Dec 7, 2011

வினோதக்கதைகளின் வெற்றிவாகை சூடிய உயிர்த்தெழல்

- இடாலோ கால்வினோ தொகுத்த "Fantastic Tales" என்ற தொகுப்பிற்கு அவர் அளித்த முன்னுரைக்கான மொழிபெயர்ப்பு


வினோதக் கதைகள் பதினெட்டாம் நூற்றாண்டு கதைவிவரிப்பின் மிகுந்த பண்புநலன் மிக்க விளைபொருட்களில் ஒன்றாகும்।நமக்கு,இது மிகவும் குறிப்பிடத்தகுந்தவையில் ஒன்று. ஏனெனில் இது அதிகமாக தனிமனிதத்தின் அகவாழ்வையும் அதன் திரண்ட குறியீடுகளைப் பற்றியும் நமக்குச் சொல்லும் இலக்கிய வகையாகும்.இன்றைக்கு அது நம் நுண்ணுணர்வுகளோடு தொடர்புடையாதாகையில் இக்கதைகளின் இருதயத்திலிருக்கும் அதிஇயற்கை(supernatural) நமது அறிவார்ந்த கவனத்திலிருந்து தொலைவாகிவிட்ட சுய நினைவிழந்தவர்களின்,அடக்கப்பட்டவர்களின் மற்றும் மறக்கப்பட்டவர்களின் கலகத்தைப் போல் எப்போதும் அர்த்தத்தைச் சுமந்திருப்பதாகவே தோற்றமளிக்கிறது.இதில் வினோதத்தின் நவீன பரிமாணத்தை, நமது காலத்தில் அதன் வெற்றிவாகை சூடிய உயிர்தெழுதலிதலின் காரணங்களைக் காண்கிறோம்.சென்ற நூற்றாண்டு வாசகர்களைவிட அருவத்தோற்றங்களும் மாயக்கற்பனைக்காட்சிகளும் நம்மை ஆச்சரியப்பட வைக்க நாம் குறைவாகவே அனுமதிக்கப் பழகியிருந்தாலும் வினோதக்கதை நம்மை நெருக்கமாக தொடுகிற விஷயங்களைச் சொல்வதை கவனிக்கிறோம்.நாம்,அவற்றை வேறொரு விதமாக,கடந்து போய்விட்ட சகாப்தத்தின் ஆன்மாவிலிருக்கும் மூலப்பொருட்களாக அனுபவிக்க விருப்பம் கொண்டிருக்கிறோம்.

வினோதக் கதைகள் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு மத்தியில் தத்துவார்த்த கொள்கை எழுந்த அதே களத்தில் எழுகிறது.அதன் உள்ளடக்கம்,நாம் வாழும் உலகின் யதார்த்தம் மற்றும் புலனுணர்வின் வழியாக அறிந்துகொள்வதற்கும் மற்றும் நமக்குள்ளிருந்து நம்மை வழிநடத்தும் சிந்தனை உலகத்தின் யதார்த்திற்கும் இடையிலான உறவாக இருக்கிறது.நாம் காணும் யதார்த்திலிருக்கும் பிரச்சனைகள்- வெகு சாதாரண தோற்றங்களுக்கு கீழிருகின்ற,புதிரான மற்றும் திகிலூட்டக்கூடிய வகையில் நமது மனங்களால் வெளிப்படுத்தப்படும்,அனேகமாக அருவத்தோற்றங்கள் போன்ற அசாதரண விஷயங்கள் அல்லது கணத்தில் மறைந்துவிடும் எளிமையான விஷயங்கள்,இடையூறூட்டும் இயற்கை- இவை யாவும் யதார்த்தின் ஒத்துப்போக முடியாத நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டத்தில் தனது சிறந்த வீரியத்தைக் கொண்டிருக்கிற வினோத இலக்கியத்தின் சாரமாக இருக்கிறது.

தன்னுடைய "வினோத இலக்கியத்திற்கான அறிமுகம்"(Introduction to Fantastic Literature,1970) என்ற புத்தகத்தில் செவ்டன் டோடரோவ்(Tzvetan Todorov) வினோத விவரிப்பை மிகச்சரியான விதத்தில் வேறுபடுத்துவதாக ஆக்குவது தவிர்க்கமுடியாத நிஜத்திற்கு முன்னாலான நமது குழப்ப நிலை,அறிவார்ந்த மற்றும் மெய்மையான விளக்கங்களைத் தேர்வதற்கிடையிலான நமது சந்தேகங்கள் மற்றும் அதிஇயற்கையை ஒப்புக்கொள்வதில் ஏற்படும் தயக்கங்களாக கொள்கிறார்.இவ்வகைககதைகளில் அடிக்கடித் தோன்றும் எதையும் அவநம்பிக்கை கொள்ளும் தர்க்கவாதியின் பாத்திரமானது இரக்கம் மற்றும் முரண் கொண்டதாக காணப்படுவதை முழுவதுமாக மறுப்பதற்கில்லை.ஏனெனில் தானறியாத ஏதோவொன்றால் எதிர்கொள்ளப்படுவதை எப்படி விளக்குவதென்பதை அவன் தெரிந்திருக்காதபோது சரணடைந்தே ஆகவேண்டும்.டோடரோவின் படி வினோதக் கதைகள் சொல்லும் நம்பமுடியாத நிகழ்வு அருவத்தோற்றமாக கனவாகவோ(எதற்கும் இசைவளிக்கும் உடன்துணை) இல்லாதபட்சத்தில் கட்டாயம் எப்போதும் அறிவார்ந்த விளக்கத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

இன்னொரு வகையில் டோடரோவின் படி நீதிக்கதைகள் அல்லது ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் இருப்பது போல, சரியாகத் தோன்றுகிற மற்றும் காரணம் காட்டி விளக்கிக்கூற முடியாதவை மீது ஆராயமலேயே நமது ஒப்புதலை கொடுத்துவிடும் "அற்புதம்"(Marvelous) என்பது வினோதத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது."fantastique" என்பதை அனேகமாக எப்போதும் மரித்தவர் ஆவி என்பதைப்போல கொடூரமானதாக விளக்கப்படுத்தும் பிரெஞ்சு இலக்கிய சொற்றொடருக்கு இந்த வேறுபாடு உண்மையாக இருக்கிறது.ஆனால் இன்னொரு வகையில் இத்தாலிய நோக்கில் வினோதம் என்பது தன்னை அதிபுனைவு(fantasy) என்ற கருத்தோடு மிக சுதந்திரமாக இணைத்துக்கொள்கிறது.இதன் விளைவாக நாம் இத்தாலியர்கள் அரிஸ்டோவிலிருக்கும்(Ariosto) வினோதத்தைப் பற்றிப் பேசுகிறோம் (உதாரணத்திற்கு ஆர்லேண்டோ பியூரிசோவில்(Orlando Furioso).ஆனால் பிரெஞ்சு சொற்றொடரின் படி அரிஸ்டோவிலிருக்கும் அற்புதத்தைப் பற்றி நாம் பேசியிருந்திருக்கவேண்டும்.

