Jan 10, 2015

ரத்தமும் ஒயினும் கலந்த எழுத்து

                              
                                 


உண்மையான ஓவியமென்பது இரத்தத்தைப்போல் உயிரணுவைப்போல் தசையிலிருந்து(guts) வரவேண்டும் என்பதாய் மரியா வர்கஸ் யோசாவின் சொர்க்கத்திற்கான பாதை(Way to Paradise) நாவலில் ஒரு வரி வரும். லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சியின் முக்கிய ஆளுமைகளான மார்க்வெஸ், யோசா, புயண்டஸ், ஹூலியோ கொர்த்தஸார் போன்றோரின் படைப்புக்களை வாசிக்கையில் அவர்களுடைய எழுத்துக்களுங்கூட தசையிலிருந்து தோன்றியவையாகவே உணர்கிறேன். நினைவு மற்றும் மீபுனைவாக்கத் தளங்களில் இயங்கிய போர்ஹேஸை இவர்களிடமிருந்து வேறுபட்டவராகச் சொல்லலாம். இவர்களைத் தவிர்த்து இவான் ருல்போ, அலேஹோ கார்ப்பெந்தியார், இவான் கார்லோஸ் ஒன்னெட்டி, இஸபெல்லா ஆலண்டே ஆகியோரை உள்ளிட்ட இன்னொரு நீண்ட வரிசையும் இருக்கிறது.

ஸ்பானிய மொழியில் பைபிளுக்கு அடுத்து அதிகம் விற்பனையாகியிருக்கும் நூலாக சொல்லப்படுவதும் மாய யதார்த்தவாத கதை சொல்லல்முறையை ஒரு சமயமரபளவிற்கு உயர்த்திய நாவலுமான தனிமையின் நூறு ஆண்டுகள்(one hundred years of solitude) தான் நான் முதன்முதலில் வாசித்த மார்க்வெஸின் நாவல். மாற்று யதார்த்தத்தின் நிலவெளியை அறிமுகப்படுத்திய அந்நாவல் கொடுத்த கிளர்ச்சியில் உடனடியாக காலரா காலத்துக் காதல் (Love in the time of cholera) மற்றும் அசதாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு புது எழுத்தால் வெளியிடப்பட்ட முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் ஆகிய நாவல்களை வாசித்தேன். அதற்குப்பின்னர் கடந்த எட்டாண்டுகளாக அவருடைய எழுத்துக்கள் எதையும் வாசித்திருக்கவில்லை. சமீபத்தில் மார்க்வெஸின் பூதவுடல் மறைந்தபோது அவரைக் குறித்த ஒரு முழுமையான வாசிப்பைக் கொண்டிருக்கவில்லை என்று உணர்ந்ததின் காரணமாக மீண்டும் அவருடைய எழுத்துக்களைத் தொகுத்து வாசிக்கத் தொடங்கினேன். விமர்சனமாகவோ அறிமுகமாகவோ பாவித்துக்கொள்ளாமல் அவ்வாசிப்பனுபவத்தின் அடிப்படையிலான குறிப்புகளாகவே இக்கட்டுரையை முன்வைக்கிறேன்.

மார்க்வெஸின் படைப்புக்களில் லத்தீன் அமெரிக்க நிலப்பரப்பின் தொன்மங்களும் அவரது சொந்தநாடான கொலம்பியாவின் வரலாறும் ஊடுபாவியிருக்கின்றன. ஸ்பெயினிடமிருந்து 1810 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த கொலம்பியா தன் விடுதலைக்குப் பின்னும் ஒரு ஸ்திரமற்ற சமூகமாகவே இருந்திருக்கிறது. காலனிய காலத்திற்குப் பின்னர் அந்நாட்டின் இரண்டு பிரதான அரசியல் அணிகளான பழமைவாத மற்றும் தாராளவாத குழுக்களிடையே மோதலும் உள்நாட்டுப் போர்களும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன. மார்க்வெஸின் தாய்வழி பாட்டானாரான நிக்கோலஸ் மார்க்வெஸ் தாராளவாதக் குழுவின் போர்ப்படையில் கர்னல் அந்தஸ்த்தில் இருந்திருக்கிறார்.

தனிமையின் நூறு ஆண்டுகள், கேடான நேரத்தில் (In evil hour), கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை(No one writes to the colonel) போன்ற மார்க்வெஸ் படைப்புகளின் உள்ளோட்டங்களில் உள்நாட்டுப்போர் குறித்த சித்திரங்களைக் காண்கிறோம். மேலும் மிகச்சமீபத்தில், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் கொலம்பிய அரசாங்கத்திற்கும் போதை மருந்துக் கடத்தல் குழுக்களுக்குமிடையில் நிகழ்ந்த மோதல்களையும் வன்முறைகளையும் பின்புலமாகக் கொண்டு ஒரு கடத்தல் செய்தி (News of a kidnapping) என்ற உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலான புத்தகத்தை நாவலுக்கு இணைவைத்துச் சொல்லத்தக்க வகையில் எழுதியிருக்கிறார்.

மார்க்வெஸின் நாவல்களையும் சுயசரிதையையும் வாசிக்கையில் அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை உணர முடிந்தாலும், அவை தெள்ளத்தெளிவாக ஒரு ஒற்றைச் சொற்றொடருக்குள் அடைபட மறுத்து புகைமூட்டமாகவே இருந்தது. கரீபிய நிலப்பரப்பின் யதார்த்தம் மூர்க்கமான கற்பனைக்கு இணையானது என்று தன்னுடைய பாரிஸ் ரெவ்வியூ நேர்காணலில் அவர் கூறியிருந்ததை வாசித்தவுடன் சட்டென்று அப்புகைமூட்டம் விலகியது. அவருடைய நாவல்களில் அபாரமான கற்பனைகளாகத் தோற்றமளித்தவை பலவற்றின் வேர்கள் யதார்த்தவாழ்வில் இருந்திருப்பதை அவருடைய சுயசரிதையான கதை சொல்வதற்காக வாழ்தல் (Living to tell the tale) வாசிக்கும்போது அறியமுடிந்தது.

