சமீபத்தில் ஒரு வானொலி நிகழ்ச்சி..
நேயர்கள் தங்கள் மனநலம் மற்றும் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளை ஒரு மருத்துவருடன்
கலந்துரையாடுவது.முதலில் அவரை ஒரு மருத்துவராகவே என்னால் உணரமுடியவில்லை..அவ்வளவு தெளிவான ஆங்கிலத்தில்,இனிமையான,ஆறுதலூட்டும் குரலோடு ஒரு ஆகச்சிறந்த வானொலித் தொகுப்பாளனின் திறமையோடு அவர் பேசியதைக்
கேட்டவுடன் அந்த நிகழ்ச்சியை கேட்பதலிருந்து வெளியேற முடியாதவனானேன்.
நலமாக இருப்பது என்பது மனிதனின்
அடிப்படைத் தேவை மட்டுமல்ல..அது ஒரு வகையான உரிமையும்கூட.பல வருஷங்களுக்கு
முன்னால் ஒரு வார இதழில்
“ நீண்டகாலமாக நீங்கள் பாதுகாப்பது எது?” என்ற
கேள்விக்கு கமலஹாசன் அளித்த ” கொஞ்சம் perishable ஐட்டம்தான்..உடம்பு” என்ற பதில் இன்னும் நினைவில்
இருக்கிறது.தன் status-quo வைத் தொந்தரவு செய்யாமல் உடல் தன் வயோதிகத்தை அடைவதை
நாம் ஆரோக்கியம் என்றும் சொல்லலாம்.இன்றைய காலத்தில் நாம் அடைந்திருக்கும்
உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வும் நம் காலத்தின் மருத்துவ வசதிகளும் நமக்கு உடல்நலத்தில்
பொறுப்பற்று இருப்பதின் சுதந்திரத்தை அளித்திருக்கின்றன.வருமுன் காத்தல் என்பதை விட நமது உடல்கள் என்றாவது ஒரு நாள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு தம் மனதை தயார் செய்துகொள்ளத்துவங்குகின்றன. நீங்கள் பொருட்செல்வம் மிக்கவராக
இருக்கும்வரை பின்விளைவுகளை ஏற்படுத்தும் சிற்றின்பங்களை நுகர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
உடற்கூறு பிரச்சனைகளுக்கான மருத்துவ வசதிகள் வெகுமக்களை அடைந்துள்ள
இன்றைய காலகட்டத்தில் உளவியல் பிரச்சனைகளுக்கு ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை
பெறுவது இன்னும் நகரங்களில் கூட பரவலாகவில்லை.ஏனெனில் மனோவியல் சார்ந்த
பிரச்சனைகளை வெளிப்படையாக ஒரு உடல்பிரச்சனையைப் போன்று பாவித்து சிகிச்சை
எடுத்துக்கொள்வது நமது சூழலில் அசாதரணமானது.ஒருமுறை நாம்
மனநலம் பாதிக்கப்பட்டவராக அடையாளப்படுத்தப்பட்டுவிட்டால் பிறகு வாழ்வின் இறுதிவரை
அதன் அடையாளத்தை சுமக்கவேண்டியிருக்கும்.இது ஒரு
மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகக்கூட இருக்கலாம்.ஆனால் நிஜமில்லை
என்று சொல்லிவிடமுடியாது.
மீண்டும் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்..முதலில் அழைத்த இளைஞர்
தன் சகோதரியின் வாழ்க்கைப்பிரச்சனையை பகிர்ந்துகொள்கிறார்.ஏறக்குறைய
18 வயதில் திருமணமான அவர் சகோதரி மூன்று நான்கு மாதங்கள்
மட்டுமே கணவருடன் வாழ்ந்திருக்கிறார். அந்தப் பெண்ணின்
கணவருக்கு வயது 21.மிக இளம் வயதில் திருமணம்.உடல்ரீதியாக எந்த விதமான துன்புறத்தலும் இல்லையென்றாலும் மாமியாரின் குத்திக்காட்டுதல்
என்பது போன்ற பிரச்சனைகள்..அதைக் கண்டுகொள்ளாத கணவனின்
மனோபாவம்..இரு குடும்பங்களுக்கும் இடையிலான
வாக்குவாதத்திற்குப் பிறகு அந்தப்பெண்ணின் குடும்பத்தார் கர்ப்பவதியான அவளை கணவனின்
வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள்..இப்போது
குழந்தை பிறந்த பின்னும் கணவன் உட்பட யாரும் வந்து குழந்தையைக் கூடப்பார்க்கவில்லை.
இரண்டவதாக அழைத்தவர் எங்கோ ஒரு வடதேச நகரத்திலிருந்து
புலம்பெயர்ந்தவர்.ஊனமுற்றவரான அவர் தன் வாழ்வின் இளம்பருவத்தில் ஏராளமான
தோல்விகளுக்கு ஆட்பட்டு,காதலில்,தொழிலில்
தோல்வியுற்றவர்.அவருடைய பிரச்சனை அவரை யாருமே மதிப்பதில்லை..உண்மையாக அன்பு செலுத்துவதில்லை..ஒரு பிரச்சனை
என்றால் அவரிடம் ஆலோசனை கேட்டு உதவியை நாடுபவர்கள்கூட பின்னர் அவரை மதிப்பதில்லை
என்பது போன்ற பிரச்சனைகள்.
மூன்றாவதாக அழைத்தவர் ஐம்பதைக் கடந்தவர்..அவர்
பிரச்சனையைப் பகிர்வதற்கு முன் அதுவொரு சென்சிட்டிவான விஷயம் என்று ஏராளமான
பீடிகைகளோடு மையமான விஷயத்திற்கு சொல்லத் திணறும்போதே அது ஒரு பாலுறவு சார்ந்த பிரச்சனை என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.இரண்டு
குழந்தைகளுக்கு தகப்பனான அவருக்கு, அவர் மனைவி கடந்த ஒரு
தசாப்தத்திற்கு மேலாக உடலுறவிற்கு ஒத்துழைக்க மறுக்கிறார்.அதற்குப்
பெரிதான காரணங்கள் எல்லாம் எதுவுமில்லை.இவர் மனைவியை நெருங்கும்போது தலைவலி,குழந்தைகள் தூங்கவில்லை
என்பது போன்ற சிறிய காரணங்களைச் சொல்லித் தவிர்த்திருக்கிறார்..இதன்
காரணமாக உறங்கச்செல்லும்போதெல்லாம் இவர் மனம் விதவிதமான பாலுறவு
அதிகற்பனா நிலைகளுக்கு ஆட்பட்டு…அதாவது சொந்தத்தில் இருக்கும் வெவ்வேறு ஆண்/பெண்களுக்கு இடையில், கற்பனையில் உடலுறவை நிகழ்த்திப்பார்த்தல்..அதிலோரு
விதமான நிறைவை அடைதல் என்ற நிலையும் பிறகு அதை நினைத்து குற்றவுணர்வு கொண்டு
தவித்தல் என்பதும் அவரது பிரச்சனை
நான்காதவாக அழைத்தவர் நல்லதொரு நிறுவனத்தில் பணிபுரியும் முப்பதைக்
கடந்தவர்..அவர் பிரச்சனையானது பல ஆண்டுகளுக்கு முன் சிக்கலான
ஒரு நேர்முகத் தேர்வை சந்தித்திருக்கிறார்.அதற்குப் பின்னர்
அலுவலகத்தில் ஏதேனும் விவாதங்கள், நேர்முகத் தேர்வுகள்
போன்றவற்றில் உரையாட நேரும்போது அவர் மனம் பழைய சம்பவத்தை திரும்பத் திரும்ப
நினைவு கூர்வதால் அவரால் தான் நினைத்தவற்றை தெளிவாக விளக்க முடியாமல்
சிரமப்படுகிறார்
இறுதியாக அழைத்தவர் ஒரு இளம்பெண்..பள்ளியிறுதி முடித்த
காலத்திலிருந்து விடுதியில் தங்கிப் படிக்கிறவர்..அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கையேயில்லை..எல்லோரிடமும்
கவனமாக இருக்கவேண்டும்..இல்லையென்றால் மற்றவர்கள் வெகு
எளிதாக ஏமாற்றிவிடுவார்கள் என்ற மனவுணர்வுகள்..ஜிம்மிற்கு செல்லும் அவருக்கும் அங்கு பயிற்சியாளராக இருக்கும் நாற்பதை
நெருங்கும் ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவருடன் நெருங்கிப்பழகி டேட்டிங் என்ற
அளவில் இருக்கிறது.அவருடன் பேசும்போது தான் மகிழ்ச்சியாக
இருப்பதாகவும் அவர் தனக்கு ஏராளமான விஷயங்களை கற்றுத்தருவதாகவும் சொல்லும்
அப்பெண்ணிற்கு இந்த உறவு சரியா என்ற ஒரு குழப்பம்.
மேற்கண்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை.ஆனால்
ஒரு மனநல ஆலோசகரின் முதல் தகுதி பிரச்சனையைச் பகிர்பவரின் நம்பிக்கையைப் பெறுவது..அவர் உரையாடுவதற்கு ஒரு இதமான வெளியை அமைத்துத் தருவது..அதுவொரு தீர்க்கக்கூடிய பிரச்சனைதான் என்று அவர்களுக்கு உணர்த்துவது என்றே
நம்புகிறேன்.அதைத்தான் அவர் செய்தார். ஒவ்வொரு
பிரச்சனைக்கும் அவர் அளித்த ஆலோசனைகள் கீழே தருகிறேன்
1.முதலில் அப்பெண் தன் கணவரின் நம்பிக்கையைப்
பெறவேண்டும். அப்பெண்ணின் கணவர் இருபத்தொரு வயதே ஆனவர்
என்பதால் அவர் இன்னும் முழுமையான மனிதனாக மாறவில்லை..உறவுகளில்
சரிதவறை சீர்தூக்கிப்பார்க்கும் பக்குவத்தை அடையவில்லை.ஒரு
குடும்பத்தைக் கட்டமைப்பதில் எப்போதும் சில சிரமங்கள் இருக்கவே செய்கின்றன.ஆகவே அந்தப்பெண் பொறுமையையும் பக்குவத்தையும் பயிலவேண்டும்.
2.அவருக்கு இருப்பது கழிவிரக்கம் போன்ற ஒரு சிக்கல்..அவர் முதலில் தன்னை நேசிக்கத்துவங்கவேண்டும்.மனதில்
என்ன இருக்கிறதோ அதுவே புறத்திலிருந்து வரும் விஷயங்களுக்கு எதிரொளிக்கிறது.
3.பாலுறவின் அதிகற்பனா நிலைகள் ஒரு எல்லைவரை மனிதமனதின்
இயல்பே.அவருக்கு இன்னும் உடலுறவில் ஈடுபாடு உள்ளதாலும் அந்த
விருப்பத்தால் உடலில் சேகரமாகும் சக்தி
செலவழிக்கப்படாததாலும் அதற்கு வடிகாலாக அவரது மனம் இதுபோன்ற
புனைவுகளை புனைந்துகொள்கிறது.அவர் செய்யவேண்டியது அவர்
மனைவியிடம் ஒளிவு மறைவின்றி இதை விவாதிப்பது.
4.அவரால் ஏன் தெளிவாக உரையாட முடியவில்லை எனில் பழைய
சம்பவத்தின் தாக்கத்தில் அவர் மனதில் பயம் பீடித்துக்கொள்கிறது.அவர் அந்த பயத்தை விருப்பமாக(love)
மாற்றிக்கொள்ளவேண்டும்.ஏனெனில்
மனதில் இரண்டுவிதமான தன்மைகள் இணைந்து இருக்கமுடியாது.ஒரு
பொருள் அல்லது தன்மையின் மீது நம் விருப்பத்தை அதிகப்படுத்திக்கொள்ளும்போது
அதைப்பற்றிய பயம் மறையத்தொடங்குகிறது.மேலும் அவர்
செய்யவேண்டியது மோசமான விளைவுகளை யோசித்து அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிடும்போது(Surrender to the worst) மனம் இயல்பான தன்மைக்கு வந்துவிடுகிறது.
5.அனேகமாக அவரால் அந்தப்பெண் திருப்தியடையும் ஒரு
பதிலைத் தரமுடியவில்லை என்றே நினைக்கிறேன்.மனிதர்களின் மீதான
அவநம்பிக்கை கொண்ட அவர் மனம் ஒரு செட்டிலாகிவிட்ட மனிதனோடு பழகும்போது பின்னால்
வரும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க நினைக்கிறது.அதாவது இந்த
உறவில் எப்போது வேண்டுமானலும் விலகிக்கொள்ளலாம் என்பது போன்ற ஒரு நிலை இருக்கிறது.அந்தப் பாதுகாப்புணர்வே அவளை இந்த உறவில் ஈடுபாட்டை அதிகரிக்கிறது என்றார்.ஆனால் அந்தப்பெண்ணால் பதிலை புரிந்துகொள்ள முடியாமல் ஒற்றை வார்த்தையில்
பழகலாமா வேண்டாமா என்று பதில் சொல்லும்படி கேட்டார். ”தவிர்த்துவிடுவது” அவருடைய பிற்கால வாழ்க்கைக்கு
நல்லது என்று தன் சொந்தக் கருத்தின் அடிப்படையில் தான் நம்புவதாக அவர்
சொன்ன பதில் டிப்ளமேடிக் என்றாலும் ஒரு வானொலி நிகழ்ச்சியில் அவ்வகையான பதிலையே
சொல்லமுடியும்..ஆனால் அப்பெண் இன்னும் அதிக குழப்பத்தோடுதான் இணைப்பை துண்டித்தார் என்று
நினைக்கிறேன்.
ப்ராய்டு..கார்ல் யூங் போன்ற உளவியல் நிபுணர்கள் மனிதமனதின்
ஆகச்சிக்கலான பகுதிகளை விளக்கியிருக்கிறார்கள் பெரும்பாலான உளப்பிரச்சனைகளை
பொதுவான வகைமைகளுக்குள் அடக்கிவிடமுடியும் என்றாலும், ஒவ்வொரு
குழந்தையும் நல்ல குழந்தையாக பிறக்கும்போதே அது தனக்கான தனித்த உளவியல்
அமைப்பையும் அதன் சிக்கல்களையும் கொண்டே பிறக்கிறது.மிகத் தட்டையான வடிவில் அகச்சிக்கல்களுக்கான காரணங்கள் யாதெல்லாம்
என்று நாம் ஆராய்ந்தால் மிக முக்கியமாக பொதுவெளியில் பயிலப்படும் நீதி மற்றும்
அறவுணர்விற்கு எதிராக தனிமனிதமனம் கொள்ளும் முரண்பாடுகள் பெரும்பாலான
சிக்கல்களுக்கு காரணமாக இருக்கக்கூடும்.
இன்றைய காலவெளியில் எந்தவொரு மனமும்
நோய்க்கூறு இல்லாமல் வாழ்ந்துவிடமுடியும் என்று தோன்றவில்லை. நாம்
செய்யவேண்டியதெல்லாம் அவற்றை அடையாளப்படுத்திக்கொள்வதும், நமது நோய்மைத்தன்மைகள் சகமனங்களை பாதிக்காமல் Quarantine
செய்துகொள்வதும்தான்.அகம் இருப்பது
உடல் இருக்கும்வரைதான்.உடலற்ற மனங்கள் நம்மோடு வினைபுரிவது மெய்ஞானத்திலும்
இலக்கியத்திலும் இருக்கலாம்.ஆனால் விஞ்ஞானத்தில் இல்லை.
வலிக்கும்தான்..ஆனால் வலியை
அனுபவிப்பதில் நீங்கள் அனாதையில்லை.

1 comment:
நல்ல பகிர்வு...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_5868.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…
Post a Comment