தன் வாழ்க்கையை அசைவற்றதாக லிங்கு மாற்றிக்கொண்டபின் பலகாலமாக அதிலிருந்து நூலளவும் மாறவில்லை. நவீனமான பலவற்றின் மூலம் தொடர்ச்சியாகத் தன்னைப் புதுப்பித்தவாறு உலகம் முன்னோக்கி இயங்குகையில் அதன் சிறு ஓசைகளைக்கூட கேட்க விருப்பமற்று செவிப்புலனை அடைத்துக்கொண்டு வெறும் காட்சிகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அக்காட்சிகளையும் உள்ளிறங்க அனுமதிக்கவில்லை. பிம்பங்கள் கண்களில் மோதிச் சரிந்தன. பலசமயங்களில் தன்னைச்சுற்றிலும் வெறும் இருட்டை மட்டும் சமைத்துக்கொண்டு வெகுநாட்கள் அதற்குள் கிடப்பவர் ரசம் போய்விட்ட வாழ்க்கையைப் பொலிவூட்டிக்கொள்ளும் வேட்கையை இழந்துவிட்டிருந்தார்.
அது லெளகீக ஞானமுமல்ல, ஆன்மீக ஞானமுமல்ல. இரண்டிற்கும் நடுவில் ஒரு துண்டுபட்ட பிரதேசத்தில் அவர் நிலைகொண்டுவிட்டார். மனிதர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் மூர்க்கமான இச்சைகளின் கொடுக்குகளால் ஏராளமான தடவை கொட்டப்பட்டிருந்தாலும் அக்கொடுக்குகளிலிருந்து உள்ளிறங்கிய திரவம் குமிழிகளிட்டுக் கொதித்துப் பின் மெல்ல சாரத்தை இழந்து தன்னுள் நீர்த்துப்போவதை இளமையும் முதுமையும் இணையும் புள்ளியில் நின்றவாறு வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். நடைபிணம் என்றும் சொல்லமுடியாது. வாழ்க்கையின் கதவுகளைக் கையொடியத் தட்டிய காலத்தில் அது மெளனமாக இருந்துவிட அதற்கும் அவருக்குமிடையே ஒரு இடைவெளி உருவாகிவிட்டது. அப்போது முகத்தைத் திருப்பிக்கொண்டவர் பின்னர் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும் சலனத்தை அடையவேயில்லை.
லிங்கு தன் தோட்டத்தில் இருப்பார். காட்டுக்குள் வெள்ளாடு மேய்ப்பார். அழுக்கின் காவியேறி வெண்மை மங்கிய உடைகளோடும் மளிகை சாமான்கள் அடங்கிய மஞ்சள்பையோடும் பாதையிலிருந்து கண்ணெடுக்காமல் போய்க்கொண்டிருப்பார். சுபகாரியங்களுக்கும் துக்க சம்பவங்களுக்கும் போனால் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு சின்ன தலையசைப்பு, கை நீட்டல். அவ்வளவே. வெகுகால மெளனத்தினால் முகத்தில் கூடியிருக்கும் மெல்லிய இறுக்கத்துடன் எவருடனும் பேசாமல் ஒரு மூலையில் அமர்ந்திருப்பவர் வந்த சுவடின்றி கிளம்பியிருப்பார். அவர் வந்துவிட்டு கிளம்பிப்போனார் என்பதைக் கவனித்து நினைவில் வைத்திருக்கக்கூட ஒருவரும் இல்லை என்பதே நிதர்சனம். அவராகவே போட்டுக்கொண்ட அந்த வேலியைத்தாண்டி யாரும் அவருடைய உலகத்திற்குள் நுழையவும் விரும்புவதில்லை.
ஒருகாலத்தில் ஏகமாய் பச்சை பொலிந்திருந்த அவருடைய தோட்டத்தில் இன்றைக்கு சில முதிய தென்னைமரங்கள் மட்டும் மட்டை தொங்கியவாறு தம் அந்திமக்காலத்தில் இருக்கின்றன. கற்கண்டு ருசி கொண்ட நீரை வற்றாது சுரந்த கரும்பாறைக் கிணற்றில் அடியீரம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. பசுவும் காளைகளும் கன்றுகளுமாய் நிறைந்திருந்த கட்டித்தாரையின் முளைக்குச்சிகளை கரையான்கள் அரித்திருக்க அவருடைய ஜீவனாதாரமான சில வெள்ளாடுகள் மட்டும் அங்கே அசைவாங்குகின்றன. தவசதானியங்களின் வாசனையோடு அரண்மனையாய் பொலிந்திருந்த வீடு மண்மேடாகிவிட்டது. காலம் அத்தோட்டத்தை ஒரு துயர்மிகுந்த நினைவுச்சின்னமாய் மாற்றியிருக்க ஒற்றை அறையும் சிறிய ஆசாரமும் கொண்ட சாளையின் இருட்டு மூலையில் மனவளர்ச்சி குன்றியும் தோற்றச்சிதைவு கொண்டவளாகவும் அவருடைய தங்கை முடங்கிக் கிடக்கிறாள்.
குடும்பத்திற்கான நல்லூழை தன்னோடு கொணர்ந்தவளான அவளுடைய பிறப்பின் வாசனையில்தான் நிலம் கற்பகதருவாக உருமாறியதாக லிங்குவின் தந்தையார் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நல்லூழ் அவளது ஆரோக்கியத்தை பலியாக எடுத்துக்கொண்டது. தேர்ந்த வைத்தியர்கள் இருப்பதாய் கேள்விப்பட்ட ஊர்களுக்கெல்லாம் கூட்டுவண்டியும் காளைகளின் கழுத்துமணிச்சத்தமும் போய்வந்தன. ஆனபோதும் பெரிய முன்னேற்றங்களில்லாமல் திருகலான புலன்களோடு வெறும் பிண்டமாய் இந்த உலகத்திற்குள் அவள் இருக்க விதிக்கப்பட்டதை நினைத்து நினைத்து இறுதிக்காலம் வரை தந்தையார் மறுகினார். கருப்பைக்கு வெளியேயும் மகளைச் சுமக்கும் தாயாருக்கோ அத்துயரம் மடங்குகளில் ஆழமானதாக இருந்தாலும் எல்லா கணத்திலும் மகளோடு விதிக்கப்பட்ட அண்மை காரணமாகவே மனம் மரத்துவிட்டது. இருப்பினும் கணவனும் மனைவியும் அந்தத் துயரத்தின் வெக்கை லிங்குவின் மீது படியவிடாமல் கவனமாக தடுத்துக்கொண்டார்கள்.
தங்கைக்கும் சேர்த்தே லிங்கு பொலிந்தார். ஊரில் அவரது சகவயதினர் பலரும் படிப்பில் விருப்பமற்றவர்களாய் முழுநேரமும் நிலத்தோடு பிணையத்தொடங்கிவிட்டார்கள். சிறுவனான லிங்குவிற்கு நிலத்தின் மீதும் உழவுத்தொழிலின் மீதும் அபாரமான பிரேமை இருந்தது. உடன் படிப்பின் ருசியையும் அறிந்துவிட்டவர் ஊரின் முதல் பட்டதாரி ஆனார். அரசாங்க வேலைக்கான வாய்ப்புகள் இருந்தும் அதில் விருப்பமற்றவராய் தன்னுடைய இயல்பான ஆர்வமான விவசாயத்தையே தொடர்ந்தார். நிலத்தின் வாசனை மீதும் தன்னிலிருந்து உயிர்களைப் பிரசவிக்கவைக்கும் அதன் ரகசியங்களின் மீதும் அவருக்குக் தீராக்காதல் இருந்தது. மண்ணில் எத்தனை வகை, மரங்களில் எத்தனை வகை, பூச்சியில் எத்தனை வகை, புழுவில் எத்தனை வகை என அத்தனையும் அவருக்கு அத்துபடி. வானின் தன்மை, காற்றின் திசை, பருவங்களின் சுழற்சி ஆகியவற்றைக் கணிப்பதில் அவருடைய திறன் அபாரமானது. அத்தனையும் அந்த மண்ணில் ஊறிக் கனிந்துகிடந்த கிழவர்களோடு பேசிப்பேசி பெற்ற அனுபவ ஞானம். அவற்றில் எதைக் களைந்து எதைக் கொள்வது என்பதற்கு அவருடைய படிப்பறிவு கைகொடுக்க அவரது கைகளின் தொடுகையில் நிலம் துலங்கியது.
ஒளிமிகுந்த அக்காலத்தில்தான் லிங்கு காதல்வயப்பட்டார். நிலத்தைப் பெண்ணாகப் பார்ப்பவருக்கு பெண் நிலமாகத் தெரிந்தாள். சுடுவெயில் காயும் ஈரநிலத்திலிருந்து எழும் வாசனையாய் அவளிருந்தாள். குளிர்மையையும் வெப்பத்தையும் ஒருங்கே தன்னில் கொண்டிருந்தவளான அவள் அவரறியப் பிறந்த உள்ளூர்ப்பெண்தான். சிறுவயதிலிருந்து எண்ணற்ற முறைகள் சாதாரணமாய் பார்த்து பகடி பேசியிருக்கிறார். ஆனால் எக்கணத்திலென்று உறுதியாகச் சொல்லமுடியாத வகையில் காதலின் பேரலைகள் அடர்ந்துவந்து அவரைப் பைத்தியக்கடலுக்குள் இழுத்துப்போயின. கட்டுண்டு போகச்செய்யும் மந்திரமொன்று தன் மீது பிரயோகிக்கப்பட்டதைப்போல உணர்ந்தார். அவளைக் காணும்போதெல்லாம் கண்களிலிருந்து உயிர்த்தெழுந்த பிரேமைப்புறா தன் சிறகுகளை விசிறிப்போய் அவள் தோள்மேல் அமர்ந்தது. அவள் அதற்காகவே காத்திருந்தது போல் சிறுதயக்கமுமின்றி அப்பறவையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டபோது அவள் கண்களிலிருந்து முகிழ்த்த ஆயிரக்கணக்காண புறாக்கள் அவரை ஆகாயத்திற்கு தூக்கிப்போய் தரையிறக்காமால் வெகுநாட்கள் வைத்திருந்தன.
அவளைத் திருமணம் செய்துவைக்க முறையாகக் கேட்டபோது அவளுடைய தந்தையார் பிடிகொடுக்கவில்லை. லிங்குவிற்கு பெண் கொடுக்க எத்தனையோ குடும்பங்கள் விரும்பிய சூழலில் அவள் தந்தை ஏன் மறுக்கிறார் என்பது புதிரானதாக இருந்தது. அவளோ காதலுக்கும் தன் தந்தையின் பிடிவாதத்திற்குமிடையில் நைந்துகொண்டிருந்தாள். பலரை அனுப்பியும் மசியாதவரிடம் ஒருநாள் லிங்குவே நேரிடையாகக் கேட்டுவிட்டார். கண்களிலோ பேச்சிலோ எந்தக் கள்ளத்தனமும் தென்படவிட்டாலும் அவளுடைய தந்தை சொல்லும் காரணங்கள் தன்னைத் தட்டிக்கழிப்பதற்கானவை என்று நினைத்தவராய் கழிவிரக்கம் அடர்ந்த முகத்தோடு எழுந்த லிங்குவைப் பரிதாபமாகப் பார்த்தவாறு அவளுடைய தந்தை சொன்னதை நம்பவே இயலவில்லை.
அவரைவிட நல்ல கணவன் தன் பெண்ணுக்கு அமையப்போவதில்லையென்றாலும் லிங்குவின் குடும்பம் மண்ணோடு மண்ணாகப் போய்விடுமென்று முன்னம் விடப்பட்ட ஒரு பத்தினிச்சாபம் குறித்து தனக்கு அச்சமிருப்பதாகச் சொன்னார். ஊருக்குள் இப்பழைய ரகசியத்தை அறிந்த வெகுசிலரில் தானுமொருவன் என்றவர் முடமாகிக் கிடக்கும் லிங்குவுடைய தங்கையின் நிலைக்குக்கூட அச்சாபம்தான் காரணமென்று தான் நம்புவதாகச் சொன்னார். தன் மகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தினால் இத்திருமணத்திற்கு தன்னால் ஒப்புக்கொள்ள முடியாதென்றவர் லிங்குவின் வற்புறுத்தலின் காரணமாகவே சாபம் குறித்த ரகசியத்தைச் சொல்லியதாகவும் இனி இதுகுறித்து தன்னையோ தன் மகளையோ தொந்தரவு செய்யவேண்டாமென்று உறுதியாகக் கூறிவிட்டார்.
லிங்குவிற்கு குழப்பமாக இருந்தது. இப்படி ஒரு சாபம் இருப்பதாக வீட்டிலோ வெளியிலோ அவர் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மேலும் இதுபோன்ற விஷயங்களில் அவருக்கு நம்பிக்கையுமில்லை. தாயார் மெளனமாக இருக்க முகங்கறுத்த தந்தையார் அப்படியொன்று இருப்பது உண்மைதான் என்று கூறிவிட்டு தளர்வாக நகர்ந்துபோனார். இதுபோன்ற மூடத்தனங்கள் எல்லாம் இன்னும் மனிதமனங்களில் வலுவாக இருப்பதை நினைத்து கோபமும் விரக்தியும் அடைந்தவரானார் லிங்கு.
வீட்டைத்தாண்டி வரச்சொல்லி அவளைப் பலமுறை வற்புறுத்தினார் லிங்கு. ஆனால் அத்துணிச்சலைக் கைகொள்ள முடியாமல் ஏதோவொரு புள்ளியில் அவள் உடைந்துபோயிருந்தாள். காலம் தன் முதல் சிலுவையை லிங்குவின் மீது அறைந்தது. அவர் கண்ணெதிரிலேயே அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. லிங்கு தோட்டத்திற்குள்ளேயே முடங்கிக்கிடந்தார். தனக்குள் கட்டற்றுப் பொங்கிய காதலின் அமிர்தம் எதிர்பாராததும் நம்பமுடியாததுமான ஏமாற்றத்தால் விஷமாகத் திரிவதின் வேதனை தாங்கொண்ணாததாக இருந்தது. வேறு பெண் பார்க்கலாம் என்று தந்தையார் சொன்னபோது அந்தப் பேச்சையே எடுக்கவேண்டாமென்று கோபமாக கடிந்துகொண்டார்.
லிங்குவிற்கும் அவர் தந்தைக்குமான உறவு எப்போதும் மென்மையானதாகவே இருந்திருக்கிறது. தன்னிடம் குறைவுபட்டது எல்லாம் தன் மகனிடம் பூரணமாக இருப்பதாக அவர் நம்பினார். எப்போதும் துறுதுறுவென்று திரியும் மகன் இருள்பீடித்த முகத்தை மூடி மரத்தடி நிழலில் படுத்துக்கிடப்பதைப் பார்த்து அக்கிழவர் துயருற்றார். தன் பிள்ளைகள் இருவரின் முடத்தையும் தாங்கவியலாமல் அவர் சோதிடர்களை நாடிப்போனார். ஆனால் லிங்கு மொத்தமாக முடங்கிவிடவில்லை. வாழ்க்கையின் வியாபகத்தையும் தந்தையின் மன அலைகழிப்புகளையும் அறிந்திருந்த அவர் மெல்ல மெல்ல தன் துயரத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.
மறுகணத்தின் பெரும் ரகசியமே அதன் எதிர்பாராமைதான்.அப்படியான ஒரு விடியலில் தந்தையாரின் இமைகள் திறக்கவேயில்லை. நோய் நொடியின் எந்த வெளிப்படையான அறிகுறியுமில்லாத தந்தையார் புகையைப் போல் கலைந்துவிட்டார். அந்த இழப்பு காதல்சார்ந்த தன் கனவுமயமான துயரத்தை முழுக்கவும் துடைத்தெறிந்துவிட்டு வேறுவிதமான வெறுமையை தனக்குள் உருவாக்கியிருப்பதை லிங்கு உணர்ந்தார். தற்கணத்திற்கும் கடந்தவைக்குமிடையே ஒரு இடைவெளி தோன்றி தனக்கு வயதாகிவிட்டதாய் உணர்ந்தார். தங்கையைப் பார்க்கையில் ஏனோ இத்தனை காலம் இல்லாத ஒரு மெல்லிய மனநடுக்கம் தோன்றியது. தன் கண்களுக்குக் காட்டாமல் அரூபமான பலவற்றை தந்தையார் சுமந்திருந்ததைப் புரிந்துகொண்டார். வெள்ளைச்சீலை அணிந்த தாயார் தோற்றத்தில் வேறொருவளாக மாறிப்போயிருந்தாள்.
தங்கையை தூரத்திலிருந்து பார்ப்பவராக மட்டுமே இருந்திருக்கிறார் லிங்கு. மருவைப்போல உடலில் உறுத்தாத இருப்பாய் அவள் இத்தனை காலமாக இருந்தாள். தந்தையின் மரணத்திற்குப் பின்னர்தான் அவள் வாசனை தன் நினைவில் பதியுமளவிற்கு அவளிடம் நெருங்க ஆரம்பித்தார். தன் ஒளியை வெளிக்கடத்த எந்தச் சாளரங்களுமில்லாமல் இருட்திரைக்குள் அடைபட்டிருக்கும் அவள் உயிரின் தனிமையை நினைக்கையில் அவர் கண்களில் ஈரம் தேங்கியது. இத்தனை காலம் அவளிடமிருந்து விலகியிருந்ததை திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய ஒரு கடனாய் உணர்ந்த கணத்திலிருந்து அவளிடம் சிறுவனாகவே மாறிவிட்டார்.
தங்கையைக்கொண்டு தன் வெறுமையை நிரப்பத் தொடங்குகையில்தான் யூகங்களுக்குள் அடைபடாத தன் சாத்தியத்திரளிலிருந்து மீண்டுமொரு எதிர்பாராமையை அவரை நோக்கி வீசியது வாழ்க்கை. எந்நேரமும் விருமத்தி பிடித்தாற்போல் எங்கேயோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் தாயார். சில சமயங்களில் மகளைக்கூட கவனிக்காமல் விட்டத்தை வெறித்தவாறு தனக்குள் முணுமுணுத்தவாறு இருப்பவளை உலுக்கிக் கூப்பிட்டால் மட்டும் தன்னுணர்வுக்கு வந்தாள். சில நாட்களில் அடுப்புகூட பற்ற வைப்பதில்லை. சிறுநீரும் மலமும் படிந்த தங்கையின் படுக்கைத்துணிகள் சரியாக மாற்றப்படாமல் துர்நாற்றம் வீச ஆரம்பிக்க லிங்குவே தங்கையை கவனித்துக்கொள்ளத் தொடங்கினார்.
நகரத்திலிருந்து மருத்துவரை அழைத்துவந்து காட்டியபோது தாயாரின் உடம்புக்கு எந்த நோயுமில்லை என்றவர் முழுக்கவும் மனம் சார்ந்த பிரச்சனையான இதனை பக்குவமான முறையில் கவனிக்கவேண்டுமென்றும் சொல்லிப்போனார். தந்தையின் மறைவால் தாயார் பாதிக்கப்பட்டிருக்கிறாளென்றும் விரைவில் மீண்டுவிடுவாளென்றும் லிங்கு நம்பினாலும் அவளது நிலை மோசமாகிக்கொண்டே போனது. செரவு போடச்சொல்லியும் எந்திரம் மந்திரித்துக் கட்டச்சொல்லியும் பலரும் பலவிதமான யோசனைகள் சொன்னார்கள். தனக்கு அதில் நம்பிக்கையும் விருப்பமுமில்லாவிட்டாலும் எவ்வழியிலாவது நலம் வந்தால் போதும் என்று தன்னைத் தேற்றிக்கொண்டு அரைகுறை மனதோடு செய்தபோதும் தாயார் தேறியபாடில்லை. தலைவிரிகோலத்தில் அவள் கண்கள் நிலையற்ற புள்ளியில் வெறித்திருக்க அர்த்தம் புரியாத சொற்கள் அவளிடமிருந்து கொட்டிக்கொண்டேயிருந்தன. மீண்டெழுவதற்குப் பதிலாய் அவள் இன்னும் ஆழங்களுக்குள் பயணிப்பவளாய் இருந்தாள். தங்கையைவிட தாயின் நிலை அவருக்குத் துயரூட்டக்கூடியதாக இருந்தது. மகளின் இருப்பே மறந்துபோனதுபோல் தாயார் அவள் படுத்துக்கிடக்கும் திசையிலே திரும்பவில்லை.
அன்று காலையிலிருந்தே பொழுது மேகமூட்டமாக இருக்க மதியப்பொழுதில் மழைகொட்டத் தொடங்கியது. மண்ணும் இலைகளும் குச்சிகளுமாய் நீர் வெள்ளம்போல் நுரைத்தோடியது. திண்ணையிலமர்ந்தவாறு மழையையே வெறிக்கும் தாயாரை உற்றுப்பார்த்தார் லிங்கு. அம்மா என்று அவர் மெல்ல விளித்தபோது அக்கண்கள் எந்தச் சலனத்தையும் அடையாமல் பாறைகளைப் போல் உறைந்துவிட்டிருந்தன. லிங்குவின் தொண்டைக்குள் ஒரு கேவல் பற்சக்கரமாய் சுழல மறுமுறை விளிக்க அவர் குரல் மேலெழவில்லை.
தோட்டத்தை வெள்ளக்காடாக மாற்றியது அந்தப் பேய்மழை. வரப்பின் உடைப்புகளை அடைக்க மண்வெட்டியோடு தோட்டத்திற்குள் போன லிங்கு திரும்பி வந்தபோது திண்ணையில் தாயாரைக் காணாமல் வீட்டிற்குள் போய்ப்பார்த்தார். தங்கை மட்டும் சலனமற்று படுத்துக்கிடந்தாள். தோட்டத்தின் மறைவான பகுதிகள் எல்லாவற்றிலும் சத்தமிட்டவாறு தேடியவரின் உள்ளுணர்வு கிணற்றடிப்பக்கமாக போகச்சொன்னது. பாம்பேறிச்சுவர் இல்லாத கிணறு. அருகில் சென்றவர் ஒருகணம் அயர்ந்துவிட்டார். தொலைமேட்டை ஒட்டிய விளிம்பில் கற்கள் சரிந்து ஈரமண் புதிதாய் தெரிய அவரது தசைகளில் விரவியிருக்கும் கர்ப்பவாசனை அவரை கிணற்றுக்குள் உந்தியது.
ஆழம் இருள். நீர்மூடிய ஆழமோ மகா இருள். தன்னுடைய உள்ளங்கை ரேகையைப்போல் அவரறிந்திருந்த அக்கிணற்றுக்குள் தாயாரின் உடலைத் தேடியெடுத்து படிகளின் மீது கிடத்திவிட்டு நினைவழிந்த சொற்களைப் பிதற்றியவாறு பக்கத்துத்தோட்டத்தை நோக்கி ஓடினார். மழைக்கறுக்கலோடு இருள்கவிந்த அம்மாலைநேரத்தில் ஊரே தோட்டத்தில் திரண்டுவிட்டது. மரணத்தை நோக்கி தாயார் போனாளா அல்லது அது அவளைத்தேடி வந்ததா என்று புரியாமல் தவித்தார். மரம் மட்டைகள் எல்லாம் நனைந்துகிடக்க வெவ்வேறு தோட்டங்காடுகளில் இருந்து திரட்டப்பட்ட நனையாத மரப்பூட்டுக்களையும் சட்டங்களையும் கொண்டு இரவோடு இரவாக தாயார் எரியூட்டப்பட்டாள்.ஏதுமறியாத அவர் தங்கை பிரக்ஞையின் வெகு ஆழத்திற்குள் கிடந்தாள்.
ஏதேனும் பரிகார பூஜைகள் செய்யும்படியும் புண்ணியஸ்தலங்களுக்குப் போய்வரும்படியும் அவரது சுற்றத்தார் வற்புறுத்தினார்கள். ஆனால் லிங்கு தீர்க்கமாக மறுத்துவிட்டார். அவருக்குப் பெண்கொடுக்க முன்னர் வரிசை கட்டி நின்றவர்கள் லிங்குவின் குடும்பத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த மரணங்கள் தோற்றுவித்த பயத்தைவிடவும் இப்போது வெளியரங்க ரகசியமாய் மாறிவிட்ட சாபத்தின் மீதான பயத்தினால் தயக்கம் கொண்டார்கள். ஆனால் அதற்கெல்லாம் லிங்கு வருந்தவில்லை. வாழ்வில் தன் வழியில் வருவனவற்றை மட்டும் கைகொள்ள அவர் தீர்மானித்துவிட்டார். மூடத்தனங்களின் நிழலில் இளைப்பாறுவதைவிடவும் இத்துயரகரமான மனோநிலையை நேர்கொண்டு ஏறிட்டு அனுபவித்துக் கடக்க முடிவெடுத்துவிட்டார். தங்கையும் தோட்டமும் மட்டும் அவர் வாழ்வின் முழுமையான பகுதிகளாக மாறின.
அதிகாலையில் எழுந்தவுடன் கறவைகளை முடித்துவிட்டு ஒரு எளிய சமையலைச் செய்வார். பொழுது கிழக்கே கிளம்பும்போது வெந்நீர் காயவைத்து தங்கையைக் குளிப்பாட்டுகையில் அவள் குழறலான மொழியில் பிதற்றுவாள். அவளது தலையைத் துவட்டிவிட்டு சேலையைச் சுற்றிவிடுகையில் சகோதரத்தில் பால்வேறுபாடு இல்லை என்றுணர்ந்தார். அவருக்குக் குழந்தையாக தங்கை மாறிப்போனாள். வீட்டிற்குள் வெளிச்சமும் காற்றும் அதிகமுள்ள இடத்திற்கு அவளை மாற்றிப்படுக்கவைத்தார். மாலைநேரங்களில் சாம்பிராணித் தூபம் போட்டுவிட்டார். மலஜலமோ தூமையோ படிந்திருக்கும் ஆடைகளை எவ்வித சலனமுமின்றித் துவைத்துப்போட்டார். கண்களுக்கு மொழி இருந்தும் குரல் இல்லாமையால் தன்னால் அக்கண்களிலிருந்து எதையும் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று ஏங்கினார். துண்டுபட்ட உலகத்திற்குள் அவள் உணரும் இருட்டையும் நடுக்கங்களையும் அக்கண்கள் சொல்ல முயல்வதாகத் தோன்றியது.
தங்கையும் தானுமான தனிமை வாழ்க்கையின் நாட்களில் காலத்தின் குணம் திரியத் தொடங்கியதைக் கண்டார். பருவங்கள் பொய்த்தன. வான்மடி சுரக்கவில்லை. கிணறுகள் வற்றத்தொடங்கின. உஷ்ணகால ஜந்துக்களின் நடமாட்டம் நிலத்தில் பெருகியது. வரப்போகும் இருண்டகாலத்தின் சங்கேதமாக மண்ணில் புழுதி பறந்தது. காடுகளுக்குள் கற்றாழையைத்தவிர செடிகொடி வேலிகளெல்லாம் வறண்டுவிட்டன. மட்டைகள் காய்ந்து வரிசையாக நின்றிருந்த மொட்டைத் தென்னைமரங்களைத் பார்க்கையில் அவை காலம் வரைந்த குறியீட்டு ஒவியம்போல் தெரிந்தன. பின்னலாடைத் தொழில் செழிக்க ஆரம்பித்திருந்த அருகாமை நகரத்திற்கு குடும்பங்கள் பல புலம்பெயர ஊருக்குள் பாழடைந்த வீடுகளும் குட்டிச்சுவர்களும் அதிகரித்தன.
தோட்டத்து வீட்டின் மேற்கோப்பை அப்படியே விலைக்குக் கொடுத்துவிட்டு தனக்கும் தங்கைக்குமாய் மண்சுவர் வைத்த ஒரு சிறிய ஓட்டுச்சாளையைக் கட்டிக்கொண்டார் லிங்கு. மேற்க்கோப்பு பிரிக்கப்பட்டு மூளியாய் நின்றிருந்த பழையவீட்டின் சுவர்களைக் கடந்தகாலத்தின் நினைவுகளைத் தரைமட்டமாக்கிவிடும் உக்கிரத்தோடு ஒற்றை ஆளாய் இடித்துத் தள்ளினார். மாடுகன்றுகளை விற்றுவிட்டு சில வெள்ளாடுகளை வாங்கிக்கொண்டார். தான் வாழும் காலத்தின் வீழ்ச்சியையும் தன் வாழ்க்கையின் வீழ்ச்சியையும் சுய விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்கத்தொடங்கினார்.
உறக்கம் வராத இரவுகள் பலவற்றில் அந்தச்சாபம் நினைவுக்கு வந்துவிடும். மகிழ்ச்சி மட்டுமே வாழ்வின் விளைபொருளென்றோ அச்சாபத்தின் காரணமாகத்தான் தன் குடும்பம் வீழ்ச்சியடைந்ததென்றோ அவர் நம்பாவிட்டாலும் நிச்சயம் அது நிஜவாழ்வின் சாயை கொண்ட ஒரு கதையாக இருக்கவேண்டுமென்று நினைத்தார். முகம் மறைந்த ஒரு தலைவிரிகோலம் அவர் முன்னால் தோன்றிக்கொண்டே இருந்தது.
காலத்தின் வெளித்தோல் உரிந்துபோய் எல்லா நாட்களும் இன்னொன்றின் நகல்களாகவே இருந்தன. வலி, தனிமை, காதல், காமம் போன்றவை ஒரு மலைப்பாம்பின் உடலாய் அவரை இறுக்கியபோது அவர் நிர்த்தாட்சண்யமாய் தன் ஆறாவது அறிவை மயக்கமூட்டிக் கொண்டார். அவருடைய துயரெல்லாம் அந்தத் தலைவிரிகோலம் மட்டுமே.அதன் அத்தனை மயிரிழைகளும் கொடுக்குகளாய் மாறி அவரைக் கொட்டின. அப்போதெல்லாம் தங்கையின் கூந்தலை வருடிக்கொடுத்து அந்த முகத்திடமிருந்து தப்பிப்பார்.
ஆனால் எண்ணெய் தீர்ந்த விளக்கின் திரியில் ஒளி மங்குவது போல் தங்கையின் உணவும் குழறல்களும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் உணவு சுத்தமாய் நின்றுவிட ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவரை அழைத்துவந்து காட்டினார். வெகுநேரம் பரிசோதித்த மருத்துவர் எந்த நம்பிக்கையையும் தெரிவிக்காமல் ஆறுதலாய் லிங்குவின் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனார். தனக்கும் தங்கைக்குமிடையே இருந்த அரூபமான பாலங்கள் அத்தனையும் மறைந்துபோய் இருண்ட உலகின் ஆழங்களுக்குள் அவள் பயணிக்கத் தொடங்கிவிட்டாள் என்பது புரிந்தவுடன் அவளை வழியனுப்பத் தயாரானார். ஒருசில நாட்களில் இத்தனைகாலமாய் தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருந்த உடலின் சுமைகளைக் களைந்துவிட்டு முதல்முறையாக யாருடைய துணையுமின்றி நடந்துபோய் காலத்திற்குள் மறைந்துவிட்டாள் தங்கை.
லிங்கு தன்னை நிரந்தரமான அகமெளனத்திற்குள் புதைத்துக்கொண்டார். அத்தியாவசியமான சமயங்களைத் தவிர்த்துத் தோட்டத்தைவிட்டு வெளியே செல்வதை நிறுத்திக்கொண்டார். தோட்டமும் வெள்ளாடுகளும் அவரது உலகங்களுமாய் சுருங்கின. வெள்ளாடுகள் உடுத்துவதில்லை என்ற உண்மை திடீரென்று புலப்பட்டபிறகு தோட்டத்திற்குள் நிர்வாணமாகத் திரிய ஆரம்பித்தார். வெள்ளாடுகளைத் தொண்டுப்பட்டியில் அடைப்பதையும் விட்டுவிட அவை ஆசாரத்தில் படுத்திருக்கும் அவரைச்சுற்றி இரவுகளில் படுத்துக்கொண்டன.
சாளையின் மேற்கோப்பில் உடும்பொன்று வசிப்பதையும் பாப்பிராணிகளும் ஒடக்காய்களும் சுதந்திரமாய் சாளைக்குள் திரிவதையுங் கண்டார். மெல்லிய சாணவாசனை எஞ்சியிருந்த தரையெங்கும் எறும்புக்குழிகள் தோன்ற அவற்றை மிதிக்காமல் நடக்கப் பழகிக்கொண்டார். தான் அஃறிணைகளோடு அஃறிணையாய் வாழ்ந்துகொண்டிருப்பதாய் தோன்றினாலும் நினைவழிந்து போகும்வரை அது முழுக்கவும் சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருந்தார்.
மரத்தின் உச்சாணிக்கிளைவரை சுற்றிப்படர்ந்து உச்சியில் அசையும் கொடியின் தளிர்நுனியைப் போல் தன் தற்கணம் இருப்பதாகவும் இறந்தகாலத்தின் நினைவுகள் என்னும் வேர் அளிக்கும் உயிர்ச்சாறே தன்னை உயிர்த்திருக்க வைத்திருப்பதாகவும் லிங்கு நம்பினார். அங்கே எத்தனையோ முகங்கள், காட்சிகள், பயிர் பச்சைகளின் வாசனைகள், பட்சிகள், நம்பிக்கைகள், கனவுகள், நீர்மம் எல்லாம் இருந்தன. பெற்றோரும் தங்கையும் இருந்தார்கள். அவருடைய வாழ்வுக்குள்ளும் புறாக்களை பிரசவிக்கவைக்கும் ஆற்றல் கொண்ட கண்களோடு ஒருத்தி இருந்தாள்.
கடந்தகாலத்தின் நூலால் தற்கணத்தின் நினைவுகளை இடைவிடாமல் நெய்து கொண்டிருந்தார் லிங்கு. கிணற்றில் நீர் கடைபோய்க்கொண்டிருந்தது. புழுதி மறைந்து சட்டென்று நிலமெங்கும் பச்சை படர்ந்து மணத்தது. காளைகளின் கழுத்துமணிகள் அசைந்தன. வாழ்வின் சலனமும் மனிதர்களின் உயிர் ஆதுரமும் அவரைச்சுற்றிலும் நிறைந்தன. மண்ணைப்புணரும் பெருமழை பொழியும் வேகங்கண்டு வாசலில் நின்று கூத்தாடினார். காலமெங்கும் விரவிவிட்ட வெப்பத்தைத் தணிவித்துவிடும் வேட்கையோடு கொட்டிய மழைநீரை விழுங்கிக்கொண்டேயிருந்தவருக்கு கிணற்றுமேட்டில் தாயார் நிற்பது தெரியவும் அவளை விளித்துக்கொண்டே ஓடினார். லிங்குவின் குரலைக் கேட்காதவள் போல் கிணற்றையே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். முகத்தில் வழியும் மழைநீரை கைகளால் துடைத்தவாறு இன்னும் வேகமாக அவளை நோக்கி ஓடும் லிங்குவை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுக் தாயார் கிணற்றுக்குள் குதிக்க ஓடியவேகத்தில் அந்தக் கரும்பாறைக் கிணற்றுக்குள் லிங்குவும் குதித்தார்.
வெயில் உக்கிரமாய் வழியும் அந்த உச்சிவேளையில் நிர்வாணக்கோலத்தில் ஓடி கிணற்றுக்குள் குதித்து மறைந்த லிங்குவை அசைவாங்கியபடியே பார்த்திருந்தன வெள்ளாடுகள்.
நன்றி-கல்குதிரை
No comments:
Post a Comment