மேகமற்ற நீலவானத்தின் உச்சியில் சூரியன் தகிக்கையில் தெற்கே நீளும் தடத்தில் அவர்கள் வந்தார்கள். புளியமரத்தடியில் படுத்திருந்த செம்மி நாயும் கறுப்பு நாயும் எழுந்து குலைக்க முன்னால் வந்த மூத்தவனின் அதட்டலுக்கு குரைப்புகள் மெல்ல அடங்கின. கவையைப்போல் முக்கில் தடம் இரண்டாக பிரிய மேற்கில் குறுகிய வீதியும் கிழக்கில் பெரிய வீதியும் நீண்டன. நிதானித்த மூத்தவன் தலைச்சுமையை சமனாக்கியவாறு கிழக்குப்பக்க வீதியில் நடந்தான். பின்னால் வந்தவன் சும்மாடு கூட்டி பெரிய சாக்குப்பையை வைத்திருந்தான். இடுப்பில் குழந்தையோடு கடைசியாக நடந்தவளின் தலையில் துணிமூட்டை இருந்தது.
தடம் தலைவாசலுக்கு வந்து சேர்ந்தது. பெரிய வேம்பை உள்வைத்துக் கட்டப்பட்டிருந்த சிறுகோவில் மேடைத்திண்ணையின் வலப்பக்கத்தில் பூவரச மரமிருந்தது. ஒன்றோடொன்று முயங்கிக் கலந்திருந்த வேம்பு மற்றும் பூவரசின் நிழலால் தலைவாசல் குளிர்ந்திருக்க சுமையை இறக்கிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மேற்கு வீதியில் மீண்டும் தோன்றிய செம்மி நாயும் கறுப்பு நாயும் உறுமின. நாய் குலைக்கும் சத்தம் கேட்டாவது யாராவது வருவார்கள் என்று மூத்தவன் நினைத்தான். ஆனால் யாரையுமே காணவில்லை. மடியில் குழந்தையோடு நிழலில் அமர்ந்திருந்தவளிடம் திரும்பி என்ன புள்ள ஒருத்தரயும் காணம் என்றவாறு மறுபடியும் வடக்கே பார்த்தான். சும்மாட்டை உதறி வியர்வையைத் துடைத்தவாறு கிழக்குப்புறத்திலிருந்த குளத்துமேட்டுப் புளியமரங்களையே பார்த்தான் மற்றவன். அவள் மடியிலிருந்த குழந்தை சிணுங்கியபோதும் அவன் திரும்பவில்லை.
கோவிலுக்குத் தென்புறம் பள்ளிக்கூடமிருந்தது. அதற்கு மேற்குப்புறமிருந்த வளவில் பல வீடுகள் குட்டிச்சுவராகவும் பாழடைந்தும் கிடந்தன. தெற்கே ஒற்றை வீட்டோடு ஊர் முடிந்து இட்டேறி போனது. சாமீயோவ் சாமீயோவ் என்று இரண்டுமுறை வடக்கே பார்த்து குரல் கொடுத்தான் மூத்தவன். பகல்நேரங்களில் எல்லோரும் காடுகரைக்குப் போயிருப்பார்கள் என்றாலும் ஒன்றிரண்டு வயோதிகர்களாவது தலைவாசலில் படுத்துக்கிடப்பது எல்லா ஊர்களிலும் இருக்கும் நடைமுறைதான். இங்கென்னவோ வெறிச்சோடிக் கிடக்கிறது.
துண்டை உதறி விசிறியவாறே மூத்தவனும் தரையில் உட்காரும்போது கோவிலுக்குத் தென்புறமிருந்த வீட்டிலிருந்து கிழவி வெளியே வந்தாள். பஞ்சாக நரைத்த தலை. அழுக்குப் படிந்து படிந்து நிறம் மாறியிருந்த வெள்ளைச்சீலையை வற்றிச்சுருங்கிய உடம்பில் சுற்றியிருந்தவளுக்கு கூன் விழுந்திருந்தது. வயதேறுவது நின்றுவிட்ட காலத்தில் இருப்பவளாகத் தெரிந்த கிழவி இவர்களுக்குப் பக்கத்தில் வந்து கண்களை இடுக்கிக்கொண்டே யாரது என்றாள்.
“ஊருக்குப் புதுசா வந்துருக்கற சக்கரகத்திங் ஆத்தோவ்” பரிவாகச் சொன்னான் மூத்தவன்.
“ஒஹோ.. நீங்கதானா அது… நாங்களும் சக்கரக்கத்திதான்…இன்னொரு குடும்பம் வரப்போவுதுன்னு என்ற மவனுஞ் சொன்னான்..” நடுங்கிய குரலில் சொல்லிய கூனி திரும்பி குழந்தையோடு உட்கார்ந்திருந்தவளையும், மற்றவனையும் பார்த்துவிட்டு கேட்டாள்.
“இதாரு? “
“என்ற மவ புஷ்பாளும் மருமவன் கருப்பனுங் ஆத்தோவ், மவ மடியிலிருக்கறது பேரனுங்க…இவிய மூணுபேருந்தான் இங்க இருக்கப்போறாங்க… நா கொண்டாந்து உட்டுட்டுப் போலாமுனு வந்தனுங்க” மூத்தவன் சொன்னான்.
“ம்ஹூம்…எங்கிருந்து வாறீங்க?”
“தெக்க தாராவரத்துக்கு அந்தப்பக்கமிருந்துங் ஆத்தோவ்” புஷ்பா சொல்லும்போது கால்களை நீட்டி உட்கார்ந்த கிழவி சுருக்குப்பையிலிருந்த புகையிலைத் துகள்களை எடுத்துச் பொக்கைவாய்க்குள் போட்டு மென்றாள்.
“ஏன்…? இந்த அப்பன் ஒண்ணுமே பேசமாட்டங்கறானா?” கருப்பனைப் பார்த்துக் கேட்க அவன் சலனமின்றி கிழவியின் அசையும் வாயையே பார்த்தான்.
“அவனுக்குக் காது கேக்காது..வாய் வராதுங் ஆத்தோவ் “ புஷ்பா சொன்னாள்.
“ஓஹோ…” என்றவாறு எதையோ யோசித்தவளாய் இருந்த கிழவி சில நொடிகள் கழித்துச் சொன்னாள் ”செரி...செரி...செரைக்கறதுக்கு காதும் வாயும் என்ன பண்ணப்போவுது…? கண்ணுப் பாத்தா கையி செய்யுது…ஆண்டவங் கொடுத்ததுக்கு நாம என்ன பண்ணமுடியும்…? பையனுக்கு என்ன வயசாவுது?”
“மூணு ஆகுதுங்க” சொல்லிய புஷ்பாவிடம் பிறகெதுவும் கிழவி கேட்கவில்லை. வாயினிடையே இரண்டு விரல்களை வைத்து புளிச்சென்ற சத்தத்தோடு எச்சிலை எட்டித்துப்பியவள் அழுக்குச்சீலையை நீவியவாறு புஷ்பாவையே பார்த்தாள். எத்தனை வடிவாய் இருக்கிறாள் இவள். நாசுவப்புள்ள என்று வாய்விட்டுச் சொன்னால்தான் தெரியும்.செக்கச்செவேலென்று அய்யருப்புள்ள கணக்கா இருக்கறாளே என்று நினைப்போடியது.
“எங்கீங்க ஆத்தோவ்…எசமாங்க ஒருத்தரயுங் காணம்?” கிழவியிடம் கேட்டான் மூத்தவன்.
“இந்நேரத்துக்கு எல்லாரும் தோட்டங்காடுகளுக்குப் போயிருப்பாங்க…பெரிய எசமாங்க ரெண்டு மூணு பேரு இதா..இந்தத் திண்ணையிலதா படுத்துக்கெடப்பாங்க..இன்னிக்கு ஏனோ அவியளையுங் காணம்... நீங்க வார தகவலு எசமாங்களுக்குத் தெரியுமா?”
“இன்னிக்கு வாரதா பெரியவூட்டுக் கவுண்டருக்கு சொல்லி வுட்றந்தங்க”
“ஒஹோ… அவியள எல்லாம் பொழுதோடதா பாக்க முடியும்…வகுத்துக்கு கஞ்சி கிஞ்சி குடிச்சீங்களா?”
“கெளம்பும்போது புழுதண்ணீ குடிச்சதுதாங்க…இனிமேலத்தான் சோத்துக்குப் பாக்கோணும்”
“செரி வாங்க… வூட்டுக்குப் போலாம்..ஏந் தலவாசல்ல உக்காந்துக்கிட்டு… எதா இருந்தாலும் பொறவு பாத்துக்கலாம்” சொன்ன கிழவி ஒவ்வொரு எட்டாய் முன்னால் போனாள். கருப்பனுக்கு சைகை காட்டிவிட்டு எழுந்தாள் புஷ்பா. வாசலுக்குள் நுழையும்போது வெள்ளாட்டுப் புழுக்கையின் வீச்சமடித்தது.
புதூருக்கு செல்லான் குடும்பம்தான் பல தலைக்கட்டுக்களாக நாவிதக் குடும்பம். வெகுகாலம் ஒண்டியாக அல்லாடிய செல்லான் இரண்டு மகன்களும் கருப்பனும் தலையெடுத்த பின்னால் எல்லோருக்கும் கல்யாணங்காட்சி முடித்துவைத்து ஈத்துப்பேத்தும் பார்த்தபின்னால் கொஞ்சம் ஓய்வானான். அப்பனையும் ஆத்தாளையும் அகாலத்தில் இழந்துவிட்டு அனாதையாய் நின்ற மருமகன் கறுப்பனை செல்லானே வளர்த்து மகளுக்கு கட்டிவைத்தான். செவிட்டு ஊமையாக இருந்தாலும் காரியத்தில் சூரனாக இருந்தான் கருப்பன். எதையும் ஒருமுறை செய்துகாட்டினலே கிரகித்துக்கொள்கிறவனாகவும் தானாகவே யோசித்துக் கற்றுக்கொள்கிறவனாகவும் வளர்ந்தான்.அவனொரு விஷேசமான சைகைமொழியை உருவாக்கியிருந்தான். கொஞ்சநாள் புழங்கியவர்களுக்கு அந்த மொழி எளிதாகவே கைவந்தது.செல்லான் அறிந்திருந்த மருத்துவமும் செல்லானின் மகன்களைவிட கருப்பனுக்கே கைகூடியது.
கொஞ்சநாட்களாகவே செல்லான் மனக்கிலேசத்திலிருந்தான். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தனியாகப் போகவேண்டுமென்று மருமகள்கள் ஜாடை பேசினார்கள். மகன்களுக்கும் அதே எண்ணவோட்டம்தான் என்பதை செல்லான் யூகித்தான். புஷ்பாளுக்கும் கருப்பனுக்கும் என்ன வழி செய்வதென்று குழப்பமாக இருந்தது. இருக்கிற நூறு குடும்பங்களை மூன்றாக பிரித்துக்கொள்ள மகன்கள் ஒப்பினாலும் மருமகள்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். நடக்கிறவை அப்படித்தான் இருந்தன. பெரியகவுண்டரிடம் சொல்லிப் புலம்பியபோது முதலில் மகன்களிடம் பேசிப்பார்க்கச் சொன்னார். நினைத்தது சரியாகவே இருந்தது. வானத்திற்கும் பூமிக்குமாகக் குதித்த மைத்துனிமார்களை அமைதியாகப் பார்த்த புஷ்பா அப்பன் தனக்கு எது சொன்னாலும் சரியாக இருக்குமென்று அவனையே முடிவெடுக்கச் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள். பொழுதுவிழும் நேரங்களில் சாராயத்தைக் குடித்துவிட்டு என்னசெய்வதென்று தெரியாமல் மனதுக்குள் சஞ்சலத்தோடிருந்த நாளொன்றில்தான் செல்லானை பெரியகவுண்டர் கூப்பிட்டு விட்டார்.போகும்போது அவர் வீட்டுத் திண்ணையில் நாலு பேர் காப்பி குடித்தவாறு பேசிக்கொண்டிருந்தார்கள்.பொதுவாக கும்பிட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்தவனிடம் புகையிலைத் துண்டொன்றை கடித்தவாறு பேசினார் பெரிய கவுண்டர்.
“செல்லா..இவிய வடக்கயிருந்து வாறாங்க... நம்ம சின்னாத்தாளக் கொடுத்த பக்கமெல்லாம் விசாரிச்சுட்டு இங்க வந்துருக்கறாங்க..அவிய ஊருக்கு ஒரு சக்கரக்கத்திக் குடும்பம் வேணுமாமா.. நீ எங்கிட்டச் சொல்லிட்டிருந்தது ஞாவகத்துக்கு வந்தது.. அதான் கூப்பிட்டு வுட்டேன்… ஒண்ணும் அவசரமில்ல…வூட்ல உன்ற மவனுக கூடயும் கலந்துக்கிட்டு ஒரு ரெண்டு மூணு நாள்ல சொல்லு”
வந்தவர்களில் பெரியகவுண்டரின் வயதிலிருந்தவர்தான் பேசினார் “இதா பாரப்பா…ஊர்ல ஏற்கனவே ஒரு நாசுவக்குடி இருக்குது…ஆனா ஊருக்குள்ள கட்சி ரெண்டாகிப் போச்சு…அதனால சக்கரக்கத்தியும் தனியா வேணுமுன்னு முடிவு பண்ணியாச்சு…முன்பணம் ஐயாயிரம் கொடுத்துடறம்…அதுபோக சின்னதா ஒரு வூடு கட்டித்தந்தடறம்… மண்ணு செவுருதான்…காரை வூட்டுக்கெல்லாம் வசதிப்படாது.. இங்க எவ்வளவு வாங்கறயோ அதே குடிகூலி வாங்கிக்க… அதுபோக மத்ததெல்லாம் எங்கியும் உள்ளதுபடிதான்...யோசிச்சு ஒரு நல்ல முடிவா உங்க கவுண்டருகிட்ட சொல்லியுடு”
பெரிய கவுண்டரிடம் கும்பிடு போட்டுவிட்டு அவர்கள் போன பின் செல்லான் விஷயங்களைத் துருவினான். ”அட எங்க கட்சி இல்லாம இருக்குது செல்லா…ஊருண்ணா பகை இருக்கத்தான் செய்யும்..கவுண்டனுக அடிச்சிக்கறான்னு வண்ணானும் நாசுவனும் கச்சி சேரவா முடியும்? நீ பொது மனுசனா இருந்துட்டுப் போயிர வேண்டியதான்… எனக்கென்னவோ இது நல்ல யோசனையாப் படுது…போறதுக்கு மவனுக ஒத்துக்கலைன்னா புஷ்பாளையும் கருப்பனையும் தாட்டி வுட்ரு...உன்ற பிரச்சனையும் முடிஞ்ச மாதிரி ஆச்சு..அதுகளும் தானா ஒரு வழியப் பாத்துக்கும்”
பெரியகவுண்டர் சொன்னபடிதான் நடந்தது. மகன்கள் ஒத்துக்கொள்ளவில்லை. புஷ்பாளிடம் கேட்டபோது அவளுக்குப் பெரிய யோசனைகள் ஏதுமில்லை. என்னதான் பிறந்த வீடாக இருந்தாலும் அவ்வப்போது மைத்துனிமார்கள் சுருக்கென்று ஏதாவது சொல்விடத்தான் செய்கிறார்கள். அவள் கருப்பனைப் பார்க்க அவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான். ஆனால் வந்தவர்களுக்கு கருப்பன் செவிட்டு ஊமை என்று தெரிந்தபோது கொஞ்சம் தயங்கினார்கள். பெரியகவுண்டர் கருப்பனை விட்டுக்கொடுக்காமல் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தார்.
பொழுதுவிழும் நேரத்தில் வீட்டுக்குத் திரும்பும் மயிலான் கெட்டவார்த்தைகளை முனகியபடி வெள்ளாட்டுப் புழுக்கை வீச்சமடிக்கும் வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கிடப்பான். வயசுப்புள்ள இருக்கற வூட்ல பேசற நாயமா என்று அவன் மனைவி கிட்டாள் ஏசும்போது பதிலுக்கு அவளையும் ஏசுவான். பிறகு புகையிலையை வெளியே கொட்டிவிட்டு ஏற்கனவே தூளை அடைத்துத் தயாராய் வைத்திருக்கும் பருமனான பீடிகளில் ஒன்றை பற்றவைத்து ஆழமாக ஒரிரு இழுப்புகள் இழுக்கையில் அவனுடைய உலகம் மிதக்க ஆரம்பித்துவிடும்.
மயிலானின் மகள் வேணிக்கு புஷ்பாளிடம் பேசுவதற்கு விஷயங்கள் தீர்ந்தபாடில்லை. பதினெட்டு வயதுக்காரிக்கு உரிய சந்தோஷங்களையும் ரகசியங்களையும் பயங்களையும் பகிர்வதற்கு அவளைவிட ஐந்தாறு வயது மூத்தவளான புஷ்பாளின் வரவு பொருத்தமாக இருந்தது. ஒயாத வாயாடியான வேணியைப் பார்த்தாலே புஷ்பாவிற்கு பிரியமாய் இருக்கும். எந்நேரமும் பையனை இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வாள் வேணி. கருப்பனின் சைகைமொழிதான் முதலில் புரியவில்லை. தலையைச் சொறிந்துவாறு புஷ்பாவைப் பார்த்தால் அவள் சிரித்தபடி அர்த்தம் சொல்வாள். சமயங்களில் தன்னிச்சையாக ஏதாவது வாய்விட்டுக் கேட்டபின்னால்தான் அவனுக்கு காது கேட்காது என்பதே வேணிக்கு ஞாபகம் வரும்.
கருப்பனைப் பார்த்தால் சிநேகபாவமா அல்லது விரோதபாவமா என்று யூகிக்கமுடியாத வகையில் சின்னதாய் தலையசைப்பான் மயிலான். ஊருக்கே குடிநாசுவனாய் இருந்தவனுக்கு உடம்பில் பாதி போய்விட்டது போலிருந்தாலும் கறுப்பனைக் குற்றம் சொல்லக் காரணமில்லை என்பதை அவன் அறிந்தேயிருந்தான். இந்த ஊர்க் கவுண்டமார்களின் புத்தியை அறியாதவனா மயிலான். ரகசியங்கள், கோபங்கள், பொறாமைகள், செய்திகள் என அவனறிந்தவை எண்ணற்றவை. அதில் எதை வெளியே சொல்லவேண்டும், எதையெல்லாம் தனக்குள்ளே புதைத்துக் கொள்ளவேண்டும், எதை யாருக்கும் தொந்தரவில்லாத வகையில் எப்படி மாற்றி வெளியே சொல்லவேண்டும் என்பதெல்லாம் மயிலானுக்குக் காலம் கற்றுக்கொடுத்த கரதலபாடம்.
ஊருக்குள் பகை மூண்டபோது அது எங்கிருந்து புகைகிறது என்பதை மயிலான் அறிந்தேயிருந்தான். வலுவான தனிமனிதர்களின் பகை ஊரை இரண்டாக உடைத்து தனி நாவிதன் வண்ணான் வேண்டுமென்கிற நிலைக்குக் கொண்டுபோனது.எந்தக் கட்சிக்கு தன்னை குடிநாசுவனாய் இருக்கச்சொன்னாலும் தனக்குப் பிரச்சனையில்லையென்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டான். பெரியவீட்டுக்கவுண்டர் கட்சி வேறு நாவிதன் வைத்துக்கொள்வதாயும் புது நாவிதன் வரும்வரை மயிலானே செய்யவெண்டுமென்றும் பேச்சுவார்த்தையில் முடிவாக மயிலான் திருமலைக்கவுண்டர் கட்சிக்கு நாவிதனானான்.
புஷ்பாளுக்கும் கருப்பனுக்கும் புது ஊரின் அந்நியத்தன்மை மெல்லக் கரைந்தது. மயிலானின் வீட்டை ஒட்டியே தென்புறமாய் மண்சுவர் வைத்து ஓட்டுவீடு கட்டிக்கொடுத்தார்கள். கருப்பன் காலைநேரத்தில் அடப்பத்தை எடுத்துக்கொண்டு தலைவாசலுக்கு வந்துவிடுவான். தலைக்குத் தகுந்தவாறு திருத்தமாக முடிவெட்டுவது, சோப்பு போட்டு சவரம் செய்வது, காலில் ஆணியெடுப்பது, எவ்வளவு கட்டையான நகங்களையும் வெட்டிவிடுவது என்று கருப்பனின் சுத்தமான வேலை எல்லோருக்கும் பிடித்துப்போனது. அவன் எண்ணெய் தேய்த்துவிட்டால் இரண்டு நாட்களுக்கு உடம்பு பஞ்சுமாதிரி இருக்குமென்று பேச்சுப் பரவியது. காட்டு வேலைகளையும் செய்யக்கூடியவன் என்று தெரிந்த பின்னால் காட்டுவேலைக்கும் கூப்பிட்டார்கள். ஊரும் மனிதர்களும் சரளமாகிவிட்டதால் நுணுக்கமான வேலைக்காரனான கறுப்பனுக்கு தொழில் லகுவானது. புஷ்பா தினமும் காட்டுவேலைக்குப் போனாள். அதுபோக நல்லது கெட்டதுக்கு வீடு வழிக்க பாத்திரம் கழுவவென்று கூப்பிட்டார்கள். சோறெடுக்க வருவதில்லை என்பதை மட்டும் சில ஆத்தாமார்கள் குத்திக்காட்டியபோது ஊரிலும் தனக்கு அந்தப்பழக்கமில்லை என்று சிரித்தவாறு சொல்லி நழுவி விட்டாள் புஷ்பா.
அன்றைக்கு வேணியுடன் தலைவாசலில் பஞ்சாயத்து டிவி பார்த்துவிட்டு வந்த புஷ்பா கருப்பனை எழுப்பி சோறுபோட்டாள். குழந்தை தூங்கிப்போயிருந்தான். தலைவாசல் பக்கம் ஒரே சத்தமும் கூச்சலுமாகக் கிடக்க எழுந்துபோய் வாசலோரத்தில் நின்று வடக்கே பார்த்தாள். யாரோ இருவர் கட்டிப்புரள்வது கரண்ட்மர வெளிச்சத்தில் தெரிந்தது. எச்சில்கையோடு வெளியே வந்த கருப்பன் வேகமாக தலைவாசலுக்கு நடக்கையில் தன் வீட்டு வாசலில் நின்றிருந்த மயிலான் அவனை நிறுத்தி போகவேண்டாமென்று சைகை செய்தான்.
வடக்கு வீதியிலிருந்தும் மேற்கு வீதியிலிருந்தும் ஆட்கள் ஓடிவருவதும் ஆளாளுக்கு அடித்துக்கொள்வதும் உருண்டு புரள்வதுமாய் தலைவாசல் அல்லேகலப்பட்டது. மயிலான் புஷ்பாளிடம் வீட்டுக்குள் போய் தாழ்போடச்சொல்லிவிட்டு தன் முதுகோடு ஒட்டி நின்ற கிட்டாளையும் வேணியையும் வீட்டிற்குள் போகச்சொல்லி சத்தம்போட்டான். ஆட்கள் திமுதிமுவென்று ஓடும் சத்தமும் கூப்பாடும் வெகுநேரம் கேட்டது. புஷ்பாளுக்கு தூக்கமே வரவில்லை. சிம்னி வெளிச்சத்தில் கூரையையே பார்த்தவாறு படுத்திருந்தவள் வெகுநேரம் கழித்துப் புரண்டு படுக்கும்போது கறுப்பன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.
ஊருக்குள் இறுக்கம் நிலவியது. போலிஸ் ஸ்டேசன் போய் பஞ்சாயத்து முடிந்ததாய் தகவல்கள் கசிந்தன. கைகலப்பில் ஈடுபட்டிருந்த மற்றவர்களுக்கு ஊமைக்காயங்களாக இருக்க முதலில் கைகலப்பில் ஈடுபட்ட பெரியவீட்டுக் கவுண்டரின் மகன் மணியும் திருமலைக்கவுண்டரும் இரத்தக்குறி கண்டு ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். மணியின் வலதுகை பெருவிரலை திருமலைக்கவுண்டர் கடித்து துண்டாக்கிவிட்டதாக பேச்சோடியது. என்ன காரணத்திற்காக கைகலப்பு ஆரம்பித்தது என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாமல் பல காரணங்களைப் பேசினார்கள். அதில் பிரதானமாக முப்பத்தைந்து வயதாகியும் இன்னும் கல்யாணம் தகையாத மணிக்கு வரும் ஜாதகங்களை எல்லாம் திருமலைக்கவுண்டர் போய் குசலம் வைத்து தட்டிவிட்டுவிடுகிறார் என்பதாக இருந்தது. மணி ஆஸ்பத்திரியிலிருந்து வந்தபின்னால் சவரம் செய்யப்போன கருப்பனிடம் கட்டுப்போட்டிருந்த விரலைக் காட்டினான்.
ஊருக்குள் ரகளை நடந்தபின் பொழுதுவிழுந்ததும் தலைவாசல் அடங்கிவிடுகிறது. ரேடியோரூம் பூட்டிக்கிடக்க யாரும் பஞ்சாயத்து டிவியை எடுத்து வெளியே வைக்காததால் தூங்கப்போகும் வரை மயிலானின் வீட்டில் பேசிக்கொண்டிருப்பது புஷ்பாளின் வழக்கமானது. இடையில் ஒருமுறை ஊரிலிருந்து செல்லானும் அவன் பொண்டாட்டியும் மகளைப் பார்ப்பதற்காக வர கறுப்பன் போய் ஆட்டுக்கறி வாங்கி வந்தான். அன்றைக்கு மயிலானின் வீட்டில் எல்லோரையும் சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள் புஷ்பா.
கொஞ்சநாட்களாகவே புஷ்பாவை ஒரு விதமான பயம் பிடிக்கத் துவங்கியிருந்தது. யாரையுமே ஒருநொடி திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுதான் அவளுடையது என்றாலும் வாழ்கையில் அவளறிந்த ஒரே ஆண் கருப்பன் மட்டுமே. புதூரில் அந்த அழகை சுமையாய் உணர்ந்ததில்லை. ஆனால் இங்கே அப்படியில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிலரின் பேச்சும் பார்வையும் வேறுமாதிரியே இருக்கிறது. அதிலும் மணியின் தொல்லை ஜாஸ்தியாகவே இருக்கிறது. அன்றைக்கு காட்டுவேலைக்குப் போய்விட்டு தனியாக இட்டேறியில் வந்தவளை கன்னிமார் கோவிலடியில் மறித்து கிளுவங்காட்டு கல்லுக்குழிக்கு கூப்பிடுகையில் பயத்தில் கூனிக்குறுகியவளாய் நானு அந்த மாதிரி இல்லீங்க சாமீ என்று சொல்லிவிட்டு மனசுக்குள் கன்னிமாரைக் கும்பிட்டபடி வேகமாகத் தாண்டி வந்துவிட்டாள். கருப்பனிடம் சொல்வதா வேண்டாமா என்று குமைந்தவள் பிறகு ஏனென்று தெரியாமலே அதை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டாள்.
கண்டதையும் யோசித்தவாறு தூக்கம் வராமல் கிடந்தவள் ஒண்ணுக்கிருக்க வெளியே வருகையில் காற்று குளிர்ந்து வீச நிலாவெளிச்சமும் இருந்தது. தடத்திற்கு அந்தப்பக்கமாக இருந்த வேலிக்கிளுவைப் புதருக்குள் உட்கார்ந்திருக்கையில் முக்காடு போட்டிருந்த நிழலுருவம் வேகமாக மயிலானின் வீட்டுக்குள் போவதைப் பார்த்தாள். பார்த்தவுடனே தெரிந்துவிட்டது அது வேணிதானென்று. இந்த நேரத்திற்கு எங்கிருந்து வருகிறாளென்று குழப்பமாக இருந்தது.வீட்டிற்குள் போய் தாழிட்டுப் படுத்தவளுக்கு வேணியைப் பற்றியே வெகுநேரம் யோசனையாக இருந்தது.மறுநாள் விசாரிக்கலாமாவென்று யோசித்தவள் வேறு ஏதேனும் அயக்கமாக இருக்குமோவென நினைத்து அமைதியாக இருந்துவிட்டாள்.ஆனால் அந்த அயக்கம் வெளியரங்கமாக ஆவதற்கு வெகுநாட்கள் பிடிக்கவில்லை.
சத்தம் கேட்டு வேகமாக புஷ்பா மயிலானின் வீட்டிற்குள் போகையில் கிட்டாள் வேணியை சீவக்கட்டையால் விளாசிக்கொண்டிருந்தாள். புஷ்பா தடுக்கவும் சீவக்கட்டையை வீசியெறிந்துவிட்டு தேவடியா முண்ட தேவடியா முண்ட என்று முனகியவாறு சுவரோரத்தில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தாள். வேணியின் கண்களிலிலிருந்து நீர் வழிந்ததோ ஒழிய சிறு முனகல் கூட எழவில்லை.கிழவியும் கறுப்பனும் விருமத்தி பிடித்து வாசற்த்திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். வேணிக்கு நாள் தள்ளிப்போயிருந்தது. கிட்டாளிடம் வாயே திறக்காதவளை புஷ்பாதான் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி விஷயங்களைக் கேட்டாள். மணியின் பெயரைக் கேட்டதும் ஏனோ நெஞ்சுக்குழி திக் திக்கென்று அடித்துக்கொண்டது. புஷ்பா சொல்லியதை மெளனமாக கேட்ட மயிலான் எழுந்து நேராக பெரியவீட்டுக் கவுண்டரிடம் போனான். வெகுநேரம் கழித்து அங்கிருந்து திருமலைக்கவுண்டரின் வீட்டிற்குப் போய்விட்டு திரும்பி வளவிற்கு வருகையில் முகம் இறுகிக்கிடந்தது. கிட்டாளும் புஷ்பாளும் அவனைத் தோண்டித் தோண்டிக் கேட்டார்கள்.
“என்ன திடீர்னு கவுண்டனாகறதுக்கு ஆசையாடான்னு கேக்கறாங்க…உம்புள்ள எத்தன பேருத்துக்கூட படுத்தாளோன்னு சொல்றாங்க“
“திருமலை எசமாங்க என்ன சொல்றாங்க? “ கிட்டாள் கேட்டாள்.
“அவிய மட்டும் வேறையாவா இருப்பாங்க?” சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்தவாறு வெகுநேரம் கட்டிலில் கிடந்தவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு போக வீட்டிற்கு வந்தாள் புஷ்பா. சோர்ந்திருந்த அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டுக் கருப்பன் கேட்க அவள் சைகையில் விளக்கினாள். மெல்லிய இறுக்கத்தோடு கருப்பன் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
கிழவியும் கிட்டாளும் சேர்ந்து மருத்துவம் பார்த்து வேணியின் கருவை கலைத்தார்கள். காட்டுவேலைக்குப் போகையில் வேணியைப்பற்றி கவுண்டச்சிகள் துருவுகையில் தனக்கு எதுவும் தெரியாது என்று புஷ்பா சொல்லிவிட பெரிய அழுத்தகாரி என்று காதுபடவே இவளைச் சொன்னார்கள். துவண்டுகிடந்த வேணியைப் பார்க்க அவள் அத்தைக்காரி நல்லானூரிலிருந்து வந்துவிட்டுப் போனாள். ஒரிரு மாதங்கள் கழித்து அவள் மறுதடவை வருகையில் அவளோடு மகன் ராமனும் சில சொந்தக்காரர்களும் வந்திருந்தார்கள். வட்டமலையில் வைத்து வேணிக்கு தாலிகட்டிய ராமன் அவளை அப்படியே நல்லானூருக்குக் கூட்டிப்போனான்.புஷ்பாளும் கறுப்பனும் பையனோடு போய் வந்திருந்தார்கள். ஊர்க்காரர்களிடம் மொய் வாங்க மயிலான் மறுத்துவிட்டான்.
மூச்சு வாங்கிக்கொண்டே விலகிப்படுத்தான் மணி. காரை பெயர்ந்திருந்த கோம்பைச்சுவரில் பல்லியோ பாப்பிராணியோ ஊர்ந்ததால் உதிர்ந்த சிறுகற்கள் சிமெண்ட்தளத்தில் சிறு சத்தங்களை எழுப்பின. புஷ்பாவிற்கு முதுகு அழுந்தவும் கண்களை மூடியவாறு எழுந்து உட்கார்ந்தாள். அவன் தீக்குச்சி உரசி பீடி பற்ற வைக்கையில் எழுந்தவள் பாழடைந்த வீட்டின் கதவை லேசாக நீக்கி வெளியே பார்த்தாள். கரண்ட்மர விளக்கு சோகையாய் எரிய தலைவாசல் நிசப்தமாக இருந்தது. பள்ளிக்கூடத்தைத் தாண்டி நாவிதவளவிற்கு முக்கில் தெற்கே திரும்புகையில் அவன் வெளியே வந்து மேற்கே போவது தெரிந்தது. வாசற்படலை சத்தமின்றி நீக்கி உள்ளே வந்தவள் கதவை நீக்கிப்பார்க்க கறுப்பனும் பையனும் அசந்து தூங்குவது தெரிந்தது. பொடக்காலிக்குப் போனவள் பன்னாடையை திணித்து தீப்பற்ற வைத்துத் தண்ணீரைச் சூடாக்கினாள். சீலையை திரைத்து தூக்கிச்சொருகிக்கொண்டு உட்கார்ந்தவள் கொஞ்சநேரம் கழித்து வந்து ஆயாசத்தோடு திண்ணையில் உட்கார்ந்தாள். ஏனோ வேணியின் ஞாபகம் வந்தது.
புஷ்பா பெருமூச்செறிந்தாள். பெருகும் குற்றவுணர்வு மெல்ல மெல்ல உயிரை அரிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் வேறு வழியே இருந்திருக்கவில்லை. திரும்ப ஊருக்கே போய்விடுவதைப் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் யோசித்தாள். ஆனால் அவற்றையெல்லாம் தன்னால் நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியாதென்று பயந்துவிட்டாள். இதெல்லாம் கருப்பனுக்குத் தெரிந்தால் அவன் மனதையே விட்டுவிடக்கூடும். ஆனாலும் அவனுக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை நாட்கள் கழியக்கூடும்?
வேணி போய்விட்டபின் மணியின் பார்வை முழுக்கவும் இவள் மேல் திரும்பியது. அவன் மிரட்டும்போதும் கெஞ்சும்போதும் எப்படியெப்படியோ தப்பிக்கொண்டிருந்தாள். அன்றைக்கு கருப்பன் ஒரு கல்யாணத்திற்காக ஊருக்குப் போயிருந்தான். காட்டுவேலைக்குப் போய்விட்டு வந்தவள் பள்ளிக்கூடத்தில் விட்டிருந்த பையனைக் கூட்டிவரப்போக அவனைக் காணவில்லை. பதறியவளாய் வாத்தியாரிடம் கேட்க பையனக் காணமா என்று அவர் திருப்பிக்கேட்டவாறு தலைகளை எண்ணுகையில் இவள் மயிலானின் வீட்டிற்க்கு ஓடிப்பார்த்தாள். அங்கே கிழவி மட்டுமே திண்ணையில் படுத்துக்கிடந்தாள். எஞ்சாமீயக் காணமே எஞ்சாமீயக் காணமே என்று புலம்பியவாறு வழியில் கண்டவர்களை எல்லாம் விசாரித்தவாறு வளவுகளைச் சுற்றிவிட்டு பித்துப் பிடித்தவளாய் தலைவாசலில் உட்கார்ந்திருந்தாள். இவளின் நிலையைக் கண்டு அங்கலாய்த்த கவுண்டச்சிகள் ஆறுதல் சொல்லுகையில் மேற்கேயிருந்து அழுதுகொண்டிருந்த பையனை தூக்கியவாறு மணி வரவும் ஓடிப்போய் பையனை எடுத்த பின்னால்தான் இவளுக்கு உயிரே வந்தது.
“மேக்க காட்டுல இருந்து வந்துக்கிட்டிருக்கறன்..இது ஓண்ணும் இட்டேரிக்குள்ள் உக்காந்து அழுதுக்கிட்டிருக்குது..அங்க எப்படிப் போச்சுன்னு தெரியலை..ஏனுங் வாத்தியாரே..பள்ளிக்கூடத்துப் புள்ளகளை ஒழுங்கா பாத்துக்கறதில்லயா? அதிகார தோரணையோடு பேசினான் மணி. கண்களை துடைத்துக்கொண்டு புஷ்பா நிமிர்ந்து பார்க்கையில் அவன் கண்ணோரத்தில் தெரிந்த கள்ளத்தை இவள் மட்டுமே உணர்ந்தாள். வாத்தியார் குழப்பத்தோடு நிற்கையில் எல்லோரும் முணுமுணுத்தவாறு கலைந்துபோனார்கள். வீட்டிற்கு வந்தவள் பையனுக்கு சோறுபோட்டு ஊட்டுகையில் வாசற்படலைத் தள்ளியவாறு உள்ளே வந்த மணி பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். பையன் அவனை பயத்தோடு பார்த்தான்.
“ராத்திரி பண்ணெண்டு மணிக்குமேல் பள்ளிக்கூடத்துக்கு மேவரம் இருக்கற வடக்குவாச வூட்டுக்கு வந்துரு..இல்லீனா அப்றம் உன்ற பையன் கண்டுபுடிக்க முடியாதளவுக்கு காணமா போயிருவான் ” சொல்லிவிட்டு நமுட்டுச்சிரிப்பு சிரித்தான். எதுவும் சொல்லாமல் புஷ்பா அவனை முறைக்கையில் மெல்லியதாய் சீக்கியடித்துக்கொண்டே போனான். ரொம்பவும் பயமாக இருந்தது. அழுதவளையே பையன் பார்க்க அவனை சாப்பிடச்சொல்லிவிட்டு பொடக்காலிக்குள் வந்து உட்கார்ந்து கொண்டாள். பொழுது விழும்போது விளக்கேற்றவும் தோணவில்லை. பொம்மைகளோடு விளையாடிச் சலித்திருந்த பையன் அப்படியே தூங்கிப்போயிருக்க சிம்னி விளக்கை ஏற்றி நிலவோரமாய் தணித்து வைத்துவிட்டு படுத்தாள். நெற்றி கனத்து பார்வை மங்கியது. கண்களை மூடுகையில் இனம்புரியா காட்சிகள் தோன்றின.சுடுகாட்டு குழிமேட்டில் பையன் மண்ணை அளந்து விளையாடுவது போலொரு காட்சியில் அதிர்ந்து விழித்தவள் பக்கத்தில் படுத்திருந்த அவன் தலையைத் தடவிக்கொடுத்தாள். வெகுநேரம் அப்படியே கிடந்தவள் எழுந்து கதவைத் தாழிட்டு வெளியே வருகையில் தெருவிளக்குகள் எரியாமல் இருள் கெட்டித்த வெளியில் ஊரடங்கிக் கிடந்தது. கால்கள் தன்னிச்சையாக வடக்குவாசல் வீட்டிற்கு நடந்தன. எப்போதும் பூட்டியே கிடக்கும் கதவு லேசாகத் திறந்திருக்க தள்ளி நுழையும்போது உள்ளே பீடிக்கங்கு மின்னியது. தீக்குச்சியை உரசி அவளுக்கு வழிகாட்டிய மணியின் முகத்தில் வெற்றிப்புன்னகை மிளிர்ந்தது.
வேட்டையாடப்பட்ட மிருகத்தின் கடைசித்துணுக்கு தசையையும் நக்கி உண்ணும் வேட்கை மிக்கவனாய் அன்றிலிருந்து மணி மாறிப்போனான். புஷ்பாவின் உடலே பெருநெருப்பாய் மாறி அவனுள் மூண்டெரிந்தது. அடர்ந்த வேலிகளோடு ஆளரவமற்றுக் கிடக்கும் கொறங்காட்டுக் கல்லுக்குழிகளிலும் புதர்மறைவுகளிலும் கண்ணியில் சிக்கிய முயலாய் மணியிடமிருந்து தப்ப வழியற்றவளானாள் புஷ்பா.
கருப்பன் தான் புஷ்பாவிடம் அந்த மாற்றத்தை முதலில் கண்டுபிடித்தான். புஷ்பாவின் கண்கள் லேசாக திருகியதுபோல் ஒரு புள்ளியைப் பார்க்காமல் அலைவுற்றன. இரண்டு மூன்று முறை கூப்பிட்டால் மட்டுமே திரும்பும் ஆழத்தில் அவள் நினைவு புதைந்திருந்தது. பேச்சும் குறைந்துவிட்டது. காத்துக்குணமாக இருக்குமோ என்று கருப்பன் பயந்தாலும் அன்றாட வேலைகளை அனிச்சையாக செய்பவளாகவே இருந்தாள்.காட்டுவேலைக்குப் போவது குறைந்து பகல்பொழுதுகளில் இட்டேறி முக்கிலிருக்கும் கன்னிமார் கோவிலில் ஏழு கன்னிமார்களை வெறித்துவாறு வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்து கிடந்தாள். சரியாக அக்காலத்தில்தான் அவளுடைய கூந்தல் பழுப்பாக நிறம்மாறி சடை சடையாக திரிந்தது. புஷ்பாவின் மேல் கன்னியாத்தா இறங்கியிருப்பதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். கருப்பன் ஊருக்கு சொல்லிவிட புஷ்பாவின் அப்பனும் ஆத்தாளும் வந்து பத்து நாட்கள் இருந்துவிட்டுப் போனார்கள். ராத்திரியில் அவள் பக்கத்தில் போவதற்கே கருப்பனுக்கு ஏனோ தயக்கமாகவும் அச்சமாகவும் இருந்தது. அவளாகச் சரியாகட்டும் என்று அவளைத் தொந்தரவுபடுத்தவில்லை.
புஷ்பாவோ காலங்களைத் தாண்டி வெகு பின்னால் போய்க்கொண்டிருந்தாள். அங்கே அவள் கன்னியாக இருந்தாள். உடலின் பிரக்ஞையழிந்து காற்றைப்போல் அருவமாய் வனங்களில் தனித்துத் திரிந்தாள். அவளிலிருந்து ஒரு சுகந்தம் பரவிக்கொண்டிருந்தது. கொடிகள் அடர்ந்த நூற்றாண்டு மரங்களிலிருந்து பூக்களின் வாசனை வீசியது. காதுக்கு இனிமையான பட்சிகளின் பாடல்கள் ஒலித்தன. உயிர் ஒரு ஒளித்துகிலாக மிதக்கையில் ஒரு செருமல் சத்தம் கேட்கவும் அவள் கண்கள் வெகு சிரமத்தோடு தற்கணத்திற்கு மீண்டன. எதிரில் நின்றிருந்த மணி இவளையும் கன்னிமார் சிலையையும் மாறி மாறிப் பார்த்தான்.
“என்னலே..கன்னியாத்தா ஆயிட்டீங்களோ..உன்ற வேஷத்துக்கு ஊரு வேணா ஏமாறலாம்… எங்கிட்ட நடக்காது. நானும் பாக்கறன்.. கொஞ்ச நாளா சிக்காமயே திரியறே..? ஒழுங்கா இப்பக் கிளுவங்காட்டு கல்லுக்குழிக்கு வா.. “ சொன்னவன் நடக்க எழுந்து அவள் பின்னாலேயே மிதப்பதுபோல் நடந்து போனாள்.கள்ளச்சிரிப்பு சிரித்துக்கொண்டு மணி தொக்கடாவைத் தாண்டுகையில் கீரிப்பிள்ளை ஒன்று வேலிக்குள் ஓடியது.
கல்லுக்குழியைச் சுற்றிலும் கிளுவை மரங்கள் மூடிக்கிடக்க உள்ளே இறங்கியவன் தென்புறத்து புதரடிக்குள் தவழ்ந்துபோனான். கிளுவைமரங்கள் மேலே கூரையைப் போலிருக்க கீழே வெட்டுமண் இலைகளோடும் சருகுகளோடும் இருந்தது. புஷ்பா தவழ்ந்து உள்ளே போனதும் வெறிகொண்டவனாய் இழுத்து மேலே பரவினான்.
கிளுவைமரத்தின் கிளைகளிடையே உச்சியில் தெரிந்த சூரியன் இரண்டாக உடைந்து புஷ்பாவின் கண்களில் விழுந்தன. அவள் உடல் பாறையைப் போல் திண்மையானதாகவும் வாளைப்போல் கூர்மையானதாகவும் மாற செந்நிற நெருப்புத்துண்டங்களாய் அவள் கண்கள் கனல்வதைக் கண்டதிர்ந்த மணி பதறியவனாய் எழ முயல்கையில் எலும்புகள் நொறுங்குமளவிற்க்கு அவன் கைகளை இறுக்கிப்பிடித்தாள். அவளின் நிதம்பத்திற்குள்ளிருந்த அவன் உயிர்நிலையெங்கும் ஆயிரக்கணக்கான கிளுவைமுற்கள் குத்த பரவிய உயிர் வலியில் அலறமுயன்றவனிடமிருந்து குரலற்ற வெறும் காற்று மட்டும் வர அத்தனை வலியும் அவன் கண்களிணோரங்களில் தேங்கி வழிந்தது.
மேலே கிடந்த அந்த உடலை பக்கவாட்டில் தள்ளிவிட்டு புதரிலிருந்து வெளியே வந்தவள் கன்னிமார் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
நன்றி-கல்குதிரை
No comments:
Post a Comment