பதினேழு கதைகளைக் கொண்டிருக்கும் இந்த தொகுப்பில் பாலைநிலவன் தமிழின் மரபார்ந்த கதையுலகங்களிலிருந்தும் கதை மொழியிலிருந்தும் சற்றே விலகி இருண்மையின் மகா ஆழத்திலிருந்து கதைகளை பிரசங்கிக்கிறார்.அது காட்டிக் கொடுப்பவர்களின் கதைகளாகவும் ,சிலுவையில் அறையச்சொல்லி கூக்குரலிட்டவர்களின் கதைகளாகவும்,அறியாமல் செய்கிறவர்களின் பிழை பொறுக்க இறஞ்சிய தேவதூதனின் கதைகளாகவும் இருக்கின்றன.
பாலைநிலவன் தனித்த ஆளுமை கொண்ட கவிஞர்.அவர் தனது கதைமொழியை கவித்துவத்தின் சாரமான தன்மைகளிலிருந்து கண்டறிந்திருக்கிறார்.இவ்வகைப்பட்ட கதைசொல்லலின் ஒளிமிகுந்த பக்கத்தை நோக்கும்போது வாசகனுக்கு ஒரு வினோதமான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றன இக்கதைகள். புனைவின் பிரதான அம்சங்களில் ஒன்றான, காட்சிகள் சற்றே மயங்கித் துலங்கி ஒரு கனவைப்போன்ற பிரதேசத்தை வாசகனின் கண்களுக்கு எதிரே விரியவைப்பதை அற்புதமாக நிகழ்ந்திருப்பதற்கு இவ்வகைப்பட்ட கதைசொல்லலின் ஒளிமிருந்த பக்கம் அவருக்கு உதவியிருக்கிறது.மொத்தக் கதைகளையும் வாசித்து முடித்தபின் ஒவ்வொரு கதைகளும் தனித்த அனுபவமாய் மாறுவதைவிடவும், எல்லா கதைகளும் ஒரு தனித்த மன உலகத்தின் வெவ்வேறு அடுக்குகளாய் உருமாறுகின்றன.
இக்கதைகளின் நிலப்பரப்பு மற்றும் கதாமாந்தர்களின் அகப்பரப்பு, நிச்சயமாக நாம் வசிக்கும் ஒழுங்குகள் எல்லைக்கோடுகளாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சமூகமல்ல. மத நூல்கள் மற்றும் சட்டப் புத்தகங்கள், நீதி அமைப்புகள் மற்றும் காவல் நிலையங்கள், இவற்றால் பாதுகாக்கப்படும் பாவனையான வாழ்முறையின் விளிம்புகளிலிருந்து துவங்கும் அதன் இருள்மிகுந்த பிரதேசங்களிலேயே இக்கதைகள் மையம் கொண்டிருக்கின்றன.அங்கே விரட்டப்பட்டிருக்கும் மையச்சமூகத்திற்கு பொருத்தமில்லாத மனிதர்களின் கதைகளை இக்கதைகள் பேசுகின்றன.
கதை சொல்லும் முறைமையிலோ அல்லது உள்ளடக்கத்தின் சாரத்திலோ தங்களுக்குள் சில பொதுத்தன்மைகளைக் கொண்டிருக்கின்ற என நான் நம்பும் பின்வரும் வரிசையில் இக்கதைகளை மாற்றியமைத்துக் கொள்கிறேன்.
அ) சுவரிலிருந்து இறங்கும் சிறுத்தை, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட புத்தகம் , தள்ளுபடி ஆகமம்
ஆ) நகுலன் நடாமடும் தெருக்களில் ஏன் இருள் மழையெனப் பெய்கிறது? ,எம்.ஜி. ராமச்சந்திரனும் கார்ல் மார்க்ஸும்
இ) வெள்ளை அங்கியும்,இரத்த நிறத் தோள்பட்டையும் அணிந்த மஹராஜா, கண்ணாடி ஒளி
ஈ) இறந்தவனின் ஆடைகளை அணியும் பாழடைந்தவனின் உடல், மூலிகை, நித்யத்துவத்தின் வலி, பாம்புச் சட்டை,வெயில் கனவு
உ) கொட்டிச்சேதம், ரோஸ் நிறம், கருந்திரை, நாவல் எழுதுபவன் ஆகிய இன்னபிற கதைகள்.
சுவரிலிருந்து இறங்கிவரும் சிறுத்தை மற்றும் தள்ளுபடி ஆகமம் ஆகிய இரண்டு கதைகளும் யதார்த்தத்தோடு புனைவின் அரூபமான வண்ணங்கள் இழைந்து உருவாகியிருக்கின்றன.பாலை நிலவனின் கதையுலகத்தில் அலையும் இருத்தலியற் சிக்கல்களும் பிளவுபட்ட மனோநிலைகளும் கொண்ட பெரும்பாலான ஆண்களைப் போலவே இக்கதைகளில் வரும் ஆண்களும் இருக்கிறார்கள்.சுவரிலிருந்து இறங்கி வரும் சிறுத்தை கதையில் பகலின் ஒளிக்கு கண்கூசும் ஆந்தையின் விழிகள் கொண்டவன் கடல் நீலமும் சுண்ணாம்பும் கலந்த வெளிச்சம் கொண்ட அறையின் பாதுகாப்பின்மையை உணரும்போதும் தன் செல்ல மகனோடு செத்துப்போய் விளையாடுவதின் வழியாக அவன் தன் மீட்சியை கண்டடைகிறான்.அக்கணங்களில் சிறுத்தையும் காட்டுக்கு ஓடிவிடுகிறது.ஆனால் அவன் மனைவியோ சிறுத்தையின் காலடித்தடத்திலிருந்து தப்ப முடியாதவளாயிருக்கிறாள்.
எதிர்நிலைகளின் குறியீடாக பூனையை வைத்துப் பேசப்பட்டிருக்கும் தள்ளுபடி ஆகமம் கதையில் சர்ச் அல்லது நிறுவனத்திற்கு எதிரான மனோநிலை அல்லது தேவன் எப்போதும் நம்மோடு இருப்பது நமக்கு எவ்வளவு துயரூட்டக்கூடியதாக இருக்கிறது என்பது பேசப்படுகிறது. தன் வீடு ஒரு சர்ச்சாக மாறிவிட்டதை அறிந்த ஜான் தாமஸ் தன் சொந்த வீட்டிலேயே உளவாளியாக மாறினாலும் அவனால் கரு நிழலின் வாசனையையோ சாயையோ அறியமுடிவதில்லை.தேவகுமாரனான இம்மானுவேலை மனைவியின் தோழனாய், காலத்தைக் குலைத்து புனைவாக்கி அமைப்பு சார்ந்த கிறிஸ்த்துவ பெருங்கதையாடலையும் ஆண் பெண் உறவின் மிக நுண்ணிய கணகளுக்கு அகப்படாத கண்ணிகளையும் விமர்சிக்கிறது இக்கதை.
இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் “கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட புத்தகம்” கதை தந்தைமையின் பித்தான உலகம், நோய்மை மற்றும் மருத்துவமனைகளின் சூழல் உருவாக்கும் வறண்ட மனோநிலை,மனங்குலைந்த தருணங்களில் அர்த்தப்படும் சம கணத்திலிருந்து வேறுபட்ட காண் உலகம் எனப் பல்வேறு அடுக்குகளோடு உள்ளோட்டத்தில் ஒரு நூலிழை அளவு ஆகமத்தின் மீதான அவநம்பிக்கை அல்லது இறைமையின் போதாமை போன்ற ஏதோவொன்றையும் பேசுகிறது. தந்தைமையை எழுதும்போது பாலைநிலவன் மிக ஈரமிக்க சொற்களையே கொண்டவராயிருக்கிறார்.இந்த ஈரம் பல கதைகளில் விரவிக்கிடக்கிறது.
”நகுலன் நடமாடும் தெருக்களில் ஏன் இருள் மழையெனப் பெய்கிறது “ மற்றும் “எம்.ஜி.ராமச்சந்திரனும் கார்ல் மார்க்சும்” ஆகிய இரண்டு கதைகள் ஆண்,பெண் உறவுநிலைகளைப் பேசுகின்றன.முன்னதில் வெகுளித்தனத்தையும் பின்னதில் தத்துவம்,மனோவியல் மற்றும் தர்க்கத்தின் தாக்கத்தையும் நாம் அனுமானிக்க முடிகிறது.ஒரு எளிய காதல் கதையான முன்னதை பாலை நிலவன் தன்னுடைய மொழியின் மூலம் நவீனமாக்குகிறார்.மையப்பாத்திரத்தின் ”நகுலன்” என்ற பெயரே வாசக மனதில் அன்பை விழையும் ஒரு பூனைக்குட்டியின் சாயல் கொண்ட மனித உருவத்தை நிறுத்துகிறது.பேரொளி மிக்கவளான பாமாவுக்கும் கனவு காண்பவனான நகுலனுக்கும் இடையில் தகர்க்கமுடியாத ஒரு கருங்குகை.ஆனால் யதார்த்தவாதியான குணசேகரனுக்கும் பாமாவுக்குமிடையில் அந்தக் கருங்குகை இல்லாமல் போகிறது.பாமாவும் குணசேகரனும் ஒருவிதமான முகமூடிகளை அணியும்போது நகுலனின் முகம் சிலுவையில் அறையப்பட்டவனுடையதாகிறது.காலத்தின் முடிவற்ற பாதையில் நகுலன் நகுலனாகவே எஞ்சுகிறான்.
இந்தத் தொகுப்பிற்கு தலைப்பைக் கொடுத்திருக்கும் கதையான எம்.ஜி.ராமச்சந்திரனும் கார்ல் மார்க்சும் கதையின் மையப்பாத்திரமான டாக்டர் கைலாஷ் தமிழ் புனைகதையில் ஒரு புதுவகையான மனிதன்.மார்க்ஸ் மற்றும் எம்.ஜி.யாரின் குணநலன்கள் கொண்ட கற்பனாவாதியான டாக்டர் மற்றும் அவர் இன்னும் நம்பிக்கையிழக்காத இடதுசாரித் தத்துவம் மற்றுமவரின் உடல்/உளவியற்சிக்கல் கலந்த காதல் அவரை நமக்கு ஒரு மறக்க முடியாத மனிதனாக மாற்றுகிறது.ஆயினும் டாக்டர் ஏன் ஒரு Mediocre ஆன பிம்பமாக காலத்தின் முன் எஞ்சுகிறார் என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. நிற்க, சில கதைகளில் நாம் பொதுவாக காணும் விஷயம் கதைகளுக்குள் ஆசிரியனின் குரலை ஒரு மூன்றாவது பாத்திரம் பேசுகிறது.பாலை நிலவன் அந்த மூன்றாவது பாத்திரத்தைப் பற்றியும் விரிவாக எழுதுகிறார்.குறிப்பாக எம்.ஜி.யாரும் கார்ல் மார்ஸ்ம் கதையில் வரும் கவிஞனான ஜெய்தான் டாக்டர் கைலாஷ் பற்றிப் பேசுகிறான்.ஜெய் இந்தக் கதையை சொல்பவன் என்ற முறையிலும் டாக்டரின் அனுதாபி என்ற முறையிலுமே இந்தக் கதைக்கு தேவைப்படுகிறான்.இந்தக் கதைக்குள் ஜெய்யின் வாழ்க்கையும் அவன் காதல் கதையும் நமக்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.மேலும் இதேபோன்ற எடிட் செய்ய வாய்ப்புள்ள பகுதிகளை மூலிகை,கண்ணாடி ஒளி,கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட புத்தகம், நித்யத்துவத்தின் வலி போன்ற கதைகளிலும் காணமுடிகிறது.மேலும் கதைகளுக்குள் வரும் துணைப்பாத்திரங்கள் பற்றியும் விரிவான தகவல்கள் சொல்லப்படுகின்றது.இது பன்மைத்தன்மை கொண்ட ஒரு வகையான கதைசொல்லல் முறைதான் என்றாலும் இந்தக் கதைகளின் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும்போது அவை இக்கதைகளுக்கு வலுவூட்டுகின்றன என்பதை நான் உரத்துச் சொல்ல முடியாதவனாயிருக்கிறேன்..அவருடைய கதைசொல்லல் முறையின் ஒளிமிகுந்த பக்கத்திற்கு எதிர்ப்பக்கம் ஒன்று இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.அது இருண்மையைப் பேசும் கவித்துவ மொழி தேவைக்கு மிக அதீதமாக தொழிற்பட்டிருப்பது.
வெள்ளை அங்கியும் இரத்த நிறத் தோள் பட்டையும் அணிந்த மஹாராஜா மற்றும் கண்ணாடி ஒளி ஆகிய கதைகள் சமகால அரசியற் புனைவுகள்.ஒன்று ஏகாதிபத்தியத்தால் நசுக்கப்பட்ட தாம்சேனின் மரணத்தைப் பற்றி நான் – லீனியர் முறையிலும், இன்னொன்று ஏகாதிபத்தியத்தை தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்ட இரத்த நிறத் தோள்பட்டை அணிந்த மஹாராஜாவைப் பற்றி உரைநடைக் கவிதையின் தன்மை கலந்த அரூப மொழியிலும் பேசுகிறது.
அர்த்தநாரீஸ்வரத்தன்மை மிக நுணக்கமான கலைத்தன்மையோடு எழுதப்பட்டிருக்கும் “கொட்டிச்சேதம்” தமிழ்ப்பரப்பில் மிக முக்கியமான சிறுகதை.இதைப்போலவே இறந்தவனின் ஆடைகளை அணியும் பாழடைந்தவனின் உடல் கதை காமத்தையும் அதைத் தீர்த்துக்கொள்ள அலையும் மனிதர்களின் வேட்கையையும் காகத்தின் கருமை நிறம் கொண்ட இரவின் பின்புலத்தில் விவரிக்கிறது.கருந்திரை-2, நித்யத்துவத்தின் வலி,மூலிகை ஆகிய கதைகள் பாண்டி, போலீஸ் உளவாளியான ஜேம்ஸ்பாண்டு போன்ற விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு காமம் மற்றும் போதையை பேசுகின்றன.சற்றே புதிர்த்தன்மையோடு போதையின் நற்குணங்களோடு துலங்குகிறார்கள் வெயில் கனவின் ஸ்ரீகிருஷ்ணனும் சாரதியும்.
விவியலியமும் மீட்பரான தேவகுமாரனும், நகரங்களும் அதன் வாழ்க்கையும் வெவ்வேறு கோணங்களில் விசாரனைக்குட்படுத்தப்பட்டிருக்கும் இக்கதைகளுக்குள் உறைந்திருக்கும் பேருணர்ச்சிகள் தர்க்கத்தாலோ அல்லது புகாரற்ற ஒரு தன்மையினாலோ மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.இது சிலபோது உணர்ச்சிகரமான ஒரு திரைப்படக் காட்சியை அதன் ஒலியின்றி பார்க்கும் குறைவுபட்ட உணர்வைத் தந்தாலும் தன் சாரத்தில் இருண்மையை அதன் அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கும் இக்கதைகள் வாசகனுக்கு புதிய வகைப்பட்ட புனைவனுபவத்தை வழங்குகின்றன.
நன்றி-கல்குதிரை 2013(பனிக்காலங்களின் இதழ்)
No comments:
Post a Comment