தன் ஒன்பதாவது வயதுவரை அரக்கட்டாக்காவிலுள்ள பாட்டானார் வீட்டில் முழுக்கவும் பெண்கள் சூழ்ந்த சூழலில் பாட்டியின் அபாரமான கற்பனைகள் கொண்ட கதைகளைக் கேட்டவாறு மார்க்வெஸ் வளர்ந்திருக்கிறார். சிறுவனான மார்க்வெஸும் பாட்டனாரும் மட்டுமே அவ்வீட்டில் ஆண்கள். தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் அரகட்டாக்கா மெக்கண்டோவாகவும் பாட்டனார் நிக்கோலஸ், ஜோஸ் ஆர்கோடியா புயந்தியாவாகவும் பாட்டி டிரான்குலினா இகுரான் ஊர்சுலாவாகவும் உருமாற்றம் பெறுகிறார்கள். ஜோஸ் ஆர்கோடியா புயந்தியாவின் இளைய மகனான கர்னல் அரோலினா புயந்தியாவையும் பாட்டனார் நிக்கோலஸின் ஆளுமையைக் கொண்டே உருவாக்கியிருக்கிறார் மார்க்வெஸ். தன்மானத்தின் பொருட்டான துவந்த மோதலில் புருடென்சியோ அகுலியாரை கொல்லும் ஜோஸ் ஆர்கோடியா புயந்தியாவுக்கு ஏற்படும் குற்றவுணர்வு, கர்னல் அரோலினா புயந்தியாவின் மகன்களான பதினேழு அரோலினாக்களைப் பற்றிய விவரிப்புகள் போன்றவையும் பாட்டனார் நிக்கோலஸின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே. மார்க்வெஸின் இளைய சகோதரிகளில் ஒருவருக்கு இருந்த மண் உண்ணும் பழக்கம் நாவலில் ரிபேக்காவுடையதாக மாறியிருக்கிறது.

மார்க்வெஸுடைய பெற்றோரின் காதல்தான், காலரா காலத்துக் காதல்(Love in the time of Cholera) நாவலில் ப்ளோரிண்டினா அரிசா மற்றும் பெர்மினா டாசாவுக்கிடையேயான இளமைக்காலக் காதல் சித்திரங்களுக்கான பின்ணனியை அளித்திருக்கிறது. உள்நாட்டுப் போரில் தாராளவாத அணியில் போரிட்டவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் சட்டம் கொலம்பிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டாலும் அரசாங்க எந்திரத்தின் சிக்கல்களால் நிக்கோலஸ் உள்ளிட்டவர்களுக்கு அதன் பயன் வந்துசேர்வதில்லை. இதைப் பின்னணியாகக் கொண்டு கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை குறுநாவலை எழுதியிருக்கிறார். மார்க்வெஸின் குடும்பம் சுக்ரே நகரத்தில் வசித்தபோது அங்கே பொய்யாக உருவாக்கி பரப்பப்பட்ட வதந்திகளால் நகரத்து மக்களிடையே ஏற்படும் சமூக குழப்பங்களையும் உறவுச்சிக்கல்களையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் கேடான நேரத்தில் நாவல். தன் எழுத்துக்கள் அத்தனையுமே யதார்த்தத்திலிருந்து கிளைத்தவையாக மார்க்வெஸ் குறிப்பிடுகிறார்.

மார்க்வெஸின் சுயசரிதையிலிருந்தும் நாவல்களிலிருந்தும் நான் உணர்ந்த மற்றொரு முக்கியமான விஷயம் லத்தீன் அமெரிக்க ஆண்களின் கட்டற்ற பாலியல் துய்ப்பும் அவற்றின் மீதான பெண்களின் சகிப்புத்தன்மையும். தன் கணவர் நிக்கோலஸிற்கு போர்க்காலகட்டத்தில் பிற பெண்களுடன் ஏற்படும் உறவில் பிறக்கும் குழந்தைளையும் தன் குழந்தைகளாக மார்க்வெஸின் பாட்டி ஏற்றுக்கொள்கிறார். மார்க்வெஸின் தந்தையாரும் சுதந்திரமான பாலியல் நடத்தையுடையவராக இருந்திருக்கிறார். மூத்த மகன் மார்க்வெஸோடு சேர்த்து மொத்தம் பதினொரு குழந்தைகளைப் பெற்றெடுத்த அவருடைய தாயார் தன் கணவருக்கும் பிற பெண்களுக்குமான உறவில் பிறந்த குழந்தைகளையும் தன் குழந்தைகளாகவே ஏற்றுக்கொள்கிறார்.

மருந்துக்கடை நடத்துபவரான தந்தையார் பாக்கி வரவேண்டிய மருந்துப்பணத்தை வசூலித்து வரச்சொல்லி பின்பதின்ம வயதிலிருக்கும் மார்க்வெஸை பரத்தையர் குடியிருப்புக்கு அனுப்பியபோது அங்கே நிகழ்ந்த தன் முதல் புணர்ச்சி, ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் ஏற்படும் தொடர்பு, அவளுடன் படுக்கையிலிருக்கையில் அவள் கணவனிடம் அகப்பட்டுவிடும் ஒரு தருணம், தன் உடலில் படிந்திருக்கும் விலைமாதுவின் வாசனையைக் கண்டறிந்துவிடும் தாயார் பாலியல் நடத்தையில் தன் கணவனைப் போலவே மகன் மார்க்வெஸூம் இருப்பதாக வருத்தப்படுவது, இளம் எழுத்தாளனாக கொலம்பிய நகரங்களில் அலைந்த காலத்தில் பாலியல் தொழிலாளர்களுடனான ஏற்படும் நட்பு, வறுமையின் காரணமாக ஒருநாள் அவர்களிடம் குளியல் சோப் இரவல் வாங்கியது போன்றவற்றையெல்லாம் ஒரு புனைவாகவே தோற்றமளிக்குமளவிற்கு தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார் மார்க்வெஸ். பரத்தையரைப் பற்றிய மார்க்வெஸின் எழுத்துக்கள் கனிவு கூடியவை என்றே நான் நம்புகிறேன். காமத்தைத் தணிக்கும் வெறும் உயிர் எந்திரங்களாக அவர்களைச் சித்திரிக்காமல் தாய்மையுணர்வு கூடியவர்களாகவும் கள்ளமற்ற புனித ஆன்மாக்களாகவும் நிராகரிக்கப்பட்ட காதலோடு திரியும் ஆண்களின் உக்கிரமான வெப்பத்தை உறிஞ்சித் தணிவிக்கும் ஈரநிலமாகவும் சொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆண்களின் எல்லையற்ற பாலியல் சுதந்திரத்தின் பிரதிபலிப்பை என் துயரார்ந்த பரத்தையர்களின் நினைவுகள் (Memories of my melancholy whores) நாவலின் பெயரற்ற மையக்கதாப்பாத்திரத்திலும் காலரா காலத்துக் காதல் நாவலின் ப்ளோரிண்டினோ அரிசா பாத்திரத்திலும் பார்க்கிறோம். நூற்றுக்கணக்கான பெண்களுடன் உடலுறவு கொள்ளும் இந்த இருவருக்குமிடையேயான ஒரு சுவாரசியமான வேறுபாடாக என் துயரார்ந்த பரத்தையர்களின் நினைவுகள் நாயகன் தான் உடலுறவு கொள்ளும் பெண்கள் அத்தனை பேருக்கும் பணம் கொடுப்பதை கட்டாய வழக்கமாக வைத்திருப்பதையும், மாறாக ப்ளோரிண்டினோ அரிசா தன் எண்ணற்ற புணர்ச்சிகளை பெண்களுடன் நட்பை உருவாக்குவதின் மூலம் நிகழ்த்திக்கொள்வதையும் சொல்லலாம். மார்க்வெஸின் கதாப்பாத்திரங்களில் எல்லையற்ற இன்பநுகர்ச்சி கொண்ட ஒரே பெண் பாத்திரமாக நான் காண்பது காதலும் ஏனைய பேய்களும்(of love and other demons) நாவலில் வரும் பெர்னார்டா காப்ரியா பாத்திரத்தை மட்டுமே. அதனைத் தவிர்த்து அவருடைய பிரதான பெண்பாத்திரங்கள் பலர் காதலுறுதி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். காலரா காலத்துக் காதல் நாவலில் தன் கணவர் இவானுல் அர்பினோவிற்கு வேறொரு பெண்ணுடன் ஏற்படும் உறவின் காரணமாக பெர்மினா டாசா அவரை விட்டுப் பிரிந்து போனாலும் இவானுல் அர்பினோவின் மன்னிப்புக் கோரலோடு அப்பிரிவு தற்காலிகமானதாக மாறிவிடுகிறது.

ஆயினும் என் துயரார்ந்த பரத்தையர்களின் நினைவுகள் மற்றும் காலரா காலத்துக் காதல் ஆகிய இரு நாவல்களும் பேசும் ஆதாரமான விஷயம் காமம் அல்ல, காதல்தான். முன்னது வயோதிகத்தில் மலரும் காதலைப் பற்றியும் பின்னது நீண்ட வாழ்வைக் கடந்த பின்னும் மங்காத இளம்பருவத்துக் காதலின் நித்யத்தன்மையைப் பற்றியும் பேசுகின்றன. இரண்டு கதைகளிலும் பொது அம்சமாக காதலின் பிரிவாற்றாமையும் உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணரப்படும் அதன் வலியும் இருக்கின்றன. ஆனாலும் இறுதியில் அப்பிரிவாற்றாமையின் ஏக்கத்தைத் தீர்த்துவைத்து அக்காதல்கள் கோரும் நீதியையும் மார்க்வெஸ் வழங்கிவிடுகிறார். இதற்கு மாறாக காதலும் ஏனைய பேய்களும் நாவலில் சொல்லப்படும் காதலுக்கு ஒரு துயரார்ந்த முடிவு நேர்கிறது. தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் அமரந்தா மற்றும் ரிபேக்கா இருவராலும் காதலிக்கப்பட்டபோதும் அவர்களில் ஒருவரைக்கூட அடையவியலாமல் தற்கொலை செய்துகொள்கிறான் பியூட்ரோ க்ரெஸ்பி. காதலைப் பற்றிய எழுத்துக்களில் மார்க்வெஸின் ஆளுமைச்சிறப்பு நமக்குத் தனித்துக் கட்புலனாவதை எளிதாக உணரலாம்.

காதலுணர்ச்சியே தோன்றாமல் தன் வாழ்நாள் முழுக்கவும் காமம் சார்ந்த தேவைகளை பரத்தையர்களின் மூலமே நிறைவேற்றிக்கொண்ட பத்தி எழுத்தாளனும் லத்தீன்,ஸ்பானிய மொழிகளை போதிப்பவனுமான நாயகன் தன் தொண்ணூறாவது பிறந்தநாளுக்கு ஒரு கன்னிப்பெண்ணை தனக்குத் தானே பரிசளித்துக்கொள்ள விரும்பி பரத்தையர் விடுதியின் தலைவியை தொலைபேசியில் அழைப்பதிலிருந்து தொடங்குகிறது என் துயரார்ந்த பரத்தையர்களின் நினைவுகள் நாவல். குடும்ப வறுமையின் காரணமாக இதற்கு ஒப்பும் இளம் கன்னிப்பெண்ணின் உடலுறவு குறித்த அச்சத்தைத் தவிர்க்கும் பொருட்டு அவளுக்கு உறக்கமருந்து கொடுத்து உறங்கவைக்கிறாள் விடுதித்தலைவி. ஆயினும் அப்பெண்ணோடு உடலுறவு கொள்ளாமல் அவள் உறக்கத்தை மட்டும் ரசித்துவிட்டு திரும்புகிறான் நாயகன். அதற்குப் பின்வரும் நாட்களில் விடுதித்தலைவியின் உதவியோடு ஒவ்வொரு இரவிலும் அவளோடு வெறுமனே உறங்குவதின் மூலம் வாழ்க்கையில் முதன்முதலாக காதல் அளிக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கண்டடைகிறான். ஒரு கொலைச்சம்பவம் காரணமாக விடுதி மூடப்பட்டுவிட விடுதித்தலைவியை தொடர்புகொள்ள முடியாமலும், இளம்பெண்ணைக் காணவியலாமலும் காதலின் உக்கிரமான வேதனையில் தவித்து இறுதியில் அவளை மீண்டும் கண்டடைவதோடு நாவல் முடிகிறது. இந்தக் குறுநாவலை வாசிக்கும்போது நபக்கோவின் லோலிதா மற்றும் யசுனாரி கவபட்டாவின் தூங்கும் அழகிகள் இல்லம் ஆகிய நாவல்கள் நினைவிற்கு வந்தன. தூங்கும் அழகிகள் இல்லம் நாவலின் வரிகளை மேற்கோளாகக் கொண்டுதான் நாவலைத் தொடங்கியுள்ளார் மார்க்வெஸ். Nymphet என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு தளிரிளம்பெண் நாயகனின் காதலுக்குரிய பெண் கதாப்பாத்திரமாக இருப்பதே எனக்கு லோலிதாவை நினைவூட்டியது.

காலரா காலத்து காதல் நாவலிலோ இளமையின் உக்கிரத்தோடு காதலிக்கும் ப்ளோரிண்டினோ அரிசா மற்றும் ஃபெர்மினா டாசாவின் உறவை முறிப்பதற்காக மகளை தன் சொந்த நிலத்திற்கு அழைத்துப்போகிறார் ஃபெர்மினாவின் தந்தை. ஆனாலும் தந்தி அலுவலகத்தில் பணிபுரிபவனான ப்ளோரிண்டினோவும் பெர்மினாவும் தந்திகளின் மூலம் தொடர்பை பேணுகிறார்கள். சிறிய கால இடைவெளிக்குப் பின் பயணம் தரும் அனுபவங்களோடு முதிர்ந்தவளாகத் திரும்பும் ஃபெர்மினா இன்னும் அதே வெகுளித்தனத்தோடும் காதல் பித்தோடும் இருக்கும் ப்ளோரிண்டினோவைத் திரும்பக் கண்ணுறும் கணத்தில் அவர்களுடைய காதல் வெறும் மாயையாகவும் வயதின் தற்காலிக மேகமாகவும் தோன்றிவிடுவதால் அவனை நிராகரிக்கும் கணத்தில் தொடங்குகிறது அவனுடைய மிக நீண்ட காத்திருப்பு.

இளம் ப்ளோரிண்டினோவின் காதல் பித்தானதாகவும் உயிர் நிரம்பித் ததும்பும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. காதலின் வேட்கை அவனை நோயுற வைக்கிறது. கவிதைகளோடு வாழவைக்கிறது. தன் காதலை மீண்டும் அவளிடம் வலியுறுத்த அவள் கணவரான டாக்டர் இவானுல் அர்பினோ இறக்கும் வரைக்குமான ஐம்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள் அவன் நம்பிக்கையோடு காத்திருக்கிறான். தனக்குள் பொங்கும் காதலின் அபரிமிதமான வேட்கையைத் தணித்துக்கொள்ள அவன் நகரத்துக் காதலர்களுக்கு காதல் கடிதங்கள் எழுதிக் கொடுக்கிறான். தன் காதலிக்கு கடிதம் எழுதித்தரச்சொல்லி கேட்கும் காதலன் மற்றும் அதே காதலனுக்கு கடிதம் எழுதித்தரச் சொல்லி கேட்கும் காதலி ஆகிய இருவருக்குமே ஆணாகவும் பெண்ணாகவும் மாறி கடிதங்கள் எழுதிக்கொடுத்து அவர்களின் வாழ்வு இணையவும் துணையாகிறது ப்ளோரிண்டினோவின் உக்கிரமான காதல்.

ஃபெர்மினாவின் மீதான ப்ளோரிண்டினோவின் நித்யகாதல் பிற பெண்களோடான காமத்துய்ப்புக்கு இடையூறாக இருப்பதில்லை. மார்க்வெஸ் நாவல்களில் அதீத பாலியல் துய்ப்புள்ள பாத்திரங்களான ப்ளோரிண்டினோவும் என் துயரார்ந்த பரத்தையர்களின் நினைவுகள் நாயகனும் திருமணம் என்னும் சமூக உறவிற்கு வெளியே இருப்பவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும். மாறாக கணவன் என்ற அங்கீகரிக்கப்பட்ட உறவிற்குள்ளிருக்கும் இவானுல் அர்பினோ ஃபெர்மினாவிற்கு இழைக்கும் துரோகத்திற்கான குற்றவுணர்வை அனுபவிப்பதையும் கவனிக்கவேண்டும். ஃபெர்மினாவும் இவானுல் அர்பினோவும் சமூகத்திற்கு வெற்றிகரமான தம்பதிகளாக தோற்றமளித்தாலும் தங்களுடைய நீண்டகால திருமண வாழ்வில் மன ஆழங்களில் பல கசப்புகளைக் கொண்டவர்களாகவே வாழ்கிறார்கள். நல்ல திருமண வாழ்வின் மிக முக்கியமான அம்சம் மகிழ்ச்சியல்ல, அதன் ஸ்திரத்தன்மைதான் என்று இவானுல் அர்பினோவின் கூற்றாக நாவலில் சொல்லப்படும் ஒரு வரி அவர்களுடைய திருமண வாழ்வை மிகச்சரியாக சித்தரிக்கும் வாக்கியமாகும். இவானுல் அர்பினோவின் கோணத்தில் தொடங்கும் நாவல் பின் மெல்ல மெல்ல ஃபெர்மினா மற்றும் ப்ளோரிண்டினோவின் கோணங்களுக்கு மாறுகிறது. இருபது வயதில் தான் நிராகரித்த ப்ளோரிண்டினோவின் காதலை எழுபத்திரண்டு வயதில் கணவரின் இறப்பிற்கு பின்னர் பெர்மினா ஏற்றுக்கொள்வதற்கான தர்க்கத்தை மிகச்சரியாக நிறுவியிருக்கிறார் மார்க்வெஸ்.

காலரா காலத்துக் காதல் நாவலின் பெண் கதாப்பாத்திரங்களில் ஒன்றான அமெரிக்கானா விக்கானா, என் துயரார்ந்த பரத்தையர்களின் நினைவுகள் நாவலின் தெல்கதினா வரிசையில் மார்க்வெஸின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த தளிரிளம்பெண் பாத்திரப்படைப்பு காதலும் ஏனைய பேய்களும் நாயகியான செர்வா மரியா. 1949 ஆம் ஆண்டில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டப்படுவதற்காக சாண்ட்டா க்ளாரா கன்னியர்மாடத்தின் கல்லறைகள் இடிக்கப்படுகையில் அங்கே புதைக்கப்பட்டிருக்கும் செர்வா மரியாவின் தாமிர நிறக்கூந்தல் அவளுடைய மரணத்திற்கு பின்னும் வளர்ந்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்படுகிறது. இருநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்கதையான செர்வா மரியாவின் வாழ்வை நாவலாக்கியிருக்கிறார் மார்க்வெஸ்.

கிறிஸ்த்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் மிகுந்த காலனிய காலத்தில் இக்கதை நிகழ்கிறது. உடல்சார்ந்த இன்பநுகர்வுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்ட தாய் பெர்னாண்டா காப்ரியா மற்றும் உட்சுருங்கிய குணமுடைய தந்தை மார்க்குயூஸால் முறையாக அன்பு செலுத்தப்படாமல் அடிமைப்பெண்களால் வளர்க்கப்படும் செர்வா மரியாவிற்கு அவளுடைய பனிரெண்டாவது பிறந்தநாளில் வெறிநாய்க்கடி விபத்து ஏற்படுகிறது. சற்றே மூர்க்கமான குணமுடைய செர்வாவிற்கு யதார்த்தத்தில் நோய்தொற்று எதுவும் இல்லையென்று புத்தறிவைக் கற்பதில் வேட்கையுடையவரும் அதன் பொருட்டு மதவிலக்கம் செய்யப்பட்டவருமான மருத்துவர் அப்ரனன்சியோ உறுதிப்படுத்தினாலும் செர்வாவை பேய் பீடித்திருப்பதாக சூழலும் சம்பவங்களும் பிறரை நம்பவைக்கின்றன. பிஷப்பின் வற்புறுத்தலால் கன்னியர்மாடத்தில் தனிமைப்படுத்தப்படுகிறாள் செர்வா. அவளைப் பீடித்திருக்கும் பேய்களை விரட்டி குணப்படுத்தும் பொறுப்பை தன் நம்பிக்கைக்குரிய நூலகரான கயாத்தானோ டெலுராவிற்கு பிஷப் கையளிக்க கயத்தானோவோ செர்வாவுடன் காதல்வயப்படுகிறார். அக்குற்றத்திற்குத் தண்டனையாக தொழுநோய் மருத்துவமனையில் கயத்தோனாவை பணிபுரிய உத்தரவிடுகிறார் பிஷப். ஆனால் காதலின் உந்துதலில் தினமும் இரவில் கன்னிமாடத்தின் ரகசிய சுரங்கப்பாதை வழியே செர்வாவின் தனிமையறைக்கு கயத்தோனா சென்றுவருகிறார். இறுதியில் அச்சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுவிட இருவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். உணவெடுக்க மறுத்து தன் மரணத்தைத் தேடிக்கொள்ளும் செர்வாவின் சிரைக்கப்பட்ட தலையிலிருந்து தாமிரநிறக் கூந்தல் வளரத்தொடங்குகிறது. காதலையும் ஒரு பேயாக கருதும் மதத்தின் பழமைவாத நோக்கிற்கும் தர்க்க அறிவிற்குமிடையேயான முரண்பாடுகளைப் பேசுவதோடல்லாமல் காலனிய கால லத்தீன் அமெரிக்கா குறித்தவொரு சித்திரத்தையும் அளிக்கிறது
இந்நாவல்.

தன் சிறுவயதில் தேவலாயத்தில் சேவை செய்திருக்கிறார் மார்க்வெஸ். பாவமன்னிப்பு சடங்கின் போது சிறுவனான மார்க்வெஸிடம் பாதிரியார் ஒவ்வொரு பாவமாக வரிசையாக சொல்லி நீ இதைச் செய்திருக்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அதுவரை அந்தப் பாவங்களைப் பற்றி எதுவுமே தெரிந்திராத தான் பாதிரியாரின் கேள்விகளின் மூலமே அவற்றை அறிந்துகொண்டதாக நகைச்சுவையாக தன் சுயசரிதையில் குறிப்பிடுபவர் அன்றைய காலகட்ட கிறிஸ்துவ தேவாலயங்களின் செயல்பாடு, முதிய பாதிரியார்களின் வயோதிகத் தனிமை, முன்னிரவில் திரைப்படக்காட்சிகளுக்கான தணிக்கையை வெவ்வேறு எண்ணிக்கையுள்ள மணியோசைகளின் மூலம் மக்களுக்கு அறிவிக்கும் வழக்கம் போன்ற காலனியகால மதம்சார்ந்த உலகத்தை தனிமையின் நூறு ஆண்டுகள், காதலும் ஏனைய பேய்களும், கேடான நேரத்தில், முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் போன்ற நாவல்களில் மிக நுட்பமாக விவரித்திருக்கிறார்.

மார்க்வெஸின் பெரும்பாலான நாவல்களில் கதை நிகழ்வது மகதலேனா நதியை ஒட்டிய நிலப்பரப்பாக இருக்கும். மேலும் அந்நிலப்பரப்பின் அதீத வெப்பநிலை மற்றும் அதன் காரணமாக உருவான சியஸ்டா எனப்படும் மதியத்தூக்கம், திடீர் மழைப்பொழிவுகள், அக்டோபர் மாதக்குளிர் என்று இயற்கை சார்ந்த பின்புல வரைபடத்தை பல நாவல்களில் காணலாம். மேலும் அவருடைய நாவல்களில் சிலவற்றிலேயே ஒரிரு பிரதான மையக் கதாப்பாத்திரங்களின் மூலம் கதையை நகர்த்தும் உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். பல நாவல்கள் குழுக்களின் கதைகளாகவோ அல்லது பல பிரதானக் கதாப்பாத்திரங்களைக் கொண்டவையாகவோ இருக்கின்றன. தனிமையின் நூறு ஆண்டுகள், கேடான நேரத்தில், காதலும் ஏனைய பேய்களும் போன்ற நாவல்களை இதற்கு உதாரணங்கள். இவற்றோடு ஒரு வட்டக் கதைசொல்லல் (Circular Narrative) முறையைக் கொண்ட முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் நாவலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏஞ்சலா விக்காரியாவிற்கும் பயார்டோ சான் ரொமானுக்கும் திருமணம் முடிந்த கொண்டாட்டமான இரவில், தனிவீட்டிற்குச் சென்ற சில மணிநேரங்களிலேயே ஏஞ்சலா கன்னித்தன்மையை இழந்தவளென்று சொல்லி அவளைக் கொண்டுவந்து திரும்பவும் பெற்றோரிடம் ஓப்படைத்துவிடுகிறான் பயார்டோ. இந்த அவமானத்தின் காரணமாக மிகுந்த கோபமடையும் ஆஞ்சலாவின் சகோதரர்கள் அவள் கன்னித்தன்மை இழப்பிற்கு காரணமானவன் யாரென்று கேட்கும்போது அவள் சாண்டியாகோ நாசரின் பெயரைச் சொல்கிறாள். கொண்டாட்டங்கள் முடிந்த பின்னிரவில் தன் வீட்டிற்குச் சென்றுவிட்ட சாண்டியாகோ நாசர் காலையில் வெளியே வரும்போது அவனைக் கொல்ல விக்காரியா சகோதரர்கள் காத்திருக்கும் தகவல் விடிவதற்குள் நகரமக்கள் பலருக்குத் தெரிந்துவிடுகிறது. அதைத் தடுக்கவும் சாண்டியாகோ நாசரை எச்சரிக்கைப்படுத்தவுமான எல்லா முயற்சிகளும் தோல்வியடைகின்றன. காலையில் படகில் நகரைக் கடந்துபோகும் பிஷப்பைத் தரிசிக்க ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டுத் திரும்பும் சாண்டியாகோ நாசர் தன் வருங்கால மனைவியின் வீட்டிலிருக்கையில் விக்காரியோ சகோதரர்கள் தன்னைக் கொல்லக் காத்திருக்கும் செய்தியை தெரிந்துகொள்கிறான். அங்கேயே பதுங்கச்சொல்லும் தன் வருங்கால மாமனாரின் ஆலோசனையை மீறியும் அவர் எடுத்துப்போகச்சொல்லும் துப்பாக்கியை ஏற்க மறுத்தும் துணிச்சலோடு வெளியே வருபவன் நகரின் பிரதான சதுக்கத்தில் விக்காரியா சகோதரர்களைக் காணும்போது ஒருவித குழப்பமிகுந்த அச்சத்திற்கு ஆட்பட்டு நிலைகுலைய விக்காரியா சகோதரர்களால் அக்காலைநேரத்தில் தன்னுடைய வீட்டு வாசலிலேயே சாண்டியாகோ நாசர் கொல்லப்படுகிறான்.

விதிமையப் பார்வை இந்நாவலின் மையப்பண்பாக இயங்கிருப்பதைக் காணலாம். விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். மேலும் ஏஞ்சலா விக்காரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சாண்டியாகோ நாசர்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் மூலம் வாழ்வின் அபத்த அவலம் சுட்டப்படுகிறது. சாண்டியாகோ நாசரின் கொலையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி தற்செயலான சம்பவங்களின் மூலம் நிறைவேறாமல் போகின்றன என்பதை மார்க்வெஸின் பிரமாதமான விவரிப்பு விளக்குகிறது. மிகச்சமீபத்தில் சவுதி அரேபியாவில் தன் மனைவி கன்னியாக இல்லையென்று திருமணமான தினத்திலேயே கணவன் திருப்பி அனுப்பிய செய்தியொன்றை வாசிக்கையில் இந்த நாவல் நினைவிற்கு வந்தது. ஒரு பத்திரிகையாளனின் ஆகச்சிறந்த ஆற்றலான செய்தியை வழங்கும் உத்தியில் புனைவாக்கப்பட்டிருக்கிறது இந்நாவல்.

காப்காவின் உருமாற்றத்தை வாசித்தவுடன் அதன் பாதிப்பில் தன் முதல் சிறுகதையை எழுதியதாகவும் அப்போதைய தன் கதைகள் அறிவுப்பூர்வமானதாகவும் வாழ்க்கையோடு தொடர்பற்றிருந்ததாகவும் மார்க்வெஸ் சொல்கிறார். தாராளவாத கட்சியைச் சேர்ந்தவரும் கொலம்பியாவின் அடுத்த அதிபராவதற்கான பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்டிருந்தவருமான கெய்டன் 1948 இல் சுட்டுக்கொல்லப்படும்போது பகோட்டா நகரத்தில் மூண்ட கலவரங்களை நேரிடையாகக் கண்ட மார்க்குவெஸ் தான் எழுதவேண்டியது அரசியல் பிரக்ஞை கூடிய வேறுவகையான எழுத்து என்பதைப் புரிந்தகொண்டதாகச் சொல்கிறார்.

தன் புதிர்வட்டப்பாதையில் தளபதி (the general in his labyrinth), குலபதியின் இலையுதிர்காலம்(The autumn of the patriarch) போன்ற நாவல்களும் ஒரு கடத்தல் செய்தி என்ற அபுனைவு நூலும் அரசியலைப் பின்னணியாகக் கொண்டவை. தென்னமேரிக்க நாடுகளின் சுதந்திரத்திற்குப் போராடியவரும் ஒரு பரந்த தென்னமேரிக்காவைக் கட்டியெழுப்பக் கனவு கண்டவருமான சீமோன் டி பொலிவார் எதிர்ப்புகளால் பதவியிலிருந்து விலகி நாட்டிலிருந்து வெளியேறும் திட்டத்தோடு மகதலேனா நதிவழியே தன் உதவிக்குழுவோடு பயணிக்கிறார். தன் நினைவின் புதிர்வட்டப்பாதைக்குள் முன்னும் பின்னும் அலைவுற்றவாறு பயணிக்கும் அவருடைய நோய்மிகுந்த இறுதிநாட்களை ”தன் புதிர்வட்டப்பாதையில் தளபதி” நாவல் விவரிக்கிறது. பயணத்தினிடையே தற்காலிகமாக ஒரு தீவில் தங்கியிருக்கையில் அங்கு மற்ற நாய்களால் கடிபட்ட ஒரு நாயைக் காப்பாற்றி பொலிவாரின் உதவிக்குழுவினர் படகில் அழைத்துச்செல்வார்கள். அந்த நாய்க்கு பெயரிடக் கேட்டுக்கொள்ளப்படும்போது அவர் சற்றும் யோசிக்காமல் பொலிவார் என்று பெயரிடுவார். விடுதலையளிப்பவர் என்ற பட்டத்தைப் பெற்றவரும், தன் மதியூகத்தால் பல போர்களை வென்று சாகசங்களை நிகழ்த்தியவரும் பெண்களின் காதலுக்குரியவராகவும் விளங்கிய பொலிவார் தன் இறுதிநாட்களில் எவ்வளவு கைவிடப்பட்டவராக இருந்தார் என்பதை இந்தக் காட்சி நமக்குச் சுட்டுகிறது. தன் நண்பரும் பொலிவாரைப் பற்றியொரு நாவல் எழுத ஆராய்ச்சிகள் செய்தபின் அம்முயற்சியை கைவிட்டிருந்த எழுத்தாளருமான அல்வாரோ முயூடிஸிடமிருந்து இந்நாவலுக்கான கள அமைப்பை இரவல் பெற்று வீழ்ச்சியின் துயரார்ந்த மனோநிலையையும் நோய்மையின் வலியையும் பிரதிபலிக்கும் வகையில் எழுதியிருக்கிறார் மார்க்வெஸ்.

டொமினிக்கன் நாட்டின் சர்வாதிகாரியான ட்ரூஜில்லோவைக் கொலைசெய்யத் தீட்டப்படும் திட்டத்தை பின்புலமாகக் கொண்டு மரியா வர்கஸ் யோசா ஆட்டு விருந்து(the feast of the goat) என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். ட்ரூஜில்லோவைக் கொலை செய்யும் திட்டத்திற்கு அவருடைய எதிர்ப்பாளர்கள் இடும் சங்கேதப் பெயர்தான் ஆட்டு விருந்து. ரத்தமும் வன்முறையும் பரபரப்புமாய் யோசாவால் அந்நாவல் எழுதப்பட்டிருக்கையில் சர்வாதிகாரத்தைப் பற்றிய மார்க்வெஸின் எழுத்து குலபதியின் இலையுதிர்காலம் நாவலில் வேறு பரிமாணம் கொள்கிறது. கரீபிய நிலப்பரப்பைச் சேர்ந்த பல சர்வாதிகாரிகளின் வாழ்வை இணைத்து கற்பனைக் குறியீடாக உருவாக்கப்பட்ட ஒரு நித்ய சர்வாதிகாரியைப் பற்றி சர்ரியலிசமும் மாயா யதார்த்ததமும் இணைந்த நடையில் எழுதியிருக்கிறார் மார்க்குவெஸ். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரே பத்தியாக இடைவெளியற்று சொல்லப்பட்டிருக்கும் இந்நாவல் அதிகாரத்தின் தனிமை பற்றி பேசுவதாக மார்க்வெஸ் சொல்கிறார்.

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் தவறுதலாக தன் அணிக்கே சுயகோல் போட்ட கொலம்பிய கால்பந்து வீரர் ஆந்தெரேஸ் எஸ்கோபார் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையும் போதைமருந்துக் கடத்தல் தொழிலில் மன்னனாக இருந்த பாப்லோ எஸ்கோபார் குறித்த செய்தியையும் வாசித்த மேல்நிலைப்பள்ளிக் காலத்தில் கொலம்பியா என்பது வன்முறையான சமூகம் என்றெனக்குத் தோன்றியது. போகிற போக்கில் செய்திகளாக அன்று வாசித்தவற்றின் விரிவான பின்புல வரலாற்றை ஒரு கடத்தல் செய்தி நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. தேர்ந்த பத்திரிகையாளனின் நுணுக்கமும் புனைவெழுத்தாளனின் எழுத்தாற்றலும் ஒன்றுக்கொன்று முயங்கியிருக்கும் இந்த நூல் மார்க்குவெஸின் ஆளுமைக்கு இன்னொரு உதாரணம்.

எண்பதுகளின் தொடக்கத்தில் கொலம்பியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. போதைமருந்துக் கடத்தல் தொழிலால் பெற்ற அபரிமிதமான செல்வாக்கின் மூலம் தனி அரசாங்கமே நடத்தும் பாப்லோ எஸ்கோபர் உள்ளிட்டவர்களுக்கு இந்த ஒப்பந்தம் நெருக்குதலை உண்டாக்குக்கிறது. போதைமருந்துக் கடத்தல் குறித்த குற்றவரையறைகள் மற்றும் தண்டனைக் காலங்கள் பற்றிய தெளிவான நீதியமைப்பு கொலம்பியாவில் இன்னும் உருவாகாத சூழலில் தாங்கள் கைது செய்யப்பட்டால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவோம் என்ற அச்சத்தால் அரசாங்கத்திற்கு நெருக்குதலை உண்டாக்கும் வகையில் அவ்வொப்பந்தத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பல பத்திரிகையாளர்களை எஸ்கோபரின் குழுவினர் கடத்திவைத்துக்கொண்டு அரசாங்கத்துடன் பேரத்தில் ஈடுபடுகிறார்கள்.

கடத்தப்பட்டவர்களில் ஒருவரான பத்திரிகையாளர் மருஜா பக்கோன் தான் கடத்தப்பட்ட காலத்தின் அனுபவங்களை மார்க்வெஸிடம் பகிர்ந்துகொண்டு அதை ஒரு நூலாக எழுதக் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தகத்தை எழுதத் தொடங்கும்போதுதான் மருஜாவின் கடத்தல் சம்பவம் தனியான ஒன்றல்லவென்றும் இன்னும் பல கடத்தல்கள் இதே காரணத்திற்க்காக நிகழ்ந்திருப்பதையும் அறியும் மார்க்குவெஸ் கூடுதல் ஆராய்ச்சியும் களப்பணியுமாற்றி தான் முதலில் திட்டமிட்டிருந்த வடிவத்திலிருந்து முற்றிலும் வேறான வடிவத்திற்கு நகர்ந்திருக்கிறார். எந்தத் தரப்பையும் நல்லவராகவோ கெட்டவராகவோ சுட்டாமல் 360 பாகைக் கோணத்தில் இந்நூலை எழுதியிருக்கும் மார்க்குவெஸின் எழுத்தாற்றலை நாம் வியக்காமல் இருக்க முடியாது. இந்தப் புத்தகத்தின் மூலம் மட்டும் நீங்கள் பாப்லோ எஸ்கோபரை தெரிந்துகொள்வீர்களானால் அவரை அவ்வளவு மோசமானவராக உங்களால் உணரமுடியாது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானதாக இப்புத்தகம் இருந்தாலும் கடத்தலுக்குள்ளானவர்களின் உயிரச்சத்தை பேசும் இடங்களில் ஆகத்தேர்ந்த புனைவெழுத்தாளனின் ஆளுமையைக் காண்கிறோம்.

பக்க அளவில் சிறியதாயினும் அதுவெழுப்பும் மனவுணர்வுகளின் அடிப்படையில் தனிச்சிறப்பு கொண்ட ஒரு படைப்பாக கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை குறுநாவலைச் சொல்லலாம். உள்நாட்டுப் போரில் மகனை இழந்து வறுமையும் பசியுமிக்க வயோதிகத் தனிமையில் வாழும் கர்னல், அவரது மனைவி மற்றும் ஒரு சேவலை மையமாகக் கொண்டது இக்கதை. நீண்ட நெடுங்காலமாக ஓய்வூதியம் குறித்த நற்செய்தியை தினமும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் கர்னல். அவர் மகனால் வளர்க்கப்பட்ட, இன்னும் சிலமாதங்களில் நடக்க இருக்கின்ற சேவற்கட்டில் பரிசை வெல்லும் தகுதியுடையதாக கருதப்படுகிற அச்சேவல் அவ்வயோதிகத் தம்பதிகளுக்கு அவனை நினைவூட்டும் உயிராக இருக்கிறது.சேவற்கட்டிற்கு இன்னும் நாட்கள் பாக்கியிருக்கையில் அவர்கள் வறுமையின் அழுத்தம் கூடுகிறது. சேவலை விற்றுவிட்டால் வறுமையிலிருந்து மீளும் வழி கிடைக்குமென்றாலும் அதைச் செய்யவியலாமல் தடுமாறும் அத்தம்பதிகளோடு சேவலை வைத்து வாழ்வு ஆடும் சூதாட்டத்தை நுட்பமாக எழுதியிருக்கிறார் மார்க்வெஸ்.

என் ரசனையின் அடிப்படையில் மார்க்வெஸின் ஆகச்சுமாரான நாவலாக கேடான நேரத்தில் நாவலையும் மிகப்பிடித்தமானவைகளாக தனிமையின் நூறு ஆண்டுகள், காலரா காலத்துக் காதல், முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் மற்றும் குறுநாவலான கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை ஆகிய நான்கையும் சொல்வேன். அசோகமித்திரன் ஒரு பேட்டியில் தனிமையின் நூறாண்டுகளை விட தன் புதிர்வட்டப்பாதையில் தளபதி நாவலை தான் சிறந்ததாக கருதுவதாகச் சொல்லியிருந்தார். ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசனை, விருப்பம் மற்றும் வாசிப்பின் அடிப்படையில் சிறந்த படைப்பு என்பதற்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும். ஆயினும் மார்க்வெஸை வரலாற்றில் வாழவைத்த நாவல் தனிமையின் நூறு ஆண்டுகள் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

தனிமையின் நூறு ஆண்டுகளை வாசிக்கும் ஒருவர் அந்த நாவலில் பைபிளின் சாயைகள் இருப்பதை எளிதாக அறியலாம். விமர்சகரான் ஹெரால்டூ ப்ளூம் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை மெக்காண்டோவின் பைபிள் என்று குறிப்பிட்டிருக்கிறார். மெல்குவாதிஸ் மற்றும் நாடோடிகளால் மெக்காண்டாவிற்கு கொண்டுவரப்படும் புதிய விஷயங்கள், காணாமல் போய் திரும்பிவரும் ஊர்சுலாவின் மூலம் ஏற்படும் வெளியுலகத் தொடர்பு, புயந்தியா குடும்பத்தின் செல்வச்செழிப்பு, போரில் ஈடுபடும் கர்னல் அரோலினா புயந்தியா, போரின் முடிவு, வாழைப்பயிர் நிறுவனத்தின் வருகை, அதையொட்டிய மெக்காண்டோவின் மாற்றம், மெய்யா பொய்யா என்று நிரூபிக்கப்படாத 3400 வாழைப்பயிர் நிறுவனத் தொழிலாளர்களின் படுகொலை, நான்காண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பெய்யும் மழை, மெக்காண்டோவின் வீழ்ச்சி என்று ஒரு நூற்றாண்டுகால மெக்காண்டோவின் புறவரலாறு ஒரு இழையாக நீள்கிறது.

அந்தப் புற இழையின் உள்ளோட்டமாக ஜோஸ் ஆர்கோடியோ புயந்தியாவின் வித்திலிருந்து வரும் ஆறு தலைறைகளின் வம்ச வரலாறு நீள்கிறது. மிகமிக மெதுவாகவே நகரும் காலத்தில் ஒவ்வொரு தலைமுறையின் ஆண்களும் பெண்களும் தங்களுடைய மரணத்திற்குப் முன்பு பெருந்தனிமைக்குள் அகப்படுவதைக் கவனிக்கலாம். குறிப்பாக அமரந்தா, ரிபேக்கா, ரெமோதியாஸ் போன்ற புயந்தியா வம்சத்துப் பெண்களின் தனிமையும் மூப்படைந்த பெருங்கிழவியான ஊர்சுலாவின் இறுதிக்காலத் தனிமையும் ஆழமானவை. புதிர்மையும் ரகசியங்களும் கூடிய மனித இருப்பின் பலவகைத் தோற்றங்களை அளிக்கும் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் ஆதார பலமாக அதன் காவியத்தன்மையைச் சொல்லலாம்.

மிகத் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இலக்கியக் கோட்பாடுகளில் மிகப்பிரதானமானதாக மாய யதார்த்தவாதம் குறிப்பிடப்படுகிறது. எனினும் அக்கோட்பாட்டை அறிந்துகொள்ள விரும்பும் இன்றைய இலக்கிய மாணவனுக்கு ஏராளமான தகவல்கள் வாதப்பிரதிவாதங்களோடும் உதாரணங்களோடும் இணையத்தில் கிடைக்கின்றன. தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் நான் புரிந்துகொள்ளும் மாய யதார்த்தவாதம் என்பது தர்க்கத்தையும் யதார்த்தத்தின் எல்லைகளையும் மீறும்போது அல்லது யதார்த்தத்தோடு மாயத்தை கலக்கும்போது நமக்குப் புதிதாகக் கட்புலனாகும் வாழ்வின் கவித்துவமிக்க சாத்தியங்களைத் தரிசிப்பதாக இருக்கிறது. யதார்த்தம் செல்லமுடியாத தூரங்களுக்கு விரிவாக்கப்பட்ட யதார்த்தமான மாய யதார்த்தவாதம் நம்மை அழைத்துச்செல்கிறது.

வானிலிருந்து மஞ்சள் மலர்களாக உதிர்கின்றன என்ற யதார்த்தவாழ்வில் சாத்தியமற்ற காட்சியை ஒரு இறப்போடு தொடர்புபடுத்துகையில் அது நமக்கு அந்த இறப்பைக் குறித்த முற்றிலும் வேறான வண்ணத்தை அளிக்கிறது. ஜோஸ் ஆர்கோடியா கொல்லப்படும்போது இரத்தம் ஒரு நூலிழையாக தெருக்கள் வீடுகள் எல்லாவற்றையும் தாண்டி ஊர்சுலாவின் காலடியில் வந்து சேர்ந்தது என்ற காட்சி ஒரு தாயின் நுண்மையான உள்ளுணர்வு மகனின் மரணத்தை உணர்கிறது என்பதாக நாம் விளங்கிக்கொள்கிறோம். ரெமோதியாஸ் உயிரோடு வானேகி மறைந்தாள் என்பதை எள்ளவும் கள்ளமற்ற, அவ்வளவு தூய்மையான பேரழகு தேவதைக்கு மனித மரணம் என்பது பொருத்தமற்றது, அவள் வானகத்தில் வைக்கப்படவேண்டியவள் என்பதாய் ஒரு வாசிப்பை வைக்கலாம். நான்காண்டுகளாகத் தொடர்ந்து பெய்யும் மழையை ஒரு தூய்மையாக்க(purge) நிகழ்வின் குறியீடாகச் சொல்லலாம். இப்படி இந்நாவலில் புழங்கிவரும் பல்வேறு மாயக்கூறுகளுக்கு நாம் வெவ்வேறு வாசிப்புகளைக் கொடுக்கலாம்.

ஒரு பத்திரிகையாளராக இருந்ததாலோ என்னவோ மார்க்குவெஸ் பல்திறன் இயல்புடையவராய் வெவ்வேறு வகைப்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அதன் காரணமாகவே அவருடைய நாவல்களுக்குள் பொது அம்சங்களை இனங்காண்பது சிரமமாக இருக்கிறது. ஆயினும் லத்தீன் அமெரிக்க அரசியல் மற்றும் கலாச்சாரம், காலனிய காலச் சித்திரங்கள், நாகரீகத்தை நோக்கிப் பயணிக்கும் சமூகத்தில் மதத்தின் செயல்பாடு, கொள்ளை நோய்களைப் பற்றிய பதிவுகள், உக்கிரமான காதலுணர்ச்சி மற்றும் எல்லையற்ற காமத்துய்ப்பு, வெப்பமிகுந்த நிலவெளி, தொன்மக் குறியீடுகள், களிமிகுந்த கொண்டாட்டங்கள் மற்றும் எதைக்கொண்டும் நிரப்பவியலாத மனிதர்களின் தனிமையுணர்ச்சி, வாழ்க்கையை வேறாகப் பார்க்க கற்றுத்தரும் மாயக்கற்பனைகள் போன்றவற்றை அவருடைய நாவல்களின் சாரமாக நான் பார்க்கிறேன். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் மார்க்குவெஸின் எழுத்துக்களில் ரத்தமும் ஒயினும் கலந்திருந்தன என்று சொல்வேன்.

(கோவை இலக்கியச் சந்திப்பு-45 இல் வாசிக்கப்பட்டு புது எழுத்து இதழில் வெளியான கட்டுரை)


***********************************************

பின்குறிப்புகள்:-

1. கட்டுரையின் வடிவ அமைதிக்கு நாவல்களின் ஆங்கிலப்பெயர்கள் தடையாக இருந்ததால் நாவல் தலைப்புகள் தமிழாக்கப்பட்டுள்ளன. இதற்கு தன் ஆலோசனைகளை வழங்கிய அசதாவிற்கு நன்றி.

2. பாலியல் தொழிலாளர்கள் என்ற சொல்லின் தட்டைத்தன்மை காரணமாக பரத்தையர் என்ற சொல் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்கள் என்ற அர்த்தத்தில் இச்சொல்லைக் கருதவும்.

No comments: