மேற்கே போகும் பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தவன் உடல் தழுவிய சிலுசிலு காற்றை அனுபவித்தான்.மற்ற நேரமாயிருந்தால் உடல் கசகசப்போடு வியர்வையில் ஊறிக்கொண்டிருக்கும். இரு பக்கங்களிலும் பொட்டல் காடுகள் வறண்டு கிடக்க தூரத்தில் காற்றாடிகள் மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தன. அந்த ஊருக்கு இன்றைக்குத்தான் முதன்முதலாக போகிறான். நாற்பது மைல் சுற்றளவுக்குள்ளேயே பதினேழு வயது வரை சுற்றிக் கொண்டிருக்கிறவனுக்கு வருங்காலத்தில் அங்கேதான் குடியேறவேண்டுமென்று நினைப்பிருக்கிறது.
பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் எச்சில் ஒழுக தூங்கிக் கொண்டிருக்க தன் பேண்ட் ஜோப்பில் இருந்த பணத்தை நாசூக்காக தடவிக்கொண்டான். ஐந்நூறு இருக்கிறது.அது போகவும் வீட்டிற்குத் தெரியாமல் தனியாக சேர்த்து வைத்திருந்த இருநூறையும் செலவு செய்யலாமென்கிற நினைப்பே கிளர்ச்சியூட்டியது. ஊரை நெருங்கும்போது பலமாடி கட்டிடங்களைப் பார்த்தான். ஓட்டு வீடுகளையும் ஒன்றிரண்டு மச்சு வீடுகளையும் மட்டும் பார்த்திருந்தவனுக்கு அந்த பழைய கட்டிடங்கள் பிரம்மாண்டமாக தெரிந்தன.எல்லா பால்கனிகளிலும் துணிகள் காய்ந்துகொண்டிருந்தன.விதவிதமான கார்களும் பைக்குகளும் போய்க்கொண்டிருந்தன.சென்ட்ரல் ஜெயிலை கடக்கையில் லேசாக சாரல் வீசியது. பேருந்து நிலையத்தில் கடைசியாக இறங்கியவன் பெட்டிக்கடையில் கோல்டு பில்டர் சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டான்.வானம் மோடம் போட்டிருந்த பொழுதில் பயமின்றி சிகரெட் குடிக்க ஆனந்தமாய் இருந்தது.
புகைத்து முடித்தவன் பாக்கை மென்றுகொண்டே வெளியே வந்தான்.எதிரிலியே டவுன் பேருந்து நிலையம் தெரிந்தது.பக்கத்திலிருந்த கடைக்குச் சென்று செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லி பேருந்து எண்ணை கேட்டுக்கொண்டான்.ஆவலாக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்துவிட்டு பேண்ட் ஜோபை தடவிப் பார்த்து பணம் பத்திரமாய் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.
வந்து இறங்கிய நிறுத்தத்திற்கு எதிரிலிருந்த தியேட்டர் சுவரில் ஒட்டியிருந்த இங்கிலீஷ் சண்டைப்படத்தின் சுவரொட்டியை உற்றுப்பார்த்தவன் பெட்டிக்கடையில் ஆஸ்பத்திரியின் பேர்சொல்லி வழி கேட்டான். பேருந்து வந்த திசையிலேயே திரும்பி நடந்தவன் புதிதாக கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தின் கீழே கிழக்குப்பக்கமாக திரும்ப ஆஸ்பத்திரி இருநூறடி தூரத்தில் இருந்தது. வாட்ச்மேனிடம் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே வரவேற்பறையில் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த மச்சான் இவனைப் பார்த்துவிட்டுக் கூப்பிட்டான். வரவேற்பறையை ஒட்டியிருந்த படிகளில் முதல் மாடிக்கு ஏறியபோது கடைசிப்படியோரம் வைக்கப்பட்டிருந்த சிறு நாற்காலியில் கறுப்பு நிற போனை பார்த்தான்.
பார்த்ததும் கட்டிலில் உட்கார்ந்திருந்த மாமன் புன்னகைத்தார்.இவனுடைய விசாரிப்புக்கு வெள்ளை பனியனை உயர்த்தி தையல் பிரித்திருந்த இடத்தைக காட்டினார். பையில் துணிகளை திணித்துக்கொண்டிருந்த மச்சான் போகும்போது அவனையும் கீழே கூப்பிட்டான். அப்பா சொல்லி விட்டதை சொன்னபோது அமைதியாக கேட்டுக்கொண்டவன் வாட்ச்மேனிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு வேகமாக நடந்து போனான்.வாட்ச்மேனிடம் கையசைத்துவிட்டு திரும்பி அறைக்கு வந்தான்.
பசித்தது.மாமனிடமும் கேட்டுக்கொண்டான்.தாண்டிப் போகும்போது சிரித்த வாட்ச்மேனிடம் சாப்பிடப் போவதாக சொன்னவன் மேம்பாலத்திற்கு கீழே நடந்தான்.அப்போதுதான் வீசத் தொடங்கிய சாரல் வலுக்கவும் பாலத்திற்கு அடியே ஒதுங்கி வேடிக்கை பார்த்தான். சாரல் தணிந்து மறுபடியும் நடக்கத் துவங்கியபோது பள்ளங்களில் நீர் தேங்கியிருந்தது.பிரதான சாலையில் வாகனங்கள் குறைவாகத்தான் போய்க்கொண்டிருந்தன. சாரல் ஒய்ந்திருந்த வானில் சூரியன் பிரகாசமாய் ஒளிர தார்சாலை மின்னியது.ஊறி நனைந்திருந்த சண்டைப்பட போஸ்டரை பார்த்துவிட்டு அப்படியே ஒரு பர்லாங் தூரம் நடந்தவனுக்கு எதிர்புறத்தில் பிராந்திக்கடையை கண்டவுடன் கிளுகிளுப்பாக இருந்தது.மாமனை நினைத்து தயங்கினாலும் தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டு சாலையை கடந்தவன் வாசலில் நின்று சுற்றிலும் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தான்.
முதல் முறையாய் குடிக்கிறான்.அவனுக்கென்றே ஒரு முழு பியர்.நுரைபொங்க ஊற்றி வைத்துவிட்டு நின்றுகொண்டான்.முதல் மிடறு விழுங்கும்போது லேசாக புளிப்பது போலிருந்தது.வறுகடலை இரண்டை பொறுக்கி மென்று கொண்டே இனியும் தான் சின்னப்பையன் இல்லையென தனக்குள் சொல்லிக்கொண்டான்.பற்றவைத்த சிகரெட் இதுவரை அறிந்திராத வாசனையோடு கிறக்கமாக இருந்ததது. யாருக்கும் தான் உறுத்தலாயில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் இன்னும் நிம்மதியாக இருந்தது.
வெளியே வந்தபோது போதையில் கால் தடுக்கியது.பெட்டிக்கடையினோரம் ஒதுங்கி நிதானப்படுத்திக்கொண்டு பார்க்க வாகனங்கள் வேகமாக போவது போல் தெரிந்தன.திரும்பவும் சாரலுக்கான் அறிகுறியாய் காற்று குளிர்ந்து வீசியது.நடந்தவன் எதிர்பட்ட உயர்தர சைவ உணவகத்திற்குள் நுழைந்தான். கை கழுவிக்கொண்டு அமர்ந்து ஒரு பொங்கல் சொன்னான்.இதுவரை சாப்பிட்டேயிராத வெண்பொங்கல் அவ்வளவு ருசி. வெளியே வந்தவன் ஒரமாக நின்று சிகரெட் பற்ற வைக்கும்போது மாலை செய்தித்தாற்களை பார்த்துக்கொண்டு பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். இவன் எட்டிப் பார்த்துக்கொண்டே கைது பண்ணீட்டாங்களா என்று கேட்டான்.
ஆஸ்பத்திரியை நெருங்குகையில் வயிற்றில் சிறுநீர் கனத்தது.தலை பாரமாகி உடனே படுக்க வேண்டும் போலிருந்தது. மாமன் தூங்கிக்கொண்டிருந்தார்.ஒரமாய் கிடந்த மரபெஞ்சிலிருந்த பச்சை விரிப்பை எடுத்து சத்தமின்றி விரிக்கையில் விழித்த மாமா கட்டிலில் கிடந்த தலையணையை நீட்டினார்.தூங்கி எழுந்தபோது தரைவிரிப்பையும் மீறி குளிர் ஏறியிருந்தது. அறைக்குள் விளக்கு எரிந்துகொண்டிருக்க மாமன் கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.சுவரோர பெஞ்சில் உட்கார்ந்தவனுக்கு சினிமாவுக்கு போகலாம் என்று தோன்றியது. வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது வாட்ச்மேன் இட்லியும் பாலும் மாமனுக்காக கொண்டு வந்தார். தான் வெளியே சாப்பிட்டுக்கொள்வதாக சொல்லிவிட்டான்.இரண்டாம் ஆட்டம் எத்தனை மணிக்கென்று யோசித்துக்கொண்டே வராண்டாவிற்கு வந்து கீழே பார்த்தான்.அமைதியாக ஆஸ்பத்திரி அடங்கியிருந்தது.
மாமனிடம் சொன்னபோது பத்திரமாக போய்விட்டு வரச்சொன்னார்.கீழே வாட்ச்மேனிடம் வழி கேட்டுக்கொண்டான்.குளிராக இருந்தது.ஆட்களற்ற மேம்பாலத்தில் புகைத்தவாறே நகரத்தின் மஞ்சள் விளக்குகளை பார்த்துக்கொண்டு நடக்கையில் சந்தோஷமானான்.தனியாக போவதின் பயமும் படம் ஆரம்பித்துவிடுமோ என்ற அவசரமும் வேகமாக நடக்க வைத்தன.பாலம் முடிந்த இடத்தில் வழி குழம்பிவிட துண்டால் உடலைப் போர்த்தியவாறே பீடி குடித்துக்கொண்டவரிடம் விசாரித்துக்கொண்டான்.அவர் சொன்னதில் குறுக்கு வழியை தேர்ந்து நடந்தவனுக்கு பாதி இருளாய் கிடந்த சந்து பயமூட்டியது. ஓடும் வேகத்தில் நடந்தவன் பிரதான சாலையை அடைந்த பின்னரே நிலையடைந்தான்.
திரையரங்கின் நீளமான வெளிப்படிகளில் வேகமாக ஏறும்போது ஈரமாயிருந்த படிக்கட்டுகள் வழுக்கின.கதவைத் இழுத்து உள்ளே நுழைகையில் வெளியே இருக்கும் குளிரைப்போல் அல்லாமல் வேறொரு குளிர் உடலைத் தழுவியது. படம் ஏற்கனவே துவங்கியிருந்தது.முதல் முறையாக குளிர்சாதன திரையரங்கில் பார்ப்பது சந்தோஷமாக இருந்தது. தாராபுரத்திலும் பால்கனியிலிருந்து படம் பார்த்திருக்கிறான்.இங்கே அதைவிட நன்றாக இருந்தது.இடைவேளையில் ஒன்றுக்கிருந்துவிட்டு ஐஸ்கிரீம் வாங்கிச் சப்பிக்கொண்டே வந்தமர்ந்தான்.
படம் முடியும்போது நடுஜாமம் ஆகியிருந்தது.திரும்பிப் போவதை நினைத்து அதிகமாகவே பயப்பட்டான்.பாலத்தை அடையும் வரை ஒன்றிரண்டு வாகனங்கள் போய்க்கொண்டிருந்ததால் பயமில்லாமல் இருந்தது.மேலே ஏறும்போது குளிரில் நமத்திருந்த சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடந்தான்.புகைத்துக்கொண்டே வேகமாக நடந்ததால் இளைப்பு எடுத்தது.பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டான்.ஊரில் பாங்காடுகளுக்குள் எல்லாம் இராக்களில் பயமில்லாமல் அலைந்துவிட்டு தான் இங்கே இவ்வளவு பயப்படுவது ஆச்சரியமாக இருந்தது. தூரத்தில் ஆஸ்பத்திரி தெரியவும் ஆசுவாசமடைந்து மெதுவாக நடக்கத் துவங்கினான்.பாக்கை மென்றவாறே பாலத்திலிருந்து இறங்கி இருட்டில் சிறுநீர் கழிக்கும்போது காலில் தெறித்த துளிகளை மறுகாலால் தேய்த்துக்கொண்டான்.
ஆஸ்பத்திரியின் பெரிய கதவு சாத்தியிருக்க அதிக சப்தம் வராமல் தட்டினான்.செருமிக்கொண்டே திறந்த வாட்ச்மேனைப் பார்த்து சிரித்தவன் பத்து ரூபாய் தாளை திணித்துவிட்டு நடந்தான்.தாழிடாமல் சாத்தியிருந்த கதவைத் தள்ளி சிறிது நிதானிக்க கண்கள் இருட்டுக்கு பழகின.மாமன் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்.படுக்கும்போது உடம்பு கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் மனம் சந்தோஷமாக இருந்தது.
சுவரையே இருட்டில் உற்றுப்பார்க்க பார்த்த சினிமாவின் காட்சிகள் அதில் ஒடத் துவங்கின. இடைவேளைக்கு முன்னால் வந்த அந்தக் காதல் பாட்டு ரொம்பப் பிடித்திருந்தது.இந்த நேரத்திற்கு அவள் சுருண்டு அழகாய் தூங்கிக்கொண்டிருப்பாள் என்று நினைக்கும்போதே காது நுனியில் சூட்டை உணர்ந்தான். நீலப்பாவடை வெள்ளை தாவணியில் ஸ்கூலுக்கு வரும்போது எவ்வளவு அழகாக இருப்பாளோ அதில் கொஞ்சம் கூட கசங்காமல் சாயந்திரம் போகும்போதும் அப்படியே இருப்பாள். வெகு நேரம் அவள் நினைப்பிலேயே கிடந்து வினோதமான காதற் கற்பனைகளை செய்துகொள்கையில் சந்தோஷத்தில் தூக்கமே வரவேயில்லை.
விழித்தபோது வெயிலடித்துக் கொண்டிருந்தது. பேப்பர் படித்தவாறே இரவு எத்தனை மணிகு வந்தானென்று கேட்ட மாமன் அன்றைக்கு ஹர்த்தால் என்று சொன்னார். பேப்பரை வாங்கிப் பார்த்தவன் எதிர்கட்சிதானே என்றான்.டீக்குடிக்க போகும் போது நேற்றைப்போலவே எல்லா கடைகளும் திறந்திருந்தன.வார இதழ்களும் மாத நாவலும் வாங்கிக்கொண்டவன் தனக்கும் சேர்த்து இட்லி கொண்டு வருமாறு வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு அறைக்கு வந்தான். குளித்தவன் சாப்பிட்டுவிட்டு வார இதழை புரட்டியவாறே தூங்கிப்போனான்.யாரோ கூப்பிடும் சப்தத்தில் எழுந்து மலங்க மலங்க பார்க்க பாத்ரூமில் தண்ணீர் விழும் சப்தம் கேட்டது.போன் வந்திருப்பதாக வாட்ச்மேன் சொல்லவும் சட்டையை மாட்டிக்கொண்டு படிகளில் வேகமாக இறங்கினான். அன்றைக்கு ஊரில் எந்தப் பஸ்சும் ஓடாததால் நாளைக்கு வருவதாக மச்சான் சொன்னான்.
மேலே வந்து மாமனிடம் தகவலைச் சொன்னான்.பின் மதியம் இரண்டுக்குப் பக்கமாக ஆகியிருந்தது.அவ்வளவு நேரம் அசந்து தூங்கியதின் சோம்பலை குளிர்ந்த நீரில் கழுவி புத்துணர்வானான். சாப்பாடு வேண்டாமென்று மாமன் சொல்லிவிட்டார்.இவனுக்கும் பசிக்கவில்லை.வெளியே சென்றவன் எஸ்.டி.டி பூத்திலிருந்து சித்தப்பா வீட்டிற்கு கூப்பிட்டு அப்பாவிடம் தகவல் சொல்லச் சொன்னான். தேனீர் அருந்தியவன் பாலத்தின் குளிர்ந்த நிழலடியில் கிடந்த பெரிய கல்லில் அமர்ந்தவாறே நிதானமாக புகைத்தான். ராத்திரியெல்லாம் அவளை யோசித்துக்கொண்டே தூங்காமல் கிடந்தது நினைவிற்கு வந்தது.அப்படியே வெகு நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
சாயங்காலம் பொழுதைக் கழிப்பது சிரமமாக இருந்தது. மர்ம நாவலை சீக்கிரமே படித்து விட்டவன் வராண்டாவில் நின்று வேடிக்கை பார்க்கையில் டாக்டர் ரவுண்டஸ் வருவது தெரிந்தது. அவர் உள்ளே எட்டிப்பார்த்து மாமாவிடம் விசாரித்துவிட்டு வேகமாக நகர்ந்தார்.ஒவ்வொரு அறையாய் டாக்டர் உள்ளே போய் வந்து கொண்டிருப்பதை எண்ணிக் கொண்டிருந்தான்.வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த போனில் ஒரு அம்மா பேசிக்கொண்டிருந்தாள். உள்ளே வந்து பெஞ்சில் உட்கார்ந்தவன் ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு கட்ட வேண்டுமென்று மாமனிடம் கேட்டான். இவன் படிப்பை பற்றி விசாரித்தவர் சின்னப்பையனாய் ஊரில் வந்து இருந்தபோது செய்த குறும்புகளை சொன்னபோது மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தான். பேச்சின் நடுவே பலமுறை நன்றாக படிக்கச் சொல்லிக்கொண்டேயிருக்க தலையாட்டிக் கொண்டேயிருந்தான்.அன்றைக்கு இரவுச்சாப்பாட்டுக்கு மாமன் தோசை வேண்டுமென்றார்.புகையிலை வாங்கி யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டுவரச் சொன்னார்.
இவன் எண்ணெய் அதிகம் விடச் சொல்லி தோசையும் ஆம்லெட்டும் சாப்பிட்டான்.தோசை பொட்டலம் கட்டிக்கொண்டு மறக்காமல் புகையிலையும் வாங்கிக்கொண்டு திரும்பியபோது அறையில் இட்லிப் பொட்டலம் பிரிக்கப்படாமல் கிடந்தது.வேகவேகமாக தோசையை பிரித்துச் சாப்பிட்ட மாமன் இவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.சாப்பிட்டு முடித்தவர் புகையிலையை கடித்து வாயில் அதக்கிக்கொண்டு படுத்துவிட்டார்.விளக்கை அணைத்துவிட்டு இவனும் படுத்துக்கொண்டான்.வயிறு ஏனோ உப்பசமடைவது போல் உணர்வெழுந்து புளிப்பு ஏப்பம் வர மலங்கழித்து விட்டு வந்தவுடன் சற்றே நிம்மதியாய் உணர்ந்தான்.மாமன் கழிவறையில் புகையிலைச் சாற்றை துப்பிவிட்டு வந்து படுத்தார்.இவனுக்கு வீட்டு ஞாபகம் வந்தது.அப்படியே அவளும் வந்து நினைவில் மேவினாள். நேற்றைப்போலவே இன்றைக்கும் சுகமான கனவுகளை கற்பனை செய்துகொண்டு வெகு நேரம் உறங்காமல் படுத்திருந்தான்.
காலையில் ஒன்பது மணிக்கு மச்சான் திரும்பவும் போன் செய்தான்.இன்னும் பஸ்கள் ஓடாததால் நாளைதான் வரமுடியும் என்றவனிடம் இங்கெல்லாம் பஸ்கள் ஓடும் தகவலைச் சொன்னான்.மாமன் ஒழுங்காக மாத்திரைகள் சாப்பிடுகிறாரா என்று கேட்டவன் வெளியே சுற்றாமல் ஆஸ்பத்திரியிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டு வைத்தான்.மேலே வந்தவுடன் மாமனிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.
வானம் மோடம் போட்டிருந்தது. நிறுத்தத்திற்கு வந்தவன் அந்தப் போஸ்டரை பார்த்தவுடன் கண்களை திருப்ப முடியாமல் தவித்து ஓரமாய் நின்றுகொண்டு திரும்ப வெறித்து பார்த்தான்.அந்தத் தியேட்டரை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறான்.தயக்கமாக இருந்தாலும் இங்கே தன்னை யாருக்கும் தெரியாது என்று துணிந்தான்.விசாரித்துக்கொண்டு வந்து இறங்கிய போது மணி பதினொன்று ஆகியிருந்தது.நல்ல கூட்டம்.சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். திரையில் அசைந்த பிம்பங்களும் ஒலித்த முனகல்களும் அவனை என்னவோ செய்தன. உள்ளாடை ஈரமாகியது போல் உணரவும் உட்கார மனமில்லாமல் எழுந்து வெளியே வந்துவிட்டான்.புகைத்தபோது பதட்டம் கொஞ்சம் அடங்கியதாக தோன்றியது.திரும்பவும் பஸ் பிடித்து வந்தவன் ஆஸ்பத்திரிக்கு போக மனமில்லாமல் உள்ளடங்கியிருந்த பின் தெருக்களில் சுற்ற துவங்கினான். விதவிதமாய்,சின்ன சின்ன தோட்டங்களோடும் பெரிய வாசற்கதவுகளோடும் பங்களாக்கள் அழகாயிருந்தன.
தெருமுனையில் சிறிய பூங்கா இருந்தது. நிழலாய் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவன் தூரத்தில் அவன் வயதொத்த ஒருவனும் இவன் மனக்காதலியை போலொருத்தியும் நெருக்கமாக உட்கார்ந்திருக்க பூங்கா அதிக கூட்டமற்றிருந்தது. கண்களை மூடிக்கொள்ள அந்த ஜோடியைப் போலவே தானும் அவளும் உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து கொண்டான்.மெலிதாக குளிர்காற்று வீச சாரல் வரும்போல் தோன்றியது.எழுந்து மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு நடக்கத் துவங்கினான்.
மச்சான் மறுபடியும் சாயங்காலம் போன் செய்து காலையில் நேரமே கிளம்பி வருவதாக சொன்னான்.இரவு தூக்கமே வரவில்லை.சீக்கிரமாக ஊருக்குப் போகவேண்டுமெனத் தோன்றியது.இரவெல்லாம் துர்க்கனவுகளாய் இருக்க காலையில் களைப்பாக இருந்தது.குளித்துவிட்டு பெஞ்சில் உட்கார்ந்திருக்க மாமன் துணிகளை எல்லாம் மடித்து பையில் வைத்து நடுவில் மாத்திரை பொட்டலத்தை பொதித்து வைத்துக்கொண்டிருந்தார்.ஒன்பது மணிவாக்கில் மச்சான் வந்தான்.மாமனும் அவனும் பேசிக்கொண்டிருக்கையில் இவன் வராண்டாவில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.பணத்தைக் கட்டிவிட்டு மாத்திரை பொட்டலங்களோடு மேலே வந்தவன் கிளம்பச் சொன்னான். பையை எடுத்துக்கொண்டு முன்னால் நடந்தவன் வாட்ச்மேனை பார்த்து தலையசைத்து சிரித்தான்.வாட்ச்மேனை ஓரமாய் அழைத்துப்போய் மச்சான் பணம் கொடுத்தான்.
மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் ஏறும்போது இவன் அவினாசிபாளையம் பிரிவிலேயே இறங்கி ஊருக்குப் போவதாக சொல்லிவிட்டான்.பல்லடம் வரை அசந்து தூங்கிவிட்டவன் விழித்தபோது நகரைத் தாண்டி பேருந்து வந்துகொண்டிருந்தது.வெளியே பொட்டல்காடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவன் பிரிவில் இறங்கும்போது நகரத்தைப்போல் குளுமையாக இல்லாமல் வெயில் உக்கிரமாக இருந்தது.
போன முறை ஊருக்குப் போயிருந்தபோது மாமனின் உடல் நிலை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.வியாழக்கிழமை இரவு அவனைக் கூப்பிட்ட அப்பா மாமன் போய்விடுவார் போலிருக்கிறது என்று உடனடியாக கிளம்பி வரச்சொன்னார்.வேலை இருப்பதால் வெள்ளிக்கிழமை கிளம்பி வருவதாக சொன்னான்.ரயில், பேருந்து எதிலும் டிக்கெட் இருக்கவில்லை.அலுவலகத்திலிருந்து அறைக்கு வந்து சேர பத்து மணியாகிவிட மிகக் களைப்பாய் உணர்ந்தான். நண்பர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை.இரண்டு செட் துணிகளை பையில் திணித்துக்கொண்டு கிளம்பினான்.செயின்ட் ஜான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறையப்பேர் காத்திருந்தார்கள். உட்காருவதற்கு இடமில்லையென்று இரண்டு வண்டிகளை தவிர்த்தவன் பாதி காலியாக வந்த மூன்றாவது வண்டியில் ஏறி எப்போதும் விரும்பும் ஜன்னலோர சீட்டைப் பிடித்தான்.ஏற்கனவே பலமுறை பார்த்திருந்த சினிமா ஓடிக்கொண்டிருக்க கண்களை இறுக்கி மூடியவாறே உறங்க முயற்சித்தான்.திறந்துவிட்டிருந்த ஜன்னலிலிருந்து வீசிய குளிர்காற்று இதமாக இருந்தது.சேலத்தில் அவன் இறங்கியபோது நன்றாக தூங்கியது போலிருந்தாலும் கண்கள் எரிந்தன.
வண்டி மாறி ஊர் சேரும்போது மணி எட்டாகியிருந்தது. நேற்றே ஆஸ்பத்திரிக்கு போன அப்பா இன்னும் வரவில்லையென்றாள் அம்மா.கடும் தூக்கச்சொக்கில் படுத்தவனுக்கு புரியாத கனவுகள் ஏதேதோ வந்தன.பத்து மணி வாக்கில் எழுந்தபோது உடல் கடுமையாக வலித்தது.டவுனிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வடக்குத்திசையில் தள்ளியிருந்த ஆஸ்பத்திரிக்குப் போய் சேரும்போது மணி பனிரெண்டுக்குப் பக்கமாகிவிட்டது. முதல் மாடியின் இடது கோடியிலிருந்த அறைக்குள் நுழையும் போது அப்பா உட்கார்ந்திருந்தார்.மச்சானுடன் அவன் ஊர்க்காரர்கள் வேறு சிலரும் இருந்தார்கள். களைப்பில் புகைந்திருந்த அப்பாவின் வெள்ளைச்சட்டை அழுக்காகியிருந்தது. எலும்புக்கூடாய் உருகியிருந்த மாமனின் உடலில் குளுகோஸ் இறங்கியவாறிருந்ததது.வெகு நாட்கள் கழித்து மச்சானை பார்க்கிறான். அவனுக்குக் காதோரத்தில் நரை கூடியிருந்தது.அக்காவும் குழந்தைகளையும் விசாரித்தவன் வேறு எதுவும் கேட்கவில்லை.அப்பா கிளம்பும்போது ஆஸ்பத்திரியின் வாசல் வரை கூடப்போய் வண்டி சாவியைக் கொடுத்தான்.பணம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டபோது பத்து ரூபாய் இருக்கிறது என்றவனிடம் செலவு எதாவதென்றால் மச்சானை எதிர்பார்க்கவேண்டாமென்றார்.தலையாட்டியவனிடம் சாயந்திரம் ஆறு மணிவாக்கில் கிளம்பி வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டு கிளம்பினார்.திரும்ப அறைக்கு வந்து அமைதியாக ஓரத்தில் உட்கார்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் வந்த தாதி மருந்துச்சீட்டை நீட்டி மருந்து வாங்கிவரச்சொன்னாள்.அவள் நிறமும் உடல் வனப்பும் அவன் மனதில் தனியாக பதிந்தன.மச்சானிடம் இருந்த மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு கீழ்த்தளத்தில் இருந்த மருந்துகடைக்குப் போனான்.பெரும்பாலும் திரவ மருந்துகள்.திரும்ப வரும்போது டிரிப்ஸ் மாற்ற தயாராக இருந்தவளிடம் புன்னகைத்தவாறே நீட்டினான். குளுகோசோடு வேறு மருந்துகளும் கலந்து இறங்க மாமனின் கைகளில் லேசான அசைவு தெரிந்தது.அவர் கைகளை மடிக்காமல் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் போக நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு கைகளை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.கண்கள் எரிந்தன.கொட்டாவி விட்டுக்கொண்டான்.மச்சான் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான்.
ஆண்களும் பெண்களுமாய் மாமனின் சொந்தக்காரர்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.சிலர் இவனை அடையாளம் கண்டுகொண்டு பேசினார்கள்.சிலரை அடையாளம் தெரியாவிட்டாலும் மையமாக பேசிவைத்தான்.மச்சான் இவனைப்போய் சாப்பிட்டுவிட்டு வரும்படி சொன்னான்.பசியில்லையென்றவன் டீ மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவதாய் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த டீக்கடையில் டீ சொல்லிவிட்டு கிங்ஸ் சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான்.தாதியின் அழகிய முகமும் உடலும் நினைவில் வந்தன.முடிந்தால் ஒரிரு வார்த்தகளாவது பேசிவிட வேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டது.
திரும்ப மேலே போனபோது வாசலில் நின்றுகொண்டிருந்த மச்சான் ஆஸ்பத்திரிக்கு பணம் கட்ட வேண்டுமென்றான்.பர்ஸிலிருந்து மூவாயிரம் எடுத்துக் கொடுத்தான்.தான் அப்படியே போய் சாப்பிட்டுவிட்டு வருவதாகவும் அவசரமென்றால் செல்லுக்கு கூப்பிடச் சொன்னான்.இப்போது அவன் மட்டும் மாமனோடு தனியாக இருந்தான்.வெகு களைப்பாக இருக்க வீட்டிற்கு போய் தூங்க வேண்டும் போலிருந்தது. மச்சான் வந்தவுடன் சொல்லிவிட்டுக் கிளம்பவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.சிறிது நேரத்தில் தாதி மறுபடியும் வந்து பரிசோதித்தாள்.அவள் உடலிலிருந்து மருந்துகளின் வினோத வாசனையையும் மீறி சுகந்தம் கமழ்ந்தது.சகஜமான அவள் உரையாடலில் இருந்த குழந்தமை நிரம்பப் பிடித்திருந்தது. போகும்போது குழாய் அசையாமல் இருக்கவேண்டுமென்று நினைவூட்டிவிட்டுப் போனாள்.மாமனின் கையை அசையாமல் பிடித்துக்கொண்டே உட்கார்ந்திருப்ப்பது ரொம்ப சிரமமாக இருந்தது.போய் வெகு நேரம் ஆகியும் மச்சான் இன்னும் வரவில்லை.கொட்டாவிக்கு மேல் கொட்டாவியாய் வந்தது.சிறிது நேரத்தில் மாமனை விட சற்றே வயது கூடியவர் மெதுவாக உள்ளே வந்தார்.அவரை ஊரில் சில முறை பார்த்திருக்கிறான்.சுவரோரம் கிடந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டு மாமனையே பார்த்துக்கொண்டிருந்தவர் பின்னர் இவன் தொழில் பற்றி விசாரிக்கத் துவங்கினார்.மச்சானின் செல்லுக்கு இரண்டு முறை கூப்பிட்டும் அவன் எடுக்கவில்லை.எழுந்து போய் ஜன்னலோரம் நின்று வேடிக்கை பார்த்தான்.ஆஸ்பத்திரிக்கு அந்தப்பக்கம் இருந்த தோட்டத்தில் தென்னைக்கு சொட்டு நீர் பாய்ந்து கொண்டிருந்தது.
சிவந்த கண்களோடு ஐந்து மணியளவில் வந்த மச்சானிடம் கிளம்புவதாக சொன்னான்.மாமன் இன்னும் அதே போல் கிடந்தார்.அவனை வற்புறுத்தி இருக்கச் சொன்ன மச்சானிடம் நேற்று தூக்கமேயில்லை என்றான்.அவனோ ஒன்பது மணிக்கு மேல் கிளம்பிப் போகலாமென்றான்.அவன் மீது எரிச்சல் பட்டுக்கொண்டே வெளியே வந்தவன் டீக்கடையில் தேங்காய் பன் சாப்பிட்டு டீ குடித்தான்.சிகரெட் புகைக்கும்போது மச்சானிடம் இருந்து எப்படி நழுவி வீட்டிற்கு போவது என்று யோசித்தான். மச்சான் இரவு நேரத்தில் ஆஸ்பத்திரியில் யாரையாவது இருக்க வைத்துவிட்டு போய்விடுவானென்று கிளம்பும்போது அப்பா சொல்லிவிட்டுத்தான் போயிருந்தார்.களைப்பாக இல்லாமலிருந்தால் தங்குவது பற்றி பிரச்சனையில்லை. இரவில் மாமனுக்கு மோசமாகிவிட்டதென்றால் பெரிய சிரமம் என்று தோன்றியது. அறைக்குள் நுழையும்போது இரண்டு தாதிகள் குழாய்களை பிடித்துக்கொண்டிருக்க மச்சானும் பணியாளனும் மாமனைத் தூக்கி ஸ்ட்ரெட்சரில் வைத்துக்கொண்டிருந்தனர்.புரியாமல் பார்க்க இரவு நிலைமை மோசமானால் எளிதில் கவனித்துக்கொள்வதற்காக கீழ்த்தளத்திற்கு மாற்றுவதாக சொன்னான்.துணிகள் கிடந்த பையையும் காபி பிளாஸ்க்கையும் தூக்கிக்கொண்டு இவன் நடந்தான்.வெளியே இருள் மெல்ல கவிந்துகொண்டிருந்தது.
வராண்டாவின் மூலையில் இருந்த அந்த அறையே நோய்மையை கூட்டும் போல் இருந்தது.கழிவறையை திறந்து பார்த்தான்.தரையும் சுவர்களின் அடிப்புறங்களும் கறுப்பாக கறை படிந்திருக்க சிறிய இரும்புவாளி கிடந்தது.அறையின் சுவரோரம் ஒரு ஆள் படுக்குமளவிற்கு நீளமான மரப்பெஞ்சு கிடந்தது.கொசுக்கள் நிறைய இருந்தன.ஜன்னலை இறுகச்சாத்தியவன் மச்சானிடம் வேறு ரூம் இல்லையா என்று கேட்டதற்கு கீழ்த்தளத்தில் காலியாக இருப்பது இந்த ஒரே அறைதான் என்றாள் தாதி.மாமன் எந்த அசைவுமின்றி கிடந்தார்.
பஞ்சு,குழாய்கள் கத்தி போன்றவை வைக்கப்பட்டிருந்த ட்ரேவோடு உள்ளே வந்த இன்னொரு பணியாளன் வெளியே காத்திருக்கச் சொன்னான்.இவன் புரியாமல் மச்சானைப் பார்க்க சிறுநீர் கழிப்பதற்கு குழாய் பொருத்துவதாக சொன்னான்.இவன் வராண்டாவின் பெரிய சுவரில் சாய்ந்து நிற்கும்போது ஆஸ்பத்திரியின் சூழல் தாங்கமுடியா கசப்பைக் கொடுத்தது.வீட்டுக்குப் போகவேண்டும் என்ற வெறி ஒரு கணம் எழுந்தது.மங்கலாக அவ்வொரு அறையிலும் விளக்குகள் எரியத்துவங்க ஏகப்பட்ட கொசுக்கள் உடலெங்கும் மொய்த்தன.கொசுக் கடித்த கடிவாய் எல்லாம் இவன் உடலில் பெரிதாக தடித்துக்கொண்டன.மச்சான் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான்.
கட்சிக் கரைவேட்டி கட்டிய அவர் வரும்போதே இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர் மச்சானின் தோள் மேல் கைபோட்டவாறே விசாரிக்க இரவு தாங்குவதே சிரமம் என்று மச்சான் சொல்வது தெளிவாகவே கேட்டது.பணியாளன் வெளியே போனான்.கரைவேட்டிக்காரர் உள்ளே போய் மாமனையே பார்த்துக்கொண்டிருந்தார்.பணியாளன் மாமனுக்கு போர்வையை போர்த்தி விட்டுப் போயிருந்தான்.அவர் மச்சானோடு ஏதோ பேசிக்கொண்டிருக்க இவன் வெளியே நின்று கொண்டான்.போகும்போது இவனைப் பார்த்து தலையசைத்துவிட்டுப் போனவரின் பின்னால் மச்சான் போக உள்ளே வந்து பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு மாமனையே பார்த்தான்.அப்போது தாதியும் பணியாளனும் உள்ளே வந்தார்கள்.தாதி அந்தப் பவுடர் புட்டியையும் சில மருந்துக்குப்பிகளையும் ஓரத்திலிருந்த சிறிய நாற்காலியில் வைத்துவிட்டு அந்தப் பவுடரை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுடு நீரில்கலந்து கொடுக்கும்படி சொன்னாள்.அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மச்சான் உள்ளே வர அவனிடமும் திருப்பி அதையே சொன்னாள். மாமனின் கைகளிலிருந்து குளுக்கோஸ் குழாயை பிரித்து எடுத்துவிட பணியாளன் ஸ்டாண்டை தள்ளிக்கொண்டு போனான்.
மச்சானிடம் கிளம்புவதாக சொல்ல அவன் இருக்க வற்புறுத்தினான்.தான் ஒருவன் மட்டுமே சிரமப்படுவதாக புலம்பினான்.இரண்டு நாளாய் அப்பா ஆஸ்பத்திரிலியே கிடந்தது அவனுக்கு ஞாபகமில்லை போல என்று நினைத்துக்கொண்டான்.கொசுக்கடி மற்றும் துர்நாற்றம் வீசினாலும் களைப்பாக இருப்பதால் தூங்கவிடமுடியும் என்று ஒருவாறாக ஊகித்தவன் இரவு ஆஸ்பத்திரியில் இருக்க முடிவு செய்தான்.பசித்தது.மச்சானிடம் சொல்ல அவன் ப்ளாஸ்கையும் எடுத்துக்கொடுத்தான்.
ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தவன் மச்சானின் வண்டியை எடுத்துக்கொண்டு டவுனுக்குள் வந்தான்.உயர்தர சைவ உணவகத்தில் சப்பாத்தி பெரிதாக இருந்தது. நல்ல பசியாக இருந்ததால் ஒரு நெய் தோசையும் உண்டு காபி குடித்தவன் மறக்காமல் சுடுநீர் வாங்கிக்கொண்டான்.வெளியே இருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டிலும் அரை பாக்கெட் சிகரெட்டும் வாங்கிக்கொண்டான்.ப்ளாஸ்கையும் தண்ணீர் பாட்டிலையும் வண்டியில் சொருகிவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்தவாறே அப்பாவை கூப்பிட்டு தகவல் சொன்னான்.அவருக்கு அவன் ஆஸ்பத்திரியில் இருப்பதில் விருப்பமேயில்லை.போனை அணைத்துவிட்டு மறுபடியும் ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான்.
திரும்ப ஆஸ்பத்திரிக்கு வரும்போது மச்சான் மட்டும் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.இவன் ப்ளாஸ்கை எடுத்து நீட்ட பவுடரை கரைத்துவாறே மாமனிடம் போனான். கண்கள் மூடிக்கிடந்தவரின் வறண்ட உதடுகளை பிரித்து கரைசலை ஸ்பூனில் எடுத்துச் சரித்தான்.பாதி கடைவாயோரம் வழிந்தது.பாத்ரூமில் கையை கழுவிக்கொண்ட மச்சான் தனக்கு அவசர வேலை இருப்பதாககவும் போய்விட்டு பத்து மணி வாக்கில் வந்து விடுவதாகவும் அவசரமென்றால் செல்லுக்கு கூப்பிடும்படியும் சொன்னான்.அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மாமன் கமறி இருமும் சப்தம் கேட்டது. மஞ்சளாய் வழிந்திருந்த கோலையை கட்டிலோரம் கிடந்த துண்டை எடுத்து இவன் துடைத்துவிட்டான்.மச்சான் போய்விட்டான்.மாமனின் உடலில் சிறிது அசைவு தெரிய பெஞ்சை இழுத்துப் போட்டுக்கொண்டு அருகில் போய் உட்கார்ந்து கொண்டான்.மாமனின் வலது கால் மெல்ல உயர்ந்து இடது காலை தேய்த்தது.அவர் உடலின் அசைவு பயமூட்டியது.அவர் திரும்ப திரும்ப கால்களை தேய்த்துக்கொளகையில்தான் அவருக்கு சிறு நீர் குழாய் உறுத்துவது இவனுக்கு பிடிபட்டது.
உட்கார்ந்திருந்தவாறே கண்ணசந்துவிட்டவனுக்கு கொசு கடித்ததில் விழித்துக்கொண்டான்.எழுந்து அறைவாசலுக்கு வந்தவன் சுற்று வராண்டாக்களின் மையத்தில் இருந்த பெரிய ஊசி இலைகள் கொண்ட மரத்தையே வெறித்தான்.அந்த மரம் முதல் மாடியை தாண்டியும் உயரமாய் வளர்ந்திருந்தது.ஒரிரு அறைகளில் விளக்கு எரிந்து கொண்டிருக்க ஆஸ்பத்திரி அமைதியாக இருந்தது.அறைக்கதவை சாத்திவிட்டு உள்ளே திரும்பியவன் மாமன் புரண்டு கட்டிலின் முனையில் சாய்ந்துகொண்டிருப்பது கண்டு வேகமாக போய் பிடித்தவன் மெல்ல அவரை சுவரொட்டியிருந்த கட்டிலின் மறுமுனைக்கு தூக்கி வைத்தான்.அந்த உடல் எடையற்று பொங்கு போலிருந்தது. தூக்கும்போது போர்வையும் நைந்த அவரின் வெள்ளை வேட்டியும் விலகி சிவப்பு நிற குழாய்க்குள் சொருகப்பட்டிருந்த அவரது குறி தெரிந்தது.அங்கே தோல் சில இடங்களில் வெள்ளைப்பட்டிருந்தது. வேட்டியை இழுத்து விட்டவன் போர்வையை சரியாய் போர்த்திவிட்டான்.
கொட்டாவி விடாமல் வந்துகொண்டிருக்க செல்லை எடுத்து மணி பார்க்க பத்துக்கு பக்கமாக ஆகியிருந்தது.மச்சானைக் கூப்பிட்டான். அவன் எடுக்காததால் எரிச்சலோடு செல்போனை பெஞ்சில் வைத்துவிட்டு மாமனின் வாயில் வழிந்திருந்த கோலையை துடைத்துவிட்டான். கடையில் சாப்பிட்டது நெஞ்சில் எதிர்த்துக் கொண்டு வர தண்ணீர் குடித்துவிட்டு பவுடர் கலக்கியிருந்த டம்ளரைப் பார்த்தான்.அது லேசாக காய்ந்து கிடந்ததது.பாட்டிலிலிருந்து நீர் ஊற்றி அலசி கழிவறைக்குள் வீசிவிட்டு கொஞ்சமாய் பவுடர் கலந்து இரண்டு ஸ்பூன் மாமனுக்கு புகட்டினான்.புகட்ட புகட்ட அது கோலையோடு சேர்ந்து வழிந்தது.முன்பு துடைத்திருந்த இடம் கையில் படாதவாறு கவனமாய் துண்டை எடுத்து மறுபடியும் துடைத்துவிட்டான்.மச்சானுக்கு கூப்பிட இந்த முறையும் அவன் எடுக்கவில்லை.கட்டிலுக்கு ஓரடி இடைவெளியில் பெஞ்சை இழுத்துப் போட்டு ஒரு கையை கட்டிலின் மீது வைத்துக்கொண்டு படுத்தான்.
கண்கள் மூடியவனுக்கு தாதியின் உடல் நினைவுக்கு வந்தது.அதன் வனப்பும் நிறமும் அவனை நோகடித்தன.அவள் உடலின் வாசனையையும் நினைவில் வைத்திருந்தான்.உடல் சூடேறி முறுக்கிக்கொள்ள இந்தப்பக்கம் திரும்பி மாமனின் முகத்தைப் பார்க்க குற்றவுணர்வாயிருந்தது.முகத்தை திருப்பியவன் கண்களை மூடிக்கொண்டு தாதியுடன் கனவு மைதுனம் செய்யத் துவங்கினான்.உடல் வியர்த்து புழுக்கமாக இருக்க எழுந்து அறைக்கு வெளியே வந்து நின்றபோதுதான் குளிர் உறைத்தது.அறையின் கதவை சாத்திவிட்டு திரும்பும்போது நீக்கிக்கிடந்த கழிவறை அசூயை ஊட்ட அதன் தகரக் கதவை இழுத்துச் சாத்தினான்.
உட்கார்ந்தவன் மங்கிய வெளிச்சத்தில் வெளிறியிருந்த அறையின் சுவர்களையே பார்த்தான்.அறை மூலைகளில் உயரத்தில் சிறிது சிறிதாய் நூலாம்படைகள் தொங்கிக்கொண்டிருந்தன.கண்கள் எரிந்தன.காய்ச்சல் வரும்போல் தோன்றியது.எதையோ நினைத்துக்கொண்டிருந்தவன் தூக்கக் கலக்கத்தில் தலை தொங்க அப்படியே பெஞ்ச்சில் சாய்ந்து கொண்டான்.திடீரென்று விழித்தவன் பதட்டத்தோடு எழுந்து கட்டிலைப் பார்த்தான். நல்லவேளையாக மாமன் ஓரத்தில் வராமல் கிடந்தார்.நெடு நேரம் தூங்கிவிட்டது போல் தோன்ற மணி பார்த்தான்.இருபது நிமிஷங்கள்தான் ஆகியிருந்தது. இந்த முறை வெறியோடு திரும்பவும் செல்போனை எடுத்து மச்சானைக் கூப்பிட்டான்.எந்தப் பதிலுமில்லை.வெறுப்போடு திரும்பி மாமனைப் பார்த்தான்.
இரண்டு கைகளாலும் தலையை தாங்கிக்கொண்டான்.சனி இரவுகள் நகரத்தில் எவ்வளவு இனிமையாய் கழியும்? தன் வாழ்க்கையில் இன்று மிக மோசமான நாள் என நினைத்துக்கொண்டான்.இந்தக் கிழவன் செத்திருந்தால் குறைந்தபட்சம் இந்த அறையிலிருந்தாவது விடுதலை கிடைத்திருக்கும் என்று ஒரு கணம் தோன்ற மறுகணம் தன் நினைப்பிற்காக தன்னையே நொந்துகொண்டான்.கண்களை மூடி வலுக்கட்டாயமாக தாதியை நினைத்துக்கொண்டான்.உடலுக்குள் காமம் அலை அலையாய் இவ்வளவு மூர்க்கமாக அது இன்றைக்கு வீசுவது ஏனென்று அவனுக்குப் புரியவில்லை.வினோதமான சப்தத்துடன் மாமன் இருமுவது கேட்டு கண் திறந்து பார்த்தான்.கோலை வழிந்திருந்தது.துடைத்துக்கொண்டே அவரைப் பார்த்தான்.அவர் உடல் மெலிதாக நடுங்குவது கண்டு பயமாக இருந்தது.அவர் தலையின் அடியில் கைகொடுத்து மெல்ல நெஞ்சை தடவி விட்டான்.விடாமல் கோலை வந்துகொண்டிருக்க வேகமாக கதவை திறந்துகொண்டு வரவேற்பறை பக்கம் ஓடினான்.யாரையுமே காணவில்லை.எல்லா பக்கமும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.பதட்டத்தோடு மீண்டும் அறைக்கு வந்தான்.டம்ளரில் இன்னும் கொஞ்சம் பவுடர் கலந்து இரண்டொரு ஸ்பூன் புகட்டினான்.இந்தமுறை கொஞ்சம் சிரமமின்றி உள்ளிறங்குவது போல் தோன்றியது.எலும்புகள் துருத்திக்கொண்டிருந்த அவர் நெஞ்சை மீண்டும் தடவி விட்டான்.அவர் தன்னிச்சையாக கால்களை தேய்த்துக்கொண்டார்.எழுந்தவன் அறைக்குள் மாமனை பார்த்துக்கொண்டே உலவத் துவங்கினான்.
தனக்கும் இப்படியொரு நாள் இருக்குமோ என்ற பயம் தோன்றியது.தன் கண்முன்னால் மாமன் செத்துவிடக்கூடாது என்று இயற்கையை வேண்டிக்கொண்டான்.சிகரெட் பிடிக்க வேண்டும்போல் இருந்தது.மணி பார்த்தான் ஒன்றரை ஆகியிருந்தது. இனி எப்படியும் காலையில்தான் மச்சான் வருவான் என்று உறுதியாக தோன்றியது. மாமன் இப்போது முன்பைவிட டியூபின் உறுத்தலில் தவித்துக்கொண்டிப்பது தெரிந்தது.அவரைத் தனியாக விட்டுவிட்டு சிகரெட் பிடிக்க போவதற்கு பயமாக இருந்தது.எங்காவது கட்டிலிலிருந்து விழுந்து விட்டால் தன்னால் ஆயுளுக்கும் அந்த குற்ற உணர்வை தாங்க முடியாது என்று தோன்றியது.ஆனால் சிகரெட் பிடித்தே ஆகவேண்டுமென்ற வெறி மூண்டது.உள்ளேயே புகைக்கவும் தயக்கமாக இருந்தது.சில நிமிடங்கள் யேசித்தவன் மாமனை அள்ளி சுவரோர கட்டில் முனையில் கிடத்திவிட்டு இந்தப்பக்கம் ஒரு தலையணையை வைத்துவிட்டு வேகமாக வராண்டவில் நடந்தான்.
குளிர் ஈரம் கலந்த காற்று தேகத்தை இதமாகத் தழுவியது.வரவேற்பறைய கடந்தவன் காம்பவுண்ட சுவரைத் தாண்டி நின்றுகொண்டு வேகமாக சிகரெட்டை பற்ற வைத்தான்.பதட்டத்தில் முதலிரண்டு குச்சிகள் அணைந்தன.மாமன் கீழே விழுந்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட்டை விடாமல் இழுத்து இழுத்து ஊதினான். நெஞ்சு எரிந்தது. சிகரெட்டை அவசரமாக கீழே போட்டு மிதித்துவிட்டு ஓடும் வேகத்தில் இருள் படர்ந்திருந்த வராண்டாவில் நடந்தான். நெஞ்சு அடைப்பது போலிருந்தது.பதட்டத்தோடு கதவைத் திறந்தவன் மாமன் அசைந்து கொண்டு கிடப்பதைப் பார்த்ததும் நிம்மதியடைந்தான்.தலையணையை எடுத்து சரியாக வைத்துவிட்டு பெஞ்சில் உட்கார்ந்தான்.சிறிது நேரத்தில் கையில் ஊசி குத்தியது போலிருக்க பெரிய கொசுவொன்று தோலில் ஓட்டை போட்டு ரத்தம் உறிஞ்சிக்கொண்டிருந்தது.எரிச்சலோடு தட்ட கடிவாயெங்கும் ரத்தம் படர்ந்தது.மாமன் இன்னும் பேரவஸ்தையில் கால்களை தேய்த்துக்கொண்டிருந்தார்.ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து சிறுநீருக்காய் சொருகியிருந்த குழாயை பிரித்து விட்டு கட்டிலின் அடியில் போடும்போதுதான் குழாயின் மறுமுனை சொருகப்பட்டிருந்த பாலீத்தீன் பை ஈரமே படாமல் காலியாகவே இருப்பதை கவனித்தான். கை கழுவிக்கொண்டு மணி பார்த்தான்.இரண்டு ஆகியிருந்தது.மறுபடியும் கொஞ்சமாய் பவுடர் கலந்தவன் மெல்லமாய் புகட்டினான்.இந்த முறை நான்கைந்து ஸ்பூன்கள் இறங்கின.
குழாயின் உறுத்தல் இல்லாததால் மாமன் அசையாமல் படுத்திருந்தார்.ஆனால் சிறிது நேரத்தில் மெலிதாக அவர் இருமத்துவங்க வாயிலிருந்து கோலை வழிய வழிய துடைத்துக்கொண்டேயிருந்தான்.இருமல் ஒய்ந்த கொஞ்ச நேரத்தில் மாமனின் கண்கள் திறந்து மேற்சுவரையே வெறித்தன.பதட்டத்தோடு எழுந்து அவரைக் கூப்பிட்டான்.மெல்ல நெஞ்சை தடவிவிட்டான்.மாமனின் இமைகள் தாழ்ந்து இவனை வெறித்தன.அவர் கண்களிலிருந்து இரு நீர்க்கோடுகள் வழிந்தன.இவனுக்கு தொண்டை அடைத்தது. முகத்தை திருப்பிக்கொண்டவனுக்கு நடப்பதையெல்லாம் பார்க்கும் போது அவர் உயிர் போய்விடும் என்றே தோன்றியது.துண்டின் ஈரம் படாத இடத்தில் அவர் கண்களை துடைத்துவிட்டவன் ப்ளாஸ்கிலிருந்து வென்னீர் மட்டும் எடுத்து இரண்டு மூன்று ஸ்பூன்கள் புகட்டினான்.கோலை வருவது கொஞ்சம் அடங்கியிருக்க மாமன் தளர்வாய் கண்களை மூடிக்கொண்டார்.வேட்டியை சரியாய் இழுத்துவிட்டு போர்வையை நன்றாக போர்த்திவிட்டான்.
அவனுக்கு பதட்டங்கள் அடங்கத் துவங்கின.கண்கள் எரிந்து உடல் களைப்பாக இருந்தாலும் சிறிய துறவமைதி நெஞ்சில் படரத் துவங்கியது.மணி பார்த்தான்.மூன்றாகியிருந்தது. சம்மணம் போட்டு மரப்பெஞ்சில் அமர்ந்துகொண்டான்.மாமன் அவ்வப்போது கண்கள் விழிப்பதும் மூடுவதுமாக இருந்தார்.
மணி ஐந்தாகியிருக்கும்போது வந்த மச்சானிடம் இவன் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.மாமன் கண்விழித்ததைச் சொல்லிவிட்டு கழிவறைக்குள் சென்று முகம் கழுவிக்கொண்டான்.கிளம்புவதாக சொன்னபோது பஸ் ஸடாண்ட் வரை வண்டியில் கொண்டு வந்துவிடுவதாக சொன்னான்.மறுத்தவன் அவனை மாமனின் பக்கத்தில் இருக்கச் சொன்னான்.வெளியே வந்தவன் மனதில் லகுவை உணர்ந்தவாறே தெற்கே பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினான்.கொஞ்ச தூரம் போனவுடன் பால்கேனோடு வந்த டிவிஎஸ்காரரிடம் பஸ் ஸடாண்டில் விடச்சொல்லி ஏறிக்கொண்டான்.ஒரு டீ சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறியவன் அவினாசிபாளையம் பிரிவில் இறங்கும்போது இன்னும் இருள் விலகாமல் இருந்தது.பதினான்கு வருடங்களுக்கு முன் மாமனோடு ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு ஒரு பின்மதியத்தில் அங்கே வந்து இறங்கியது நினைவுக்கு வந்தது. அப்போது வெயில் உக்கிரமாக எரிந்துகொண்டிருந்தது இந்தப் பனிக்குளிரில் நினைவுக்கு வந்தது.ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு ஊருக்குப் போகும் பேருந்துக்காக காத்திருக்கத் துவங்கினான்.
No comments:
Post a Comment