
சமீபத்தில் மூன்று நாவல்கள் வாசித்தேன்। நாஞ்சில் நாடனின் “என்பிலதனை வெயில் காயும்”. சா.கந்தசாமியின் “சூரிய வம்சம்” மற்றும் யூமா.வாசுகியின் ”மஞ்சள் வெயில்”.இவற்றில் சூரிய வம்சம் தவிர மற்ற இரண்டையும் முதல் முறையாக வாசித்தேன். என்பிலதனை வெயில் காயும் , சூரிய வம்சம் ஆகிய இரண்டு நாவல்களையும் ஒரே சேர வாசித்தபோது அவற்றில் சில ஒப்புமைகளையும் அவற்றிற்குள்ளிருக்கும் நுண்ணிய வேறுபாடுகளையும் உணர முடிந்தது.இரண்டு நாவலிலும் ஏறக்குறைய ஒரே சூழலில் உள்ள சிறுவர்கள் அல்லது இளைஞர்கள்.என்பிலதனை வெயில் காயும் சுடலையாண்டியை வாழ்க்கை இருமை நிரம்பிய திசையிலும் சூர்ய வம்சம் செல்லப்பாவை ஒளி நிரம்பிய திசையிலும் செலுத்துகிறது.
இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது நடந்துகொண்டிருந்த செமஸ்டர் தேர்வுகளிடையே பரீட்சைக்கு முந்தைய நாளொன்றில் பின்னிரவு இரண்டு மணி வரை நாஞ்சில் நாடனின் ”தலைகீழ் விகிதங்கள்” வாசித்துவிட்டு எதுவும் படிக்காமலே தேர்வெழுதப் போனேன். நல்ல வேளையாக தேர்ச்சிக்குத் தேவையான நாற்பதுக்கும் மேலே ஒரு மதிப்பெண் சேர்த்தே வாங்கியதால் என்னை அரியர்ஸ் வைக்க காரணமாகிவிடுவதிலிருந்து அவர் தப்பித்தார்.அதுவொரு மனோகரமான காலம்.
நாஞ்சில் நாட்டு மண்ணின் தாதுக்கள் அவர் எழுத்தில் நிறைந்து கிடப்பது நாமறிந்ததே.சுடலையாண்டியின் அம்மா அப்பாவுக்கு “வைத்துக் கொடுக்கும்” திவச நிகழ்விலிருந்து துவங்கும் நாவலில் ஆற்றோட்டமாக சுடலையாண்டியின் கதையை சொல்லிச் செல்கிறார்.ஈழவச்சியான அம்மா சுடலையாண்டியின் நினைவறியாத பிராயத்திலேயே தற்கொலை செய்து கொள்கிறாள்.அப்பாவும் செத்துப் போய்விட ஈழவச்சியின் மகன் என்ற அவமானத்தின் சுமையை இறக்கி வைக்க ஊர் அவனை விடுவதில்லை.அந்த வன்மத்தை எல்லாம் படிப்பில் ஆர்வமாக திருப்புகிறான் சுடலையாண்டி.கூடவே பலவேசம் பிள்ளையின் மகளான ஆவுடையம்மாளோடு ஒரு விடலைத்தனமான போட்டி.கல்லூரியில் முதல் வகுப்பில் ஜெயித்தாலும் இறுதியில் வாழ்க்கை அவனை கூலி வேலைக்கும் கிழங்கு விற்கவும் நிர்பந்திக்கிறது.ஆவுடையம்மாளுக்கோ வெகு விமரிசையாக திருமணம் நடக்கிறது.வேறு வழியே அற்ற ஒரு கணத்தில் தன் அம்மாவின் சகோதரனிடம் வேலையின் நிமித்தம் போய் நிற்க அவன் ஒரு பத்து ரூபாய் கொடுத்து பிச்சைக்காரனைப் போல சுடலையாண்டியை விரட்டும் காவிய நயம் கொண்ட துயரோடு நாவல் முடிகிறது. நாவலின் உள்ளீடாக மழைக்கால குறிப்புகள்,சுடலைக்கு காமம் கண் திறக்கும் காலம் பற்றிய குறிப்புகள்,திருமணவிழா மற்றும் நாஞ்சில் நாட்டு உணவுகள் பற்றிய விஸ்தாரமான வர்ணனைகளும் உள்ளன.

சுடலையை வஞ்சிக்கும் வாழ்க்கை செல்லப்பாவை வெற்றிப்படிக்கட்டுகளில் ஏற்றுகிறது.சா.கந்தசாமி கடிதமாய் எழுதியுள்ள முன்னுரை இந்த நாவலுக்கு புனைவை விட நிஜத்தின் சாயலை கொடுக்கிறது.படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட செல்லப்பாவை அம்மாதான் வேலைக்கு துரத்துகிறாள்.ஆனால் செல்லப்பா சூட்டிகையானவன்.அவனுக்குள் எப்போதும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அணையாத நெருப்பாய் கனல்கிறது.அக்காவை பாப்பாவை நோட்டமிட்டுக்கொண்டு சைக்கிள் கடையும் உள்ளே சாராயக் கடையும் நடத்துபவனான கள்ள உறவு கொண்டாடும் மணி காவல்துறையிடம் சிக்கி உதைபடும் போது அங்கிருந்து வெளியேறி சாம்பசிவத்தின் சைக்கிள் கடையில் சேர்ந்து பின்பு ராமுவிடம் மெக்கானிக் ஆகி அப்படியே சென்னையில் சாம்பசிவ ஐயரின் கம்பெனியில் சேர்ந்து அப்புறம் கடைசியாக அரசாங்க வேலை என்று அவன் முன்னேற்றம் வியக்கத்தக்கது.ஒருவன் தொடர்சியாய் இவ்வளவு வெற்றிகள் அடைவதை நாம் நிஜ வாழ்வில் பார்த்திருந்தாலும் கதையில் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது.ஒருவகையில் செல்லப்பாவை பார்த்தால் பொறாமையாகவும் உள்ளது.அதுவே சுடலையின் மீது பரிதாபமாகவும் மாறுகிறது.
நாவலின் பிற்பகுதியில் டில்லி,மேரி,எலிசபெத் என்று நகரத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையையும் தொட்டுச் செல்கிறார் சா.கந்தசாமி.இறுதியில் செல்லப்பா தொழிற்சங்கத்தில் துணைச் செயலாளர் ஆவதோடு நாவல் முடிவு பெறுகிறது.இதில் இன்னொரு ஒப்புமை கொண்ட விஷயம் சுடலை-ஆவுடையம்மாள்,செல்லப்பா-மேரி இவர்களின் உறவுநிலைகள்.இரண்டுமே காதலா காதலற்றதா என்று பிரித்து சொல்ல முடியாத நுட்பம் கொண்டவை.ஆனால் கிளர்ச்சியூட்டுபவை.ஏறக்குறைய இரண்டு நாவலகளும் நான்காண்டுகள் இடைவெளியில் வெளியாகியிருக்கின்றது.என்பிலதனை வெயில் காயும் எழுபத்தி ஒன்பதிலும் சூர்ய வம்சம் எண்பத்தி மூன்றிலும் வெளியாகியிருக்கின்றன.சுடலையும் செல்லப்பாவும் வாழ்வின் இருவேறு முகங்களாக இருக்கிறார்கள்.
மூன்றாவதாக யூமா வாசுகியின் ”மஞ்சள் வெயில்”. “ரத்த உறவு” வாசித்து விட்டு பித்தோடு அலைந்த நாட்கள் நினைவில் இருக்கின்றன.மஞ்சள் வெயில் மேம்போக்காக பார்த்தால் ஒரு எளிய ”தமிழ்” காதல் கதைதான்.ஆனால் இந்த நாவலை இலக்கியத்தில் காதல் என்ற புளித்த தன்மையிலிருந்து வேறுபடுத்துவது யூமாவின் அற்புதமும் உக்கிரமும் நிறைந்த அவரது மொழி.காதல் கதையாக இந்த சிறிய நாவல் அறியப்பட்டாலும் ஒரு கலைஞனின் மென்மையான தனிமை நிரம்பிய உலகம்,பதட்டமூட்டும் லோகாயுதம் மற்றும் எப்போதும் தனக்குள் சுருங்கிக்கொள்ளும் கலைஞனின் தன்மை,மனத்துயரை உடலை வாதையூட்டிக்கொள்வதின் மூலம் வெளியேற்ற முயலுதல்,மீட்சியை கொணரும் மது,குழந்தைகள்,தெருப்பாடகன்,இராக்காவல் என்று வேறொரு உலகத்தை அதன் மனிதர்களை மிக நுட்பமாக வரைந்து காட்டியுள்ளார் யூமா.அதையே இந்த நாவலின் முக்கியத்துவமாக நான் கருதுகிறேன்.மற்றபடி காதல்,அதன் தோல்விகள்,வாதைகளை பற்றி தனியாக சொல்வதற்கு ஏதுமில்லை.Universal Pain!!!
No comments:
Post a Comment