ஆந்தையின் உலகம் இரவில் பிறக்கிறது
இருள்தான்
எவ்வளவு துல்லியமான கண்ணாடி
அதன் வழியே
அத்தனையையும் அது பார்த்திருக்கிறது
மனிதர்களின் குற்றவிருப்பை
கணங்களில் சூலுறும் கயமையை
நான்கு கால்களில்
அவர்கள் ஓடித் தாவுவதை
பூரண நிலவொளியில் வைத்து
கழுத்து அறுக்கப்படுபவனை
யாராலும் நினைவுகூரப்படாமல் போகும்
தற்கொலைகளை
எரித்த சவத்திலிருந்து
எலும்புக்கூடுகள் எழுந்து நடப்பதை
வெவ்வேறு நிறமுள்ள தோல்களுக்குள்ளிருந்து
ஒரே நிறமான குருதி சிந்தப்படுவதை
அடையாளமற்று பிரேதங்கள் தள்ளப்படும்
பொது சவக்குழிகளை
கடலைப் புணர விரும்பி
இயலாமல்
அதற்குள் சுயமைதுனம் செய்பவர்களை
உலகெங்கும்
ஆளரவமற்ற பேருந்து நிறுத்தகங்களில்
பூனை நடையிடும் பரத்தையர்களை
இரவில் துரத்தப்படும் பெண்களை
வலியைச் சொல்ல
மொழியறியாமல் வீறிடும் குழந்தைகளை
ஆண்டாண்டு காலமாய்
அத்தனை கோடி நட்சத்திரங்களின் தனிமையை
ஆந்தை பார்த்திருக்கிறது
அதற்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது
மனிதர்களுக்குத் தெரியவில்லை
ஒளிவந்து இருளடைவதால்
பாவம்
தான் காண்பது பகற்கனவல்லவென்று
அதற்கும் சொல்லத் தெரியவில்லை.
No comments:
Post a Comment