Apr 18, 2013

இல்லா ராகத்தின் எதிரொலி

                                   

ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு அகவெளி அல்லது சொற்களின் நிலவெளி ஒன்றிருக்கிறது.மொழியின் வீச்சாலும் குறுகத்தரித்து விரிப்பதாலும் கவிதைகளின் நிலவெளி ரொம்பப் பெரியது மட்டுமல்ல, இது நாம் இன்னும் அறிந்திருக்காத பிரதேசங்களின் மர்மங்களைக் கொண்டது.இந்தப் பெரியது எனபது சமயத்தில் பிரபஞ்சமளவிற்குகூட இருக்கும்.ஆனால் கவிதையின் இந்தப் பிரத்யேக நிலவெளி என்பது சுருங்கி விரியும் தன்மை கொண்டது.ஒரு கவிதையை நான்காவது முறை வாசிக்கும்போது அது மூன்றாவது முறை வாசித்ததுபோல இல்லாமல் வேறுமாதிரி இருக்கிறது என்பதிலிருந்து இந்த சுருங்கி விரியும் தன்மையை புரிந்துகொள்ளலாம்.

கவிதையின் வினைபுரியும் தன்மை என்பது ஒரு முடிவிலியாதலால் ஒரு உயிர்ப்புள்ள கவிதை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் மறுவாசிப்பிற்கான சில உள்ளீடுகளை உற்பத்தி செய்கிறது.இந்த உள்ளீட்டை நாம் திரும்பவும் கவிதைக்குள்ளேயே செலுத்துகிறோம்.கவிதைக்கு உள்ளேயிருந்து கிடைக்கும் இந்த உள்ளீடு மட்டுமல்ல,புறத்திலிருந்து பெற்று நாம் கவிதைக்குள் செலுத்தும் உள்ளீடுகளும் கவிதையை திரும்ப வாசிக்கும் இடைவெளிகளில் மாறுபட்டுவிடுகிறது.இப்படி ஒவ்வொரு முறையும் உள்ளீடு மாறும்போது கவிதை வெளிப்படுத்தும் வெளியீடு அல்லது மறுவாசிப்பிற்காக கவிதை அளிக்கும் உள்ளீடும் மாறுபடுகிறது.இந்த மாறாத வினைபுரியும் தன்மையினால் கவிதையின் நித்யத்தன்மை உருப்பெறுவது மட்டுமல்லாமல் கவிதையைக் குறித்த தீர்க்கமான வரையறைகளை கலைத்துப்போட்டும் விடுகிறது.இங்கே நித்யத்தன்மை என்பது கவிதை மறக்கப்படாமல் இருக்கும் ஆயுள் என்பதாக இல்லாமல் அது தன் அர்த்தங்களை விரிவுபடுத்தி அல்லது மாற்றிக்காட்டும் சாத்தியங்களைக் கொண்டது என்ற பொருளிலேயே சுட்ட முயல்கிறேன்.இவ்வகைப்பட்ட ஒரு வினைபுரிதலுக்கான பரப்பை அளிக்கும் குறிப்பிட்ட அளவிலான கவிதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பாக நான் ஆத்மாநாம் பேசுகிறேன் தொகுப்பைப் பார்க்கிறேன்.

ராணிதிலக்கை தொடர்ந்து கவிதையில் தேடுபவராக சொல்ல்லாம்.உள்ளடக்கத்தில் இந்தத் தேடுதலின் முதிர்ச்சியை அவரது நான்கு தொகுப்புகளையும் ஆய்ந்து கண்டுணரப்படவேண்டிய செயல். இச்செயலின் வியாபகம் இந்தத்தொகுப்பிற்கான பேச்சைவிட பெரியது என்பதால் இங்கே பிரதானமாக வடிவத்தில் அவரது தேடுதலைக் குறிப்பிடலாம்.தமிழின் சிறந்த தொகுப்புகளில் ஒன்றான கட்டிறுக்கமான மொழி கொண்ட நாகதிசை, உரைநடை வடிவில் முயற்சித்த காகத்தின் சொற்கள், சமநிலைமொழிக் கவிதையை அடைவதற்கான முயற்சிகள் கொண்ட விதி என்பது இலைதான்,சமநிலைமொழிக் கவிதை முதிர்ந்து வந்திருக்கும் நான் ஆத்மாநாம் பேசுகிறேன் என்ற அவரது பயணத்தில் வடிவத்திற்கான தேடல் மிக முக்கியமானது.

சமநிலைமொழிக் கவிதைகள் வாசகனை ஏமாற்றக்கூடியவை.ஏனெனில் அது இரைச்சலற்ற பிரதேசம் அல்லதொரு தொடுவானக்காட்சி.எந்தக்கணத்தில் புதிர் தன்னை விடுவித்துக்கொள்ளும் அல்லது தாமரை மலரும் என்ற உறுதியான கணிப்புகள் ஏதும் நம்மிடம் இருப்பதில்லை.சில அற்புதமான சமநிலைமொழிக் கவிதைகள் உள்ளடங்கியிருக்கும் இத்தொகுப்பின் மையத்தை தேர்ந்துகொள்வதற்கான முயற்சியாய் சில பகுப்புகளை உருவாக்க முயலும்போது எனக்கு கிடைக்கும் மையங்கள் ஒன்றிற்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன.

நிலத்தை அதன் அலகுகளை தொடர்ச்சியாக விசாரணை செய்வது, தன் இருப்பை நிலத்தின் வழியாக பார்ப்பது போன்ற தன்மைகளிலிருந்து தத்துவார்த்தம் கலந்த வெளியில் எழுகின்றன ஒரு பகுதி கவிதைகள்.இன்னொரு பகுதி கவிதைகள் தனிமை/இன்மை/துயரம் என்ற முக்கோணவெளிக்குள் இயங்குகின்றன.கவிதை/கவிஞர்கள்/கவித்தொழில் இவற்றை உள்ளிட்டு இத்தொகுப்பின் மற்ற மையங்களின் ஆதார உணர்ச்சியிலிருந்து விலகி எழுதப்பட்ட இன்னொரு பகுதி கவிதைகளை மூன்றாவது மையம் என்று சொல்லலாம்.இப்படி இத்தொகுப்பு ஒன்றிற்கு மேற்பட்ட மையங்களைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான கவிதைகளை கட்டியெழுப்பிய படிமங்கள் நிலத்தோடு இயைந்தவையாக இருக்கின்றன. உதாரணங்களாக மலைகள், ஆறுகள், குளம், மரங்கள், நீலமலர், அந்திமந்தாரை, மயில், மரங்கொத்தி, பழுத்த இலை,சிட்டு,கிளிகள்,கருங்குருவி மற்றும் இந்தத் தொகுப்பின் பிரதம படிமமான தாமரை ஆகியவற்றைச் சொல்லலாம்.இந்தப்படிமங்கள் இத்தொகுப்பின் இரண்டாவது மையமான தனிமை/இன்மை/துயரம் என்ற பகுப்பிலுள்ள கவிதைகளில் அதிகமாக தொழிற்பட்டிருக்கின்றன.

தரிசனம் எப்போதும் சுபவேளை கடந்ததே என்று சொல்லும், தன் நிலத்தைப்போலவே மிக வறண்ட மனோநிலையைக் தன் அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது இம்மனம். இங்கே பசுமை ஒரு துர்தேவதையாக சொல்லப்பட்டு பசுமையான பிரதேசம் என்பது அகதியின் நிலமாக உருவகிக்கப்படுகிறது.பசுமை, சுபவேளை போன்றவை நமது பிரக்ஞையின்றி நிகழும் வழக்கமானவற்றிற்கான அல்லது லோகாயுத வாழ்விற்கான குறியீடாகக் கொண்டால் தன்னை இவற்றிலிருந்து துண்டித்துக்கொண்டு இவற்றிற்கு வெளியே மெய்மையின் பக்கம் நிற்பது என்றொரு தத்துவார்த்த வாசிப்பைக் கொடுக்க முயல்கின்றன நிலம் சார்ந்து எழுதப்பட்ட கவிதைகளான பாலி என்பது புத்தனின் முகம் மற்றும் தரிசனம் எப்போதும் சுபவேளை கடந்ததே கவிதைகள்.

இத்தொகுப்பின் இரண்டாவது மையமான தனிமை/இன்மை/துயரம் என்ற முக்கோணப் பரப்பிற்குள் வரும் கவிதைகளாக நிறைய உள்ளன.தனிமையும் துயரமும் ஒரே விதமான படிமங்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருப்பதால் இக்கவிதைகளில் சிலவற்றை தொகுப்பாக்கத்தின்போது தவிர்த்திருந்தால் மற்ற சில கவிதைகளுக்கு அடர்த்தி அதிகரித்திருக்கக்கூடும்.கவிதையைத் தாண்டி,கவிதைக்கு வெளியே அந்தக்கவிதை தன்னை மீண்டும் சிருஷ்டித்துக்கொள்ளும் வித்தை இவ்வகைப்பட்ட கவிதைகளில் நிகழாமல் கவிதையின் பெளதீக வடிவத்திற்குள்ளேயே கவிதைகள் முடிந்துவிட்டிருக்கின்றன.இத்தனை சொற்களுக்குப் பதிலாக ”இல்லாத கிளைகளில் இல்லாத பறவைகள் அமர்கின்றன,இல்லாத ராகத்தை பாடுகின்றன” என்ற மூன்று வரிகளே எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன.இதுதான் கவிதையின் மாயம்.

அவர்கள் ஒரு மஞ்சள் மலருக்காக காத்திருக்கிறார்கள் மற்றும் ஒரு மலை, அவன், மலை உச்சியில் அமர்ந்திருக்கும் தந்தை ஆகிய இரண்டு கவிதைகளை ஒரே வரிசையில் வைத்து வாசிக்கலாம்.இரண்டுமே இன்மையைப் பேசக்கூடியவை.முதல் கவிதையில் மஞ்சள்மலர்/நீலமலர் என்ற தேய்வழக்கான, பேசப்படும் பொருளுடன் அவ்வளவாக தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத படிமமாக இருப்பதால் இக்கவிதை தனக்குள் கொண்டிருக்கும் பெருந்துயரத்தை நமக்கு கடத்த முடியததாக இருக்கிறது.ஆனால் இரண்டாவது கவிதையில் பேசப்படும் பொருளுக்கு இயைந்ததாக தந்தை என்னும் படிமமாக வைக்கப்படும்போது இக்கவிதையின் வியாபகம் மிகப்பெரிதாகி இன்னும் தாமரை மலரில் அமராமல் இருப்பதின் ஏக்கத்தை பூரணமாய் வாசகனுக்குக் கடத்துகின்றன.

இத்தொகுப்பின் தலையாய கவிதையாக ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை கவிதையைச் சொல்லலாம்.இக்கவிதையைப் போன்றே எழுதிப்பார்க்கப்பட்ட அல்லது வடிவத்தில் பிரதியெடுக்கப்பட்ட கவிதையாக பிரபஞ்சத்தில் சின்னஞ்சிறு சப்தம் கவிதையைக் குறிப்பிடலாம்.தற்காலிகத்திற்குள் விரிந்த ஒன்றைப் பேசும் இக்கவிதைகளில் வாசகன் ஒன்றைக்கொண்டு இன்னொரு கவிதையை உருவாக்கிக்கொள்வதற்குமான வாய்ப்புகள் இருக்கின்றன. பிரபஞ்சத்தில் சின்னஞ்சிறு சப்தம் கவிதையில் எல்லாமே காலி செய்யப்பட்டு முடித்து வைக்கப்படுகையில் முன்னைய கவிதையில் ஒன்றும் ஆகவில்லை என்று சொல்வதற்கில்லை என்பதன் மூலம் கவிதையின் மாயத்தன்மை நிகழ்த்தப்படுகிறது.கவிதையில் மாயம் அல்லது மேஜிக் என்பது தன்னில் வேறுபட்ட துருவங்கள் புழங்க அனுமதிக்கும் ஒரு வெற்றிடம் என்கலாம்.நகுலனின் ஆசிர்வாதம் பூரணமாய் இறங்கிய இக்கவிதை இந்த வெற்றிடத்தை நமக்கு பிழையின்றி உருவாக்கித் தருகிறது.நிரப்பிக்கொள்ள வேண்டிய கடமை நம்முடையது.

இந்தத் தொகுதியெங்கும் மலர்ந்திருக்கும் தாமரைகளில் எனக்குப்பிடித்த தாமரைகளாக தனிமை கொண்டவனிடத்தில் தாமரை எப்போதும் பூத்திருக்கும்,தாமரை எப்போதாவது மலர்ந்துவிடுகிறது மற்றும் தாமரைகள் ஆகிய கவிதைகளைச் சொல்ல விரும்புகிறேன்.மேலும் இக்கவிதைகளில் நான் தாமரைகளை சூரியன் என்று மாற்றி வாசித்துக்கொள்கிறேன்.இப்படி மாற்றி வாசிக்கும்போது தாமரைகள் மற்றும் தாமரை எப்போதாவது மலர்ந்துவிடுகிறது ஆகிய கவிதைகள் எனக்கு இன்னும் துலக்கம் பெறுகின்றன.கொஞ்சம் காத்திரு,உனக்கொரு உண்மை சொல்கின்றேன் என்கின்றன.பிச்சைக்காரனின் தொப்பூள்கொடியில் பூத்து வெகு உயரத்தில் ஆடும் சூரியனும் ஒரு தாமரைதான்.

இத்தொகுப்பின் மூன்றாவது மையத்தில் நான்கு கவிஞர்கள் இருக்கிறார்கள். நகுலன் ஆன்மாகவும், ஆத்மாநாம் அறிவு அல்லது விழிப்புணர்வாகவும்,ஸ்ரீநேசன் உடலாகவும் தேவதச்சன் நிழலாகவும் இருக்கிறார்கள். நகுலனுக்கும் ஆத்மாநாமுக்குமான டிரிபியூட்டாக எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் புதிய முயற்சிகள்.தேவதச்சனை சிறிய கடவுள்கள், நான் ஒரு தோல்வி அல்லது வெற்றி மற்றும் மதிய சாலை கவிதைகளில் தரிசிக்க முடிகிறது.பாலைநிலத்தின் சாரத்தைக் கொண்டிருக்கும் கவிதைகள் எழுதுபவ்ரான ஸ்ரீநேசன் இத்தொகுப்பின் உள்ளடக்கத்தில் மிக ஆரோக்கியமான பாதிப்பை செலுத்தியிருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது.

