Oct 26, 2024

கைத்துப்பாக்கி

டூமில் என்ற எழுத்துக்களோடு
கறுப்பு வெள்ளையில் ரத்தம் தெறித்த
காமிக்ஸ் புத்தகத்தில்தான்
துப்பாக்கிகள் அறிமுகமாயின
சினிமாக்களில் அவை வெடித்தபோது
சிவப்பாக ரத்தம் திரையில் தெறித்து
டூமில் சத்தங்கள் காதுகளைப் பிளந்தன
சுருள்கேப் சுற்றிய தீபாவளித் துப்பாக்கிகளால்
சுட்டு விளையாடியபோது
சத்தமும் புகையும்தான்
ரத்தமும் பிணமும் இல்லை
ஆனால் துப்பாக்கிகள் கற்பனையானவையல்லவென்றும்
ஏராளமான சவக்குழிகள்
அவற்றால் தோண்டப்பட்டிருப்பதையும்
துப்பாக்கி முனைகளில்
வரலாறு திசைதிரும்பியிருப்பதையும்
வளர்சிதையின் வழியே அறியும் இக்காலத்தில்
பூமியில் வெடிக்கக் காத்திருக்கும்
துப்பாக்கிகள் அச்சமூட்டுகின்றன
கடவுளுக்குச் சொந்தமான எல்லாம்
சாத்தானுக்கும் பாத்தியதையானதைப்போல்
நீதியும் அநீதியும்
ஒரே மாதிரியான சீருடை அணிந்து
ஒரே ரக துப்பாக்கிகளை ஏந்தியிருக்கின்றன
சீறும் ரவைகளில்
யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதென்பது
இறுதிநொடி வரை
குழப்பமாக இருக்கும்
இந்தக் காமிக்ஸ் கதையைப் படிக்கையில்
வலதுகையின் விரல்களை நீட்டிக்குவித்து
துப்பாக்கியைப் போலவே
நான் வைத்திருப்பது
ஒரு அனிச்சைச் செயலல்ல.

No comments: