பரந்த கிணற்றுக்குள் நிலவின் பிம்பம் மெலிதாக அசைவாடிக்கொண்டிருந்தது. தலையுயர்த்தி வானத்தைப் பார்க்க உயரத்தில் சிறு சிறு மேகங்கள் மஞ்சள் படிந்த வெண்மையோடு நகர்ந்து கொண்டிருந்தன.தென்னைகளில் உரசிச் சலசலத்த காற்று ஆடைகளற்ற உடலை தழுவிப்போனது.ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவன் கைகளிரண்டையும் முன்னால் நீட்டிக் கூப்பிக்கொண்டு கத்திப்பாய்ச்சலாய் கிணற்றுக்குள் குதித்தான்.சப்தமும் நீரும் கிணற்றுச் சுவர்களில் மோதித் தெறிக்க தரை தொட்டு வழுவழுப்பாய் இருந்த மண் ஒரு குத்து அள்ளியவாறே வேகமாக நீருக்கு மேலே வந்து தலையை சிலுப்பியவன் மெல்ல மண்ணை முகர்ந்துவிட்டு கரையவிட்டான்.
நீரின்மேல் மிதந்தவன் தலையுயர்த்தி நிலவைப் பார்க்க அதன் ஒளிவெண்மை வழிந்து கிணற்று நீர் அடர்ந்து கொண்டிருந்தது.கைகள் நீரை அளைந்துகொண்டிருக்க வெகு நேரம் மல்லாந்தவாறே வானம் பார்த்துக் கிடந்தவன் அப்படியே நீருக்குள் மறுபடியும் தலைகீழாய் அமிழத்துவங்கினான்.ஈசானிய மூலையில் தரைதொட்டவன் நினைவறிந்த நாளிலிருந்து சுரந்துகொண்டிருக்கும் சலத்தின் தாரையில் விரல் நுழைத்துப் பார்த்தான்.பின் உடலைத் தளர்த்திக்கொண்டு மேலே வந்து மெலிதாய் மூச்சு வாங்கியவாறே வடபுறத்தில் இருந்த படிக்கட்டுகளில் ஏறி கிணற்று மேட்டுக்கு வந்தான்.குத்தாய் கருங்கற்கள் கிடக்க அமர்ந்த கல்லில் மீந்திருந்த பகலின் சூடு தொடைகளின் வழியே படர்ந்தது.
சிக்குச்சிக்காய் சடை விழுந்திருந்த முடியை சிலுப்பிவிட்டவாறே அமர்ந்திருந்தான்.நிலவொளியில் ஒளிர்ந்த தோட்டம் தென்னைகளைத் தவிர ஏதுமற்று புழுதிக்காடாய் கிடந்தது.கண்களைத் தாழ்த்தி இறுக்கி மூடியவாறே வெகு நேரம் அமர்ந்திருந்தவனின் உடல் மேல் படிந்திருந்த ஈரத்தை காற்று முழுமையாக உலர்த்திவிட்டிருக்க கூந்தலலிருந்து நீர் சொட்டுகளாய் தோளிலும் பின்னங்கழுத்திலும் விழுந்துகொண்டிருந்தது.சுள்ளென்று உறைத்த குறியின் நுனியில் ஆட்காட்டி விரல் வைத்து தேய்த்தெடுத்துப் பார்த்தான்.சுள்ளெறும்பு.விரலில் ஒட்டியிருந்ததை எறும்பை சுண்டியெறிந்துவிட்டு சாளைக்கு நடந்தான்.
மூப்பின் சாயையோடு இருந்த சாளை கிழக்குப்பார்த்த ஒற்றை வீடு கொண்டது.கதவுக்கு தென்புறம் அதையொட்டி இரண்டடி உயரம் கொண்ட சுவர் சமையலுக்கான இடத்தை மறைத்திருந்தது.பூட்டப்படாமலிருந்த கதவை நீக்கியபோது சிம்னி விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.மூலையில் கிடந்த வேட்டியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டவன் மாடப்பிறையிலிருந்த பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்.சுவரோரம் கிடந்த கயிற்றுக்கட்டிலை எடுத்து எறும்புக்குழிகள் நிறைந்திருந்த வாசலில் போட்டான்.மிகப் பழமையானதான கட்டிலின் கயிறுகள் தாறுமாறாக பின்னப்பட்டிருக்க சில இடங்களில் கயிறுகள் பிரிந்து தொங்கிக்கொண்டிருந்தன. படுத்துக்கொண்டவன் பீடியை மெலிதாக வருடி பற்ற வைத்த குச்சியின் நுனிப்பிழம்பை விரலடையும் வரை வெறித்து வீசிவிட்டு ஆழமாக புகையை உள்ளிழுத்து கண்களை மூடிக்கொண்டான்.வாசலெங்கும் மந்திர இலைத்துகள்கள் உருகுவதின் வாசனை கமழ்ந்தது.அந்த வாசனையின் வழியேதான் தன் நிலத்தின் மறைவான பிரதேசங்களில் ஊடுருவுகிறான்.
மீண்டும் கண்களைத் திறந்தபோது நிலவு காணாமல் போயிருக்க நிலவொளி மட்டும் குறையாமல் அப்படியே ஒளிர்ந்துகொண்டிருந்தது.சிரிக்கத் தோன்றியதும் உதடுகளை கோணிக்கொண்டான்.இதுவரை மங்கியிருந்த நட்சத்திரங்கள் இப்போது பொலிவாகி மினுக் மினுக்கென ஒளிரத்துவங்கின. கயிற்றுக்கட்டிலிலிருந்த உடல் மெல்ல மிதந்து மிதந்து நட்சத்திரங்களுக்கு மேலேயே வந்துவிட்டிருந்தது. சட்டென்று யோசனை வந்தவனாய் மிதந்து கொண்டிருந்த உடலை குட்டிக்கரணமடித்து ஒரு நட்சத்திரத்தின் மீது நிற்க அதன் ஒளி பட்டு அவன் உடலும் நட்சத்திரமாகிவிட்டது.பின் அங்கிருந்து இன்னொரு நட்சத்திரத்திற்கு தாவினான்.விளையாட்டு முடிவில்லாமல் நடந்துகொண்டிருக்க தான் விளையாடுவதை அசையாத இமைகளோடு படுத்தவாறே பார்த்துக்கொண்டிருந்தான்.
வெகுநேரம் கிடந்தவனின் முகம் கனிந்திருந்தது.கதவை நீக்கி துண்டை எடுத்துக்கொண்டவன் சிம்னி விளக்கை ஊதி அணைத்தான். நாதாங்கியை போட்டு கதவை பூட்டாமல் விட்டுவிட்டு மேற்கு வேலியை நோக்கி துண்டை உருமாலாக கட்டிக்கொண்டே நடக்கத் துவங்கினான்.தோட்டத்தை தாண்டினால் ஊரடி வரை வனாந்தரமாய் விரிந்து கிடப்பது கொறங்காடுகள்தான்.பெரும்பாலும் இட்டேரிகள் மற்றும் பழகிய ஒற்றையடிகளில் நடப்பதில்லை.காலங்களாக நிலத்தை அளந்துகொண்டிருப்பவனுக்கு வேலிகளும் அதன் தொக்கடாக்களும் நினைவில் பதிந்தவை.அப்படியில்லாவிட்டாலும் எந்த வேலிக்குள்ளும் முட்களைப் பிடுங்காமல் அவற்றை ஒதுக்கிவிட்டு கடக்க அவனுக்குத் தெரியும்.நிலவில்லாத நாட்களிலும் இருளை ஊடுருவி அறியும் வல்லமையைக் கண்கள் கொண்டிருந்தன.
ஏதேனும் ஒரு முயல் அவன் செருப்புச்சத்ததிற்கு அதிர்ந்து விடைத்த காதுகளோடு குதித்தோடும்.சிலபோது அரவங்களை அல்லது காட்டுப்பூனைகளை காண்பான்.இரவில் அலையும் உயிர்களையும் அதன் இயல்புகளையும் அறிந்தவன் அவற்றின் மேல் இமை பதிக்காமல் நடந்துகொண்டேயிருப்பான்.நடந்து நடந்து ஊரையொட்டியிருந்த சுடுகாட்டுக்கு வந்திருந்தான்.ஊரில் வெகுகாலம் யாரும் மரிக்காததால் முட்களும் மரங்களும் அடர்ந்து புதராய் கிடந்தது.சில நாழிகைகள் எதையோ உற்றுக்கேட்பவனாய் அமர்ந்திருந்தவன் வடக்கே நடக்க ஆரம்பித்தான்.ஊர்க்குளம் அடர்ந்த புளியமரங்களோடு இருந்தது. நீரற்ற குளத்திலும் வேலிக்கருவைகள் முளைத்துக் கிடந்தன.வடக்குப்புறத்திலிருந்த புளியமரத்தின் வாதொன்று கரைமேட்டிலிருந்து எட்டிப்பிடிக்கும் உயரத்திலிருந்தது. தாவியவன் கால்களிரண்டையும் எக்கி வாதில் பூட்டிக்கொண்டு உடலை எம்பி மேலேறி அரவத்தைப்போல் கிளைகளில் படர்ந்து உச்சிக்கிளைக்கு போய் அமர்ந்தான்.அங்கிருந்து பார்க்க சற்றே வடபுறத்தில் ஊர்வீடுகளின் சுண்ணாம்பு வெள்ளை நிலவின் ஒளியில் ஒளிர்ந்தது.தலைவாசலின் பிரம்மாண்ட வேம்பும் கோவில் திண்ணையும் அரவமற்றுக் கிடந்தன.தூரத்தில் குலைக்கும் நாயொன்றின் ஓசையைத் தவிர ஊர் அமைதியாய் இருந்தது.அவன் அதைக் கண்காணிப்பவன் போல் வெறித்துக்கொண்டிருந்தான்.
அவன் ஊரின் வாழ்வு முழுக்கவும் அறிந்தவன்.பகல் போனபின்பு கவியும் இரவில் ஊருக்கு வேறு கண் முளைத்துவிடுவதையும் அறிந்தேயிருந்தான்.வீடுகளின் கூரையிலும் சுவர்களிலும் படியும் கனவுகள், வளவுக்கு வளவு சிதைந்து கிடக்கும் பாழடைந்த வீடுகளில் சுவர்ப்பல்லியைப் போலவும் பாப்பிராணியைப் போலவும் அசைந்து போகும் உடல்களின் நிழல்கள் இவற்றை சுடுகாட்டு முட்செடிகளிடையேயிருந்தும் புளியமரங்களின் உச்சாணிக் கிளையிலிருந்தும் கண்டறிந்தவன் ஊரின் சம நிலையை குலைக்காதிருக்கும் பொருட்டு இரவில் விழித்திருக்கும் அதன் கண்களிலிருந்து தன்னை மறைத்துக்கொள்பவனாக இருந்தான்.ஊரின் விதி தன் கரங்களில் ஏன் ரேகையாக ஓடுகிறது என்பதன் ரகசியம் அவனுடைய பிதிரின் ஆழங்களும் அறியாததாக இருந்தது.
அதுவொரு நள்ளென் யாமம்.விநாயகன் கோவிலின் நீண்ட கல்திண்ணையில் இலைகளை நெருப்பால் உருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.வேம்பு தன் இலைகளை சரசரப்பதும் பின் அவன் மேல் சில சருகுகளை உதிர்ப்பதுமாயிருந்தது.பர்ரென்ற சப்தத்துடன் மேகாற்று வீசிக்கொண்டிருக்க ஊரின் வடக்கிருந்து நாய்கள் குலைக்கும் ஓசை நெருங்கிக்கொண்டிருந்தது. நாய்கள் பின் தொடர நடந்து வந்துகொண்டிருந்த அந்த வினோதமான தோற்றக்காரன் கோவில் திண்ணையின் இருளடியில் அமர்ந்திருப்பவனைக் கண்டு நெருங்கினான்.நாய்கள் இவனைக் கண்டதும் அமைதியாகி வாலசைத்தன.இலை நுனியில் எரியும் கங்கையே வினோதமான தோற்றக்காரன் பார்த்துக் கொண்டிருக்க எரியும் இலையை அவனிடம் நீட்டினான்.மறுபேச்சின்றி வாங்கிப் புகைத்தவன் இவனிடம் திருப்பி நீட்டிவிட்டு எதுவும் பேசாமல் ஊருக்கு வெளியே போகும் பாதையில் நடக்கத் துவங்கினான்.அப்போது நாய்கள் அவனைப் பின் தொடராமல் இவன் காலடியிலேயே கிடந்தன.அதற்குப்பின் ஊருக்குள் யாரும் இராக்களில் குறி சொல்ல வரவில்லை.
ஊரின் விதியோடு அதன் உடல்களையும் அவற்றின் உபாதைகளையும் அறிந்திருந்தவன் பிணிதீர்க்கும் வழிமுறைகள் உடல்களுக்குள்ளேயே மறைந்திருப்பதையும் கண்டான்.வேம்பின் இலைக்கொத்து கொண்டு அவற்றை எழுப்புதல் தவிர அவன் வேறொன்றும் செய்வதில்லை.ஜந்துக்கள் கடித்த உடல்களிலிருந்து விஷத்தை இறக்கும் நூதனமும் அவனுக்குக் கைகூடியிருந்தது.ஆயினும் கொடுவிடம் கொண்ட அரவம் தொட்ட உடல்களை அவன் தீண்டுவதில்லை. நாடி கண்டவுடன் அவற்றை வேறு மருத்துவத்திற்கு உடனடியாக அனுப்பி விடுகிறான்.பண்டம்பாடிகளின் கண்பார்த்தும் உடல்மாற்றம் பார்த்தும் ஊடுருவியிருக்கும் நோய் நரம்புகளின் ஆழம் கண்டு பிணிதீர்ப்பவனாகவும் இருந்தான்.காத்துக்குணம் கொண்ட பெண்களின் விறைத்த உடல்களிலிருந்தும் மேற்சொருகிய கண்களிலிருந்தும் அவர்களின் துயரங்களை அறிந்தவன் அவற்றை பிரித்தெடுக்கவும் அறிந்திருந்தான்.ஆயினும் அவன் உயிரின் ஆழங்களில் இறுகிய துயரங்கள் நிரம்பிக் கிடப்பது ஊரின் கண்களுக்குத் தெரியாது.
வெகுநேரமாய் அமர்ந்திருந்த புளியமரத்திலிருந்து கீழிறங்கியவன் திரும்பி கிழக்கே தோட்டத்திற்கு நடக்க ஆரம்பித்தான்.கொஞ்ச தூரம் கூழாங்கற்கள் நுரைத்துக் கிடக்கும் இட்டேரியில் வந்தவன் மாதாசிங்கன் கோவிலடியில் இட்டேரியை விட்டுவிட்டு காடுகளுக்குள் புகுந்து நடக்க ஆரம்பித்தவன் கொறங்காடொன்றில் நிலவொளியில் பிணைந்து விளையாடிய சர்ப்பங்களைப் பார்த்தான்.அப்போது கண்களிரண்டையும் ஒரு கணம் தூயவெள்ளை நிறைத்தது.
உச்சிவெயில் நேரத்தில் தென்னை மரத்தின் நிழலடியில் புகைத்துக்கொண்டு படுத்திருக்கும்போது பண்டக்காரனொருவன் ஓடிவந்து தகவல் சொன்னான்.எழுந்தவன் துண்டை உதறி உருமாலாக கட்டிக்கொண்டு வேகமாக இட்டேரியில் நடந்தான்.வெயில் உக்கிரமாய் எரிந்துகொண்டிருக்க கொறங்காடுகளுக்குள் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.இட்டேரியிலிருந்து தென்புறமாய் பிரிந்த காட்டுக்குள் நீண்ட ஒற்றையடித் தடத்தில் போகும்போது ஏற்கனவே ஏழெட்டுப்பேர் நின்றிருந்தார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாக மல்லாந்து தவித்துக்கொண்டிருந்த மறிகள் எழ முயன்று சுழன்று சுழன்று விழுந்துகொண்டிருந்தன. வெள்ளைச்சீலை அணிந்திருந்த அவள் பிதிர் கலங்கி அழுதுகொண்டிருக்க சுற்றியிருந்தவர்கள் இவனிடம் தகவலைச் சொன்னார்கள்.
அவளுக்கு சற்று தள்ளி மரித்துக் கிடந்த மறியினடியில் குனிந்து அதன் வாயை விரித்துப் பார்த்தவன் வயிற்றில் விரல்களை வைத்து அழுத்திச் சோதித்தான்.அதற்குப் பக்கத்தில் கிடந்த இன்னொன்றையும் அப்படியே சோதித்தவன் எழுந்து சுற்றும் முற்றும் தரையை பார்த்தவாறே அலைந்தான்.எல்லா மறிகளையும் சுற்றியிருந்தவர்கள் தூக்கிவந்து வேம்பினடியில் கிடத்திய காட்சி கொடூரமாய் இருந்தது.பதினான்கு செம்மறிகளும் இரண்டு வெள்ளாடுகளும் மரித்துக்கிடக்க மிச்சமிருந்த ஒரேயோரு வெள்ளாட்டுக்குட்டி இடைவிடாமல் தீனமான குரலில் அவளைச் சுற்றி சுற்றி வந்து கதறிக்கொண்டிருந்தது.சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வந்தவன் தாழியடியில் குனிந்து கொஞ்சமாய் கிடந்த நீர் ஒரு கை அள்ளி முகர்ந்தவன் மறுபடியும் அள்ளி இன்னோரு முறை முகர்ந்துவிட்டு தாழியை கை நீட்டிச் சொன்னான் “வெசம்..” பெருங்குரலெடுத்து அழுதவளின் கண்களும் இவன் கண்களும் ஒரு பின்ன கணத்தில் சந்தித்தபோது பழைய காலங்கள் உயிர்த்தெழுந்தன. நெடுங்காலத்திற்கு பின் நெஞ்சின் மேல் கற்கள் விழுவதுபோல் ஒரு வலி அவனுள் படர்ந்தது.இருதயத்தில் செவ்வரி ஓடியிருக்கும் அந்தக் காயமே இன்னும் ஆறாதிருக்கும்போது அவளின் இப்படியான ஒலத்தை மறுமுறையும் கேட்கிறான்.அவளின் கதறல் இன்னும் காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருக்க தோட்டத்திற்கு வந்தவன் பீடியை பற்ற வைத்துக்கொண்டு வானத்தை வெறிக்கும்போது ஆட்டுமந்தையைப் போல் ஒரு மேகக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கிழக்கில் கரைந்து போனது.
மறிகள் கொல்லப்பட்ட சூதின் ரகசியத்தை அறியாமல் ஊர் தவித்தது.மனிதர்களை காவு கொள்ளும் வெஞ்சினமும் பகையும் இந்த நிலத்தில் எப்போதும் பண்டம்பாடிகளை தொட்டதில்லை.இப்பெரும் பாதகத்தைச் செய்தது யாரென்று பேசிப் பேசி மாய்ந்த ஊரின் மேல் இவன் புகையைப் போல் கவிந்து யாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.ஒற்றை ஆட்டுக்குட்டியைப் போல் அவள் தவித்துக்கொண்டிருப்பதை அவன் பிதிர் அறிந்தேயிருந்தாலும் அவளின் விதிரேகையில் தானில்லை என்பதால் மீண்டும் தன் இருண்ட ஆழங்களுக்கு திரும்பிவிட்டான்.ஆயினும் காலம் மங்கியதாகவும் மனம் கிலேசமிக்கதாகவும் அவனுக்கு மாறத்துவங்கியிருந்தன.
கருப்பராயனுக்கு காவடி எடுக்கும் ஆடி மாதம்.கிழக்கில் பல கல் தொலைவில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு வரை பாதயாத்திரை சென்று மந்தரித்துக் கொணர்ந்த தீர்த்தக்கலசங்கள் விநாயகன் கோவிலின் வாசலில் வைக்கப்பட்டிருக்க பானகமும் நீர்மோரும் குவளை குவளையாக தீர்ந்துகொண்டிருந்தன.காவடி வினாயகன் கோவிலிலிருந்து வடக்கே கருப்பராயன் கோவிலுக்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருக்க தலைவாசலில் பொங்கல் வைத்த அடுப்புகள் ஆறிய சாம்பலோடும் கரி படிந்த கற்களோடும் கிடந்தன.பொழுது மேற்கே சாய்ந்திருந்தது. தப்பட்டை அடிப்பவர்கள் பனையோலையில் நெருப்பு மூட்டி காயவைத்து பதம் பார்க்க கொம்பூதுபவர்கள் ஊதிச் சோதிக்கும் கொம்புச்சத்தம் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது.அவர்களிடமிருந்து கள்ளின் வாசனை நுரைத்து வீசியது.பெண்களும் இளவட்டங்களும் காவடியின் பாதையில் நீர் வார்த்துக்கொண்டிருக்க சிறுபிள்ளைகள் சங்கையும் சேகண்டியையும் உற்சாகமாக ஊதியும் தட்டியும் விளையாடிக்கொண்டிருந்தனர்.தப்பட்டையின் முழக்கத்தோடு காவடி வடக்கே புறப்படப் போகும்போது இவன் கிழக்கே இருந்து வந்தான்.
தப்பட்டை அடிப்பவர்கள் இறுக்கிக் கட்டிய உருமாலோடு வளையமாய் சுற்றிச் சுற்றி அடித்தனர். சூடு குறைந்திராத மண்ணில் வார்க்கப்பட்ட நீர் மண்வாசனையை எழுப்பியிருக்க தப்பட்டையின் வேகத்துக்குக் குறையாமல் இளவட்டங்கள் ஆடினார்கள்.வளவின் முக்குகளில் பூசை வைத்து காவடி மெதுவாக வடக்கே நகர்ந்து கொண்டிருந்ததது.இன்னும் கருப்பராயன் வந்திறங்காதது வயோதிகர்களுக்கு மெலிதாய் மனக்கிலேசமூட்டியது. இவன் மெதுவாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே மெளனமாக வந்துகொண்டிருந்தான்.பின்பகுதியில் வந்துகொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் அவள் வெகு தளர்வாக வந்துகொண்டிருப்பதை பார்க்காவிட்டாலும் உள்ளுணர்வில் உணர்ந்தான். பறை முழக்கம் குருதியை அதிரச்செய்தது. கொம்பு விடாமல் ஒலிக்க இளவட்டங்களின் சீழ்க்கை ஒலியும் சேர்ந்தொலித்தது.
வெகுகாலத்திற்கு முன்பபே மலையுச்சிக்கு போய்விட்ட கருப்பராயன் தன் சந்ததியினர் தன்னை இறைஞ்சி அழைப்பதின் குரல் கேட்டுத் திரும்பினான்.ஊருக்குத் தெற்கே இடுகாட்டு மண்ணுக்குள் விழித்திருக்கும் கண்களை கொண்டவர்களும் ஓசைகளற்ற குரல்களில் அவனுடைய ஆதிக்காணியில் வந்திறங்க இறைஞ்சுவது கேட்க மலையிலிருந்து வீச்சரிவாள் வேல்கம்பு மற்றும் நிலமதிரும் பாதக்குறடணிந்து இறங்கத்துவங்கும்போது பறைமுழக்கமும் கொம்போசையும் சீழ்க்கை ஒலியும் இன்னும் உக்கிரமாகியிருந்தன. சலனமின்றி நடக்கும் மஞ்சள் படிந்த சடைகொண்டவனின் தலையில் கருப்பராயன் பாதம் வைத்த மறுகணத்தில் தன் ஆதிக்காணியின் புழுதியுண்ணும் வேட்கையில் மண்ணில் புரளத்துவங்க தடத்தின் இருப்பக்கமும் காவடிகள் ராயனுக்கு அணைகட்டின.ஆனாலும் ராயன் விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவ இளவட்டங்கள் வெகு சிரமத்துடன் ராயனின் வேட்டியை மடித்து தார்ப்பாய்ச்சி கட்டிவிட்டு குடம்குடமாய் நீர் சரித்தார்கள்.ஊழியின் வெறிகொண்ட ராயனின் கண்கள் செந்நிறத்தில் மின்ன நிலத்தைப் பீடித்திருக்கும் துர்ஆவிகளை வெளியேற்றும் முனைப்போடு ஆடத்துவங்கினான்.
“ஜஞ்சன் ஜக்கு ஜஞ்சன் ஜக்கு”
கருப்பராயனின் ஆட்டத்தோடு மெல்ல காவடி நகர்ந்து கோவில் திடலை நெருங்கியது.வெகுநேரமாய் தன் குடிகளில் யாரையும் அழைக்காதது பற்றிய திடுக்கிடல் எல்லோருக்குள்ளும் இருந்தது.ராயனோ சொல்லற்ற ஊமைக்குமுறலாய் அனத்தி விட்டு மலையேறுவதற்காக பிரம்பால் தன் முதுகெங்கும் அவ்வப்போது விளாறிக்கொண்டிருந்தான்.கண்களுக்கு எதிரே எதிர்காலம் கண்ணாடிவெளியில் படியும் கரும்புகைபோல் அவனுக்குத் தெரிந்தது.ஆடிவெளியில் தெறித்து செந்நிறத் துளிகள் வழிவதையும் கண்டவன் நிலம் ஊன்றியிருக்கும் பிரம்பின் முனையில் கையூன்றி கைகளுக்குள் தலைபுதைத்து மிருகத்தைப்போல் மூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.தாரை தப்பட்டைகள் அடித்து ஒய்ந்திருந்தன.பூசாரி முன்னால் வந்து கருப்பராயனிடம் குற்றங்குறை இருந்தால் பிள்ளைகளை மன்னித்து அருளவேண்டுமென்று இறைஞ்சி மண்செழிக்க மழைவருமா என்று கேட்டான்.சூழ்ந்திருந்த கனத்த மெளனத்தை துளைத்துக்கொண்டு கருப்பராயனின் ராகம் எழுந்தது.
“மனசெல்லாங் கல்லாகிப் போன காணியில,மழயெதுக்கு மண்ணெதுக்கு,பருவம் பொய்யாப் போகும், காரும் பொய்யாப் போகும்,புல்லையெல்லாம் பொழுது திங்கும்”
குற்றங்குறை எதாவது நடந்திருந்தால் பரிகார பூசை செய்துவிடுவதாகவும் ராயன் மனமிரங்கி நல்வாக்கு அருளவேண்டுமென்றும் பூசாரி மறுபடியும் இறைஞ்சினான்.கருப்பராயனின் பெருமூச்சு சப்தம் விட்டு விட்டுக் கேட்டது.வெகுநேரம் ஹுங்கார சப்தங்களோடும் வினோத ஒலிகளோடும் பிரம்பில் தலையூன்றி நின்றிருந்தவன் மறுபடியும் பாட ஆரம்பித்தான்.
“கலப்பையில் கறையான் ஏறும்
காத்துல நெருப்பெரியும்
மண்ணே வெசமாகும்
நாம் போறேன் வெகுதூரம்
நாளாகும் வருங்காலம்..
காலம் இருட்டா இருக்குது..
தப்பு நிக்குது நரியாட்டம்
தடம் பாத்து நடந்துக்கோ”
பூசாரியின் கையிலிருந்த சாம்பல் நீறை அள்ளி கருப்பராயன் நாலு திசைகளிலும் எறிந்தான்
“மண்ணப் பாத்துக்கங்டா..மண்ணப் பாத்துக்கங்கடா…
வெள்ளாமைய மேட்டுல வையுங்கடா
வெள்ளம்போல காலம் வருது..”
தப்பட்டைகள் உரத்து முழங்க ஆடியவாறே நீண்ட கருப்பராயனின் கைகளில் பூசாரி சூடத்தை கொளுத்த விழுங்கியவன் மண்ணில் தளர்ந்து சரியும்போது மேலே குடங்குடமாய் நீர் சரித்தார்கள்.கலசங்கள் கோவில் வாசலில் இறங்க மெல்ல நகர்ந்து பின்னால் வந்தவன் தெற்கே வரும்போது ஊர் நடமாட்டமற்றிருந்தது.கிழக்கே நடந்தவனின் தோளிலும் பின்ன்ங்கழுத்திலும் சொட்டுச் சொட்டாய் நீர் விழுந்து கொண்டிருந்தது.
தென்னை மரத்தடியில் தலைக்கு துண்டைச் சுருட்டி வைத்து கண்மூடிக் கிடந்தான்.மேலெல்லாம் வலித்தது.சுருண்டு படுத்துக்கொள்பவனுக்கு உடலையும் நெஞ்சையும் குலைக்கும் வினோத கனவுகள்.ஊர்வன,பறப்பன எல்லாம் மனித உடலோடு துருப்பிடித்த இரும்பைக் கீறும் வறண்ட குரல்களில் எதையெதையோ அவன் காதோரத்தில் முனகின.அதன் அர்த்தங்கள் புரியாமல் தவித்தான்.
கருமசியைப் போல் இருளடர்ந்த அன்றைய இரவில் அவன் கண்களை தொலைதூரத்தை வெறிக்கின்றன.அவன் உடல் ஊருக்குள் அவ்விரவில் இறங்கும் அந்நியமான ஒன்றின் இருப்பை உணர்ந்து தவிக்கிறது.எழ நினைத்தவனின் கால்கள் யாரோலோ கட்டப்பட்டது போலிருந்ததன.கதறவேண்டும் போலிருந்தது. ஆனால் எவ்வளவு கத்தியும் நாவு எழும்பவில்லை.அவன் கண்கள் மட்டும் ஊரின் தெற்கே இருக்கும் சுடுகாட்டில் இறங்கும் துர் ஆவிகளின் புகைபோன்ற உருவங்களை கண்டன.ஊருக்கு விடியலைக் கூவும் அந்தச் சேவலின் குரல் நூலால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது.துர் ஆவிகள் நிலத்தின் திசையெங்கும் ஊரின் ஆகாயமெங்கும் தங்களை ஏவி காலத்தின் குணங்களை மடைமாற்றின.சேவலின் கழுத்து அறுக்கப்பட்ட இரவின் விடியலில் ஊர்ச் சேந்துகிணற்றில் வெள்ளைச்சீலை நீரெங்கும் பரவிக்கிடக்க அவள் உடல் மிதந்துகொண்டிருந்தது.
அன்னந்தண்ணியில்லாமல் கட்டிலில் படுத்துக்கொண்டே புகைத்துக்கொண்டிருந்தான். வெயிலறியாது பகலிலும் அப்படியே வாசலில் கிடந்தவனைப் பார்த்துக்கொண்டே மேற்கில் விழுந்து மறைந்தது சூரியன். அன்றிரவு வானில் கலையாத ஒரு மலையைக் கண்டு வான் நோக்கி நீண்ட புகைக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறியவன் பிறகு நிலத்திற்கு திரும்பவேயில்லை.
No comments:
Post a Comment