தன் கவிதையை வாசிப்பது கண்ணாடிக்குள் கண்ணாடி பிறப்பது போன்ற ரகசியங்களற்றதென்றும் இன்னொருவரின் கவிதையை வாசிப்பது என்பது நீரற்ற கிணற்றுக்குள் போய்ச்சேரும் பழுத்த வேப்பிலை அல்லது கடலுக்குள் அலையும் மரக்குதிரையைப் போன்று வெளியேற முடியாததென்று சொல்லும் கவிதையை வாசித்தல் கவிதையில் கவிதை வாசிப்புச்செயல்பாடானது உயரத்திலிருந்து கீழே இறங்கி நிலத்தில் கரைவது என்ற பயணத்தின் வழியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருப்பது சுவாரஸ்யமாக இருக்கின்றது.கவிஞனுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் மூடநம்பிக்கை வேண்டித்தான் இருக்கிறது.கவிதைக்கான மூடநம்பிக்கை என்பது ஒரு இலைமறை அல்லது மூடப்பட்டிருக்கும் உள்ளங்கை.இந்த மூடநம்பிக்கை இல்லையென்றால் நமது கவிதைகள் தகவல் அறிக்கை அல்லது கணிதசூத்திரங்கள் அல்லது கொள்கை விளக்க அறிவிக்கைகளாக மாறிவிடும்.ரைட்டர்ஸ் ப்ளாக் கவிதையும் குறிப்பிடத் தகுந்ததாக வந்திருக்கின்றது.

இந்தத் தொகுப்பின் ஆதார உணர்ச்சியிலிருந்து விலகி எழுதப்பட்ட கவிதைகளாக ஆடுதுறை பெருமாள் கோவில் மற்றும் ஒரு ஜவுளிநிறுவனம் மயிலைக் கொன்றது கவிதைகளைச் சொல்லலாம்.ஆண்டாளின் வியர்வையை பலாவின் தேன்வாடைக்கு ஒப்புமை சொல்வது புதிதாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருக்கிறது.இந்த வரியும் இல்லா என்கிற ராகம் கவிதையில் சொல்லப்படும் மரத்திற்கு ஆயிரம் கண்கள் போலாகும் என்ற வரியும் இத்தொகுப்பில் சற்றே உயர்வு நவிற்சியாய் ரொமாண்டிசிசத் தன்மையோடு சொல்லப்பட்டிருக்கும் வரிகள்.இவற்றைத் தவிர்த்து தொகுப்பெங்கும் சமநிலைமொழியே புழங்கி வந்திருக்கிறது.ஒரு அரூபமான கதையைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு ஜவுளி நிறுவனம் மயிலைக் கொன்றது கவிதையை இந்தத்தொகுப்பின் அரசியற்கவிதையாக சொல்லலாம்.

இந்தத்தொகுப்பின் உள்ளடக்க முரண், வறண்ட மனோநிலை கொண்ட மனம் தன் ஸ்திதியான இன்மை மற்றும் துயரத்தை பேசுவதாக இருக்கிறது.இந்த வறண்ட மனோநிலையானது இன்மை மற்றும் துயரத்திலிருந்து உருவானதாக சொல்லப்படாமல்,இவ்வகைப்பட்ட ஸ்திதிக்கு முன்பாகவே அதாவது மனதின் அடிப்படை இயல்பாக இருக்கிறது.ஆகவே ஏன் ஒரு வறண்ட மனம் தன் மனோ நிலையைப் போன்றே சாரம் கொண்ட அநாதைத்தன்மையை/துயரத்தை/ இன்மையை தன் மனோ நிலையின் நீட்சியாகப் ஏற்கமுடியாமல் எதிர்முனையாக பார்க்கின்றது என்பதே பிரதான கேள்வி.இது வெகு பழைய கேள்வியா அல்லது புதிய கேள்வியா என்பது நமக்கு முக்கியமல்ல.இந்தக் கவிதைகளுக்குள்ளிருந்து இந்தக் கேள்வி எனக்கு உரக்க ஒலிக்கிறது.


நான் இந்தக் கேள்வியை இந்தக் கவிதைகளுக்குள்ளேயே திரும்பவும் செலுத்துகிறேன்.

*******************

மார்ச் 16,17 ஆம் தேதிகளில் தக்கை-அகநாழிகை-361° இணைந்து சேலத்தில் நடத்திய கவிதை உரையாடல் நிகழ்வில் வாசிக்கப்பட்டு மலைகள் இணைய இதழில் வெளியான கட்டுரை

No comments: