Sep 17, 2012

பிளம் பழங்களின் நிலம்

                                        

பிளம் பழத்திற்கு தமிழில் நேரிடையான பெயர்ச்சொல் இருக்கிறதாவென்று தெரியவில்லை.படங்களைப் பார்க்கும்போது பிளம் பழங்கள் ஒரு பார்வைக்கு திராட்சைகளைப் போலவும் இன்னொரு பார்வைக்கு இலந்தைப்பழம் போலவும் தோன்றுகின்றன.பிளம் உற்பத்தியில் இந்தியாவிற்கு ஒன்பதாவது இடம் என்று விக்கிப்பீடியா சுட்டுகிறது.மூன்றாவது இடத்தில் இருக்கிறது கிழக்கு ஐரோப்பிய நாடான ரோமானியா.ஹெர்த்தா முல்லரின் "The Land of Green Plums" நாவல் முழுக்க பழுக்காத ரோமானியாவின் பச்சை பிளம் பழங்கள் விரவிக்கிடக்கின்றன.

சமகாலத்தில் எழுதும் உலக நாவலாசிரியர்களை சுயமாகவே கண்டுபிடித்து வாசிக்கும் கூர்மையான வாசகனல்லன் நான்.எனவே எப்போதும் நோபல் கமிட்டி இலக்கியத்திற்கான பரிசை அறிவிக்கும்போது வெளிச்சத்திற்கு வரும் எழுத்தாளர்களைப் பற்றி அறிந்துகொள்வேன்.அப்படித்தான் ஹெர்த்தா முல்லரையும் தெரிந்துகொண்டேன்.கொஞ்ச நாட்களுக்கு முன் மேற்குறிப்பிட்ட அவரது நாவல் 49 ரூபாய்க்கு கிடைக்க வாங்கி வைத்திருந்தேன்.இடையில் தினமும் அலுவலகத்தில் நான் அரைப்படி ரத்தத்தை இழந்து கொண்டிருந்ததால் புத்தகங்களின் பக்கமே திரும்பமுடியாதிருந்தது.அந்த அயற்சியிலிருந்து விடுபட இந்த நாவலை வாசிக்கத்துவங்கினேன்.மொழியாக்கம் சற்றே கடினத்தன்மை கொண்டதாக இருந்தபோதும் வெகு விரைவில் ஹெர்த்தாவின் உலகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.மேலும் பெண்களின் கண்கள் வழியாக இந்த உலகத்தைப் பார்க்கும்போது ஆண்பாலின் கடினத்தன்மை இளகும் அனுபவத்தை ஹெர்த்தா எனக்கு வழங்கினார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிழக்கு ஐரோப்பிய நாடான ரோமானியாவில் கம்யூனிஸ சர்வதிகாரத்தின் தீவிரமான கண்காணிப்பில் தேசம் இருக்கும்போது சிறுபான்மை ஜெர்மனியார்களான குர்த்,எட்கர்,ஜார்ஜ் மற்றும் இந்த நாவலின் பெயரிடப்படாத மையப்பாத்திரமான பெண், இந்த நான்கு நண்பர்கள் ஏகாதிபத்தியத்தின் கண்காணிப்பிலிருந்து தங்கள் சுயத்தைக் காத்துக்கொள்ள நிகழ்த்தும் முனைப்புகளும் அவர்களின் தோல்விகளும் மன அவசங்களுமே இந்த நாவலின் பிரதான அடுக்குகள். நான் இந்த நாவலின் protoganist க்கு ”ஹெர்த்தா” என்று பெயரிடவே விரும்புகிறேன்.சிறுபிராயத்தின் கனவுத்தன்மை மிக்க நினைவுகள் சமகால சம்பவங்களோடு இணைத்துப் பின்னப்பட்டிருக்கின்றன.இந்த நாவல் லோலா என்ற ஹெர்த்தாவின் அறைத்தோழியைப் பற்றியும் அவளின் தற்கொலை நிகழ்வோடு தொடங்கி மேற்சொன்ன நான்கு நண்பர்களில் விரிவடைகிறது.அவர்கள் நால்வரும் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களையும் கவிதைகளையும் யாருக்கும் தெரியாமல் வாசித்துக்கொண்டு தங்கள் அடையாளத்தைத் தேடுகையில் அரசின் உளவுக்கண்களுக்கு உட்பட்டு எப்போதும் அந்தக் கண்கள் அவர்களைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.காப்டன் pjale அவர்களைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் விசாரணை செய்துகொண்டே இருக்கிறார்.படிப்பு முடிந்து வெவ்வேறு இடங்களில் அவர்கள் வேலையில் சேரும்போதும் கண்காணிப்பு தொடர்கிறது. எழுதிக்கொள்ளும் கடிதங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்வதற்காக கடிதத்திற்குள் ஒரிரு சிறுமுடிகளை வைத்து அனுப்புவது மற்றும் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்துவது என்று அவர்கள் நட்பு தொடர்ந்து குர்த் மற்றும் ஜார்ஜின் மரணத்தோடும் எட்கர் மற்றும் ஹெர்த்தாவின் ஜெர்மன் புலம்பெயர்தலோடும் முடிகிறது.
                                            

