எட்டு நெடுங்கதைகளைக் கொண்ட கே.என்.செந்திலின் அரூப நெருப்பு தொகுப்பின் கதைகள் மனித
உறவுகளில் சமூகத்தால் விலக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பற்றிப் பேசுபவையாகவும் புனிதம்
என்னும் மேற்திரையை விலக்கி மனங்களுக்குள் அடிப்பிடித்திருக்கும் கசடுகளைக் காண்பவையாகவும்
இருக்கின்றன. தொகுப்பின் முதல் கதையான தங்கச் சிலுவையைத் தவிர்த்த ஏனையவை குடும்பங்கள்
மற்றும் தனிமனிதர்கள் சிதைவுறும் வாழ்வின் இருண்ட பக்கங்களைச்
சித்தரிக்கின்றன.
இக்கதைகள் பலவற்றிலும் வழக்கமற்ற
பால்யத்தைக் கொண்ட சிறார்களும் இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். குடும்பத்திற்குள்ளேயே அந்நியர்களாக அல்லது குடும்பத்திலிருந்து வெளியேறி வேறொரு இடத்தில் தஞ்சமடைந்தவர்களாக
இருப்பவர்களுக்கு பழியுணர்ச்சியும் வெஞ்சினமும் அடிப்படையான
பண்பாக இருக்கின்றன. இக்கதைகளில் உயிர்பெற்றிருக்கும் இருபாலரும்
கரடுமுரடான வேட்கையும் சமூக நடத்தையும் கொண்டவர்களாக உள்ளார்கள். முறைதவறிய பாலுறவுகள் மற்றும் துரோகங்கள், பாலியல் சார்ந்த கனவுகள்,
கற்பனைகள் என காமத்தின் அடிப்படையிலான
ஒரு இருண்ட சித்திரத்தையும் இக்கதைகளுக்குள் காண்கிறோம்.
செந்திலின் கதை சொல்லும் உத்தியில் இரண்டு பண்புகளைப்
பிரதானமாகக் காணமுடிகிறது. ஏற்கனவே
முந்தைய காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தோடு தொடர்புடையதாய் அல்லது அதன் சாயையோடு ஒரு
சம்பவம் மீண்டும் நிகழ்வதை முதற்பண்பாகச் சொல்லலாம். தங்கச்சிலுவை கதையில் வில்சனின் உடல்நலம் தேறுதலுக்கான பிரார்த்தனைக் காணிக்கையாக
தேவாலயத்திற்கு செலுத்தப்பட்டிருக்கும் தங்கச்சிலுவையை உடல்நலம் குன்றியிருக்கும் தன் மகள் பாக்கியத்தின் மருத்துவச்செலவிற்கான பணத்தின்பொருட்டு ஆபிரகாம் திருடத்துணைபோகிறான். இங்கே வில்சனின் நோய்-தங்கச்சிலுவை-பாக்கியத்தின் நோய் என்னும் தொடர்பு உருப்பெறுகிறது. அரூப நெருப்பு கதையில் முதலில்
கணேசன் கோவிந்தனின் குடும்பத்திற்குள் வந்துசேர்வதற்கு எப்படி கோவிந்தனின் காமம் காரணமாக
இருந்ததோ அதுவே விஜயா மற்றும் வெங்கியின் வரவிற்கும் காரணமாக இருக்கிறது. குடும்பத்திற்குள் கணேசன்
வருகை-கோவிந்தனின் காமம்-விஜயா,வெங்கியின் வருகை என்ற தொடர்பு இக்கதையில் உருவாகிறது.
வெஞ்சினம் கதையின் மையக்கதாப்பாத்திரம் தன்னை அவமானப்படுத்திய சடையனைக் கொன்றுவிடும் சினத்தோடு திரிந்துகொண்டிருக்கும்போது
அந்த மையக்கதாப்பாத்திரத்திடம் உதைவாங்கி பற்கள் உடைபட்டு
அவமானமடைந்த ஒருவன் மையக்கதாப்பாத்திரத்தை கொல்கிறான். மையக்கதாப்பாத்திரற்கு ஏற்படும் அவமானம்-பழியுணர்ச்சி-தன்னைக் கொல்லப்போகிறவனுக்கு மையக்கதாப்பாத்திரம் ஏற்படுத்திய அவமானம் என்ற தொடர்பு இயல்பாகவே அமைவதை கவனிக்கலாம். திரும்புதல் கதையில்
வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்ட மையக்கதாப்பாத்திரச் சிறுவனை ஏற்கனவே அனாதமையான சூழலில்
உள்ள சிறுவன் சோமு இனங்கண்டு கொள்கிறான். இங்கே சோமு-உணவகம்-மையக்கதாப்பாத்திரச் சிறுவன்
என்ற தொடர்பமைகிறது. இப்படி
காலத்தில் முன்னமே நிகழ்ந்த ஒரு நிகழ்வு அதேபோன்ற சாயையோடு திரும்பவும் நிகழ அந்த இடைவெளியில் உரையாடல்களாக கதைகள் உருக்கொள்கின்றன.
பெரும்பாலான கதைகள் காலத்தின் நேர்கோட்டு வரிசையில்
சொல்லப்படாமல் நனவிற்கும் நினைவிற்கும் இடையேயான ஊடாட்டமாக விவரிக்கப்பட்டிருப்பதை
இக்கதைகளின் இரண்டாவது பொதுப்பண்பாகச் சொல்லலாம். மிகப்பொறுமையாக எல்லாவற்றையும் விஸ்தாரமாகப் பேசுவதால் கதைக்குள் ஒன்றைச் சொல்லாமல் விட்டு உணர்த்தச்
செய்வதில் செந்தில் குறைவான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகிக்க வைத்தாலும் இப்படியான நீண்ட விவரிப்பு அவருடைய பிரத்யேக கதைசொல்லும் உத்தியாக இருப்பதைக் கவனிக்கிறோம்.மேலும் கதையை எந்தப்புள்ளியில் முடிக்கவேண்டும் என்பதில் அவருடைய பிரக்ஞை அபாரமாக இருக்கிறது. கதை சொல்லுதலில் நவீனமான உத்தியான கதையின் இறுதியில் எதையும் முழுமுற்றாக முடித்துவைக்காத தன்மையையும் கவனிக்கிறோம்.
கதைகளுக்கான தனித்துவமான களத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு வீரியம் கூட்டும் சம்பவக்கோர்வைகளைப் பிணைப்பதிலும் செந்திலுக்குள்ள தனித்த ஆற்றலுக்குச் சான்றாக அரூப நெருப்பு, வாசனை, வெஞ்சினம், திரும்புதல் ஆகிய நான்கு கதைகளைச் சொல்லலாம். அரூப நெருப்பு கதையை தமிழின் தலைசிறந்த சிறுகதைகளில்
ஒன்றாக தயக்கமின்றிக் குறிப்பிடுவேன். மற்ற கதைகளில் அந்தந்தக் கதைகளுக்குத் தேவையான
அளவில் இயங்கியிருக்கும் அவருடைய கதையுலகத்தின் பிரத்யேகப் பண்புகள் அத்தனையும் அரூப
நெருப்பு கதையில் சிறப்பான வகையில் குவிந்திருக்கின்றன.
அரூப நெருப்பு கதையில் காணக்கிடைக்கும் குடும்பம்
ஒரு வழக்கமான குடும்பம் அல்ல. ஆனால் இப்படியொரு குடும்பம் இருப்பதற்கான வாய்ப்பேயில்லை என்று முழுக்கவும்
நிராகரித்துவிட இயலாது. கோவிந்தன், அலமேலு, நாகு
என்ற குடும்பத்திற்குள் கோவிந்தன் பாலுறவு கொண்டிருந்த பெண்ணின் மகனான கணேசன் அனாதை
என்ற அடையாளத்தோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறான். பிறகு கோவிந்தனின்
இன்னொரு மனைவியாக விஜயாவும் மகனாக வெங்கியும் குடும்பத்திற்குள் வருகிறார்கள்.
தந்தை மகனான கோவிந்தனுக்கும் நாகுவிற்குமிடையேயான பகையுணர்ச்சி,
கணேசனுக்கும் நாகுவுக்கும் ஏற்படும் பகை, அலமேலுவுக்கும்
விஜயாவிற்கும் உருவாகும் பகை, நாகுவிற்கும் விஜயாவிற்குமான ஆரம்பப்பகை,
கணேசனுக்கும் விஜயாவிற்குமான பகை என்று பல்வேறு முரண்களை முடிச்சிட்டுப்
பயணிக்க வைத்து எல்லா பகையும் சமமடையும் ஒரு லாவகமான புள்ளியில் கதை முடிக்கப்பட்டிருக்கிறது.
காமம் நீதி பார்த்து வருவதில்லை என்பதற்குச் சாட்சியாய் நாகு மற்றும்
விஜயாவின் பாலியல் உறவைச் சொல்லலாம். விஜயாவோடு ஓடிப்போகும் நாகுவின்
செயலால் வம்சப்பெருமை குலைக்கப்பட்டு வந்தேறிகளான கணேசனுக்கும் வெங்கிக்கும் முன்னர்
மறுக்கப்பட்டிருந்த தாத்தாவின் புனித நாற்காலி கிடைத்துவிடுகிறது. கணேசனை சற்றே வன்மமிக்கவனாக சொல்லியிருப்பதால் சிறுவன் வெங்கியில் தன்னை இனங்காணும்
அவனுடைய இருப்பின் கவித்துவத் துயர் சற்றே மங்கிவிடுகிறது என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.
பிணவறைப் பணியாளனான தாசப்பனுக்கும் அவன் மனைவி
பச்சைக்குமிடையேயான ஒரு முரண்பட்ட உலகத்தைப் பேசுகிற, விளிம்புநிலை மனிதர்கள் புழங்குகிற
வாசனை கதை மிக நுட்பமான காட்சிச் சித்திரிப்புகளைக்
கொண்டிருக்கிறது. தான் விரும்பிய விதத்தில் கணவன் அமையாது தன்
கனவுகளை இழந்துவிட்டதின் குமுறல் கொண்ட பச்சையால் மிக உக்கிரமாய் புறக்கணிக்கப்படுகிறான் தாசப்பன்.
உயரக்குறைவான தோற்றமும் உணவு மற்றும் கறிச்சோறு மீதான தாசப்பனின் வேட்கையும்
வாழ்க்கையில் அவன் அடையவியலாத மகிழ்ச்சியின் குறியீடாக இருக்கின்றன.தினமும் பிணங்களோடு புழங்க நேரும் மனிதர்களின் மனவுலகம் மிகச்சிறப்பான வகையில்
விவரிக்கப்பட்டிருக்கிறது. தொடங்கி வளர்ந்து முடியும் பாணியிலான
கதையாக இல்லாமல் தாசப்பன் மற்றும் பச்சையின் மனவுலகங்களுக்கிடையேயான சதுரங்க ஆட்டமாக
இக்கதை அமைந்திருக்கிறது.
அரூப நெருப்பு, மாறாட்டம், வாசனை போன்ற கதைகளில் பழியுணர்ச்சி என்ற பண்பு வெவ்வேறான சூழ்நிலைகளில் பல்வேறு
கதாப்பாத்திரங்களின் மூலம் பேசப்படுகிறது. ஒரு அவமானம் நேரும்போது
தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள இயலாமல் உடனடியாக பழியுணர்ச்சி கொள்ளும் இயல்பைக் கொண்ட
மனிதர்கள் இந்தக் கதைகளுக்குள் இருக்கிறார்கள். வெஞ்சினம் கதையின்
நாயகனும் இந்த இயல்பைக் கொண்டிருக்கிறான். மிகப்பெரிய சாகசக்காரனாக
இருந்தபோதும் தன்னை விட எளியவனிடம் அவன் தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு குறியீடாய்
நாய்கள் மீதான அவனுடைய அச்சத்தைச் சொல்லலாம்.முதல் வாசிப்பில்
இக்கதை சினிமாத்தன்மையுடையதாய் வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பதாகத் தோன்றினாலும்
நம் முதுகுக்குப் பின்னால் அப்படியொரு உலகமும் பாவாவைப் போன்ற மனிதர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள் என்பதை மறுவாசிப்பில் உணரமுடிந்தது.
வீட்டை விட்டு வெளியேறிய இரு பதின்ம வயது சிறுவர்களின்
உலகத்தைப் பேசும் திரும்புதல் கதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.உடலின் வேட்கைகள் தன்னைத் திறந்துகொள்ளத்
தொடங்கும் அப்பருவத்தின் மனவுணர்வுகளும் உரையாடல்களும் மிக அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக குப்பைமேட்டில் நடக்கும் காட்சிகளும் சம்பவங்களும் உரையாடல்களும்
இயல்பாக உருப்பெற்றிருக்கின்றன. ஒருபால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும்
சோமுவைப் போன்ற சிறுவர்கள் ஒவ்வொரு நகரத்தின் விளிம்புகளிலும் நிறைந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு கதை நிலை. இக்கதையில் வீட்டை இழத்தல் மற்றும் தந்தையின் பித்துநிலை போன்ற பகுதிகள் சிறப்பாக
வந்திருந்தாலும் தந்தைக்கு ஏன் அந்த வீடு அவ்வளவு பிரியமானதாக இருந்தது என்பதற்கான
காரணத்தைப் விரிவாகப் பேசாமல் கதைசொல்லிக்கும் வீட்டுக்குமான நினைவுகளை விரிவாகப் பேசுவது
இக்கதையின் முக்கியமான தொழில்நுட்பச் சிக்கலாகத் தோன்றுகிறது.
தங்கச்சிலுவை, மாறாட்டம், பெயர்ச்சி ஆகிய மூன்றும் இத்தொகுப்பின் சுமாரான கதைகள். தொகுப்பின் பிற கதைகள் ஏற்படுத்தும் சலனங்களோடு ஒப்பிடுகையில் இக்கதைகள் ஒருவித
தட்டைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. தங்கச்சிலுவையில் நீதியுணர்ச்சியைப்
பேசுவதற்காக சொல்லப்பட்டிருக்கும் காட்சிகள் சற்றே செயற்கைத்தன்மையும் நாடகீயமும் கொண்டவையாக
இருக்கின்றன.மாறாட்டம் கதை அது சென்றிருக்கவேண்டிய அக ஆழங்களில்
பயணிக்காமல் மேலோட்டமானதாக நின்றுவிடுகிறது அல்லது செந்திலுடைய வேறுகதைகளில் ஏற்கனவே
வீரியமாக பேசப்பட்டுவிட்ட விஷயங்களின் நீர்த்த வடிவமாக இருக்கிறது.செந்தில் கதைகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டியதைத் தவிர பெயர்ச்சி கதையைப்
பற்றிப் பேசுவதற்கு ஏதுமிருப்பதாகத் தோன்றவில்லை. வடிவம் மற்றும்
சொல்முறையில் பிசிரற்று இருந்தாலும் இக்கதைகள் உணர்வுத்தளத்தில் நமக்குள் இக்கதைகள்
எவ்வித சலனங்களையும் ஏற்படுத்துவதில்லை.
உன்னதம், புனிதம் போன்ற கருத்தாக்கங்களுக்கு எதிர்நிலையிலேயே இக்கதைகள்
தங்களைப் பொருத்திக்கொள்கின்றன. வாழ்வின் இருண்ட பக்கங்களையும்
அம்மனிதர்களின் அகச்சிக்கல்களையும் பாடுகளையும் தீவிரமாகவும் நுட்பமாகவும் இக்கதைகளில்
பேசியிருக்கும் செந்தில் தன் படைப்புலகத்தை வெவ்வேறு தளங்களுக்கு விரிவாக்கிக்கொள்ளும்
ஆற்றலுடையவர் என்பதை இக்கதைகள் உணர்த்துகின்றன.
நன்றி-காலச்சுவடு

No comments:
Post a Comment