Oct 26, 2024

வெள்ளி வில்

கதவுக்குப் பின்னால் ஒளிந்து
தயங்கிப் பார்க்கும்
கூச்சக் குழந்தையைப்போல
அடர்வரிசையில் முகங்காட்டுகிறது
மீசையின் முதல் நரை
மனம் கூவுகிறது
இதோ பார்…
உன் வாழ்வின் மத்திமம் நிறந்து நிற்கிறது
நானோ பின்னால் பார்க்கிறேன்
விலங்கிலிருந்து மனிதன் முதிர்ந்த
பெருந்தூரமாக அது இருக்கிறது
முடிவற்ற கண்ணாடிவெளியான காலத்தில்
மனிதர்கள் தங்களைப் பார்த்து நகர்கிறார்கள்
நான் இப்போது கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
முழுக்கண்ணாடியையும் நிறைக்குமளவிற்கு
வளர்ந்துகொண்டிருக்கிறது ஒற்றை நரைமுடி
பிறகு திறனையெல்லாம் மீறி
எதிர்காலத்திற்குள் ஊடுருவிப் பார்க்கிறேன்
ஆசை தீரத் தீர
பூகோளக்கனியை நான் உண்ணும் காட்சியைத் தவிர்த்து
கண்ணாடிவெளி நிர்வாணமாகத்தான் இருக்கிறது
யயாதி
சாபத்தின் வழியே உன் தசைகள் வரம்பெற்றவை
சிற்றின்பங்களையும் பேரின்பங்களையும் சலித்துச்சலித்துச் சலித்தவை
அந்த வாய்ப்பில்லாத நான்
வாழ்வோடு செய்துகொள்ளும்
உடன்படிக்கை அல்லது சமரசத்தின் சாட்சியாய்
சுவாசத்திற்குக் கீழே
இந்த ஒற்றை வெள்ளிவில் தோன்றியிருக்கிறது
ஆனாலும் இந்த வில்லை வைத்தது நானல்ல
அதுதான்.

No comments: