்தது.அங்கேதான் போர்ஹேஸ் என்ற சிறுவன் தன் இரண்டாம் வயதிலிருந்து பதினான்காம் வயதுவரை வசித்திருக்கிறார். நடமாட்டமற்ற ஞாயிறு காலை தெருவில் நான் ஆளற்ற வீட்டிற்குள் அலையும் பூனையைப்போல் அலைந்துகொண்டு அந்தச் சுவர்களை தடவுவதும் வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுப்பதுமாய் இருந்தேன்.சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய குறிப்பில் போர்ஹேஸ் இந்த வீட்டில் 1901 ஆம் ஆண்டிலிருந்து 1914 ம் ஆண்டு வரை வாழ்ந்த தகவல் இருக்கிறது.இப்போது அதுவொரு சிகையலங்கார கடையாக இருக்கிறது. நான் அந்த வீட்டின் முன்னால் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பி யாரேனும் வருகிறார்களா என்று தேடினேன்.வெகுநேரத்திற்கு பின் ஒரு ஜப்பானிய முகமுள்ள பெண் என்னைக் கடந்துபோக நான் தயக்கமாக அழைத்து புகைப்படம் எடுக்கமுடியுமாவென்று கேட்டேன்.சுவற்றைப் பார்த்த அந்தப் பெண் மெல்ல சிரித்துக்கொண்டு இலக்கியம் மற்றும் போர்ஹேஸை பிடிக்குமா என்று கேட்டாள்.ஆம் என்று சொன்னேன்.ஒன்று போதும் என்று சொன்னவனிடம் வற்புறுத்தி நான்கைந்து கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொடுத்தவள் நான் எந்த தேசத்தவன் என்றும் புயனஸ் ஏரிஸ் பிடித்திருக்கிறதா என்றும் கேட்டாள்.என் பயணத்தை நன்றாக அனுபவிக்கும்படி வாழ்த்துச் சொல்லிவிட்டு சிரித்த படியே நடந்தாள்.எனக்கு அவள் ஜப்பானிய முகத்திலிருந்து மரியா கொடாமாவின் ஞாபகம் வந்தது.கொஞ்ச நேரம் நான் அந்தப்பகுதியை சுற்றி வந்துவிட்டு அதே சாலையிலிருந்து அவெனிதா இத்தாலியா சதுக்கம் நோக்கி நடந்தேன்.அவெனிதா இத்தாலியாவில் உள்ள பொட்டானிகல் கார்டன் வெகு அமைதியாக இருந்தது.அங்கே இருக்கும் “Roman Wolf” என்ற சிற்பத்தின் நகல் மிக முக்கியமானது.அங்கிருந்த ஒரு சிறிய குளத்தில் ஒரு தாமரை மிக மெலிதாக மொக்கு விரியும் அற்புதக்காட்சியை கண்டேன். அங்கேயிருந்த புல்வெளியில் ஒரு கறுப்பு பூனை எனக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தது.

பொட்டானிகல் கார்டனுக்குக் கீழே போர்ஹேஸ் சிறுவனாக பலமுறை போயிருந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் இடப்பக்கம் ஒரு குளமிருக்கிறது.குளத்தை ஒட்டி போர்ஹேஸைப் பற்றியும் அவரது புலிகளைப் பற்றியும் ஒரு நினைவுக்குறிப்பு ஐந்தடி உயரத்தில் போர்ஹேஸ் மற்றும் ஒரு வரிப்புலியின் புகைப்படங்களோடு இருக்கிறது.சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மிருகக்காட்சி சாலையில் நான் புலி இருக்கும் இடத்தை தேடி வேகமாக நகர்ந்தேன்.அங்கே சில வெள்ளைப்புலிகள் ஒரு கூண்டிலிம் உடலில் புள்ளிகள் கொண்ட புலியொன்று தனித்த விஸ்தாரமான கூண்டுக்குள்ளு இருந்தன.போர்ஹேஸ் தனக்கு உடலில் புள்ளிகள் கொண்டவற்றை விட வரிகள் கொண்ட புலிகளே விருப்பானவை என்று “My last Tiger” கவிதையில் எழுதுகிறார்.புலிகளை பார்த்தபின் சம்பிரதாயமாக அந்த மிருகக்காட்சி சாலையை பார்த்துவிட்டு திரும்புகையில் எனக்கு கூண்டுகளுக்கு வெளியே பயத்தோடு புலிகளை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பத்து வயதுச் சிறுவன் நினைவிற்கு வந்தான்.வெளியே வந்தவன் மிருகக்காட்சி சாலையை ஒட்டி நீண்ட அவெனிதா செர்மியாண்டோ சாலையில் நடக்கத் துவங்கினேன்.அதன் முனையில் சிற்பி அகஸ்டினால் அமைக்கப்பட்ட உலகப்புகழ்பெற்ற ஸ்பானியர்களின் நினைவுச்சின்னம் இருக்கிறது.அதன் முனையில் லிபர்டாடர் சாலை வந்து முடிகிறது.

நான் லிபர்டாடர் சாலையில் நடக்கத்துவங்கினேன்.இது முழுக்கவும் ஒரு நீண்ட திறந்தவெளி தோட்டம் கொண்ட பகுதி.மேகக்கருமை கூடிக்கொண்டிருந்த நன்பகலில் அதன் புல்வெளியும் மரங்களும் பசுமையை கருக்கொண்டிருந்தன. கொஞ்ச தூரம் கடந்த பின் அதன் ஓரத்தில் காந்தியின் சிலையொன்று இருந்தது.நான் காந்தியை வெறித்துக்கொண்டிருப்பதை கண்ட நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த ஒருவர் அவராகவே என்னிடமிருந்த கேமராவை வாங்கி காந்தியோடு என்னைப் புகைப்படம் எடுத்துக்கொடுத்தார்.அவர் போனபின்னர் கொஞ்ச நேரம் காந்தியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.உருகுவேயில் நான் வசித்த கடற்கரைப் பகுதியில் காந்தி சிலையாகவும் தெருவின் பெயராகவும் இருக்கிறார்.மேலும் கொஞ்ச தூரம் நடந்தபோது ஜப்பானிய பூங்கா வந்தது.இன்னும் ரிகோல்டா கல்லறையை பார்க்கப் போகவேண்டியிருப்பதால் நான் உள்ளே செல்லவில்லை.பிறகு நேராக மால்பா மியூசியத்திற்கு நடந்தேன்.இது லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியமான நவீன கலையின் அருங்காட்சியகம்.அங்கே அர்ஜெண்டினா கலைஞர்களின் மிக முக்கியமான நவீன சிற்பங்களும் கலைவடிவங்களும் இருக்கின்றன.பாப்லோ பிக்காஸோ,ப்ரீடா காலோ மற்றிம் டியகோ ரோமாரியோ போன்றோரின் ஒவியங்கள் மற்றும் பல பிரெஞ்ச் ஓவியர்களின் பென்சில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.அங்கேயிருந்த புத்தகக்கடையில் கிடைக்கும் ஓவியம் மற்றும் கலை பற்றிய பல்வேறு உன்னத புத்தகங்களைத் தொடுவதற்கே நடுக்கமாக இருந்தது.

மால்பாவிலிருந்து வெளியே வரும்போது என் மனம் பித்தேறியிருந்தது.எந்தக் கணத்திலும் மழை பொழியக்கூடும் என்று தோன்றியது.நான் மதிய உணவை முடித்துக்கொள்ள நினைக்கும்போது ஒரு உணவுவிடுதியை கண்டேன்.லிபர்ட்டாடர் சாலையை நன்றாக பார்க்கும் வகையில் கண்ணாடிச் சுவரோரம் அமர்ந்துகொண்டேன்.வெளியே மழை வலுத்துப் பெய்யத்துவங்கியது.அந்த மழை நேரத்தில் மிகச்சுவையாக சமைக்கபட்ட கோழியிறைச்சியை அதற்கு இணக்கமான பானத்தோடு உண்ணும்போது உணவிற்குள் கொஞ்சம் மழையையும் கலந்துகொண்டேன்.அக்கணங்கள் என் வாழ்வின் உன்னத கணங்கள் மாறியிருந்தது.என் மனம் முழுக்க போர்ஹேசும் லத்தீன் அமெரிக்க கலைஞர்களின் புத்தொளி பாய்ந்திருந்தது.மழை மெல்லிய தூறலாக மாறியபோது வெளியே வந்து நடந்தபோது நான் உல்லாசத்தில் தமிழில் எனக்கு நானே வாய்விட்டுப் பேசிக்கொண்டு மெல்லிய நடனத்தோடு நடந்தேன்.என் நண்பர்களின் பெயரை,என் பிரியத்துகுரிய தமிழ் படைப்பாளிகளின் பெயரை உரக்கக்கூவி இந்தக் கணத்தில் என் கண்கள் என்னுடையது மட்டுமல்ல உங்களுடையதும் தான் என்று சொல்லிக்கொண்டேன்.அவ்வளவு பெரிய சாலையில் ஆட்களே இல்லாதது என் பித்து மனோ நிலைக்கு இணக்கமாக இருந்தது.நான் மறுபடியும் ஒரு முறை மின்சாரத் தாமரை மற்றும் பல்கலைக்கழக கட்டிடத்தைக் கடந்து ரிகோல்டா குன்றுக்கு வந்தேன்.நேற்று மாலை வண்ணமயமாக ஒளிர்ந்து கொண்டிருந்த பெரியா இப்போது காலியாகிக்கொண்டிருந்தது.மழைத்தூறல் அந்தப் பிரதேசத்திற்கு வேறொரு சோபையை கொடுத்திருந்த அந்த மூன்று மணி மதியம்,மாலை ஆறு மணியைப் போல் காட்சியளித்தது. நான் ரிகோல்டா கல்லறைத் தோட்டத்திற்குள் நுழைந்தேன்.அங்கிருந்த ஒவ்வொன்றும் தனித்த கல்லறைகள் அல்ல..கல்லறை வீடுகள்.பளிங்குக்கல்லால் எழுப்ப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு விதமான சிற்பங்கள்.கலை வேலைப்பாடுகள்.மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் ரிகோல்டா கல்லறைத்தோட்டத்தின் வீதிகள்,அதிலிருந்து பிரியும் சந்துகள் எல்லாம் துயரார்ந்த ஒரு அமைதியை,மரணம் பற்றிய கலவையான எண்ணங்களை கொடுத்தன.உள்ளடங்கிய சந்தொன்றிக்குள் சென்று போர்ஹேஸின் “Recolta Cemetry” கவிதையை நடுங்கும் குரலில் வாசிக்கத்துவங்கினேன்.ஒரு கல்லறை வீட்டைப் பார்த்துவிட்டு நகர்ந்தால் அடுத்த கல்லறைவீடு முன்னதை மறக்க வைத்தது.என்னால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.நான் ரிகோல்டாவிலும் ஒரு கறுப்பு பூனையை பார்த்தேன்.இந்த நகரத்தில் நான் கண்ட மூன்று பூனைகளும் எனக்கு எதை உணர்த்த முனைகின்றன என்று என்னால் இனம் காண முடியவில்லை.மிகச்சரியாக ரிகோல்டா கல்லறையிலிருந்து வெளியே வருகையில் என் கேமரவில் பேட்டரி அணைந்து இந்த நகரத்தில் என்னுடைய பயணம் முடிவடைந்தததை குறியீடாக்கியது.வெளியே வந்தவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு பார்க்கும்போது கல்லறைத் தோட்டத்தின் சுற்றுச்சுவரை ஒட்டிய சிமெண்ட் நாற்காலியில் ஒரு பெண் ஒரு ஆணின் கழுத்தில் முகம் புதைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்..எனக்கு “Souls dispersed into other souls” என்ற போர்ஹேஸின் ரிகோல்டா சிமெட்டரி கவிதை வரிகள் நினைவிற்கு வந்தன.

ஒரு வாசகனுக்கு போர்ஹேஸின் கண் நரம்புகளாய் விரிந்திருக்கும் இந்த நகரத்தில் நான் கண்டது ஒரு சிறிய இழை மட்டுமே.சொல்லப்போனால் ஒன்றையுமே அறிந்துகொள்ள வில்லை என்றுகூட தோன்றியது.வெவ்வேறு வரலாற்றுப் பிண்ணனியும் காரணங்களும் கொண்ட இந்த நகரத்தின் நினைவுச்சின்னங்கள்,உலகமயமாக்கல் உருவாக்கும் கண்ணாடி கட்டிடங்களாக இல்லாமல் புராணீகத்தின் சாயல் படிந்த இதன் புராதன கட்டிடங்கள்,அன்று பெய்த மழை,போர்ஹேஸின் கனவுப்புலிகள், நகரெங்கும் பரவிக்கிடக்கும் கலைஞர்களின் படைப்புகள் எல்லாமே வாழ்தலின் பதட்டத்தை கொஞ்சம் தணித்தன.ஸ்பானிய மொழி தெரிந்திருந்தால் இந்த நகரத்தின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் கண்டிருக்கக்கூடும்.ஆனால் அது அவ்வளவு முக்கியமல்ல என்றே தோன்றுகிறது.ஒரு சிறுவனைப்போல் இந்த நகரத்தில் தனியே திரிந்த மூன்று நாட்களில் நான் என்னுள் சிருஷ்டி கொண்ட நகரம் ஒரு புராணீகமாய் படிந்துவிட்டது.எனக்கு இருந்த ஒரே மனவருத்தம் ஹீலியோ கொர்த்தாசரை வாசிக்காமல் இருந்ததுதான்.போர்ஹேஸின் புயனஸ் ஏரிஸ் என்பதில் கொஞ்சம் கொர்த்தசாரின் புயனஸ் ஏரிஸிம் இருப்பதாக தோன்றுகிறது.

ஞாயிறு மாலை திரும்பவும் அதே படகில் அதே நாற்காலியை தேடி அமர்ந்தேன்.இருட்டிவிட்ட அந்தக் கணத்தில் வெளியே பரவியிருந்த கருமைக்கு கீழே அப்போதும் ரியோ டி பிளாசாவின் அலைகள் பழுப்பு வண்ணத்தில்தான் இருந்தன.அக்கணங்களில் நான் உறங்கவுமில்லை,விழித்திருக்கவுமில்லை.அதற்கு இடைப்பட்ட ஒரு நூலிழைப்பாதையில் ஒரு புலியின் கோடுகளை தடவிக்கொண்டிருந்தேன்.


நன்றி- நீட்சி சிற்றிதழ்

1 comment:

Asadha said...

அச்சிலேயே (நீட்சி)வாசித்தேன். புயனஸ் ஏரிஸின் தெருக்களில் உடன் உங்களோடு வந்தது மாதிரியான உணர்வு... லத்தீனமெரிக்கா பற்றிய வாசகப் பித்துக்கு இன்னுமொரு பரிமாணம் சேர்த்திருக்கிறீர்கள்... (விழுத்தாட்டுமளவுக்காய் கிறக்கம் கூடிவிட்டது) இனி போர்ஹேஸ் பற்றிய நினைவுகள் உங்கள் இந்தக் கட்டுரையையும் சேர்த்ததாகவே இருக்கும்.