May 2, 2015

சிறுபழுதோடும் மிளிர்கல்


பொதுவாக எங்கள் ஊரும் சுற்றுவட்டாரமும் வறண்ட பிரதேசம். வறண்ட என்ற சொல்லுக்கு நீங்கள் முழுப் பாலைவனத்தைக் கற்பனை செய்யவேண்டியதில்லை. ஆற்றுப்பாசனப் பகுதிகளைப் போல் பசுமையில்லை, அவ்வளவுதான். மழையும் கிணற்றுப்பாசனமுமே விவசாயத்தின் ஆதாரம். எம்.ஜி.ஆர் காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் வறட்சியின் காரணமாக பத்தாண்டுகளுக்கு மேல் அதில் நீர் வரவில்லை. இப்போது வருஷாவருஷம் எதோ பேர் பண்ணுகிறார்கள்.

மழை பெய்தால் ஒரிரு வருடங்கள் செழிப்பாக இருக்கும். பருவம் பொய்க்கும் வருஷங்களில் மனிதர்கள் மற்றும் பண்டம்பாடிகளுக்கான குடிதண்ணீர் அளவிற்கே கிணற்றில் நீரிருக்கும்.தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த காலத்தில்தான் முதன்முதலாக பச்சைக்கல் என்பதைப் பற்றி அறிந்துகொண்டேன். ஆரம்பத்தில் கற்களைப் பற்றிய விவரங்களை அறியாமல் சகட்டுமேனிக்கு பொறுக்கி வந்து தந்தையாரிடம் காட்டுவேன்.அவர் கற்களிடையேயான வித்தியாசங்களைச் சொல்லுவார். அந்த ஆண்டு கோடை விடுமுறையில் ஆடுமேய்த்தவாறே நானும் தம்பியும் பச்சைக்கல் பொறுக்கி விற்றோம். சம்பாதித்த தொகை ரூபாய் ஆயிரத்தி நூறு. நினைவறிந்த முதல் சம்பாத்யம்.

அழகிய சிறுவடிவங்களில் பட்டை தீட்டப்பட்டு ஆபரணங்களில் பதிக்கப்படும் கற்கள் அவை என்பதாக என் ஆரம்பப் புரிந்தலிருந்தது. பச்சைக்கல்லை இரண்டு விதமாக சேகரிக்கலாம். ஒன்று நிலத்தின் மேற்பரப்பில் கிடக்கும் கற்களைத் தேடிப்பொறுக்குவது. இதனை ”மேற்கல்” என்று சொல்வோம். வெயிலுக்கு நூல் மின்னியவாறு மண்ணில் தெரியும். இங்கே நூல் என்பது அதன் தரத்தைக் குறிக்கும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தில் குழி தோண்டி கல் வெட்டுவது இரண்டாவது விதம்.

நிலத்தின் மேற்பரப்பில் சிறுகுழிகள் தோண்டும்போதே ”கால்” இருக்கிறதா என்று பிடிபட்டுவிடும். இங்கே கால் என்பதை பச்சைக்கல் இருப்பதின் தடயத்தை உறுதிப்படுத்தும் மண்வாகு என்பதாகச் சொல்லலாம். தோட்டங்களும் கொறங்காடுகளும் மாறி மாறி இருக்கும் இப்பகுதி நிலவெளியில் கொறங்காடுகளில் நிறையக் கல்லுக்குழிகளைக் காணலாம். நாற்புறங்களிலும் கிளவைமுட்களால் வேலியடைக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களே கொறங்காடுகள் எனப்படுகின்றன.

மேற்கல்லாக இருந்தாலும் வெட்டியெடுக்கப்பட்ட கல்லாக இருந்தாலும் அக்கல்லில் நல்ல நூல் இருக்கவேண்டும். மேற்கல்லில் பல டால் ஆக இருக்க வாய்ப்புண்டு. எச்சிலால் தொட்டு கல்லைத் தேய்த்துப்பார்த்தால் அது நல்ல நூல்கல்லா அல்லது டாலா என்று தெரிந்துவிடும்.இன்னும் விளக்கமாகச் சொன்னால் நல்ல இறுக்கமான உடற்கட்டோடு இருப்பவர்களைப் போன்றது நூல்கல். பொதபொதவென்று குண்டாக இருப்பவர்களைப் போன்றது டால் கல்.

நூல்கல், ஒளி ஊடுருவும் வகையிலுள்ள பச்சை நிறமுடைய கற்கள் (இவை ரீப் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன),மற்றும் சிவப்புக்கற்கள் என்பவை எங்கள் பகுதியில் கிடைத்த கற்களில் நானறிந்தவை. கற்களின் உள்ளே பிளவோ அல்லது கோடுகளோ தெரிந்தால் அக்கற்கள் ”பழுது” ஆகும். நூலைப் பாதிக்கும் வகையில் கற்களின் மேற்பரப்பு சொரசொரப்புடன் இருந்தால் அக்கல் ”புரை” எனப்படும்.வட்டார வழக்கில் பொரை. நூல் தெளிவாகத் தெரியாதவண்ணம் கற்களுள் மூட்டமாக இருந்தால் அக்கல் ”மந்தம்” என்ற பெயரில் அழைக்கப்படும்.பொரையோ பழுதோ மந்தமோ இல்லாத ஒரு கல்லே நல்ல தரமான பச்சைக்கல் ஆகும். கல்லைப் பட்டை தீட்டுவது ”கல் தேய்த்தல்” என்று சொல்லப்படும்.எங்கள் பகுதியில் இத்தொழிலின் தலைநகரம் காங்கேயம் ஆகும்.

எங்கள் சுற்றுவட்டாரத்தில் ஒரு நான்கைந்து கிராமங்களில் பச்சைக்கற்கள் நிறையக் கிடைத்தன. இவற்றைத் தவிர பெருந்துறை, சென்னிமலை மற்றும் கரூர் பகுதிகளில் இத்தொழில் பரவலாக நடைபெற்றது.மிகப்பெரிய வறட்சி நிலவிய அக்காலகட்டத்தில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட சிறுவர்கள் தொழில் செழித்துக்கொண்டிருந்த திருப்பூரின் பனியன் கம்பெனிக்குச் சென்றார்கள். விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்ட அக்காலத்தில் பச்சைக்கற்கள் கிடைக்கும் கொறங்காடுகளைக் கொண்டிருந்த நிலத்தின் உரிமையளர்களுக்கு ஆடு மாடுகளின் மூலமான வருவாயோடு பச்சைக்கல்லின் மூலமும் ஒரு வருவாய் கிடைத்தது.இக்கல்லின் காரணமாக பல பங்காளிச்சண்டைகளும் வெட்டுக்குத்துகளும் நடைபெற்றிருக்கின்றன. இதையொட்டி ஒரு சிறுகதை எழுத உத்தேசித்திருப்பதால் இங்கே அதை எழுதாமல் தவிர்க்கிறேன்

தலித் சமூகத்தினரும் இத்தொழிலில் பிரதானமாக ஈடுபட்டனர்.அவர்களில் நிறையப்பேர் கல் வியாபாரிகளாக மாறினர்.தங்கள் வீடுகளிலேயே பட்டறை அமைத்து கல் தேய்க்கும் தொழிலும் ஈடுபட்டனர்.அவர்களில் ஒருவர்தான் என்னிடமும் தம்பியிடமும் ஞாயிற்றுக்கிழமை வந்து மேற்கல் வாங்குவார்.எங்கள் தந்தையாரின் மேற்பார்வையில் நாங்கள் கல் விற்பதில் பேரம் பேசக்கற்றோம். டிப்ளமேட்டிக் பேச்சுவார்த்தைகளில் எனக்கு விவரம் போதாத காரணத்தால் நாளடைவில் பேரம் பேசுவது என் தம்பியின் கைகளுக்குச் சென்றுவிட்டது.மேற்கல் பொறுக்கி விற்றதின் மூலமான சிறு வருவாயை எங்கள் பள்ளிச்செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டோம்.

இத்தொழிலை அரசாங்கம் எப்படி முறைப்படுத்தியிருக்கிறது என்று தெரியவில்லை.மேற்கல் பொறுக்கி விற்பதற்கு எந்தத் தடையுமில்லை.ஆனால் வெட்டியெடுப்பதற்கு முறையான உரிமம் வாங்கவேண்டியிருந்தது.அவ்வப்போது இரவுகளில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களால திடீர் சோதனைகளும் நிகழ்ந்தன.ஆனால் எல்லாம் கொஞ்சம் நீக்குப்போக்காகத்தான் இருந்தன என்பது என் அனுமானம். கொஞ்சம் மழைபெய்து விவசாயம் மீண்ட காலத்தில் நான் கல்லூரிக்குப் போய்விட்டதால் இத்தொழிலின் மீதான அவதானிப்பும் கைநழுவிவிட்டது.ஆனால் எங்கள் பகுதியில் மெல்ல மெல்ல இத்தொழில் நசிவடைந்துவிட்டது. மற்ற பகுதிகளில் இன்றைய சூழ்நிலை என்னவென்று தெரியவில்லை.

இரா.முருகவேளின் மிளிர்கல் நாவலை சமீபத்தில் வாசித்தபோது இந்த நினைவுகளை மீளப்பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. இந்த நாவல் வெளிவந்த சமயத்தில் இளங்கோ கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்த குறிப்பில் இந்த அனுபவங்களை ஒட்டி மிகச்சுருக்கமான பின்னூட்டமிட்டிருந்தேன்.

கண்ணகியைக் குறித்த ஆவணப்படமெடுக்கும் முல்லை என்ற பத்திரிகையாளர்,அவளுக்குத் துணையாகப் பயணிக்கும் நவீன் என்ற இடதுசாரிக் கட்சி ஊழியன், நிலத்தின் தாதுவளம் மற்றும் ரத்தினக்கற்கள் குறித்து ஆராயும் ஸ்ரீகுமார் நேமிநாதன் என்ற பேராசிரியர் ஆகிய மூவரும் கண்ணகியின் பயணப்பாதையான புகார் முதல் கொடுங்கலூர் வரை பயணிக்கையில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களை ஜனரஞ்சகமான நடையில் எழுதியிருக்கிறார் முருகவேள். கண்ணகியின் காற்சிலம்பிலிருந்த மாணிக்கக்கல் கொங்குப்பகுதியில் கிடைத்ததாக இருக்கலாம் என்ற சுவாரசியமான கருதுகோளின் மூலம் கொங்குப்பகுதியின் தாதுவளத்தோடு ஒரு தொடர்பை உருவாக்குகிறார்.அதன்வழியே இத்தொழிலில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்களின் இரக்கமற்ற போக்கு, சுரண்டப்படும் தொழிலாளர்களின் அவலநிலை என்று ஒரு இடதுசாரி கட்டமைப்புக்குள் இந்த நாவல் இயங்குகிறது.கட்சியின் மீதான மெல்லிய மயிலறகு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

இந்நாவலின் கரு சுவாரசியமானது.ஆழமாக விரியும் ஆற்றலைக்கொண்டது. ஆனால் முழுக்க இடதுசாரி கட்டமைப்புக்குள் அதன் செயல்திட்டத்திற்குள் இயங்குவதால் அது விரிந்திருக்கவேண்டிய எல்லைகளை அடையாமல் சுருங்கிவிடுகிறது. இடதுசாரிக் கட்டமைப்புக்குள் நின்றுகொண்டே இன்னுங்கூட செறிவான தளத்திற்கு இந்நாவல் நகர்ந்திருக்க முடியும். மேலும் ஆசிரியனின் அகப்பார்வையின் மூலம் அடையும் கண்டடைதல்கள் குறைவாகவும் நிறையத் தகவல்கள், மேற்கோள்கள்,கருத்துரைகள் எனப் புறவயமான அம்சங்கள் நிரம்பியும் இருக்கின்றன. ஆனால் சுவாரசியத்தையும் ஜனரஞ்சகத்தன்மையான வேகத்தையும் இந்நாவலின் பலங்களாகச் சொல்வேன்.பச்சைக்கற்கள் பற்றி சொல்லப்பட்டிருப்பதால் என் அனுபவங்களோடும் இந்த நாவலை தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.

No comments: