Apr 22, 2015

அமீபா

கண்களுக்கு அண்மையிலும்
கைகளுக்கு சேய்மையிலும்
அற்புதங்களை நிகழ்த்திவிட்டுக் கலையும்
மேகக்காட்சியைப் போலவேதான் இதுவும்
அது தன் தாபத்தை
கண்களாலும் தீர்த்துக்கொள்வதால்
எவராலும் தொந்தரவூட்டப்படாத
கல்லறைத்தனிமையின் ஏகாந்தத்தோடு
பின்மண்டையிலும் இமைகள் அசைகின்றன
மேலும்
முன்னங்கால்களுக்கு
கைகள் என்றும்
பெயர் சூட்டியிருக்கிறது நாகரீகம்
ஆனால்
கைகளை முன்னங்கால்களாக மாற்றிக்கொண்ட
ஒரு மிருகம்
எதைப்பற்றியும் யோசியாமல்
தன்வெளிக்குள் துகிலுரிகையில்
தன் முன்னங்கால்களை
கைகளாக மாற்றிக்கொண்ட
ஒரு மனிதன்
தன் கரங்களில் துகில் வளர்க்கிறான்
இரண்டிற்குமிடையான தடுமாற்றத்தில்
நீதியின் சுத்தியல்
ஒரு ஆண்குறியின் மீது
ஓங்கி அறையப்படுகையில்
அதனிலிருந்து அமீபாக்கள்
சுதந்திரமாய் பிரிகின்றன.

No comments: