கணிணித்திரையைப் பார்த்துக்கொண்டே செலுத்த வேண்டிய தொகையைச் சொன்னாள். மருத்துவமனையின் தாதியர் அல்லாத பணியாளர்கள் அணியும் சீருடைப் புடவை, ரவிக்கை. சற்று நேரத்திற்கு முன்புதான் பூசப்பட்ட மெலிதான முகப்பூச்சு, தூக்கலற்ற உதட்டுச்சாயம், உயரக்கொண்டை, அழகாக இருந்தாள். உரையாடுபவர்களின் மொழியைப் பொறுத்து ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் என்று வெவ்வேறு மொழிகளில் சரளமாக பதில் சொன்னாள். கவர்ச்சி. வேறெந்த கள்ளவுணர்வையும் தூண்டாத திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சி. இதுபோன்ற கவர்ச்சியைக் காணும்போதெல்லாம் கண்களில் வழக்கமாய் குமிழியிடும் ஈரத்தை ஒரு திரையைப் போர்த்தி மூடிக்கொண்டு பணத்தை நீட்டினான்.
ஏழரைக்கு வரும்போதே முன்னதாக ஏழெட்டுப்பேர் வரவேற்பறையில் காத்திருந்தார்கள். அவ்வறையின் ஒலி முடக்கப்பட்ட தொலைக்காட்சியில் புதிதாக வெளிவந்த ஊழல் பற்றிய பரபரப்புச் செய்திகளின் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. மருத்துவமனைகளின் பக்கமே அதிகமாக போகாதவன் கோவில்கள், திரையரங்கங்கள், நகைக்கடைகள் போன்றவற்றையே மக்கள் மொய்க்கும் இடங்களாக நினைத்திருந்தான். சகல நோய்களுக்கும் சிகிச்சைப்பிரிவுகளை கொண்ட இது போன்ற பெரிய மருத்துவமனைகளில் கூட்டம் குறையாமலிருப்பதை இப்போதுதான் நேரில் பார்க்கிறான். நோய்வாதைகளால் பாதிக்கப்பட்டவர்களை விடவும் அதற்கு அஞ்சுபவர்கள் வரும் இடங்களாக மருத்துவமனைகள் மாறிவிட்டதாகவும் ஒரு குறிப்பிட்ட சதவீதமான நோய் அல்லது நோய்த்தன்மை நலத்துடன் உட்பட்டது என்பதை எல்லோரும் மறந்துவிட்டதாகவும் நினைத்துக்கொண்டான்.
ஆனால் இந்தப்பிரிவில் இவ்வளவு கூட்டம் இருக்குமென்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. குழல் இனிது யாழ் இனிது என்று சொல்ல யாருக்கும் விருப்பம் இருக்காதுதான். வெறும் மழலை அல்ல. மழலைச்செல்வம். செல்வத்துள் வைக்கப்பட வேண்டியது. எல்லாவற்றிலும் தலையாய செல்வம். சுற்றுமுற்றும் பார்த்தான். இந்த முகங்களில் ஒன்றுகூட பொருள் வறுமை கொண்டதாக இல்லை. சமூகத்தில் இல்லாதவனாக சொல்லப்படுவனிடத்தில் இந்தச்செல்வம் வதிந்து கிடப்பதை அவன் தினமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்.
செலுத்திய பணத்திற்கான ரசீது, இவன் பெயரோடு பட்டைக்குறி அச்சடிக்கப்பட்ட ஒரு ஒட்டுத்தாள் சரம் இரண்டையும் கொடுத்தவள் இடப்பக்கமாக நீண்ட வராண்டாவைக் கைக்காட்டினாள். அங்கே இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று ஆய்வகம். அதற்கு பக்கவாட்டில் சார்த்தப்பட்டிருந்த இன்னொரு அறையின் மேல் ஒரு செந்நிற விளக்கு எரியாமலிருந்தது. கையுறைகளும் கழுத்தில் தொங்கும் மூக்குக்கவசத்தோடும் வெளிறிய பச்சையில் நீண்ட அங்கி போன்ற ஒன்றை அணிந்திருந்த ஆய்வகப் பணியாளன் ரசீதை சரிபார்த்துவிட்டு இவனிடமே நீட்டினான். பிறகு ஒரு நீலவண்ண மூடி கொண்ட சிறிய பிளாஸ்டிக் புட்டியில் ஒரு ஒட்டுத்தாளை கிழித்து ஒட்டி பக்கவாட்டு அறையை கண்களால் காட்டி மாதிரி சேகரித்து வரச்சொன்னான்.
கூகிள் தேடுபொறியில் மருத்துவமனையின் இந்தப்பிரிவைப் பற்றி தேடியபோது யாரோ ஒருவன் தன் அனுபவத்தை எழுதியிருந்த தகவல்களை இவன் படித்திருந்தான். அதில் அவன் அந்த பக்கவாட்டு அறையைப் பற்றியும் எழுதியிருந்தான். அறைக்கதவை தள்ளியபோது முழுக்க இருட்டாக இருந்தது. தான்தான் இன்றைக்கு முதல் ஆள் என்று நினைத்துக்கொண்டு அலைபேசி விளக்கு வெளிச்சத்தில் தேடி சுவிட்சை தட்டியவுடன் அறைமுழுக்க வெளிச்சம் பரவியது. அறைக்கதவை தாழிட்டவன் பிளாஸ்டிக் புட்டியைக் கண்ணாடித்தட்டு பதிக்கப்பட்டிருந்த சிறுமேசை மீது வைத்தான். அச்சிறிய அறையில் ஒரு தொலைக்காட்சி பெட்டி உயரத்தில் சுவரோடு ஒட்டியிருந்த மரப்பலகையில் பொருத்தப்பட்டிருந்தது. அதற்கு கீழே கழுவுகலன். இந்த மூலையில் இருந்த குப்பைக்கூடையை எட்டிப்பார்த்தான். காலியாக இருந்தது. பிளாஸ்டிக் புட்டியை வைத்த மேசையின் மீது துடைக்கும் ஒரு வெண்காகிதச் சுருட்டு இருந்தது. மேசை முழங்காலுக்கு இடிக்க அதை நகர்த்திவைத்துவிட்டு சோஃபாவில் முனையில் அமர்ந்தான்.
தொலைபேசியில் விசாரிக்கும்போது வீட்டிலிருந்தும் எடுத்துக்கொண்டு வரலாம் என்று சொல்லப்பட்டிருந்தாலும் முக்கால் மணி நேரத்திற்குள் கொண்டுவந்து கொடுக்கவேண்டும் என்பது சிரமமாக தோன்றியதால் இங்கேயே வந்தான். ஒரு கணம் எல்லாம் அபத்தமாக தோன்றியது. இப்படியொரு சூழல் வாழ்வில் நேருமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஒன்று நிகழ்வதற்கு முன்னால் அதைப்பற்றிய அச்சங்கள் மிகுந்தவனாகவும், நிகழும்போது எதையும் மாற்றும் திராணியில்லை என்று புரிதலோடு துணிச்சல் பெற்றவானாகவும் இருப்பதே அவன் வழக்கம். இதிலும் அதே போலத்தான். கொஞ்சநாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். ஆனால் இனியும் தாமதப்படுத்தமுடியாது என்ற கட்டத்தில்தான் சம்மதித்தான். முடிவெடுத்த பின்னாலும் இரண்டு வாரங்கள் தள்ளிப்போட்டான். இறுதியில் ஒரு வழியாக இதைக் கடந்துதான் ஆகவேண்டுமென்ற முடிவோடு தன் தயக்கங்களையும் அச்சங்களையும் ஒதுக்கி வைத்தான்.
ஆடைகளை விலக்கிக்கொண்டு இன்னும் வாகாக முனையில் அமர்ந்துகொண்டான். இடதுகையில் பிளாஸ்டிக் புட்டி.விதவிதமான உச்சரிப்பில் ஒரே மந்திரத்தைச் சொல்லித் திறந்த உடலின் குகை இப்போது திறக்க மறுக்கிறது. ஆயிரக்கணக்கான முறைகள் செய்த காரியம். பதின்மத்திலிருந்து தின்ற சலிப்பூட்டாத இனிப்புப்பண்டம். குனிந்து பார்க்கும்போது அவனுக்கே வெகு சலிப்பாக இருந்தது. புட்டியை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்துகொண்டான். அறையின் வெளிச்சம் உறுத்தலாக இருப்பது போல் தோன்றியது. எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு சற்று நேரம் நின்றான். இருட்டு கண்களுக்குப் பழக மறுத்தது. விளக்கு நிச்சயம் தேவை என்ற முடிவுக்கு வந்தவனாக மறுபடியும் விளக்கைப் போட்டுவிட்டு வந்தமர்ந்தான்.
ஒரு ரகசியமாக, அதிசயப் புதையலாக பெரும்பாலும் ஒரு சிறுவனுக்கு இன்னொரு சிறுவனால் உடலும் மனமும் விழிக்கும் பருவத்தில் கடத்தப்படும் செய்தி அது. அவனுக்கும் அப்படித்தான் வந்தது. கைமட்டம் என்று வார்த்தையை முதன்முதலில் அவன் நண்பன் சொன்னபோது ஒன்றும் புரியாமல் விழித்தான். இன்னொரு மூத்த நண்பன் சொல்லித்தந்ததாக நண்பன் விவரித்தபோது கேட்கவே வெகு கூச்சமாக இருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த இடம் ஒரு காடு. இவனை திரும்பி உட்காரச் சொன்னான் நண்பன். வானத்தில் பறந்த கழுகையும் மேகமற்ற ஆகாயத்தின் நீலத்தையும் நண்பனுக்கு முதுகு காட்டியவாறே பார்த்துக்கொண்டிருந்தான். சற்றுநேரத்தில் லேசான முனகலுக்குப் பின்பு இவன் தோளைத்தொட்டு நண்பன் கூப்பிட்டான். திரும்பியபோது காற்சட்டையை இழுத்துச் சொருகிக்கொண்டிருந்தவன் தரையைக் காண்பித்தான். அதைப் பார்க்கவே ஏனோ அறுவெறுப்பாக இருந்தது. சிந்திக்கிடந்த திரவத்தின் மீது எறும்பொன்று போய் நின்றது. கண்கள் மூடியவாறே மரத்தடியில் படுத்துக்கிடந்த நண்பனிடம் கிளம்புவதாக சொல்லிவிட்டு கட்டுண்டவன் போல் நடந்தான். மனம் திரும்பத் திரும்ப அதையே நினைத்தது.
அப்படித் துவங்கிய சுழல் அது. பல வருடங்கள் அதற்குள்ளேயே மிதந்து கொண்டிருந்தான். உலகம் தனக்குக் கொடுக்க வைத்திருக்கும் பேரின்பங்களின் வரிசையில் அது முதலாவதாக கிடைத்த்தாக நம்பினான். அவனுடைய உள்ளாடைகளை அவனே துவைத்துக்கொள்ளத் தொடங்கியதும் அப்பருவத்திலிருந்துதான். வெவ்வேறு விதமான ஊர்களில் வெவ்வேறு விதமான மனோநிலைகளில், இருட்டில், வெளிச்சத்தில் தன் உடலையே ஆகாயப்படகாக மாற்றிக்கொண்டிருந்திருக்கிறான். உடலை உலைக்களமாக்கும் சொற்களைக் கொண்ட புத்தகங்கள், காட்சி தொடங்குகிய பின்னர் உள்ளே சென்று முடிவதற்கு முன் வெளியேறிய திரையரங்கங்கள் என பல ஒன்று குவியும் புள்ளிகளாக அவ்வனுபவங்கள் இருந்தன. ஆனால் தவிர்க்கமுடியாத மெல்லிய குற்றவுணர்ச்சியும் அந்தத் தடத்தின் இணைகோடாக இருந்தது.
எதிர்பால் உடலை கற்பனையில் உருவாக்கிக்கொள்வதில் பெருத்த மனத்தடைகள் இருந்தன. அக்கணத்தில் மனக்கண்ணில் நிஜவாழ்வின் அறிந்த பெண்கள் தோன்றிவிட்டால் நீருற்றி அணைக்கப்பட்ட தணலைப்போல் மனம் கலைந்துவிடும். ஆகவேதான் அவனுக்கு படங்கள் நிறைந்த நீலப்புத்தகங்கள் விருப்பமானதாக இருந்தது. அதையும் மீறி சிலசமயங்களில் வேட்கை மீறி மனம் கட்டற்று அலையும். ஒரு கட்டத்தில் முகமற்ற வெற்று உடல்களை மட்டும் கற்பனை செய்துகொள்ள பழகிவிட அறம் சார்ந்த குற்றவுணர்வு அவனை விட்டு அகன்றது. அப்போதுதான் உடலின் கருணை பற்றியும் அவன் புரிந்துகொண்டான். வெப்பத்தை தோற்றுவிக்கவும் வெப்பத்தை வெளியேற்றவும் அது தன் இயல்பிலேயே வழிகளைக் கொண்டிருப்பது புரிந்தது. தன்னில் தோன்றும் வெப்பத்தை தணித்துக்கொள்ள அது இன்னொரு உடலை இரண்டாம்பட்சமாக வைத்திருப்பதாகவும் தோன்றியது.
சமீபகாலமாக இந்தப்பழக்கம் தேவையற்றுப் போயிருக்க முன்பிருந்த மனோநிலைக்கும் தற்கணத்திற்குமிடையே ஒருவிதமான இடைவெளியை உணர்ந்தான். அந்த முகமற்ற உடலை திரும்ப சிருஷ்டிப்பது பெரும் சிரமமாக இருந்தது. மேலும் மனதிலும் உடலிலிலும் கூடியிருந்த முதிர்ச்சியால் முன்காலங்களில் இயல்பாக தோன்றும் ஊற்று பீறிட மறுத்தது. அன்பு வைத்திருக்கும் பெண்ணை நினைத்து இதைச் செய்துகொள்ள முடியாது. அது மிகப்பெரிய ஆபாசமாக தோன்றியது. இன்னொரு பெண்ணை கற்பனை செய்துகொள்வது அன்பு வைத்திருப்பவளுக்குச் செய்யும் கயமையாக வஞ்சனையாக தோன்றியது. ஒரு கணம் வரவேற்பறை பெண்ணின் முகம் தோன்ற உடனடியாக மனதின் விழிப்பான பகுதி அதை அழித்தது. காமம் உடலில் இருக்கிற ஒன்றாக இருந்திருந்தால் அவன் இரண்டு நிமிடங்களில் இந்த அறையிலிருந்து வெளியேறி இருந்திருக்கக்கூடும்.
வெளியே யாரேனும் காத்திருப்பார்களோ என்று ஒரு கணம் யோசித்தான். பேசாமல் வீட்டிலேயே எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமோ என்றும் தோன்றியது. செய்த பிரயத்தனங்கள் எல்லாம் தோல்வியில் முடிய கண்களை மூடிக்கொண்டு நினைவின் ஆழத்தில் உதவக்கூடிய ஏதேனும் ஒன்றைக் கண்டடையும் வேகத்தோடு தோண்டினான். வேகவேகமாக காட்சிகளை விலக்கி அடுத்தடுத்த காட்சிகளுக்குள் ஊடுருவினான்.
பள்ளியின் விடுமுறை நாளொன்றில் காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது அவன் அந்தக் காட்சியைப் பார்த்திருந்தான். அது ஆடுகள் பயிராகும் காலம். அன்றைக்கு கொறங்காட்டிற்குள் கரிஞ்சி ஆட்டை செம்மறிக்கிடாய் துரத்துவதையும் கரிஞ்சு ஆடு இணங்கத் தயாராக இருப்பதையும் கண்டவன் கொஞ்சதூரத்தில் வேலியடியில் அமர்ந்துகொண்டு அவற்றையே வெறித்துக்கொண்டிருந்தான். ஒரு கணத்தில் கிடாய் கரிஞ்சியின் மீதேறுவதையும் அதன் சிறிய நீண்ட செந்நிறமான குறியையும் கண்டவுடன் அன்றைக்கு இவன் வாயிலிருந்து சலவாய் ஒழுகியது. இத்தனை ஆண்டுகாலத்திற்கு பின்னரும் அந்தக்காட்சி மனக்கண்ணில் நிகழ்ந்த துல்லியத்தோடு தோன்ற அவன் உடல் இளகத்துவங்கியது. தான் சிறுவனாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். இடக்கையில் பிளாஸ்டிக் புட்டியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். தவறவிட்டாலும் விட்டுவிடுவோம் என்று அபத்தமாக யோசித்தான்.
அந்த அறையிலிருந்து வெளியே வந்தபோது கொஞ்சம் விடுதலையாக உணர்ந்தான். கையில் பிளாஸ்டிக் புட்டியோடு இருந்த நாற்பது வயதுக்காரர் அந்த அறைக்கதவை தள்ளிக்கொண்டு போவதை ஓரக்கண்ணில் பார்த்தவாறே இவன் புட்டியை ஆய்வகப் பணியாளனிடம் நீட்டினான். கையுறை அணிந்த கரங்களால் கவனமாக வாங்கி ஒரு இயந்திரத்திற்குள் வைத்தான் அவன். எப்போது முடிவுகள் கிடைக்கும் என்ற இவன் ஆங்கிலத்தில் கேட்க இரண்டு மணி நேரம் என்றான். நாளை வந்து வாங்கிக்கொள்வதாக சொன்னவன் மறுநாள் மருத்துவருடனான ஆலோசனைக்கு முன்பதிவு செய்துவிட்டுக் கிளம்பினான். புகைக்கவேண்டும் போல தோன்றியது. பரபரப்பாக இயங்கத் துவங்கிவிட்ட மருத்துவமனையின் காட்சிகளை கவனித்தவாறே வெளியே வந்தவன் சிகரெட்டைப் பற்றவைத்து ஆழமாக உள்ளிழுத்தான்.
வெள்ளிக்கிழமையின் கறுக்கல் மிகுந்த காலைப்பொழுது. சாலையில் போக்குவரத்து பெருகத்துவங்கியிருந்தது. புகைத்து முடித்தவன் சாலையைக் கடந்து மறுபக்கம் வந்தான். சற்றுநேர காத்திருப்பிற்கு பின் வந்த குளிர்பதன மிதவைப்பேருந்தில் ஏறிக்கொண்டான். உட்காருவதற்கு இடம் கிடைக்காததால் அதன் கண்ணாடிக் கதவுகளினோரம் நின்று கொண்டான். உடல் களைப்பாக இருப்பதாக தோன்றியது. ஆனால் மனம் ஓய்வற்று எதையெதையோ சிந்தித்தது. உடலின் களைப்பை விட மனம் நீரில் நனைந்த பஞ்சுப்பொதியைப்போல் எடை கொண்டதாக தோன்றியது. பயம் என்னும் நீரில் நனைந்த மனம் என்னும் பஞ்சு.
ஒருவேளை தான் கூந்தப்பனையாக இருந்துவிட்டால் ஒரு உயிர்ச்சக்தி எப்போதும் தன்னிலிருந்து இன்னொன்றை உருவாக்கத் வலுக்கொண்டதாக இருக்கவேண்டும். உடலும் அப்படித்தானே. இடையில் நடத்துனர் வர புறவுலகிற்கு மீண்டான். சில்லறைகளையும் பயணச்சீட்டையும் சட்டைப்பையில் சொருகிக்கொண்டு மீண்டும் வெளியே வெறிக்க ஆரம்பித்தான். போக்குவரத்து தேங்கத் துவங்கியிருக்க பேருந்து மெதுவாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.
மரணத்தின் மீதான பயம் மனசுக்கு எப்போதும் போவதில்லை. வாழ்க்கையின் இத்தனை கசப்பிற்கு பின்னும் அடியில் ஒரு சொட்டுத் தேன் எப்போதும் இருக்கிறது. அதன் தித்திப்புதான் பற்று. தனது இரத்தச்சங்கிலி அறுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் மனம் அதற்குப் பின்னர் மரணத்தை அதன் பயத்தோடு சேர்த்தே ஒப்புக்கொள்ளத்தொடங்குகிறது. ஊரில் முப்பத்தைந்து வயதில் அத்தனை வசதிகள் இருந்தும் திருமணமில்லாமல் விபத்தில் செத்துப்போன அன்புச்செல்வனின் ஞாபகம் வந்தது. அவரது தாயும் தந்தையும் வயோதிகத்தில் பிதிர்கெட்டு புலம்பியது நினைக்கும்போதெல்லாம் துணுக்குறச் செய்வது.
இன்னும் வேகம் குறைந்தது பேருந்து. இடப்பக்கத்தில் அமந்திருந்தவர்கள் எல்லோரும் பக்கவாட்டில் பார்க்க இவனும் கண்ணாடிக்கதவின் வழியே பார்த்தான். சாலையினோரம் ஒரு இளைஞன் அடிபட்டுக் கிடந்தான். அவன் தலையிலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. அவனுடைய இருசக்கரவாகனம் பெரிய சேதாரமில்லாமல் ஒரு புறம் கிடக்க தலைக்கவசம் இன்னொரு பக்கத்தில் கிடந்தது. சில ஆட்டோ ஓட்டுனர்கள் ஓடிப்போய் பார்த்தார்கள். உயிர் இருப்பதுபோல் இவனுக்குத் தோன்றவில்லை. ஆட்டோ ஓட்டுனர்களின் உடல்மொழிகளும் அவ்வாறே பிரதிபலித்தன. மீறினால் இருபத்தைந்து வயதிருக்கும். சற்றுதள்ளி முதுகுப்பை கிடந்தது. கோரத்தை தாங்க முடியாமல் இவன் பேருந்துக்குள் முகத்தைத் திருப்பிக்கொள்ளும்போது விலையுயர்ந்த அலைபேசியால் சிலர் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். பேருந்து வலப்பக்கமாக விலகி நகர்ந்து வேகமெடுத்தது. இவனுக்கு அன்புச்செல்வனின் ஞாபகம் வந்தது.
வீட்டிற்கு வரும்போது மனைவி அவனை ஒரு புன்சிரிப்போடு பார்த்தாள். ஏனோ சிரிக்கத் தோன்றவில்லை. விபத்தைப் பற்றிச் சொன்னவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக குளியலறைக்குள் புகுந்தான். குளிக்கும்போது அடிபட்டுக் கிடந்தவனின் முகமே மனதில் அலைமோதியது. வாய்க்காலில் குளிக்கும் காக்காயைப் போல் இறைத்துக்கொண்டு வெளியே வந்தவனுக்கு சற்றே புத்துணர்வாக இருந்தது. பசி மந்தமாக இருந்தாலும் மேசையில் மணத்த உப்புமா நாவில் நீர்சுரக்க வைத்தது. இடுப்பில் துண்டை இறுக்கிக்கட்டிக்கொண்டு உட்கார்ந்தான். அள்ளி விழுங்கியவனின் நாவெல்லாம் கசப்பு படர முகம் சுருங்கியது. மனைவியைப் பார்த்து முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் கைகளைக் கழுவிக்கொண்டான். முகம் சுருங்கி உப்புமாவை சுவைத்துப் பார்த்தவள் வேறெதாவது செய்கிறேன் என்றதற்கு ஒரு மயிரும் வேண்டாம் என்று கத்தினான். அவளுக்குக் கண்களில் கதகதவென்று கண்ணீர் கட்டியது. சொல் தாளாதவளென்று தெரிந்திருந்தாலும் அவளை வதைக்க இன்னும் சில வார்த்தைகளை அவளுக்கு கேட்குமாறு முணுமுணுத்தான். உப்புமா தட்டைக் கையில் வைத்துக்கொண்டு திக்பிரமை அடைந்தவளாக நின்றுகொண்டிருந்தாள்.
கதவை இழுத்து அறைந்து சாத்திவிட்டு அலுவலகம் கிளம்பினான். வழியெல்லாம் ஏனோ படபடப்பாக இருந்தது. அவளிடம் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. காரணமே இல்லாமல் கோபப்படுவது அவன் வழக்கமாக இருந்ததில்லை. இன்றைக்கென்னவோ மனம் கட்டுக்கடங்காமல் அலைந்தது. பஞ்சு பஞ்சாய் பிரிந்து திசைக்கொன்றாய் இழைகள் மிதந்தன. அலுவலகத்தில் அவனுக்காக காத்துக்கொண்டிருந்த மேலாளர் அவன் வந்தவுடன் உரையாடல் அறைக்கு அழைத்துச்சென்று மந்தமாய் நகரும் அவன் புராஜெக்ட்டை விரைவுபடுத்த அவன் இன்னும் கூடுதலாய் உழைக்கவேண்டுமென்றார். மறுத்துப்பேசாமல் அவர் சொல்வதையெல்லாம் ஆமோதித்தான். வெளியே வந்தபோது மின்னஞ்சல்களை சோதிக்கவும் தோன்றாமல் புகைபிடிக்க சென்றான். இரண்டு சிகரெட்டுகளை தொடர்ச்சியாகப் புகைத்தவனுக்கு தொண்டை எரிந்தது. அவன் மேசையில் இல்லாமல் இருப்பதை மேலாளர் கவனித்துவிட்டு இன்னொரு சமயத்தில் குத்திக்காட்டுவார் என்று தோன்றியது. எரிச்சலான மனநிலையோடு அவசர அவசரமாக இருக்கைக்கு வந்தான்.
மின்னஞ்சல்களைச் சோதித்தவன் அலைபேசியில் மனைவியை அழைத்தான். அவள் அழைப்பை எடுக்கவில்லை. இன்னும் கோபம் தணியவில்லை போல என்று நினைத்தவன் மாலையில் சென்று சமாதனப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தவாறே வேலையில் மூழ்கிப்போனான். மதிய உணவிற்குப்பின் இருக்கைக்குப் போக விருப்பமற்று அலுவலக நூலகத்திற்குள் நுழைந்தான். சில ஆங்கில மாதாந்திர இதழ்களைப் புரட்டியவனின் கண்களில் அந்த அமெரிக்க இதழின் ஆசியப்பதிப்பு கண்ணில்பட அவ்விதழின் மையக்கட்டுரையின் தலைப்பு அவனுக்கு மெல்லிய அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் கொடுத்தது.
அமெரிக்காவில் விந்துதானம் எப்படி ஒரு பெரிய தொழில்துறையாக வளர்ந்திருக்கிறது என்பது பற்றியும் தான் தானமளித்த விந்தின் மூலம் பிறந்த குழந்தைகளை வெகுகாலம் கழித்து பார்க்க விரும்பியவன் பற்றியும் இத்துறையில் உள்ள சட்டச்சிக்கல்கள் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. இன்றைக்கு தான் அக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது தற்செயல்தான் என்றாலும் தற்செயல்கள் ஏன் இவ்வளவு தொடர்போடு நிகழ்கின்றன என்று குழப்பமாக இருந்தது. பேசாமல் இரண்டு மணிநேரம் காத்திருந்து ஆய்வுமுடிவை வாங்கியிருக்கலாமோ என்று தோன்றியது. தொலைபேசியில் அழைத்து ஆய்வு முடிவைக் கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தாலும் பின்னர் அந்த யோசனையைக் கைவிட்டான். அதற்குப்பின் அவனுக்கு வேலை ஓடவில்லை. வேலை செய்வதாக காட்டிகொண்டவன் மாலை சீக்கிரமே அலுவலகத்திலிருந்து கிளம்பினான். பேருந்திலிருந்து மீண்டும் மனைவியை அழைத்தான். இம்முறையும் எடுக்கவில்லை. அவனுக்கு கொஞ்சம் கோபமாக வந்தது.
கதவைத் திறந்தவள் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள். அவள் முகம் வீங்கியிருந்தது. அழுதிருப்பாளோ என்று நினைத்துக்கொண்டவன் சமாதானப்படுத்த நினைத்தாலும் அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனதைப் பார்த்து அப்படியே விட்டுவிட்டான். சற்றுநேரம் கழித்து எதுவும் நிகழாததுபோல இவன் சாதாரணமாய் பேச முயன்றான். ஆனால் அவள் முகத்தின் இறுக்கம் சூழலை சகஜ நிலைமைக்கு கொண்டுவருவதில் இடையூறு செய்தது. புகைப்பதற்க்காக மொட்டை மாடிக்கு நடந்தான்.
வானில் நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டிருந்தன. படுத்துக்கொண்டவன் சிகரெட் புகையை வானோக்கி ஊதினான். எத்தனை பிரயத்தனப்பட்டும் இந்தப் பழக்கத்தை விடமுடியவில்லை. சிகரெட் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் என்று விளம்பரங்கள் சொல்லுகின்றன. இங்காவது சிகரெட் பாக்கெட்டின் அட்டையில் கறுத்துப் பொசுங்கிப்போன நுரையீரல் படத்தைப் போடுகிறார்கள். பணியின் நிமித்தம் அவன் சென்றிருந்த அயல்நாடுகளில் எல்லாம் அட்டைகளில் இடுப்புக்குக் கீழே கறுப்பு நிறத்தில் பெருக்கல் குறி போட்ட படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அதை நினைத்துக்கொண்டவனுக்கு எரிச்சல் மண்டியது. எழுந்தவன் இன்னும் சில சிகரெட்டுகள் மிச்சமிருந்த பாக்கெட்டை அப்படியே கசக்கி வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த காலியிடத்தில் வீசிவிட்டு வந்து மறுபடியும் படுத்துக்கொண்டான்.
மாடிப்படியில் நிழலாட திரும்பிப் பார்த்தான். மனைவி எட்டிப்பார்த்துவிட்டுப் போனாள். பத்துநிமிடம் எதையெதையோ நினைத்துக்கொண்டு வானத்தைப்பார்த்துக் கிடந்தவன் எழுந்து கீழே போனான். இரவு உணவு மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க பாதி திறந்திருந்த படுக்கையறைக் கதவின் வழியே அவள் இழுத்துப்போர்த்திப் படுத்திருந்தாள். உணவைக் கண்டவுடன் அடங்கிக்கிடந்த பசி மீண்டது. அவனாகவே பரிமாறிக்கொண்டான். உண்டு முடித்தவனுக்கு உடனடியாக சிகரெட் புகைக்கவேண்டும் போலிருந்தது. சிகரெட்டுகளை கசக்கியெறிந்ததை நினைத்து நொந்துகொண்டான்.
மணி பத்தரையாகியிருக்க கதவைப் பூட்டிக்கொண்டு நடந்தான். தெருவிளக்குகளின் மஞ்சள் வெளிச்சம் வீதியோர மரங்களின் மேல் வழிந்துகொண்டிருந்தது. மளிகைக்கடை பூட்டும் நேரம். மறுபடியும் அரைபாக்கெட் வாங்கி ஒன்றை பற்ற வைத்துக்கொண்டான். மிதமான குளிர்நேரத்தில் எல்லா வீதிகளும் அடங்கியிருக்க மெதுவாக புகைத்துக்கொண்டே நடந்தான். நேராக வீட்டிற்குப் போகப் பிடிக்காமல் குறுக்குத்தெருக்களில் பொடிநடை போட்டான். மாடி வீடொன்றின் மேல்த்தள முகப்பில் அருகருகே நாற்காலி போட்டு அமர்ந்திருந்த ஆணும் பெண்ணும் கொஞ்சிக்கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு பார்க்காததுபோல் நடந்தான். திரும்ப அவன் வீட்டிற்கு வரும்போது மனைவி தூங்குவதுபோலான பாவனையில் படுத்திருக்கிறாள் என்று நினைத்தவாறே தலையணையை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவன் மெலிதான ஓசையில் தொலைக்காட்சியை ஓடவிட்டுவிட்டு படுத்துக்கொண்டான்.
வெவ்வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றி வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் தூக்கச்சொக்கில் அணைத்துவிட்டு ஹாலிலேயே உறங்கிப்போனான். விதவிதமான கனவுகள். ஒரு கனவில் பெரிய கடல்போன்ற திரவவெளி. அங்கே உயிரணுக்கள் எல்லாம் மீன்களைப்போல் நீந்துகின்றன. இவனொரு பெரிய மீனாய் அவற்றை எல்லாம் பிடித்து பிடித்து விழுங்கினான். பின்னும் மூண்ட தொடர்ச்சியற்ற கனவுகள் பலவற்றில் ஒன்றில் தான் இறந்து பிணமாகக் கிடப்பதை பார்த்தான். அவன் அம்மா அப்பா எல்லோரும் அவனைச் சுற்றியிருக்கிறார்கள். தன் பிணம் கிடப்பதை குழுமியிருந்த எல்லோருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த தானும் பார்த்தான். நான் சாகவில்லை சாகவில்லை என்று அவன் கத்தல் யாருக்கும் கேட்கவில்லை. தாளவொண்ணா கழிவிரக்கத்தில் அவன் கதறியழுதான். யாருமே அவனையும் அவன் கதறலையும் கவனிக்கவில்லை.
கனவின் அதிர்வில் விழித்தவன் மலங்க மலங்க விழித்தான். காலைப்பொழுதின் வெளிச்சம் கண்ணாடி ஜன்னல்களை ஊடுருவிக் கசிந்தது. சலவாய் ஒழுகி தலையணை பொட்டுப் பொட்டாய் ஈரமாகியிருந்தது. கடைவாயிலும் ஈரம் இருந்தது. எழுந்தவன் படுக்கையறைக்கதவை தள்ளிப்பார்த்தான். அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டவன் பல் துலக்கிவிட்டு தானாகவே தேனீர் தயாரித்துக்கொண்டு அமர்ந்து கூகிள் தேடுபொறியில் கனவின் அர்த்தங்களைத் தேடத்துவங்கினான்.
கிளம்பும்போது மனைவியையும் அழைத்தான். தலைவலியென்று அவனை மட்டும் போய்வரச்சொன்னாள். ஊடலின் நிமித்தம் வேண்டுமென்றே சீண்டுவது சிலசமயம் அவளின் கோபத்தை அதிகப்படுத்திவிடுவதுண்டு. இரண்டு மூன்று நாட்கள் நீடித்த பின்னர் அன்பை இன்னும் அதிகப்படுத்திவிட்டு ஊடல் மறையும். நேற்று அவளைக் கடிந்ததை நினைத்து வருந்திக்கொண்டான். மனம் ஏனோ மெல்லிய துயரமைதியில் அசைவாடியது.
நேராக ஆய்வகப் பணியாளனிடம் சென்றான். பெயரைச் சொன்னவுடன் அவன் கணிணியை இயக்கி ஆய்வுமுடிவுகளை அச்செடுத்தான். நெஞ்சில் ஒரு நடுக்கம். உறையை வாங்கிக்கொண்டு ஓரமாக நின்று பிரித்துப் கைகள் நடுங்கப் புரட்டினான். மனதிற்குள் சந்தோஷம் பரவி உடல் நடுங்கியபோது மனைவி அலைபேசியில் அழைத்தாள். மருத்துவர் அழைக்க அழைப்பைத் துண்டித்துவிட்டு அவர் அறைக்குள் போனான்.
எல்லாம் நல்லா வீரியமா, ஆரோக்கியமா இருக்கு, என்ன மாத்திரை சாப்பிடறே மருத்துவர் கேட்டார். மாத்திரை எதுவும் எடுத்துக்கொள்வதில்லையென்றும் முதல் முறையாக பரிசோதித்துக்கொண்டதாகவும் சொன்னான். அவர் வாழ்த்துச்சொல்லி விடைகொடுத்தார். வெளியே வரும்போது சனிக்கிழமை முற்பகலின் இளவெயில் வழிந்துகொண்டிருந்தது. அதனை ஊடுருவிப் பார்த்தவன் பிரபஞ்சம் முழுக்கவும் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான்.
No comments:
Post a Comment