நாவல் என்ற இலக்கிய கலைவடிவம் தோன்றி சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகியுள்ள காலப்பரப்பில் உலகெங்கும் நாவல் வடிவம் மானுடத்தின் புறவரலாற்றோடு அகவயமான வரலாற்றை பதியவும்,பரிசீலிக்கவும் புனைவின் வழி மறுகட்டுருவாக்கவும் செய்யவும் தகுந்தாக மாறியிருக்கிறது. ”நாவலின் வரலாறு என்பது மானுட விடுதலையின் வரலாறு” என்கிறார் ஒரான் பாமுக்.மேற்கில் தொழிற்புரட்சி காலகட்டத்திலும்,உலகெங்கும் பின்காலனிய சூழலிலும்,லத்தீன் அமெரிக்கா மறுமலர்ச்சியின் போதும் நிகழ்ந்த சமன்பாட்டுக் குலைவுகள் இந்த வடிவத்திற்கு புதிய திசைகளை உருவாக்கின.சுதந்ததிரத்திற்கு பின்னான தமிழகத்தில் திராவிட இயக்கம் போன்ற விதிவிலக்குகளை தவிர, நிகழும் தட்டையான சமூக அரசியல் வரலாறு,அசலான படைப்புகளின் மேல் தொடர்ச்சியாக உதாசீனத்தை செலுத்தும் தமிழ் வெகுஜன மனக்கட்டமைப்பு போன்ற பலகீனங்கள் இருந்தாலும் அசலான கலைப்பயிற்சியும் இங்கு தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.ஓப்பீட்டளவில் தமிழில் கவிதையும் சிறுகதையும் அடைந்திருக்கும் உச்சங்களை நாவல் என்னும் வடிவம் இன்னும் எட்டவில்லை என்றாலும் இந்த வடிவத்திலும் நாம் உன்னதங்களை அடையமுடியும் என்பதற்கு நம்மிடம் நிறைய நம்பிக்கைகள் இன்றைக்கு மீதமிருக்கின்றன.
தன்னுடைய “The naïve and sentimental novelist” என்ற புத்தகத்தில் பாமுக் நாவல் வாசிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள நுணுக்கங்களை,மகிழ்வுகளை மிக விஸ்தாரமாக பேசுகிறார். நாவலின் மிக அடிப்படையான அம்சம் என்பது “சொற்களின் வழியாக காட்சிகளை உருவாக்குவது” எனக் குறிப்பிடும் அவர் நாவல்களை வாசகனின் காண்புலன் மற்றும் மொழி ஆகிய இரண்டு கற்பனாயுருவாக்கங்களில் வினைபுரிபவையாக பிரிக்கிறார். முதல் வகையான ஆளுமைச்சான்றுகளில் ஒருவராக டால்ஸ்டாயையும் பின்னதிற்கு தஸ்தாவெஸ்கியையும் உதாரணமாக வைக்கிறார்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் புனைகதையின் அரிய சாதனையாளர்களில் ஒருவரான வண்ண நிலவனை காண்புலன் கற்பனாயுருவாக்கத்தில் வினைபுரியும் எழுத்திற்கு உதாரணமாக கூறலாம். கடல்புரத்தில்,ரெயினீஸ் ஐயர் தெரு,கம்பா நதி மற்றும் காலம் என்ற நான்கு நாவல்களை கொண்டு நாவல் என்ற வடிவத்தில் வண்ணநிலவன் அவர் நமக்கு வழங்கியுள்ளவை என்னவென்று நாம் சுருக்கமாக ஆராயலாம்.
வண்ணநிலவனின் நாவல்கள் காலத்தில் எல்லாம் இயல்பாக நடந்துகொண்டிருக்கையில் அதே இயல்போடு துவங்குகின்றன,அவ்விதமான இயல்போடே முடிகின்றன.இதன் வழியாக கதைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் கதாமனிதர்களின் வாழ்விலிருந்து சிலபல காட்சிகளை அவர் நமக்கு தொகுத்தளிக்கிறார்.அவருடைய நாவல்கள் நேர்கோட்டு கதைசொல்லல் முறையில் அமைந்திருந்தாலும் நாவல்களின் காலம் என்ற பிரக்ஞை மிக முக்கியமானதாக அமைகிறது.இந்த முறையில் கதை என்ற அம்சம் வெளியேற்றப்பட்டு காலப்பரப்பில் நிகழும் சம்பவங்களாக அவை மாற்றப்படுகின்றன.புனைவின் பிராதன அம்சமான ”உண்மை போல் தோன்றுவது” என்ற வித்தையை இதன் மூலம் வண்ண நிலவன் நிகழ்த்துகிறார்.
வண்ணநிலவனின் கதைமொழி என்பது ஒரு ஆறுதலூட்டும் குரல்.அது உரத்துப்பேசுவதில்லை.கவித்துவத்தின் மெல்லிய சாரல் கொண்ட அவரது கதைமொழிக்கு அழகிய உதாரணங்களாக ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் கடல்புரத்தில் நாவல்களைச் சொல்லலாம்.இந்த இரண்டும் கிறிஸ்துவ ஆராதனைப் பாடல்களின் மெல்லிய துயரசோகம் கவிந்த மொழி கொண்டவை. சைவப்பிள்ளைமார் குடும்பச்சூழலை பின்புலமாக கொண்ட கம்பா நதியும் காலமும் வேறுபட்ட மொழியழகு கொண்டவை.
வண்ணநிலவனின் கதாமனிதர்கள் அசாதரணர்கள் அல்லர்.அவர்கள் வெகு எளிய மனிதர்கள்தாம்.காலம் செல்லும் திசையில் நகர்த்தப்படுபவர்கள்.எல்லா மனிதர்களைப்போலவே வண்ணநிலவனின் கதாமனிதர்களுக்கு வீட்டுக்கு வெளியே இருக்கும் உலகத்தில் நினைவுக்குள் வீட்டைச் சுமந்தபடியே தங்களால் எளிதாக பொருந்திக்கொள்ள முடிகிறது.அவர்கள் வாழ்வின் அழகியல் என்பது அன்றாடத்தில் நிகழும் சில எளிய அபூர்வங்களாக இருக்கின்றன.
கடல்,அதன் கரையோர தோப்புகள்,டிசம்பர் மாதப் பனி,கிறிஸ்துமஸ் ஸ்டார்லைட்,ஆராதனைப் பாடல்கள்,தெருமுனையில் மேயும் கோழிக்குஞ்சுகள்,மழை கொண்டு வரும் புதுமணல்,கோழி இறகுகள்,கல்தள வரிசையின் சுண்ணாம்பு சாந்துக்கோடுகள், விதவிதமான உடல் வாசனைகள்,கல்பூக்களின் அழுந்தல் குளிர்ச்சி,விபூதி வாசனை,சீட்டுக்கட்டுகள்,மோர்சாதம்,மாலை நேர தீபங்கள்,வார இதழ்கள்,மாத நாவல்கள்,ஆற்றுக்குளியல்,இந்தி திரைப்படங்கள், நகம் உள்ளடங்கிப் பொதிந்திருக்கும் கால் பெருவிரல் என வண்ண நிலவன் அவர் நாவல்களில்கண்டடையும் அபூர்வங்கள் நமக்குள் விரிக்கும் உலகத்தின் அழகு அசாதரணமானது.
கடல்புரத்தின் ஒயா அலைகள்:
கடல்புரத்தில் நாவலை இரண்டு எதிர் தன்மைகளின் குறுக்குவெட்டு நகர்வாக சொல்லலாம். நேற்றிற்கும் இன்றிற்குமான முரண்பாடாக, வல்லத்திற்கும் லாஞ்சிகளுக்குமிடையேயான மோதலாக,வாழ்க்கையில் குரூஸ் மிக்கேலின் வீழ்ச்சி மற்றும் பிலோமியின் நிலைப்படுதலாக நாம் இதை அவதானிக்கலாம்.இயற்கைக்கு பயந்து அதனோடு ஒன்றி வாழ நினைக்கும் மணப்பாடு கிராமத்து மீனவர்களுக்கு வல்லங்கள் அவர்களோடு இயைந்ததாக இருக்கின்றன.அதே கிராமத்து மனிதர்கள்தான் லாஞ்சியையும் கொண்டு வருகிறார்கள்.வல்லங்கள் போக முடியாத கடற்தூரங்களுக்கு லாஞ்சிகள் போகின்றன. வல்லங்கள் கொண்டு வரமுடியாத அளவிற்கு லாஞ்சிகள் மீன்களை கொண்டு வருகின்றன. வல்லங்கள் தங்கள் வலிமையின் எல்லைக்குள் நின்றுகொள்ள லாஞ்சிகளுக்குள் சூது நுழைகின்றது.சூதில் லாஞ்சி பற்றியெரிய ஐசக்கின் சூரிக்கத்தி ரொசாரியோ பர்னாந்தை மணற்பரப்பில் காவு வாங்குகின்றது.ஐசக் மணல்வெளியில் பைத்தியமாக அலைகிறான்.லாஞ்சிகள் மணப்பாடு கிராமத்தைக் குலைக்கின்றன.
இந்த முரண்பாட்டை நாம் இரண்டு விதங்களில் அணுகலாம்।முதலாவதாக, ஒரு முன்னகரும் சமூகத்தின் புதியனவற்றை தேடும் வேட்கையை நாம் குற்றமாகஎடுத்துக்கொள்ளமுடியாது.ஆனால் சமூக மனங்கள் ஒரு கூட்டசைவில் இயங்குவன அல்ல.அதற்குள் எப்போதும் தனிமனிதர்களின் சுயநலமும்,ஆதாயங்களை பெருக்கும் மனப்போக்கும் தொடர்ந்துகொண்டேயிருப்பதால் பெரும்பாலன நேரங்களில் விழுமியங்கள் கைவிடப்படுகின்றன.இரண்டாவதாக எப்போதும் புதிய மாற்றங்களை அழிவின் குறியீடாக பார்க்கும் ஆதி மனங்களின் பதட்டம்.அந்தப் பதட்டம்தான் திருவிழா நாளில் கடலுக்குப் போக தயாராகும் லாஞ்சிகளுக்கு எதிராக குருஸ் மிக்கேலை ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தாண்டவமாட வைக்கின்றது.
குருஸ் மிக்கேல் உலகின் பழைய மனிதன்,” நீர் என்னய ஏன் படிக்க வச்சீர்?” என்று படித்த முதல் தலைமுறை மகனின் கேள்வியை எதிர்கொள்கின்றவன். அன்பையும் பிரியத்தையும் அறிய வெளிப்படுத்தத் தெரியாதவன்,துணையை வெறுத்துக்கொண்டிருந்தாலும் அவள் இல்லையென்று போகும் தருணத்தில் அதன் வெறுமையை தாளாதவன். எதன் பொருட்டும் கடலையும் வல்லத்தையும் கைவிடத் தயாராக இல்லாதவன். அவற்றை இழக்கும்போது சித்தம் கலங்கி நினைவுகள் அழிந்து ஒரு குழந்தையைப் போல் மாறிவிடுகிறவன்.சினேகிதக்காரர்கள் குருஸ் மிக்கேலும் ஐசக்கும் நினைவு குழம்பியவர்களாக மணப்பாடு கிராமத்தின் மணல்வெளியில் எஞ்சுகிறார்கள்.
பிலோமிதான் எவ்வளவு மென்மையான பெண்? ஏன் இவ்வளவு மென்மையான பெண்ணுக்கு இத்தனை துயரங்கள்?அம்மை வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து பிலோமியை புணரும் சாமிதாஸ் பின்னர் பிலோமியை கைவிட்டுவிட்டு பெரிய தாழையூர் பெண்ணுடன் ஓலைகூறபோய்விடுகிறான்.அம்மை மரியாள் செத்துப்போய்விட தகப்பன் குருஸ் நினைவிழந்து நிற்கின்றான்.ஆனாலும் பிலோமிக்கு வாழ்வு அம்மை மரியாளின் ஸ்னேகிதரான வாத்தியின் பிரியத்திலும் தோழி ரஞ்சியின் அன்பிலும் மிச்சமிருக்கின்றது.முன்னுரையில் சா.கந்தசாமி சொல்லியுள்ளது போல வண்ணநிலவன் இந்த நாவலில் ஆண் பெண் உறவு நிலைகளை நுணுகிப்பார்க்கிறார்.பிலோமி-சாமிதாஸ்,வாத்தி-மரியம்மை,குருஸ் மிக்கேல்-மரியம்மை,பிலோமி-வாத்தி இவற்றுடன் ரஞ்சியின் மேல் அவள் கொழுந்தன் வைத்திருக்கும் பிரியம் என ஆண் பெண் உறவின் வெவ்வேறு பரிமாணங்களை எழுதிச்செல்கிறார்.
கடல்புரத்தில் நாவலில் வண்ணநிலவன் மானுடத்தின் ஆதார உணர்ச்சிகளின் போராட்டங்களையும் அதன் சிதைவுகளையும்,சிதைவுகளிலிருந்து அது அடையும் மீட்சிகளையும் பேசுகிறார்.தமிழ் நாவல்களில் மிக குறைவாகவே வைக்கப்பட்டிருக்கும் கடல் என்னும் நிலப்பரப்பின் பின்புலத்தில் அபூர்வமான மொழி நடையில் அவர் சொல்லியிருக்கும் கதையின் மனிதர்கள் வெகு நீண்ட காலம் நம்முடன் வாழ்வார்கள்.
தெரு என்னும் உலகம்.
ரெயினீஸ் ஐயர் தெரு நாவலை உலகத்தரத்திற்கு இணையான தமிழ் நாவலாக வைத்துப் பேசலாம். கடல்புரத்தில் மெல்லிய யதார்த்த செவ்வியல் நாவலாகவும் கம்பா நதி மற்றும் காலம் இவற்றை ஒரே கேன்வாஸில் வரையப்பட்ட இரண்டு வெவ்வேறு ஓவியங்களென வைத்துக்கொண்டால் ரெயினீஸ் ஐயர் தெரு மற்றவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நான் லீனியர் முறையில் எக்காலத்திற்குமான நவீன கதைமொழியில் இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட தெருவை,அதன் மனிதர்களைப் பற்றி ஒரு மூன்றாவது குரலாக சொல்லிச் செல்கிறது.அது டாரதி,அற்புதமேரி,ஜீனோ,அலீஸ் என்று சிறுமிகளின் குரலாக ஒலிக்கும்போது குழந்தமை மிகுந்ததாகவும்,இருதயத்து டீச்சர் சேசய்யாவுக்கு செய்யும் பணிவிடையைப் பற்றிப் பேசும்போது ஆறுதலின் குரலாகவும்,ஆசிர்வாதம் பிள்ளை-ரெபேக்காளின் தனிமையைச் சொல்கையில் முதுமையின் தள்ளாமை நிறைந்ததாகவும்,ஜாஸ்லின் பிள்ளையின் கதையும் ஊழின் குரலாகவும் பேசுகிறது.