ஜெர்மானிய மீயுணர்ச்சிவாதத்தோடு(Romanticism) பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வினோதக்கதை பிறந்தது.ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீயுணர்ச்சிவாதிகள் பெருமளவில் பயன்படுத்தியிருந்த உள்ளடக்கம்,தளம்,தோற்றங்கள்(குறிப்பாக அதிர்வூட்டக்கூடிய,கொடூரமான,மனம் நடுங்க வைக்கும் தோற்றங்கள்) ஆகியவற்றின் களஞ்சியத்தை ஆங்கில Gothic நாவல் வடிவம் ஏற்கனவே கண்டடைந்திருந்தது.அவர்களின் முதல் வரிசையில் எழும் பெயர் பிரெஞ்சு குடிமகனாக பிறந்து ஜெர்மன் மொழியில் எழுதிய, தன் ஸ்படிகம் போன்ற ஜெர்மன் உரைநடைக்கு பிரெஞ்சின் பதினெட்டாம் நூற்றாண்டுக்கே உரித்தான எளிமையை கொடுத்த (அவருடைய பீட்டர் ஸ்லீமிகிஸ்(Peter Schlemihls)ன் சாதனையால்) அடெல்பர்ட் வான் கேமியஸோவாக(Adelbert von Chamisso) இருப்பதால் பிரெஞ்சு உட்பொருளும் கொதிக் நாவல் வடிவத்தில் முக்கியமாக இருப்பதைக் காண்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு,மீயுணர்ச்சி வினோதக் கதைகளுக்கு இருதன்மையான உடைமையை கொடுக்கிறது.ஒன்று அற்புதக் கதைகளின் (பதினான்காம் லூயியின் சபையிலிருந்த feerique முதல் காலண்டால்(Galland) ஆல் கண்டுபிடிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின் கீழைத்தேய மாயக்கற்பனைக்காட்சிகள் வரை) கவர்ந்திழுக்கும் வகையிலான ஆடம்பரம். இரண்டாவதாக வால்டோரியன் தத்துவக்கதைகளின் கூர்மையான நடையிலான வரிசைக்கிரமமான நேரிடையான காரணமற்ற தன்மை எதுவும் இல்லாத எல்லாம் ஒரு முடிவை நோக்கி நகர்கிறவை.

பதினெட்டாம் நூற்றாண்டு தத்துவக்கதைகள்,விழிப்புணர்வு சித்தாந்த ஆதாரத்தின் புதிரான வெளிப்பாடாய் இருக்கையில் கண்ணைத் திறந்து கொண்டே காணும் தத்துவ லட்சியவாதத்தின் கனவைப்போல அகவயத்தின் யதார்த்தம்,மனதின் தனிப்பட்ட உணர்வு சார்ந்த உலகம், கற்பனைத்திறன்,அதற்கு, நோக்கமிகுந்த உலகின் பண்புகளுக்கு இணையான அல்லது அதற்கு மேலான கண்ணியத்தைக் கொடுப்பதை பிரதி நிதித்துவப்படுத்தும் அறிவிக்கப்பட்ட நோக்கத்துடன் வினோதக்கதை என்பது ஜெர்மனியில் பிறக்கிறது.அந்தக் காரணத்திற்காக அதுவும் கூட தத்துவக்கதையாக தானாக தன்னை வழங்கிக்கொள்கிறது.இங்கே ஒரு பெயர் எல்லாவற்றிற்கு மேலே எழுகிறது:ஈ.டி.ஏ.ஹாப்மென்(E.T.A.Hoffmann)

ஒரு நூற்திரட்டு தனது சுயஎல்லைகளை சித்தரித்துக்கொண்டு தனக்கு சில விதிகளை தானாகவே விதித்துக்கொள்ள வேண்டும்.இந்தத் நூற்திரட்டு ஒரு ஆசிரியரின் ஒரு பிரதி என்ற விதியை சுவீகரித்துக்கொண்டுள்ளது.ஹாப்மனை பிரதிநிதித்துவப்படுத்த அவரது எல்லா கதைகளிலிருந்தும் ஒன்றை மட்டும் தேர்வது தேவையாக எழும்போது இந்த விதி கருணையற்றதாகிவிடுகிறது. நான் அவரது வெகுவாக அறியப்பட்ட கதையை தேர்ந்தெடுத்தேன்.ஏனெனில் அது ஒரு "கடப்பாடு சார்ந்த" பிரதி என்று நாம் சொல்லலாம்.எதற்கும் கலங்காத மேட்டுக்குடி வாழ்வின் பாத்திரங்களும் உருவங்களும் இயற்கைக்கு மாறான உருக்களாக, கொடூரமானவைகளாக,பயமூட்டும் அருவங்களாக,துர்க்கனவுகளில் வருவதைப் போல உருமாற்றம் அடையும் "தி சாண்ட்மென்"(The Sandman).ஆனால் ஹாப்மென்னின், அனேகமாக முழுக்கவும் இயற்கைக்கு மாறானவை குறைவுபட்டிருக்கும் உதாரணத்திற்கு இயற்கை சார்ந்த கற்பனாவாத கவிதைத்தன்மை கனிம உலகத்தின் வசீகரம் வழியாக உன்னத நிலையை அடையும் "தி மைன்ஸ் ஆப் காலன்"(The Mines of Galun) போன்றவற்றை நோக்கி என் தேர்வுகளை அமைத்திருக்கமுடியும்.

இளைஞனான் எல்லீஸ் இறங்கும் சுரங்கங்கள்,அதன் ஒடுங்கிய முனையில் சூரிய ஒளி அல்லது மனைவியின் தழுவலுக்கான அவன் விருப்பமானது அகவயத்தின் மிகச்சரியான சிறந்த குறியீடுகளை அமைக்கின்றன.மற்றும் இங்கே வினோதக்கதைகள் பற்றிய எந்தவொரு விவாதமும் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்தைப் பார்க்கிறோம்:குறியீடுகளின் அர்த்தங்களை தெளிவுபடுத்துவதற்கான முயற்சி-கேமியாஸோவில் Peter schlemihls இன் இழந்த நிழல்,ஹாப்மென்னில் எல்லீஸ் தொலைந்துபோகும் சுரங்கங்கள், ஆச்சிம் வான் ஆர்னிம்(Achim von Arnim)யின் "டை மெஜரட்ஷெரன் (Die Majoratsheren)"ல் யூதர்களின் தெரு ஆகியவை செழுமையான வெளிப்பாட்டுத்தன்மையை வளம்குன்றச் செய்வதைத்தவிர அதிகமாக எதுவும் செய்வதில்லை.

ஹாப்மென் தவிர ஜெர்மன் மீயுணர்ச்சிவாத காலத்தில்,வினோத இலக்கிய வகையின் சிறந்த ஆக்கங்கள்,முடிந்த அளவிற்கு பரந்துபட்ட களத்தைக்கொடுக்க விரும்பும் ஒரு நூற்திரட்டில் சேர்ப்பதற்கு மிக நீளமானவை.ஐம்பது பக்கங்களுக்கு குறைவானவை என்று நானாக ஏற்படுத்திக்கொண்ட இன்னொரு விதி, மிக நீளமானதாகவோ நாவல் வடிவத்திலோ இருந்த, நான் முன்பே பேசியுள்ள கேமியேஸொவின் குறு நாவலான இசபெல் ஆப் ஈஜிப்ட்(Isabel of Egypt),ஆர்னிமின் மற்ற சிறந்த ஆக்கங்கள் மற்றும் Joseph von Eichendorff ன் "மெமரிஸ் ஆப் லேஸி மேன் (Memories of lazy Man)" போன்ற என்னுடைய விருப்பப்பிரதிகள் சிலவற்றை தவிர்த்துவிட வலியுறுத்தியது.ஒரு தேர்வை கொடுத்தல் என்பது நான் மூன்றாவதாக ஏற்படுத்திக்கொண்ட முழுமையான கதைகளையே வழங்குவது என்ற விதியை மீற வைத்தது.(நான் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்திக்கொண்டேன்:பொடோகி(Potocki)."மேனுஸ்கிரிப்ட் பவுண்ட் இன் ஸரகோஸா (Manuscript found in Saragossa)" என்ற அவரது நாவலில் உள்ள கதைகள் ஒன்றுக்கொன்று இணைந்திருப்பதை விட,ஒரு குறிப்பிட்ட சுதந்திரத்தை அனுபவிக்கின்றன)

பல்வேறு ஐரோப்பிய இலக்கியங்களில் சிதறியிருக்கும் ஹாப்மெனின் ஒத்துக்கொள்ளப்பட்ட ஆளுமையை கவனத்தில் எடுத்துக்கொண்டால் குறைந்தபட்சம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வினோதக்கதை என்பது "ஹாப்மென்னின் நடையிலான கதைசொல்லல்" என்பதோடு நேர்பொருள் கொண்டதாக உறுதி கொள்ளமுடியும்.ரஷ்ய இலக்கியத்தில் ஹாப்மென்னின் ஆளுமை அதிசயிக்கத்தக்க கனியாக கோகலின்(Gogol) செயிண்ட பீட்டஸ்பர்க் கதைகள்(Saint Petersburg Tales) போன்றவற்றை உருவாக்குகிறது.ஆனால் ஐரோப்பிய உந்துதலுக்கு முன்பாகவே கோகல் உக்ரேனியன் நாட்டுப்புறத்தை மையமாக கொண்ட சூனியக்கதைகளை தனது இரண்டு தொகுப்புகளில் எழுதியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.தொடக்கத்திலிருந்தே விமர்சன மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தை யதார்த்தவாத நோக்கிலேயே பயின்று வந்திருக்கிறது.ஆனால் புஸ்கினிலிருந்து தஸ்தாவெஸ்கி வரையான வினோத மனப்போக்கின் இணையான நிகழ்வுகள் தெளிவாகவே தெரிகிறது. நிக்கோலாய் செமியோனோவிட்ச் லெஸ்கோவ்(Nikolai Semyonovich Leskov)போன்ற முதல்தர எழுத்தாளர்கள் தங்களுடைய பொருத்தமான பரிமாணங்களை சரியாக அந்த வரிசையிலேயே பெறுகிறார்கள்.

பிரான்ஸில் சார்லஸ் நோடியர்(Charles Nodier),பால்சாக்(சுயபிரகடனப்படுத்திக்கொண்ட வினோத பால்சாக் மற்றும் வினோதக் உருக்கள்/இரவின் தடயங்கள் கொண்ட யதார்த்த பால்சாக்), மற்றும் மீயுணர்ச்சிவாதத்திலிருந்து கிளை பரப்பி வினோதக்கதை வளர்ச்சியில் பெரிய பங்காற்றப்போகும் அழகியலை நாம் நிறுவிக்கொள்ளத்தக்க தியோபிலி காடியர்(Theophile Gautier) ஆகியோரிடம் ஹாப்மென் மிகப் பெரிய ஆளுமை செலுத்தியிருந்தார்.பிரான்ஸில் வினோதமென்பது நோடியரிலிருந்து நெர்வல்(Gerard de Nerval) வரை மறைபொருளின் லேசான தடயமாக அல்லது பால்சாக் மற்றும் காடியரில் இருப்பதைப்போல ஸ்வீடன்பெர்கின் இறையுணர்வுடன்,தத்துவப் பார்வைக்கான நன்றியுடன் இருக்கிறது.ஜெரார்ட் டி நேர்வல் ஒரு புதுவகை வினோத இலக்கியத்தை உருவாக்குகிறார்.உள்ளடக்க வடிவத்தைவிட கவித்துவ அடர்த்தியால் வளம்பெறும் கனவுக் கதை.(Sylvie,Aurelia). Marimee மற்றும் அவரது மெடட்டோரோனியன் கதைகளைப் பொறுத்தவரையில்(மற்றும் அவருடைய லோகிசுடைய(Lokis) லித்துவானிக்கை(Lithuania) குறிப்பாக தெரிவிக்கிற நோர்டிக் கதைகள்:) ஒரு நாட்டின் ஒளியையும் ஆன்மாவையும் உடனடியாக ஒரு குறியீடாக மாறிவிடக்கூடிய தன்மையுள்ள பிம்பத்திற்குள் கொண்டுவரும் திறமையோடு அவர் அந்நியமாதல் என்ற புதிய பரிணாமத்திற்கு வினோத இலக்கியத்தை திறக்கிறார்.

அதிர்வூட்டத்தக்கவை மற்றும் கொடூரமானவையோடு விளையாடுவதில் இங்கிலாந்து தனித்த மகிழ்வுகளை எடுத்துக்கொள்கிறது.மிகப் புகழ்பெற்ற உதாரணமாக மேரி ஷெல்லி(Mary Shelley)யுடைய "ப்ரான்கின்ஸ்டைன் (Frankenstien)" ஐச் சொல்லலாம்.விக்டோரிய நாவலின் அவலமும் நகைச்சுவையும் குறிப்பிட்ட இடம்விட்டு நகர "கறுப்பு" அல்லது "கொதிக்" கற்பனை புதுப்பிக்கப்பட்ட வலிமையோடு தன்னுடைய வேலையை தொடர்கிறது:பேய்க்கதை பிறக்கிறது.அதன் ஆசிரியர்கள் ஒருவேளை சிறிய முரண்நகைக்கு திட்டமிட்டிருக்கலாம்.ஆனால் அதற்குமுன்னால் அவர்கள் இவ்வகையான இலக்கிய வகையின் மரபுக்குள் உள்ளடங்காத அகவயமான உண்மைகளை தாங்களாகவே காட்சிக்கு வைத்தார்கள்.வினோதக் கற்பனை மற்றும் கொடூரத்தின் மீதான் டிக்கன்ஸின்(Charles Dickens) மனச்சார்பு அவருடைய சிறந்த நாவல்களில் மட்டுமல்லாமல்லாமல் கூடவே அவருடைய கிறிஸ்துமஸ் கதைகள் மற்றும் பேய்க்கதைகள் போன்ற சிறிய உற்பத்திகளிலும் இடம்பெறுகிறது. நான் ஏன் உற்பத்தி என்கிறேனென்றால் டிக்கன்ஸ்(பால்சாக்கைப் போல) தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவரது மனத்திட்பத்தைப்போல தன்னுடைய வேலைத்திட்டத்தை ஏற்படுத்தியிருந்தார்.(அவருடைய சிறந்த ஆக்கங்கள் இந்த வழியில் பிறந்தவையே) மற்றும் அவர் தனக்குத் தானே எழுதிக்கொண்ட பெரும்பாலும் விவரிப்புகள் நிரம்பிய தொடர்களை பலவற்றை பதிப்பித்திருந்தார்.ஆனால் கூடவே தன் நண்பர்களுடைய இணைவுச்செயல்பாட்டுக்கான வழிகளைத் திறக்கவும் எண்ணம் கொண்டிருந்தார்.

அவருடைய வட்டத்திலிருந்த எழுத்தாளர்களுள்(முதல் துப்பறியும் நாவலாசிரியரான வில்கின் காலின்ஸ்(Wilkin Collins) உட்பட) இவ்வகை இலக்கியவகையில் ஒருவர் எழுந்தார்.ஐரிஸ் புரட்டஸ்டண்ட் குடும்பத்தைச் சார்ந்த ஜோசப் ஷெரிடன் லீ ஃபானு(Joseph Sheridan Le Fanu) யதார்தத்தில் பேய்க்கதைகளையும் மர்மக்கதைகளையும் தவிர வேறெதையும் எழுதாதால் தொழில்முறை பேய்க்கதை எழுத்தாளர்களின் முதல் உதாரணமாகிறார்.அந்தக் காலகட்டத்தில்தான் வினோதக்கதைகளின் சிறப்புத்தேர்ச்சி என்பது தோன்றி கவனிக்குமளவு (வெகுஜன மற்றும் தீவிர இலக்கியம் இரண்டிலும்,ஆனால் அடிக்கடி இரண்டு துருவங்களுக்குமிடையில்) நமது நூற்றாண்டில் வளர்ந்தது.இது லீ ஃபானுவைவை ஒப்புயர்வற்ற கலைஞனாக கொள்ள வேண்டுமென்று மறைமுகமாக குறிப்பிடுவது அல்ல.(டிராகுலாவை உருவாக்கிய Bram Stoker பின்னாட்களில் அவ்வாறாக இருந்தார்).மாறாக மதம் சார்ந்த பிரச்சனைகளின் நாடகீயம் அவரது கதைகளுக்கு உயிரைக்கொடுக்கிறது.வெகுஜன ஐரிஷ் கற்பனை செய்வதைப்போல மற்றும் வினோதக் கற்பனைகள் கொண்ட கவித்துவமான/இரவின் தடயம் சார்ந்தவைகளில் (பார்க்க "Judge Horbottle") மறுபடியும் ஹாப்மென்னின் ஆளுமையைப் உணர்ந்துகொள்கிறோம்.

நான் இதுவரைக் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் என்னவொன்று பொதுமையாக இருக்கிறதென்றால் காண்புலன் சார்ந்த பரிந்துரையை(Visual Suggestion) நம் முன்னால் வைப்பது.இது தற்செயலானதல்ல. நான் தொடக்கத்தில் சொல்லியதுபோல பத்தொன்பதாம் நூற்றாண்டின் வினோதக்கதைகளின் நிஜமான உள்ளடக்கம் என்பது தினசரித் தோற்றங்களுக்குப் பின்னால் நாம் காண்பதின் யதார்த்தம்,மாயக்கற்பனைக்காட்சிகளையும் அருவத்தோற்றங்களையும் நம்புவது அல்லது நம்பாதிருத்தல்,தென்படும் இன்னொரு உலகம்,அதனால் வசியப்படுத்தப்படுதல் அல்லது தொந்தரவூட்டப்படுதல் ஆகியவை.வேறெந்த இலக்கிய வகையையும்விட வினோதக்கதைகள் பிம்பங்களின் தொடர்ச்சியில் உணரக்கூடியதாக, உருவங்களைப் படைக்கும் திறனிடம் நம்பிக்கையான விதத்தில் தனது வலிவைத் தெரியப்படுத்த, கடினமான மற்றும் வழக்கமற்ற காட்சியின் தெளிவைப்போல நமது கண்களின் வழியாக தனது நுழைவை ஏற்படுத்த விதிக்கப்பட்டிருக்கறது.இது மொழியைக் கையாள்வதிலான மேதமையோ அல்லது விவரிக்கப்பட்ட பூடக சிந்தனையின் மீதான தனது திறமையை எடுத்துக்காட்டுவதில் நாட்டமோ அல்ல.வினோத விவரிப்பில் மேடைப்பண்பு என்பது முக்கியம்.திரைப்படங்கள் இந்த விஷயத்தில் தம்மை செழுமைப்படுத்திக்கொண்டன என்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால் நம்மால் பொதுமைப்படுத்தமுடியாது.பெரும்பாலானவற்றில் இருப்பதைப்போல மீயுணர்ச்சிக் கற்பனை, காண்புலன் அருவத்தோற்றங்களால் தன்னைச்சுற்றி ஒரு பரப்பை உருவாக்குகிறது. அதிஇயற்கை மறைந்திருக்கும் வினோதக்கதைகளும் அங்கே இருக்கின்றன.அதைப் பார்ப்பதைவிட நம்மால் உணரமுடியும்.மனப்போக்கு அல்லது ஊகத்தின் அடிப்படையிலான கோட்பாட்டைப் போல அகவயமான பரிமாணத்தின் ஒரு பகுதியை உருவாக்க இது பங்காற்றுகிறது.மனத்துயிரை ஊட்டக்கூடியதும் பேய்மையானதுமான காட்சிகளைப் படைப்பதில் மகிழ்ச்சியடைக்கூடிய ஹாப்மென்னும் கூட கவர்ச்சியான கோட்பாடுகளை நெருக்கமாக இழைத்து, தினசரி வாழ்வின் பிம்பங்கள் ஆளுமை செலுத்தக்கூடிய கதைகளை எழுதியிருக்கிறார்.உதாரணத்திற்கு "The Abandoned House" ல் Unter den Linden னின் செல்வாக்குமிக்க அரண்மனைகளுக்கிடையே சிதிலமடைந்த பழைய வீட்டின் பூட்டியிருக்கும் ஜன்னல்கள்.ஒரு பெண்ணின் கைகள் தென்படுவதோ அல்லது இளம்பெண்ணின் முகமோ தம்மளவில் புதிரான எதிர்பாப்பை உருவாக்க போதுமானவை.ஏனெனில் அந்த அசைவுகள் நேரடியாக கவனிக்கப்படுவதில்லை.மாறாக,மாயக்கண்ணாடியின் இயக்கத்தை தன்னில் நிகழ்த்தும் சாதாரண கண்ணாடியால் எதிரொளிக்கப்படுபவை.

நாம் இரண்டு திசைவழிகளின் தெளிவான உதாரணத்தை போ(Poe)வில் காணலாம்.ஆடம்பரமான அலங்காரங்கள் துளித்துளியாய் மறையும் இருண்ட வீட்டின் சவப்பெட்டியிலிருந்து வெள்ளுடை அணிந்த இறந்த பெண்ணொருத்தி இரத்தசகதியில் எழுவது போன்றவை,அவருக்கே உரித்தான கதைகள்."தி பால் ஆப் தி ஹவுஸ் ஆப் அஷர்(The Fall of the House of Usher)" இல் இவ்வகையான செழுமையான விரிவுத்தன்மையை அமைக்கிறது.ஆனால் "தி டெல்-டேல்-ஹார்ட்(The Tell-Tale Heart)" ஐ எடுத்துக்கொள்ளுங்கள்.இதில் அனைத்து பதட்டங்களும் கொலைகாரனின் புலம்பலின் மேலிருக்கையில் காண்புலன் சார்ந்த பரிந்துரைகள் மிகச்சிறிய அளவில் குறைவாக்கப்பட்டு இருளில் விரியத்திறந்திருக்கும் ஒரு கண்ணிடமே குவிக்கப்பட்டிருக்கிறது.

காண்புலன் வினோதத்தின் சிறப்புமிகுந்த பண்புகளை "மனோவயமான","பூடகமான","உளவியல் சார்ந்த" அல்லது "தினசரி" வினோதத்தோடு ஒப்பிட ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்து இந்த இரண்டு போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கதைகளை தேர்ந்தெடுத்தல் என்பதை பரிசீலித்தேன்.ஆனால் நூற்றாண்டின் இறுதியில் தினசரி வினோதமே நிரம்பி அருவமான மற்றும் விளங்கிக்கொள்ளமுடியாதவையின் சிகரத்தை ஹென்றி ஜேம்ஸ்(Henry James)ல் அடைந்ததைப்போல பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காண்புலன் வினோதம் தெளிவாகவே ஆதிக்கத்திலிருந்திருக்கிறது.என்னால் காலவரிசைப்படி மற்றும் நடைசார்ந்த வகைப்பாடு இரண்டையும் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் மூன்று பத்தாண்டுகளின் பிரதிகளை "காண்புலன் வினோதம்" என்று விளித்தும்,இருபதாம் நூற்றாண்டின் உதயத்தை அடைந்த இரண்டாவதை "தினசரி வினோதம்" என்று விளித்தும் இணைத்திருக்க முடியும்.ஆனால் மூல செயல்திட்டத்திற்கான மரியாதையுடன் சிறிய அளவில் விட்டுக்கொடுத்தல் என்பதுடன் முடித்துக்கொண்டேன்.தவிர்க்கமுடியாமல்,விஷயங்கள் தங்களது துவக்கத்திற்கான புள்ளியை எதிர்மறை வரையறைகளிலிருந்து எடுத்துக்கொள்ளும் இது போன்ற செயல்திட்டத்தில் அவை சற்று வேகமடைந்துவிடுகிறது.ஆனால் உண்மையில் அடையாளங்கள் இடம்மாற்றிக்கொள்ளத்தக்கவை மற்றும் ஒரு பிரிவிலிருக்கும் கதை இன்னொரு பிரிவிலிருப்பவைக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியும்.முக்கியமான விஷயம் படிப்படியாக அகவயமாகும் அதிஇயற்கையை நோக்கி பொதுவான திசை தெளிவாகவே இருப்பதேயாகும்.

ஹாப்மென்னிற்குப் பின் ஐரோப்பிய வினோத இலக்கிய வகையில் மிகப்பெரிய ஆளுமை செலுத்திய எழுத்தாளர் போ.இலக்கியரசனையின் புதுவகை உருவாக்கத்தின் சாசனமாக,போதேலேரின் மொழிபெயர்ப்பு செயல்பட்டிருக்கவேண்டும்.அதன் பயனாக போவின் கொடூத்தன்மைமிக்க முக்கியத்துவமற்ற செயற்கையான வீரியம்,அவரின் மிக முக்கிய தனித்துவமான பண்பான புரிந்துகொள்ளத்தக்க பகுத்தறிவைவிட எளிதில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நான் முதலில் ஐரோப்பாவில் அவரது மரியாதையை பேசியுள்ளேன்.ஏனெனில் அவரது சொந்த நாட்டில் மென்மையான இலக்கிய வகையோடு அடையாளப்படுத்தப்பட்டதால் அவரது உருவம் ஒரு குறியீடாக ஆகவில்லை.அவரின் சமகாலத்தவரான,போவிற்கு கொஞ்சம் முன்னதாகவே இன்னொரு சிறந்த அமெரிக்கரான நத்தேனியல் ஹாத்ரேன்(Nathaniel Hawthorone)தனிச்சிறப்பான அடர்த்தியை வினோதக் கதைகளில் அடைந்திருந்தார்.

இந்த நூற்திரட்டில் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டிருக்கும் எழுத்தாளர்களுள் நிச்சயமாக ஹாத்ரோன் பியூரிட்டன் சமூகத்திலிருப்பதைப்போல நீதி,நன்னெறி மற்றும் மதம்சார்ந்த தனிமனித மனசாட்சியின் நாடகீயம் மற்றும் தடையை ஏற்படுத்தும் கருணையற்ற மதச்சார்பின் பிரதி நிதித்துவம் ஆகிய இரண்டிலும் ஆழம் கண்டவர்.அவரது பல கதைகள் தலைசிறந்த படைப்புகளாகும்.(காண்புலன் வினோதம்("யங் குட்மென் ப்ரவுன் (Young Goodman Brown)" ல் சூனியக்காரர்களின் பிரார்த்தனை நாள்) மற்றும் ஆராய்ச்சித்தன்மையான வினோதம் ("ஈகோயிசம்,ஆர் தி போசம் செர்பண்ட்(Egotism,or the Bosom Serpent)" ஆகிய இரண்டிலும்)ஆனால் எல்லா படைப்புகளிலும் இல்லை.அவர் தன் அமெரிக்க தளத்தைக் கைவிடும்போது(அதிபுகழ்பெற்ற "ரப்பச்சினிஸ் டாட்டர் (Rappaccini's Daughter") இல் இருப்பதைப்போல) அவரது படைப்புத்திறன் அதிகமாக முன்னூகிக்கக்கூடிய தோற்றங்களுள் மூழ்குகிறது.ஆனால் அவரது சிறந்த படைப்புகளில் அவரின் நன்னெறி சார்ந்த குறியியல் விவரிப்புகள் மனித மனதிலிருக்கும் பாவத்தின் அழிக்கமுடியாத இருப்பை எப்போதும் அடிப்படையாகக் கொண்டு,இந்த நூற்றாண்டில் காப்காவால் மட்டும் சமப்படுத்த முடிந்த அகவயமான நாடகீயத்தை புலப்படுத்தும் வலிமையை கொண்டிருந்தன. சிறப்பான மற்றும் அதிக மனத்துயரைக் கொடுக்கக்கூடிய ஹாத்ரோனின் கதைகளில் ஒன்றான "மை கின்ஸ்மேன் மேஜர் மொலினியாக்ஸ்(My Kinsman Major Molineaux)" தான் தி கேஸ்டல்(The Castle) இன் முன்னுரை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வினோதம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலக்கியத்தில் ஹாத்ரோன் மற்றும் போவிற்கு முன்பே தனது மரபையும் அதன் செவ்வியல் எழுத்தாளரான வாஷிங்டன் இர்விங்கையும்(Washington Irvin) கொண்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியமாகும்.மற்றும் வில்லியம் ஆஸ்டினுடைய(William Austin) "பீட்டர் ரக்,தி மிஸ்ஸிங் மேன்(Peter Rugg,the Missing Man)"(1824) போன்ற குறியீட்டுக் கதையையும் நாம் மறந்துவிடக்கூடாது.ஒரு புதிரான இறைக்கண்டனம் தன் மகளுடன் ஒரு மனிதனை கண்டத்தின் மிகப்பரந்த புவிப்பரப்பில் எப்போதும் நிறுத்தவே முடியாத இருசக்கர வண்டியில் புயலின் மூலம் செலுத்துகிறது.இந்தக் கதை அடிப்படை கோட்பாட்டு வெளித்தன்மை மிக்கதாய், வளர்ச்சியடையத் துவங்கும் அமெரிக்க புராணத்தின் உள்ளீடாக உள்ள இயற்கையின் வலிமை,தனிமனித விதி,சாகசமிக்க வலிமை ஆகியவற்றை விவரிக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த மீயுணர்ச்சிவாதிகளைப் போலலில்லாமல் ஏற்கனவே முழுமையடைந்துள்ள வினோத மரபை போ வரித்துக்கொண்டு அதை பெரும்பாலும் கடைத்தரமான பிரதி செய்பவர்களாகவும் பாதிப்புமிக்க மொழி நடையைக் கொண்டிருந்தவர்களாகவும் விளங்கியதற்கு மேல் எதுவுமில்லாத தன் சிஷ்ய எழுத்தாளர்களுக்கு கடத்துகிறார்.(அவர்களுள் சிலர் அம்ரோஸ் பியர்ஸைப்(Ambrose Bierce) போல வயதின் ஊக்கத்தில் செல்வாக்காக இருந்தவர்கள்).ஹென்றி ஜேம்ஸ் வரையில் ஒரு புதிய விசைமிகுந்த வரிசையை நேருக்கு நேராக நாம் காண்கிறோம்.

பிரான்ஸில் போதோலேரின் வழியாக பிரெஞ்சாக மாறிய போ,முன்பு வெகுகாலம் இருந்திராத ஒரு பள்ளியை உருவாக்கினார்.சிறுகதையின் ஒரு குறிப்பிட்ட பரப்பில் அவரது ஆதரவாளர்களிடையே சுவாரசியமானவர், "வேரா(vera)" வில் கல்லறையைத் தாண்டித் தொடரக்கூடிய காதலின் வீரியமிக்க மையக்கருவின் அரங்கச்சூழலை நமக்கு கொடுத்த villers de l'Isle-Adam'. "Torture with hope" ல் கலப்படமற்ற மனவியல் வினோதத்தின் பொருத்தமான உதாரணங்களைக் கொண்டிருக்கிறோம்(தங்களது சொந்த நூற்திரட்டுகளில் ரோஜர் கேலியோஸ்(Roger Callois) "வேரா" வைத் தேர்ந்தெடுக்க போர்ஹேஸ் "டார்ச்சர் வித் ஹோப்(Torture with Hope)" ஐ தேர்கிறார்.இரண்டுமே அட்டகாசமான தேர்வுகள்,குறிப்பாக இரண்டாவது. நான் மூன்றாவதாக ஒரு கதையை முன்வைத்தால் அதற்குக் காரணம் எனது முன்னோடிகளின் தேர்வுகளையே நான் திரும்பவும் செய்ய விரும்பாதது என்பதே.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக இங்கிலாந்தில், இருபதாம் நூற்றாண்டின் வினோத இலக்கிய வகையால் தொடரப்படப் போகும் பாதைகள் புத்தொளி கொள்கின்றன.இங்கிலாந்தில் வெகுஜன எழுத்தாளனென்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதில் விருப்பம் கொண்ட செம்மையான எழுத்தாளர் ஒருவர் தோன்றுகிறார்.இந்த ஏமாற்றுதல் வேலை செய்கிறது ஏனெனில் அவர் தன் அந்தஸ்த்தை தாழ்த்திக்கொள்ள அதை உபயோகப்படுத்திக்கொள்ளாமல் தொழில்முறை நுணக்கம் இல்லாதபோது கலைத்தன்மையான ஞானம் என்பது வலிமையற்றது என்பதை நாம் ஒத்துக்கொண்டால்தான் ஏதேனும் செய்யமுடியும் என்பதைப்போல லகுவாக மற்றும் தொழில்முறை முனைப்போடு செய்தார்.ராபர்ட் லூயில் ஸ்டீவன்ஸன்(Rober Louis Stevenson) இந்த ஆன்ம நிலைக்குரிய இயற்கையான விருப்பத்தின் மிக மிக மகிழ்ச்சிகரமான உதாரணம்.ஆனால் அவருடன் சேர்த்து படைப்புத்திறனின் எடுத்துக்காட்டு கூடவே பயிற்சி நுணக்கத்தின் மீதான முழு ஆளுமை ஆகிய இரண்டு அதிசிறப்பான வகைகளை பரிசீலிக்க வேண்டும்.கிப்ளிங்(Kipling) மற்றும் வெல்ஸ்.(Wells)

கிப்ளிங்'ன் இந்துக் கதைகளில் வினோதம் அழகியல்வாதியின் செயற்கையான நோக்காக இல்லாமல் அந்நியத்தன்மையாக இருக்கிறது,இந்த அந்நியத்தன்மையானது இந்திய மற்றும் ஆங்கில உலகங்களின் மதம், நீதி,சமூக உலகங்களுக்கிடையேயான வேறுபாட்டிலிருந்து தன்னை அடைகிறது."தி மார்க் ஆப் தி பீஸ்ட்(The mark of the beast)" இல் இருப்பதைப்போல திகிலூட்டக்கூடியதாக இருந்தாலும் அடிக்கடி அதிஇயற்கை என்பது புலப்படாத இருப்பாக இருக்கிறது.மற்ற நேரங்களில் வழக்கமான தளங்கள் "The bridge builder' இல் இருப்பதைப்போல வெளித்திறக்கப்பட்டு காண்புலன் தோற்றத்தில் இந்து புராணிகத்தின் பண்டைய புனிதங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.அதிஇயற்கை என்பது எப்போதும் புலப்படாமல் (They ல் இருப்பதைப்போல) இருக்கும் ஆங்கில உலகத்தை தளமாக கொண்டும் மற்றும் மரணத்தைப் பற்றிய மனத்துயர்கள் ஆதிக்கம் செலுத்தும் வினோதக் கதைகள் பலவற்றை கிப்ளிங் எழுதியுள்ளார்.

வெல்ஸ்லிருந்து, கற்பனைக்கு புதிய தொடுவானமான,நமது நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பெரிய வளர்ச்சியடையப்போகும் அறிவியல் புனைகதை தனது துவக்கத்தை ஏற்படுத்துகிறது.ஆனால் வெல்ஸின் மேதமையானது அற்புதமான தோராயக்கருத்துருவாக்கம் மற்றும் வருங்காலத்தின் திகில்தன்மை அல்லது உலகின் உடனடி பேரழிவை முன்னூகீக்கும் துர்க்காட்சிகளால் நமது நிம்மதியை குலைத்தல் என்பவற்றோடு அடங்கிவிடவில்லை.அறிவினால் நிகழ்த்தப்படும் வெகு எளிமையான கண்டுபிடித்தலை அடிப்படையாகக்கொண்டவை அவரது பல வெகுசிறப்பான கதைகள்.உதாரணத்திற்கு "The case of the deceased Mr.Evelsham" ல் ஒரு இளைஞன் முகமறியாத முதியவனின் ஒரே வாரிசாக, முதியவனின் பெயரை வைத்துக்கொள்ளவேண்டுமென்ற நிபந்தனையுடன் அறிவிக்கப்படுகிறான்.இளைஞன் ஒத்துக்கொள்கிறான்.முதியவனின் வீட்டில் அவன் உறங்கி எழுந்து தன் கைகளைப் பார்க்கிறான்.அவை சுருங்கியிருக்கின்றன.அவன் கண்ணாடியில் பார்க்கும்போது அவன் அந்த வயதானவனாக இருக்கிறான்.அதன்பின்பே,முதியவன் தன்னுடைய அடையாளத்தையும் சுயத்தையும் எடுத்துக்கொண்டு இளைஞனாக வாழ்வதை அறிந்துகொள்கிறான். வெளிப்படையில் எல்லாமே முன்பிருந்த வழக்கமான தோற்றங்களைப்போலவே இருக்கிறது.ஆனால் யதார்த்தத்தில் இது எல்லையில்லாத பயங்கரமாக இருக்கிறது.

தரம்மிகுந்த இலக்கிய ஆளுமையின் செம்மையோடு வெகுஜன விவரிப்பின் வேகத்தை இணைப்பதில் சிறந்த ஆற்றல் கொண்டிருந்த எழுத்தாளர் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்(தன் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்களில் அவர் எப்போதும் டூமாஸை குறிப்பிட்டிருக்கிறார்).தன்னுடைய குறுகிய நோய்மை நிரம்பிய வாழ்வில் சாகச நாவல்களிலிருந்து "டாக்டர் ஜாகில் அண்ட் மிஸ்டர் ஹைட்(Dr.Jekyll and Mr.Hyde)" வரையும், உடன் ஸ்பெயினில் நெப்போலியன் சகாப்தத்தின் போதிருந்த பெண் இரத்தக்காட்டேரியின் கதையான "ஒலாலா(olalla)"(Potocki உபயோகப்படுத்திய அதே தளம்,ஸ்டீவன்ஸன் எப்போதாவது அவரைப் படித்திருக்கிறாரா என்றெனக்குத் தெரியாதபோதும்);ஸ்காட்டிஷ் சூனியக்கதையான "த்ரோன் ஜேனட்(Thrown Janet)";வெகு சாதாரணமாக அந்நியத்தன்மையின் மாயத்தை அவர் உருவாக்கிய "தி ஐலேண்ட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ்(The island nights enternainments)",(கூடவே பாலினேசியன் தளத்தைச் சுவிகரித்துக்கொண்டு உள்வாங்கிய ஸ்காட்டிஷ் உள்ளடக்கங்கள்); போவின் "Tell tale heart" இல் இருப்பதைப்போல அதிகமாக வரையறுக்கப்பட்ட பியூரிடியன் நினைவின் இருப்போடு அகவயப்பட்ட வினோதத்தின் பாதையைத் தொடரும் "Markhiem" போன்ற பல எண்ணற்ற வெகு சுருக்கமான வினோத விவரிப்பு பலவற்றை படைக்க அவரால் முடிந்திருக்கிறது.

ஸ்டீவனஸனை உறுதியாகத் தொடர்ந்தவர்களில் ஒருவரான ஹென்றி ஜேம்ஸ்லில் அவருக்குத் தொடர்புடைய எதுவுமேயில்லை,ஜேம்சுடன்-அவரை அமெரிக்கர்,ஆங்கிலேயர்,ஐரோப்பியர் என எப்படி அழைப்பதென்று நமக்குத் தெரியவில்லை-பத்தொன்பதாம் நூற்றாண்டின் வினோத இலக்கிய வகை தனது இறுதி அவதாரத்தைக் கொள்கிறது.அது முன்னெப்போதையும்விட கண்ணுக்குப் புலப்படாமல் ஆகிவிட்ட காரணத்தால் அவதாரத்தன்மையை இழந்தது என்று சொல்வதே சரியாக இருக்கும்:ஒரு மனோ வெளிப்பாடு அல்லது அதிர்வு. நாம் ஹென்றி ஜேம்ஸ்ஸின் படைப்புகள் தோன்றிய அறிவார்த்த சூழலை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்,குறிப்பாக தத்துவவாதியான அவரது சகோதரர் வில்லியம் ஜேம்ஸின் அனுபவத்தின் மனோ யதார்த்தம் பற்றிய கோட்பாடுகள்.இந்த நூற்றாண்டின் இறுதியில் வினோதக் கதைகள் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்ததைப்போல மீண்டும் தத்துவக்கதைகளாக மாறியதாக சொல்லலாம்.

ஹென்றி ஜேம்ஸின் பேய்க்கதைகளிலிருக்கும் பேய்கள் மிகவும் மழுப்பலானவை."தி டர்ன் ஆப் தி ஸ்க்ரூ(The Turn of the Screw)" இல் இருப்பதைப்போல கொடூரத்தனமை கொண்ட பணியாளர்கள் அல்லது "சர் எட்மண்ட் ஒர்ம்(Sir Edmund Orme)" வைப்போல ஆளுமைச்சிந்தனைக்கு புலனுருவத்தை கொடுக்கும் மிகவும் தெரிகிற தோற்றங்கள் அல்லது "தி கோஸ்ட்லி ரெண்டல்(The Ghoshtly Rental)" இல் இருப்பதைப்போல அதிஇயற்கையின் நிஜமான இருப்பை விடுவிக்கும் பொய்த்தோற்றங்கள் இவைகளைப்போல போல முகமும் உருவமும் அற்ற தீவினையின் அவதாரமாக அவை இருக்கின்றன. தன்னுடைய சிந்தனையை தூண்டக்கூடிய மற்றும் வேகமாக நகரக்கூடிய கதையான "தி ஜாலி கார்னர்(The Jolly Corner)" இல் தன்னுடைய வாழ்க்கை வேறோரு பாதையை தேர்ந்தெடுத்திருந்தால் இருந்திருக்ககூடியவனாக கணத்தோற்றத்தில் தன்னைமட்டும் மையக் கதாபாத்திரமான பேய் காண்கிறது."தி பரைவேட் லைப்(The Private Life)" இல் இருப்பதைப்போல தன்னைப் பிறர் காணும்போது மட்டும்(பார்க்காத போது மறைந்துவிடும்) இருக்கும் ஒரு மனிதன்,அதே நேரத்தில் இருமுறை இருக்கும் இன்னொருவன்,ஏனெனில் முதலாமாவனுக்கு எழுதுவது எப்படியென்று தெரிந்திருக்காதபோது புத்தகங்கள் எழுதும் இரட்டையன்.

இந்தக் கட்டுரை தன்னுடைய இலக்கிய ரசனையால் நமது நூற்றாண்டையும்,காலவரிசைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டையும் சேர்ந்தவருமான ஜேம்சுடன் முடிகிறது.நான் இத்தாலிய எழுத்தாளர்களை தவிர்த்துவிட்டேன்,ஏனெனில் கடமையின் பொருட்டு மற்றும் அவர்களை சேர்க்கும் எண்ணத்தை நான் விரும்பவில்லை.பத்தொன்பதாம் நூற்றாண்டு இத்தாலிய இலக்கியத்தில் வினோதம் என்பது மிகச்சிறிய பகுதி."The poetry and tales of Arrigo Boito மற்றும் Racconti neri della scapigliatura(Dark tales of the Bohemian life) போன்ற சிறப்பு நூற்திரட்டுகள், உடன் டி மார்ச்சி முதல் கேப்யூவனா வரையிலான தங்கள் படைப்பின் வேறு நோக்குகளுக்காக வெகுவாக அறியப்பட்ட எழுத்தாளர்களின் சில பிரதிகள் அந்தத் சகாப்தத்தின் ரசனை குறித்து மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளையும் உடன் சுவாரசியமான ஆவணங்களையும் அளித்துள்ளன. நான் தவிர்த்துவிட்ட மற்ற தேசிய இலக்கியங்களுள்,ஸ்பானிஷ் இலக்கியம் வினோத எழுத்தின் சிறந்த எழுத்தாளராக அடால்ஃப் கஸ்டவா பீக்கியூர்(Gustavo Adolfo Becquer) ஐக் கொண்டுள்ளது.ஆனால் இந்த நூற்திரட்டு விரிவானதாக இருப்பதைப்போல பாவனை செய்யாது.நான் வழங்க விரும்பியதெல்லாம ஒரு சில உதாரணங்களை அடிப்படையாகக் கொண்ட பரந்துபட்ட களம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலே படிக்க எளிமையான ஒரு புத்தகம்.

************************************************************

முன்னுரையில் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்கள்

ஆக்சிம் வான் ஆர்ன்ம்-Arnim,Achim von(1781-1831)-ஜெர்மன் ரொமாண்டிக்
வில்லியம் ஆஸ்டின்-Austin,William(1718-1841)-அமெரிக்கன்
ஹான் தே பால்சாக்-Balzac,Honore de(1788-1850)-பிரெஞ்ச்
சார்லஸ் போதேலே-Baudelaire,Charles(1821-1867)-பிரெஞ்ச்
அடால்ஃப் கஸ்டவா பீக்கியூர் Becquer,Gustava Adolfo(1836-1870)-ஸ்பானிஷ்
அம்ப்ரோஸ் பியர்ஸ்-Bierce,Ambrose(1842-1914)-அமெரிக்கா
அரிகோ பொய்டோ-Boito,Arrigo(1842-1918)-இத்தாலி
லூகி கேப்யூவனா-Capuana,Luigi(1839-1915)-இத்தாலி
அடெல்பர்ட் வான் கேமிஸோ-Chamisso,Adelbert von(1781-1838)-ஜெர்மன்
வில்கி வில்லியம் காலின்ஸ்-Collins,William Wilkie(1824-1889)-ஆங்கிலம்
அட்டிலியோ டிமார்ச்சி-DeMarchi,Attilio(1855-1915)-இத்தாலி
சார்லஸ் டிக்கன்ஸ்-Dickens,Charles(1812-1870)-ஆங்கிலம்
பியோதர் மிகைலோவிட்ச் தஸ்தாவெஸ்கி-Dostoevski,Fyoder Mikhailovich(1821-1881)-ரஷ்யா
அலெக்ஸாண்டர் டூமாஸ்-Dumar,Alexandre(("Dumas pere")(1802-1870)-பிரெஞ்ச்
ப்ரையர் வான் ஜோசப் ஈச்சண்டார்ப்-Eichendorff,Josehph Freherr von(1788-1857)-ஜெர்மன்
தியோபைல் காடியர்-Gautier,Theophile(1811-1872)-பிரெஞ்ச்
நிக்கோலாய் வசில்விட்ச் கோகல்-Gogal,Nikoli vasilyevich(1809-1852)-ரஷ்யன்
நத்தானியல் ஹாத்ரோனே-Hawthorne,Nathaniel(1804-1864-அமெரிக்கன்
தியோடர் அமேதியஸ் எர்னஸ்ட் ஹாப்மென்- Hoffmann,Erst Theoder Amadeus(1776-1822)-ஜெர்மன்
வாஷிங்டன் இர்விங்-Irving washington(1783-1859)-அமெரிக்கன்
ஹென்றி ஜேம்ஸ்-James Henry(1843-1916)-அமெரிக்கன்
ப்ரான்ஸ் காஃப்கா-kafka,Franz(1883-1924)-செக்கஸ்லோவ்கியன்
ரூட்யார்ட் கிப்ளிங்-Kipling Rudyard(1865-1936)-ஆங்கிலம்
ஜோசப் ஷெரிடன் லீ ஃபானு-Le Fanu Joseph sheridan(1814-1873)-ஐரிஷ்
நிக்கோலாய் செமியோனோவிட்ச் லெஸ்கோவ்-Leskov,Nikolai Semyonovich(1831-1895)-ரஷ்யன்
ப்ராஸ்பர் மெரீமீ-Merimee,Prosper(1803-1870)-பிரெஞ்ச்
ஜெரார்ட் டி நெர்வல்-Nerval Gerard de(1808-1855)-பிரெஞ்ச்
சார்லஸ் நோடியர்-Nodier,Charles(1780-1844)-பிரெஞ்ச்
எட்கர் ஆலன் போ-poe,Edger Allan(1809-1849)-அமெரிக்கன்
இராபியா ஜேன் பொடோகி-Potocki,Jan Hrabia(1761-1815)-போலிஷ்
அலெக்ஸாண்டஎ செர்ஜியேவிட்ச் புஸ்கின் -Pushkin,Alexander Sergeyevich(1797-1851)-ரஷ்யன்
மேரி வுல்ஸ்டோன்க்ராப் ஷெல்லி-Shelly Marry Wollstonecraft1797-1851(ஆங்கிலம்)
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸந்Stevenson,Robert Louis(1850-1894)(ஸ்காட்டிஷ்)
பிராம் ஸ்டோக்கர்-Stoker,Bram(1847-1912)-ஆங்கிலம்
ழீன் மரியே மேதியாஸ் பிலிப்பி அகஸ்டே-Villiers de I'Isle Adam,Jean Marie Mathias Philippe Auguste,Comte(1828-1889)-பிரெஞ்ச்
ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்-Wells,Herbert George(1866-1946)-ஆங்கிலம்.

நன்றி-கல்குதிரை

No comments: