முதன்முதலில் நான் வாசித்த அசதாவின் படைப்பு பல ஆண்டுகளுக்கு முன் அவர் மொழிபெயர்த்து புது எழுத்து இணைப்பாக வெளிவந்திருந்த காப்ரியல் கார்சியா மார்க்குவெஸின் முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் (குறு)நாவலாகும். ஒரே அமர்வில் வாசித்து முடிக்குமளவிற்கு அந்த மொழிபெயர்ப்பு சரளமானதாக இருந்தது. அவருடைய சொந்த ஆக்கங்களான வார்த்தைப்பாடு மற்றும் பிஷப்புகளின் ராணி ஆகியவற்றை வாசிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஒரிரு இதழ்களுக்கு முந்தைய கல்குதிரையில் வெளியான அவருடைய இசைக்காத மீன்களின் அக்கார்டியன் சிறுகதை வெகுநாட்களுக்கு நினைவில் நிற்கக்கூடிய கதை. தற்போது நாதன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அவருடைய மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பான நீல நாயின் கண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கதைகளாலும் செம்மையான மொழியாக்கத்தாலும் மிக முக்கியமான மொழியாக்கச் சிறுகதைத் தொகுதியாக வெளிவந்திருக்கிறது.
முழுமையை விரும்பும் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு நுணுக்கமான கவனத்தைக் கோரும் மொழியாக்கம் நிச்சயம் சவாலானதே. ஒவ்வொரு நிலமும் அதன் மொழியும் அச்சமூகத்தின் வாழ்வியலால், கலாச்சாரத்தால், அதன் வரலாற்றுப் பின்புலங்களால் கட்டுமானம் செய்யப்பட்ட தனித்துவ திரள்கள் என்றால் மொழியாக்கக் கலைஞன் இத்திரள்களுக்கு இடையேயான இணைப்பை இடறலற்ற வகையில் நிர்மாணிக்க வேண்டியிருக்கிறது. வாசகனின் நினைவுத்தொகுப்பு மூலமொழியால் கட்டமைக்கப்படாத நிலையில் இயல்பாகவே மொழியாக்கங்களில் கூடிவரும் ஒருவித அந்நியத்தன்மையை குறைக்கும் பொறுப்பு மொழிபெயர்ப்பாளனிடமே இருக்கிறது. நிற்க… பல வருடங்களுக்கு முன்னால் kicked the bucket என்பதை ”அவன் பக்கெட்டை எட்டி உதைத்தான்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்படும் நகைச்சுவை இவ்விடத்தில் நினைவிற்கு வருகிறது. இது போன்று கவனக்குறைவாலும் அறியாமையாலும் நிகழும் பிழைகளைத் தவிர்க்கவேண்டியது இலக்கிய மொழிபெயர்ப்பாளனின் மிக முக்கியக் கடமை.
தமிழில் இலக்கிய மொழியாக்க முயற்சிகள் குறித்து இணையத்தில் தேடியபோது முருகேசபாண்டியனின் மொழிபெயர்ப்பு முறைகளும் தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு முயற்சிகளும் என்னும் பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை மொழியாக்க முயற்சிகள் குறித்த ஒரு அடிப்படைச் சித்திரத்தை நமக்களிக்கின்றன. ஆனால் சிற்றிதழ் இயக்கம் சார்ந்து நடைபெற்ற மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றிய விரிவான பதிவு ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
அசதாவின் இந்தத் தொகுதியில் ஒன்பது மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் இரண்டு நாவல் பகுதி மொழிபெயர்ப்புகளும் அடங்கியுள்ளன. பெரும்பாலும் லத்தீன் அமெரிக்காவையும் வட அமெரிக்காவையும் நிலவெளியாகக் கொண்ட கதைகள். முதல் இரு கதைகளான ஜார்ஜ் சம்னர் ஆல்பியின் அடுத்து நீங்கள் கேட்கவிருப்பது மற்றும் ஜீவாங் கிமரிஸ் ரோஸாவின் ஒரு இளைஞன் ,ஒளிர்பவனாய்,வெண்ணிறமாய் ஆகியவற்றில் ஒரு பொது அம்சம் உள்ளது. அது மக்களின் வழமையான வாழ்வில் நிகழும் ஒரு குறுக்கீடும் அந்தக் குறுக்கீட்டால் ஒழுங்கும் நலமும் பெறும் மக்களின் வாழ்வும். ஆல்பியின் கதையில் கடவுளும் ரோஸாவின் கதையில் அதிதூதன் என்று சொல்லத்தக்க வகையில் ஒரு இளைஞனும் அக்குறுக்கீடுகளாக வருகிறார்கள். ஆல்பியின் கதை சற்றே பகடி இழையோடும் வகையிலும் ரோஸாவின் கதை தீவிரமான தொனியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுளின் வருகையும் அவரது அற்புதங்களும் உலக அழிவுக்கானதாய் மட்டும் இருக்க வேண்டியதில்லை, அது மக்களின் வாழ்வை ஒழுங்குபடுத்துவதற்காகவும் இருக்கலாம் என்பதை முக்கியப்படுத்தும் ஆல்பியின் கதையில் உள்ள ஒற்றை உலகிற்கு எதிரான தன்மை அவதானிக்கப்பட வேண்டியது. வானொலியில் வெவ்வேறு பிராந்திய மொழிகளில் கடவுள் பேசுவதும், ரஷ்யாவின் ஆயுதங்களை அழித்துவிட்டு அங்கே அட்டையில் ”அமைதி ரொட்டி மற்றும் நிலம்” என்ற லெனினின் வாசகத்தை எழுதி வைப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதன் வழியே நமக்கு வெவ்வேறு வகையான இனக்குழுக்களின் கலாச்சார அடையாளம் முக்கியத்துவமானதாக சுட்டப்படுகிறது.
வில்லியம் ஃபாக்னரின் எமிலிக்காக ஒரு ரோஜா, ஜேம்ஸ் தர்பரின் வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை டிம் ஒ பிரையனின் அவர்கள் சுமந்தவை ஆகிய மூன்று கதையும் வட அமெரிக்காவை நிலவெளியாகக் கொண்டவை. காலமாற்றம் நிகழ்ந்தபின்னும் இன்னும் கைவிடாத பூர்சுவாக்களின் மேட்டிமைத்தனம் கொண்டவளாக காட்சிப்படுத்தப்படும் எமிலியின் தனிமை வாழ்க்கை பூடகமான வகையில் விவரிக்கப்பட்டு தன் காதலனைக் கொன்று அவனோடு உறங்கும் பழக்கம் கொண்டவளாக இறுதியில் காட்சிப்படுத்தப்படும் போது இதை ஒரு காதல் கதை மட்டும் என்று மட்டும் சொல்லிவிட முடிவதில்லை.நெக்ரோபீலியா எனப்படும் பிணங்களின் மீதான பாலுணர்ச்சியைப் பற்றியும் பேசுகிறது இக்கதை. தன்னைப் புறக்கணிக்காத அல்லது தன்னிடம் எதிர்ப்பு தெரிவிக்காத துணையைக் கைகொள்ளும் உளவியல் வேட்கையையே நெக்ரோபீலியாவிற்கான முக்கிய காரணமாகச் சொல்கிறது விக்கிப்பீடியா.
வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை இன்னொரு முக்கியமான கதை. இதை வாசிக்கும்போது எனக்கு மா.அரங்கநாதனின் சில கதைகள் நினைவிற்கு வந்தன. அதாவது சொல்லப்படும் விதத்தில் சாதாரண கதையைப்போல் தோற்றமளித்து வாசகனை ஏமாற்றக்கூடிய நுணுக்கமான கதைகள். தர்பரின் கதை அவ்வரிசையில் வைக்கப்படவேண்டியது. தட்டையான வாழ்க்கையின் சலிப்பை பகற்கனவுகளைக் கொண்டு சுவாரசியப்படுத்துக்கொள்ளும் வால்டர் மிட்டி அங்கதமும் ஆழமும் கொண்ட ஒரு கதாப்பாத்திரம். இக்கதை பென் ஸ்டில்லரின் இயக்கத்தில் தற்போது திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. கதையைச் சிதைக்காதவண்ணம் இடைக்கோடுகளிட்டு பகுதிகளாகப் பிரித்திருப்பதன் மூலம் கதையின் காட்சி மற்றும் புரிதல் தன்மையைக் கூட்டியிருக்கிறார் அசதா.இந்தக்கதைக்கு இது மிகத்தேவையானதாகவே தோன்றுகிறது.
வியட்னாம் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கப் படைக்குழுவைப் பற்றிய டிம் ஓ பிரையனின் நீண்ட கதையான அவர்கள் சுமந்தவை தனிப்பட்ட வகையில் எனக்குப் பிடித்திருக்கும் இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதை. இக்கதையை இரண்டு அடுக்காக பிரிக்கலாம். ஒன்று, படைவீரர்கள் சுமக்கும் விதவிதமான பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கொண்ட புறநிலை அடுக்கு மற்றும் அவர்களுடைய காதற்கனவுகள், மூடநம்பிக்கைகள், மரணபயங்கள், கோழைத்தனங்கள், நம்பிக்கைகள், உயிரோடிருப்பதற்கான வேட்கை, அவமானத்திற்கு பயப்படும் மனம் என்ற அகநிலை அடுக்கு. இவ்விரு அடுக்குகளால் நெய்யப்பட்டிருக்கும் டிம் ஒ பிரையனின் இக்கதை வெற்றியும் இல்லாத தோல்வியும் இல்லாத ஒரு போர்ச்சூழலை விவரிப்பதன் வழியே நமது ஆதார உணர்ச்சிகளில் பிரதானமான உயிர்வேட்கையையும், மனிதவுயிர்களுக்கு எந்த மரியாதையுமற்ற சூழலின் அவலத்தையும் விளக்குகிறது. நேற்று தற்செயலாக குவாண்டனாமோ சிறையைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் இக்கதைக்கு வேறொரு நோக்கில் புரிந்துகொள்ள முடிந்தது.
உண்மையான ஓவியம் என்பது ரத்தத்தைப்போல் விந்தணுவைப்போல் தசையிலிருந்து வரவேண்டும் என்பதாய் மரியா வர்கஸ் யோசாவின் வே டூ பாரடைஸ் நாவலில் ஒரு வரி வரும். நான் இதை ஓவியம் என்பதற்குப் பதிலாக எழுத்து என்று மாற்றி நினைவில் நிறுத்தியிருக்கிறேன். மார்க்குவெஸ், யோசா,புயண்டஸ் போன்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் நாவல்களை வாசிக்கும்போதெல்லாம் அவர்களது எழுத்து Guts லிருந்து வந்திருப்பதாகவே தோன்றும். லத்தீன் அமெரிக்கவின் ஆகச்சிறந்த பெண் எழுத்தாளராய் குறிப்பிடப்படும் இஸபெல்லா ஆலண்டேயின் இரண்டு கதைகளை வாசித்தபோது மேற்குறிப்பிட்ட தன்மைக்கு பால்வேறுபாடில்லை என்றே தோன்றியது. ஈவா லூனாவின் கதைகள் என்ற தொகுப்பிலுள்ள அவருடைய இரு கதைகளான ஆசிரியையின் விருந்தாளி மற்றும் தாமஸ் வர்கஸின் தங்கம் ஆகிய இரண்டும் அகுவா சாண்டா என்ற ஒரே நகரத்தில் நிகழ்பவை.ஆசிரியை ஐனேஸும் துருக்கியரான ரியாத் ஹலாபியும் இரண்டு கதைகளிலும் வருகிறார்கள். இரு கதைகளுமே பெண்களின் போர்க்குணத்தையும் அவர்கள் அசாதரணமான சூழல்களை எப்படி அவர்கள் தாண்டி வருகிறார்கள் என்பதையும் மையமாகக் கொண்டவை. பியோதர் கரம்சோவை ஞாபகப்படுத்தும் தாமஸ் வர்கஸும், துருக்கியரான ரியாத் ஹலாபியும் ஆலண்டேயின் தனித்துவமான பாத்திரப்படைப்புகள்.
இத்தொகுப்பிற்கு தலைப்பைக் கொடுத்திருக்கும் மார்க்குவெஸின் நீல நாயின் கண்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வாசிப்பைக் கோருவது. பொதுவாகவே மொழியாக்க கதைகளின் ஆழத்தை அறிவதற்கு தொடர்ச்சியான மீள்வாசிப்பு அவசியம். கனவுநிலையில் நிகழும் இக்கதை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஆன்ம ஈர்ப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளிகளைப் பற்றியும் பேசுகிறது என்பது என் வாசிப்பாக இருக்கிறது. அந்தோணியோ ஜெர்ஜெனஸ்கியின் செர்வாண்டிஸைக் கைப்பற்றுதல் வாசிப்பதற்கு சுவாரசியமான அங்கதமும் பகடியும் நிறைந்த கதை. பிரதிகள் எல்லாம் மெய்நிகர் பதிப்புகளாய் இருக்கும் 2070 இல் நிகழும் இக்கதையில் ஸ்பானிய இலக்கியத்தின் செவ்வியல் படைப்பான டான் குவிக்ஸாட்டை தற்கால தர்க்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முயலும் வேலைத்திட்டம் பற்றியும் ஜாய்ஸின் யுலிஸிஸை ஒரு அறிவியல் படைப்பு என்று சொல்லும் இலக்-விமர் கணினி நிரல் பற்றியும் பேசப்படுகிறது. விஞ்ஞானமும் தர்க்கமும் எப்போதும் கலையின் முன் போதாமை கொண்டவை என்பதை இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.
இக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் எல்லாவித பெளதீக புவியியல் வேறுபாடுகளைத் தாண்டி நமக்கு அணுக்கமாக்கியிருக்கிறது அசதாவின் மொழிபெயர்ப்பு. கதைகளின் வழியே வாழ்வை அணுகுவது குறித்த நமது புரிதல்வெளியை விரிவாக்கிக்கொள்வதற்கும் ஏதுவானதாக அமைந்திருக்கின்றன இக்கதைகள்.
நீல நாயின் கண்கள் - அசதா, நாதன் பதிப்பகம், 72/43 காவேரி தெரு,சாலிக்கிராமம்,சென்னை-24 தொலைபேசி : 98840 60274 மின்னஞ்சல் nathanbooks03@gmail.com விலை ரூ 100.
தொடர்புடைய பதிவு:
தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்- கே.ஜே.அசோக்குமார்

1 comment:
பகிர்தலுக்கு நன்றி குணா. இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை. vaasiththu viduven.
Post a Comment