புறவெளி யதார்த்தமும் மெய்நிகர் வெளியும் ஒன்றுடன் ஒன்று குலைத்துப் போடப்பட்ட காலம் நம்முடையது. பயணங்களும் உலகின் வெவ்வேறு திசைகளிலுள்ள மனிதர்களுக்கிடையேயான தகவல் தொடர்பும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு(அதற்கான விலையோடு) எளிமைப்பட்டிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் வளர்ச்சியானது அறிவு மற்றும் கலைத்துறைகளில் ஏற்கனவே நிறுவப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து விலகி exotic தன்மையுடைய புதிய சமூகவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. கலாச்சாரங்களும் பண்பாடுகளும் தங்களுக்குள் முயங்குகின்றன. இந்த சமூகவெளியை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய திசைச்சொற்கள், காட்சிப்படிமங்கள், குறியீடுகள் போன்றவற்றை தன்னுடைய வடிவங்களில் வினைபுரிய அனுமதிப்பதின் மூலம் மொழியும் இந்தச் சூழலை கிரகித்துக்கொள்கிறது.
தமிழ்க்கவிதையில் இந்தப்போக்கின் தடயங்கள் வடிவ மற்றும் சொற்தளத்தில் (syntax) தென்படத் தொடங்கியிருக்கின்றன என்பதை நேசமித்ரனின் மண்புழுவின் நான்காவது இதயம் தொகுப்பை முன்வைத்துச் சொல்லலாம். அர்த்தத்தளத்தில் (semantic) இந்தத் தொகுப்பு இவ்வகையான புதிய சமூகவெளியை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்ற கேள்வி உரையாடலுக்குரியது என்றாலும் தொகுப்புக்குள் சில முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் தவிர்த்து இக்கவிதைகளின் ஆதார உணர்ச்சிகள் தமிழ்க்கவிதையில் இன்னும் நிலைகொண்டிருக்கும் கற்பனாவாதப் புலத்திலிருந்து முழுக்கவும் வெளியேறியிருக்கவில்லை என்றே அனுமானிக்கிறேன். (தமிழர் உளவியலும் மரபும் கவிதையுமறிந்த யாரேனும் ஏன் தமிழ்க்கவிதையில் ரொமாண்டிஸமே கொண்டாடப்படுகிறது என்பது பற்றி விரிவாக எழுதலாம்).எனினும் இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை மேற்சொன்ன முரண் உருவாக்கும் அனுபவம் வினோதமான சுவையுடையதாகவே இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் மூன்று வகையான வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் கவிதைசொல்லியின் பிரத்யேக சொற்திரளே அனைத்து வடிவங்களிலும் விரவியிருப்பதால் இத்தொகுப்பின் படைப்புடலம் பிசிறுகள் அற்ற வகையில் சீரானதாகவே இருக்கிறது.
முலை நீவுதல், ஒரு உடலைப் பங்கிடுதல்-செய்முறை, பின்னம், ப்ரியத்தைப் பாலித்தல்,மயானக்கொள்ளை போன்றவை சமூக நிகழ்வுகள் அல்லது சூழலை மையமாகக் கொண்டு ஏறத்தாழ ஒரே விதமான வடிவத்தால் உருவாகியிருக்கின்றன. சொற்றொடர்களுக்கிடையேயான தொடர்ச்சியான ஒத்திசைவு உருவாக்கப்பட்டு நேரிடையான புரிதலை அளிப்பவை இவ்வடிவத்தில் அமைந்திருக்கும் கவிதைகள். இக்கவிதைளின் ஆதார உணர்ச்சியாக ஒரு இளகிய துடிப்பு அல்லது பதைப்புணர்ச்சி (throb) விரவியிருக்கிறது. ஆப்பிரிக்க சமூக சூழலான முலை நீவுதலும் கந்து அரியப்படுவதும் நமது சமூகவெளியில் பெண்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு குறியீடாகின்றன.
வடிவம் இரண்டு:
இந்த வடிவம்தான் நேசமித்ரன் கவிதைகளின் இயல்பான சுயவடிவம் என்று யூகிக்கிறேன். இறுக்கமுடையதாகவும் மையம் குலைந்த அல்லது திட்டமிட்டுக் குலைக்கப்பட்டதாகவும் ஒன்றிற்கு மேற்பட்ட வாசிப்பைக் கொடுக்கக்கூடியனவாகவும், தொடர்ச்சியான மீள்வாசிப்புகளை கோருபவையாகவும் அமைந்து வந்திருப்பவை இக்கவிதைகள். ப்ளூடூத் வெளவால்கள், வேலியம் புன்னகை, ஜீப்ளாங்கடன் உடல், டால்பின் டெசிபல், தொடுதிரை ஆகாயம், பிக்செல் சம்போகம், டில்டோ எலும்புத்துண்டுகள் என விசித்திரமான சுவாரசியத்தை அளிக்கக்கூடிய சொற்சேர்க்கைகள் கொண்டவை. காதல்/காமம் மற்றும் அதுசார்ந்த வேட்கையுணர்வு, நிலம் மற்றும் அழிக்கப்படும் அதன் அடையாளங்கள், நாட்டார் பண்பாட்டுக்கூறுகள், மரணம் மற்றும் அதுசார்ந்த உலகம் போன்ற பலவிதமான மையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுபாவியிருக்கும் இக்கவிதைகள் கடல்சார் நுண்ணுயிர்கள், கீழை மற்றும் மேலைப் புராணிகம், அறிவியல் போன்ற பிறதுறைகளிலிருந்து (பின்னட்டை வாசக்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல்) ஒரு புதிய சொற்களஞ்சியத்தை உருவாக்குகிறது. ஆனால் இந்த சொற்களஞ்சியத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள கூகிள், விக்கிப்பீடியா மற்றும் தமிழ் அகரமுதலி ஆகியவை நமக்குத் தேவைப்படுகின்றன. உதாரணமாக ப்ளூடூத் மற்றும் வெளவாலுக்கிடையேயான ஒற்றுமைகளில்(?!) ஒன்றாக நான் கண்டறிந்தது ப்ளூடூத்தின் வயர்லெல் முறையும் வெளவாலின் Echolocation( எதிரொலி இடமாக்கம் என்கிறது கூகிள் மொழிபெயர்ப்பு) பண்பும் எவ்விதமான இணைப்பு உபகரணங்களும் இன்றி தகவல்களை பரிமாறி கிரகித்துக்கொள்ள உதவுகின்றன என்பதாக இருக்கிறது. பிறகு கில்காமேஷில் இஸ்தர் என்ன மாதிரியான பெண்ணாக சொல்லப்பட்டிருக்கிறாள் என்று கண்டறிய வேண்டியிருக்கிறது. பிறகு ஊர்நாட்டானான நான் டில்டோ பற்றியும் வாசிக்கவேண்டியிருக்கிறது. இப்படி பல கவிதைகளில் Intertextuality பயின்று வந்திருக்கிறது. வரலாறு, தத்துவம், புராணீகம், மெய்யியல், குறியியல், மொழியியல் போன்ற பிற துறைகளின் பிரதிகளை கவிதைக்குள் பயன்படுத்துவது நிச்சயமாக புதிய திறப்புகளையும் காட்சிப்படிமங்களையும் அளிக்குமென்றாலும் தர்க்கவியல் துறையான அறிவியலின் அர்த்தம் நிர்ணயிக்கப்பட்ட சொற்களைக் கவிதைக்குள் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது கவிதைக்கு எந்த அளவிற்கு உதவும் என்பது பற்றியும் நாம் விவாதிக்கலாம்.
நொச்சிக்காடு கவிதையில் தொடங்கி தொகுப்பின் பின்பகுதியிலுள்ள உரைநடைக் கவிதைகள். இக்கவிதைகளின் மையமாக பெரும்பாலும் எதிர்பாலின் பிரிவுத்துயர், பிரிவின் வெளியை நிரப்பும் அரூபக் கனாவெளியின் காட்சிகள் போன்ற உணர்வுகளால் விரவியிருக்கின்றன. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படும் காட்சிபடிமங்களால் கட்டமைக்கப்பட்டு கதைகளின் தன்மை கொண்டவையாகவும் இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.
மேற்சொன்ன இந்த மூன்று வடிவங்களைத் தவிர்த்து முழுக்கவும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற காட்சிப்படிமங்களை ஒரே கவிதைக்குள் வைத்து கவிதையை கட்டமைப்பதும் பல கவிதைகளில் நிகழ்ந்திருக்கின்றன. பியானோவிற்குள் கூடுகட்டும் சிலந்தி,21 வது குண்டில் செத்துவிழும் கடவுள்,மைக்கேல் ஆஞ்செலோவின் உளியும் ப்ரெய்லி கனாவும்,மண்புழுவின் நான்காவது இதயம் போன்ற கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகள் வாசகர்களின் நினைவுத்தொகுப்பின் அடிப்படையில் கலைடாஸ்கோப் வண்ணங்கள் போல் பலவித வாசிப்புகளை அளிக்கக்கூடியவை. வாசித்தவுடன் மறந்துபோகும் இந்தத் தன்மையை யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளில் காணலாம். தொகுப்பின் முற்பகுதியில் ஓசை சார்ந்து யவனிகாவின் சில பாதிப்புகளை யூகிக்க முடிகிறது. உதாரணமாக ப்ரியத்தை பாலித்தல் கவிதையின் முதல் மூன்று பத்திகளின் இறுதி வரிகளான நடுக்கமாக இருப்பது, வெற்றுடலை நேசிப்பது, கதறல் கேட்பது போன்ற ஓசைநயமுடைய சொற்றொடர் வடிவங்கள் யவனிகாவுடையதாக என் மனதில் பதிந்திருக்கிறது. மேலும் இதே கவிதையில் நான்காவது பத்தியில் கவிதையின் தொனி முன்னே சொல்லப்பட்ட மூன்று பத்திகளின் தொனியிலிருந்து மாறுபட்டிருக்கிறது. பொதுவாக இதுபோன்றவை தவிர்க்கப்படுவது கவிதையின் வடிவ அமைதியை அதிகப்படுத்தும். மேலும் ஆப்பாயில் என்னும் எதிர் குவிமைய வாதம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் வரிகள் இத்தொகுப்பில் திருஷ்டிப் பொட்டின் அழகோடிருக்கிறது என்பதையும் சுட்டவேண்டும்.இவை தவிர்த்து ப்ளூடூத் வெள்வால்கள், நிலா நடைக்காற்று,போதெனும் அரவம், நதியில் மிதக்கும் மூக்குத்தி நிலா, விந்துவங்கியில் தாவரப்பிடாரன் போன்றவையும் எனக்குப் பிடித்த கவிதைகள்.
அவருடைய இயல்பான வடிவமாக நான் நம்பும் மேற்சொன்ன இரண்டாவது வடிவத்தை வெவ்வேறு உத்திகளைக் கொண்டு சுத்திசெய்து விரிவாக்கிக்கொள்வதும், கவிதைகளின் ஆதார உணர்ச்சித்தளத்தை இன்னும் கூட நவீனமான திசைகளுக்கு விரித்துக்கொள்வதும் நேசமித்ரன் கவிதைகள் பயணிக்க வேண்டிய திசையாக கருதுகிறேன். மற்றபடிக்கு வாழைப்பழம் உரித்து கையில் கொடுக்கப்படவேண்டும் என்று நினைப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இத்தொகுப்பின் கவித்துவக் கூறுகளும் முயற்சிகளும் நல்லதொரு அனுபவமாக இருக்கும்.
மண்புழுவின் நான்காவது இதயம் -கவிதைகள், நேசமித்ரன்,வலசை வெளியீடு,H1/H2-65,R.M.காலனி,திண்டுக்கல்-624 001 விலை ரூ 100.

1 comment:
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்
வலைச்சர தள இணைப்பு : மதுவாகினி
Post a Comment