சின்ன வட்டம்
மிகவும் பொருத்தமானது
முட்டையோட்டுக்குள் வசிப்பது மாதிரிதான்
உயிரோடு இருப்பதற்கான எல்லாமும்
அதற்குள் இருக்கும்போது
எதற்கு மகா வட்டம்
எத்தனை முயன்றாலும்
இந்தப் பூமியை
கூழாங்கல்லைப்போல்
காற்ச்சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்ளமுடியாது
கனவுகளை இழத்தல்
என்று சொல்வதெல்லாம்
அலங்காரமான உயர்வுநவிற்சி
நனவே மீப்பெரும் கனவென்று
ஒப்பும் இப்போது
தன் நெஞ்சைப் பிளந்து காட்டுகிறது
வாழ்வு-உற்றுப் பார்க்கும்போது
துயரமானது எட்டுகிற தூரத்திலும்
மகிழ்ச்சியானது எட்டுகிற தூரத்திற்கு
ஓரடி தள்ளியும் இருக்கிறது
ஆகவே மீன்களுக்கு பொரியிடுவதுபோல்
கழிவிரக்கங்களை விசிறிவிட்டு
என் சின்ன வட்டத்திற்குள் வாழும்
பறவைகளோடு சேர்ந்து
நடக்கக் கற்றுக்கொள்வது
நிம்மதியானதாக இருக்கிறது.
No comments:
Post a Comment