வாரயிறுதியில்தான் திருமணத்தையும் வரவேற்பையும் அவன் வைத்திருந்தான். போயிருந்திருக்கவேண்டும். மறுநாளின் தலைவிதி முந்தையநாள் மாலை நிலவரத்தால் தீர்மானிக்கப்படும் இயல்பைக்கொண்ட என் வேலையின் எதிர்பாராத சிக்கல்களால் சனி ஞாயிறிலும் வேலைசெய்தாக வேண்டிய கட்டாயம். அவனுக்கு எப்படித் தகவல் சொல்வது என்று தீவிரமாக யோசித்தேன். வருத்தப்படாவிட்டாலும் ஏமாற்றமடைவான். வாட்ஸ்ஏப்பில் ஆன்லைனிலிருந்தான். தயங்கித்தயங்கி தகவலைக் கோர்த்து அனுப்ப கொஞ்சநேரம் கழித்து செல்போனின் தொடுதிரையில் ஒரு கோபமான ஸ்மைலி தோன்றியது. மறுகணம் அவனை அழைத்தேன்.ஒரே குளத்து மட்டைகள்.சிக்கல்கள் பொதுவானவை.புரிந்துகொண்டான்.
மூன்றாம் நாள் அவனுடைய திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தான். அழகு, படிப்பு என எல்லாவற்றிலும் அவனுக்கு சரிநிகர் பொருத்தமானவளாகத் தோன்றினாள் அவன் மனைவி. எல்லோரையும் உள்ளங்கையில் வைத்துத்தாங்குவதே மகாகாதலனான அவனுடைய இயல்பு. அவனை மணக்கோலத்தில் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்புகைப்படங்கள் பலவற்றில் ஏதோவொன்று குறைவதாகத் தோன்ற வெகுநேரம் யோசித்தேன். ஆமாம், அவற்றில் நானில்லை.
ப்ராஜெக்ட் டெலிவரி சார்ந்த அழுத்தத்தில் எனக்கு வேறெதிலும் கவனம் குவியவில்லை.இடையில் இரண்டொரு முறை அழைத்தபோது விருந்துகளில் பிஸியாக இருந்தான். மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் இருப்பதாகவும் இது தொடருமென்ற ஆழ்ந்த நம்பிக்கை தோன்றியிருப்பதாகவும் சொன்னபோது உன் திருமணச் சூதில் பகடை மகிழ்ச்சியின் பக்கம் விழுந்திருப்பது எனக்கும் நிம்மதியைத் தருகிறது என்றேன்.
மனைவியோடு அவன் திரும்பிய மூன்றாவது வாரயிறுதியில் ப்ராஜெக்ட் டெலிவரியில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக ப்ளோரிடாவிற்குக் கிளம்ப வேண்டியிருந்தது. அவர்களோ தேனிலவிற்காக மொரிஷீயஸ் போகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னர் அவனும் நானுமாகச் சேர்ந்துதான் அவனுடைய தேனிலவுப் பயணத்திட்டத்தை இறுதிசெய்திருந்தோம். எனவே அந்தவாரம் சந்திக்க இயலவில்லை. ப்ளோரிடாவிலிருந்து திரும்பியபின்னர் வீட்டிற்கு வருவதாக சொன்னபோது மனைவியிடம் போனைக் கொடுத்தான். வீட்டிற்கு வரவேண்டுமென்று அழைத்தாள்.
நான் ஜாக்ஸிலிருந்தபோது தேனிலவுப்பயணத்தின் புகைப்படங்களை தினமும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தான். அவற்றைப் பார்க்க பார்க்க மனதிற்குள் என் சுய அபஸ்வரம் ஓங்கி ஒலித்தது. ஒரு திருமண உறவு ஸ்திரமாக ஏழாண்டுகள் தேவையென்று எங்கோ படித்திருக்கிறேன்.வெற்றிகரமான திருமண வாழ்விற்கு அடிப்படை அதில் நிலவும் மகிழ்ச்சியல்ல, அதன் ஸ்திரத்தன்மைதான் முக்கிய காரணம் என்பது போன்ற ஒரு வரியை எழுதியது யார்? பெயர் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது. ஹா…காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்.
கண்ணாடிக் கோப்பையில் ஆன் தி ராக்ஸாக விஸ்கியை சரித்துக்கொண்டு விடுதியறையின் ஜன்னல் வழியே பெருமூச்சோடு வெளியே வெறிக்கையில் நள்ளிரவு விளக்குகளின் வெளிச்சத்தில் ஜாக்ஸ் டவுண்ட்டவுன் ஒருவிதமான மோன அமைதியில் இருக்க தூரத்தில் செயிண்ட்ஜான்ஸ் நதி ஒரு சித்திரமாகத் தெரிந்தது.ஏதோவொன்று நினைவில் இடற அவன் பதிந்திருந்த புகைப்படங்களை யார் யாரெல்லாம் லைக் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கத் தொடங்கினேன்.
எல்லாவற்றிலும் அவள் பெயரிருந்தது. நீலவண்ணத்தில் ஒளிர்ந்த அவள் பெயரை க்ளிக் செய்து அவளுடைய பக்கத்திற்கு போய்ப்பார்க்கச் சொல்லி நெஞ்செங்கும் தாபம் எழுந்தது. ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அவள் முன்னரே மாற்றிவிட்டிருந்தாலும் பேஸ்புக்கில் இன்னும் ப்ரெண்டாகத்தான் இருக்கிறாள். வெறுப்பில் சட்டென்று லேப்டாப்பை மூடிவிட்டு இன்னொரு கோப்பை விஸ்கியோடும் சிகரெட்டோடும் ஜன்னலோரம் அமர்கையில் மனதை ஆக்ரமித்த அவளுடைய நினைவுருவத்தை தலையை உதறி உதறி வெளியேற்ற முயன்றேன்.
நினைத்ததைவிட என் வேலை முடிவதற்கு மேலும் ஒரிரு வாரங்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டது. இடையில் அவனோடு ஸ்கைப்பில் பேசினேன். தேனிலவு முடிந்து திரும்பியிருந்தான். ஒரு நல்ல செய்தி இருப்பதாகவும் நேரில் சொல்வதாகவும் அவன் வெட்கப்பட்டபோது சிரித்துக்கொண்டே கேட்டேன். நேத்துத்தான் செக்கப் போனோம் என்றான். வாழ்த்தையும் அவனுக்காக Cutty shark ஒரு ஃபுல் வாங்கியிருப்பதையும் சொன்னேன். இதழ்பிரியாமல் சிரித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தான். நான் திரும்ப வேலையில் மூழ்கிவிட்டேன். ஒருவழியாக ப்ராஜெக்ட்டை ஸ்திரப்படுத்தி க்ளையண்டிடம் நற்பெயரையும் அடுத்த அப்ரைஸலுக்கு வலுவான சாதகங்களையும் சம்பாதித்துக்கொண்டு விமானமேறினேன்.
அவன் என்பதில் இனி அவன் மனைவியையும் சேர்த்துத்தான் யோசித்தாகவேண்டும். அச்சிறுபெண் எப்படிப்பட்டவளென்று தெரியவில்லை. ஆகவே என் பேக்பேக்கில் Cutty Shark ஐ மறைவாக வைத்துக்கொண்டு இனிப்பு, பழங்கள் மற்றும் பொக்கேவோடு அந்த வாரயிறுதியில் அவனுடைய ப்ளாட்டிற்குக் கிளம்பினேன். போனவருஷம் அவன் அதை வாங்கியபோது கூடவே நானும் அலைந்தேன். மிக விசாலமான அதை நவீனத்துவ கலையமைதி கொண்ட வீடாக இருவரும் மாற்றியிருந்தோம். சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள், புத்தகங்கள், இசைக்குறுந்தகடுகள் எனப் பலவற்றில் பாதி இருவரும் சேர்ந்து சுற்றிய மாலைநேரங்களில் வாங்கப்பட்டவை. அந்த ப்ளாடில் நான் எண்ணற்ற தடவை குடிபோதையில் வாந்தியெடுத்திருக்கிறேன்.
பார்க்கிங் தளமான தரைத்தளத்தில் காத்திருந்தவனின் உடலிலும் கண்களிலும் மினுமினுப்பு ஏறியிருந்தது. பூரணம் என்று சொல்லிச்சிரிக்க வெட்கத்தில் கண்களைத் தாழ்த்திக்கொண்டான். நான்காவது தளத்திற்கு லிப்ட் மேலேறுகையில் எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த பெண்ணின் வனப்பான பிருஷ்டங்களைப் பார்த்தேன். அவை எந்த ஆணையும் ஈர்க்கக்கூடியவை நினைத்தவாறு அவனைப் பார்க்க அவன் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். ம்ஹூம், பயல் திருந்திவிட்டான் போல.காலிங்பெல்லிற்கு உள்ளே ஒலிக்கும் பழக்கப்பட்ட இசைத்துணுக்கை என் மனம் பிரதி செய்தது. கதவை நீக்கிய அவன் மனைவி வரவேற்றவாறு புன்னகைத்தாள். புகைப்படங்களில் காட்சியளித்தது போலல்லாமல் புடவை அணிந்திருந்தாள். கழுத்துச்சரடில் மஞ்சள் மெருகு ஒளிர கம்பீரமும் குழந்தமையும் கலந்த தோற்றம். இனிப்புகளை அவளிடம் கொடுத்துவிட்டு இருவரையும் சேர்ந்து நிற்கச்சொல்லி பொக்கேவை நீட்டினேன். உடனே அவன் எங்கள் மூவரோடு பொக்கேவையும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்தான்.
அவள் க்ரீன் டீயோடு வருகையில் நான் என் செல்போன் திரையில் அவன் என்னை டேக் செய்து பதிந்திருந்த செல்ஃபியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தானும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு அவனோடு ஒட்டி எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்தபோது வீட்டில் அந்த மெல்லிய மாற்றத்தை உணர்ந்தேன். ஒரு பெண் கொண்டுவரும் மாற்றம். ஆனால் மிகப்பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது. ஹாலில் ஒரு பிங்க் நிற டெடிபியர் புதிதாக வந்திருந்தது. ஏதோ ஒருவகை மூலப்பொருளால் உருவாக்கப்பட்ட சிறுபறவை வடிவங்கள் மற்றும் இன்னபிற நூதனமான கைவினை வடிவங்கள் பலவற்றைச் செய்வது தனது பொழுதுபோக்கென்றாள். அவையெல்லாம் கண்களை உறுத்தாமல் மிகப்பொருத்தமான வகையில் ஓவியங்களுக்கிடையில் ஏறி அமர்ந்திருந்தன. வெரி நைஸ் என்ற போது இருவரும் மென்மையாய் புன்னகைத்தார்கள்.
அவளுடைய படிப்பு வீடு குடும்பம் ஊர் போன்ற சம்பிரதாயமான உரையாடல் முடியும்போது டீ ஆறியிருந்தது. ஒரே மடக்கில் வாயில் கவிழ்த்துக்கொண்டேன். தனக்கு வேலைக்குப் போவதில் விருப்பமில்லையென்றபோது அவன் தலையசைத்து ஆமோதித்தான். என்னைப்பற்றிய அவள் கேள்விகளில் ஒரு கவனம் இருந்தது. நண்பன் சொல்லியிருப்பான். காலிக்கோப்பைகளை எடுத்துக்கொண்டு அவள் சமையலறைக்குப் போனபோது இவன் சிகரெட் இருக்கின்றதா என்று கேட்டான். நான் தயக்கத்தோடு சமையலறையைப் பார்க்க புன்னகைத்தவாறு எழுந்து சென்று அவளோடு பேசிவிட்டு வந்தவன் பால்கனியை நோக்கி நடந்தான். இரண்டு பிரம்பு நாற்காலிகளும் டீப்பாயும் சில பூந்தொட்டிகளும் புதிதாக வந்திருந்தன.
நாங்கள் மெளனமாகப் புகைத்தோம். உரையாடல்கள் அதிகம் தேவைப்படாது பரஸ்பரம் எண்ணவோட்டங்களைப் புரிந்துகொள்ளும் நிலையிலிருந்தது எங்கள் நட்பு. மனம் சதா உரையாடிக்கொண்டிருக்கும் மற்றமையின் இடத்தை இருவரும் மற்றவர்க்கு ஏற்கனவே அளித்திருந்தோம். ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தவன் என் பக்கமாகத் திரும்பி இந்த வாரத்தில் இவர்களைச் சந்திக்க அவள் வர இருப்பதாகச் சொன்னான்.நான் பதிலெதுவும் சொல்லாமல் சிகரெட் நுனியிலிருந்த சாம்பலைத் தட்டியவாறு புகைக்கையில் அவனுடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. அவன் பேச்சிலிருந்து எதிர்முனையிலிருப்பது மணி என்று யூகித்தேன். அடிமட்ட லெளகீக வேலைகள் சிலவற்றைச் செய்துகொடுப்பவராக எங்களுக்கு அறிமுகமாகி பிறகு நண்பரானவர்.செல்போனை டீப்பாயின் மீது வைத்தவாறு சொன்னான்.
“இவளுக்கு ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு, அதுவும் ஃபீமேல், வளர்க்கறதுக்கு சின்ன வயசிலிருந்தே ஆசையாம், யூ நோ…அவளோடு வீட்ல அதுக்கு எந்தப் வாய்ப்பும் இல்லாம இருந்திருக்கு, மேரேஜுக்கு முன்னாடி பேசிட்டிருந்தப்ப ஒருதடவை அவளோட ஆசைகள் என்னென்னனு கேட்டேன், நிறையாச் சொன்னா, ஆனால் முதல்ல சொன்னது இந்த ஜெர்மன் ஷெப்பர்டு வளக்கறது, அதுதான் மணிகிட்ட போனவாரம் சொல்லிருந்தேன்…நேத்துப்போய் பாத்துட்டு வந்துருக்கார், இப்பப் போனா எடுத்துட்டு வந்துரலான்னார்…வரச் சொல்லியிருக்கேன்”
ஹேய் என்றவாறு அவன் ஹாலைக் கடந்து சமையலறைக்குள் போனான். தாளிக்கும் வாசனை என் மூக்கை இதமாகச் சீண்டியது.பேஸ்புக்கைத் திறந்து எங்கள் மூவரின் செல்பிக்கு யார் யாரெல்லாம் லைக் போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தேன்.அவளுடைய பெயரைக் காணவில்லை. ஆனால் அதற்குப் பின்னர் பதியப்பட்ட இன்னொரு சகநண்பனின் பதிவுக்கு லைக் போட்டிருந்தாள். பார்த்திருப்பாள்,லைக் போடாமல் தவிர்த்திருக்கிறாள்…கிராதகி.
அவனுடைய மனைவியின் நாய் வளர்க்கும் ஆசையை நினைத்துக்கொண்டேன்.எங்கள் நண்பர்கள் வட்டத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் யாருமில்லை. என்னால் நாய்களை செல்லப்பிராணிகளாகவே கருத முடிவதில்லை. உழவுக்குடும்பத்தில் அதுவொரு அங்கம், ஒரு அண்மை, ஆனால் செல்லப்பிராணியல்ல. கல்லூரியில் படித்தபோது விடுமுறைக்கு வந்த நாளொன்றில் வெள்ளை வெளேரென்ற நிறத்தில் ஒரு பெட்டை பொமரேனியன் சாளையின் வாசலுக்குள்ளிருந்து என்னைப் பார்த்து உளைத்து ஆச்சரியமான ஆர்வத்தை உண்டாக்கியது.
வாய்க்கால்மேட்டுத் தடத்தில் டி.வி.எஸ் 50 இல் அப்பா வரும்போது அங்கே அனாதையாக நின்றிருந்ததாம். நாட்டு நாய்கள் நிரம்பிய பிரதேசத்தில் சுற்றுவட்டாரத்தில் யாரும் பொமரேனியன் வளர்ப்பதில்லை என்ற சூழலில் அதுவெப்படி அங்கே தனியாக வந்தது என்பது ஒரு தீராத மர்மம். மழை வருவதற்கு ஆயத்தமாக வானம் இருண்டிருக்க வண்டியை நிறுத்திய அப்பா மெலிதாக விசிலடித்து அழைத்திருக்கிறார். பட்டென்று வந்து வண்டியில் ஏறிவிட்டதாம்.அப்பா சொன்னபோது ஒரு மாயக்கதை கேட்பது போலிருந்தது.
அதற்கு பெயர் வைக்கச்சொன்னர் அப்பா. நான் ஜூலி என்று பெயரிட்டேன். ஏன் அப்பெயரை வைத்தேன் என்பதற்கான அழுத்தமான காரணங்கள் ஏதுமில்லை.சட்டென்று தோன்றியது. அவ்வளவுதான்.நாட்டு நாய்களைப் போலல்லாமல் ஜூலியைக் கவனமாக பராமரிக்கவேண்டும் என்று இருவரிடமும் சொன்னேன். ஆனால் ஜுலியை ஆசாரத்திற்குள் விடுவதற்கு அம்மாவுக்கு சம்மதமில்லை. அங்கேயே பேண்டு மண்டு வைத்துவிடுகிறதென்று குறைபட்டுக்கொண்டு ஜூலியை உள்வாசலோடு நிறுத்திப் பழக்கப்படுத்தி விட்டாள்.
நான் கூப்பிட்டால் தாவி வந்து மடியிலேறும். அதன் வெண்ணிறமான புசுபுசு ரோமங்களை தடவிக்கொடுத்து ஜூலி ஜூலி என்று அதன் காதில் கிசுகிசுப்பேன். அப்போது அது தோட்டத்தில் ஏற்கனவே இருந்த மணியனோடு சேர்ந்து சுற்றிக்கொண்டிருந்தது. அவற்றின் காதல் விளையாட்டைப் பார்க்கையில் என் குறியில் ஒரு கிளர்ச்சியை உணர்ந்தேன். ஆனால் சூழலும் உணவும் பராமரிப்பும் ஜூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது வாசலெங்கும் கக்கி வைத்துவிடுவதாகக் கேள்விப்பட்டேன்.கட்டித்தாரைச் சாளையில் போட்டுவைத்த மறுநாள் ஜூலி செத்துப்போனதாக அப்பா சொன்னார். எஸ்.டி.டி பூத்தை விட்டு வெளியே வந்தவன் மணியனும் ஜுலியும் பிணைந்து விளையாடிய காட்சியை நினைத்தவாறு ஒரு சிகரெட் புகைத்திருந்தேன்.
அவன் திரும்பவும் பால்கனிக்கு வர நினைவிலிருந்து மீண்டேன்.
“அப்பறம்… கேளு… என்னிக்கு அந்த ஆசை அவளுக்கு வந்ததோ அன்னிக்கே அதுக்கு ஜூலின்னு பேர் வைக்கனும்னு முடிவு பண்ணிட்டாளாம்…ஏன்னு கேட்டேன், ஜஸ்ட் லைக் தட் அந்தப் பேரு தோனுச்சாம், மேஜிக்கா இல்ல? ” சொல்லிவிட்டு என்னைக் குறும்பாகப் பார்த்தான். அந்தக் குறும்புப் பார்வைக்குக் காரணம் அவனுக்கும் ஜூலியைத் தெரியும் என்பதே. நான் ஒரு பெருமூச்சோடு புன்னகைத்தேன். சிலநேரங்களில் தற்செயல்கள் வெகு ஒழுங்கமைவுடன் நிகழ்கின்றன.அப்படித்தான் அவன் மனைவிக்கும் தான் வளர்க்க இருக்கும் ஜெர்மன் ஷெப்பர்டுக்கு ஜூலி என்று பெயர் வைக்கத் தோன்றியிருக்கலாம்.
அவள் சாப்பிட அழைத்தாள். அபாரமான சுவைகொண்ட சைவச்சமையல். விரைவில் அவன் இன்னொரு சுற்று உடல் பெருக்கப்போகிறான் என்று சொன்னபோது மலர்ந்து சிரித்தவள் அடுத்தமுறை வரும்போது அசைவம் செய்வதாக உறுதியளித்தாள். பூண்டு ரசத்தைத் தனியே டம்ளரில் வாங்கிக்குடித்தேன். அவர்கள் இருவரும் வரப்போகும் ஜூலியைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். உண்ட நிறைவில் பால்கனியில் நின்றவாறு நான் வேடிக்கை பார்க்கையில் கீழே தரைத்தளத்தில் வண்டியை நிறுத்திய மணி கையசைத்தார்.
ஜூலியை எடுத்துவர மூவரும் கிளம்பியபோது பராமரிக்கவேண்டிய பக்குவங்களைத் தெளிவாகக் கேட்டுவரும்படி அவனிடம் சொன்னாள். மணி வழி சொல்லச்சொல்ல கார் புறநகர்ப் பகுதியொன்றில் நுழைந்தது. காரை நிறுத்திவிட்டு இறங்கும்போது மணி விற்பனையாளரை செல்போனில் அழைக்க இரண்டாவது மாடியிலிருந்து எட்டிப்பார்த்தவர் மேலே வரச்சொன்னார். குறுகலான படிகள். வெற்றுமாரோடு தொப்பையின் மேல் லுங்கியைக் கட்டியிருந்தவர் மேலே வருமாறு சைகை காட்டிவிட்டு மொட்டை மாடிக்குப் போகும் படிகளில் ஏறினார்.
அருகாமை காலியிடத்தில் உயரமாய் வளர்ந்திருந்த மரத்தின் நிழல் மொட்டைமாடியில் கவிந்திருக்க அங்கே ஒருவித வீச்சமடித்தது. இந்நகரத்தில் இப்படியொரு இடத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. மண்சுவர் வைத்து மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டு அமைக்கப்பட்டிருந்த சிற்றறைகளுக்குள்ளிருந்து ஆஜானுபகுவான வெவ்வேறு ஜாதி நாய்களின் குரைப்புகள் உரிமையாளரின் அதட்டலுக்கு அடங்கின. எச்சங்கள் படிந்த கம்பிகளைக் கொண்டிருந்த பெரிய செவ்வகவடிவக்கூண்டில் புறாக்கள் மூன்றிருந்தன. சிற்றறைகளின் எதிரில் சுவரோர நிழலடியில் இடுப்புயர கம்பிக்கூண்டுகள் இரண்டிருக்க ஒன்றில் வெவ்வேறு வகை குட்டிகள் ஏழெட்டு ஒன்றின் மேல் ஒன்று தாவி விளையாடின. கறுப்பும் மஞ்சற்பழுப்பும் கலந்த ரோமங்களோடு இன்னொரு கூண்டில் தனித்திருந்த குட்டியைக் கண்டவுடன் முணுமுணுத்தேன். ஜூலி.
அவர் கூண்டை நீக்கி ஜூலியை எடுத்து மணியிடம் நீட்டினார். அதைக் கையிலேந்தி மணி பரிசோதிக்கையில் பிறந்து ஆறுநாட்கள்தான் ஆகின்றன என்றார் உரிமையாளார். ஜூலியை நண்பன் ஆர்வத்தோடு பார்த்தவாறிருக்க நான் ஒவ்வொரு சிற்ற்றைகளுக்குள்ளிருந்த நாய்களை எட்டி உற்றுப் பார்த்தேன். அவற்றின் மின்னும் கண்கள் கண்டு அடிவயிறு லேசாக சில்லிடுகையில் குட்டிகளின் பக்கமும் புறாக்களின் பக்கமும் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.
மணி நண்பனிடம் ஜூலியை நீட்ட அதை வாங்கித் தடவிக்கொடுத்தான். ஜூலி அவன் முகத்தை ஒருகணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொள்ளவும் அதை என்னிடம் நீட்டினான். கையிலேந்தி ஜூலியின் கண்களைப் பார்த்தேன். நீர்மம் மின்னிய அதன் கண்களை உற்றுநோக்கியபோது அதனுள் ஒரு தளர்விருப்பதாகத் தோன்றியது. தரையில் இறக்கிவிட்டுவிட்டு மணியிடம் சொன்னேன்.
“ரொம்ப டல்லா இருக்கே மணி?”
அவர் திரும்பவும் ஜூலியை எடுத்து அதன் கண்கள், நகக்கண்கள் உட்பட உடலின் பிறபகுதிகளை ஆராய ஆரம்பித்தார்.
“பீவர் எல்லாம் எதுவுமில்ல, ஜஸ்ட் ஒரு செக்கப் மட்டும் பண்ணிக்கிடுங்க, ஏதாவது ப்ராப்ளம்னா, தயங்க வேணாம், திரும்பக் கொண்டாங்க, பணத்தை ரிட்டர்ன் பண்ணிடுவேன், பட் இதுதான் இப்போதைக்கு இருக்கிற கடைசி ஜெர்மன் ஷெப்பர்டு, இது வேணாம்னா வேற பாக்கறீங்களா ? “ கேட்டவாறு இன்னொரு கூண்டின் கதவைத் திறக்கத் தயாரானார்.
“இல்ல இருக்கட்டும்” என்று அவசரமாகச் சொன்ன நண்பனின் மனவுணர்வுகள் புரிந்தன. ஜூலியின் மதரைப் பார்க்கவேண்டுமென்று சொன்ன மணியிடம் வரிசையில் கடைசியாக இருந்த சிற்றறையை நோக்கிக் கையைக் காட்டினார் உரிமையாளர். பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து நண்பன் நீட்ட எவ்வளவு இருக்கிறது என்று அவர் கேட்டார். செவன் தவுசண்ட் என்றவுடன் எண்ணிக்கூடப் பார்க்காமல் பணத்தை அப்படியே கையில் சுருட்டி வைத்துக்கொண்டார். நாய்கள் திரும்பவும் குரைக்க ஆரம்பிக்க விடைபெற்றுக்கொண்டுக் கிளம்பினோம்.
என் மடியில் அமைதியாகப் படுத்திருந்த ஜூலி அவ்வப்போது நிமிர்ந்து டிரைவ் செய்துகொண்டிருந்த நண்பனையும் பின்சீட்டிலிருந்த மணியையும் மாறி மாறிப் பார்த்தது. பராமரிப்பின் நுணுக்கங்கள் பற்றி விலாவாரியாக மணி விளக்கிக்கொண்டிருக்க நான் அதன் ரோமங்களைத் தடவிக் கொடுத்தவாறிந்தேன். அந்த ரோமத்தடவலின் மென்மை எனக்கு மிகப் பரிச்சயமானது என்று நினைத்துக்கொண்டேன்.என்னிடமிருந்து ஜூலியை வாங்கிக்கொண்ட மணி திரும்ப வீட்டிற்கு வரும்வரை அதைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்.
“ஐயோ…ச்சோ ஸ்வீட், ஜூலி… ” என்று மலர்ந்த குரலோடும் முகத்தோடும் மணியிடமிருந்து அவன் மனைவி ஜூலியை வாங்கிக்கொண்டாள். அந்த மலர்ச்சி அவனுடைய முகத்திலும் எதிரொளிப்பதைக் கண்டேன். ஜூலியோடு சேர்ந்து செல்ஃபி எடுக்க அவளை அவனை அழைத்தபோது சிணுங்கலான பொய்க்கோபத்தோடு அவனுடைய செல்ஃபி மோகத்தைத் திட்டினாள்.நண்பன், நான், மணி மூவரும் ஜூலியோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டோம். பராமரிப்பு நுணுக்கங்களை அவளுக்கு மணி விளக்க ஆரம்பிக்க அவள் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.
அவள் ஜூலியை கீழே இறக்கிவிட அது மெல்ல ஹாலில் நடைபயில ஆரம்பித்து ஒவ்வொரு மூலையையும் முகர்ந்து பார்த்தது. மணியுடனான தன் உரையாடலினிடையே ஜூலீ என்று ராகத்தோடு அவள் கூப்பிட்டபோது ஹாலின் மறுமுனையிலிருந்து குடுகுடுவென்று அவளிடம் ஓடியதைப் பார்க்கையில் அதன் ஆரோக்கியம் குறித்த என் சந்தேகங்கள் வெறும் பிரமையெனத் தோன்றியது. தடவிக்கொடுத்த அவள் கரங்களிலிருந்து நழுவி அவனுடைய காலடிக்குச் சென்று நிமிர்ந்து பார்த்தது. அதை அள்ளியெடுத்து அவன் மடியிலேற்றிக்கொள்ள அங்கிருந்தவாறு என்னையே பார்த்தது. விரல்களைச் சொடுக்கிட்டு நான் அழைக்கவும் அவன் மடியிலிருந்து இறங்கி வந்த ஜூலி என் காலடியை முகர்ந்துவிட்டு குறுக்காக வைத்திருந்த கணுக்கால்களிடையே தன் தலையைக் கச்சிதமாக பொருத்தி படுத்துக்கொள்கையில் என் இதயத்தில் ஒரு மெல்லிய நடுக்கம் தோன்றியது.என் கணுக்கால்களிடையே ஜுலி படுத்திருந்த அக்காட்சியை உடனடியாக புகைப்படமாக்கி ப்ளூடூத்தில் அவன் அனுப்பினான்.
எங்களுக்கு க்ரீன் டீயும் ஜூலிக்குப் பாலும் எடுத்துவந்து கொடுத்தாள்.ஆனால் அது குடிக்காமல் அவளையே பார்க்க எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டாள். மணிக்கும் அவளுக்கும் உரையாடல் இன்னும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. நான் கிளம்புவதாகச் சொன்னபோது டின்னர் முடித்துவிட்டுப் போகலாமென்றவன் என் கண்களைப் பார்த்துவிட்டுச் சரி என்றான். என் பேக்பேக்கில் Cutty Shark இருப்பதாக வாட்ஸ்ஏப்பில் தகவல் அனுப்பினேன். சிரிக்கும் கண்களோடு நிமிர்ந்தவன் தான் குடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக ஒரு ஸ்மைலியோடு பதில் அனுப்பினான். வெர்ட்டினரி டாக்டரிடம் ஜூலியை எடுத்துப்போவது குறித்து அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க நான் விடைபெற்றேன். வாரம் ஒருநாள் நிச்சயம் நான் சாப்பிட வரவேண்டுமென்று அவன் மனைவி அன்புக் கட்டளையிட்டாள்.மெளனச்சிரிப்போடு வண்டியைக் கிளப்பினேன்.
நினைவுகளின் புழுக்கம் மனதில் கூடியிருக்க இன்றைய மாலைப்பொழுது எப்படி இருக்கப்போகிறதென்று உத்தேசமாகப் புரிந்தது. வழியில் நூடுல்ஸ் பாக்கெட்டும் சிகரெட்டுகளும் வாங்கிக்கொண்டேன். வீடடையும்போது இருள்கவியத் தொடங்கியிருந்தது. மின்விசிறியைப் போட்டுவிட்டு சோபாவில் படுத்துக் கண்களை மூடி நெடுநேரம் கிடந்தேன். உறக்கமும் விழிப்புமல்லாத நிலையில் நினைவின் பிம்பங்கள் சுருள் சுருளாய் அலைந்தன.
மொழியும் நிலமும் வேறுவேறு. அவள் பேரழகி. ஆனால் எனக்கு அப்போதே தொப்பையிருந்தது. ஆனாலும் நாங்கள் காதலில் விழுந்தோம். என் பொருட்டு தன் மொழி பண்பாடு எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டாள்.மிக இனிமையான நான்காண்டுகால காதற்பருவத்தில் அவள் கழுத்தில் தாலியில்லாதபோதும் நாங்கள் ஒரே வீட்டில் தம்பதிகளாகவே வாழ்ந்தோம். தினமும் கென்னி.ஜி பிண்ணனியில் ஒலிக்க மெழுகுவர்த்தி ஒளியிரவுகளில் நாங்கள் இன்னும் அழுகாத அந்த ஆப்பிளைப் புசித்தோம்.
நாங்கள் களைப்படைந்து திருமண பந்தத்திற்குள் நுழைய முயற்சிக்கையில் அம்மா சாகப்போவதாக மிரட்ட அப்பா மெளனமாக இருந்துவிட்டார். நான் பயப்படவில்லை. துணையாய் உறவில் அன்றைக்கு யாருமேயில்லை. அவளுடைய வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இவனும் இன்னும் சில நண்பர்களும் மட்டுமே உடனிருந்தார்கள். அத்தனை பதட்டத்திற்கிடையிலும் எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் தொடங்கியது. அவளைக் குறைசொல்ல முடியாது. தேவதை. நான்தான் தடம் புரண்டுவிட்டேன்.
கணவனான பின்னும் நான் காதலனின் விளையாட்டுத்தனத்தோடு இருந்துவிட்டேன். மனமறியாமல் சொன்ன ஒரு வார்த்தையில் ஏற்பட்ட ஊடல் தன் வலையை ராட்ஷதத்தனமாகப் பின்னி மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது. அவளது மென்மையின் மீது திராவகத்தை ஊற்றிவிட்டேன். அப்படி நான் செய்திருக்கக்கூடாது. ஒன்றரை வருடங்களாக ஹாஸ்டலிலிருக்கிறாள். நாங்கள் இன்னும் விவாகரத்துக் கோரவில்லை.என் நாவு ஒரு மன்னிப்பைக் கோரி வளையவேண்டும். ஆனால் என் தசைகளின் எதோவொரு ஆழத்திலிருக்கும் ஒருவித மிருக உணர்ச்சி மறைய மறுக்கிறது.
உடையைக்கூட மாற்றாமல் கண்ணாடிக்குவளையில் Cutty Shark ஐ ஊற்றி பனிக்கட்டிகளைச் போட்டுக்கொண்டு மீண்டும் சோபாவில் வந்தமர்ந்து சுற்றிலும் பார்த்தேன். தரையெங்கும் உதிர்ந்துகிடக்கும் ரோமங்கள், சுவர்களில் படிந்திருக்கும் நூலாம்படைகள், பெருத்துத் திரியும் கரப்பான்கள், இறைந்துகிடக்கும் புத்தகங்கள், அழுக்குத்துணிகள், சிகரெட் துணுக்குகள், உடல் வெளியேற்றும் நீர்மங்களின் காய்ந்த கறைகள் எனப் பாழ் தன்னை அடைகாக்கும் இடமாக இந்த வீடு மாறிவிட்டிருப்பதை வெறித்திருக்கையில் அவனிடமிருந்து அழைப்பு வந்தது. ஜூலிக்கு கொஞ்சம் காய்ச்சல் இருக்கிறதென்றான். நான் உம் கொட்டினேன்.சில வினாடி மெளனத்திற்குப் பின்னர் கேட்டான்.
“ஆர் யூ ஒகே? “
பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு மஞ்சள்நிறக் கடலின் ஆழத்திற்குள் மூழ்க ஆரம்பித்தேன். புற உலகத்தின் இரைச்சல்கள் அத்தனையும் வடிகட்டப்பட்ட ஒரு நிசப்தவெளியில் எவ்வளவு நேரம் மிதந்திருந்தேனென்று தெரியவில்லை. காலையில் விழிக்கும்போதுதான் அப்படியே தூங்கிப்போயிருப்பது தெரிந்தது.
நாட்கள் தங்கள் தினசரிப்பளுவோடு நகர ஆரம்பித்தன.என் மன அழுத்தத்தின் காரணமாக பேஸ்புக் அப்ளிகேஷனை என் செல்போனிலிருந்து நீக்கியிருந்தேன்.ஐந்தாவது நாள் அவனிடமிருந்து அழைப்பு. வருத்தமான குரலில் சொன்னான்.
“ஜூலி செத்துடுச்சு”
என் கணுக்கால்களில் ஒரு நடுக்கம் பரவக் கேட்டேன்
“என்னாச்சு?”
“நார்மலாயிடும்னுதான் டாக்டர் சொன்னார்…ஆனா சட்டுன்னு பீவர் ஜாஸ்தியாயிடுச்சு, நேத்து தூக்கிட்டு ஓடினோம், ப்ச், நோ யூஸ், மணியக் கூப்பிட்டேன். எல்லத்தையும் பாத்துக்கிட்டார், வேற குட்டி வேண்ணா எடுத்துக்குங்க, இல்ல அமெண்ட் ரிட்டர்ன் வேணும்னாலும் தந்துடறேன்னு ஓனர் சொன்னாராம்…ஆனா இவதான் ரொம்ப அப்செட்டா இருக்கா… டைம் இருந்த வீட்டுப்பக்கம் வந்துட்டுப் போயேன்”
“வீக் எண்ட் வர்றதுக்கு டிரை பண்றேன்”
ஆனால் நான் போகவில்லை.எனக்கு தனிமை தேவைப்பட்டது.எண்ணங்களின் தலைப்பிரட்டை வடிவில் மனம் எதை எதையோ யோசித்துக்கொண்டிருந்தது.அவனை அழைக்கவுமில்லை. மறு வாரம் சனிக்கிழமைக் காலையில் அவன் அழைத்தபோது முந்தைய இரவின் போதை இன்னும் மிச்சமிருந்தது அவன் குரல் வழக்கமான உற்சாகத்தில் இல்லை.
“என்னாச்சு?“
“ப்ச்,கலஞ்சிடுச்சு…” அவன் சொல்லவும் மெல்லிய ஆயாசமிக்க துயரம் மனதில் பரவியது.கைகள் நடுங்க சிகரெட்டைத் தேடிப் பற்ற வைத்தேன்.
“ஏன்…என்னாச்சு? ஏன் கால் பண்ணல? “
“முந்தாநாள் ஈவ்னிங்…நேத்து நைட்டுத்தான் ஹாஸ்பிட்டலிருந்து வீட்டுக்கு வந்தோம். நீ வேற மூடுல இருக்கறது புரிஞ்சுது, டிஸ்டர்ப் பண்ண விரும்பல, இன்னிக்கு மார்னிங் அவ அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க”
“சரி, நா இப்பக் கிளம்பி வர்றேன்”
நான் போனபோது வீடு இறுக்கமான மனநிலையிலிருந்தது.எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாத அவளுடைய அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது படுக்கையறைக்குள் சென்று வந்தவன் உள்ளே அழைத்தான். அவள் தளர்வாக அமர்ந்திருந்தாள்.என்ன சொல்வதென்று தெரியாமல் டெம்ப்ளேட்டான வார்த்தைகளைச் சொன்னேன்.
“கவலைப்படாதீங்க… எல்லா நார்மலாயிடும்,உடம்பப் பாத்துக்குங்க”
“ப்ச், இது ஒக்கேண்ணா, தேர் வில் பீ மோர் சான்ஸஸ், ஆனா ஜூலி… “ உதட்டைக் கடித்தவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம், சிலதை நாம் ஏத்துக்கணும், ரெஸ்ட் எடுங்க “ சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தபோது அவளுடைய பெற்றோர்கள் மெளனமாகத் தலையசைத்து விடைகொடுத்தார்கள். நானும் அவனும் தெருமுக்கில் சிகரெட் புகைத்தோம்.அவன் களைப்பாக இருப்பதாகத் தோன்றியது.
“லெட்ஸ் அக்சப்ட் இட்” நான் சொன்னபோது ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.
வீட்டிற்குத் திரும்பியபோது வெயில் உக்கிரமாக இருந்தது.உள்ளே நுழைந்தவுடன் சுத்தப்படுத்தவேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றியது.அவளை அழைத்தேன்
“ம்… “ என்றவாறு இணைப்பில் வந்தாள் என் மனைவி ஜூலி.
நன்றி-மணல்வீடு
No comments:
Post a Comment