Jan 3, 2015

கற்கள் சொல்லும் சரித்திரம்

                                        

நாவல் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வது ஒருவிதத்தில் சீட்டுக்கம்பெனி நடத்துவது போலத்தான்.சொன்னால் நம்புவார்கள். கடைசியில் நாம் கம்பி நீட்டிவிடலாம். போனவருஷம் மூலைக்கு மூலை நாவல் எழுதுகிறார்கள் என்று ஒரே பரபரப்பாயிருந்தது. நாற்பத்தியிரண்டு தமிழ்க்கவிஞர்கள் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாக இன்னொரு திடுக்கிடும் தகவலும் வந்தது. எத்தனை வெளியாகியிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் நாவல் எழுதும் வேலை என்பது நாவல் எழுதுவதைப்பற்றிக் காணும் கனவுபோல் சுவாரசியமானதாக இல்லை. எலும்புதேய எழுதவேண்டும்.முதுகுவலி வரும்வரை எழுதினீர்கள் என்றால் நீங்கள், உங்களை உங்கள் காலத்தின் முதன்மையான,மகத்தான எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளலாம்.

அப்படி ஒரு பேதமையான கனவை (முதன்மை எழுத்தாளர் ஆவது குறித்தல்ல, நாவல் எழுதவேண்டுமென்பதுதான்) நானும் கண்டு போன ஆண்டு அதன் ஆரம்பவடிவை எழுதினேன். ஆனால் போதவில்லை.அது ஓராண்டாக ஹார்ட் டிஸ்கில் தூங்கியது. நான் சொல்ல முயலும் கதைவடிவத்தில் என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன என்று தேடியபோது இஸ்மாயில் காதேரேயின் க்ரோனிக்கிள் இன் ஸ்டோன்(Chronicle in Stone) நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பதிப்பு வரும்போதும் திருத்தி திருத்தி எழுதி பல்லாண்டுகளுக்கு அந்த நாவலை அவர் செழுமைப்படுத்தியதாக ஒரு குறிப்பை இணையத்தில் வாசித்தேன்.

சிறுவர்களின் உலகத்தைப் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் நிறைய இருக்கின்றன. ஜாய்ஸ், சார்லஸ் ப்யூக்கோவஸ்கி, ஜேம்ஸ் பால்ட்வின் எனப்பலரும் எழுதியிருக்கிறார்கள்.இவற்றில் ஒன்றிரண்டை வாசித்திருக்கிறேன். தமிழில் ரத்த உறவு மட்டும் நினைவுக்கு வருகிறது. இவற்றைத் தவிர இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் தத்துக் கொடுக்கப்படும் ஒரு சிறுமியின் மனவுலகத்தை அடிப்படையாகக் கொண்ட மார்கஸ் சூசக்கின் ”தி புக் தீப்“ ஃபை சினிமாகவும் எடுத்திருக்கிறார்கள்.அந்த நாவலை வாசிக்கும்போதே எளிதில் திரைக்கதையாக மாற்றிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறதோ என்று தோன்றியது. ஐரிஸ் சிஸ்ரா என்ற அர்ஜெண்டியனிய எழுத்தாளர் ஹவ் ஐ பிக்கம் எ நன் (How i become a Nun) என்றொரு நாவல் எழுதியிருக்கிறார்.

எப்படி லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சி தன் படைப்பாக்கத்தில் மூன்றாம் உலகநாடுகளின் மீதான் ஏகாதிபத்தியச் சுரண்டலை அடிப்படையாக கொண்டிருந்ததோ அதைப்போல பல ஐரோப்பிய நாவல்களுக்கு இரண்டாம் உலகப்போர் பின்புலமாக இருந்திருக்கிறது.பெர்லினின் வீழ்ச்சியை ஹிட்லரின் கோணத்தில் சொல்லும் Downfall திரைப்படத்தைப் சமீபத்தில் பார்த்தேன். ஹிட்லராக நடித்திருந்தவர் பிரமாதப்படுத்தியிருந்தார். ஐயோ, ஹிட்லர் ரொம்பப் பாவம்!

                                                

அல்பேனியாவின் Gjirokastër நகரத்தைக் கதைக்களமாகவும் இரண்டாம் உலகப்போர் வருடங்களை காலக்களமாகவும் கொண்டு ஒரு சிறுவனின் பார்வையில் நகரும் காதரேயின் இந்த நாவல் இத்தாலி மற்று கிரீஸ் நாடுகளின் ஆதிக்கத்திற்கு நடுவே அல்லாடும் நகரத்தின் கதையையும் அதன் மனிதர்களின் பாடுகளைப் பற்றியும் பேசுகிறது. சில சமயம் அரசாங்கமே இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள். கம்யூனிச தத்துவத்தின் மீதான இளைஞர்களின் நம்பிக்கையைப் பற்றியும் காதலுக்காக செய்யப்படும் கவுரவக்கொலையைப் பற்றியும் பேசுகிறது.

நாவலின் பிரமாதமான சித்தரிப்புகளாக சிலவற்றைச் சொல்லமுடியும்.முக்கியமாக கோட்டையோடு அமைந்து தன் கட்டுமானத்தில் கற்களைப் பிரதானமாகக் கொண்ட மலைநகரத்தின் அமைப்பைப் பற்றிய சித்தரிப்புகள்.Cobble Stones எனப்படும் அந்தக் கற்களின் மீது எனக்குப் பெரும் காதலை உண்டாக்கியவர் பாமுக்தான். இஸ்தான்புல்லின் பின்தெருக்கள்! உருகுவேயின் மாண்டிவீடியோ மற்றும் கொலோனியா நகரங்களில் cobblestone வீதிகள் சிலவற்றில் நடந்திருக்கிறேன். இஸ்தான்புல்லின் வீதிகளில் பாமுக்கின் double ஆக பாவித்துக்கொண்டு நடக்கும் ஆசிர்வாதத்தை வாழ்வு தன் மிட்டாய்ப்பைக்குள் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.நிற்க, இஸ்தான்புல்லிலிருந்து அல்பேனியா…

இரண்டவதாக நாயகச்சிறுவனின் மனவுணர்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகள்.தன் வீட்டின் நிலத்தடி நீர்த்தொட்டி காலியாக இருக்கும்போது அதனோடு பேசும் இவனுடைய குரலின் எதிரொலிப்பை தொட்டி தன்னோடு பேசுவதாக பாவித்துக்கொள்வதும் அது நீர் நிறைந்திருக்கும்போது மெளனமாக இருப்பதாக நினைத்துக்கொள்வதும் அபாரமான சித்தரிப்புகள்.பிறகு,மூத்தோர்களுக்கு தீமையின் குறியீடாகத் தெரியும் போர்விமானங்கள் மீதான அவன் பிரேமை. விமானங்கள் குண்டு வீசும்போது பதுங்குவதற்கு பாதுகாப்பானதாக இவனுடைய வீட்டின் பாதாள அறை குறிக்கப்படுகிறது. அண்டை வீட்டார் அங்கே பதுங்கும் இரவுகளில் வான்தாக்குதலில் நிலம் அதிர்கிறது. ஏன், ஒருமுறை இவனே தெருவில் திரிகையில் எதிர்பாராத குண்டுவீச்சில் மரணத்தின் முனைவரை போய்வருகிறான். ஆனாலும் விமானங்களின் மீதான காதல் குறைவதில்லை.

பதுங்கு அறைகளின் பாதுகாப்பை சோதனை செய்யும் பொறியாளன் இவன் வீட்டின் பாதாள அறை இனி பாதுகாப்பானதில்லை என்று குறித்துவிட்டுப் போய்விடுகிறான். அந்த அறையில்தான் இருட்டில் முத்தம் கொடுத்துக்கொள்ளும் இளைஞனும் இளம்பெண்ணும் பிடிபடுகிறார்கள். அந்தக் குற்றத்திற்காக அந்த இளம்பெண் அவள் வீட்டின் நீர்த்தொட்டிகுள் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். தன் காதலியைத் தேடி அலையும் அந்த இளைஞன் அவள் போன இடத்திற்கே தானும் போகப்போவதாக இவனிடம் சொல்கிறான்.

முகத்தில் ரோமம் வளரும் பெண்களைப் பற்றியும் நூற்றாண்டுகள் கடந்து வாழும் கிழவிகளைப் பற்றியதுமான சித்தரிப்புகள் இந்த நாவலுக்கு ஒரு மாயத்தன்மையை வழங்குகின்றன. குறிப்பாக crone என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் அக்கிழவிகளைப் பற்றிய சித்தரிப்புகள் எனக்கு கோணங்கியுடைய கிழக்கின் சூனியக்காரக் கிழவிகளை நினைவுபடுத்தின. மேலும் நகரத்தின் பாதுகாப்புக்காக நிறுவப்பட்டு பழுதடைந்து கிடக்கும் பீரங்கியைப் பற்றிய சித்தரிப்புகள் அவல நகைச்சுவை.

இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் என் நாவல் முயற்சியைத் தொடரலாம் என்ற நம்பிக்கையைக் காதரே கொடுத்திருக்கிறார். என்ன, போரும் வரலாறும் நம் ஊரில் நிகழவில்லை. நம் பாடுகள் வேறுவிதமானவை. ஆனால் சிறுவர்களின் மனவுலகம் உலகெங்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றன என்ற நம்பிக்கையில் நாவலைத் திருத்தியெழுத ஆரம்பித்திருக்கிறேன்.சோம்பேறித்தனத்தையும் சுகவாசத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்தால் ஜீன் மாதத்தில் ஒரு சுமாரான நாவல் வெளியாகும். காதரேவுக்கு நன்றி.

No comments: