சரோவுக்கும் எனக்கும் சரியாக மூன்று ஆண்டுகள் வயது வித்தியாசம். எனக்கு மூத்தவளாக இருந்தாலும் எங்களிடையில் அந்த வித்தியாசம் பொருட்படுத்தத்தக்க ஒன்றாக எப்போதும் இருந்ததில்லை. காந்தமும் இரும்பும்போல என்று சொல்வது தேய்வழக்காக இருந்தாலும் இதை விளக்கிவிட என்னிடம் வேறு பொருத்தமான சொற்களில்லை. உணர்வுகளின் அலைகளே தமக்குள் எல்லாவற்றையும் பரிமாறிக்கொள்வதால் நாங்கள் வெகுகுறைவான சொற்களாலேயே பேசிக்கொள்வோம்.
சரோவின் முகம் பூரணத்திலிருந்து பிறந்தது. இவ்வளவு காலத்திற்குப் பின்னும் அப்படித்தான் நினைத்துக்கொள்கிறேன். அந்தப் பூரணத்தைப் போலவே எள்ளளவும் இக்கணம் வரை என் நம்பிக்கையில் மாசில்லை. பெரிய தொட்டிக்கட்டி வீட்டின் வாசலில் கத்திக் கூப்பாடு போட்டவாறே விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் எங்களின் இரைச்சலுக்கு கரைகட்டும் மெளனத்தோடு சரோ உட்கார்ந்திருப்பாள். அவளுடைய ஒரு புன்னகை எங்கள் விளையாட்டின் இடையில் மிதந்துகொண்டேயிருக்கும். நீரோட்டமிக்க கற்கள் வெயிலில் மினுங்குவது போல மின்னிய அந்தக்கண்களின் ஒளியை நினைவின் உள்ளறைகளில் பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
ஆனால் சரோவால் விந்திவிந்தித்தான் நடக்கமுடியும். முதுகை சற்றே கீழாக வளைத்து சூம்பிய தன் இடதுகாலை அடி அடியாக எடுத்துவைத்து மெதுவாகத்தான் அவளால் நடக்க முடிந்தது. லாந்தர் விளக்கின் கீழே தேங்கும் இருளைப்போல் அவள் முகத்தின் பூரணவடிவின் ஒளிக்குக் கீழே அந்த சூம்பிய காலின் இருளிருந்தது. ஆனால் அந்த இருளின் சாயை ஒரு கணத்திலும் சரோவின் முகத்தில் படிந்து பார்த்ததில்லை. சொல்லப்போனால் நாங்கள் வளர வளர அவள் முகத்தின் பூரணம் பொலிவடைந்து கொண்டேயிருந்தது.
நான் குழந்தையாக இருந்தபோது சதாநேரமும் என்னைத் தூக்கி வைத்துக்கொண்டு சரோ உட்கார்ந்திருப்பாள் என்று பலமுறை அத்தையும் மற்றவர்களும் சொல்வதை கேட்டே வளர்ந்தேன். உள்ளூரிலேயே வாழ்க்கைப்பட்ட அத்தைக்கு சரோவைப்பற்றி பேசும்போதெல்லாம் தொண்டை இறுகி கண்கள் இளகிவிடும். இவ்வளவு வடிவான பெண்ணுக்கு இப்படியான நிலையா என்று அவளுக்கு முன்னால் மற்றவர்கள் ஆற்றாமைப்படும்போது அவள் எதை எதையே நினைத்து குமுறுவாள். ஏற்கனவே இளைப்பு நோய்கண்டு இளைத்துக்கிடக்கும் அத்தையின் உடல் மேலும் குறுகிவிடும்.
எங்கள் பால்யம் மிகக் குதூகலமானது. பெரிய சித்தப்பாவின் வீட்டில் இரண்டு தம்பிகள், சின்ன சித்தப்பாவின் வீட்டில் ஒரு தம்பி தங்கச்சி, நான் மற்றும் சரோ என எல்லோரும் மற்றவர்கள் சூழவே வளர்ந்தோம். இப்படி எல்லோரோடு சேர்ந்து வளரும்போதே நானும் சரோவும் மட்டும் தனியாகவும் வளர்ந்தோம். அப்போதெல்லாம் நான் சரோஜினி அக்காவைத்தான் கல்யாணம் கட்டிக்கப்போறேன் என்று சொல்லித் திரிந்ததாக பின்னாளில் கேள்விப்பட்டு புன்னகைத்திருக்கிறேன். என் பால்யத்தின் நினைவுகளில் என்னுடையதென்று தனியாக எதுவுமில்லை. எல்லாவற்றிலும் சரோவும் சேர்ந்திருந்தாள். பதினாறு வயதில் பூனை மீசை வளரத்துவங்கும் வரை சரோவிடத்தில் எனக்கு பால்வேறுபாடே தெரிந்திருக்கவில்லை. அவள் என் அனிச்சையாக, இருப்பதே தெரியாத உடலின் ஒருபாகம் போலிருந்தாள்.
ஊருக்குள்ளிருந்து இரண்டு பர்லாங் தூரத்திலிருக்கும் தோட்டத்திற்கு சனி ஞாயிறுகளில் பிள்ளைகள் எல்லோரும் போவோம். கிழக்கே நீளும் இட்டேரிப்பாதையில் தம்பிகளும் தங்கையும் முன்னால் ஓடிவிட சரோ ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்துக்கொண்டிருப்பாள். நான் அவளுக்கு பின்னால் வேலியை வேடிக்கை பார்த்துக்கொண்டும் எதாவது சினிமாப்பாட்டின் இரண்டு வரிகளைப் பாடிக்கொண்டும் போவேன். மாமனோ அல்லது சித்தப்பாக்களோ சைக்கிளில் கூட்டிச்செல்வதாக சொல்லும்போது சரோ நடந்தே வருகிறேனென்று மறுத்துவிடுவாள்.
பிள்ளைகளில் எங்கள் இருவருக்கு மட்டும்தான் பக்தி அதிகம். தலைமுறை தலைமுறையாய் முருகனை வழிபடும் குடும்பம். முருகனுக்கு உகந்த நாட்களில் அப்பா, சித்தப்பாக்கள் மற்றும் மாமன் நான்குபேரும் அதிகாலையிலேயே மலைக்குக் கிளம்பி மாலைநேரத்தில் திரும்புவார்கள். மற்றவர்கள் பஞ்சாமிதர்த்திற்கு முண்டியடிக்கையில் நானும் சரோவும் திருநீற்றின் மென்வாசனையில் முருகனின் பால்முகத்தை வணங்குவோம். அப்பா சித்தப்பாக்களை விட மாமனுக்கு பக்தி இன்னும் அதிகம். கந்தசஷ்டி கவசத்தை மனப்பாடமாக சொல்வார். மாமனிடமிருந்துதான் எனக்கு கந்தசஷ்டி கவசமும் அதன் வழி தமிழும் உள்வந்தன. சீக்கிரமே நானும் சரோவும் கந்தசஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்துவிட்டோம். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ஒப்பித்துக்கொள்வோம். அதோடு மாமன் எங்களுக்கு வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள் பாட்டும் வாய்மொழியாகவே சொல்லிக்கொடுத்தார். ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நாட்களில் முந்தின நாள் இரவு ஒருசந்தி சாப்பாட்டுக்குப் பின் நாள்முழுக்க முழுவிரதம்தான். பசிக்கிறதென்று அழுது முரண்டும் தம்பிகளுக்கு உப்புக்கலவாத அவல் மட்டும் கிடைக்கும். கீழே பெரிய டிரங்க் பெட்டிகளையும் அதன் மேலே சிறிய பெட்டிகளையும் அடுக்கி மேற்புறத்தில் எங்கள் எல்லோருடைய புத்தகங்களையும் வைத்து சிறிதும் அப்பழுக்கற்ற வெள்ளைவேட்டியால் போர்த்தி சரஸ்வதியை அமைப்பார் மாமன். பூசையின்போது மாமன் முதலடி எடுத்துக்கொடுக்க நான் நின்றுகொண்டும் சரோ உட்கார்ந்துகொண்டும் கண்மூடி மெய்மறந்து வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள் பாட்டை பாடுவோம். விரதத்தால் வயிற்றில் தேங்கியிருந்த பசி பாட்டில் கரைந்துபோக மொழியின் தேன் ஊனெல்லாம் விரவும்.
தம்பிகள் எல்லோரும் படிப்பில் வெகு சூட்டிகையாக இருக்க நானும் சரோவும் சராசரியானவர்களாக இருந்தோம். சரோ வெகு அழகாக படம்போடுவாள். அவள் கையெழுத்தும் மணிமணியாக இருக்கும். விதவிதமான சாமி படங்கள், இயற்கைக் காட்சிகள், பொங்கல் வாழ்த்தில் இருக்கும் நடிகர் நடிகைகளின் படங்கள் என்று தத்ரூபமாக வரைவாள். பொதுவாக நான் படிப்பில் சுமார்தான் என்றாலும் தமிழ்ப்பாடத்தில் எப்போதும் முதல் மாணவன். திருப்பாவை மனனம் போட்டியில் ஆண்டாளின் முப்பது பாட்டையும் கண்களை மூடிக்கொண்டு சொல்வேன். ஒப்பித்தல்தான் என்றாலும் என் மனம் உணர்ச்சிகளை அதில் ஏற்றிவிடும்.
சரோ வயதுக்கு வந்தாள். அவளுக்கு தெரட்டி செய்த அன்று, இரவு அத்தை மாலை மாலையாக கண்ணீர் உகுத்தழுதுவிட்டு இளைப்பெடுக்க மூச்சு வாங்கினாள். மாமன் அமைதியாக தனக்குள் கந்தசஷ்டிக் கவசத்தை முனகிக்கொண்டிருந்தார். ஏன் அத்தை அழுதாள் என்று அன்றைக்குப் புரியவில்லை. சின்னப்பெண்ணான சரோவுக்கு சீலையை சுற்றிவிட்டிருந்தார்கள். பாயில் உட்கார்ந்திருந்த அவள் தலைகுனிந்திருந்தாள். அதுவரை தினமும் அவளோடு படுத்து உறங்கிக்கொண்டிருந்த என்னை, அன்றைக்கு அம்மா வந்து இழுத்துப்போனாள். அதற்குப் பிறகு நான் அவளோடு சேர்ந்து உறங்க அனுமதிக்கப்படவில்லை.
சரோ கல்லூரிக்குப் போக ஆரம்பித்த வருடத்தில் நான் பதினொன்றாவது போய்க்கொண்டிருந்தேன். சித்தப்பா வீடுகளில் தம்பிகள் மற்றும் தங்கை எல்லோரும் வெவ்வேறு ஊர்களில் ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டார்கள். வீட்டில் சரோவும் நானும் மட்டுமே மீந்திருந்த அந்தக்காலத்தில்தான் பகலில் ஒளியைப்போலவும் இரவில் இருட்டைப்போலவும் எனக்குள் விதவிதமான கனவுகள் மூளத்துவங்கின. எப்போதும் தனிமையில் கனவுகளை நெய்ய பெரும் விருப்பமாக இருந்தது. முன்னைவிடவும் நான் மெளனமானவனாக மாறிப்போனேன். பாடப்புத்தகங்களை விடவும் கதைப்புத்தகங்கள் உவப்பாக இருந்தன. நான் நிஜமான மனிதர்களிடம் பேசுவதைவிடவும் கதாமனிதர்களோடு பேசுவது மகிழ்ச்சியானதாக இருந்தது.
விடுமுறை நாட்களில் சரோ படம் போட்டுக்கொண்டிருப்பாள். நான் ஏதாவது நாவலைப் படித்துக்கொண்டிருப்பேன். வயதுக்கு மீறிய புஸ்தகங்களை படிப்பதாக சரோ சொல்லும்போது தலையுயர்த்திப் பார்த்துவிட்டு மறுபடியும் கதைக்குள் மூழ்கிவிடுவேன். பிறகு அவள் வரைந்து முடிந்த படங்களைக் காட்டுவாள். சிலநாட்களில் நான் புஸ்தகத்தைத் தூக்கிக்கொண்டு கொறங்காடுகளுக்குள் சென்று ஏதேனும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொள்வேன். விரிந்த பச்சையோடும் அடர்ந்த மரங்களோடும் இருக்கும் கொறங்காட்டியில் முன்மதியத்தின் வெயில் வழியும்போது விரவிப்பரவும் மோன அமைதியில் நான் கதைப்பக்கங்களின் வழியே வேறெதோ பிரதேசத்திற்குள் அலைவேன். நான் இப்படி எப்போதும் புஸ்தகங்களோடு திரிவதையும் மோட்டுவளையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருப்பதையும் கண்டு இவனாக எதையும் சம்பாதிக்கப் போவதில்லை என்று அப்பா என் காதுபடவே பலமுறை சொல்லியிருக்கிறார்.
அதுவொரு விடுமுறை நாளின் முற்பகல். சோம்பலாக இருக்க படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு நான் சரோவைத் தேடிப்போனேன். வெளியேயிருந்து பார்க்க ஒரே வீடாகவும் உள்ளே தனித்தனியாகவும் இருக்கும் பழங்கால வீடு எங்களுடையது. எல்லோரும் தோட்டத்திற்கு போய்விட்டிருக்க அமைதிக்குள் மூழ்கிக்கிடந்த தொட்டிக்கட்டி வாசல்களில் வெயில் வழிந்துகொண்டிருந்தது. சற்றுநேரம் வெயிலையும் வானத்தையும் பார்த்தவன் பளபளப்பான தூண்களில் முகம்வைத்து அதன் குளிர்ச்சியை கன்னங்களின் வழியே உடலுக்குள் ஏற்றிக்கொள்ள முயன்றேன்.
எங்கே போனாள் இந்த சரோ? சத்தம் போடாமல் திடீரென்று முன்னால் குதித்து அவளை பயமூட்டவேண்டுமென்ற நினைப்போடு பூனைப்பாதத்தோடு அவள் அறைவாசலில் நின்று எட்டிப்பார்க்க அங்கே சரோ சுவரைப்பார்த்தவாறே முட்டிபோட்டு எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். அவள் முன்னால் சிவப்புநிற அட்டை கொண்ட ஒரு புத்தகம் இருந்தது. பாவாடை நுனி விலகியிருக்க அவளுடைய சூம்பியகாலின் வெண்ணிற பாதம் தெரிந்தது. நான் அறைவாசலில் நிற்பதை அவள் இன்னும் உணரவில்லை போல. பயத்தோடும் குழப்பத்தோடும் வெளியே இருந்த தொட்டிவாசலின் திண்ணையில் தூணில் சாய்ந்தவாறே உட்கார்ந்துகொண்டேன்.
மேலே தகதகத்த சுரியனை உற்றுப்பார்த்துவிட்டு கண்களை விலக்கியபோது கண்கள் இருண்டுகொண்டு வந்ததன. நான் அங்கிருந்து கிளம்பிவிடவே நினைத்தேன். ஆனாலும் எழுந்திருக்காமல் அறைவாசலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். விந்தி விந்தி வெளியே வந்த சரோ நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து என் பக்கத்தில் வந்து மெளனமாக உட்கார்ந்துகொண்டாள். அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தவன் அதன் வாசனையை முகர்ந்துவிட்டு அவளிடமே திருப்பிக்கொடுத்து விட்டேன்.
அவள் கண்களில் எனக்கு இன்னதென்று விளங்காத ஒரு புதிய ஒளி, தீட்சண்யம் இருப்பதாக தோன்றியது. தான் இயேசுவைக் கும்பிடுவதாகவும் இனியெப்போதும் இப்படித்தான் என்றவள் சொன்னபோது மெளனமாக வெயிலையே பார்த்துக்கொண்டிருந்தேன். மாமனுக்குத் தெரிந்தால் என்னாகும் என்று மெதுவாக முனகியபோது தேவன் பார்த்துக்கொள்வார் என்றவளின் குரலில் எந்தப் பிசிறுமில்லை. ஏன் என்னவென்று நிறையக் கேட்க நினைத்தாலும் இத்தனை ஆண்டுகளில் முதன்முதலாய் ஒரு தயக்கம் எழுந்து இடையில் நின்றது. அப்புறம் வருவதாய் சொல்லிவிட்டு நான் எழுந்து நடக்கையில் சரோ புத்தகத்தை நீட்டி இதைப்படியென்றாள். ஒரு சிறிய தயக்கத்திற்குபிறகு வாங்கிக்கொண்டு என்னுடைய அறைக்கு வந்து விட்டத்தைப் பார்த்தவாறே படுத்துக்கொண்டேன்.
நெஞ்சின் மேல் வைத்திருந்த புத்தகத்தை வெகுநேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக எடுத்து தீர்மானமில்லாமல் ஒரு பக்கத்தைப் பிரித்து வசனங்களைப் பார்த்தேன்.
“அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்”
புத்தகங்கள் நிரம்பிக்கிடக்கும் அலமாரியில் மற்ற புத்தகங்களிடையே சொருகி வைத்துவிட்டு எதுவும் செய்யத்தோன்றாமல் படுக்கையில் கிடந்தேன். சுவரில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் பாலமுருகன் வேலோடு தெரிந்தார். சரோவின் இந்த மாற்றம் வீட்டிற்குத் தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் என்னை பீடித்தாட்டியது. நிலைகொள்ளாமல் கிடந்தவன் மறுபடியும் எழுந்து அந்தப்புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினேன். அந்த மொழி எனக்கு பெரும் வசீகரமாக இருந்தது. பழந்தமிழ்ப் பாடல்களை மனப்பாடம் செய்வதை பழக்கமாக கொண்டிருந்த எனக்கு அவ்வசனங்கள் ஒரு எழுத்துகூட பிசகாமல் மனதில் பதிந்தன. இரண்டு வாரங்களில் அந்தப்புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன். அடுத்த சனிக்கிழமை நான் புத்தகத்தை சரோவிடம் கொடுத்தபோது அதை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொன்னவள் தன்னோடு சேர்ந்து ஜெபம் செய்ய என்னையும் கூப்பிட்டாள். மனதுக்குள் அலையடித்துக்கொண்டிருந்த நூலின் வாசகங்கள் என்னை உந்தித்தள்ளின. அவளுக்கு எதிரில் மண்டியிட்டு கரங்களை விரித்தேந்தினேன். சரோ ஒரு குறிப்பிட்ட அதிகாரத்திலிருந்த வசனங்களை மெல்லிய குரலில் வாசிக்கத்துவங்கினாள். நான் கண்களை இறுக்க மூடி எனக்கு தெரிந்த யேசுவின் முகத்தை நினைவிற்கு கொண்டுவர முயன்றேன். ஆனால் நான் வலுக்கட்டாயமாக முயல முருகனின் முகமே கணகளில் நின்றது. நான் எழுந்துகொண்டேன். சரோ ஜெபிப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். என்னால முடியல என்று சொன்னவன் திரும்பி வீட்டிற்கே வந்துவிட்டேன். அதற்கு பிறகான நாட்களில் நாங்கள் என்றைக்குமே அதைப்பற்றிப் பேசிக்கொள்ளவில்லை. சரோவும் என்னை வற்புறுத்தவுமில்லை. அவள் கல்லூரிக்குப் போவதும் வருவதுமாகவிருந்தாள்.
எது நிகழுமென்று நான் பயந்துகொண்டேயிருந்தேனோ அது நிகழ்ந்தது. அது குடும்பத்தில் பெரிய புயலையும் பின்னதன் தவிர்க்கமுடியாத அங்கமான பயமூட்டும் பேரமைதியையும் கொணர்ந்தது. சாட்டையை எடுத்துக்கொண்டு சரோவை அடிக்கப்போன மாமன் சலனமின்றி நின்றிருந்த சரோவைக்கண்டு அதை வீசியெறிந்துவிட்டு திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டார். விஷயத்தை செரிக்கமுடியாத ஊர் மாமனிடமும் அத்தையிடமும் குடும்பத்தினரிடமும் துக்கம் விசாரிக்க இழவுவீட்டின் மெளனத்தால் குமைந்தது வீடு. யார் யாரோ சரோவிடம் பேசிப்பார்த்தார்கள். ஆனால் சரோ எதற்கும் தளரவில்லை. அவள் கல்லூரிக்குப் போவது நிறுத்தப்பட்டது. அவள் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. மலைக்குப் போன மாமன் ஒரு வாரம் கழித்து அடர்ந்து வளர்ந்திருந்த வெண்ணிறத் தவசுடன் திரும்பினார். கடைசியாய் சரோவிடம் பேசச்சொல்லி எல்லோரும் என்னை வற்புறுத்தினாலும் நான் மறுத்துவிட்டேன். அதைப்பற்றியே பேசிப்பேசி ஒரிரு மாதங்களில் ஊர் ஒய்ந்துவிட்டது. ஆனால் மொத்தமாக குலைந்திருந்த மாமன் மட்டும் தன்னை தோட்டத்துச்சாளையிலேயே முடக்கிக்கொண்டார்.
நான் அவளைப் பார்க்கப் போகும் சமயங்களில் சரோ படம் போட்டுக்கொண்டிருப்பாள். இல்லையென்றால் கண்களை மூடி அமர்ந்திருப்பாள். அவள் முகத்தில் துயரம் அல்லது மகிழ்ச்சி என்று வகைப்படுத்தக்கூடிய எந்த உணர்வுகளுமில்லை. அடுத்தது காட்டும் கண்ணாடிபோல அம்முகமிருந்தது. அவள் பார்வையில் கூடியிருந்த ஈரம் அல்லது தணிவான அன்பு பெரும் குளிர்மையாக நிலத்தின் மீது விழுவதை அறிந்தனவனாக நான் மட்டுமேயிருந்தேன். தோட்டத்துச்சாளையின் விட்டத்தில் தூக்கிட்டுக்கொண்ட மாமனின் உடல் வீட்டு ஆசாரத்தில் கிடத்தப்பட்ட கணத்தில் மட்டும் அவளுடைய கண்கள் சற்றே மயங்கி இருதுளி கண்ணீர் துளிர்த்தன. பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய அக்கண்கள் சுவரோரம் ஒண்டி அமர்ந்துகொண்டன. வெகு பதட்டமிக்கவனாக நான் அந்த நாட்களில் இருந்தேன். சரோவை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு கூரிய சொல்லும் என் இருதயத்தைக் குத்திக்கிழித்தன. ஆனால் சரோ தன்னியல்பிலிருந்து சிறிதும் மாறாதவளாகவேயிருந்தாள்.
மாமனின் காடாற்று முடிந்த இரவில் பல நாட்களாக சரியான உறக்கமின்றி இருந்த நான் சீக்கிரமே படுத்துவிட்டேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவன் கண்ட கனவொன்றின் அதிர்வினால் உறக்கத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தேன். திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னலின் வழி ஈரமிக்க குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தாலும் எனக்கு வியர்த்துக்கொட்டியது. உதடுகளில் உப்புக்கரிப்பது போலிருந்தது. கீழ் உள்ளாடைக்குள் கசகசத்த ஈரப்பிசுபிசுப்பு குற்றத்தின் கழிவாக அருவெறுப்பூட்ட அதைக் கழற்றி அறையின் மூலையில் எறிந்தேன். என் கனவுக்குள் இருந்த சரோவின் நிர்வாண உடலை திரும்ப நினைப்பதற்கும் அஞ்சி விடிய விடிய விழித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நிரம்பப் பயமாக இருந்தது.
மூங்கில் கட்டைகள் வைத்து தென்னோலை வேயப்பட்டிருந்த கூரையில் அணிலொன்று என்னைக் குனிந்துபார்த்துவிட்டு ஓடியது. அந்த முற்பகலில் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் மேசையில் வைத்துவிட்டுப்போன செல்வம் என் கண்பார்வைக்கு தான் தெரியும்படி வெளியே தெற்கு வடக்காக போகும் சாலையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். இந்தப்பக்கம் கிழக்கே வெகுதூரம் வெட்டாரவெளி… நிறைய பிளாஸ்டிக் காகிதங்கள் செடிகளில் சிக்கி காற்றுக்கு சப்தத்தோடு விசிறிக்கொண்டிருந்தன.
காலையிலிருந்து எனக்கு மண்ட்டோவின் “அவன் தன்னுடைய ஆளுமையின் கைதி” என்ற வரி திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. எனக்கு ஆளுமை இருக்கிறதாவென்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் அதைப்போன்ற ஒன்று இருக்கிறது. அதிலிருந்து வெளியேற முடியாதவனாய் காலத்தின் முன் சிதைந்துகொண்டிருக்கிறேன். நான் வெகுகாலம் முன்பே ஊரைவிட்டு வெளியேறியிருந்திருக்க வேண்டும். அத்தனை கனவுகளைத் தாங்க கிராமத்து மனிதர்களுக்கு இயலாது. அதற்கு நான் நகரத்திற்கு சென்று என் அடையாளத்தை தேடியிருக்கவேண்டும். எல்லா அடையாளங்களையும் வெகு சிறிதாக்கி பிறகு ஒன்றுமேயில்லாமல் ஆக்கிவிடும் நகரத்தில் என் அடையாளத்தைக் காக்கவேண்டியதின் பொருட்டாவது சிதைவிலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கலாம்.
நடுவில் செல்வம் வந்து வண்டி சாவியைக் கேட்டான். எடுத்து நீட்டும்போது தான் திரும்ப வரும்வரை என் மேசையில் தேவையானவை எல்லாம் இருக்கிறதா என்று சோதிப்பவன் போல் ஒரு பார்வை பார்த்துக்கொண்டான்.
நானொரு பெருந்தோல்வியாளன். இந்த மனம் வாழ்வின் இருண்டபகுதிகளிலேயே தன்னை எப்போதும் வைத்துக்கொள்கிறது. பார்ப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் அதன் வழியே நடப்பதற்கும் எத்தனையோ நல்ல விஷயங்களாக சொல்லப்படுபவை மனிதனுக்கு இந்த வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் மனிதர்களின் மொத்த வாழ்க்கையையும் ஒரே கணத்தில் குலைத்துப்போடும் துயரங்கள் மட்டும் எப்போதும் என் நினைவில் அலையடித்தன். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே.
ஆனால் என்னதான் உலகின் பெருந்துயரை அறிந்தவனாக, மனிதனின் நிலையாமையைப் புரிந்தவனாக நான் என்னைப்பற்றி நினைத்துக்கொண்டாலும் நானொரு கடைந்தெடுத்த பூர்சுவாதான். கல்லூரிப்படிப்பை விட்ட நாளிலிருந்து பெருங்குடிகாரனாக மாறியிருக்கிறேன். கெட்டழிந்து போவதாக கடுமையாகச் சாடி குடிக்கக் காசுகொடுக்க மறுத்த என் தகப்பனாரிடம் நான் செத்துவிட்டால் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை பணத்தையும் சொத்தையும் என்ன செய்யப்போகிறாரென்று கேட்டவன்தான் நான். அவ்வளவுதான்…தினமும் காலையில் நான் வெளியே கிளம்பும்போது அன்றாடத் தேவைக்கு மேலான பணம் என் மேசையில் இருக்கிறது.
குடி என்ற பலகீனத்தைத் தவிர மற்றபடிக்கு நானொரு சாதுவான பிராணிதான். என் தந்தையாருக்கு நான் குடிக்கிறேன் என்பதைத் தவிர வேறெந்த அறப்பிரச்சனைகளையும் கொடுப்பதில்லை. ஊருக்குள் இருக்கும் என் வயதொத்த இளைஞர்கள் தங்களை விட வயது மூத்த பிறன்மனையிடம் உறவு வைத்துக் கொண்டு சீரழிவதைப் போல் சீரழிபவனல்ல. குடித்துவிட்டு ரோட்டில் கிடப்பதில்லை. ஒரு சொல் தவறுதலாக சொல்வதில்லை. நானுண்டு, என் புத்தகங்களுண்டு. காற்றில் மிதந்துபோகும் வண்ணத்துப்பூச்சியின் பாதைபோல எந்தக் குறுக்கீடுகளும் இல்லாமல்தான் என் லெளகீக வாழ்வு கழிகிறது. அதன் உள்வட்டத்தில் நான் என்னை உயிரோடு வைத்திருக்கும் துயரங்களை திரும்பத் திரும்ப நெய்கிறேன்.
என் ஆகப்பெருந்துயரம் சரோதான். அவளின் மீதான பிரேமை புற்றாக வளர்ந்து பெருந்தொந்தரவூட்டுகிறது. நான் குடிப்பதெல்லாம் அதைக் கரைப்பதற்காகவும்தான் என்று கற்பித்துக்கொள்கிறேன். இன்செஸ்ட், கைக்கிளை, பெருந்திணை என்பனவற்றில் என் நிலை எதில் சேர்த்தி என்று புரியவில்லை. ஆனால் தன் மடியில் வைத்திருந்த குழந்தையை சரோ இன்னும் இறக்கிவிடவில்லை என்பதை மட்டும் உணர்ந்தேயிருக்கிறேன். என் மனஅவசத்தை, வேட்கையை அவளுடைய சூம்பிய காலின் இடத்தில் என்னை வைத்துக்கொள்ளும் விருப்பத்தை இம்மியளவும் அவளிடம் காட்ட முடியாதவனாகவும், அவளை விட்டு தள்ளிப்போகவும் இயலாதவனாகவும் வாழ விதிக்கப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு சரோ வந்திருக்கக்கூடும். சரோவின் ஓவியங்கள் முன்னைவிட முதிர்ச்சியடைந்திருந்தன. அவள் அரூபமான ஓவியங்கள் கூட வரைகிறாள். தமிழகமெங்கும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது அந்தப் புத்தகத்தோடு போகிறாள். வெகு அழகாக தேவமகிமைகளைப் பற்றிப் பேசுகிறாள். நானோ கடவுளையே கைவிட்டுவிட்டேன். பிறகெங்கே தொழுவதற்கு புதியவரை ஏற்றுக்கொள்வது? வேலேந்திய பாலமுருகன் ஒரு கனவாக மட்டுமே நினைவிலிருக்கிறார். ஒருவேளை சரோவை நான் சுகித்த அந்தக்கனவு வராமலிருந்திருந்தால் நான் கடவுளை கைவிட்டிருக்க மாட்டேனோ என்னவோ.
திரும்பி வந்த செல்வம் வண்டிசாவியை மேசையில் வைத்தான். நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் அவற்றை வண்டிப்பெட்டிக்குள் போட்டுவிட்டு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். பிரதான சாலையிலிருந்து நான்கு தெரு உள்ளே போனால் அவளும் அத்தையும் வசிக்கும் தெருவிருக்கிறது. உச்சிவெயில் எரிந்துகொண்டிருந்தது. சாலையைக் கடந்து சரோவின் வீடிருந்த தெருவிற்கு வண்டியைத் திருப்பினேன். தென்னங்கீற்று பந்தல் போடப்பட்டிருந்த திண்ணையில் அமர்ந்திருந்த அத்தை தெருவை வெறித்துக்கொண்டிருந்தாள். முன்பைவிடவும் மெலிந்துபோய் கை கால்களெல்லாம் குச்சி குச்சியாக இருந்தன. சரோ நாளைக்குத்தான் வருகிறாளாம். நான் குத்தகைப்பணத்தை எடுத்து அத்தையிடம் நீட்டினேன். உள்ளே எடுத்துக்கொண்டு சென்றவள் திரும்பி வந்து காப்பி வைக்கட்டுமா என்றாள். வேண்டாமென்றவனிடம் மருந்துச்சீட்டையும் பணத்தையும் நீட்டினாள். சீட்டை மட்டும் எடுத்துக்கொண்டு போய் மருந்துகளை வாங்கி வந்து கொடுத்தேன்.
தெற்கே மெதுவாக பைக்கில் வந்தபோது தழுவிய காற்று வெயிலின் உக்கிரத்தை கொஞ்சமாக தணித்தது. சாலையை ஒட்டி மேடும் பள்ளமுமான நிலவெளி தோட்டங்களாகவும் தரிசு நிலங்களாகவும் இருபுறமும் இருந்தன. நாட்ராயன் கோவிலைத் தாண்டிய கரையில் பாலம் கட்டும் வேலை நடந்துகொண்டிருக்க தற்காலிக மண்பாதையில் நுரைத்திருந்த மண் மணத்தது. ரைஸ்மில்லைத் தாண்டியவுடன் ஊர்ப்பிரிவில் டீக்கடையில் வண்டியை நிறுத்தினேன். மூன்று மளிகைக்கடைகள், ஒரு ரைஸ்மில், ஒரு பஞ்சர் கடை, இரண்டு டீக்கடைகள், ஒரு டெய்லர் ஷாப் என விரிவாகிக்கொண்டிருக்கும் ஊர்ப்பிரிவை சிறுவயதில் பொட்டல்காடாக பார்த்திருக்கிறேன். அப்போதும் தெற்குவடக்காக போகும் ரோடு மட்டுமிருந்தது. டீக்கடையின் முன்னால் போடப்பட்டிருந்த பந்தல் குளிர்மையாக இருந்தது. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு ரோட்டைப் பார்த்தவாறு அமர்ந்துகொண்டேன். சரோ மறுபடியும் நினைவில் அலைமோதினாள்.
மாமன் இறந்தவுடன் சரோ திரும்ப கல்லூரிக்குப் போகத்துவங்கினாள். அப்பாவோ சித்தப்பாக்களோ அவளை அதிகமாக கடிந்துகொள்ள விரும்பவில்லை. அத்தைதான் தன் மகளுக்கும் சகோதரர்களுக்குமிடையில் அல்லாடினாள். அவ்வப்போது வெளியூர்களுக்கு போகத்துவங்கினாள் சரோ. அவளைத்தேடி சில புதியமனிதர்கள் ஆண்களும் பெண்களுமாய் ஊருக்குள் வந்தபோது ஊர் மிரண்டது. அது தனக்கென பல திரைகளைக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக மனிதசுவாசத்தில் கலந்திருக்கும் கீழ்மைகள் படிந்த கருந்திரை. இல்லாததுபோல் தோன்றும் அத்திரை எப்போதும் இருக்கக்கூடியது. சரோ அந்தத் திரைகளை கிழிக்க முயன்றபோது ஊர் சீறியது. அப்பா சித்தப்பாக்களின் வலிவு அந்தச் சீற்றத்தை சற்றே மட்டுப்படுத்தினாலும் முழுமையாக தணிக்க முடியவில்லை. என்னைத்தவிர குடும்பத்தில் யாருமே அவளோடு பேசுவதில்லை. விடுமுறைக்கு வரும் தங்கை தம்பிகள் மற்றும் சரோவுக்குமிடையில்கூட ஒரு இடைவெளியைக் கண்டேன்.
தான் ஊரைவிட்டு அத்தையுடன் பக்கத்து டவுனுக்கு குடி போக உத்தேசித்திருப்பதாக ஒரு நாள் சரோ என்னிடம் சொன்னாள். நான் எதுவும் சொல்லாமல் அவளுடைய அந்தப் பூரணமான முகத்தையே உற்றுப்பார்த்தேன். வெகு இயல்பாக பக்கத்தில் வந்தமர்ந்த சரோ என் கண்களை உற்றுப்பார்த்தாள். அவற்றின் செந்நிறத்திலிருந்து அவள் ஏன் எதையுமே அறிந்துகொள்ள மறுக்கிறாள்? அவளுடைய உடலிலிருந்து வீசிய வாசனை வெகு பரிசுத்தமானதாக இருந்தது. குடிப்பதை நிறுத்தச்சொல்வாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. தோட்டத்தை விற்கவேண்டுமென்ற சரோவின் முடிவிற்கு விடாப்பிடியாக அத்தை மறுத்துவிட்டாள். வருடம் ஒருவர் குத்தகைக்கு ஓட்டிக்கொள்ளும்படியும் பின்னால் வாய்ப்புக்கு தகுந்தபடி யாரோ ஒருவர் கிரயம் செய்துகொள்ளலாமென்று சொல்லிவிட்டாள். அப்பாவும் சித்தப்பாக்களும் சொத்து வெளியில் போகப்போவதில்லை என்று நிம்மதியடைந்ததை என்னால் உணரமுடிந்தது. சரோ ஊரைவிட்டு வெளியேறியதும் ஊர் நிம்மதியானது. தொடர்ந்து படிக்க ஆர்வமற்று கல்லூரியிலிருந்து நின்றுவிட்ட நான் பொழுதெங்கும் சரோவைக்கொண்டு கனவுகளை நெய்தேன் எப்போதும் தரைக்கு இறங்க வாய்ப்பற்ற மேகங்களைப்போல் அவை கூடுவதும் கலைவதுமாய் இருந்தன. நித்யத்தை எல்லையாக கொண்ட என் ரகசிய ஏகாந்தவெளியில் சூரிய சந்திரனாய் அவளே இருந்தாள்.
நானும் சரோவும் குடும்பத்தைக் குலைக்கவந்த தறுதலைகள் என்பதைப்போன்ற பேச்சு ஊருக்குள் நிலவினாலும் அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. பயனடைய வேண்டிய ஒன்றாக எனக்கு வாழ்வில்லை. அது காலி செய்யப்படவேண்டிய கோப்பை. அவ்வளவே. காலையில் எழுந்து நூலகத்திற்குப் போவது , பிறகு அப்படியே பகல் நேரக்குடி. பிறகு சரோவின் வீடு…மாலைநேரக் குடி…முன்னிரவில் வீடு என்று என் கூடு மிகச்சிறியது. அரிதாக சில மாலைநேரங்களில் தோட்டத்துவெளியில் அமர்ந்துகொண்டு பொழுது விழுவதையும் மேற்குவானில் அதன் வண்ணங்கள் சிதறிக் கிடப்பதையும் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த வண்ணங்களிடையேயும் சரோவின் முகமே எனக்குத் தெரியும்.
அத்தை இறந்துவிட்டாள். தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டதாக சரோ சொன்னாள். எங்கள் குடும்பத்தைத் தவிர ஊரிலிருந்து யாரும் வரவில்லை. ஆனால் சரோவின் நண்பர்கள் நிறையப்பேர் வந்திருந்தார்கள். வெளியூர்களில் இருந்து சரோவைப் பார்க்க வரும் அவர்களில் சிலர் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தார்கள். பக்கத்து நகரத்தின் மின்மயானத்தில் எரித்துவிடலாமென்று முடிவு செய்யப்பட்டு பெரும்பாலான காரியங்களை சரோவின் நண்பர்களே முன்னின்று செய்தார்கள். அதில் கறுப்புப்பேண்டும் வெள்ளைச்சட்டையும் சற்றே வழுக்கைத்தலையுமாக நாற்பது வயது மதிக்கத்தக்கவர்தான் மிக முக்கியமானவராக இருந்தார். அவரை இன்றைக்குத்தான் பார்க்கிறேன். அவர் என்னைப்பார்த்து சற்றே வருத்தமான புன்னகை செய்தார். அவர் சரோவிடம் பேசும்போதெல்லாம் எனக்கு ஏனோ சஞ்சலமூட்டும் மனக்குறுகுறுப்பு தோன்றியது.
அப்பா சித்தப்பாக்கள் மூவரும் ஓரமாக உட்கார்ந்திருக்க இடையில் ஒருமுறை நான் சென்று குடித்துவிட்டு வந்தேன். எந்தச்சடங்குகளுமில்லை. மாலையில் வீடு காலியாகிவிட்டது. எங்கள் வீட்டில் எல்லோரும் மின்மயானத்தில் இருந்து திரும்பியபின் அப்படியே வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். அப்பா பேசியதிலிருந்து ஊருக்குள் வீட்டில் இழவு காணப்போகிறார்கள் என்பதை மட்டும் யூகித்தேன். சீக்கிரம் வரும்படி சொல்லிவிட்டுத்தான் அம்மா போயிருந்தாள். நான் புகைத்துக்கொண்டு சரோ வீட்டின் வாசற்திண்ணையில் அமர்ந்திருந்தேன். நாற்பது வயதுக்காரரும் யாரோ ஒரு மூதாட்டியும் சரோவிடம் தணிவான குரலில் உள்ளே பேசிக்கொண்டிருந்தார்கள். சற்றுநேரத்தில் அந்த மூதாட்டியும் கிளம்பிவிட நாற்பது வயதுக்காரர் என் பக்கத்தில் அமர்ந்தார். புதிய சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு அவரிடம் பாக்கெட்டை நீட்டினேன். அவர் புன்னகையோடு மறுத்துவிட்டார்.
சரோவும் திண்ணையில்தான் அமர்ந்திருந்தாள். ஒரு அமைதி. என்னை பதட்டமூட்டும் மனதை அறுக்கும் ஒருவித அமைதி. யாராவது பேசுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் இருவரும் மெளனமாகவே இருந்தார்கள். சாம்பலாய் உதிரும் சிகரெட்டையே பார்த்தவாறு புகைத்தவன் அதை கீழே போட்டு மிதித்துவிட்டு எழுந்தேன். சரோ இருக்கச்சொல்வாள் என்று நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. போய்விட்டு வருகிறேன் என்று சொல்ல நான் நினைத்தேன். ஆனால் சொல்லமுடியவில்லை. வெறுமனே தலையசைத்தேன். அவளும் தலையசைத்தாள். நாற்பது வயதுக்காரர் எழுந்து நின்று விடைகொடுத்தார்.
No comments:
Post a Comment