Dec 7, 2011

இரண்டு கவிதைகள்

1)

யாருமற்ற தனிமையில்
ஆடை நெகிழ்வின் பிரக்ஞையற்ற
பெண்னென குளம்

கிரணங்கள்
தீண்டிய வெடவெடப்பில்
தாமரைகள்

சலிப்பற்ற சந்தோஷத்தில்
கும்மாளமிடும் மீன்கள்

நீருண்ட நன்றிக்கு
பூவுதிர்க்கும் மரம்

மேகங்களில் மின்னுகிறது
உன் முகம்

2)

கடவுள் வந்திறங்கும்
பூசாரியின் தேகமென
உடல் விதிர்க்கின்றது
உன் பார்வைகளின் தீண்டலில்

யாக்கை கொதிக்கும்
இவ்வெக்கையை கொடுத்துவிட்டு
பனிமலையென நீயிருக்கிறாய்

இரைவெறியில் அலையும்
காதல் மனசு
ஊசிமுனையில்
ஊழித்தாண்டவம் நிகழ்த்துகிறது.

உனக்கெப்படி வாய்த்தது
நானருந்தும் நீரையும்
கள்ளாய் மாற்றும் ரசவாதம்?

No comments: