தத்துவத்துறையில் ஒரு பிரதியின் பொருள்விளக்கத்திற்கான முறைமைகள் அல்லது புரிதலுக்கான உத்திகளைப் பற்றி பேசும் துறையானது ஹெர்முனாட்டிக்ஸ் (hermeneutics) என்று அழைக்கப்படுகிறது. மார்டின் ஹெய்டிகரால் முன்வைக்கப்பட்ட ஹெர்முனாட்டிக்ஸ் வட்டத்தை “ஒரு முழுப்பிரதியைக் குறித்த ஒருவருடைய புரிதலென்பது அப்பிரதியின் தனித்த பகுதிகளின் மீதான புரிதலின் அடிப்படையிலும் தனித்த பகுதிகளைக் குறித்த புரிதலானது முழுப்பிரதியின் மீதான புரிதலின் அடிப்படையிலும் நிறுவப்படுகிறது. ஒன்றையொன்று உசாவாமல்(reference) முழுப்பிரதியையோ அல்லது பிரதியின் தனித்த பகுதிகளையோ விளங்கிக்கொள்ள இயலாது” என்பதாக விக்கிப்பீடியா வரையறுக்கிறது.
இந்த முறையிலான வாசிப்பை நாம் கவிதைவாசிப்புச் செயல்பாட்டிற்கும் விரிக்கலாம். குறிப்பாக இன்றைய சமகால தமிழ்க்கவிதையில் உருப்பெறும் படிமங்களும் குறியீடுகளும் இன்னபிற கவிதையாக்க நுட்பங்களும் கவிதை வாசகருக்கு முழுக்க அறிமுகமாயிருக்கக்கூடிய சொல்/அர்த்தத் திரலிலிருந்து உருவாவதில்லை. மாறாக அவை கவிஞனின் பிரத்யேக வெளியிலிருந்து உருவாகிற காரணத்தால் இந்த இடைவெளியை நிரப்புவது எப்படி என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனவே தொகுப்பின் மொத்தக்கவிதைகளையும் ஒரே கவிதையின் வெவ்வேறு பகுதிகளாக மாற்றிக்கொண்டு கவிதைகளை அணுக முயற்சிக்கலாம். ஒரு கவிதையை திறப்பதற்கான சாவி இன்னொரு கவிதையில் இருக்கக்கூடும். ஒன்றில் சொல்லாமல் விடப்பட்டது அல்லது புகைமூட்டமானது இன்னொரு கவிதையில் துலக்கமாகத் தெரியும். தொகுப்பின் முழுமையான பரப்பு குறித்த புரிதலின் அடிப்படையில் தனிக்கவிதைகளை அணுகலாம். அந்தத் தனிக்கவிதைகள் அளிக்கும் அனுபவத்திலிருந்து கவிஞன் சுட்டும் உலகத்தை இன்னும் விரிவாக்கிக்கொள்ளலாம்.இந்த அணுகுமுறை அனைத்துக் கவிதைத் தொகுப்புகளுக்கும் முழுக்கப் பொருந்தும் என்று உறுதியாக சொல்லமுடியாவிட்டாலும் கவிதைகள் குறித்த புரிதலை விரிவாக்கிக்கொள்ள குறித்த அளவிலேனும் உதவும் என்றே நம்புகிறேன்.
நரனின் ”ஏழாம் நூற்றாண்டுகளின் குதிரை” தொகுப்பு மேற்சொன்ன முறையில் கவிதைகளை வாசிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் ஒரே மையத்திலிருந்து கிளம்பிய வெவ்வேறு அலைகளாக இருக்கின்றன. அந்த அலைகளின் நூலைப் பிடித்துக்கொண்டு பின்சென்றால் இத்தொகுப்பின் மையத்தை அடையலாம். ஒரே பொருள் விரவிய அல்லது ஒற்றை மையமுடைய கவிதைகள் நிரம்பியுள்ளதே இத்தொகுப்பின் பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது. பலமான ஒன்று பலவீனமாகவும் இருக்கிறது என்று சொல்லும்போது அங்கே ஒரு முரண்மெய்மை(Paradox) உருவாகிறது. இந்த முரண்மெய்மைதான் ஏழாம் நூற்றாண்டுகளின் குதிரை தொகுப்பின் பிரதான மையமாக இருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் முழுமையான வகையிலோ அல்லது ஒரு இழையாகவோ முரண்மெய்மையை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டுப் போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென
இந்தக் கவிதையில் குட்டி தோசையும் குட்டிக் கீழாடையும் நமக்கு இளக்கமான மென்மையான உணர்வுகளை உருவாக்குகின்றன. பிறகு மிச்சமான உலோகத்தால் குழந்தையின் உடலுக்கென சிறிய தோட்டா என்று சொல்லப்படுவதன் மூலம் ஒரு குரூர எதிர்நிலை உருவாக்கப்பட்டு முற்சொன்ன இளகிய மென்னுணர்வானது அந்த குரூர எதிர்நிலையால் சிதைக்கப்படுவதின் வழியே ஒரு முரண்மெய்மை உருவாக்கப்படுகிறது. தொகுப்பின் ஏனைய கவிதைகள் பலவற்றில் இந்த முரண்மெய்மையை நரன் மாயத்தன்மையின் மூலம் உருவாக்குகிறார்.உதாரணத்திற்குப் பனிப்பாலை கவிதையைக்கொண்டு இதை நாம் ஆராயலாம்.
.....பின்
27வெள்ளைக் குதிரைகளும்
பனிப்பாலைக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.
ஓலமாய் வீசும் கொடும் பனிக்காற்றில்
கனைக்கின்றன அவை.
இதுவரை உண்டறியா
வெள்ளைப் புற்கள்.
பாலை உருகி வழிகையில்
ஜலம் கழித்து, எச்சில் ஒழுக்கி...
பெருங்கோடையது.
குதிரைகள் உருகி உருகி
உருவழிந்து பிரம்மபுத்திராவிற்குள் வழிய
கரையில் 24 x7 = 108 துருப்பிடித்த லாடங்கள்.
-நாம் பனியில் குதிரைகளைப் பார்க்க முடிவதில்லை. ஏனெனில் அவை வெள்ளைக்குதிரைகள் என்று சொல்லப்படுவதன் மூலம் குதிரைகள் பனிக்குள் மறைக்கப்படுகின்றன ( 27வெள்ளைக் குதிரைகளும் பனிப்பாலைக்குள் ஓடி ஒளிந்து கொண்டன)
-குதிரைகளின் கனைப்பை ஓலமாய் வீசும் பனிக்காற்று விழுங்கிவிடுவதால் நமக்கு பனிக்காற்றின் ஓலம் மட்டுமே கேட்கிறது (ஓலமாய் வீசும் கொடும் பனிக்காற்றில் கனைக்கின்றன அவை)
-வெள்ளைப் புற்கள் என்று சொல்லப்படுவதன் மூலம் அங்கு இல்லாத புற்கள் கவிதையில் உருவாக்கப்பட்டு அது மீண்டும் பனியால் மறைக்கப்படுகிறது (இதுவரை உண்டறியா வெள்ளைப் புற்கள்)
மேற்சொன்ன எதுவுமே யதார்த்தமாக, பெளதீக வடிவமாக அந்த இடத்தில் இருப்பதில்லை. பனியின் நிறம் வெண்மை என்ற தர்க்கத்தோடு இயைந்து இந்தக் காட்சிகள் கற்பனையாக, மாயையாக உருப்பெறுகின்றன. மேலும் இக்கவிதையின் கோணத்தை சற்றே மாற்றி வாசிக்கவேண்டியிருக்கிறது. கோடைகால பிரம்மபுத்திரா நதிக்கரையில் எப்போதும் 108 துருப்பிடித்த லாடங்கள் கிடக்கின்றன என்பது மட்டுமே யதார்த்தமான புறவயக்காட்சி. வெள்ளைக்குதிரைகள், பனிக்காற்றின் சத்தம், வெள்ளைப்புற்கள் போன்றவை இல்லாதது போல் தோற்றமளித்து ஆனால் மெய்யாக இருக்கக்கூடியது அல்லது இருக்கக்கூடியது போல் தோற்றமளித்து மெய்யாக இல்லாதவை. இந்த உத்தியிலேயே பெரும்பாலான கவிதைகளில் முரண்பாட்டு மெய்மையை நரன் உருவாக்குகிறார். இந்தக்கவிதையின் இறுதிவரியான கரையில் 24 x7 = 108 துருப்பிடித்த லாடங்கள் என்பதை நாம் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
ஆ) 108 லாடங்கள்= 27 குதிரைகள்.ஒவ்வொரு குதிரையின் நான்கு கால்கள்/லாடங்கள்.
இந்த இறுதிவரியை சற்றே மாற்றி “கரையில் 24 x 7 = 27 x 4 துருப்பிடித்த லாடங்கள்” என்று சொல்லியிருந்தால் இன்னுங்கூட இக்கவிதையின் முரண்மெய்மை கூடியிருக்கும். இதே விதமான வாசிப்பை கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பறவைக்கு கற்பனையாக உயிரூட்டி கையின் இயக்கத்தை பறவையினுடையதாக காட்சிப்படுத்தும் ”பறவை” கவிதைக்கும் கொடுக்கலாம். தைலவர்ணக் கரம், நிறவேட்டை,மாயநிலம், ஆறு கால்கள், குளிர்ந்த சூரியன், எறும்புத் தின்னிகள், வெட்டுக்கிளிகள் அஞ்சுவதில்லை, மணற்குழந்தைகள் போன்ற பல கவிதைகள் முரண்மெய்மையின் வெவ்வேறு பரிமானங்களால் சொல்லப்பட்டிருக்கின்றன. ஷீ மற்றும் ஆப்பிள் விதைகளை விழுங்கியவள் கவிதைகளில் சற்றே பகடி இழையோடுகிறது.
ஒரு பொருள் உருப்பெற்று தோற்றத்தில் என்னவாக இருக்கிறது என்பதோடு அது தோற்றமாக உருப்பெறுவதற்கு முன்னால் அதன் மூலகத்தில் என்னவிதமான பண்போடிருந்தது என்று நோக்கக்கூடிய ஒரு பார்வையும் காண்வெளியில் மட்டுமல்லாமல் காலவெளியிலும் முரண்மெய்மையை பார்ப்பதற்குமான உதாரணங்களாக வார்த்தையைச் சுரக்கும் கிணறு, ஒரு ஆப்பிள் செடி, உணவு வு...ண..உ, நிறை மஞ்சள் கோதுமை, மரமேறத் தெரியாதெனச் சொன்னவன் போன்ற கவிதைகளைச் சொல்லலாம். மேலும் உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம் போன்றவை கீழைச்சமூகத்தில் ஏற்படுத்தும் அழுத்தங்கள், அதன் விளைவான தற்கொலைகளை போன்றவையும் இக்கவிதைகளுக்குள் கிளை பிரிகின்றன.
நரனின் முதல்தொகுப்பான உப்புநீர் முதலையில் தேவதச்சனின் ஆளுமைப்பாதிப்பு ஏராளமாக இருந்தது. இந்த இரண்டாவது தொகுதியில் அவ்வகையான பாதிப்பிலிருந்து அவர் பெரும்பாலும் விலகிவிட்டிருந்தாலும் ”கைகளால் பார்த்தேன்” கவிதையை வாசிக்கையில் தேவதச்சனின் “….நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம் “ நினைவிற்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.
முரண்மெய்மை என்ற மையத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பல கவிதைகள் முழுமையடையாத வகையில் இருக்கின்றன. நரனின் மொழியிலேயே சொல்வதென்றால் ”சில பறக்க மாட்டாமல்,சில நடக்க மாட்டாமல்“. ஒரேவிதமான உத்தி அதீதமாக தொழிற்பட்டிருப்பது இதற்கொரு காரணமாக இருக்கக்கூடும். பொதுவாக இக்கவிதைகளின் மொழி உலர்ந்த தன்மையுடையதாக இருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் ”2 பாயிண்ட் தீவிரம்” குறைவாக நம் அறிவு மற்றும் தர்க்கத்தோடு மட்டும் உரையாடுகின்றன. இக்கவிதைகளிலிருந்து நம் இதயத்திற்கென்று எதையும் நாம் பெறுவதில்லை. இருந்தபோதும் முரண்மெய்மையை விஸ்தாரமாக பேசிய விதத்தில் இக்கவிதைகள் முக்கியத்துவம் கொள்கின்றன.
- நன்றி யாவரும்.காம்

No comments:
Post a Comment