ரெயினீஸ் ஐயர் தெரு சொல்லும் தெருவின் மனிதர்கள்தான் உலகெங்கிலும் நிறைந்து இருக்கிறார்கள்.ஒட்டியிருப்பதும் விலகியிருப்பதும் தெரியாத மூன்றாம் மனிதர்களுக்கிடையேயான உறவின் கண்ணிகளை இந்த நாவல் புலப்படுத்துகிறது.குழந்தமை,ஆற்றுப்பட்ட அன்பு,வரைமுறை மீறிய வேட்கை,கைவிடப்பபட்ட அனாதரவான நிலை, நோய்மையின் கவிச்சி எல்லாவற்றிற்கும் தெருவின் மனிதர்கள் சாட்சியாய் இருக்கிறார்கள்.இதில் நாமடையும் தரிசனம் எதோவொரு விதத்தில் நமக்குத் தேவையாயிருக்கும் சக மனிதனின் அண்மைதான்.அது நமது ஆழ்மனதின் இனம்புரியாத கிலேசங்களை ஆற்றுப்படுத்துகிறது.
வண்ண நிலவன் பேசும் குழந்தமையின் உலகம் வெகு அபூர்வமானது.டாரதி தனியே அமர்ந்திருக்கிறாள்.தெருமுனையில் இரண்டு கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியற்று தனியே மேய்ந்துகொண்டிருக்கின்றன.தாயற்ற அந்த சிறு குழந்தையின் உலகத்தை எபன் அண்ணனும்,கல்யாணி அண்ணனும் பிரியத்தால் நிறைக்கிறார்கள்.அற்புதமேரியோ, எஸ்தர் சித்தியும் சாம்ஸன் அண்ணனும் படுக்கை விரிப்பில் விசித்திரமாக கிடப்பதை பார்த்துவிடுகிறாள்.அந்தச் சிறுபெண் அதற்குப் பிறகு முதிர்ந்தவளாகவும்,மிகுந்த சகிப்புத்தன்மையுடையவளாகவும் மாறிவிடுகிறாள்.அண்ணனிடமும் சித்தியிடமும் இன்னும் பிரியம் கூடிவிடுகிறது.பூப்படையும் ஜீனோவிற்கோ உலகம் முற்றிலுன் புதுசாக மாறிவிடுகிறது.அப்பா கள்ளம் மிகுந்தவராகவும் அம்மா இந்த உலகிலேயே மோசமான பெண்ணாகவும் தெரிகிறாள்.
இடிந்தகரையாளின் கோழி இறகுகளும் சேசய்யாவின் இருமலும் நிரம்பிய வீட்டில் இருதயத்து டீச்சருக்கு நோய்மை தீண்டாத கணவனின் இரண்டு ஒளிமிகுந்த பூனைக்கண்களே ஆறுதலாக இருக்கின்றன.இருதயத்து டீச்சரின் தங்கை பிலோமிக்கு தன் அத்தான் சேசய்யாவின் மீது இனம்புரியாத பிரியம் உண்டாகிறது.தன் தங்கையின் இந்தப் வினோத பிரியத்தை இருதயத்து டீச்சர் மென்மையாக ரசிக்கிறாள்.பிலோமியின் அத்தானின் மீதான பிரியத்தை நாம் கடல்புரத்தில் நாவலில் ரஞ்சியின் கொழுந்தனின் பிரியத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ளலாம்.
ஆசிர்வாதம் பிள்ளை-ரெபேக்காளின் தனிமை நிரம்பிய முதிய வாழ்வைப் பற்றிய குறிப்புகள் துயரார்ந்த அமைதி கொண்டவை.இடிந்துகொண்டிருக்கும் வீடு அவர்களின் முதிய வாழ்விற்கு குறியீடாகிறது.பெய்யும் மழைக்கு அறை இடிந்துவிழும் சத்தம் கேட்டு எழும் ஆசிர்வாதம் பிள்ளை,உறங்கும் ரெபேக்காளின் முக சாந்தம் கண்டு மெய்மறக்கிறார்.வேட்கைகள் தணிந்த பரிசுத்தமான நீரைப்போல் காதலை உணர்வதற்கு காலம்தான் எத்தனை பருவங்களை,எத்தனை தேய்பிறைகள் எடுத்துக்கொள்கிறது.
வண்ணநிலவனின் கதைமொழியை திரும்ப திரும்ப அற்புத அபூர்வம் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.ரெயினீஸ் ஐயர் தெரு கதைமொழியும் அப்படித்தான்.சொல்லிச் செல்கிற கதைக்கு தேவையான உடலெடுக்கும் அவர் மொழி நாவலுக்கு கொடுக்கும் கனம் அசாதரணமானது.“மழையை பார்த்துக்கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது.யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின்போது.” என்ற வரிகளோடு முடியும் இந்த நாவலை வாசிப்பதும் பொழியும் மழையைபார்த்துக்கொண்டிருப்பது போலத்தான்.
காலமும் கம்பா நதியும்:
சைவப்பிள்ளைமார் குடும்பங்களை பின்புலமாக கொண்ட காலம் மற்றும் கம்பா நதி நாவல்களில் சில பொது அம்சங்களை இனங்காணலாம்.கம்பா நதி பாப்பையாவும் காலம் நெல்லையப்பனும் ஒரே மனிதர்கள்தான் என்று நம்மால் உணர முடிகிறது.இருவரும் காதல் வயப்பட்டவர்கள், சினிமா பார்ப்பதில் பெரிய விருப்பம் கொண்டவர்கள்.வேலை குறித்த கவலை கொண்டவர்கள்.ஒத்த வாழ்வியற் சிக்கல்கள் கொண்டவர்கள்.
கம்பா நதி நாவலில் அடர்வான உரை நடையில் சங்கரன் பிள்ளை குடும்பத்தின் கதையை சொல்லிச் செல்கிறார் வண்ண நிலவன். வாழ்ந்து கெட்ட மனிதர்கள் கைவிடும் அவமான உணர்ச்சிக்கு சங்கரன் பிள்ளை சாட்சியாய் இருக்கிறார்.வீட்டின் வறுமை குறித்த எவ்வித அக்கறையற்ற அவர்மனதின் அடிப்படையான இச்சைகளின் கைதியாய் இருக்கிறார்.புகைப்பதற்கு சிகரெட்டும்,குடிப்பதற்கு மதுவும் ஆடுவதற்கு சீட்டும் கூடவே சினிமா நடிகையை போன்ற அவருக்காக,ஆராம்புளியிலிருந்து கணவனை விட்டுவிட்டு வந்த இரண்டாம் மனைவி செளந்தரமும் தேவைபடுகிறது.சீட்டாடி பிடிபட்டு ஜெயிலுக்குப் போகிறார்..மனைவியின் நகையை திருடி மறுபடியும் சீட்டாடப் போகிறார்.ஊழின் வளையத்தில் திரும்பத் திரும்ப ஓடும் ஒரு பொறுப்பற்ற தந்தையின் முகமாக சங்கரன் பிள்ளை இருக்கிறார்.
வண்ணநிலவனின் கதா ஆளுமைக்கு இன்னொரு உதாரணமாக இருப்பது அவர் நிறுவிக்காட்டும் தமக்கை-தமையன் உறவு நிலைகள்.காதலுக்கு மிக நெருக்கமான சகோதர பாசத்தை இவ்வளவு நுணக்கமாக தமிழ்க்கதையில் பேசியவர்கள் குறைவு.கடல்புரத்தின் செபஸ்தி-பிலோமி, ரெயினீஸ் ஐயர் தெருவின் எபன்-டாரதி, எபன்-ஜீனோ மற்றும் கம்பா நதியில் பாப்பையா-சிவகாமி.இந்த உறவுகளில் ஆண் பெண் என்ற பால் வேறுபாடுகள் சக உதிரம் என்ற அன்பின் பெரும்பரப்பில் கரைந்து போய்விடுகின்றன.
வண்ணநிலவன் விவரிக்கும் காதலனுபவங்கள் சராசரி இளைஞனும் பெண்ணும் அடையும், எப்போதும் யதார்த்தத்திடம் தோற்றுவிடும் மெல்லிய மயக்க நிலைகள்தான்.அது கம்பா நதி நாவலில் பாப்பையாவிற்கும் சிவகாமிக்குமிடையேனான அன்பாக,காலம் நாவலில் நெல்லையப்பனுக்கு காந்திமதியின் மேல் எழும் ஒரு தலையான பிரேமையாக,பத்மா சிவாவின் மீது கொள்ளும் மயக்கமாக கடல்புரத்தில் பிலோமி-சாமிதாசுடையதாக வெவ்வேறு வடிவங்களில் உருக்கொள்கிறது.இதில் யாரும் யாரோடும் திருமண உறவிற்குள் நுழைவதில்லை.அவர்களுக்கு ஆசிர்வாதம் பிள்ளை-ரெபேக்காளைப் போல முதிய வயதில் அன்பை பரிமாறிக்கொள்ளும் வரமில்லை.இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் காலம் நாவலில் காதலிக்கும் சங்கரனும் காந்திமதியும்கூட நாவலின் காலப்பரப்பிற்குள் திருமண உறவிற்குள் நகர முடிவதில்லை.மேற்சொன்ன எல்லாவற்றையும் வண்ண நிலவன் அமர காதல்களாக சித்தரிக்கவில்லை.அவை யாவும் குதறி எடுக்கும் வாழ்வின் சிக்கல்களிடையே நிகழும் அன்பின் எளிய விழைவுகளாக மட்டும் எஞ்சுகின்றன.கம்பா நதி நாவலின் சில உச்சமான பகுதிகளில் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது பாப்பையாவிற்கும் கோமதிக்குமிடையே வேலைக்கான நேர்முகத் தேர்வின் போது நிகழும் சந்திப்பும் அப்போது இருவருக்குமிடையே கிளர்ந்தெழும் காதல் உணர்வுகளும் அக்கணம் பெய்யும் மழையும் தச்சநல்லூர் சாலையில் அவர்களது நடையும் பாப்பையாவின் உட்பொதிந்த கால் பெருவிரல் நகத்தைப் பார்த்து கோமதி அடையும் உவகையும் நயினா குளத்துக் கலுங்கில் அவள் அழுகையும் என்று ஒரு அழகிய சிறுகதையைப் போலிருக்கும் காட்சிகள். காதல் கொண்ட மனதின் தவிப்புகள் ஏறத்தாழ ஒரு நீண்ட நெடுங்கவிதையைப் போல் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
எளிய மனிதர்களுக்கு விதிக்கு எதிர் நிற்பதில் வலு இருப்பதில்லை,சங்கரன் பிள்ளையின் போக்கும்,திருமணத்தைப் பற்றி யோசிக்க வாய்ப்பில்லாமல் குடும்பத்தை தாங்கி நிற்கும் அக்கா சிவகாமியின் நிலைமை, இவற்றிற்கு நடுவே பாப்பையா கிடைத்த பட்டாளத்து வேலைக்குப் போய்விடுகிறான்.கோமதிக்கு திருமணம் நிகழ்கிறது.அங்கேயும் குடித்துவிட்டு மடத்தில் விழுந்து கிடக்கிறார்.வெளியே கேட்கும் சத்தத்தில் முதலிரவு அறையை திறந்துபார்க்கும் கோமதியிடம் கதிரேசன் என்னவென்று கேட்கிறான்.பாப்பையாவின் நினைவோடு “ஒண்ணுமில்ல..இந்த சங்கரம்பிள்ளை சித்தப்பாதான்…” என்று சொல்லிவிட்டு கதவை சாத்திக்கொள்கிறாள்.இப்படியாக கம்பா நதி நாவல் முடிகிறது.பாப்பையா கோமதியின் பிரிவைப்பற்றி எவ்விதமான நேரிடையான குறிப்புகளும் வழங்கப்படுவதில்லை.எப்படியேனும் கடித்து தின்றவேண்டிய கல்லைப்போல் பிரிவின் துயரம் உணர்த்தப்படுகிறது.சொல்லாமல் விடப்பட்ட இந்த பிரிவுத்துயர் பிரதியின் செவ்வியல் தன்மையைக் கூட்டுகிறது.
ஒரு சிறுகதையின் அளவுக்கு மையக்கருவை கொண்ட காலம் நாவல் கம்பா நதியுடன் ஒப்பிடுகையில் அடர்வுத்தன்மை குறைந்ததாக தோன்றுகிறது.இந்த ஓப்பீட்டை தவிர்க்க முடியாத வகையில் இரண்டிற்குமிடையில் சில ஒத்த தன்மைகள் இருக்கின்றன.அது நாவலின் சமூக பினபுலமாக இருக்கலாம்.ஒரே விதமான கதாமனிதர்களின் சாயைகளாக இருக்கலாம்.அல்லது அவர்களின் ஒரே மாதிரியான பிரச்சனைகளாகவும் இருக்கலாம்.
நீதிமன்றம்,வக்கீலாபீஸ்,தேர்தலுக்கு நிற்கும் சீனியர்,ஜீனியர்கள்,பெரிய குமஸ்தா சிதம்பரம் பிள்ளை,மணல் பரப்பப்பட்ட மணி ஐயர் கேண்டீன்,கேஸ் டைரிகள்,வாய்தாகள்,கோட்டுப் போட வேண்டிய குமாஸ்த்தாக்கள், பாலகிருஷ்ணனின் இலக்கிய கூட்டங்கள், நெல்லையப்பன் மற்றும் காந்திமதியின் இலக்கிய ஆர்வம் என்று இந்த நாவலின் அலகுகள் வாசிப்பின் இன்பத்தை ஊட்டுகின்றன.முன்பு விவரிக்கப்பட்ட மூன்று நாவல்களோடு ஒப்பிடுகையில் இந்த நாவல் எழுப்பும் சலனங்கள் குறைவு.அதன் பொருட்டே மேற்சொன்ன வரிசைப்படுத்தல்.இந்த நாவல் மன எழுச்சி ஊட்டாத எளிய அன்றாட சம்பவங்களால் பின்னப்பட்டிருந்த போதும் வண்ண நிலவனின் கதைமொழியால் சுவாரஸ்யமடைகின்றது.மேலும் வண்ண நிலவனின்நாவல்களில் உரையாடல்கள் அதிகம் கொண்ட நாவல் இதுதான்.
எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கைகளே இந்த நாவல்களின் அடிநாதமாக இருக்கின்றது.துயர் என்னும் வாழ்வுணர்ச்சியை சிதைவாக பார்க்காமல் அவற்றை தங்கள் வாழ்வின் தவிர்க்கவியலாத அங்கமாக ஏற்றுக்கொள்ளும் இந்த மனிதர்களை பார்க்கும் போது இருத்தலின் வேட்கையை உயிர்ப்புடன் வைக்க துயர்களே காரணங்களாக இருக்கின்றன என்றும்தோன்றுகிறது.துறவமைதியோடு இந்த எளிய மனிதர்களின் கதையை சொல்லிச் செல்லும் வண்ணநிலவனின் எழுத்து எல்லோருக்காகவும் பெய்யும் மழையின் அர்த்தம் கொண்டது.
வண்ணநிலவனின் நாவல்கள் பக்க அளவில் மட்டும்தான் மிகச் சிறியவை.
1 comment:
தேடி வாசிக்கத் தூண்டும் பதிவு குணா.
Post a Comment