1)
ஒரு கனவைப்போல்காலம்
நம் நினைவுகளிலிருந்து தப்புகிறது
ஏறுவெயிலிடை பனித்துளி போலவும்..
கடந்தவை எதிர்
இரண்டுக்குமிடையே நுரைத்தெழும்புகிறது
வாழ்வின் மீதான பெருவிருப்பு
யுகங்களை ஊடுருவிக்கடக்கும் தாபம்
அரூப வெளியில்
இறைஞ்சுதலாய் அலையத்துவங்குகிறது
விகிதக்கணக்குகள்
வேறுபடத் துவங்குகையில்
பயம் மருவைப்போல் திரள்கிறது.
கேள்விக்குறியின் சுழி
கழுத்தில் முயற்கண்ணியாகிறது.
ஒவ்வொரு இரவிலும்
நம் உறக்கத்தின் ஆழம்
குறையத்துவங்குகிறது.
பிறகு
நாம் வாள் உயர்த்துகிறோம்
அத்தனை பயத்தோடு..
2)
ஒரு துரோகத்தை
கொஞ்சம் பயத்தோடுதான்
துவக்க வேண்டியிருக்கிறது
உருப்பெறுகையில்
பயம் பாதியாகிறது
செழித்த பின் சாதரணமாகிறது.
பின்னதுவொரு
உறுத்தாத கரும்புள்ளியாகிறது
மச்சத்தை போல.
3)
முறியும் கிளையில்
மலர்ந்திருக்கும் பூக்கள்
தேனீருக்கு காசில்லாத
மழை நாள்
முகம் பதியவைத்துக்கொள்ளுமுன்
கடந்துவிடும் பேரழகிகள்
தாயற்ற சிசுவுக்கான
இரவல் தாலாட்டு
வாய்த்தும்
நிறைவிலா புணர்ச்சி
போதாமைகளின் இடையில்
புன்னகைக்கிறார்
நம் கடவுள்
4 )
பூவனத்தில் வாழ்கிறாள்
சூனியக்காரி
ஆதியிருள் மீத்திருக்கும்
குகையிருக்கிறாள் தேவதை.
யாரேனும் ஒருவரை எதிர்பார்த்து
உச்சிக்கரட்டில்
உயிர் வைத்திருக்கிறான் அவன்
ஒரு குழந்தையாய் உருமாறி
அமுதம் நிரப்பிய கிண்ணத்தோடு
சூனியக்காரி அவன் முன்னிருக்கையில்
வனப்புமிகுந்த விலைமகளின் ரூபத்தில்
மாமிசத்தட்டை நீட்டுகிறாள் தேவதை
ஒன்றைக்கொள்ள மனமின்றி
இரண்டையுந் தேர்ந்தபின்
வாழ்ந்தே செத்துக்கொண்டிருக்கிறான்.
No comments:
Post a Comment