மேலே எழுதியவற்றை மீண்டும் வாசித்து பார்க்கும்போது வெகு சுமாரான முறையிலேயே நாவலின் சினாப்ஸிசை, புறவயமான மையச்சரடை சொல்லியிருக்கிறேன்.ஏனெனில் இந்த நாவலில் எளிதில் விளக்கிச்சொல்லிமுடியாத அகவயமான தன்மைகளும் நிரம்பியிருக்கின்றன.இந்த மாதிரியான விஷயங்கள் மொழியின் தன்மையா என்று எனக்குத் தெரியவில்லை.குந்தர் கிராஸின் டின் டிரம் வாசித்தபோதும் இதே மாதிரியான மனோ நிலையோடு இருந்தது நினைவுக்கு வருகிறது.இருந்தாலும் bulleted points ஆக சிலவற்றை சொல்ல முயல்கிறேன்.

  • ஹிட்லரின் நாஜி படையிலிருந்து ஒய்வுபெற்ற தந்தையார் மற்றும் அவருடைய சதுரங்கக் காய்கள்,எப்போதும் பாடிக்கொண்டிருக்கும் ஒரு பாட்டி மற்றும் எப்போதும் தொழுது கொண்டிருக்கும் இன்னொரு பாட்டி,கிராமத்து நாவிதர்,ஹெர்த்தா என்ற சிறுமியின் பயங்கள் மற்றும் கனவுகள்
  • ப்ளம் மற்றும் முசுக்கொட்டை மரங்கள்,ஆடுகள்,பூசணிகள்,ஆடுகள் என்று ரோமானியாவின் நாட்டுப்புறம் சார்ந்த சித்தரிப்புகள்.
  • குறியீட்டுத்தன்மையில் சொல்லப்பட்டிருக்கும் மனநலம் குலைந்த கதாபாத்திரங்கள்
  • இறைச்சித் தொழிற்கூடங்கள் பற்றிய அரூப புனைவின் சித்திரங்கள்.
  • பழுக்காத பச்சையான ப்ளம் பழங்களின் விஷத்தன்மை குறித்த ரோமானிய நாட்டுப்புற நம்பிக்கையை குறியீடாக்கியிருப்பது.
இப்படி வெவ்வேறு வகையான உட்சரடுகள் இந்த நாவலில் இழைந்திருந்தாலும் இந்த நாவல் பேசுவது அரசுகளின் கண்காணிப்பு மற்றும் மனிதர்களின் விடுதலையுணர்வுகள் இவற்றிற்கு இடையேயான முரண்பாட்டையும் அரசுகளின் ஏதேச்சதிகார தன்மையும்தான்.துரதிரஷ்டவசமாக இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள்தான் அரசுகளிடம் தோற்கவேண்டியிருக்கிறது..

http://en.wikipedia.org/wiki/The_Land_of_Green_Plums

No comments: