Mar 31, 2012

புரள் நாவின் பொதுமொழி


கொஞ்ச காலத்திற்கு முன்பு lingua Franca என்ற வார்த்தையை முதன்முதலாக எதிலோ படித்தேன்.எதிலென்று சரியாக நினைவிலில்லை.வழக்கம்போல பெருந்தெய்வம் கூகிளிலும் சிறுதெய்வம் விக்கிப்பீடியாவிலும் தேடியபோது விரிவான தகவல்கள் கிடைத்தன.டவுன்லோடு ரைட்டிங் செய்யக்கூடாது என்று வலிந்து கொண்டிருப்பதால் இணைப்பு மட்டும் இங்கே..

http://en.wikipedia.org/wiki/Lingua_franca

இன்று ஆங்கிலம் மட்டுமே மேற்குறிப்பிட்ட lingua franca விற்கு மிகச் சரியான உதாரணமாக இருக்கிறது என்பது நாம் அறிந்ததே.பிறகு ஸ்பானிஷை சொல்லலாமென்றும் கருதுகிறேன்.மேலும் இந்த வார்த்தை உருவானதில் காலனியத்தின் பங்களிப்பை பெரியதென்று புரிந்து கொள்வதில் நமக்கு சிரமங்கள் இல்லை. பாலாவும் நானும் எப்படி காலனியத்தின் விளைபொருளான ஆங்கிலம் தற்கால சமூக விஞ்ஞான அரசியலில் வினைபுரிகிறது என்பது குறித்து மொழியின் அதிகாரம் பற்றிய விவாதமொன்றில் பேசிக்கொண்டதும் நினைவிற்கு வருகிறது.

இணையப்பரப்பில் lingua franca முன்வைத்து யோசிக்கும்போது முடிவுகளை எய்த முடியாத வண்ணம் இது சற்றே சிக்கலானதாக தோன்றுகிறது. அறிவின் யுகமான இன்றைய காலத்தில் ஆங்கிலத்தை பரம்பரை சொத்தாக கொண்ட மேற்கத்திய சமூகங்கள் தமது அறிவுசார் கருவூலத்தை டிஜிட்டல் வடிவமாக அனேகமாக மாற்றிவிட்ட தருணத்தில் மற்ற சில மொழிகளும் தமது அறிவுசார் களஞ்சியத்தை இணையப்பரப்பில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன.இன்றைக்கு நாம் தமிழிலேயே பெரும்பாலான தகவல்களை பெறமுடியும் என்றும் தோன்றுகிறது. இதற்கு தமிழர்களின் ஆங்கில அறிவு தான் காரணம் என்று சொல்ல முயன்றால் சீன ஜப்பானிய, ஸ்பானிய மொழிகளில் இது எவ்வகைப்பட்டதாக இருக்கிறது என்று தெரியவில்லை…பத்து பதினைந்து தலைமுறைகள் கழித்து மானுடத்தின் சந்ததியினர் பைனரி மொழியின் சொல்வழக்கை கண்டறியப்போவதும் நிகழக் கூடும்.

மொழி ஏன் இவ்வளவு உணர்வுப்பூர்வமான வஸ்துவாக இருக்கிறது ? ”தசாவதாரம்” திரைப்படத்தில் புலனாய்வு அதிகாரியான கமலஹாசன் “தெலுங்கா?” என்று கேட்கும்போதெல்லாம் ஒலிக்கும் பின்னணி இசையின் நகைச்சுவையை தவிர்த்த தன்மை என்ன? தொடுகைக்குக்குப் பிறகு மனிதனின் மீப்பெரும் உணர்வுப்பரிமாற்ற ஊடகமாக மொழி இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.மேலும் சைகை மொழி, எழுத்து ,ஓவியம் இவற்றின் வீரீயத்தைத் தாண்டி மனிதனுக்கு தன் உடலிலிருந்து எழும்பும்/எழுப்பும் ஓசையின் மூலம் உணர்வுகளை கடத்துவது மிக முக்கியமானதாக இருக்கிறது.இங்கேதான் இசை என்ற கலைவடிவத்தின் பாடல் என்ற அலகை யோசிக்க வேண்டியிருக்கிறது.

மொழிகளுக்கு இடையேயான அல்லது வேறுபட்ட மொழி பேசுபவர்களுக்கான தொடர்பில் காலனியம் என்ற தன்மையை தவிர்த்துவிட்டு நாடோடித்தன்மை மற்றும் புலம்பெயர்தல் இவற்றின் தாக்கம் பற்றியும் நாம் விவாதிக்கலாம். நான் ஏழாண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறேன்.. எனக்கு கன்னடம் அரைகுறையாக புரியும்…ஆனால் பேசத்தெரியாது.ஆனாலும் எனக்கு இன்றைய கணத்தில் பெங்களூரூ நகரத்தில் நான் எதிர்காலத்தில் வசிக்கப்போகும் காலம் வரை கன்னடம் கண்டிப்பாக பேசவேண்டிய தேவையேயில்லாமல் வாழ்ந்து விட முடியும் என்று தோன்றுகிறது. இதற்கு தமிழ்நாட்டுக்கு பக்கத்து நகரமாக பெங்களூரூ இருக்கிறது என்பதைத் தாண்டியும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை காரணமாக இருக்கிறது. இங்கே அரைகுறையாக கன்னடம் பேசுபவர்களிடம் ஆட்டோ டிரைவர்கள் நேரிடையாக உங்கள் தாய்மொழியில் பேசுவார்கள்.அதில் பாதிப்பேர் தமிழர்கள் என்பது இதில் ஒரு irony.

நான் ஆறுமாத காலம் உருகுவே நாட்டில் வசித்தேன்.ஜாய்ஸ் சொன்னது போல் நீங்கள் சாகசங்கள் நிகழ்த்த வேண்டுமானால் வேறு நாட்டில் வசிக்கவேண்டும் என்பதற்கு ஏற்ற வாழ்வு. ஸ்பானிஷ் பேசும் சமூகத்தில் ஆங்கிலத்தின் தேவையே இல்லை என்பது புரிந்தது.அலுவலத்தில் இருக்கும் ஸ்பானியர்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுவார்கள்.ஆனால் தொழில்முறை நட்பை பேண வேண்டி நான் அவர்களுடன் நுண்மையான உரையாடல்களுக்குள் செல்லவேயில்லை.ஒருமுறை நான் ரிப்போர்ட் செய்யும் ரொமொனின் மேசையில் உம்பர்த்தோ ஈகோவின் “The name of the Rose” இன் ஸ்பானிய மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் தாங்கமுடியாமல் இலக்கியம் பேசினேன்.ஆனாலும் என்னால் கடைசி வரை ஸ்பானிய மொழியை வெல்ல முடியவில்லை.அதன் லிபி ஆங்கிலத்தை ஒத்ததாக இருந்தாலும் அதிலிருந்து அர்த்தங்களை உருவாக்கும் காமன்சென்ஸ் கொஞ்சம் இருந்ததாலும், வண்ணநிலவனின் நான்கு புத்தகங்கள் எடுத்துச் சென்றிருந்தாதலும் சமாளிக்க முடிந்தது.

ஆனாலும் ஆங்கிலமே தெரியாத பியர் பாட்டில்கள் சேகரித்து விற்று வாழும் ஒரு பதின்ம வயது இளைஞனிடம் அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் கரையோரத்தில் நான் உரையாடியிருக்கிறேன்.மிக சுலபம் அது.அவன் ஸ்பானிசிலும் நான் ஆங்கிலத்திலும் பேசுவோம்.கூட சைகமொழியும்.எதற்கு சொல்கிறேன் என்றால் பொதுமொழி இல்லாமலும் மனிதர்கள் வாழக்கூடும், எதிரே இருப்பது மனிதன் தான் என்று உறுதியாக புலப்படும் வரை.

மனிதனுக்கு இரண்டு தகவமைப்புக்கள் மிக முக்கியமானவை..ஒன்று உயிர்வாழ்தல், இரண்டு உரையாடுதல்.இயற்கையான சவால்களுக்கு உட்பட்டு மானுடம் இரண்டையும் நிகழ்த்திவிட்டது என்றே நினைக்கிறேன்.மேலும் ஆங்கிலம் ஒன்றேதான் lingua franca ஆக மனிதர்கள் உணர்ந்துவிட்ட காலகட்டத்தில் அதுதான் கலாச்சாரம் என்ற பொதுமைக்கு எதிரான ஒரு பிரக்ஞையை நம்முள் நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறது என்பதும் உண்மையின் ஒரு கீற்று.

1 comment:

blindfishspeaks said...

Expecting more on this boss...nice beginning