வயோதிகத்தை அடைந்துவிட்ட மேற்கத்திய இலக்கிய நாவலாசிரியர்கள் பெரும்பாலோனோர் நாஸ்டலாஜியாவிற்கு ஒரு பயணத்தை தங்கள் நாவலின் வழியாக நிகழ்த்திப்பார்க்கிறார்கள் போல..உடனடியாக நினைவுக்கு வருவது உம்பர்த்தோ ஈகோவின் “The mysterious flame of queen lona".மேலும் இலக்கியப்புனைவு நாஸ்டலாஜியாவிற்குத் திரும்புதலை எப்போதும் விரும்பத்தக்கதாக, ஆறுதலூட்டக்கூடிய தற்கணத்தின் துயரிலிருந்து விடுபடும் மீட்சியாக பயின்றிருக்கிறது.கடந்தகாலத்திற்குள் நம் மனம் செல்லும் பயணங்களைப் போல் எளிதாக நம்மால் எதிர்காலத்தினுள் பயணிக்க முடிவதில்லை.ஏனெனில் எதிர்காலம் நமக்கு கனவுகளாய் மட்டும் எஞ்சுகிறது.மாறாக கடந்தகாலம் ஒரு நினைவாக,அதன் தொகுப்பாக(archive) உடலின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது.
மிலன் குந்தெரா இந்த நாவலில் தன் சொந்த நிலத்திற்குத் திரும்பும் ஒடியஸிஸின் வாழ்க்கையை முன்கதையாக(ஹோமரின் ஒடிசி) வைத்து நினைவு என்ற தன்மையை விசாரணைக்குட்படுத்துகிறார்.டென்மார்க்லிருந்து தன் சொந்தத் தேசமான செக் குடியரசிற்கு குறுகிய பயணமாக வரும் ஜோசப் மற்றும் பிரான்ஸிலிருந்து திரும்பும் ஐரீன் என இரு புலம்பெயர்ந்தவர்களின் இடையே குறுக்குவெட்டாக இந்த நாவல் நகர்கிறது.
முதலில் ஐரீனின் கதை,1968 இல் ரஷ்யாவால் ஆக்ரமிக்கப்பட்டபோது தன் கணவன் மார்ட்டினின் பொருட்டு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த சில வருடங்களில் மார்ட்டின் இறந்துவிட இரண்டு பெண் குழந்தைகளோடு தன் வாழ்வில் சில கடுமையான வருடங்களை எதிர்கொள்கிறாள் ஐரீன்.பிறகு மார்ட்டினின் நண்பனான, ஸ்வீடனிலிருந்து புலம்பெயர்ந்த எப்போதும் பெண்களை தன்னை போஷிக்க வைப்பதின் வழியே தன் பாதுகாப்புணர்வை காத்துக்கொள்ளும் கஸ்டவ் உடன் வாழத்துவங்குகிறாள்.1998 இல் செக் தேசத்தில் அமைதி திரும்பியபோது தன் சொந்த தேசத்திற்கு திரும்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும்போது கஸ்டவ் தன் தொழிலை செக் தலைநகரான ப்ராக் நகரத்திற்கும் விரிவுபடுத்துகிறான்.பாரீஸிலும் ப்ராக்லிம் மாறி மாறி வசிக்கத்துவங்கும் ஐரீன் எப்போதும் தன்னைவிட வலிவுமிக்கவளாக தான் கருதும் தன் தாயிடமிருந்து விலகியிருப்பவளாகவே இருக்கிறாள்.
குந்தெரா சொல்கிறார்: புதிய நிலங்களில் மனிதர்களை ஒடிசியஸ் எதிர்கொண்டபோது எல்லோரும் ஒடிசியஸிடம் உன்னைப்பற்றிச் சொல் என்றார்கள்.. ஏனெனில் அவர்களுக்கு அவனொரு புதியவன்..ஆனால் அவன் இருபதாண்டுகள் கழித்து இதாச்சாவிற்குத் திரும்பும்போது யாரும் அவனிடம் அந்த இருபது வருடங்களைப் பற்றி எதுவுமே கேட்பதில்லை..ஏனெனில் அவன் அவர்களில் ஒருவன்.அங்கேதான் இருக்கிறது ஒடிசியஸின் துயரம்..ஏனெனில் திரும்பத் திரும்ப சொல்வதின் வழியாக இருபதாண்டுகளின் நினைவுகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு வழியற்றவனாக ஒடிஸியஸ் தவிக்கிறான்.
ஐரீனுக்கும் அதுதான் நிகழ்கிறது.தன் பழைய நண்பர்களுக்கு அவள் விருந்தளிக்கும்போது யாருக்கும் அவளுடைய புலம்பெயர்ந்திருந்த இருபதாண்டுகள் பற்றிய கேள்வியில்லை..ஐரீன் ஒயினை தேரும்போது மற்றவர்கள் எல்லோரும் பியரைத் தேர்கிறார்கள்.அவள் தன் சொந்த நிலத்திற்கு திரும்ப வேண்டுமெனில் அவள் புலம்பெயர்ந்த ஆண்டுகளின் அடையாளத்தை அழித்துவிட்டு மீண்டும் இந்தத் தேசத்தை விட்டு வெளியேறும்போது எப்படியிருந்தாளோ அப்படியானவளாக மாறவேண்டும்.ஒருவிதமான குழம்பிய நிலையில் பராக் மற்றும் பாரீசுக்கு இடையில் அல்லாடுகிறாள் ஐரீன்.
அப்படிப்பட்ட ஒரு விமானப் பயணத்தில்தான் தன் மனைவியின் மரணத்திற்குப் பின் செக் தேசத்திற்கு குறுகிய பயணமாக வரும் ஜோசப்பை சந்திக்கிறாள் ஐரீன்..அவனைப் பார்த்தவுடன் தன் இளமைக்காலத்தில் சிறு அளவில் அவன் தனக்கு அறிமுகமாகியிருந்தது அவள் நினைவிற்கு வருகிறது.அப்போது அவன் பாரில் திருடி அவளுக்கு பரிசாக அளித்த ஒரு சிறிய ஆஷ்ட்ரேவை அதிர்ஷட்டத்தின் சின்னமாக எப்போதும் வைத்திருக்கிறாள்.அவனுடன் உரையாடுவது அவளுக்கு மிக மகிழ்ச்சியானதாக மாறுகிறது.பயணம் முடியும்போது அவன் தங்கப்போகும் விடுதியின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொள்கிறாள்.
விலங்கியல் மருத்துவனான ஜோசப் தன் குறுகிய பயணத்தில் தன் சகோதரனைச் சந்திக்கிறான்.பூர்ஷ்வாகப் பிறந்த சகோதரர்களில் மூத்தவனான அவன் சகோதரன் தன் வாழ்வின் பொருட்டு கம்யூனிஸத்தை ஏற்ற காலகட்டத்தில்தான் ஜோசப் டென்மார்க்கிறகு புலம்பெயர்கிறான்.இறக்கும்போது ஜோசப்பிற்கு அவனது தந்தையார் கொடுத்திருந்த ஒரு பொட்டலத்தை ஜோசப்பின் சகோதரன் அவனிடம் கொடுக்கிறான்.இடையில் ஜோசப் தன் பல்கலைக்கழக காலத்தில் வீரியமிக்க கம்யூனிஸ்ட்டாக அறியப்பட்ட பழைய நண்பன் N ஐ சந்திக்கச்செல்கிறான்.ஆனால் N இடைப்பட்ட இருபதாண்டுகள் பற்றியோ அல்லது கம்யூனிஸம் குறித்த தன்னுடைய தற்கண மதிப்பீடுகளைப் பற்றியோ ஜோசப்புடன் உரையாட விரும்புவதில்லை.
தன் தந்தையார் கொடுத்திருந்த பொட்டலத்தில் இருக்கும் அவனுடைய இளமைக்கால டைரியைப் புரட்டும்போதுதான் ஜோசப்பிற்கு தன் இளமைக்கால காதல் சாகசங்கள் மிக மெல்லியதாகவே நினைவிற்கு வருகின்றன.அவனால் பெரும்பாலான பழைய சம்பவங்களை நினைவுகூர முடிவதில்லை.அதில் ஒரு சிறிய காதல் கதை.தன் காதலியை வதையூட்டுவதின் வழியாக தான் இன்பங்காண்பவனாக இருந்திருப்பது கண்டு ஜோசப் அதிர்ச்சியுறுகிறான்.அந்தச் சிறுவனுக்கும் இப்போதைய ஜோசப்பிற்கு எந்த சம்பந்தமில்லை என்று சுய ஆறுதலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறான் ஜோசப்.
தன் காதலியின் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தில் அவள் கலந்துகொண்டால் அவனை அவளால் இனி என்றுமே சந்திக்கமுடியாது என்று மிரட்டி அவள் கண்ணீரில் சந்தோஷமடைகிறான்.இவனுடைய வதைத்தல் பற்றி அறிந்திருக்குமவள் அவனிடம் உடன்படா விட்டாலும் பின்னர் அவனிடம் பேசி புரியவைக்க முடியுமென்று மீண்டும் திரும்பவரும்போது ஜோசப் அவளைத் தவிர்த்துவிடுகிறான்.அந்த மலைப்பயணத்தில் அவள் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு மருத்துவ காரணங்களுக்காக அவளுடைய ஒரு காது வெட்டி எடுக்கப்பட்டுவிடுகிறது.அவள் எவ்வளவு அமைதியாக மரித்துவிடவேண்டுமென விரும்பினாளோ அதற்கு எதிராக அவள் வாழ்வு முழுக்க துயரமானதாக மாறிவிடுகிறது.ஆனால் அவர்களுடைய பிரிவிற்குப் பின்னால் என்ன நிகழ்ந்ததென்று அறியாதவனாகவே ஜோசப் இருக்கிறான். மிலாடா என்ற பெயர் கொண்ட அப்பெண் ஐரீனின் தோழியாகவும் இருக்கிறாள்.ஐரீனை அவள் மதியவிருந்திற்கு அழைக்கும்போது அவள் உனது ஊரைச்சேர்ந்த ஜோசப்போடு உணவருந்தச்செல்கிறேன் என்று சொல்லும்போது மிலாடா ஜோசப்பின் பயணத்தைப் பற்றி அறிந்துகொள்கிறாள்.எப்போதும் காதுகளை மூடியவாறு சிகை அலங்காரம் செய்திருக்கும் அவள் குற்றவுணர்வோ வருத்தங்களோ இன்றி வாழப்பழகிவிட்டதால் ஜோசப்பை பற்றிய தகவல்கள் அவளைப் பாதிப்பதில்லை.
கஸ்டவுடனான வாழ்வில் சலிப்பு, தன் தாயுடன் கொண்டிருக்கும் ஒவ்வாமை,ஜோசப்பின் அறிமுகம் தரும் மீட்சி என்ற சூழலில் ஐரீன் ஜோசப்பை சந்திக்கிறாள்.அது இறுதியாக இருவரின் ஆக்ரோஷ புணர்சியில் முடிகிறது.ஆனால் தான் நினைத்ததுபோல் ஜோசப் தன்னை நினைவில் வைத்திருக்கவில்லை என்றும் அவன் அவளை ஒரு புதியவளாகவே பாவித்திருப்பதையும் அறியவரும் ஐரீன் அதிர்ச்சியுற்று அவனிடம் சண்டையிடுகிறாள்.
ஜோசப்பை சந்திப்பதற்காக ஐரீன் வெளியே சென்றிருக்கும் பொழுது வீட்டிற்குத் திரும்பும் கஸ்டவும் ஐரீனின் தாயும் உடலுறவிற்கு உட்படுகிறார்கள்.கஸ்டவ் இது குறித்து குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை என்று நம்புகிறான்.மிலாடா ஜோசப்பால் தனக்கு விதிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையின் தனிமையை பியரோடு கழிக்கிறாள்.போதையிலும் களைப்பிலும் விடுதியறையில் உறங்கும் ஐரீனுக்கு குறிப்பு எழுதி வைத்துவிட்டு டென்மார்க்கிற்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்கிறான் ஜோசப்.
நவீன ஐரோப்பிய அறிவுமனதின் சாட்சியாகவே ஜோசப் இருக்கிறான்.அறிவுமனதின் அதி விழிப்புணர்வு நிலை கற்பனாவாதத்தை முழுக்க நிர்மூலமாக்கிவிடுகிறது.கடந்தகாலத்தின் சம்பவங்களில் கற்பனாவாதத்தின் புனைவுத்தன்மை ஏறாவிட்டால் அவற்றை வெறும் சம்பவங்களாகக்கூட மனம் தன் நினைவில் வைத்திருப்பதில்லை.மிலன் குந்தெராவின் இந்த சிறிய நாவல் நினைவுகள் குறித்த பல பார்வைகளில் அறிவார்த்த முறையிலான பார்வை என்ற ஒற்றைத் தன்மையில் நமக்கு சில விஷயங்களை அளிக்கிறது.

No comments:
Post a Comment